Social Icons

ஐ ஹேட் யூ, பட்.. 3


 




அத்தியாயம் 7

புகழ்ச்சியை 'போதை' என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை மறந்து போவாள்..!!

'தான்' என்ற எண்ணம் தகாத கிருமிக்கு ஒப்பானது. அன்பென்ற தூய்மையான பாலை திரித்து விட கூடியது அது. வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும் வல்லமை கொண்டது அது. அந்த கைதட்டல்கள் எல்லாம் 'தனக்கு கிடைக்க வேண்டியவை' என்ற எண்ணம் அசோக்கின் மனதுக்குள் கிருமியென கிளம்பி, அவன் ப்ரியா மீது வைத்திருந்த அன்பென்ற பாலில் சென்று விழுந்தது. தன்னுடன் இருப்பவர்கள் மத்தியில் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்கள் பிடிக்காத பாதையில் பயணிக்கையில், தான் விரும்புகிற பாதைக்கு திருப்பிவிட துடிப்பவன். தனது உழைப்புக்கு மற்றொருவருக்கு பெரும்பாராட்டு என்ற அதிர்வு.. அத்தனை நாளாய் தனது கைக்குள் இருந்த ப்ரியா, தன்னை மீறி செல்வது போன்றதொரு உணர்வு.. இவைகளுடன் அவள் இவனை கண்டுகொள்ளவில்லை என்கிற நினைவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வான்..?? அவளை விட்டு விலகி நடப்பான்..!!

விலகி நடந்த அசோக், மீட்டிங் ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே விடுவிடுவென சென்று தனது க்யூபிக்கலில் அமர்ந்து கொண்டான். இன்னும் மீட்டிங் முடிந்து யாரும் திரும்பியிருக்காத நிலையில், அந்த தளத்தில் அவன் மட்டுமே இப்போது தனித்திருந்தான். சிஸ்டம் முன் அமர்ந்து கீ போர்டில் எதையோ நோக்கமில்லாமல் தட்டினான். அவனுடைய மனதை ஒரு இனம்புரியாத அழுத்தம் நிரப்பியிருந்தது. ஐந்தரை வருடங்களாக ப்ரியாவுடனான நட்பில், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை அவன் இப்போதுதான் சந்திக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தயாராயிருக்கவில்லை. எப்படி இதை கடந்து செல்வது என்றும் அவன் புத்திக்கு பிடிபடவில்லை.




அவன் வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே, மீட்டிங் சென்றவர்கள் ஒவ்வொருவராய் வேலைக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். அமைதியாயிருந்த தளம் கொஞ்சம் கொஞ்சமாய் சலசலவென பேச்சு சப்தத்தால் நிரம்ப ஆரம்பித்தது. ப்ரியாவும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தாள். அசோக்குடைய இடத்திற்கு சென்றவள், அவளுடைய குரலில் கொஞ்சம் கோவம் தொனிக்கவே கேட்டாள்.

"என்னடா.. இங்க வந்து உக்காந்துட்டு இருக்குற..?? உன்னை எங்கல்லாம் தேடுறது..??"

"ஏன்.. எங்க தேடுன..??" அசோக் மானிட்டரை வெறித்தவாறே அமைதியாக கேட்டான்.

"அ..அங்க.. மீட்டிங் ஹால்ல..!!"

இப்போது அசோக் தன் தலையை திருப்பி, ப்ரியாவை ஏறிட்டு சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். 'தேட வேண்டிய வேளையில் தேட மறந்துவிட்டு.. நான் தொலைந்து போனபின் தேடிப்பார்த்தாயோ பேதைப்பெண்ணே..??' என்பது போல இருந்தது அவனது பார்வை. அப்புறம் அந்தப்பார்வை சற்றே தாழ்ந்து, ப்ரியாவின் கையிலிருந்த அந்த நினைவுப்பரிசின் மேல் படிந்தது. முழுக்க முழுக்க பளிங்கினால் உருவாக்கப்பட்டிருந்தது அது.. அறுங்கோணப் பட்டகத்தின் மேலே அமைந்த பூகோள உருண்டை..!! பளீரிட்டது..!! அதைப் பார்க்கையில் அவன் மனதில் இருந்த அழுத்தம் சற்று அதிகரித்ததை அவனால் உணர முடிந்தது. தனது உழைப்பு அவளது கைப்பிடிக்குள் அகப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் அதை குரலில் காட்டாமல் இயல்பாகவே அசோக் சொன்னான்.

"இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது.. அதான் உடனே வந்துட்டேன்..!!"

"ஓ..!! இன்னைக்கு முடிக்கனுமா..??" ப்ரியாவின் பார்வை இப்போது மானிட்டரில் விழுந்தது.

"அப்படி இல்ல.. பட்.. கொஞ்சம் க்ரிட்டிக்கல் வொர்க்.. சொல்லு..!!"

"ம்ம்.. ஒண்ணுல்ல.. நான் அவார்ட் ரிஸீவ் பண்ண போறப்போ நீ இருந்த.. திரும்ப வந்தப்போ உன்னை காணோம்..!! அதான்.. நான் அவார்ட் வாங்குனதை நீ பாத்தியா இல்லையான்னே எனக்கு தெரியலை..!!"

"ஹ்ம்ம்.. பார்த்தேன் ப்ரியா.. நல்லா கண்ணு குளிர பாத்தேன்..!! அதுக்கப்புறம் நீ கொஞ்சம் பிஸியா இருந்த.. அதான் நான் கெளம்பி வந்துட்டேன்..!!"

அசோக் சற்று எரிச்சலாகத்தான் சொன்னான். ஆனால்.. அவள் அவார்ட் வாங்கியதை அவன் பார்த்திருக்கிறான் என்று அறிந்து கொண்டதுமே, ப்ரியாவின் முகம் விளக்கு போட்டது மாதிரி மீண்டும் பிரகாசமானது. அவளுடைய குரலிலும் இப்போது ஒரு தனி உற்சாகம்..!! திடீரென குழந்தையாக மாறிப் போனவளாய் குஷியாக பேச ஆரம்பித்தாள்.

"ஹை.. பாத்தியா நீ..??? ஹ்ம்ம்ம்... இன்னைக்கு நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா அசோக்..?? சான்ஸே இல்ல.. அப்படியே ஜிவ்வுன்னு பறக்குற மாதிரி இருக்குடா..!! இந்த மாதிரி ஒரு ரெகக்னைஸேஷன்.. என் லைஃப்ல இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!! சுத்தி ஆயிரம் பேர் கை தட்ட.. நான் ஸ்டேஜ்க்கு நடந்து போனது.. ஹப்பா.. இட் வாஸ் அமேஸிங் யு நோ..?? அப்படியே மிதக்குற மாதிரி இருந்தது அசோக்...."

ப்ரியா பேசிக்கொண்டே போனாள். அந்த சம்பவம் அசோக்கிடம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அவள் அறிந்து கொண்டிருக்கவில்லை. அவனுடைய அப்போதைய மன நிலையையும் அவள் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரை நடந்து முடிந்தது ஒரு இயல்பான, சந்தோஷமான விஷயம். அதனால்தான் கண்களில் ஒரு பிரகாசமும், முகத்தில் மலர்சியுமாய் அப்படி அவளால் பேசமுடிந்தது.

ஆனால் அவளுடைய பேச்சு அசோக்கிடம் வேறுவிதமான விளைவை ஏற்படுத்தியது. அவனுடைய உள்ளத்து நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போலிருந்தது. ப்ரியா பேச பேச அவனுக்கு மூளை நரம்புகள் வலி எடுப்பது மாதிரி ஒரு உணர்வு. கண்களை சுருக்கி, தலையை பிடித்துக் கொண்டான். அதை கவனித்துவிட்ட ப்ரியா, தனது பேச்சை பட்டென நிறுத்தி, இப்போது கனிவான குரலில் கேட்டாள்.

"ஹேய்.. எ..என்னடா ஆச்சு..??"

"ஒ..ஒண்ணுல்ல ப்ரியா..!!"

"இ..இல்ல.. உன் முகமே சரி இல்ல.. என்னாச்சு..??"

"ப்ச்.. ஒண்ணுல்லன்றன்ல.. லைட்டா தலை வலிக்குது.. வேற ஒன்னும் இல்ல..!!"

"ஓ..!! என்கிட்டே டேப்லட் இருக்குது.. எடுத்து தரவா.. போட்டுக்குறியா..??" ப்ரியாவின் அன்பான குரல்.

"வேணாம் வேணாம்.. நான் அல்ரெடி போட்டுட்டேன்.. இப்போ பரவால..!!"

"ஓகே ஓகே..!! ம்ம்ம்ம்ம்...!!" ஒரு சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கனிவாக பார்த்தவள், அவன் சற்று இயல்புக்கு திரும்பவும்,

"சரி.. இந்தா..!!"

என்று இயல்பான குரலில் சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த பளிங்குப் பொருளை அசோக்கிடம் நீட்டினாள். அசோக் இப்போது புரியாமல் ப்ரியாவை ஏறிட்டான். நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.

"எ..என்ன இது..??"

"ஹ்ஹ.. எனக்கு தந்த அவார்ட்-டா.. அம்மாவோட டேலன்ட்டை பாத்து அசந்து போய் அவங்க தந்தது..!! ஹாஹா.. ஆக்சுவலா உனக்குத்தான இது கெடைச்சிருக்கணும்..? நீதான அந்த காம்பனன்ட் ஃபுல்லா ரீ-டிசைன் பண்ணின..? அது தெரியாம அவங்க எனக்கு தூக்கி குடுத்துட்டாங்க..!! ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்.. எனிவே.. நீதான் இதை வச்சிருக்க டிசர்வ்டான ஆளு.. இந்தா.. வச்சுக்கோ..!!"

ப்ரியா உதட்டில் வழியும் புன்னகையுடனே சொல்ல, அசோக் இப்போது மீண்டும் ஒருமுறை அந்த நினைவுப் பரிசின் மீது பார்வையை வீசினான். 'ஒரு ஐநூறு ரூபாய் பெருமானம் இருக்குமா இது..?? இதை கொண்டு சென்று, என் வீட்டு கண்ணாடி அலமாரியில் பூட்டி வைப்பதால், இப்போது என்ன ஆகி விடப் போகிறது..?? ஆண்டுக்கு இரண்டு ஜோடி புதுக்கண்களில் இது படுவதே அபூர்வம்..!! ஆயிரம் பேர் கை தட்ட நடந்து சென்று இதை வாங்கிக் கொள்வதற்கு நிகராகுமா..??'

