Social Icons

ஐ ஹேட் யூ, பட்.. 6







அத்தியாயம் 18

காதல் வயப்படுதல் யாருக்கும் எளிதுதான்..!! 'எனக்கு சொந்தமான உயிர்' என்கிற மாதிரியான உணர்வு கிளம்புகிறார்போல.. எதிர்பாலர் ஒருவரை கண்டுவிட்டால்.. உள்ளம் காதலிக்க ஆரம்பித்து விடுகிறது..!! இனி மீதம் உள்ள வாழ்க்கையை இவருடன் கழித்தால்.. இன்பத்தில் தினம் திளைக்கலாமே என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறது..!! அவ்வாறு கனவு காணுதலை போல.. அந்த காதலை உரைத்தல் அவ்வளவு எளிதல்ல..!! மனதில் உள்ள காதலை உரியவரிடம் உரைக்கவே.. ஒரு முரட்டு தைரியமோ.. அல்லது ஒரு அசட்டு தைரியமோ வேண்டும்..!!

காதலை சொல்லும் தைரியம் மட்டுமே அந்த காதலின் வெற்றிக்கு போதாது.. அதை சொல்லுகிற விதமும் மிக மிக முக்கியம்..!! முறைப்படி உரைக்க தவறிய காதலர்களால்.. முறிந்து போன காதல்களும் நிறைய உண்டு..!!

தனது காதலை அசோக்கிடம் சொல்லிவிடவேண்டும் என்ற தைரியம் ப்ரியாவுக்கு வந்திருந்தது.. அதை சொல்கிற விதம் பற்றிதான் இப்போது அவளது கவலை இருந்தது..!! ஆபீசுக்கு வந்து அசோக்கிற்காக காத்திருந்தவள்.. கைப்பை திறந்து கண்ணாடி எடுத்து.. அதில் தனது முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.. நெற்றியில் வந்து விழுந்திருந்த ஒற்றை கூந்தல் கற்றையை ஓரமாக ஒதுக்கி விட்டாள்..!! உபயோகிக்கப் போகிற வார்த்தைகளை சற்றே உற்று ஆராய்ந்தாள்.. 'மனசுன்னு சொல்லலாமா.. இதயம்னு சொல்லலாமா..?? எது எஃபக்டிவா இருக்கும்..??'

இது மட்டுமில்லாமல்.. தான் சொல்லப்போகும் செய்தி கேட்டு அசோக் எந்த மாதிரி எதிர்வினை புரிவானோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது..!! 'அவனுக்கும் எனக்கும் ஆறு வருட அறிமுகமாய் இருக்கலாம்.. சண்டையிட்டிருந்தாலும் கூட 'சாப்பிட்டியா..??' என்று கேட்கிற கனிவை என் மீது அவன் காட்டியிருக்கலாம்.. எங்கள் குடும்பத்தினர் இப்போது எங்கள் இருவரையும் இணைத்துவைக்க எடுத்திருக்கும் முடிவறிந்து ஆச்சரியமுறலாம்..!! ஆனால்.. அதற்காகவெல்லாம் அவன் என் காதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லையே.. அவனுக்கும் கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்க வேண்டுமே.. தோழியாக பார்த்தவளை காதலியாக பார்க்க முடியாது என்று அவன் சொல்லிவிட்டால்..??'

இந்த மாதிரி இதயத்தில் ஒரு படபடப்புடனே ப்ரியா அசோக்கிற்காக காத்திருந்தாள்..!! தனது கண்ணாடி அறைக்குள் இருந்தவாறே.. அவன் வந்துவிட்டானா என்று அவ்வப்போது தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

ப்ரியாவின் இதயம் படபடப்பில் சிக்கியிருந்தது என்றால்.. அசோக்கின் இதயம் எதிர்பார்ப்பில் மூழ்கி கிடந்தது..!! 'எதை சொல்ல என்னை காலையிலேயே கைபேசியில் அழைத்தாள்..?? எப்போதும் போல் இல்லாமல்.. அவளுடைய குரலில் இன்று ஒரு மாற்றம் தெரிந்ததே.. என்ன அது..??' அந்த மாதிரி ஒரு சிந்தனையுடனே அசோக் ஆபீஸ் வந்து சேர்ந்தான்..!! அவன் ஆத்திரத்தில் இருக்கிறான் என்று எண்ணிக்கொண்ட செண்பகமும் அதிகம் பேசி அவனை தொந்தரவு செய்யவில்லை. அவள் அவ்வப்போது கேட்ட கேள்விகளுக்கும் அசோக் அசிரத்தையாகவே பதில் சொல்லிக்கொண்டு வந்தான்..!!

தாங்கள் பணி செய்யும் தளத்திற்குள் நுழைந்த அசோக்.. உடன் வருகிற செண்பகத்தை கண்டுகொள்ளாமலே.. அவசரமாக நடந்து தனது இடம் சென்று அமர்ந்தான்..!! கணினி திறந்தான்.. கம்யூனிகேட்டர் நுழைந்து முதல் வேலையாக ப்ரியாவிற்கு 'ஹாய் ப்ரியா..' என்று பிங்கினான்..!! அவளுடைய பதிலுக்காக காத்திருந்தான்.. உடனே பதில் வந்தது..!!

"ஹாய் அசோக்..!!"

பதில் வந்தது கம்யூனிகேட்டரில் இருந்து அல்ல.. அவன் காதுக்கருகே இருந்து..!! அவன் வந்ததை உள்ளிருந்தே கவனித்திருந்த ப்ரியா, தனது அறையை விட்டு எழுந்து வந்திருந்தாள்.. இவன் கம்யூனிகேடரில் ஹாய் சொல்ல.. அவள் இவனுக்கு பின்பக்கமாக அந்து ஹாய் சொன்னாள்..!! எழுத்தில் பதில் வரும் என்று எண்ணி.. திரையை வெறித்திருந்த அசோக்.. குரலில் பதில் வந்ததும்.. கூடவே ப்ரியாவின் மேனி நறுமணம் கலந்து வந்ததும்.. படக்கென தலையை திருப்பி பார்த்தான்..!!

திரும்பி பார்த்தவன் ஒருகணம் திகைத்துப் போனான்.. வியப்பில் அவனது விழிகள் விரிந்து கொண்டன..!! காதலில் மனம் விழுந்து விட்டால், காதலி முகம் கண்களுக்கு அழகாய் தெரிவது இயல்புதான்..!! ஆனால்.. அதையும் தாண்டி ப்ரியா இன்று தேவதை போல ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது..!! அவளுடைய அசத்துகிற அழகு அவனது கண்களை வன்மையாக தாக்க.. அவன் தனது சுவாசத்தை இழுத்து பிடித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!!



"வா..வ்..!!" என்று திணறலாக வாய் பிளந்தான்.

"என்ன வாவ்..??" ப்ரியா குரலில் குறும்புடன் கண்களை சிமிட்டியவாறே கேட்டாள்.

"யூ.. யூ லுக் ஆவ்சம் டுடே..!!!"

"நெஜமா..???"

"சத்தியமா..!! என்னன்னு சொல்லத்தெரியல.. ஆ..ஆனா.. ரொம்ம்ம்ப அழகா இருக்குற இன்னைக்கு..!!"

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ்..!!"

"அப்புறம்.. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..??"

"ஒ..ஒன்னும் இல்லையே.. ஏன் கேக்குற..??"

"இல்ல.. புதுசா.. புடவைலாம் கட்டிக்கிட்டு ஆபீஸ் வந்திருக்கியே.. அதான் ஏதாவது விஷேஷமான்னு.."

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. சும்மாதான்..!!"

"ஹ்ம்ம்.. காலைலேயே கால் பண்ணிருந்த போல..??" அசோக் இயல்பாக கேட்க, ப்ரியா இப்போது சற்றே தடுமாற்றமாய் சொன்னாள்.

"ஆ..ஆமாம்.. அதுக்குத்தான் இப்போ வந்தேன்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..!!"

"ம்ம்.. பேசு..!!" அசோக்கின் குறும்பான குரலில் சொன்னதற்கு, ப்ரியா உதடுகள் பிரித்து புன்னகைத்தாள்.

"ஹாஹா.. இங்க இல்ல..!!"

"அப்புறம்..??"

"தனியா..!!"

ப்ரியா அந்த 'தனியா..!!'விற்காக, குரலில் ஒரு கிறக்கத்தையும், கண்களில் ஒருவித மின்னலையும் தனியாக சேர்த்துக்கொண்டு சொல்ல.. அசோக்கின் இதயம் படக்கென்று சொடுக்கிவிடப்பட்டது..!! அவளுடைய முகத்தையே வியப்பாக பார்த்தான். ப்ரியா இப்போது அசோக்கின் புஜத்தில் மெலிதாக இரண்டு தட்டு தட்டியவாறே, 'வா..' என்றுவிட்டு முன்னால் நடந்தாள். அவள் அவ்வாறு அங்கிருந்து நகர்ந்த பின்னர்தான், அசோக் அதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த சுவாசத்தை சுதந்திரமாக வெளியிட்டான். இமைகளை ஒருமுறை நிம்மதியாக மூடி திறந்தான். பிறகு சேரில் இருந்து எழுந்து அவசரமாய் அவளை பின்தொடர்ந்தான்.

ப்ரியாவின் அன்றைய மயக்கும் தோற்றத்திலும், அவள் பேச்சிலிருந்த ஒருவித போதையிலும், அசோக்கின் மூளை சற்றே குழம்பி போயிருந்தது. அவனுக்கு முன்னால் நளினமாக அசைந்து அசைந்து செல்கிற ப்ரியாவின் பின்னழகை தவறான எண்ணத்துடன் வெறிக்க தூண்டியது. ஒரு கணம் அந்த அழகை வாய் பிளந்து ரசித்தவன், அடுத்தகணமே தலையை உதறிக்கொண்டு எச்சில் கூட்டி விழுங்கினான்.

அவளுடைய பின்னால் சென்று கொண்டிருக்கும்போதே, 'எதற்காக இப்போது தனியாக அழைத்து போகிறாள்..?' என்ற கேள்வியும் அவன் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. 'இன்று இவளுடைய பார்வையும் பேச்சுமே சரி இல்லையே.. ஒருவேளை.. தனியாக கூட்டிச்சென்று என்னை காதலிக்கிறேன் என்று சொல்லப் போகிறாளோ..??' அசோக்கின் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியதற்கே, அவனுக்கு உடலும் உள்ளமும் ஜில்லென்று குளிர்ந்து போனது. அப்புறம் உடனே, 'ஹ்ம்ம்.. ரொம்பத்தான் கற்பனை உனக்கு..!!' என்று தன்னைத்தானே கேலி செய்து கொண்டான். பிறகு 'கற்பனையாக இருந்தால் என்ன.. அப்படி ஒரு நினைவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..!!' என்றும் தனியாக நினைத்துக்கொண்டு மனதுக்குள் சிரித்தான்.

ஆறு பேர் அமரக்கூடிய வகையில் ஒரு டேபிள்.. அதன் மீது கான்ஃபரன்சில் யாரையும் அழைக்கும் வசதிக்காக ஒரு டெலிஃபோன்.. சுவற்றில் அறையப்பட்டு, டெக்னிக்கல் கிறுக்கல்களுடன் காணப்பட்ட ஒரு வொயிட் போர்ட்.. இவை மட்டுமே அடங்கிய ஒரு சின்ன மீட்டிங் ரூம் அது..!! டீமில் இருக்கும் மெம்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி பேசவேண்டும் என்று எண்ணினால் உபயோகப்படுத்திக் கொள்கிற ரூம்..!! அந்த ரூமைத்தான் தனது காதலை சொல்ல தேர்ந்தெடுத்திருந்தாள் ப்ரியா..!!

அசோக் உள்ளே நுழைவதற்காக அறையின் கண்ணாடி கதவை திறந்து காத்திருந்தவள், அவன் நுழைந்ததும் அந்த கதவை மென்மையாக சாத்தி மூடினாள். கருவிழிகளை ஒரு ஓரமாக தள்ளி அசோக்கின் முகத்தை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தாள். 'என் காதல் மனதை என்ன செய்ய காத்திருக்கிறான் இவன்..??' என்று அவள் மனதில் உச்சபட்சமாய் எழுந்த படபடப்பை அடக்கிக்கொண்டு,

"உக்காரு..!!" என்றாள் புன்னகையுடன்.

இன்னும் குழப்பம் நீங்காதவனாகவே அசோக் மெல்ல அமர்ந்துகொண்டான். ப்ரியா நடந்து சென்று அவனுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்தாள். மீண்டும் இவன் முகத்தை ஏறிட்டு ஒரு ஏக்கப்பார்வையை வீசினாள். அர்த்தம் புரிந்து கொள்ள இயலாத அந்த மயக்கும் பார்வை அசோக்கை என்னவோ செய்தது. அந்த பார்வையை தாங்க இயலாதவனாய், அங்கு நிலவிய அமைதியை குலைத்தவாறு அசோக் கேட்டான்.

"சொ..சொல்லு ப்ரியா.. அப்படி என்ன எங்கிட்ட தனியா பேசணும்..??"

"அ..அது.. அது இருக்கட்டும்.. காலைல நான் உனக்கு கால் பண்றப்போ என்ன.. உங்க வீட்ல அப்படி ஒரு சவுண்டு..?? ஏதாவது சண்டையா..??" ப்ரியா உடனே பேச்சை ஆரம்பிக்க தயங்கியவளாய் இலகுவான குரலில் கேட்டாள்.

"ப்ச்.. அதுவா..??? அது எங்க வீட்டுல எப்போவும் நடக்குறதுதான்..!! சப்பை மேட்டருக்காகலாம் சண்டை போட்டுப்போம்.. சண்டை போடுறது எங்களுக்கு ஒரு ஹாபி மாதிரி..!!"

"ஹாஹா..!!"

"ஹ்ம்ம்.. என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க ப்ரியா..!! எனக்கு எதெதுலாம் புடிக்காதோ.. அதெல்லாம் தெளிவா பண்ணுவாங்க.. நானும் புடிச்சு கன்னாபின்னான்னு திட்டி விட்ருவேன்..!!"

"ஹாஹா.. ஹ்ம்ம்.. இன்னைக்கு என்ன பிரச்னை..??"

"ப்ச்.. அது ஒரு பெரிய கதை..!! நான் ஏதோ கோவத்துல ஒன்னு சொல்லப்போக.. அதை அவங்க சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்னன்னவோ பண்ணி... ச்ச.. செம டென்ஷன் ஆயிடுச்சு எனக்கு..!!"