"என்னடா..??" ப்ரியா அசோக்கின் மனநிலை புரியாமல் கேட்டாள்.

"இல்ல ப்ரியா.. வேணாம்..!!"

"ஏன்..??"

"உனக்குத்தான குடுத்தாங்க.. நீயே வச்சுக்கோ..!!" அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, ப்ரியாவின் முகம் இப்போது மீண்டும் பிரகாசமானது.

"நெஜமாத்தான் சொல்றியா அசோக்.. நானே வச்சுக்கவா..??"

"வச்சுக்கோ ப்ரியா..!!"

"உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல..!!"

"வாவ்.. தேங்க்ஸ்டா.. தேங்க்ஸ் எ லாட்..!! எங்க இதை நீ புடுங்கிக்குவியோன்னு நெனச்சேன்.. ஹாஹாஹாஹா..!! ஹ்ம்ம்ம்... இதை என் டாடிட்ட போய் காட்டனும்.. இதை பாத்தா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா..??"

ப்ரியா குழந்தை போல குதுகலமாக சொல்ல, அசோக் சற்றே விரக்தியாக புன்னகைத்தான். கையிலிருந்த அந்த பொருளையே சில வினாடிகள் ஆசையாக பார்த்த ப்ரியா, அப்புறம் அசோக்கை ஏறிட்டாள். 'என் மீது இவனுக்கு எவ்வளவு அன்பு..' என்று அவளுடைய மனதுக்குள் ஒரு பெருமிதம்..!! ஸ்னேஹமாக புன்னகைத்தாள். அப்புறம் முகத்தில் திடீரென மெலிதாக நாணம் மிளிர, தயக்கமாய் கேட்டாள்.

"வீ..வீட்டுக்கு கெளம்பலாமா அசோக்.. நீ பைக்ல ட்ராப் பண்றியா..??"

"இ..இல்ல ப்ரியா.. நீ கம்பனி பஸ்ல கெளம்பு.. இதை இன்னைக்கு முடிக்கணும்..!!" அசோக் பொய் சொன்னான்.

"இப்போதான் இன்னைக்கு முடிக்கனுமான்னு கேட்டதுக்கு இல்லன்னு சொன்ன..??"

"அ..அது.. அது வந்து.. இன்னைக்கு ஃபிக்ஸ் பண்ணி முடிக்கணும்.. நாளைக்கு டெஸ்ட் பண்ணி முடிக்கணும்..!!"

அசோக் தடுமாற்றமாக சொல்ல, ப்ரியா முகத்தில் ஒருவித ஏமாற்றத்துடன் சில வினாடிகள் அவனையே பார்த்தாள். அப்புறம் சகஜமான குரலில் சொன்னாள்.

"சரிடா.. அப்போ நான் கெளம்புறேன்..!!!"

"ம்ம்.. ஓகே..!!"

ப்ரியா அவளுடைய இடத்துக்கு சென்றாள். கையிலிருந்த பரிசுப்பொருளை பேகுக்குள் திணித்தாள். சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு, பேக் எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். வீட்டுக்கு கிளம்பினாள். அசோக்கை கடக்கையில் 'பை டா..' என்றாள். அசோக்கும் பை சொல்லிவிட்டு, அவளுடைய முதுகையே வெறித்துக் கொண்டிருந்தான். ப்ரியா ஒரு நான்கைந்து எட்டுகள் கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். சட்டென ப்ரேக் போட்டது போல நின்றாள். ஏதோ யோசனையுடன் திரும்பவும் அசோக்கிடம் வந்தாள். சுட்டுவிரலால் நெற்றியை கீறியவாறு சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

"ஹேய்.. நீ அப்போ ஏதோ சொல்ல வந்தேல..??"

"எ..எப்போ..??" அசோக் தடுமாற்றமாய் கேட்டான்.

"அ..அப்போ.. காபி ப்ரேக் அப்போ.."

"ஓ.. ஆமால..??"

"ஹம்.. என்ன சொல்ல வந்த..??"

"ஆமாம்.. என்ன சொல்ல வந்தேன்..??" அசோக்கும் இப்போது நெற்றியை பிடித்துக் கொண்டு மறந்து போன மாதிரி நடித்தான்.

"ஹாஹா.. மறந்துட்டியா..??" ப்ரியா சிரித்தாள்.

"ம்ம்.. மறந்துட்டேன்..!!"

"ஓகே.. பரவால..!! நைட்டு வீட்டுக்கு போனதும் படுத்து தூங்காம.. என்ன சொல்ல வந்தேன்னு நல்லா யோசிச்சு பாரு.. ஞாபகம் வந்ததும் நாளைக்கு வந்து சொல்லு.. சரியா..??"

"ம்ம்.. சரி ப்ரியா..!!"

"ஓகேடா.. கெளம்புறேன்.. பை..!!"

ப்ரியா கிளம்பினாள். அவள் சென்ற பிறகு கொஞ்ச நேரத்திற்கு கம்ப்யூட்டர் திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த அசோக், பிறகு தானும் வீட்டுக்கு கிளம்பினான்.

ப்ரியா எந்த நேரத்தில் சொன்னாளோ..?? அன்று இரவு அசோக்கிற்கு தூக்கம் செத்துப் போனது. கண்களை மூடினால்.. காதுக்குள் கைதட்டல்கள் கேட்டன..!! கையில் கோப்பையுடன் ப்ரியா வக்கணம் காட்டினாள்..!! அசோக்கின் கைகளுக்குள் சிக்காமல் நழுவிப்போய், தூரமாய் சென்று கைகொட்டி சிரித்தாள்..!! அடிக்கடி அவன் விழித்துக்கொள்ள வேண்டி இருந்தது..!! பால்கனிக்கு சென்று இருட்டுக்குள் புகைக்க வேண்டி இருந்தது..!! அவனுடைய காதல் மனமும், அவனது இயல்பான குணமும் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!!

அசோக் இங்கே கண்ணுறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்த வேளையில், ப்ரியா அவள் வீட்டில் பெரிய களேபரமே செய்து கொண்டிருந்தாள். தான் அவார்ட் வாங்கிய அனுபவத்தை, அப்பாவிடம் சொல்லி அவரை ப்ளேடு போட்டுக் கொண்டிருந்தாள்.

"இந்த அவார்ட் கெடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா டாடி..??"

"ஆமாம்.. ஆயிரம் பேரு இருக்குறப்போ.. உனக்கு குடுத்துருக்காங்கன்னா.. சும்மாவா..??"

"ஐயோ.. டாடீஈஈ.. தவுசன் அண்ட் எய்ட்டீன்.. ஆயிரத்தி பதினெட்டு..!!!!!"

"ஆமாமாம்.. ஆயிரத்தி பதினெட்டு பேரு..!!"

வரதராஜனும் மகளின் ஆட்டத்துக்கு மத்தளம் கொட்டினார். அந்த விஷயத்தை அப்பாவோடு விடவில்லை ப்ரியா. லோக்கலில் உள்ள நண்பிகளுக்கெல்லாம் கால் செய்து டார்ச்சர் செய்தவள், எஸ் டி டி வேறு போட்டு எக்சாமுக்கு படித்துக்கொண்டிருந்த தம்பியையும் சித்திரவதை செய்தாள்.

"காம்பனன்ட் டிசைன் ரொம்ப கஷ்டம்னு சொல்லிருக்கனே.. ஞாபகம் இருக்கா கோகுல்..??"

"ஷ்ஷ்.. காலைல எனக்கு எக்சாம் இருக்குன்னு சொன்னனே.. அது உனக்கு ஞாபகம் இருக்காக்கா..??" கோகுல் அடுத்த முனையில் அழுகுரலில் கேட்டான்.

"ஞாபகம் இருக்கே.. ஏன் கேக்குற..??"

"பேசுனது போதும்க்கா.. ப்ளீஸ்.. கட் பண்ணு..!!"

"ஐயோ.. இருடா.. நான் சொல்லி முடிச்சுக்குறேன்..!!"

"ப்ளீஸ்க்கா.. படிக்கனும்க்கா.. சொன்னவரை போதும்.. ஏற்கனவே அரை மணி நேரம் காலி..!!"



கோகுல் ரொம்பவே கெஞ்சவும், ப்ரியா சற்றே மனம் இளகினாள். நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, இப்போது மிகவும் சீரியஸான குரலில் சொன்னாள்.

"ம்ம்ம்ம்.. அக்கா இதுலாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்குறதுக்கு காரணம் இருக்குடா தம்பி..!!"

"ஓ..!!"

"அதுவும் எக்ஸாம் டயத்துல இதெல்லாம் சொல்றதால உனக்கு ரொம்ப யூஸா இருக்கும்..!!"

"யூஸா..?? இதால என்ன யூஸ்..??" கோகுல் தலையை சொறிந்தான்.

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அக்கா மாதிரி நீயும் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியரா வரணும்டா தம்பி.. அக்காவோட கதையை சொன்னா உனக்கு இன்ஸ்பயரிங்கா இருக்கும்.. நாமளும் அக்கா மாதிரி வரணும், நல்லா படிக்கணும்னு ஒரு வெறி வரும்.. அதான் சொன்னேன்..!! போ.. அந்த வெறியோட போய்.. இப்போ எக்ஸாமுக்கு படி..!! பை..!!"

ஒருவழியாய் மனமுவந்து ப்ரியா காலை கட் செய்தாள். பேசி முடித்த கோகுலுக்கு படிப்பு மீதெல்லாம் வெறி வரவில்லை. மொக்கை போட்ட அக்காவின் மீதுதான் கொலவெறி வந்தது..!! 'இவளுக்குலாம் அவார்ட் குடுத்து.. ஏண்டா என் தாலியை அறுக்குறீங்க..??' என்று அவளுடைய கம்பெனியை கன்னாபின்னாவென்று திட்டினான்.