"கோவத்துல அப்படி என்ன சொன்ன..??" ப்ரியா ஏதோ ஆர்வம் பிறந்தவளாய் கேட்க, அசோக் பொறுமை இழந்தவனாய்

"ஹேய்.. அதுவா இப்போ முக்கியம்..?? நீ ஏதோ பேசனுன்னு சொன்னியே.. அதை மொதல்ல சொல்லு..!!" என்று விஷயத்திற்கு வந்தான்.

"அது.. அ..அது.." ப்ரியா எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாள்.

"ஹ்ம்ம்.. சொல்லு..!!"

அசோக் இப்போது இன்னும் ஆர்வமானான். ப்ரியா மேலும் சில வினாடிகள் தயங்கிவிட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு.. நாவால் உதட்டை ஈரமாக்கிவிட்டு.. ஆரம்பித்தாள்..!!

"எ..என்னைப் பத்தி நீ என்ன நெனைக்கிற அசோக்..??"

"என்ன நெனைக்கிறேன்னா..?? புரியலை..!!"

"என் மேல உனக்கு எதுவும் கோவமா..??" ப்ரியாவின் கேள்வி அசோக்கிற்கு ஒரு புன்னகையை வரவழைத்தது.

"ஏன் கேக்குற..??" என்றான் லேசான குறும்புடன்.

ப்ரியா அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுக்கும்போதுதான், அசோக்கின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் 'கிர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்...' என்று வைப்ரேட் ஆனது. அவன் அதை உடனே வெளியே எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், அப்புறம் பட்டன் அழுத்தி பிஸி டோன் அனுப்பிவிட்டு, ஃபோனை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ப்ரியாவை ஏறிட்டு கேட்டான்.

"ம்ம்.. சொல்லு ப்ரியா..!! எதுக்கு கோவமான்னு கேக்குற..??"

"இல்ல அசோக்.. நாம முன்னாடி மாதிரி இல்ல.. இப்போலாம் அடிக்கடி சண்டை போட்டுக்குறோம்.. அதான்..!!"

"அ..அதனால..??"

அசோக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. அவன் மறுபடியும் அதை எடுத்து பார்த்தான். மீண்டும் அதே நம்பர். அசோக் இப்போது 'ப்ச்..' என்று சலிப்பை உதிர்த்தான். திரும்பவும் காலை கட் செய்ய அவன் முனைய..

"யார் ஃபோன்ல..??" ப்ரியா கேட்டாள்.

"தெரியல ப்ரியா.. ஏதோ அன்னோன் நம்பரு..!!"

"எடுத்து பேச வேண்டியதுதான..??"

"பரவால விடு.. அப்புறம் பேசிக்கலாம்.. நீ சொல்லு..!!"

"ப்ச்.. சொன்னா கேளு.. அதை மொதல்ல அட்டன்ட் பண்ணி பேசு.. இல்லனா.. திரும்ப திரும்ப கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க..!!"

ப்ரியாவும் சலிப்பாகவே சொன்னாள். அசோக் ஓரிரு வினாடிகள் தயங்கினான். அப்புறம் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

"ஹலோ..!!" என்றான் சற்றே எரிச்சலுடன்.

"ஹலோ.. அசோக் தம்பிங்களா..??" என்றது அடுத்த முனை.

"ஆமாம்..!! நீங்.." அசோக் முடிப்பதற்கு முன்பே

"ஹலோ தம்பி.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா..??" அடுத்த முனை அவசரப்பட்டது.

"நான் நல்லாருக்குறது இருக்கட்டும் ஸார்.. மொதல்ல நீங்க யார்னு சொல்லுங்க..!!"

"ஹாஹா.. என்னை ஞாபகம் இல்லையா தம்பி..??"

"ப்ச்.. ஃபோன்ல உங்க வாய்ஸ் மட்டுந்தான் ஸார் வரும்.. மூஞ்சிலாம் வராது..!!"

"ஹாஹா.. நல்லா தமாஷா பேசுறீங்க..!! ரெண்டு வாரம் முன்னாடி நாம ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம்.. இப்போ ஞாபகம் வருதா..??"

"ச..சந்திச்சுக்கிட்டோமா..?? இ..இல்லைங்க.. எ..எனக்கு சரியா.." இப்போது அசோக் குழப்பத்தில் தடுமாற,

"ந.. ஞா..ப்ப்.. பா..க்க்..." அடுத்த முனையில் வாய்ஸ் ப்ரேக் ஆனது.

"ஸார்.. உங்க வாய்ஸ் ப்ரேக் ஆகுது.. !!"

"நா.. பா..க்க்... ஞா..ப்ப்."

"ஹலோ.. ஹலோ.. இங்க கொஞ்சம் சிக்னல் வீக்கா இருக்கு.. ஒரு நிமிஷம் இருங்க.. நான் வெளில வர்றேன்..!!"

அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான். வெளியில் சென்று பேசிவிட்டு வருவதாக ப்ரியாவிடம் சைகை செய்தான். அவளும் 'போய் பேசி விட்டு வா..!!' என்று அனுமதி அளிப்பது போல இமைகளை மெல்ல மூடி திறந்தாள். அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த அறையை ஒட்டியே இருந்த எக்ஸிட் கதவுக்கு ஐடி கார்டை காட்ட, அது பட்டென்று திறந்து கொண்டது. வெளிப்பட்டு பால்கனிக்குள் பிரவேசித்தான்.

"ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க ஸார்..!!"

"என் பேர் வரதராஜன் தம்பி.. ரெண்டு வாரம் முன்னாடி நாம சந்திச்சுக்கிட்டோம்.. நான் தவறவிட்ட தாலிச்சரடை திரும்ப எங்கிட்ட கொண்டு வந்து குடுத்தீங்களே.. இப்போ ஞாபகம் வருதா..??" அந்தப்பக்கம் வரதராஜன் சொல்ல, இங்கே அசோக்கிற்கோ பயங்கர ஆச்சரியம்.

"அட.. நீங்களா ஸார்..??? நான் யாரோன்னு நெனச்சு.. ஹாஹா..!! ஹ்ம்ம்.. நல்லா ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க ஸார்.. எப்படி இருக்கீங்க..??"

"நான் நல்லாருக்கேன் தம்பி.. நீங்க எப்படி இருக்கீங்க..??"

"நானும் நல்லா இருக்கேன் ஸார்..!! வாட் எ சர்ப்ரைஸ் திஸ் இஸ்..?? நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல..!! அதுசரி.. என் நம்பர் எப்படி உங்களுக்கு கெடைச்சது..??"

"சொல்றேன் தம்பி.. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!"

"எ..என்ன..??"

"உ..உங்க அண்ணனும் அண்ணியும் உங்களுக்கு ஒரு பொண்ணு பாத்தாங்கல்ல..?? அ..அந்தப்பொண்ணு வேற யாரும் இல்ல தம்பி.. என் மகதான்..!!" வரதராஜன் தயங்கி தயங்கி சொல்ல, அசோக்கை ஒருவித ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் தாக்கின.

"ஓ..!!"

"நேத்து உங்க அண்ணன் உங்களோட ஃபோட்டோ அனுப்பினதும்தான்.. நீங்கதான் பையன்னு எனக்கு தெரியவந்தது..!!"

வரதராஜன் சொல்லிமுடித்து அமைதியாக இருக்க, அசோக்கிற்கு இப்போது என்ன பேசுவதென்றே புரியவில்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒருவித அவஸ்தை உணர்வுடன் தலையை சொறிந்தவன், அப்புறம் சற்றே வருத்தமான குரலில் சொன்னான்.

"ஸார்.. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னதை.. என் அண்ணன் சீரியஸா எடுத்துக்கிட்டு.. எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டான்.. ஆனா நான்.."

"ம்ம்.. அண்ணன்ட்ட பேசினேன் தம்பி.. அவர் சொன்னாரு.. உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு..!! ஆனா.. எனக்கு அப்படியே விட்டுட மனசு இல்ல..!! நீங்க எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்குறதால.. உங்ககிட்ட கொஞ்சம் பேசிப்பாக்கலாம்னு தோணுச்சு.. அதான் அண்ணன்கிட்ட உங்க நம்பர் வாங்கி.."

"எங்கிட்ட பேசுறதுக்கு என்ன ஸார் இருக்குது..??"

"இல்ல தம்பி.. நீங்கதான் பையன்னு தெரிஞ்சதும், நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா இப்போ.."

"ஹ்ம்ம்..!!"

"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. உங்க மனசுல ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தா.. தயங்காம எங்கிட்ட சொல்லுங்க..!! எனக்கு என் பொண்ணு வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம்..!!"

"ஹையோ.. என்ன ஸார் நீங்க..?? அப்படிலாம் எதுவும் இல்ல..!! இந்த பிரச்னையே வேற..!!"

"வேற என்ன தம்பி பிரச்னை..?? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..!!" வரதராஜன் தயங்காமல் கேட்டுவிட, அசோக்தான் சற்று தடுமாறினான். அப்புறம் தயங்கி தயங்கியே சொன்னான்.

"நா..நான்.. நான் வேற ஒரு பொண்ணை ரொம்ப நாளா லவ் பண்றேன் ஸார்.. அதான் பிரச்னை..!!"

"ஓ..!!" வரதராஜனின் குரலில் ஒருவித ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

"டைம் எல்லாம் கரெக்டா செட் ஆறப்போ.. நானே வீட்ல சொல்லலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே அவங்க அவசரப்பட்டு.. பொண்ணு பாக்க ஆரம்பிச்சு.. அதான் இந்த தேவையில்லாத கன்ஃப்யூஷன்லாம்..!!"

"ஹ்ம்ம்.. புரியுது தம்பி.. இது நான் கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்..!!"

"எ..என்ன எதிர்பார்த்தீங்க..??"

"ஒருவேளை காதல் விவகாரமா இருக்குமோ.. அதான் கல்யாணம் வேணாம் சொல்றீங்களோன்னு..!!"

"ஹ்ம்ம்.. ஆமாம் சார்.. அதான் இந்தக் கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னேன்..!! இந்த விஷயம் இன்னும் எங்க வீட்டுக்கு தெரியாது.. ப்ளீஸ் ஸார்.. நீங்க எதுவும் சொல்லிடாதீங்க..!!"

"இல்ல தம்பி.. நான் சொல்லல.. எனக்கெதுக்கு அந்த வேலை..!!"

"ஹ்ம்ம்... அப்புறம்.. நீ..நீங்க.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க ஸார்.. உங்க பொண்ணுக்கு என்னை விட நல்ல மாப்ளையா கெடைப்பான்..!!" அசோக் அவருக்கு ஆறுதலாக சொன்னான்.

"ஹாஹா.. சரி தம்பி.. உங்க வாக்கு பலிக்கட்டும்..!!"

வரதராஜன் ஒரு மாதிரியான விரக்தி சிரிப்புடன் சொன்னார். அசோக் அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க, சில வினாடிகளில் வரதராஜனே ஆரம்பித்தார்.

"வீட்ல சீக்கிரம் சொல்லிடுங்க தம்பி.. லேட் பண்ணாதீங்க.. உங்களுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல..?? வீட்ல எல்லாரோட சம்மதத்தோடவும்.. அந்தப்பொண்ணு கூடவே உங்க கல்யாணம் நடக்கனும்னு.. நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..!!"

"தேங்க்ஸ் ஸார்.. சீக்கிரமே சொல்லிடுறேன்..!! கல்யாணத்துக்கு உங்கள கண்டிப்பா கூப்பிடுவேன்.. நீங்களும் மறக்காம வந்துடனும்..!!" அவர் மகளுடைய திருமணத்திற்கு அவருக்கே அழைப்பு விடுத்தான் அசோக்.

"ஹாஹா.. கண்டிப்பா தம்பி..!! நானும் என் பொண்ணு கல்யாணப் பத்திரிகை உங்களுக்கு அனுப்புறேன்.. நீங்களும் கட்டாயம் கலந்துக்கனும்..!!" வரதராஜனும் நடக்கப்போவது புரியாமல் பேசினார்.

"ஓகே ஸார்.. கண்டிப்பா வர்றேன்..!!"

"ஹ்ம்ம்.. பொண்ணு கொஞ்சம் குண்டா இருந்தாலும்.. நல்ல முக லட்சணம்தான் தம்பி.. உங்களுக்கு நல்ல பொருத்தமாதான் இருந்தது..!!" வரதராஜன் திடீரென சொன்னார்.

"யா..யாரை சொல்றீங்க..??" அசோக் குழப்பமாக கேட்டான்.

"அதான் தம்பி.. அன்னைக்கு உங்ககூட வந்த பொண்ணு.. அந்தப் பொண்ணைத்தான நீங்க விரும்புறீங்க..??"

வரதாராஜன் செண்பகத்தை மனதில் நினைத்துக்கொண்டு அந்தக்கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அந்தக் கேள்வியை அசோக் சரியாக புரிந்துகொள்ள முடியாத வகையில், அவனுக்கு பின்பக்கமாக இருந்து வந்த அந்த 'லொட்.. லொட்..' சப்தம் அவனுடைய கவனத்தை சிதற செய்தது. அசோக் திரும்பி பார்த்தான். கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கமாக ப்ரியா நின்றுகொண்டிருந்தாள். 'என்னாச்சு..?? சீக்கிரம் வா..!!' என்பது போல பொறுமையற்றவளாய் இவனைப்பார்த்து சைகை செய்தாள். இவனும் 'இரு.. இரு.. இதோ வந்துடறேன்..' என்பது மாதிரி சைகையாலே அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, சற்றே பரபரப்பு தொற்றிக்கொண்டவனாய் மீண்டும் ஃபோனுக்கு காது கொடுத்தான்.

"என்ன தம்பி.. நான் சொன்னது கரெக்ட்தான..??" வரதராஜன் கேட்க,

"ஆங்.. கரெக்ட்தான் ஸார்..!!" அசோக் அவனையும் அறியாமல் அவனுக்கே ஆப்பு வைத்துக் கொண்டான்.

"ஹாஹா.. கரெக்டா கண்டுபுடிச்சிட்டேன் பாத்தீங்களா..??" வரதராஜன் பேசியதை கவனிக்காமல், அசோக் இப்போது அவசரமாக..

"ஸார்.. எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. நாம இன்னொரு நாளைக்கு பொறுமையா பேசலாமா.. ப்ளீஸ்..??" என்றான்.

"தம்பி தம்பி.. ஒரே ஒரு நிமிஷம்.. உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. என் பொண்ணு கூட உங்க கம்பனிலதான்.." வரதராஜன் ஆரம்பிக்க, அசோக் அவரை இடைமறித்தான்.

"ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என் பாஸ் என்னை இங்க கூப்பிட்டுட்டே இருக்குறா.. அவ சரியான லூஸு ஸார்.. என்னைக்காவதுதான் அவளுக்கு மூளைலாம் ஒழுங்கா வேலை செய்யும்..!! இன்னைக்குத்தான் கொஞ்சம் புத்தி சுவாதீனத்தோட பேசுறா.. இப்போ நான் போகலைன்னா.. அப்புறம் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுனாலும் ஏறிரும்..!! சரியா.. நாம இன்னொரு நாள் பேசலாம்.. பை..!!"

"ஹாஹா.. சரி தம்பி.. இன்னொரு நாள் பேசலாம்..!!"

அசோக் காலை கட் செய்தான். ஐடி கார்ட் ஸ்வைப் செய்து மீண்டும் உள்ளே சென்றான். ப்ரியா மீட்டிங் அறைக்குள் சென்று அமர்ந்திருந்தாள். அசோக்கும் அந்த அறைக்குள் நுழைந்தான். அவள் முகத்தில் எரிச்சல் கொப்பளிக்கும் என்று எண்ணியிருந்த அசோக் ஏமாந்து போனான். ப்ரியா இன்னும் அதே முக மலர்ச்சியுடனும், இதழ் புன்னகையுடனுமே அமர்ந்திருந்தாள். இவனை பார்த்ததும்..

"யார் ஃபோன்ல..??"

"அது ஒரு பெருசு.. செம ப்ளேட் போட்டுருச்சு..!!" சொல்லிக்கொண்டே அசோக் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

"ஹ்ம்ம்.. ராங் நம்பர் மாதிரி ஆரம்பிச்ச..?? அப்புறம் பாத்தா சிரிச்சு சிரிச்சு ரொம்ப நேரம் பேசிட்டு இருக்குற..??"

"ஹாஹா.. ராங் நம்பர் இல்ல.. தெரிஞ்சவர்தான்..!! சரி அவரை விடு.. நம்ம மேட்டருக்கு வா..!! ஹ்ம்ம்ம்... எங்க விட்டோம்..?? ஆங்.. எதுக்கு உன் மேல எனக்கு கோவமான்னு கேட்ட..??"

"நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு அசோக்.. அதை அப்புறம் சொல்றேன்..!!"

"ஏன்.. இப்போ சொன்னா என்ன..??"

"ப்ச்.. அப்புறம் சொல்றேன்றன்ல.. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..!!"

ப்ரியா சொல்லவும், அசோக் சில வினாடிகள் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் நெற்றியை சுருக்கி யோசிப்பது மாதிரி பாவ்லா செய்துகொண்டே ஆரம்பித்தான்.

"ஹ்ம்ம்.. என்ன சொல்றது..?? கோவம் கொஞ்சம் இருக்கு.. ஆனா.."

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் பேச்சுக்கு மீண்டும் ஒரு இடையூறு..!! இந்தமுறை இவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு 'லொட்.. லொட்..' என்று தட்டப்பட்டது. இருவரும் தலையை திருப்பி பார்த்தார்கள். வெளியே கவிதா நின்றுகொண்டிருந்தாள். ப்ரியா 'உள்ள வா..' என்பது போல சைகை செய்ய, அவள் கைப்பிடி திருகி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"என்ன கவிதா..??" ப்ரியா கேட்டாள்.

"உன் மொபைல் அங்க அடிச்சுட்டே கெடக்குது ப்ரியா.. அதான் சொல்லலாம்னு வந்தேன்..!!"

"ஓ.. மொபைலை ரூம்லேயே விட்டு வந்துட்டனா.. ச்ச..!!" ப்ரியா தலையில் தட்டிக்கொண்டாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

"ஹேய்.. வெயிட் பண்ணு அசோக்.. இதோ வந்துடறேன்..!!" என்றுவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.

ஓட்டமும் நடையுமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தாள். டேபிள் மீது அலறிக்கொண்டிருந்த செல்போனை அவசரமாய் எடுத்து கால் பிக்கப் செய்தாள். காதில் வைத்துக் கொண்டதுமே,

"சொல்லுங்க டாடி..!!" என்றாள்.

"என்னம்மா.. வேலையா இருந்தியா..??" அடுத்த முனையில் வரதராஜனின் குரல் சோர்வாக ஒலித்தது.

"கொஞ்சம் வேலைதான்.. பரவால சொல்லுங்க..!! என்ன.. திடீர்னு கால் பண்ணிருக்கீங்க..??"

"அ..அது.. அது வந்து.." அவர் தயங்கினார்.

"ஹ்ம்ம்.. சொல்லுங்க டாடி..!!"

"எ..எப்படி அதை சொல்றதுன்னு எனக்கு தெரியலைம்மா.. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" அப்பாவின் குரலில் ஒரு அதீத கவலை தொனிக்க,

"என்னாச்சு டாடி..??" ப்ரியா இப்போது சற்றே கலவரமாய் கேட்டாள்.

"நே..நேத்து சொல்லிட்டு இருந்தன்ல.. அ..அந்த எடம் நமக்கு அமையலம்மா..!!" வரதராஜன் தயங்கி தயங்கி சொன்னார்.

"எ..என்ன டாடி சொல்றீங்க..??"

"ஆமாம்மா.. பையன் வீட்டுக்கு நேராவே போயிட்டு வர்றேன்னு காலைல சொல்லிருந்தன்ல..?? கொஞ்ச நேரம் முன்னாடி.. வரலாமான்னு கேக்குறதுக்காக பையனோட அண்ணனுக்கு கால் பண்ணினேன்.. அவரு 'வரவேணாம்.. இந்த சம்பந்தம் அமைய நாங்க குடுத்து வைக்கலை..'ன்னு சொல்லிட்டாரு..!!"

"ஏ..ஏன் அப்டி சொன்னாரு..??" எகிறுகிற இதயத்துடிப்புடன் ப்ரியா கேட்டாள்.

"என் தம்பிக்கு உங்க பொண்ணை புடிக்கலைன்னு சொன்னாரு..!!" வரதராஜன் சொல்ல, ப்ரியாவின் இதயத்தை இப்போது பக்கென்று ஒரு பயம் வந்து கவ்வியது.

"அ..அவன்.. அவன் என் ஃபோட்டோ பாத்தானாமா..??" வார்த்தைகள் அவளிடம் இருந்து தடுமாற்றமாய் வெளிப்பட்டன.

"அது தெரியலைம்மா.. ஆனா.. அவர் ஏன் உன்னை புடிக்கலைன்னு சொன்னாருன்னு.. எனக்கு தெரிஞ்சு போச்சு..!!"

"ஏ..ஏன்..??" ப்ரியா குழப்பமும் கவலையுமாய் கேட்டாள்.

"அந்த தம்பி வேற ஒரு பொண்ணை விரும்புதும்மா.. அது அவங்க வீட்டுக்கு இன்னும் தெரியாது.. அதான் எல்லா கொழப்பமும்..!!"

"அ..அதெப்படி உங்களுக்கு தெரியும்..??"

"அந்த தம்பிதான்மா சொல்லுச்சு..!! அவங்க அண்ணன்ட்ட நம்பர் வாங்கி.. இப்போத்தான் அந்த தம்பிட்ட பேசினேன்..!!"

"இப்போவா..????"

"ஆமாம்மா.. பேசி முடிச்சுட்டு உடனே உனக்கு ஃபோன் அடிக்கிறேன்..!!"

வரதராஜன் சொல்ல, ப்ரியா கண்களை சுருக்கிக்கொண்டு, தனது நெற்றியை பற்றி பிசைந்தாள். 'அப்படியானால்.. சற்றுமுன் அசோக்கிற்கு வந்த கால் அப்பாவிடம் இருந்தா..?? அவன் ப்ளேடு, பெருசு என்று சொன்னதெல்லாம் அப்பாவைத்தானா..??'

"ந..நல்லா தெளிவா கேட்டீங்களா டாடி..?? வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னானா..??" ப்ரியா நெஞ்சில் வேதனையும் குரலில் நப்பாசையுமாய் கேட்டாள்.

"ஆமாம்மா.. தெளிவா கேட்டுட்டுத்தான் சொல்றேன்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கத்தான அந்த தம்பிக்கு நான் ஃபோனே பண்ணினேன்.. அதை தெளிவா கேக்காம இருப்பனா..?? அந்தப்பொண்ணை கூட நான் பாத்திருக்கேன்மா..!!"

"எ..எந்தப் பொண்ணை..??" ப்ரியா உதறலாக கேட்டாள்.

"அந்த தம்பி விரும்புற பொண்ணைம்மா..!! அன்னைக்கு அவர்கூட ஒரு பொண்ணு பைக்ல வந்தான்னு சொன்னேன்ல.. அந்தப் பொண்ணுதான்..!! அந்தப்பொண்ணைத்தான் அவர் ரொம்ப நாளா விரும்புறாராம்..!!"

வரதராஜன் சொல்லிக்கொண்டே போக.. ப்ரியா இப்போது அப்படியே நொறுங்கிப் போனாள்..!! அவளுடைய இதயத்தில் யாரோ ஈட்டியை பாய்ச்சியது மாதிரி இருந்தது அவளுக்கு..!! கால்கள் வலுவிழந்து போனவளாய் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்.

'அவ்வளவுதானா..?? அவன் எனக்கு இல்லையா..?? வேறொருத்திக்கு சொந்தமானவனா என் அசோக்..?? எல்லாம் முடிந்து போயிற்றா..?? என் காதலுக்கு நேர்ந்த கதி இதுதானா..?? இத்தனை நாளாய் கண்ட கனவெல்லாம் கானல் நீரா..??'

ப்ரியாவுக்கு கண்களில் பொசுக்கென்று கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. உதடுகளை கடித்து அவள் கட்டுப்படுத்த முயன்றும், உடைப்பெடுத்து கன்னம் வழியாக ஓடியது. அவள் அவசரமாய் அந்த கண்ணீரை தன் புஜத்தில் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள்.

அசோக்கின் மீது இப்போது அவளுக்கு வேறொரு விதமான கோவமும் திடீரென வந்தது. 'இத்தனை நாளாய் யாரையோ காதலித்துக் கொண்டு.. அந்த விஷயத்தை கூட என்னிடம் சொல்லவில்லையே அவன்..?? என்னை காதலியாக நினைக்கத்தான் அவனுக்கு மனதில்லை என்றால்.. நல்ல தோழியாக கூட அவன் என்னை கருதவில்லை போலிருக்கிறதே..?? அப்படி கருதியிருந்தால் அவனுடைய காதலை பற்றி என்னிடம் மறைத்திருப்பானா..?? எனக்கு தெரியாமல் எந்த பெண்ணை அப்படி ரகசியமாக காதலிக்கிறான்..?? ஒருவேளை.. ஒருவேளை..' ப்ரியாவின் மனதில் ஒரு குறுகுறுப்பு எழ,

"அ..அந்தப்பொண்ணு எப்படி இருந்தா டாடி..??" தன் அழுகையை மறைத்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

"நல்லா குண்டா இருந்ததும்மா.. அவரை மாமா மாமான்னு கூப்பிட்டுச்சு..!!"

'சந்தேகமே இல்லை.. செண்பகமேதான்..!! காதலிக்கிறார்களா இருவரும்..?? மாமா மாமா என்று அவள் அவனிடம் குழையும்போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும்..!! ச்சே.. எவ்வளவு ஏமாளியாக இருந்து விட்டேன்..??' ப்ரியா அவ்வாறு வேதனையாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வரதராஜன் ஒரு பெருமூச்சுடன் சொன்னார்.

"ஹ்ஹ்ம்ம்ம்.. ஒருவேளை நீ அந்த தம்பியை சந்திச்சு பேச நெனச்சிருக்கியோன்னு தோணுச்சுமா ப்ரியா.. தேவை இல்லாம இன்னொரு கொழப்பம் வரவேணாம்னுதான் இப்போ அவசரமா உனக்கு ஃபோன் பண்ணுனேன்..!!"

'ஆமாம்.. அப்பா சொல்வதும் சரிதான்.. அவனுடைய மனதை அறிந்து கொள்ளாமல் என்னுடைய காதலை அவனிடம் சொல்ல துணிந்து விட்டேன்..!! நல்லவேளை.. அவனிடம் எதுவும் சொல்லவில்லை.. நான் வெட்கமில்லாமல் 'ஐ லவ் யூ..' என்று அவனிடம் வழியப்போய்.. அதைக்கேட்டு அவன் கைகொட்டி சிரித்திருந்தால்..?? என் நிலைமை எவ்வளவு அவமானகரமானதாக இருந்திருக்கும்.. கேவலம்தானே..?? இல்லை.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியவே கூடாது..!!'

"அவன் வேலை பாக்குற கம்பனிலதான் நானும் வேலை பாக்குறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டீங்களா டாடி..??"

"இல்லம்மா.. அதை சொல்றதுக்குள்ளதான்.. அவரோட லூஸு பாஸ் கூப்பிடுறான்னு ஓடிப் போயிட்டாரு.. ஒரே தமாஷ் போ.. ஹாஹா..!!" எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பது போல, வரதராஜன் சொல்லிவிட்டு சிரித்தார்.

"என்னது..?? லூஸு பாஸா...??" ஏற்கனவே அசோக் மீது இருந்த கோவத்துடன், இப்போது உச்சபட்சத்தில் ஒரு கடுப்பும் சேர்ந்து கொள்ள, ப்ரியா கத்தினாள்.

"ஆமாம்மா.. அந்த தம்பியோட பாஸ் ஏதோ ஒரு லூஸாம்.. அந்த பொண்ணுக்கு எப்போவாவதுதான் மூளை ஒழுங்கா வேலை செய்யுமாம்..!! அவர் சொன்னதை கேட்டு.. அவ்வளவு கஷ்டத்திலயும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சுமா..!! ஹாஹா..!!"