தம்பியிடமும் தற்பெருமை அடித்து தீர்ந்தபின்தான் ப்ரியாவுக்கு நிம்மதியாக இருந்தது. எந்தக்கவலையும் இல்லாமல் உறங்க முடிந்தது. ப்ரியா ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில், சுகமாக கம்பளிக்குள் முடங்கிப் போயிருந்தபோது, அசோக் உறக்கம் மறந்த கண்களால், சுவற்றில் நகர்ந்த பல்லியை முறைத்துக் கொண்டிருந்தான்.

காலையில் எழுந்தபோது அசோக்கின் மனம் ஓரளவு தெளிவாயிருந்தது. நடந்ததை இனியும் மனதுக்குள் போட்டு குழப்பிக்கொள்வது நல்லதில்லை என்று தோன்றியது. ப்ரியாவின் மீது தேவையற்ற வெறுப்புதான் இதனால் உண்டாகும் என்று புரிந்தது. எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆபீஸில் ப்ரியாவை பார்க்கையில் சகஜமாக புன்னகைக்க முயற்சி செய்தான். நடுவில் ஒருமுறை அவள் வந்து வேலை விஷயமாக ஒரு உதவி கேட்கையில், சற்று தயங்கினாலும், பிறகு உதவினான். மாலையில் அவனாகவே ப்ரியாவின் இடத்துக்கு சென்று, 'ஸ்குவாஷ் ஆட போலாமா ப்ரியா..??' என்று கேட்டான்.

அசோக்கின் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தாலும், அதை ப்ரியாவிடம் காட்டிக்கொள்ளவில்லை. முன்பை போல அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை என்பதையும் அவனால் உணர முடிந்தது. விரைவில் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தான். ஆனால்.. விதியோ வேறு விதமாக நினைத்தது..!! அடுத்த வாரமே அது தன் வேலையை காட்டியது..!!

அன்று சற்று தாமதமாகத்தான் அசோக் ஆபீஸுக்கு கிளம்பி இருந்தான். பைக்கில் எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி சென்று கொண்டிருந்தவன், பொம்மனஹல்லியை தாண்டியபோது மணி பத்தரை. அப்போதுதான் அவனுடைய பேன்ட் பாக்கெட்டுக்குள் கிடந்த செல்போன் பதறி துடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பதறிய போனை கையில் எடுத்து பார்த்தான். ஹரி கால் செய்திருந்தான். ஹெல்மட் கழற்றியவன், கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

"சொல்லுடா..!!" என்றான்.

"மச்சி.. எங்கடா இருக்குற..??"

"வந்துட்டு இருக்கேண்டா.. சொல்லு..!!"

"ஹேய்.. சீக்கிரம் வாடா.. இங்க கம்பெனில பெரிய கலவரமே நடந்துட்டு இருக்கு..!!"

"கலவரமா..?? என்ன கலவரம்..??"

"ம்ம்ம்..?? பேசி பேசியே காது ஜவ்வை கிழிக்கிற கலவரம்..??"

"ஹாஹா.. யார் அது.. அவ்வளவு பேசுறது..??"

"எல்லாம் உன் ஆளுதான்..!!"

"என் ஆள்னா.. ப்ரியாவா..??"

"ஆமாம்.. அவதான்..!! ஹப்பா.... அவ பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலைடா..!!"

"என்ன பண்றா..??"

"என்ன பண்றாளா..?? அந்தக்கொடுமையை நீயே இங்க வந்து பாரு..!!"

ஹரி அதன்பிறகும் என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல் இழுத்துக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமை இழந்து போய் டென்ஷனாக கத்தினான்.

"த்தா.. அப்புறம் என்ன மசுத்துக்குடா நீ கால் பண்ணின.. மாங்காக்.."

"ஏய் ஏய்.. இருடா.. சொல்றேன்..!!"

"சொல்லித்தொலை..!!"

"ப்ரியாவை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணிருக்காங்கடா..!!"

ஹரி சிரிப்புடன் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதை வந்து சுருக்கென தைத்தன. காதில் வந்து விழுந்த வார்த்தைகளை சில வினாடிகளுக்கு அவனால் நம்பவே முடியவில்லை. 'ப்ரியாவா..?? அவளா..?? ஆன்சைட்டா..?? எப்படி..??'. மூளையில் ஒரு குழப்பமான எண்ணம் சட்டென ஊற்றெடுக்க, வார்த்தைகள் தடுமாற்றமாய் அவனிடம் இருந்து வெளிப்பட்டன.

"எ..என்னடா சொல்ற.. நெஜமாவா..??"

"ஆமாண்டா.. இன்னும் ரெண்டு நாள்ல கெளம்புறா..!!"

"எ..எப்டிடா.. எப்போ.. சொன்னாங்க..??"

"இன்னைக்கு காலைலதான் மச்சி.. காலைல ப்ரியா வந்ததுமே பாலா அவர் ரூமுக்கு வர சொன்னாரு.. போயிட்டு வந்தவ போயிங் ப்ளைட் மாதிரி பறந்துட்டேதான் வந்தா.. இன்னும் ஏர்லயேதான் சுத்திட்டு இருக்குறா மச்சி.. கீழ லேண்ட் ஆகல..!!"

"ஓ..!!"

"அமெரிக்கா'ன்றா.. ஆயிரத்து தொள்ளயிரத்து நாப்பதொண்ணுல'ன்றா.. பியர்ல் ஹார்பர்'ன்றா.. பின்லேடன் இஸ் வெரி பேட் ஃபெல்லோ'ன்றா..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ... முடியலடா சாமி..!! கொலம்பஸோட கொள்ளுப்பேத்தி மாதிரியே பேசி கொலவெறி கெளப்புறா மச்சி..!! அவ இம்சை தாங்காம.. இட்லி தின்னுட்டு வரேன்னு எஸ்கேப் ஆகி.. இப்போ கேஃப்டீரியால வந்து பம்மிட்டு உக்காந்திருக்கண்டா..!! கவிதாவும், நேத்ராவும் அங்க அவகிட்ட வசமா சிக்கிட்டாங்க.. நீ சீக்கிரம் வாடா.. நீ வந்தாத்தான் அவ ஓப்பன் பண்ணுன டோரை கொஞ்சமாச்சும் க்ளோஸ் பண்ணுவா..!! ஹாஹா..!!" ஹரி சொல்லிவிட்டு சிரிக்க,

"ம்ம்.. வந்துடறேன்டா.. இன்னும் டென் மினிட்ஸ்..!!" என சுரத்தே இல்லாமல் சொன்னான் அசோக்.

"ஏய்.. என்னடா ஆச்சு.. ஒரு மாதிரி பேசுற..??"

"அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..??"

"இல்லடா.. ப்ரியா ஆன்சைட் போறா.. உன் வாய்ஸ்ல நான் எக்ஸ்பெக்ட் பண்ணின எந்துவையே காணோமே..??"

"அ..அது.. நான்.. எனக்கு சர்ப்ரைசிங்கா இருந்தது.. நா..நான் இதை எதிர்பார்க்கல.. அதான் என்ன சொல்றதுன்னு தெரியலை..!!"

"ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! க்ளயண்ட்டே 'ப்ரியாவை அனுப்பி வைங்க'ன்னு ஸ்பெஷலா கேட்டிருக்காங்க மச்சி..!! இவனுக சும்மாவே 'க்ளையன்ட்டு.. க்ளையன்ட்டு..'ன்னு கிறுக்கு புடிச்ச கிளிப்புள்ளை மாதிரி.. சொன்னதையே சொல்லிட்டு இருப்பானுக..!! இதுல அவனுகளே வாய்விட்டு கேட்டுட்டா சும்மா இருப்பானுகளா..?? எல்லாம் அவ டிசைன் பண்ணின காம்பனன்ட்டோட வெயிட்டு மச்சி.. அதுலதான் அம்புட்டு பயலும் கவுந்துட்டாணுக..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. இந்த ப்ரியா பயபுள்ளைக்குள்ள.. இப்படி ஒரு பில்கேட்ஸ் தூங்கிட்டு இருக்கான்னு.. இத்தனை நாளா நமக்கு தெரியாம போச்சு பாத்தியா..??" ஹரி அந்தமாதிரி பெருமூச்சுடன் கேட்கவும், அசோக் இப்போது எரிச்சலானான்.

"போடா.. கூமுட்டைக்கூ.." என்று திட்டினான்.

"என்னது..?? கூமுட்டையா..??"

"பின்ன என்ன.. அவளாவது அதெல்லாம் டிசைன் பண்றதாவது.. எல்லாம் நான் பண்ணினது...!!"

"நெ..நெஜமாவா..??"

"அட ஆமாண்டா.. கோழி கிண்டி வச்ச மாதிரி ஏதோ பண்ணிட்டு மைசூர் ஓடிப்போயிட்டா.. நான்தான் நாலு நாளா மண்டை காஞ்சு உக்காந்து எல்லாத்தையும் டிசைன் பண்ணினேன்..!!"

"ஓஹோ.. அப்படியா விஷயம்..?? நான் கூட அவளுக்கு திடீர்னு எல்லாம் பங்க்ஷன் ஆக ஆரம்பிச்சுடுச்சோன்னு தப்பா நெனச்சுட்டேன் மச்சி..!!"

"ஹ்ம்ம்.. எனக்கு கெடைக்கவேண்டிய அவார்ட்.. எனக்கு கெடைக்கவேண்டிய ஆன்சைட்..!!"

"அட விடுடா.. யாருக்கு கெடைச்சா என்ன..?? நம்ம செட்ல இருந்து ஒருத்தி ஆன்சைட் போறா.. ஐ ஆம் ஸோ ஹேப்பி..!! எனக்கு அந்த தர்பூஸ் தலையனை அனுப்பலைலன்னு இப்போத்தான் மனசு நிம்மதியா இருக்கு..!!"

"ம்ம்ம்.."
"சரிடா.. நான் கட் பண்றேன்.. நீ சீக்கிரம் வா..!! நீ இல்லைன்னா ப்ரியா விடுற ரவுசை எங்களால சமாளிக்க முடியாது..!!"

"ஓகேடா.. வர்றேன்.. பை..!!"

காலை கட் செய்துவிட்டு, அசோக் பைக்கின் கிக்கரை உதைத்தான். வண்டியை ஆபீஸுக்கு விரட்டினான். அவனுடைய மனதில் இப்போது மீண்டும் அந்த அழுத்தம். ஒரு வாரத்திற்கு முன்பாக ஏற்பட்ட அதே அழுத்தம். இப்போது இன்னும் அதிக வலுவோடு அவனுடைய மனதை பிசைந்து பார்த்தது. தன்னை அனுப்ப போகிறார்கள், இல்லையென்றால் கோவிந்த் தட்டிப்பறிக்கப் போகிறான் என்று எண்ணியிருந்த வேளையில், இப்படி ப்ரியா இடையில் புகுந்து அவனது ஆன்சைட் வாய்ப்பை அபகரிப்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ப்ரியாவின் மீது ஏனோ ஒரு இனம்புரியாத எரிச்சல் அவன் மனதில் பரவியது.

ப்ரியாவின் கையில் எதுவும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு புரிந்ததுதான். அவள் திட்டமிட்டு எதுவும் செய்துவிடவில்லை என்பதிலும் அவன் தெளிவாகவே இருந்தான். 'கிளையன்ட்டே விரும்பி கேட்டிருக்கிறார்கள். இவர்கள் அனுப்புகிறார்கள். செல்ல முடியாது என்று அவளால் சொல்ல முடியாதுதான்..!! ஆனால் இப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன அர்த்தம்..?? அன்று அவார்ட் தருகையிலும் அப்படித்தான் என்னை மறந்து போனாள்..!! எனது வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டாள் என்ற நினைவு கொஞ்சம் கூடவா அவளுக்கு இல்லை..?? அதுவும் என்னுடைய உழைப்பால் வந்த வாய்ப்பு..!!'

ப்ரியாவின் இயல்பான குணத்தால்தான் இப்படி எல்லாம் செய்கிறாள் என்பதும் அசோக்கிற்கு புரிந்தது. 'சும்மாவே சதிராட்டம் ஆடுவாள்.. இவர்கள் சலங்கை வேறு கட்டி விடுகிறார்கள்..' என்று தோன்றியது. ஆனால் அவள் மீது ஒரு எரிச்சலான எண்ணம் தோன்றுவதையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. 'ச்சே.. ஏன் இப்படி எல்லாம் தப்பாவே நடக்குது..??' என்று மனதுக்குள் அலுத்துக் கொண்டான்.

அவன் ஆபீசை அடைந்ததுமே, அவன் முகத்தை ப்ரியா பார்த்ததுமே, அவளுடைய இடத்தில் இருந்து எழுந்து இவனை நோக்கி ஓடி வந்தாள். முகம் முழுதும் மலர்ச்சியும், மகிழ்ச்சியுமாய் இவனுடைய கையை பிடித்துக் கொண்டாள். அசோக் போலியாக புன்னகைக்க முயல, அவனது விரல்களுக்குள் தனது விரல்களை கோர்த்தவாறே ப்ரியா உற்சாகமாக கேட்டாள்.

"அ..அசோக்.. மே..மேட்டர் தெரியுமா உனக்கு..??"

"ம்ம்.. ஹரி கால் பண்ணிருந்தான்..!!"

"சான்பிரான்சிஸ்கோ போறேன்டா.. கமிங் ஃப்ரைடே..!!"

"ம்ம்ம்.. சொன்னான்..!!"

"ஹ்ஹ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? நான் நெனச்சே பாக்கலை அசோக்.. என்னை அனுப்புவாங்கன்னு..!! அதுவும் க்ளயண்ட்டே ஸ்பெஷலா என் பேரை மென்ஷன் பண்ணி அனுப்புங்கன்னு சொல்லிருக்கீங்க.. தெரியுமா..??" ப்ரியாவின் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

"ம்ம்ம்.."

"எல்லாம் உன்னாலதான்டா.. உன்னாலதான் எனக்கு இந்த ஆப்பர்ச்சூனிட்டி.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியலை..!!"

"இட்ஸ் ஓகே ப்ரியா..!! கங்க்ராட்ஸ்..!!" அசோக் இறுக்கமான குரலில் அப்படி சொல்லவும், ப்ரியா சட்டென முகம் சுருங்கினாள்.

"ப்ச்.. என்னடா நீ.. எல்லார் மாதிரியும் ஃபார்மலா கங்க்ராட்ஸ்லாம் சொல்லிக்கிட்டு..?? இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.. எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல..!! இன்னும் பாஸ்போர்ட், பர்சேஸ், ஃபாரக்ஸ்னு பல வேலைகள் இருக்கு.. நீதாண்டா எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்..!! ப்ளீஸ்..!!"

ப்ரியா அந்த மாதிரி கெஞ்ச, அசோக் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். அவள் மீதிருந்த காதலும், புதிதாய் முளைத்திருந்த ஈகோவும் மாறி மாறி மனதில் கிளம்ப, எந்தப்பக்கம் சாய்வதென்று தடுமாறினான். பிறகு ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு,

"ஓகே ப்ரியா.. பண்றேன்..!!" என்றான்.

"தேங்க்ஸ்டா..!!" என்று குதூகலித்தாள் ப்ரியா.

காதலிப்பவர்களுக்கு முத்தம் மாதிரிதான் ஐ.டி யில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆன்சைட்..!! அது ஒரு வசீகரமான வார்த்தை.. அதில் ஏனோ அனைவருக்கும் ஒரு கவர்ச்சி.. அடைந்து விடவேண்டும் என்று ஒரு மோகம்..!! வருமானம் அதிகம், இங்கு ஐந்து மாதங்களில் சம்பாதிப்பதை அங்கு ஒரே மாதத்தில் சம்பாதித்து விடலாம் என்பது மட்டுமே அந்த கவர்ச்சிக்கு காரணம் அல்ல..!! அதையும் மீறி.. க்ளயன்ட்டுகளை நேரடியாக எதிர்கொள்ளும் அனுபவம்.. வேலைவாய்ப்பு சந்தையிலும், திருமண சந்தையிலும் கிடைக்கிற ஒரு தனி அங்கீகாரம்.. அடுத்தவன் காசில் அயல்நாட்டை ரசித்திடும் வாய்ப்பு.. வெட்டி பந்தா.. என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன..!!

அடுத்த இரண்டு நாட்களில் எந்த நேரமும் ப்ரியா பரபரப்பாகவே காணப்பட்டாள். கையில் ஏதோ பேப்பர்களுடன் இங்கும் அங்கும் ஓடித்திரிந்தவாறே இருந்தாள். ஐட்னரி ரெக்வஸ்ட் செய்து பயணிக்கப்போகும் ஃப்ளைட்டை செலக்ட் செய்தாள். ஃப்ளைட் டிக்கெட், ஃபாரீன் கரன்ஸி, ட்ராவலர்ஸ் செக், மனி கார்ட் எல்லாம் முதல் நாளே கலெக்ட் செய்து கொண்டாள். ஆன்சைட்டில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி ரவிப்ரசாத்திடம் இருந்து நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர் பெற்றுக் கொண்டாள். சான்பிரான்சிஸ்கோவில் தங்குமிடத்துக்கு இங்கிருந்தே புக் செய்தாள். அங்கே வேலை செய்யப்போகும் இடம், சந்திக்கப்போகும் நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டாள். இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு தேவையான டாகுமன்ட்டுகளை கம்பெனியில் இருந்து வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அசோக் அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்தான். அதுவும் மனதில் ஒரு பொறுமலுடனே செய்தான். 'பர்சேஸ் நீயும் வாடா..' என்று அசோக்கை அழைத்தபோது, 'இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..' என்று மறுத்தான். ப்ரியாவுக்கும் அது பெரிய விஷயமாக தோன்றவில்லை. அவள் கோகுலுக்கு ஃபோன் செய்திருந்தாள். அவன் உடனே கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்திருந்தான். அமெரிக்கா பயணமாக தேவையான பொருட்களை வாங்க, அவன் மிக உதவியாக இருந்தான். அதனால் அசோக்கின் உதவி அவளுக்கு தேவையாய் இருக்கவில்லை.

அவார்ட் கிடைத்த விஷயத்தை போலவே, இந்த விஷயத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்டாள் ப்ரியா. ஆனால் அசோக்கிற்கோ ஏற்கனவே அவன் மனதில் விழுந்திருந்த விரிசலை, இந்த விஷயம் மேலும் பெரிதாக்கியிருந்தது. ப்ரியாவுடன் இயல்பாக பேச முடியாமல் தடுமாறினான். ப்ரியாவுக்கோ கால்கள் தரையில் நில்லாமல் மிதந்து கொண்டிருந்ததில், அசோக்கின் தடுமாற்றத்தை கவனிக்க நேரம் இருக்கவில்லை. டீமில் அசோக், கோவிந்த் தவிர வேறு யாருக்கும், ப்ரியா ஆன்சைட் செல்லுவது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

அவள் ஆன்சைட் கிளம்புகிற வெள்ளிக்கிழமை மதியம்... அவர்களுடைய ஆபீஸ்.. எல்லோரிடமும் பிரியாவிடை பெற்ற ப்ரியா.. ஆபீசில் இருந்து கிளம்புகையில், அசோக்கிடம் மட்டும் ஏக்கமும், ரகசியமுமாக சொன்னாள்..!!

"நைட்டு என்னை சென்ட் ஆஃப் பண்ண வரணும்.. சரியா..??"

"ம்ம்.. ட்ரை பண்றேன் ப்ரியா..!!" அசோக் விட்டேத்தியாக சொன்னான்.

"ட்ரைலாம் இல்ல.. கண்டிப்பா வரணும்..!!"

"சரி வர்றேன்.. உனக்கு டைமாச்சு.. நீ கிளம்பு..!!"

"ம்ம்ம்.."

ப்ரியா அசோக்கை ஏக்கமாக பார்த்துக்கொண்டே, கம்பெனி அரேன்ச் செய்திருந்த காருக்குள் ஏறி அமர்ந்தாள். கார் கிளம்பியது. 'நைட் வரணும்.. மறந்துடாத..' என்று நகர்கிற காருக்குள் இருந்து சைகை செய்தாள் ப்ரியா. அசோக்கும் மெல்ல தலையசைத்தான்.

அன்று இரவு ஏழு மணி..

பெங்களூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்..!!