மகளின் மனநிலை புரியாமல் வரதராஜன் சிரிக்க, ப்ரியாவால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காலை ஆத்திரமாக கட் செய்தாள். செல்போனை தூக்கி ஓரமாய் விட்டெறிந்தாள். இரு கைகளையும் டேபிளில் பரப்பி, படக்கென அதிலேயே தன் தலையை கவிழ்த்து படுத்துக் கொண்டாள். அவளுடய நெஞ்சம் குமுற ஆரம்பிக்க, கண்களில் நீர் பொங்கிக்கொண்டு வந்தது. 'ஓ...!!' என வாய் விட்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆபீஸாக போயிற்றே என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

'லூஸா நான்..?? ஆமாண்டா.. லூஸுதான்.. உன் மேல இவ்வளவு காதல் வச்சிருக்கேன்ல.. என்னைப்பாத்தா உனக்கு லூஸாத்தான் தெரியும்..!! ஏண்டா இப்படி செஞ்ச..?? என்னை விட அந்த பூசணிக்காயைத்தான் உனக்கு புடிச்சிருக்கா..?? புடிச்சிருந்தா வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?? ஏன் பொண்ணு பாக்க சொல்லி.. என் மனசுல ஆசையை கெளப்பி விட்ட..??'

நேற்றிலிருந்து மத்தாப்பாய் பூரித்துக்கொண்டிருந்த ப்ரியாவின் மனம், இப்போது புஸ்வானமாய் அணைந்து நமத்துப் போயிருந்தது. 'செண்பகம் அவனுடைய அண்ணியின் தங்கைதானே.. அவளை காதலித்தால் வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல்.. ஏன் தயங்குகிறான்..?? அதில் என்ன பிரச்னை அவனுக்கு..??' என்று ஒரு கேள்வி எழுந்தது. உடனே 'எங்க வீட்டுக்கும் என் அண்ணி வீட்டுக்கும் பெரிய தகராறு..' என்று அசோக் எப்போதோ சொன்னதும், 'என் அண்ணனும் அண்ணியும் இருக்காங்களே.. சுத்தமா என் மனசை புரிஞ்சுக்கவே மாட்டாங்க' என்று அவன் சற்றுமுன் சொன்னதும் நினைவுக்கு வர, அந்தக் கேள்விக்கும் அவளுக்கு பதில் கிடைத்து போனது. 'இவனுடைய விளையாட்டு.. எனக்கு வேதனையாக முடிந்து போனது..' என்று நினைத்துக் கொண்டாள்.

தான் இத்தனை நாளாய் கண்ணும் கருத்துமாய்.. பார்த்து பார்த்து பயிர் செய்த காதல் தோட்டம்.. இப்போது புயலில் சிக்கி உருக்குலைந்து போனதாய் அவளுக்கு தோன்றியது..!! சிறு வலியை கூட தாங்காத அவளது இதயம்.. இப்போது திராவகம் வீசப்பட்டு பொசுங்குவது போல துடிதுடித்தது..!! 'அசோக் தனக்கில்லை..!!' என்று அவள் நினைக்க நினைக்க.. அழுகை பொத்துக்கொண்டு வந்தது..!!

கண்களில் வழிந்த நீரை புஜத்திலேயே துடைத்துவிட்டு நிமிர்ந்தபோதுதான், அசோக் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். இவள் முகத்தை சகஜமாக மாற்றிக்கொள்ள முயல, அவன் உதட்டில் புன்னகையும், குரலில் கேலியுமாய் கேட்டான்.

"ஹேய் லூஸு.. என்னை அங்க வெயிட் பண்ண சொல்லிட்டு.. நீ என்ன இங்க வந்து படுத்து தூங்கிட்டு இருக்குற..??"

அவ்வளவுதான்..!! அந்த ' லூஸு' என்ற வார்த்தை ப்ரியாவுக்கு சுர்ரென ஒரு ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. பட்டென சேரில் இருந்து எழுந்தாள். முகமெல்லாம் கோவத்தில் சிவந்து போக, அசோக்கை பார்த்து சீற்றமாய் சொன்னாள்.

"மைன்ட் யுவர் டங்..!!!! இனிமே என்னை லூஸுன்னு சொன்ன.. மரியாதை கெட்டுப் போயிடும்..!!"

ப்ரியாவின் சூடான வார்த்தைகளில்.. அவ்வளவு நேரம் புன்முறுவலுடன் இருந்த அசோக்கின் முகம்.. பட்டென சுருங்கிப் போனது..!! 'என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென..?' என்று குழப்பமுற்றவனாய், தடுமாற்றமாக கேட்டான்.

"ஹேய்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்போ டென்ஷன் ஆகுற..?? நான் எப்போவும் கூப்பிடுறதுதான..??"

"இனிமே கூப்பிடாத..!! இந்த லூஸு, ஸ்டுபிட்லாம் ஆபீசுக்கு வெளில வச்சுக்கோ..!! இங்க நான் உன் பாஸ்.. அதுக்கு உண்டான மரியாதையை குடுக்கணும்..!! இல்லனா உன்னைப்பத்தி நான் மேனேஜ்மன்ட்ல கம்ப்ளயின்ட் பண்ண வேண்டி இருக்கும்.. அண்டர்ஸ்டாண்ட்..??"

ப்ரியா ஆத்திரத்துடன் ஆட்காட்டி விரலை காட்டி.. அவனை எச்சரிப்பது போல சொல்ல சொல்லவே.. அசோக்கின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக ஆரம்பித்தது..!! சற்றுமுன் ஆசையும் ஏக்கமுமாய் பார்த்த அதே ப்ரியாவின் முகத்தை, இப்போது வெறுப்பாக முறைத்தான். கண்களை இடுக்கி அவளை உஷ்ணமாக பார்த்தவன், பற்களை கடித்தவாறு சொன்னான்.

"ஓ..!! TL மேடத்துக்கு மரியாதை வேணுமா..?? குடுத்துட்டா போச்சு..!!" என்றவாறு கைகளை மார்புக்கு குறுக்காக பணிவுடன் கட்டிக்கொண்டான். குரலில் ஒரு போலி மரியாதையை கூட்டிக்கொண்டு..

"மன்னிச்சுடுங்க மேடம்.. இனி உங்களை நான் லூஸுன்னு கூப்பிட மாட்டேன்.. அப்படி கூப்பிட்டா நான்தான் இனிமே லூஸு..!! போதுமா..??" என்றான்.



அவனுடைய செய்கை ப்ரியாவுக்கு அழுகையை தூண்டுவதாய் இருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள். தலையை கவிழ்த்துக்கொண்டு அமைதியானாள். அவளுடைய அமைதியை பார்த்து, அசோக்கே தொடர்ந்து பேசினான்.

"எங்கிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொன்னீங்களே.. அது மட்டும் என்னன்னு சொல்லிடுங்க மேடம்..!! சொல்லிட்டா.. நான் என் எடத்துக்கு போய் என் வேலையை பார்ப்பேன்..!!"

அசோக் கேலியான குரலில் கேட்க, ப்ரியா இப்போது அப்படியே தளர்ந்து போனாள். ஒருவித தடுமாற்றத்துடன் சேரில் மெல்ல அமர்ந்து கொண்டாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

'இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..?? நேற்றிலிருந்து எத்தனை எத்தனை வார்த்தைகளை புரட்டி புரட்டி போட்டு.. வாக்கியங்களை பார்த்து பார்த்து மாலை போல கோர்த்து கோர்த்து வைத்திருந்தேன்..?? அதிலிருந்து ஒற்றை வார்த்தையை இப்போது இவனிடம் கூற இயலுமா..?? இதோ.. கேட்கிறான்.. என்ன சொல்வது இப்போது..??' மனதில் புரண்ட உணர்ச்சி அலைகளை, ப்ரியா கட்டுப்படுத்திக் கொண்டவாறே..

"டைம் ஷீட் என்டர் பண்ணிட்டியா..??" என்றாள் உணர்ச்சி செத்துப்போன குரலில்.

"அதை கேட்கவா தனியா கூட்டிட்டு போன..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"இல்ல.. நீ ஏதோ மறைக்கிற..??"

"ப்ச்.. நான்தான் சொல்றன்ல..?? அதை கேக்கத்தான் கூட்டிட்டு போனேன்..!! சொல்லு.. என்டர் பண்ணிட்டியா..??"

"இல்ல.. இன்னும் பண்ணல..!!"

"மொதல்ல அதைப்போய் பண்ணு.. பாலா உடனே பண்ண சொன்னாரு..!!"

"அதுக்கென்ன இப்போ அவசரம்.. ஃப்ரைடே பண்ணினா பத்தாது..??" அசோக்கின் கேள்வியில் ப்ரியா இப்போது பொறுமை இழந்தாள்.

"டூ வாட் ஐ ஸே..!!" என்று எரிச்சலாக கத்தினாள். இப்போது அசோக் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ப்ரியாவையே சில வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம்,

"திருந்தவே மாட்டேல நீ..?? ச்ச..!!"

என்று வெறுப்பாக கத்திவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தான். ஆத்திரத்துடன் கதவை பிடித்து இழுத்து, அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் செல்வதையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களில் நீர் திரையிட.. கை நீட்டி.. டேபிள் மீதிருந்த அந்த வாட்சை எடுத்தாள்..!! பதிக்கப்பட்ட கற்களுடன் பளீரென்று பளிச்சிட்ட அந்த வாட்சை பரிதாபமாக பார்த்தாள்..!!



அத்தியாயம் 19

ஆபீஸில் அன்று முழுவதும் ப்ரியா ஒரு விரக்தி மனநிலையுடனே இருந்தாள். அவளுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். ஈடுபாடு இல்லாமலே கீ போர்ட் தட்டி கோட் அடித்தாள். அவ்வப்போது அவளையும் மீறி கண்ணோரமாய் கண்ணீர் வழியும். உடனே புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை விசும்பிக்கொள்வாள். தலையை உயர்த்தி, தூரமாய் அமர்ந்து தீவிரமாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற அசோக்கை ஏக்கமாய் பார்ப்பாள். அன்று மதிய உணவுக்கு கூட டீமோடு சேர்ந்து செல்லவில்லை அவள்..!! சென்றிருப்பாள்.. அவளை அழைக்க வந்தது வேறு ஆளாய் இருந்திருந்தால்..!!

"நாங்கலாம் லஞ்ச்க்கு போறோம்க்கா.. வர்றீங்களா..??" என்று புன்னகையுடன் வந்து கேட்ட செண்பகத்தை எரிச்சலாகத்தான் அவளால் ஏறிட்டு பார்க்க முடிந்தது.

"இ..இல்ல.. எனக்கு பசியில்ல.. நீங்க போங்க.. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்..!!" என்றுதான் அவளால் சொல்ல முடிந்தது.

மாலையில்தான் அலுவல் சம்பந்தமாக அசோக்கிடம் ஏதோ கேட்க வேண்டி இருந்தது. எழுந்து செல்ல மனசில்லை. கம்யூனிகேடர் திறந்து பார்த்தாள். 'ASHOK AWAY' என்று காட்டியது. சில வினாடிகள் அந்த கம்யூனிகேடரையே கடுப்புடன் முறைத்தவள், அப்புறம் சேரில் இருந்து எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறி அசோக்கின் இடத்திற்கு சென்றாள். மானிட்டருக்கு தலையை கொடுத்தவாறு அமர்ந்திருந்த ஹரியிடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

"எங்க போயிட்டான்..??"

"ஸ்குவாஷ் ஆட போறேன்னுட்டு போனான் ப்ரியா..!!" ஹரி மானிட்டரில் இருந்து பார்வையை நகரத்தாமலே சொன்னான்.

'ஸ்குவாஷா..?? யார் கூட..??' என்று கேட்க வாயெடுத்த ப்ரியா, பிறகு கேட்காமலேயே நிறுத்தினாள். தலையை சுழற்றி ஒரு பார்வை பார்த்தாள். டீமில் அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.. அசோக்கையும் செண்பகத்தையும் தவிர..!! அவர்கள் இரண்டு பேருந்தான் ஜோடியாக சென்றிருக்கிறார்கள் என்பது எளிதாக அவளுக்கு புரிந்து போனது. உடனே.. என்னவென்று சொல்ல முடியாத ஒரு எரிச்சலில் அவளுடைய உடல் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது..!! காலியாக இருந்த அசோக்கின் இருக்கையையே கொஞ்ச நேரம் வெறித்து பார்த்தாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவளுடைய அறைக்கு விடுவிடுவென நடந்தாள்.

அறைக்குள் நுழைந்தவள், கப்போர்ட் திறந்து அந்த பேகை எடுத்துக் கொண்டாள். வெளியே வந்து.. மீண்டும் 'டக்.. டக்.. டக்..' என வேகமாய் நடந்து அந்த தளத்தின் அடுத்த மூலைக்கு சென்றாள். அங்கிருந்த ட்ரஸிங் ரூம் புகுந்து தாழிட்டுக்கொண்டாள். அணிந்திருந்த புடவையை பரபரவென அவிழ்த்து எறிந்தாள். பேக் திறந்து அந்த கருப்பு நிற டி-ஷர்ட்டையும், வெள்ளை நிற ஷார்ட்சையும் எடுத்து அவசரமாய் உடுத்திக் கொண்டாள். கால்களுக்கு ஷூ அணிந்து, லேஸை பிடித்து சரக்கென இழுத்தாள். ஹேர்பாண்ட் எடுத்து கூந்தலுக்கு மாட்டி.. முடிக்கற்றையை 'பட் பட்' என்று கீழே பிடித்து இழுத்து.. டைட் ஆக்கிக் கொண்டாள். தனது இறுக்கமான முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொண்டாள். ஸ்குவாஷ் ராக்கெட்டை கையில் எடுத்து.. வலது காலை சற்றே பின்னுக்கு உயர்த்தி.. அந்தக்கால் ஷூவை ராக்கெட்டால் ரெண்டு தட்டு தட்டிவிட்டு.. புயலாய் கிளம்பினாள்..!!

அதே நேரம்.. ஸ்குவாஷ் கோர்ட்டில்.. அசோக் செண்பகத்திற்கு அந்த விளையாட்டை கற்றுத் தருகின்ற பேரில்.. அவளைப்போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்..!!

"ஏண்டி.. பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு சொன்னா.. விட்டுட்டு பப்பரக்கான்னு பாத்துக்கிட்டு நிக்கிற..??" அசோக் பற்களை கடித்தவாறு கேட்டான்.