வழியனுப்ப வந்திருந்த அப்பாவுக்கும், தம்பிக்கும் கையைசைத்து விட்டு ப்ரியா ஏர்போர்ட் உள்வளாகத்துக்குள் நுழைந்தாள். ஏர்லைன் கவுன்ட்டர் சென்று, டிக்கட்டை கொடுத்து போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டாள். ஹேன்ட் பேகை கையில் எடுத்துக்கொண்டு, ட்ராவல் சூட்கேசை செக்கின் செய்தாள். எமிக்ரேஷன் கிளியரன்ஸ், செக்யூரிட்டி செக் முடித்துவிட்டு, தனக்கு குறிப்பிடப்பட்ட லவுன்ச்சுக்குள் பிரவேசித்தாள். சேரில் அமர்ந்து கொண்டு ப்ளைட் ஏறுவதற்கான அறிவிப்புக்காக காத்திருந்தாள்.

அவளுடைய மனதில் இப்போது ஒரு வெறுமை பரவியிருந்ததை அவளால் தெளிவாக உணர முடிந்தது. 'இன்னும் சிறிது நேரத்தில் நான் பிறந்த மண்ணை விட்டு பிரியப் போகிறேன்.. முதன் முறையாக..!! இனி சிறிது காலத்திற்கு என் தாய்நாட்டு காற்றை என்னால் சுவாசிக்க முடியாது..!! என் மக்களின் மொழி என் காதில் விழாது..!! அப்பாவின் அன்பு கூட ஐ எஸ் டி மூலம்தான் வந்து சேர போகிறது..!! இவர்கள் தூங்கையில் நான் அங்கு விழித்திருக்கப் போகிறேன்..!! புது இடம்.. புது மனிதர்கள்.. புது உணவுமுறைகள்.. புது பழக்க வழக்கங்கள்.. என இருக்கப் போகிறேன்..!!'

என்னவென்று விளக்கமுடியாத ஒரு உணர்வுக்குள் ப்ரியா சிக்கித் தவித்தாள். அந்த புரியாத உணர்வுடன் அசோக்கின் நினைவும் சேர்ந்து கொண்டு, மேலும் அவளை வாட்டியது. 'வழியனுப்ப வருகிறேன் என்றானே..? ஏன் வரவில்லை..? வேலை முடியவில்லையோ.. இல்லை பாதி வழியில் ட்ராபிக்கில் சிக்கிக் கொண்டானோ..? அவனுடைய முகத்தை ஒருதடவை பார்த்திருந்தால் மனம் இவ்வளவு படபடக்கதோ..? பார்க்கத்தான் முடியவில்லை.. அவனுடைய குரலை ஒருமுறை கேட்டுவிட்டு விமானம் ஏறினால் கூட.. ஓரளவு நிம்மதி கிட்டுமே..!!'

அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றியதுமே, ப்ரியா கையிலிருந்த பேக் திறந்து தனது செல்போனை வெளியே எடுத்தாள். அசோக்கின் நம்பருக்கு கால் செய்தாள். காதில் வைத்துக்கொண்டு அவனுடைய குரல் வந்து தன் செவிப்பறையில் மோதும் தருணத்திற்காக தவிப்புடன் காத்திருந்தாள். அந்த தவிப்பை அதிகரிக்கும் வகையாக.. ரிங் சென்று கொண்டே இருந்தது..!!



அத்தியாயம் 8

ரிங் சென்று கொண்டே இருந்தது. 'ப்ரியா காலிங்.. ப்ரியா காலிங்..' என்று செல்போன் திரை பளிச்சிட்டுக்கொண்டே இருந்தது. அசோக்கின் கைகள் கீபோர்ட் மீது படிந்திருக்க, அவனது கருவிழிகளை மட்டும் ஓரமாய் நகர்த்தி அலறிய செல்போனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏய்.. அட்டன்ட் பண்ணித் தொலையேண்டா.. அலறிட்டே கெடக்குது..!!" ஹரி திரும்பி அசோக்கை பார்த்து எரிச்சலாக சொன்னான்.

"எனக்கு தெரியும்.. நீ மூடிட்டு உன் வேலையை பாரு..!!" அசோக் கோவத்தை அவன் மீது காட்டினான்.

"இல்லடா.. திரும்ப திரும்ப பண்ணிட்டே இருக்காங்களேன்னு சொன்னேன்.. யாரு அது..??"

"ம்ம்ம்.. யாரோ அன்னோன் நம்பரு..!!"

அசோக் சொல்லிவிட்டு மீண்டும் செல்போன் மீது பார்வையை வீசினான். அது மேலும் ஐந்தாறு முறை அடித்துவிட்டு, அதன்பிறகுதான் அமைதியானது. அசோக்கோ எதுவும் செய்யத் தோன்றாமல் சலனமற்று அமர்ந்திருந்தான். சிறிது நேரத்திலேயே 'டிடிங்..!!' என்ற சப்தத்துடன் அந்த எஸ்.எம்.எஸ் வந்து விழுந்தது. அசோக் உடனே செல்போனை எடுத்து மெசேஜ் திறந்து பார்த்தான். ப்ரியாதான் அனுப்பியிருந்தாள்.

"எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. அங்க போய் கால் பண்றேன்.. சரியா..?? மிஸ் யூ..!!"

அதை பார்த்ததும் அசோக்கிற்கு மனதின் ஓரமாய் ஒரு வலி..!! 'ச்சே.. என்ன ஆயிற்று எனக்கு..? நான் ஏன் இப்படி எல்லாம் செய்கிறேன்..? அவள் மீதிருந்த எரிச்சலில் வழியனுப்ப செல்லாமல் இருந்துவிட்டேன்..? இப்போது அவளே கால் செய்கையில் அதை அட்டன்ட் செய்து பேசக்கூட ஏன் எனக்கு மனம் வரவில்லை..? அவள்தான் குழந்தை மாதிரி நடந்துகொள்கிறாள் என்றால், நானும் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன்..?'

அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தது. ப்ரியாவிடம் இப்போது பேசவேண்டும் போல் இருந்தது. கால் ஹிஸ்டரி எடுத்து திரும்ப அவளுடைய நம்பருக்கு கால் செய்தான். போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு பெண்ணின் குரல் கேட்க, 'ஃபக்..!!' என்று எரிச்சலானான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டான். இரண்டு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான்.

கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்களை மூடி, ப்ரியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். அப்புறம் இமைகளை மெல்ல பிரித்தான். அதன்பிறகும் வேலை பார்க்க அவனுக்கு சுத்தமாக மூட் இல்லை. மனதெல்லாம் பலவித குழப்ப எண்ணங்கள்..!! சிஸ்டத்தை ஷட்டவுன் செய்துவிட்டு எழுந்தான். ஹரியின் இடத்துக்கு நகர்ந்து சென்றவன், அவனிடம் மெல்லிய குரலில் கேட்டான்.

"டேய்.. தண்ணியடிக்கனும் போல இருக்கு.. வர்றியா..??" அவன் அவ்வாறு கேட்டதுமே,

"மச்சீஈஈஈ..!!!"

என்று ஹரி சந்தோஷமாக இளித்தான். ஆனால் ஓரிரு விநாடிகள்தான் அந்த சந்தோஷம் அவன் முகத்தில் நிலைத்திருந்தது..!! அப்புறம் அவனுக்கு இப்போது திருமணமாகிப் போனதும், கவிதா என்றொரு பெண் அவனுடைய வாழ்வில் நுழைந்துவிட்டதும், அவள் சற்று முன்புதான் 'சீக்கிரம் வந்து சேருங்க..' முறைப்புடன் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றதும் ஞாபகம் வந்தது. இதுவரை குடித்துவிட்டு அவன் வீட்டுக்கு சென்றபோது நடந்த சில பல சம்பவங்கள் ஃப்ளாஷ்பேக்காக அவன் மனக்கண்ணில் வந்து போயின. உடனே எதையோ பறிகொடுத்தவன் போல முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டான்.

"என்னடா..??" அசோக் எரிச்சலாக கேட்டான்.

"எனக்கும் ஆசையாத்தான் இருக்கு...." ஹரி இழுத்தான்.

"உனக்கு ஆசையா இருக்கா, தோசையா இருக்காலாம் உன்கிட்ட கேக்கலை.. வர்றியா வரலையான்னுதான் கேட்டேன்..!!"

"வர்றேண்டா மச்சி.. பட் ஒன் கண்டிஷன்..!!"

"என்ன..??" அசோக் குழப்பமாய் கேட்க,

"இந்தா..!!" ஹரி அவனுடைய செல்போனை எடுத்து அசோக்கிடம் நீட்டினான்.

"இது எதுக்கு..??"

"தண்ணியடிக்கிறதுக்கு என் பொண்டாட்டிட்ட பெர்மிஷன் கேளுடா மச்சி.. ப்ளீஸ்டா..!!" ஹரி வெட்கமே இல்லாமல் சொன்னான்.

"த்தா.. என்ன வெளையாடுறியா..?? ஒவ்வொரு தடவை தண்ணியடிக்க போறப்போவும் இதுதான் எனக்கு வேலையா..?? என்னால முடியாது.. நீயே கேளு..!!" அசோக் டென்ஷனானான்.

"ஹேய்.. புரிஞ்சுக்கோடா மச்சி.. நீன்னா அவ கொஞ்சம் பொறுமையா சாஃப்டா பேசுவா.. அதான் உன்னை கேக்க சொல்றேன்..!!"

"பொறுமையா பேசுறாளா..?? இப்டியே நான் அடிக்கடி பர்மிஷன் கேட்டுக்கிட்டே இருந்தேன்னு வச்சுக்கோ.. ஒருநாளைக்கு என்னையும் வெளக்கமாத்தாலதான் அடிக்கப்போறா..!!"

"உன்னையுமா..?? அடப்பாவி.. அப்போ என்னை வெளக்கமாத்தால அடிக்கிறான்னு முடிவே பண்ணிட்டியா..??"

"ஆமாம்.. அதுல என்ன சந்தேகம்..??"

"டேய்.. அவளுக்கு நான் தண்ணியடிக்கிறது கொஞ்சம் புடிக்காதுடா.. அவ்ளோதான்..!! மூஞ்சை கொரங்கு மாதிரி தூக்கி வச்சுப்பா.. எனக்கு அதை பாக்க சகிக்காமத்தான்.. இதெல்லாம் அவாய்ட் பண்றது..!! மத்தபடி வீ ஆர் கூல்..!!"