"ட்ரை பண்ணேன் மாமா.. முடியலை..!!" செண்பகம் பரிதாபமாக சொன்னாள்.

"ஓடிப்போய் எடுக்கணும்.. நீ அசைஞ்சு அசைஞ்சு போறதுக்குள்ள.. அது அஞ்சு தடவை பவுன்ஸ் ஆயிடுது..!!"

"ஓடத்தான் செஞ்சேன்.. அது அப்டீக்கா போகுது.. நான் என்ன பண்ணுவேன்..??"

"அப்டீக்கா போகாம.. 'என்னை அடிங்க ப்ளீஸ்..'னு உன்னை தேடியா வரும்..??"

"போங்க மாமா.. எனக்கு இந்த கேம் பிடிக்கல.. வேற ஏதாவது உக்காந்துட்டு வெளையாடுற கேம் ஆடலாம்..!!"

"உக்காந்துக்கிட்டா..?? ஏன்.. படுத்து கொட்டாவி விட்டுக்கிட்டே வெளையாடுற மாதிரி ஏதாவது கேம் ஆடலாமே..??"

"அப்படியுமா கேம் இருக்கு..??"

"அப்படியே அறைஞ்சன்னா பாத்துக்கோ..!! பால் எடுத்து போடுடி.. சர்வீஸ் போடுறேன்.. உன் எடத்துக்கு போ..!!"

"வேணாம் மாமா.. வெளையாண்டது போதும்..!!"

"என்னது.. போதுமா..?? ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ளே போதும்னு சொல்ற..??"

"அஞ்சு நிமிஷம் கூட ஆகல.. ஆனா அதுக்குள்ள எனக்கு எப்படி வேர்த்து ஊத்துது பாருங்க..!! டயர்டாயிடுச்சு மாமா.. முடியல..!!"

"இங்க பாரு செம்பு.. உன் உடம்பு எளைக்கிறதுக்கு இதை விட நல்ல வழி.. வேற எதுவும் இல்ல..!! சொல்றதை கேளு.. டெயிலி ஒரு மணி நேரம் என்கூட ஸ்குவாஷ் ஆடு.. ஹன்சிகா மாதிரி பொதுபொதுன்னு இருக்குறவ, அனுஷ்கா மாதிரி சிக்குன்னு மாறிடுவ..!! போ.. இன்னும் கொஞ்ச நேரம்..!!"

"ஹன்சிகாக்கு என்ன கொறைச்சலு..??" செண்பகம் அவளுடைய இடத்துக்கு நகர்ந்துகொண்டே மெல்லிய குரலில் கேட்டாள்.

"எதுவும் கொறைச்சலுன்னு சொல்லல.. எல்லாம் நெறைச்சலுன்னுதான் சொல்றேன்.. போ போ..!!" அசோக் கேலியாக சொல்லிக்கொண்டே சர்வீஸ் போட தயாரானான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் தீவிரமாக, மன ஈடுபாட்டுடன் ஸ்குவாஷ் ஆடிக்கொண்டிருந்தார்கள். செண்பகம்தான் தனது கனத்த தேகத்தை தூக்கிக்கொண்டு ஓடி விளையாட மிகவும் கஷ்டப்பட்டாள். அசோக் அவளை ஐந்து நொடிக்கொரு முறை திட்டிக்கொண்டும், கேலி செய்துகொண்டுமே லாவகமாக பந்தடித்துக் கொண்டிருந்தான். வேண்டும் என்றே, அவள் அங்கும் ஓடி சென்று பந்தை அடிக்கும் வகையில் அவளை அலையவிட்டான்.

ஆட்ட சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் மூழ்கிப் போயியிருந்த நேரத்தில்தான், ப்ரியா அங்கு வந்து சேர்ந்தாள். கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றவாறு, அவர்கள் இருவரும் விளையாடுவதையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முன்பு இதே கோர்ட்டில்.. அவளும் அசோக்கும்.. வளர்ந்துவிட்ட குழந்தைகளாய்.. சிரிப்பும் கேலியுமாய்.. நேரம் போவதே தெரியாமல் விளையாடிய நினைவுகள் எல்லாம் இப்போது அவளுக்கு வந்தது..!! இன்று அவள் இடத்தில் இன்னொருத்தி அவனுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து.. அவளுடைய காதல் மனம் பொறுமியது..!! ஒருவித பொறாமை உணர்வுதான்.. தவறென்று அவளுடைய மூளை கண்டித்தாலும்.. அவளது மனம் அந்த கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தது..!!

கைவிரல்களை மடக்கி அந்த கண்ணாடி கதவை 'லொட்.. லொட்..' என்று தட்டினாள். செண்பகம்தான் முதலில் அந்த சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். ப்ரியாவை பார்த்து லேசாக ஆச்சரியமுற்றவள், அப்புறம் கதவை நோக்கி நடந்து வந்தாள். இப்போது அசோக்கும் திரும்பி பார்த்தான். ப்ரியா வந்திருப்பதை உணர்ந்ததும் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான். செண்பகம் கதவை திறந்துவிட ப்ரியா உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அசோக்கை திரும்பி கூட பார்க்காமல், செண்பகத்திடம் இறுக்கமான குரலில் கேட்டாள்.

"உன்கிட்ட ஒரு பி.ஓ.ஸி பண்ணிக்காட்ட சொல்லி கேட்டிருந்தனே.. என்னாச்சு..??" ப்ரியாவின் இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத செண்பகம்,

"அ..அது.. அது பண்ணிட்டு இருக்கேன்க்கா..!!" தடுமாற்றமாய் சொன்னாள்.

"குடுத்த வேலையை முடிக்காம இங்க வந்து ஜாலியா வெளையாடிட்டு இருக்கியா..?? இங்க பாரு செண்பகம்.. நீ இன்னும் ப்ரோபேஷன் பீரியட்லதான் இருக்குற.. நீ வொர்க் பண்ற விதம் சாடிஸ்ஃபாக்ட்ரியா இருக்குன்னு நான் ரிப்போர்ட் குடுத்தாத்தான்.. உன் வேலையை கன்ஃபார்ம் பண்ணுவாங்க.. ஞாபகம் இருக்குல..??" ப்ரியாவின் குரல் மிரட்டலாய் ஒலிக்க,

"இ..இருக்குக்கா.. நா..நாளைக்கு முடிச்சுர்றேன்..!!" செண்பகம் நிஜமாகவே மிரண்டு போய் சொன்னாள்.

"நாளைக்கா..?? எனக்கு இன்னைக்கு வேணும்..!!"

"இ..இன்னைக்கேவா..??"

"ஆமாம்.. கெளம்பு.. போ.. போய் வேலையை பாரு..!!"

செண்பகம் ப்ரியாவின் முகத்தையே மருட்சியாக ஒரு பார்வை பார்த்தாள். ஏமாற்றம் அப்பிய முகத்துடன் அசோக்கை ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள். பிறகு பிரியாவை ஏறிட்டு,

"ச..சரிக்கா..!!" என்று மெல்ல தலையாட்டினாள்.

கதவு திறந்து செண்பகம் தயங்கி தயங்கி வெளியேற, கண்களை இடுக்கியவாறு அவள் முதுகையே ப்ரியா வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் சென்றதும்தான் தலையை சுழற்றி அசோக்கின் முகத்தை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அவனோ இவளை எரித்துவிடுவது போல முறைத்துக் கொண்டிருந்தான். இவள் பார்த்ததும் அவனும் 'ச்ச..' வெறுப்பை உமிழ்ந்துவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கதவு நோக்கி நடக்கலானான். அவன் ப்ரியாவை கடக்கிற சமயத்தில், அவள் எள்ளலான குரலில் கேட்டாள்.

"நீ எங்க கெளம்பிட்ட..??"

"எனக்கும் வேலை இருக்குது.. நான் போறேன்..!!" அசோக் சற்றே வெறுப்பாக சொன்னான்.

"உன் வேலைய நாளைக்கு முடிச்சா போதும்.. வா.. ஒரு கேம் ஆடலாம்..!!"

"எ..எனக்கு மூட் இல்ல..!!" அசோக் சலிப்பாக சொல்ல.

"இவ்வளவு நேரம் அவ கூட வெளையாட மட்டும் மூட் இருந்ததோ..??" ப்ரியா சூடாக கேட்டாள்.

"ஆமாம்.. அப்படியே வச்சுக்கோ..!! உன்கூட வெளையாட எனக்கு புடிக்கலை.. போதுமா..??"

"ஹாஹா.. என்கூட வெளையாண்டா தோத்துடுவ.. பயம்..!! அப்படித்தான..??" ப்ரியா அவனுடைய தன்மானத்தை சீண்டி வலை விரித்தாள்.

"ஏய்.. யா..யாருக்கு பயம்..?? எனக்கு எவளை பாத்தும் பயம் இல்ல..!!" அசோக்கும் வீறாப்புடன் அந்த வலையில் சிக்கிக்கொண்டான்.

"அப்போ வா.. வெளையாடலாம்..!!" சொல்லிவிட்டு ப்ரியா அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அவளையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கும் கொஞ்சம் கூட தயங்கவில்லை.

"ஓகே.. வெளையடாலாம்..!!" என்றான்.

ப்ரியா அசோக்கைப் பார்த்து ஒரு கேலிப்புன்னகையை உதிர்த்தவாறே, அவளுடைய வலது கையை நீட்டி, திறந்திருந்த கண்ணாடி கதவை அடைத்து தாழிட்டாள். கையிலிருந்த ராக்கெட்டால் கீழே கிடந்த பந்தை ஸ்கூப் செய்து அசோக்கின் பக்கமாய் வீச, அவன் அதை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

"சர்வீஸ் போடு..!!"

சொன்ன ப்ரியா நகர்ந்து சென்று கோர்ட்டின் மையப்பகுதியில் நின்றுகொண்டாள். முதுகை வளைத்து.. சற்றே முன்புறமாக குனிந்து.. இரண்டு கையாலும் ராக்கெட்டை வலுவாக பிடித்தவாறு.. கண்களை இடுக்கி சுவற்றை கூர்மையாக வெறித்தாள்..!!

அசோக் அவனுடைய இடத்திற்கு நகர்ந்தான். பந்தை தூக்கி போட்டு சர்வீஸ் செய்தான். பந்து சுவற்றில் மோதி திரும்ப வந்தது. ப்ரியாவை நோக்கி சென்றது. அவள் அதற்காகத்தான் காத்திருந்தாள். உடம்பில் இருக்கும் மொத்த வலுவையும் தன்னுடைய வலது கையில் திரட்டி, பற்களை கடித்துக்கொண்டு, சரெக்கென்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். பந்து மின்னல் வேகத்தில் சுவரை நோக்கி பறந்தது. அதே வேகத்தில் அசோக்கை நோக்கி திரும்ப வந்தது. அவன் சுதாரித்துக் கொள்வதற்கு கொஞ்சமும் அவகாசம் கொடுக்காமல், அவனுடைய அடிவயிற்றில் சென்று 'தொம்..!!!' என அடித்தது.

"ஆஹ்ஹ்க்க்க்க்...!!!!!!"

அசோக் வலியில் முனகியவாறே அடிவயிறை பிடித்துக் கொண்டான். கண்களுக்கு முன் நட்சத்திரங்கள் பறப்பது மாதிரி அவனுக்கு ஒரு உணர்வு. அவன் முகம் சுருக்கி வலியில் துடிக்க, ப்ரியா உணர்ச்சியற்ற முகத்துடன் அவனை வெறித்து பார்த்தாள். அவளுடைய கண்களில் மட்டும் ஒருவித குரூர திருப்தி. உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேலியாக கேட்டாள்.



"பால் வர்றப்போ அதை திரும்ப அடிக்கனும்னு தெரியாது.. காட்டிட்டு நிக்கிற..??"

"ஏ..ஏய்.. எ..என்னடி இவ்ளோ ஸ்பீடா அடிக்கிற..??" அசோக் அடிவயிற்றில் வேதனையுடன் திக்கி திணறி கேட்டான்.

"வேற எப்படி அடிக்கிறது.. அதான கேம்..?? நோகாம வெளையாடனும்னா.. செண்பகம் மாதிரி ஏதாவது சின்னப்புள்ளைங்க கூடதான் போய் விளையாடனும்..!!"

ப்ரியா கிண்டலாக சொல்ல, அசோக் இப்போது அவளை ஏறிட்டு முறைத்தான். அவளுடைய வார்த்தைகள் அவனுடைய ரோஷத்தை கிளப்பி விடுவதாக இருந்தன. கீழே கிடந்த பந்தை எடுத்து அவளிடம் தூக்கி போட்டான்.

"சர்வ் பண்ணு..!!"

என்று கெத்தாக சொல்லிவிட்டு, அடிவயிற்றில் ஒரு அவஸ்தையுடனே நடந்து சென்று, அவளுடைய சர்வீசை எதிர்கொள்ள தயாராக போய் நின்றான். ப்ரியா ஓரக்கண்ணால் அசோக்கை ஒரு கேலிப்பார்வை பார்த்தபடியே சர்வீஸ் போட்டாள். அசோக் திரும்ப அடித்தான். ப்ரியா இப்போது மீண்டும் மின்னல் போல பந்துக்கு ஒரு அடி போட, அது அசோக்கின் முகத்தை நோக்கி 'விரர்ர்ர்ர்....' என்று விரைந்து வந்தது. பந்தின் வேகத்துக்கு தன்னால் எதிர்நிற்க முடியாது என்பதை அசோக் தாமதமாகவே உணர்ந்து கொண்டான். காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து வருகிற பந்தின் பாதையில் இருந்து விலகிக்கொள்ள நினைத்தவன், முகத்தை திருப்பினான். பந்து அவனுடைய தலையில் 'நச்ச்..!!' என்று அடித்து மேல்நோக்கி ராக்கெட் மாதிரி கிளம்பியது. அவனுக்கு தலையை சுற்றி மின்மினிகள் பறந்தன.

"ஆஆஆஆஹ்...!!" என்று அலறினான்.

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவன் அவ்வாறு அலறிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. ப்ரியாவின் கைகள் ப்ளாஷ் அடிப்பது போல பளிச் பளிச்சென்று வெட்டிக்கொண்டே இருந்தன. பந்து புல்லட் வேகத்தில் சுவரை நோக்கி பறப்பதும், திரும்ப அசுர வேகத்தில் விரைந்து வந்து அசோக்குடைய உடலின் ஏதாவது ஒரு பகுதியை வன்மையாக தாக்குவதுமாக இருந்தது. 'ஐயோ.. அம்மா..' என்று முக்கலும், முனகலுமாகவே அசோக் அந்த அடிகளை வாங்கிக்கொண்டான்.

"ஏ..ஏண்டி இப்படி வெறி புடிச்ச மாதிரி ஆடுற..??" அசோக் பரிதாபமாக கேட்க,

"எல்லாம் ஒழுங்காத்தான் ஆடுறாங்க.. போடு போடு..!!" ப்ரியா அலட்சியமாக சொன்னாள்.

ப்ரியாவின் மின்னல் வேக ஆட்டத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று அசோக்கிற்கு தெளிவாக புரிந்தது. ஆனால் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவும் அவனுடைய ஈகோ இடம் தரவில்லை. எப்படியாவது சமாளித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆட்டத்தை தொடர்ந்தான். ஆனால் அவளை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பந்தாலேயே உடம்பெல்லாம் 'சொத்..சொத்..' என்று அடி வாங்கி முனகத்தான் அவனால் முடிந்தது.

அசோக் சொன்ன மாதிரி ப்ரியா ஒரு வெறியுடன்தான் இருந்தாள். அவன் மீதான அவளுடைய ஏக்கம்.. அந்த ஏக்கம் நிறைவேறாத ஏமாற்றம்.. அந்த ஏமாற்றம் அவளுக்களித்த அழுகை.. அந்த அழுகை அவளுக்குள் கிளப்பிவிட்ட ஆத்திரம்..!! எல்லாமுமாய் சேர்ந்து வெறியாக உருமாறி.. அவளுடைய ஸ்குவாஷ் ராக்கெட் மூலமாக வெளிப்பட்டது..!! பாயிண்டுகள் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் அவளுடைய நோக்கமாக இருக்கவில்லை. அசோக்கிற்கு அடிவிழுவது மாதிரி குறிபார்த்து பந்தடிப்பதுதான் அவளது குறிக்கோளாக இருந்தது..!!

அந்த மாதிரி விளையாட்டு என்கிற போர்வையில்.. ப்ரியா அசோக்கின் உடம்பை பதம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்.. ஒருமுறை ப்ரியா சுவற்றில் அடித்த பந்து ஏவுகணை மாதிரி அசோக்கின் முகத்தை குறிவைத்து சீறிக்கொண்டு வந்தது. பந்தை அடித்துவிடவேண்டும் என்று அசோக் தனது ராக்கெட்டை வீசினான். ஆனால் படுவேகத்தில் பறந்து வந்த பந்து அவனுடைய ராக்கெட் வீச்சுக்கு தப்பி, அவனுடைய வலது கண்ணிலேயே வந்து 'டமார்..' என அறைந்தது. அவ்வளவுதான்..!!

"அம்மாஆஆஆ..!!"

என்று கத்திக்கொண்டே அசோக் கையிலிருந்த ராக்கெட்டை நழுவவிட்டான். இரண்டு கைகளாலும் கண்ணை பொத்திக்கொண்டு, அப்படியே கால்கள் மடங்க தரையில் சரிந்தான். 'ஆ... ஆ... ஆ...' என வேதனையாக முனகினான். நெளிந்தான்.

ப்ரியா எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். வேகவேகமாய் மூச்சு விட்டதில், அவளுடைய மார்புகள் மட்டும் குபுக் குபுக்கென ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. அவளுடய கண்கள், அவளது காலடியில் சுருண்டு விழுந்து கிடக்கும் காதலனை ஒருவித வெறித்த பார்வை பார்த்தன. அவள் மனதில் இப்போது ஒரு திருப்தி.. அசோக்கை அடித்து வீழ்த்திவிட்ட திருப்தி.. காலையில் இருந்து நெஞ்சுக்குள் சேமித்து வைத்திருந்த அழுத்தத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திவிட்ட திருப்தி..!! அவளுடைய உதடுகளில் மீண்டும் அந்த குரூர புன்னகை..!!

ஆனால்.. ஒருசில விநாடிகள்தான் அந்த புன்னகை அவளிடம் நீடித்திருந்தது..!! அடுத்த கணமே அவளுடைய காதல் மனது விழித்துக் கொண்டது.. அசோக்கை பார்க்க பாவமாக இருந்தது..!! உடனே கையிலிருந்த ராக்கெட்டை கீழே போட்டுவிட்டு, மண்டியிட்டு அமர்ந்தாள். குப்புற கிடந்த அசோக்கிடம் குனிந்து அவனுடைய தலையை இதமாக தடவி, அவனுடைய முகத்தை தனது கைகளால் மென்மையாக தாங்கியவாறே சொன்னாள்.

"எங்க காட்டு.. பாக்கலாம்..!!"

"ப்ச்.. போடீ..!!" அசோக் கடுப்புடன் அவளுடைய கைகளை தட்டிவிட்டான். "ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ..!!" என வலியில் முனகினான்.

"ஏய்.. காட்டுன்றன்ல.. காட்டுடா..!!"

ப்ரியா அவனுடைய கைகளை வலுக்கட்டாயமாக பற்றி விலக்கினாள். அசோக்கிற்கு அடிபட்ட கண்ணை திறக்க முடியவில்லை. அந்த கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. ஒரு கண் மூடியிருக்க, ஒரு கண்ணை மட்டும் திறந்து ப்ரியாவை பரிதாபமாக பார்த்தான். அவனை அந்த போஸில் பார்க்க ப்ரியாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு,

"அபப்டியே.. கண்ணை தெறக்க ட்ரை பண்ணு..!!" என்றாள்.

"முடியலைடி.. வலிக்குது.. ம்மாஆஆ..!!"

"ஹ்ம்ம்.. சரி.. மொதல்ல நீ எந்திரி.. வா...!!"

ப்ரியா அசோக்கின் ஒரு கையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். அவனுடைய இடுப்பை வளைத்து பிடித்து, அவன் எழுந்துகொள்வதற்கு உதவினாள். கைத்தாங்கலாக கூட்டிச்சென்று கோர்ட்டுக்கு வெளியே கிடந்த ஒரு சேரில் அமரவைத்தாள். அவனை அங்கேயே அமர சொல்லிவிட்டு அவசரமாக நடந்து சென்றாள். ஓரிரு நிமிடங்களிலேயே கையில் ஒரு துணிப்பந்தோடு திரும்பவந்தாள். ஐஸ்கட்டிகளை உள்ளடக்கி சுற்றப்பட்ட துணிப்பந்து..!!



அசோக் 'ஆஹ்.. ஆஹ்..' என்று அவஸ்தையாக முனகிக்கொண்டிருக்க.. ப்ரியா அவனது வீங்கிய கண்ணை சுற்றி ஐஸ் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே சொன்னாள்.

"ஹ்ஹ்ம்ம்ம்.. ஓவரா ஆட்டம் போட்டா.. இப்படித்தான் அடி கெடைக்கும்..!!" அவள் சொன்னதும் அசோக்குக்கு சுருக்கென்று கோவம் வந்தது.

"நான் எங்கடி ஓவரா ஆட்டம் போட்டேன்.."

என்று கத்தியவன், தொடர்ந்து 'லூஸு' என்றும் கத்த நினைத்திருந்தான். ஆனால் காலையில் அவள் சீறியது ஞாபகம் வர, அப்படியே வாய்க்குள்ளேயே அந்த வார்த்தையை போட்டு மென்றான். ஆனால்.. ப்ரியா புரிந்து கொண்டாள்.. அடுத்து என்ன சொல்ல நினைத்திருப்பான் என்று.. அவன் கத்தியது பாதியிலேயே தடைப்பட்டுவிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு..!! அவனுடய கண்ணோரமாய் துணிப்பந்தை வைத்து அழுத்தியவாறே..

"பரவால.. சொல்லிக்கோ..!!" என்றாள் மெல்லிய குரலில். அதற்கு மேலும் அசோக்கால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

"லூஸு..!!!!" என்று வாய்விட்டு கத்தின பிறகுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் கத்தியதற்கு ப்ரியா மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள். கவனமாக அவனுடய கண்ணுக்கு கொஞ்ச நேரம் ஒத்தடம் கொடுத்தாள். ஒத்தடம் கொடுத்தது அசோக்கின் கண்ணில் ஏற்பட்டிருந்த வேதனையை வெகுவாக குறைத்தது. ஓரிரு நிமிடங்களுக்கு அப்புறம் மெல்ல கண்ணை திறந்து பார்த்தான். இமைகளை ஒருமாதிரி சுருக்கி சுருக்கி விழித்தான்.

"ப்ச்.. ஒன்னும் இல்லடா.. ஓவரா ஸீன் போடாத..!!" ப்ரியா நக்கலாக சொன்னாள்.

"அடிங்.. பண்றதையும் பண்ணிட்டு.. நான் ஓவர் ஸீன் போடுறனா..??"

"நான் என்ன பண்ணினேன்.. வெளையாட்டுனா அடிபடுறது சகஜம்தான்.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்..??"

"வெளையாட்டுலாம் இல்ல.. நீ வேணும்னே பண்ணுன.. எனக்கு நல்லா தெரியும்..!! வெறியாட்டம் ஆடிட்டு.. வெளையாட்டாம்ல வெளையாட்டு..!!" அசோக் கடுப்புடன் சொல்ல, ப்ரியா அதை கண்டுகொள்ளாமல் கூலாக சொன்னாள்.

"சரி விடு.. வா.. இன்னொரு கேம் ஆடலாம்..!!"

"எதுக்கு..?? இன்னொரு கண்ணையும் நொள்ளையாக்குறதுக்கா..??"

"ஹாஹா.. நான்தான் வேணுன்னு பண்ணலைன்னு சொல்றேன்ல..??"

"நீ வேணுன்னு பண்ணுனியோ.. வேணாம்னு பண்ணுனியோ..!! எனக்கு ஸ்குவாஷ் மேல இருந்த ஆசையே போச்சு..!!"

"ஓ..!! அப்போ இனி நீ ஸ்குவாஷ் ஆட மாட்ட..??" ப்ரியா அசோக்கை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

"ஏழேழு ஜென்மத்துக்கும் ஆட மாட்டேன்.. யப்பா..!!" அசோக் தலையை உதறியவாறே சொன்னான்.

"ஹ்ம்ம்.. ஓகே.. நல்ல முடிவு..!! நாளைப்பின்ன.. வேற யார் கூடவாவது வெளையாடுனேன்னு தெரிஞ்சது..??"

"என்ன பண்ணுவ..??"

"ஒண்ணுல்ல.. 'நாம ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம் வா..'னு கூப்பிடுவேன்..!!"

ப்ரியா குறும்பாக சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவளையே முறைத்து பார்த்தான்.



அத்தியாயம் 20

அப்புறம் வந்த சில நாட்கள் அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும்.. அந்த மாதிரி வெறுப்பும், முறைப்புமாகவே கழிந்தன..!!

அறத்திற்கு மட்டும் அல்லாது மறத்திற்கும் அன்புதான் துணை என்கிறார் வள்ளுவர்..!! அன்பை வெளிப்படுத்த பலவிதங்கள் உண்டு.. கோவம் அதில் ஒரு பிரதான வகை..!! சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை கன்னத்தில் அறை போட்டு சாதத்தை வாயில் திணிக்கிறாள் அம்மா.. கன்னத்தில் விழுந்த அறை மறம் என்றால்.. அதற்கான காரணம் அன்பல்லவா..?? கன்னத்தில் அறைந்துவிட்டு சாதத்துடன் சேர்த்து அன்பையும் அல்லவா பிசைந்து ஊட்டுகிறாள்..?? அசோக்கை ப்ரியா அடித்து வீழ்த்தியதற்கும் அத்தகைய அன்புதான் காரணம்..!!

இத்தனை நாளாய் அசோக் தனக்கு உரியவன் என்றே நம்பியிருந்தாள். இப்போது அவன் வேறொருத்திக்கு சொந்தமானவன் என்று தெரிந்ததும், அவன் மீதான அவளுடைய காதல் கொஞ்சமும் குறைந்து போகவில்லை. மாறாக வேறொரு விதமாக அது அதிகரிக்கத்தான் செய்தது. அசோக்கையும் செண்பகத்தையும் சேர்த்து வைத்து பார்க்கையில் அவளுடைய மனதில் ஒரு பொசஸிவ் உணர்வு பொங்குகிறதே.. அந்த விதத்தில்..!! ஏதாவது அதிசயம் நடந்து இவன் தன்னுடன் இணைந்து விடமாட்டானா என ஏங்குகிறாளே.. அந்த விதத்தில்..!! ஆனால்.. அந்த காதலை அவள் வெளிப்படுத்துகிற விதந்தான் பிரச்சினைக்குரியதாக இருந்தது..!!

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் எப்போதும் போலதான் நடந்து கொள்வாள். அசோக் மீதான அவளுடைய காதலை மிக இயல்பாகவே வெளிப்படுத்துவாள். காலையில் ஆபீஸ் வந்ததும் அசோக்கின் இடத்திற்கு சென்று,

"காலைல கோயிலுக்கு போனேன்டா.. உனக்கு நல்ல புத்தி குடுக்கனும்னு சாமியை வேண்டிக்கிட்டேன்..!!"

என்று கேலியும், சிரிப்புமாக சொல்லிக்கொண்டே அவனுடைய நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள். அவனும் முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு அவளுக்கு நெற்றி காட்டுவான். இருவரும் உருகி உருகி பேசிக் கொள்ளாவிட்டாலும், இலகுவான மனநிலையுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்புறம் காபி பிரேக்கின்போது.. செண்பகம் தனது கைக்குட்டையால் அசோக்கின் நெற்றியில் இருக்கும் திருநீறை ஒழுங்கு படுத்துவதை ப்ரியா காண நேரிடும்.. அவ்வளவுதான்..!! செண்பகம் இயல்பாய் செய்த ஒரு காரியம்.. ப்ரியா தனது இயல்பை தொலைக்க காரணமாகிவிடும்..!! கண்களை இடுக்கி இருவரையும் முறைத்துப் பார்ப்பாள். அசோக் மீதான அவளுடைய காதல் அப்புறம் அன்று முழுவதும் கோவமாகத்தான் வெளிப்படும். அந்த கோவத்தை காட்ட அவள் உபயோகப் படுத்திக்கொள்வது அவளுடைய பதவியைத்தான்..!! அவனுக்கு அவள் பாஸ் என்கிற வசதியைத்தான்..!!

உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால்.. அந்த திருநீறு விஷயம் நடந்த அன்று இரவு.. அசோக்கும் செண்பகமும் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ப்ரியாவும் வேலையை முடித்து தனது அறையில் இருந்து வெளிப்பட்டாள். இவர்கள் இருவரும் ஜோடியாக கிளம்புவதை பார்த்ததும், அவளுடைய மனம் குரங்கு போல தாவ ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு இனம்புரியாத எரிச்சலும், கோவமும்..!! ஆட்டையை கலைத்துவிட வேண்டும் என்று உடனடியாய் ஒரு ஆதங்கம்..!! நேராக அசோக்கின் இடத்திற்கு சென்று.. முக்கியத்துவமே இல்லாத ஒரு வேலையை குறிப்பிட்டு..

"அதை இன்னைக்கு முடிச்சு செக்கின் பண்ணிட்டு போ..!!" என்றாள் வில்லத்தனமாக.

அசோக் எரிச்சலானான். கடுப்பாக அவளை முறைத்தான். விவாதம் செய்தான். ப்ரியா பிடிவாதமும் கடுமையாகவும் இருக்க, கடைசியில் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான். அவனை நம்பி கிளம்பி தயாராக இருந்த செண்பகத்தை பரிதாபமாக பார்த்தான். ப்ரியா அவனுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டவளாய்,

"கவலைப்படாத.. நான் அவளை ட்ராப் பண்ணிடுறேன்.. நீ வேலையை முடிச்சுட்டு போ..!!" என்று அசோக்கிடம் சொல்லிவிட்டு, அப்புறம் செண்பகத்திடம் திரும்பி,

"வா செண்பகம்.. நாம கெளம்பலாம்..!!" என்றாள்.

செண்பகமோ அசோக்கை ஏமாற்றமாக பார்த்தாள். அவஸ்தையாய் நெளிந்தாள். தன் மீது எப்பொழுதும் சிடுசிடுவென எரிந்து விழும் ப்ரியாவுடன், சேர்ந்து செல்ல தயங்கினாள். ப்ரியா விடவில்லை.

"ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. வா..!!"

என்று அவளுடைய புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். 'வாடி.. மாமன் முதுகுல தொங்கிக்கிட்டேதான் போவியாக்குகும்..??' என்று மனதுக்குள் ஏளனமாக கேட்டுக்கொண்டாள்.

வண்டியில் கோணபன அக்ரஹாரத்தை தாண்டி செல்கையில்.. இயல்பான குரலில் ப்ரியா ஆரம்பித்தாள்.. செண்பகத்தின் மனதை அறிய தூண்டில் போட்டு பார்த்தாள்..!!

"என் ஃப்ரண்ட் ஒருத்தி சென்னை ஐ.பி.எம்ல வொர்க் பண்றா செண்பகம்..!! அவளும் டீம்லீட்தான்.. அவங்க டீம்க்கு ஒரு ரிசோர்ஸ் தேவைப்படுது.. யாராவது தெரிஞ்ச ஆளு இருந்தா சொல்லுடின்னு கேட்டுட்டே இருக்கா.. அவ சொன்ன ப்ரோஃபைல் எக்ஸாக்டா உனக்கு மேட்ச் ஆகுது..!!"

"ஓ..!!"

"உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா..?? நல்ல டீம்.. வொர்க்லாம் எக்சலன்ட்டா இருக்கும்.. உன் கேரீர்க்கு ரொம்ப யூஸ்ஃ புல்லா இருக்கும்.. நல்ல ஆப்பர்ச்சூனிட்டி..!! ஸி.டி.ஸி.யும் இங்க விட ரெண்டு லட்சம் ஜாஸ்தியா கெடைக்கும்.. என்ன சொல்ற..??"

"இ..இல்லக்கா.. வேணாம்..!! எனக்கு பெங்களூர்ல இருக்கனும்னுதான் இன்ட்ரஸ்ட்..!!"

செண்பகம் தனது இயல்பான விருப்பத்தை சொல்ல, ப்ரியாவுக்கு மனதுக்குள் பரபரவென ஒரு எரிச்சல் கிளம்பியது. 'தெரியுண்டி.. நீ போக மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.. தெரிஞ்சுக்கிட்டேதான் கேட்டேன்..!! நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஊர் சுத்துறதுக்கும்.. சேந்து கூத்தடிக்கிறதுக்கும்.. என் மூலமாவே ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணி இந்த கம்பனிக்குள்ள நொழைஞ்சவளாச்சே நீ..?? நீயா பெங்களூர் விட்டு கெளம்புவ..?? வேலை கெடைக்கிற வரை ரெண்டு பேருமே எப்புடி கமுக்கமா இருந்தீங்க..?? வேலை கெடைச்சதுந்தான உங்க திருட்டுத்தனம் எனக்கே புரியுது..!! கோடி ரூவா குடுத்தாலும் நீ போகமாட்டன்னு எனக்கு தெரியும்..!!' என்று மனதிற்குள்ளேயே செண்பகம் மீது வெறுப்பை உமிழ்ந்தவள், வண்டியை சரக்கென்று சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினாள்.

"எ..என்னக்கா..?? என்னாச்சு..??" குழப்பமாய் கேட்ட செண்பகத்திடம்,

"ஹேய்.. ஸாரி செண்பகம்.. எனக்கு சிங்கசந்த்ரால ஒரு முக்கியமான வேலை இருக்கு.. இப்போதான் ஞாபகம் வந்தது..!! நான் இப்படி ரைட் எடுக்குறேன்.. நீ ஏதாவது ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடு..!!" என்று கூலாக சொல்லிவிட்டு, பாதிவழியிலேயே அவளை இறக்கிவிட்டு பறந்தாள் ப்ரியா.

ப்ரியாவுடைய மனதில் இருந்த வலியை அவள் ஒருத்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவளுடைய காதல் கானல் நீராய் போனதில் அவளுக்குள் எழுந்த ஏமாற்றம், அவளுடைய மனதையும் மூளையும் வெகுவாக பாதித்திருந்தது. எந்த நேரமும் ஒரு உணர்ச்சி அழுத்தத்தின் பிடியிலேயே இருந்தாள். டீமில் உள்ளவர்களிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தாள். ஆனால்.. வீட்டுக்கு சென்றால் வேறுவிதமாக மாறிவிடுவாள். அவளுடைய உற்சாகமும் துள்ளலும் அடங்கிப்போய், அமைதியும் விரக்தியுமாய் திரிந்தாள். மகளுடைய மாற்றத்தை வரதராஜனால் உடனடியாக புரிந்து கொள்ள முடிந்தது.



"ஏன்மா.. எப்போவும் எதையோ பறிகுடுத்த மாதிரியே இருக்குற..??" என்று அன்பாக கேட்டார்.

"இ..இல்லையே.. நான் எப்போவும் போலதான் இருக்குறேன்..!!" ப்ரியா சமாளிக்க முயன்றாள்.

"ஹ்ம்ம்.. அந்த எடம் அமையாம போனதுல உனக்கு எதுவும் வருத்தமாமா..??"

"ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி..!! யாருக்கு யாருன்னு எழுதி வச்சபடிதான நடக்கும்..?? அதுக்காகலாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது.. எனக்கு ஒன்னும் வருத்தம்லாம் இல்ல டாடி..!!"

மனதில் கொள்ளை கொள்ளையாய் இருந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் மறைத்துக்கொண்டு, ப்ரியா பொய் சொன்னாள். அப்படியே அப்பாவுடைய மடியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள். அவரும் இவளுடைய தலையை இதமாக கோதிவிட்டவாறே சொன்னார்.

"கவலைப்படாதமா.. கூடிய சீக்கிரம் அப்பா உனக்கு இன்னொரு நல்ல மாப்ளையை தேடி கொண்டு வர்றேன்..!!"

"டாடி ப்ளீஸ்.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..!!"

"ஐயோ.. ஏன்மா அப்படி சொல்ற..??"

"ப்ளீஸ் டாடி.. என்னை எதுவும் கேக்காதீங்க..!!"

முட்டிக்கொண்டு வருகிற கண்ணீரை அடக்கிக்கொண்டே ப்ரியா சொன்னாள். மகளுடைய காதலை மறைமுகமாக கெடுத்துவிட்டோம் என்பதை அறியாமலே வரதராஜன் அவளுக்காக உருகினார். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு அன்பை பொழிந்தார்.

ப்ரியாவின் வீட்டில் இப்படி என்றால்.. அசோக்கின் வீட்டில் நிலைமை வேறு விதமாக இருந்தது..!! அசோக்கின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது..!! பெண் பார்த்த விஷயத்தில் அசோக் பல்டி அடித்ததில் இருந்தே, ராஜேஷும் செல்வியும் அவனை மதிப்பதே இல்லை. அவனை பார்க்க நேரிடும்போதெல்லாம் முறைப்பையே வெளிப்படுத்தினர். அந்த பிரச்னையன்று அவன் சொன்னதையே குத்திக்காட்டி பேசினார்கள்..!!



மடிக்கணினி மூலமாக இணையத்தை தொடர்புகொள்ள முடியாத எரிச்சலுடன், அசோக் அண்ணனிடம் வந்து கேட்டான்.

"ஹேய்.. நெட் கனெக்ட் ஆகலடா..!!"

"என்னை பாத்தா கஸ்டமர்கேர் ஆள் மாதிரியா தெரியுது உனக்கு..??" ராஜேஷின் குரலில் ஆரம்பத்திலேயே ஒரு கிண்டல்.

"ப்ச்.. போன மாச இன்டர்னட் பில்க்கு செக் ஒன்னு குடுத்தனே.. என்னாச்சு..??"

"அதுவா..?? அந்த டேபிள்ல பத்திரமா வச்சிருக்கேன் பாரு..!!"

"என்னது..?? டேபிள்ல பத்திரமா வச்சிருக்கியா..?? டெபாசிட் பண்ண சொல்லித்தான உன்கிட்ட குடுத்தேன்..??"

"ஆமாப்பா.. நீ இன்னைக்கு டெபாசிட் பண்ணுன்னு சொல்வ.. அப்புறம் நாளைக்கே 'ஒரு கோவத்துல டெபாசிட் பண்ண சொல்லிட்டேன்'னு சொல்லி சண்டை போடுவ.. எதுக்குடா வம்புன்னு நான் செக்கை பத்திரமா வச்சிருக்கேன்..!! உன் பேச்சை நம்பி.. இனி நான் எந்த வேலையும் செய்ற மாதிரி இல்ல..!!"

அலட்சியமாக சொல்லிவிட்டு எழுந்து செல்கிற அண்ணனை, அசோக் கடுப்பாக பார்த்தான். அப்புறம் அந்த செக்கை தூக்கிக்கொண்டு அவனே பி.எஸ்.என்.எல் ஆபீசுக்கு ஓடினான். ராஜேஷ் இப்படி என்றால் செல்வி வேறு மாதிரி அசோக்கை நோகடித்தாள்.

அன்று அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் டிவி பார்த்துக்கொண்டே கதையடித்துக் கொண்டிருந்தார்கள். 'காபி போடுங்க அண்ணி..!!' என்று அசோக் சொல்லி அரை மணி நேரம் ஆயிற்று. காபி ஹாலுக்கு வந்த பாடில்லை. சந்தேகமுற்ற அசோக் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தான். கிச்சனில் செல்வியை ஆளைக் காணோம். உள்ளறைக்குள் துணி மடித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன அண்ணி.. வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க.. நீங்க இங்க வந்து உக்காந்திருக்கீங்க..??"

"அங்க வந்து நான் என்ன பண்ணப்போறேன்.. நான் ஏதாவது எதார்த்தமா பேசுவேன்.. அது உனக்கு புடிக்காது.. 'ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீங்க'ன்னு கத்துவ.. எனக்கெதுக்கு வம்பு..?? நீயே உன் பிரண்டுட்ட பேசி பேசி.. நல்லா நம்ம குடும்ப மானத்தை காப்பாத்து..!!" செல்வி கேலியாக சொல்ல, அசோக் அவளை முறைத்தான்.

"சரி.. காபி போட்டு குடுத்துட்டாவது.. இங்க வந்து உக்காந்துக்கலாம்ல..??"

"ஆமாம்.. நீ காபி போட சொல்வ.. போட்டு எடுத்துட்டு வந்தா.. 'நான் என்ன காபியா கேட்டேன்.. காராபூந்தில கேட்டேன்'னு சொல்வ..!! மாத்தி மாத்தி பேசுவ.. உன்கூடலாம் என்னால போராட முடியாதுடா சாமி..!! எது வேணுன்னாலும்.. நீயே போட்டுக்கோ..!!"

சலிப்பாக சொல்லிவிட்டு மடித்த துணியுடன் பீரோ நோக்கி செல்கிற அண்ணியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அப்புறம் கிச்சன் சென்று கையெல்லாம் சுட்டுக்கொண்டு காபி போட்டான்.

ப்ரியா மீது கொண்ட காதலுக்காக அசோக் தனது வீட்டில் இருப்பவர்களை பகைத்துக் கொண்டான். ஆனால்.. அந்த ப்ரியாவோ ஆபீஸில் செய்கிற அட்டூழியங்கள் அவனுக்கு வேதனையையே கொடுத்தன..!! தன் மீது மட்டும் இல்லாமல்.. தனக்கு உறவுக்காரி என்ற காரணத்துக்காக செண்பகம் மீதும் அவள் வெறுப்பை உமிழ்வதாக அவனுக்கு தோன்றியது..!! ப்ரியாவின் மீதான ஒரு இனம்புரியாத வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! அந்த மாதிரி அவனுடைய வெறுப்பை அதிகமாக்கிய இன்னொரு சம்பவம்..

மென்பொருளின் முதல்கட்ட டெலிவரிக்காக.. க்ளையன்ட் கம்பனியில் இருந்து.. அவர்கள் டீமில் இருப்பவர்களுக்கு தனித்தனியாக நற்சான்றிதழ்கள் அனுப்பி வைத்தார்கள்..!! யாராருக்கு சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைத்தது ப்ரியாதான்..!! அதில் செண்பகம் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டாள்..!! டீமில் எல்லோர் கையிலிருக்கும் சான்றிதழகை செண்பகம் சற்றே ஏக்கமாக பார்க்க.. அசோக்கிற்கு பொறுக்க முடியவில்லை..!! ப்ரியாவிடம் சென்று சண்டை பிடித்தான்..!!