"ஹ்ம்ம்.. நீங்க கூலா இருங்க.. இல்லனா ஹாட்டா இருங்க.. எனக்கு அதைப்பத்திலாம் கவலை இல்ல..!! சும்மா சும்மா இதுக்குலாம் என்னால பெர்மிஷன் கேட்க முடியாதுடா.. எனக்கு தேவையில்லாத பிரச்னை..!!"

"ஹேய் அப்டிலாம் சொல்லாதடா மச்சி..!! ஹ்ம்ம்.. இங்க பாரு.. நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன்.. உனக்கு ஒரு பிரச்னையும் வராது.. கேக்குறியா..??"

"என்ன..??"

"உனக்கு இன்னைக்கு பர்த்டே.. எனக்கு ட்ரீட் குடுக்க ஆசைப்படுறேன்னு அவகிட்ட சொல்லு.. அவ ஒன்னும் சொல்ல மாட்டா..!! என்ன சொல்ற..??" ஹரி இளித்தவாறு சொல்ல அசோக் அவனை முறைத்தான்.

"மசுரு.. ரெண்டு மாசம் முன்னாடி அப்படி சொல்லிட்டு போய்த்தானடா.. எனிக்மால போய் மூக்கு முட்ட குடிச்சோம்..??" அசோக் சொல்ல, ஹரிக்கு முகம் சுருங்கிப் போனது.

"ஓ..!! ஆமால்ல..?? ஐடியா அல்ரெடி யூஸ்ட்-ஆ..?? ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்...!!"

ஹரி நெற்றியை கீறியவாறு யோசித்தான். வேறு என்ன சொல்லி தன் மனைவியை ஏமாற்றலாம் என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். ஒரு சில வினாடிகள்..!! வேறு எந்த யோசனையும் தோன்றாமல் போகவே வெறுப்பாக கத்தினான்.

"ச்ச.. என்ன உலகம்டா இது.. என்ன சொசைட்டிடா இது..?? கருமம்..!!"

"என்னடா அச்சு..??"

"பின்ன என்ன மச்சி.. பொறந்த நாள்லாம் வருஷம் வருஷம்தான் கொண்டாடனும்னு எந்த பொறம்போக்கு இவனுகளுக்கு சொல்லிக் குடுத்துட்டு போனான்..?? மாசமாசம் அந்த டேட்ல பொறந்த நாள் கொண்டாடினா, என்ன கொறைஞ்சா போயிடுவானுக..??" ஹரி சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, அசோக் அவனையே கடுப்புடன் பார்த்தான்.

"இங்க பாரு.. வெட்டித்தனமா பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத.. என்ன காரணம் சொல்லலாம்னு சீக்கிரம் யோசி..!!"

"ம்க்கும்.. எனக்கு தோணுச்சுனா சொல்ல மாட்டனா..??"

"சரி.. அப்போ நான் ஒன்னு சொல்லவா..??"

"என்ன..??"

"பர்மிஷனே கேக்க வேணாம்.. குடிச்சுட்டு நேரா வீட்டுக்கு போயிடு..!! எப்படியாவது அவகிட்ட அடியை உதையை வாங்கியாவது சமாளிச்சுக்கோ..!!" அசோக் கூலாக சொல்ல,

"டேய்.. ஒரேடியா என் ஜோலியை முடிச்சிறலாம்னு பாக்குறியா நீ..??" ஹரி பதறினான்.

"அப்போ என்னை ஆளை விடு.. டைம் ஆயிட்டே இருக்குது.. நான் கெளம்புறேன்..!!"

"டேய் மச்சி... இருடா.. டேய்..!!"

ஹரி கத்திக்கொண்டே இருக்க, அவனை கொண்டுகொள்ளாமல் அசோக் கிளம்பினான். தளத்தின் நுழைவாயில் நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான். ஒரு நான்கைந்து எட்டுகள் வைத்ததும் அப்படியே நின்றான். தனது தலையை திருப்பி பக்கவாட்டில் பார்வையை வீசினான். அவன் பார்வை சென்ற இடத்தில் கோவிந்த் அமர்ந்திருந்தான்.

தனது இருக்கையில் அமர்ந்தவாறு.. எதிரே இருந்த மானிட்டரை முறைத்தவாறு.. அருகில் இருந்த வேஃபர் பிஸ்கட்டை அவ்வப்போது எடுத்து கடித்தவாறு..!! அவனுடைய முகத்தில் ஒருவித சோகம் அப்பிக் கிடந்தது..!! விரக்தியுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெளிவாக புரிந்தது..!! அசோக்கிற்கு ஏனோ இப்போது அவன் மீது புதிதாக ஒரு இரக்கம் பிறந்தது..!! 'தன்னைப் போலவே ஏமாற்றம் கொண்டிருக்கும் இன்னொரு ஜீவன்..' என்று தோன்றியது..!!

ஒருசில வினாடிகள் அவ்வாறு கோவிந்தை இரக்கத்துடன் பார்த்த அசோக்கிற்கு, மனதில் திடீரென ஒரு எண்ணம். அந்த எண்ணம் தோன்றியதுமே அவன் அதிகம் தயங்கவில்லை. நடந்து சென்று கோவிந்தை நெருங்கினான். இதமான குரலில் அவனை அழைத்தான்.

"கோவிந்த்..!!"

"ம்ம்..!!" கோவிந்த் அசோக்கை நிமிர்ந்து பார்த்தான்.

"ட்..ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா நீ..??"

அசோக் சிறு தயக்கத்துடனே கேட்டான். கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் விழித்த கோவிந்த், அப்புறம் தடுமாற்றமாய் சொன்னான்.

"ம்ம்.. சா..சாப்பிடுவேன்.. எ..எப்போவாச்சும்..!! எதுக்கு கேக்குறீங்க..??"

"இன்னைக்கு சாப்பிடலாமா..??"

இப்போது கோவிந்த் முகத்தில் மீண்டும் குழப்ப ரேகைகள். அசோக் அப்படி கேட்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை நாளாய் நேத்ராவை தவிர அந்த டீமில் இருப்பவர்கள் யாருமே கோவிந்திடம் முகம் கொடுத்து பேசியதில்லை. அசோக் திடீரென இவ்வாறு தன்னை அணுகவும், ஒருவித ஆச்சரியத்துக்கு உட்பட்டுப் போயிருந்தான். உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை பார்த்துவிட்டு அசோக்கே இப்போது புன்னகையுடன் சொன்னான்.

"ஹே.. கமான்..!! ஜஸ்ட்.. எனக்கு இன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருந்தது.. கம்பெனிக்கு ஆள் இல்ல.. அதான் உன்னை கூப்பிட்டேன்.. உனக்கு விருப்பம் இருந்தா என் கூட ஜாயின் பண்ணிக்கலாம்.. வாட் யு ஸே..??"

அசோக் மிகவும் ஸ்னேஹமான குரலில் கேட்டான். கோவிந்த் முகத்தில் இருந்த குழப்பம் இப்போது சற்று நீங்கியது. மெலிதாக புன்னகைத்தான். நீண்ட நேரம் எல்லாம் யோசிக்கவில்லை அவன். ஒரு சில வினாடிகளிலேயே,

"ம்ம்.. போலாம்..!!" என்று தலையாட்டினான்.

"ஓகே.. அப்போ ஷட்டவுன் பண்ணிட்டு கெளம்பு..!!"

கோவிந்த் ஷட்டவுன் எல்லாம் செய்யவில்லை. சிஸ்டத்தை அப்படியே லாக் செய்து மானிட்டரின் வெளிச்சத்தை மட்டும் நிறுத்தினான். சேரில் இருந்து எழுந்து கொண்டான். அத்தனை நேரம் அவர்களை கடுப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஹரி, இப்போது பொறுக்கமாட்டாமல் எழுந்து ஓடிவந்தான். அசோக்கை பார்த்து கத்தினான்.

"டேய்.. டேய்.. என்னை விட்டுட்டு குடிக்க போறலடா.. நீ நல்லாவே இருக்க மாட்டடா.. நீ நல்லாவே இருக்க மாட்ட!!"

"ஏய்.. போடா..!! வொய்ஃப்புக்கு பயப்படுறவன்லாம் ஏன்டா லைஃபை என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுறீங்க..?? போ போ.. போய் வேலையை பாரு போ..!!" அசோக் ஏளனமாக சொன்னான்.

"போங்கடா போங்க.. என்னை இப்படி அம்போன்னு விட்டு போறீங்கல்ல.. நீங்க இன்னைக்கு குடிக்கிற சரக்குலாம் மட்டமான சரக்காதாண்டா இருக்கப் போகுது.. மப்பே ஏறாதுடா உங்களுக்கு.. அப்படியே ஏறுனாலும் அடுத்த செகண்டே வாந்தி எடுத்துடுவீங்கடா.. அப்படியே வாந்தி எடுக்காட்டாலும் போதையோட போய் போலீஸ்ட்ட மாட்டி, பர்ஸை பறிகொடுக்கப் போறீங்கடா..!! இது என் சாபம்டா.. வயிறு எரிஞ்சு சொல்றேண்டா.. பலிக்குதா இல்லையான்னு பாருங்க..!!"

ஹரி துக்கம் தாளாமல் புலம்ப, அவன் பேசிய வார்த்தைகள் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தன. முகத்தை முறைப்பாக வைத்திருந்தவன் அவனையும் மீறி சிரித்து விட்டான். பிறகு கை நீட்டி ஹரியை அருகில் அழைத்தான்.

"ஏய்.. வாடா இங்க..!!"

"என்னடா..??"

கடுகடுப்பாக அருகில் வந்து நின்ற ஹரியின் பாக்கெட்டுக்குள் அசோக் கைவிட்டான். உள்ளே இருந்த செல்போனை எடுத்து கோவிந்த்திடம் நீட்டினான். என்னவென்று புரியாமல் விழித்த கோவிந்திடம் பொறுமையாக சொன்னான்.

"கவிதாவுக்கு ஒரு கால் பண்ணு கோவிந்த்.. இன்னைக்கு உனக்கு பர்த்டேன்னு சொல்லு.. ஹரியை ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி.. அவகிட்ட பர்மிஷன் கேளு.. ப்ளீஸ்..!!"