"ஏன் ப்ரியா இப்படி பண்ணின..??"

"என்ன பண்ணினேன்..??"

ப்ரியா விஷயம் தெரிந்துகொண்டே முறைப்பாக கேட்டாள். 'தன் காதலிக்கு சர்ட்டிஃபிகேட் கிடைக்காத ஆத்திரத்தில் சப்போர்ட்டுக்கு வந்திருக்கிறானா..??' என்று இன்ஸ்டண்டாய் அசோக்கின் மீது அவளுக்கு ஒரு எரிச்சல்..!!

"அந்த லிஸ்ட்ல செண்பகம் பேரையும் ஆட் பண்ணிருக்கலாம்ல..?? அவளுக்கும் அந்த சர்ட்டிஃபிகேட் கெடைச்சிருக்கும்ல..??" அசோக்கின் கேள்விக்கு அவள் தயாராகத்தான் இருந்தாள்.

"ப்ச்.. ஃபர்ஸ்ட் ஃபேஸ் டெலிவரி முடிஞ்சப்புறந்தான் அவ டீமுக்குள்ளயே வந்தா.. அவளை எப்படி அந்த லிஸ்ட்ல சேக்குறது..?? அது தப்பு..!!"

"இந்த சின்ன விஷயத்துக்குலாமா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பார்ப்ப..?? இதுலாம்.. ஜஸ்ட்.. டீமுக்குள்ள ஒருத்தொருக்கொருத்தர் பண்ணிக்கிற சின்ன சின்ன ஹெல்ப்தான..?? டீம்ல எல்லாருக்கும் கெடைக்கிறப்போ.. அவளுக்கு மட்டும் இல்லைன்னா.. அது அவளுக்கு கஷ்டமா இருக்காதா..?? அந்த சர்டிஃபிகேட் வச்சு அவ பெருசா ஏதும் சாதிக்கப் போறது இல்ல.. ஆனா ஏதோ ஒரு வகைல அவ கேரீர்க்கு அது ஒரு அட்வாண்டேஜா இருந்திருக்கும்..!! அதை நீ ஸ்பாயில் பண்ணிட்ட..!!"

"நான் எதையும் ஸ்பாயில் பண்ணல.. என்ன பண்ணணுமோ அதைதான் பண்ணேன்.. எது சரியோ அதைதான் செஞ்சேன்..!!"

"அப்படி என்ன அவ மேல உனக்கு வெறுப்பு..??"

"எனக்கு யார் மேலயும் விருப்பும் இல்ல.. வெறுப்பும் இல்ல..!! உனக்கு அவளை புடிக்கும்னா.. நீயே நல்லா கொஞ்சிக்கோ.. எல்லாரையும் வந்து கொஞ்ச சொல்லாத..!!" ப்ரியா சூடாக சொல்ல, அசோக் நொந்து போனான்.

"நீ செய்றது தப்புன்னு உனக்கு தோணலையா ப்ரியா..??" குரலில் சற்றே ஏக்கம் தொனிக்க கேட்டான்.

"இல்ல.. தோணலை..!!" ப்ரியா வெடுக்கென சொல்ல, அசோக் வெறுப்பாக அவளை பார்த்தான்.

"ம்ம்ம்ம்...!!! என்னை 'ஈகோ புடிச்சவன்.. ஈகோ புடிச்சவன்..'ன்னு சொல்வல..?? என்னை விட உனக்குத்தான் அது பலமடங்கு இருக்கு..!!"

"எனக்கா..?? ஈகோவா..?? ஹாஹா..!!" ப்ரியா ஏளனமாக சிரித்தாள்.

"சிரிக்காத..!! எல்லாத்துக்கும் ஒரு நாள் ஃபீல் பண்ணத்தான் போற..!!"

அசோக் ஆத்திரமாய் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அதன்பிறகு ப்ரியா வெகுநேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு புரியாமல் இல்லை..!! அவள் டெக்லீட் ஆனபோது.. அசோக் சவால் விட்டபோது.. அடிக்கடி அவன் சீண்டியபோது.. அவளுக்குள் ஒரு ஈகோ எழுந்தது..!! பிறகு அன்று நள்ளிரவு மன்னிப்பு கேட்டபிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சகஜ நிலைக்கு திரும்பியது..!! ஆனால்.. செண்பகத்தின் வருகைக்கு பின்.. அவளும் அசோக்கும் காதலிக்கிறார்கள் என்று அவளுக்கு சொல்லப்பட்ட பின்.. செண்பகம் மீது எழுந்த பொசஸிவ் உணர்வு.. தூங்கிக்கொண்டிருந்த ப்ரியாவின் ஈகோ உணர்வை மீண்டும் விழித்துக் கொள்ள செய்துவிட்டது..!!

எல்லாம் அவளுக்கு புரியத்தான் செய்தது..!! சில நேரங்களில்.. 'ஏன் இப்படி எல்லாம் செய்கிறோம்.. அவர்களுடைய காதலை இலகுவாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது..?? எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல்.. இயல்பாக இருக்கலாமே..??' என்று கூட அவளுக்கு தோன்றும்..!! ஆனால்.. அசோக் மீது அவள் வைத்திருக்கும் அதீத காதல்.. அவளை அப்படி இயல்பாக இருக்க விடாது..!! அவளையும் மீறி அவர்கள் மீது கோபமாக வெளிப்பட்டு விடும்.. அது அசோக்கின் பார்வையில் தவறாக தோன்றும்..!!

இந்தமாதிரி சூழ்நிலையில்தான் ஒருநாள்..!! அன்று காலை ப்ரியா ஆபீஸுக்கு வந்து அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே, அவளுடைய செல்போனுக்கு 'டிடிங்.. டிடிங்..' என்று இரண்டு மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. எடுத்து பார்த்தாள். ஒன்று அசோக்கிடம் இருந்து.. இன்னொன்று செண்பகத்திடம் இருந்து..!! ஆனால்.. இரண்டிலும் இருந்த விஷயங்கள் ஒன்றுதான்..!!

"காலைல எனக்கு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு.. ஆபீஸுக்கு வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் லேட் ஆகும்.. தேங்க்ஸ் ப்ரியா..!!"



இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மெசேஜ்களை அனுப்பியதை பார்த்ததும், என்னவென்று சொல்ல முடியாத ஒருவித எரிச்சலுக்கு ப்ரியா உள்ளானாள். 'இவர்கள் இருவரும் ஜாலியாக ஊர் சுற்ற.. என்னிடமே அனுமதி கேட்கிறார்களா..??' என்று அவளுடைய மனதில் இருந்த பொசசிவ்னஸ், ஒரு கற்பனையை ஓட்டி பார்த்தது. அவளுடைய ஈகோவை சுண்டிவிட்டது. அவர்களுடைய திட்டத்தை எப்படியாவது கெடுக்கவேண்டும் என்று நினைத்தாள். 'என்ன செய்யலாம்..??' என்று சுட்டுவிரலால் நெற்றியை தட்டியவாறே சில வினாடிகள் வில்லத்தனமாக யோசித்தாள். யோசனை சிக்கியதும்,அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். அவன் எடுத்து ஹலோ சொன்னதும் சீற்றமாக கேட்டாள்.

"எங்க இருக்குற..??"

"பிக்பஸார்ல..!!"

"செண்பகம்..??"

"ஹ்ம்ம்.. இந்தா பக்கத்துல நிக்கிறா..!!"

அசோக் இயல்பாக சொல்ல, 'ஹ்ம்ம்.. நான் நெனச்சது சரிதான்..!!' என்று ப்ரியா முடிவு செய்தாள். 'பக்கத்துல நிக்கிறாளோ.. இல்ல அவன் நெஞ்சுல படுத்து கெடக்குறாளோ..??' என்று கற்பனையை மேலும் ஓட்டினாள்.

"அங்க என்ன பண்ணிட்டு இருக்குறீங்க ரெண்டு பேரும்..??"

"செண்பகம் இன்னைக்கு பி.ஜி. ஷிஃப்ட் ஆகுறா ப்ரியா.. சில திங்ஸ் வாங்க வேண்டி இருந்தது.. அதான் பர்சேஸ் வந்தோம்..!! ரெண்டு பேரும் லெவன் ஓ க்ளாக் போல ஆபீஸ் வந்துடுவோம்.. சரியா..??"

அசோக் சொன்ன காரணத்தில் ப்ரியாவுக்கு திருப்தி இல்லை. காதலியுடன் ஊர் சுற்ற, பொய்யாக ஒரு காரணம் சொல்கிறான் என்றே எண்ணினாள். சற்றுமுன் தான் யோசித்த திட்டத்தின்படி..

"அந்த அக்கவுன்ட் ஸ்விட்ச் ஃபங்ஷனாலிட்டி பத்தி.. க்ரிஸ்டோஃபர்ட்ட அப்ரூவல் வாங்க சொன்னனே.. என்னாச்சு..??" என்று ஆரம்பித்தாள்.

"இ..இன்னும் வாங்கலை ப்ரியா..!! அவன் டெமோ வேணுன்னு கேட்டான்..!!" அசோக் சற்று தடுமாற்றமாகவே சொன்னான்.

"எப்போ அவனுக்கு டெமோ கொடுக்க போற..??"

"நா..நாளைக்கு..!!"

"அவன் நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ்ல போறான்..!! தெரியுமா..??"

"ஓ..!! அப்போ சரி.. அவன் திரும்ப வந்தப்புறம் குடுக்குறேன்..!!"

"நோ வே..!! ரெண்டு நாள்லாம் அந்த இஷ்யூ பெண்டிங்லபோட முடியாது.. அது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ..!!" ப்ரியா பொய் சொன்னாள்.

"ப்ச்.. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற..??" அசோக் இப்போது சற்று எரிச்சலுற்றவனாய் கேட்டான்.

"பர்சேஸ்னா.. பக்கெட்டு, மக்கு வாங்கணும்.. அவ்ளோதான.. அதை அவளே தனியா வாங்கிக்கட்டும்..!! நீ உடனே கெளம்பி வா.. அவன் நைன் ஓ க்ளாக் போல கெளம்பிடுவான்.. அதுக்குள்ளே வந்து அவனுக்கு டெமோ குடுத்து அப்ரூவல் வாங்கு..!!"

"நைன் ஓ க்ளாக்'குக்கா..?? என்ன வெளையாடுறியா..?? நான் மடிவாலால இருக்குறேன்டி.. இன்னும் டென் மினிட்ஸ்ல எப்படி எலக்ட்ரானிக் சிட்டி வர்றது..??"

"அதுலாம் எனக்கு தெரியாது.. அவன் கெளம்புறதுக்குள்ள நீ ஆபீஸ்ல இருக்கணும்.. அவ்ளோதான்..!!"

"ப்ச்.. இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு என்ன..?? திடீர்னு வந்து இப்படி கிரிட்டிக்கல் இஷ்யூன்னா என்ன அர்த்தம்..??" அசோக் சூடாக கேட்க,

"நீ இப்படி திடீர்னு ஊர் சுத்த கெளம்புவேன்னு எனக்கு எப்படி தெரியும்..??" ப்ரியாவும் பதிலடி கொடுத்தாள்.

"போடீ.. என்னால முடியாது..!!"

"பாரு அசோக்.. அந்த இஷ்யூ இன்னைக்கு முடியலைன்னா.. அப்புறம் நான் மேட்டரை எஸ்கலேட் பண்ணவேண்டி இருக்கும்.. பிரச்சினையை நீ தான் ஃபேஸ் பண்ணனும்.. பாத்துக்கோ..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!"

மிரட்டலாக சொல்லிவிட்டு ப்ரியா காலை கட் செய்தாள். செல்ஃபோனை தூக்கி ஓரமாய் போட்டாள். இரண்டு கைகளையும் விரித்து, முகத்தை அதில் கவிழ்த்துக் கொண்டாள். தான் செய்தது சரியா தவறா என்று மனதுக்குள்ளேயே பட்டி மன்றம் நடத்தினாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். அவளுடைய செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தாள். 'அசோக் காலிங்..' என்றது டிஸ்ப்ளே..!! கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள். எரிச்சலாகவே கேட்டாள்.

"ப்ச்.. எதுக்கு இப்போ கால் பண்ணிட்டு இருக்குற.. கெளம்புனியா இல்லையா..??"

ஆனால்.. இப்போது அடுத்த முனையில் அசோக்கின் குரலுக்கு பதிலாக இன்னொரு ஆளின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

"ஏம்மா.. இந்த செல்போன் வச்சிருந்த தம்பியை உங்களுக்கு தெரியுமா..??"

"தெ..தெரியும்.. நீ..நீங்க..??" ப்ரியா பட்டென குழப்புமுற்றவளாய் கேட்டாள்.

"இந்த தம்பிக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சுமா.. லாரில போய் மோதிடுச்சு..!!"

அந்த ஆள் சொல்ல, வாழ்நாளின் மிக மோசமான அதிர்ச்சியை ப்ரியா உள்வாங்கினாள்.

"வாட்..?????" என்று விழிகள் விரித்து கத்தினாள்.

"ஃபோன்ல கடைசியா இந்த நம்பருதான்மா இருந்தது.. அதான் இதுக்கு கால் பண்ணினேன்..!! சென்ட் ஜான்சுக்கு தூக்கிட்டு போறோம்.. இவரு வீட்டுக்கு தகவல் குடுத்து.. உடனே கெளம்பி வர சொல்லும்மா..!!"

ப்ரியாவுக்கு இப்போது கண்கள் செருகிக்கொண்டன. மயக்கம் வருவது போலிருக்க, தலையை பிடித்துக் கொண்டாள். அவளுடைய கையில் இருந்த செல்ஃபோன் நழுவி தரையில் விழுந்தது. அது நழுவுவதற்கு முன் அந்த ஆள் சலிப்பாக சொன்ன வார்த்தைகள், ப்ரியாவின் காதில் தெள்ளத் தெளிவாக வந்து விழுந்தன.

"சிக்னல் விழுறதுக்குள்ள அப்டியே பறக்குறாரு..!! ஹ்ஹ்ம்ம்.. அப்படி என்னதான் அவசரமோ..??"

 

1 comment:

  1. காதலின் வலி யாரையும் பொசுக்கத்துடிக்கும்
    காதலனின் வலி தன்னையே
    பொசுக்க நினைக்கும்
    மிகவும் நல்ல எழுத்து ..

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...