கோவிந்த் ஓரிரு விநாடிகள்தான் திகைத்தான். அப்புறம் அசோக்கிடமிருந்து செல்போனை வாங்கி கவிதாவின் நம்பருக்கு கால் செய்தான். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரிக்கோ முகமெல்லாம் பிரகாசம்.. வாயெல்லாம் பல்..!! அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு இளித்தவாறே சொன்னான்..!!

"மச்சி.. நண்பேண்டா மச்சி.. நண்பேண்டா..!!"

அசோக் எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. அவனது கவனம் கோவிந்திடம் இருந்தது. கோவிந்த் கவிதாவுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான். அசோக்கும், ஹரியும் ரிசல்ட் தெரிந்து கொள்வதற்காக கோவிந்தின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஷயத்தை சொல்லிவிட்டு ஒரு சில 'உம்..' கொட்டின கோவிந்த், அப்புறம் செல்போனை ஹரியிடம் நீட்டினான்.

"என்ன..??" ஹரி புரியாமல் கிசுகிசுப்பாக கேட்டான்.

"உங்ககிட்ட பே..பேசணும்னு சொல்றாங்க..!!"

ஹரியின் முகம் இப்போது பட்டென சீரியசானது. செல்போனை வாங்கி பவ்யமாக காதுக்கருகே வைத்துக் கொண்டான். பெரும் முயற்சி செய்து குரலை இயல்பாக மாற்றிக்கொண்டு,

"ஹலோ..!!" என்றான்.

"ம்ம்.. என்ன.. காரணம் கெடைச்சிடுச்சு போல..??" அடுத்த முனையில் கவிதாவின் கடுகடு குரல்.

"சேச்சே.. அப்டிலாம் இல்லம்மா..!! நம்ம கோவிந்த்க்கு இன்னைக்கு பர்த்டேயாம்.. ட்ரீட்க்கு நான் வந்தே ஆகணும்னு ரொம்ப பிரியப்படுறான்.. அதான்..!!"

"என்னது.. நம்ம கோவிந்தா..?? அவனைத்தான் உங்களுக்கு புடிக்காதுல்ல..??"

"அச்சச்சோ.. யார் சொன்னா..?? ரொம்ப புடிக்கும்மா..!!"

"தர்பூஸ் தலையன்.. தர்பூஸ் தலையன்..னு சொல்வீங்க..??"

"அ..அது சும்மா.. செல்லமா.. கூப்பிடுறது..!!"

"ஹ்ம்ம்..!! சொன்னா கேக்கவா போறீங்க.. என்னவோ பண்ணி தொலைங்க..!! அப்டியே வெளில சாப்பிட்டு வந்துடுங்க.. உங்களுக்காக சமைச்சு வச்சுட்டுலாம் என்னால உக்காந்திட்ருக்க முடியாது.. நான் ஓட்ஸ் ஏதாவது போட்டு சாப்பிட்டுக்குறேன்..!!"

"ஓகேம்மா.. ஓகேம்மா..!! ஓட்ஸ் சாப்பிட்டு நீ படுத்துக்கோ.. நான் வெளிலயே சாப்பிட்டு வந்துடுறேன்..!!"

"ஹ்ம்ம்..!!! அளவா குடிங்க.. புரியுதா..??"

"ஹ்ஹ.. என்னம்மா நீ.. என்னைப் பத்தி தெரியாதா உனக்கு..?? நமக்கு லிமிட்னா லிமிட்தான்..!! ஓகே..??"

"ஓகே ஓகே..!! பை..!!"

"பை..!!"

ஹரி சந்தோஷமாக காலை கட் செய்தான். கட் செய்ததுமே கோவிந்தை ஏறிட்டு கூலாக சொன்னேன்.

"ஓகே மிஸ்டர் கோவிந்த்.. உங்க டைம்லி ஹெல்ப்புக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!! நீங்க இப்போ போய் உங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க.. நானும் நண்பனும் பாருக்கு கெளம்புறோம்..!! சரியா.. நாளைக்கு பாக்கலாமா..??"

ஹரி அவ்வாறு சொன்னதும் கோவிந்தின் முகத்தில் பட்டென்று ஒரு ஏமாற்றம். அப்படியே முகத்தை பக்கவாட்டில் திருப்பி அசோக்கை பார்த்தான். அவன் அசோக் பக்கம் திரும்பியதும், இப்போது ஹரியும் கேஷுவலாக அசோக்கின் முகத்தை ஏறிட்டான். அசோக்கோ ஹரியை உஷ்ணமாக முறைத்துப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய உக்கிரமான பார்வை ஹரியை சற்றே மிரள செய்தது. உடனே தடுமாற்றமாக சொன்னான்.

"இ..இல்ல மச்சி.. மூணு பேரா சேர்ந்து போனா.. எந்தக்காரியமும் வெளங்காதுன்னு.. மூத்தவங்க சொல்லிருக்காங்க.. அதான்..!!"

"அப்போ நீ போய் உன் வேலையை பாரு.. நானும் கோவிந்தும் மட்டும் போறோம்..!!"

"ஹேய்.. என்னடா இப்படி சொல்ற..??"

"பின்ன என்ன..?? இஷ்டம்னா எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ.. இல்லனா பொட்டியை சாத்திட்டு பொண்டாட்டியை பாக்க கெளம்பு..!! நீ வா கோவிந்த்..!!" அசோக் கோவிந்தை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்க,

"டேய்.. டேய்.. இருங்கடா.. ஷட்டவுன் பண்ணிட்டு வர்ரண்டா.. டேய்..!!" என்று பின்னால் இருந்து பதறிப்போய் அலறினான் ஹரி.

அதன்பிறகு இரண்டு மணி நேரம் கழித்து..

கோரமங்களாவில் இருக்கும் ஒரு செட்டிநாடு ரெஸ்டாரன்ட் கம் பார்..!! வார இறுதியாதலால் பாரில் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! நீல நிற நியான் வெளிச்சத்துடன், ஒருவித மசமசப்பான சூழல்..!! ஏ.ஸி காற்றில் மெலிதாக இளையராஜாவின் இன்ஸ்ட்ருமென்ட்டல் கசிந்துகொண்டிருந்தது. குடிக்க வந்திருந்தவர்கள் குடியரசு தலைவர் தேர்தல் பற்றியெல்லாம் வெட்டி விவாதத்தில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள்..!! பணியாளர்கள் எல்லாம் பம்பரமாய் சுழன்று பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்..!!

ஒரு மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய ஒரு டேபிளில் நமது ஆட்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். அசோக்கும், ஹரியும் ஒரு சோபாவை பகிர்ந்துகொண்டிருக்க, கோவிந்த் எதிரே தனியாக அமர்ந்திருந்தான். பீங்கான் பிளேட்டுகளில் வித விதமான பெயர்களுடன் வந்திருந்த கோழிகள் எல்லாம், அவர்களால் இரக்கமே இல்லாமல் விழுங்கப்பட்டிருந்தன. எவ்வளவு தின்றார்கள் என்பதற்கு சாட்சியாக எலும்புகள் மட்டுமே டேபிளில் இறைந்து கிடந்தன. எவ்வளவு குடித்தார்கள் என்பதற்கு சாட்சியாக அவர்களது தலைகள் எக்குத்தப்பாய் ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தன.

அருகே நின்றிருந்த பேரரிடம் கோவிந்த் ஆர்டர் செய்துகொண்டிருந்தான். எல்லோருக்கும் நான்காவது லார்ஜ் கொடுக்குமாறு நாக்கு குழற கேட்டுக்கொண்டான். வேறு சைடிஷ் ஏதாவது வேண்டுமா என்று தெரியாத்தனமாக கேட்டுவிட்ட பேரரை, கோவிந்த் வெறுப்பேற்ற ஆரம்பித்திருந்த சமயம்..!!

"ஐயோ.. நான் சொல்றதே உங்களுக்கு பு..புரியலை.. கோ..கோழி மாதிரியே இருக்குங்க.. ஆனா கோ..கோழி இல்ல.. அது ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!" கோவிந்த் திக்கி திக்கி சொன்னதற்கு அந்த பேரர் தலையை சொறிந்தான்.

"ஸார்.. இப்படி சொன்னீங்கன்னா எப்படி ஸார்..?? அது என்னன்னு பேரை சொல்லுங்க ஸார்..!!"

"பேர் எனக்கு ஞா..ஞாபகம் இல்லையே..!!"

"வான்கோழியை சொல்றீங்களா..??"

"ப்ச்.. இல்ல..!!"

"புறாவா..??"

"ஹாஹா.. உங்க ஊர்ல பு..புறாலாம் கோழி மாதிரியா இருக்கும்..?? விட்டா கா..காக்காவான்னு கேட்பீங்க போல..??" என்று கோவிந்த் அந்த பேரரையே கலாய்க்க, அவன் இப்போது சற்றே எரிச்சலானான்.

"ஸார்.. எனக்கு தெரியலை ஸார்.. எதாருந்தாலும் மெனு பாத்து நீங்களே சொல்லுங்க..!!"

"டென்ஷன் ஆவாதீங்க பாஸ்.. அது பேர்ல ஒரு ந..நடிகை கூட இருக்காங்க..!! இருங்க.. யோசிக்கிறேன்..!!"

என்ற கோவிந்த், 'ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..' என்று நெற்றியை சொறிந்தவாறு தீவிரமாக அந்த உயிரினத்தின் பேரை யோசித்தான். அசோக்கும், ஹரியும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் இவ்வளவு பேசுவான் என்ற விஷயமே, சில பல ஆன்ட்டிகுட்டிகள் அவனுக்குள் இறங்கியதும்தான் இவர்களுக்கே தெரிகிறது. ஒரு சில வினாடிகளிலேயே கோவிந்துக்கு அந்தப்பேர் ஞாபகம் வந்து போனது. உற்சாகமாக சொன்னான்.

"ஹாங்.. கௌதாரி.. கௌதாரி..!! கௌதாரி ரெ..ரெண்டு ப்ளேட் கொண்டாங்க..!!"

"கௌதாரிலாம் எங்ககிட்ட இல்ல ஸார்..!!" பேரர் சலிப்பாக சொல்ல,

"ஓ..!!!! இல்லையா..??" கோவிந்தின் முகத்தில் ஒரு ஏமாற்றம்.

"ஹ்ம்ம்.. காடை இருக்கு.. அது வேணும்னா ட்ரை பண்ணி பாக்குறீங்களா..??"

"காடையா..??? அ..அது எப்படி இருக்கும்..??" கோவிந்த் வாய் குழற கேட்டான்.

"ம்ம்ம்..?? கோழி மாதிரியே இருக்கும்.. ஆனா கோழி இல்ல..!!" பேரரின் குரலில் அவனையும் அறியாமலே ஒரு நக்கல் கலந்திருந்தது.

"ஓ..!!!! அப்படின்னா.. அதையே குடுங்க..!!"

கோவிந்த் ஒருவழியாய் ஆர்டர் செய்து முடித்தான். அந்த பேரர் 'எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க.. எங்க உசுரை வாங்குறதுக்குன்னே..!! ஷ்ஷ்ஷ்.. பாஆஆ..!!' என்று மனதுக்குள் நொந்துகொண்டவாறே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். அதற்காகவே காத்திருந்த மாதிரி ஹரி கோவிந்திடம் கேட்டான்.

"மிஸ்டர் கோவிந்த்.. எனக்கு ஒரு டவுட்..!!"

"என்ன..??"

"இந்த கௌதாரின்ற பேர்ல ஒரு நடிகை இருக்குறதா சொன்னீங்களே..?? அவங்க ஹாலிவுட் நடிகையா..??"

"இல்ல இல்ல.. நம்ம ஊர்தான்.. த..தமிழ்ல கூட நடிச்சிருக்காங்களே..??"

"தமிழ்லயா..?? தமிழ்ல யாரு.. எனக்கு தெரியாம..??" ஹரி தலையை சொறிந்தான்.

"ந..நடிச்சிருக்காங்க பாஸ்.. வாடா வாடா பையான்னு ஆடுவாங்களே.. அ..அவங்கதான்..!! அவங்க முழுப்பேரு நிஷா கௌ..கௌதாரி..!!"

கோவிந்த் சீரியசாக சொல்லிவிட்டு தட்டில் கிடந்த சிக்கனை எடுத்து கடிக்க ஆரம்பித்தான். ஹரி அவனையே கடுப்புடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அப்படியே அப்ப வேண்டும் போல ஹரிக்கு ஒரு ஆத்திரம். அசோக்தான் ஹரியை அடக்கினான்.

முதலில் விஸ்கி வந்தது. மூவரும் எடுத்து சிப்ப ஆரம்பித்தார்கள். அப்புறம் ஆவி பறக்கிற காடை ஃப்ரையை இரண்டு பிளேட்டுகளில் கொண்டு வந்து வைத்த பேரரிடம், மேலும் இரண்டு நாட்டுக்கோழி வறுவல் ஆர்டர் செய்தான் கோவிந்த். பேரர் சென்றதும் அசோக் கோவிந்திடம் சற்றே சலிப்பாக சொன்னான்.

"ஹேய் கோவிந்த்.. தேவை இல்லாம நெறைய ஆர்டர் பண்றன்னு நெனைக்கிறேன்..!!"

"ப..பரவால பாஸ்.. எல்லாம் நல்லா சாப்பிடுங்க..!! ட்ரிங்க்சும் இன்னும் எவ்வளவு வேணுமோ வாங்கி குடிங்க..!! செலவை பத்தி கவலைப்படாதீங்க.. இன்னைக்கு என்னோட ட்ரீட்..!!"

"ட்ரீட்டா..?? சேச்சே.. அதுலாம் ஒன்னும் வேணாம்பா.. மூணு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்..!!" அசோக் அவசரமாய் சொன்னான்.

"நோ வே..!! இன்னைக்கு நா..நான்தான் பே பண்ணுவேன் பாஸ்..!! ஐம் வெரி வெரி ஹேப்பி டுடே… ஸோ.. ஐ வில் பே..!!"

"ஹாஹா..!! ஹேப்பியா..?? ஏன்..??"

அசோக் மெலிதான சிரிப்புடன்தான் அவ்வாறு கேட்டான். ஆனால் கோவிந்தோ பட்டென சீரியசாகிப் போனான். முகத்தை ஒருமாதிரி சோகமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

"ஏனா..?? என்ன பாஸ் இப்படி கேட்டுட்டீங்க..?? நான் இந்த க..கம்பெனிக்கு வர்றதுக்கு முன்னாடி அஞ்சு வருஷம் இன்னொரு கம்பெனில வேலை பாத்திருக்கேன்.. இப்போ இங்க வந்தும் ஒரு வருஷம் ஆவப் போகுது..!! இத்தனை வருஷத்துல என்னை யாருமே கூ..கூப்பிட்டது இல்ல பாஸ்..!!"

"எதுக்கு..??"

"தண்ணியடிக்கிறதுக்கு..!!"

"ஓ..!!"

"ம்ம்..!! தண்ணியடிக்க மட்டும் இல்ல.. எதுக்குமே யாரும் என்னை கூப்பிட மாட்டாங்க..!! எப்போவுமே நான் தனியாதான் போவேன்.. தனியாதான் வருவேன்..!! யாருக்குமே என்னை புடிக்காது பாஸ்.. என்னை பிரண்டுன்னு சொல்லிக்கிறதுக்கே யாரும் விரும்ப மாட்டாங்க..!!" கோவிந்த் பரிதாபமாக சொன்னவிதம் அசோக்கின் மனதை கஷ்டத்துக்கு உள்ளாக்கியது.

"ஹேய்.. கோவிந்த்.. என்னப்பா இது..? ஏன் இப்படிலாம் பேசுற..??"

"ஹையோ.. நான் சொன்னது உ..உண்மைதான் பாஸ்..!! பட் டுடே ஐம் வெரி ஹேப்பி..!! என்னையும் மதிச்சு.. தண்ணியடிக்க கூப்பிட்டீங்க பாத்தீங்களா.. என்னை உங்க பிரண்டா ஏத்துக்கிடீங்க பாத்திங்களா.. ஐம் வெரி ஹேப்பி.. வெரி வெரி ஹேப்பி..!! உங்க ரெண்டு பேரையும் என் லைஃப்ல என்னைக்கும் மறக்க மாட்டேன்..!!"

தழதழத்த குரலில் சொல்லி முடித்த கோவிந்த், உடனே அருகில் இருந்து விஸ்கியை எடுத்து கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டான். காடையை எடுத்து கடித்து குதறினான். அசோக் அவனையே பாவமாக பார்த்துக்கொண்டிருக்க, அவனுக்கு அருகே அமர்ந்திருந்த ஹரி இப்போது அசோக்கின் புஜத்தை சொறிந்தான். திரும்பி பார்த்த அசோக்கிடம், கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"என்னடா மச்சி இவன்.. சரக்கடிக்கிற நேரத்துல சந்தானம் மாதிரி சந்தோஷமா இருக்குறதை விட்டுட்டு.. சேரன் மாதிரி சென்ட்டியை போட்டுட்டு இருக்குறான்..!!"

"ப்ச்.. சும்மா இருடா..!!" அசோக்கும் கிசுகிசுத்தான்.

"முடியலைடா.. ரொம்ப சொறியுறான்டா..!!"

ஹரி கோவிந்த் மீது கடும் எரிச்சலில் இருந்தான். எந்த நேரமும் அவன் மீது பாய்ந்துவிடுபவன் மாதிரி கோபத்தில் இருந்தான். அசோக்தான் ஹரியை அவ்வப்போது அடக்கி வைத்தான்.

நான்காவது ரவுண்டும் முடிந்தது. மூவரும் தட்டில் மிச்சமிருந்த நாட்டுக்கோழி வறுவலை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் கோவிந்த் சொன்னான். தனது தலை நிலைகொள்ளாமல் தடுமாற, பேச்சு குழற சொன்னான்.

"ரெண்டு மூணு நாளா மனசு ரொம்ப க..கஷ்டமா இருந்தது பாஸ்.. இன்னைக்குத்தான் நிம்மதியா இருக்கு..!!"

"ஓ.. அப்படி என்ன மனசு கஷ்டம் உனக்கு..??" அசோக் தெரிந்து கொண்டே கேட்டான்.

"என்ன பாஸ் தெரியாத மாதிரி கேக்குறீங்க..?? அதான்.. அந்த ஆ..ஆன்சைட்...!!!!
ஏமாத்திட்டாங்க பாஸ் என்னை.. மறுபடியும் ஏமாத்திட்டாங்க..!!"

"ஹேய்.. கோவிந்த்..!!"

"ஆன்சைட் குடுக்குறேன்.. ஆன்சைட் குடுக்குறேன்னு.. அந்த பாலா எனக்கு நல்லா அல்வா கிண்டி குடுத்துட்டாரு பாஸ்..!!"

"விடு கோவிந்த்.. அந்த ஆள் என்ன பண்ணுவாரு..?? ப்ரியாதான் வேணும்னு க்ளையன்ட்டே கேட்டிருக்காங்க.. இவங்க என்ன பண்ண முடியும்..??"

"ஹ்ம்ம்.. நீங்க சொல்றதும் சரிதான்..!! எனக்கு நேரம் சரியில்லை.. அதான் இப்படிலாம் நடக்குது..!! அப்படி நெனச்சுக்க வேண்டியதுதான்..!!"

சொல்லிவிட்டு கோவிந்த் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அசோக் கொஞ்ச நேரம் அவனையே அமைதியாக பார்த்திருந்துவிட்டு, அப்புறம் மெலிதான குரலில் கேட்டான்.


"கோவிந்த்.. உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே..??"

"ஹ்ம்ம்.. கேளுங்க பாஸ்..!!"

"ஆன்சைட் போகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்குறது சகஜம்தான்.. ஆனா நீ மட்டும் ஏன் இப்படி போயே ஆகணும்னு வெறியா இருக்குற..??"

அசோக் அந்த மாதிரி கேட்கவும், இப்போது கோவிந்த் பட்டென அமைதியாகிப் போனான். அந்தக்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது திடீர் திகைப்பில் இருந்தே புரிந்தது. அசோக்கையும் ஹரியையும் மாறி மாறி ஒருவித பரிதாபப் பார்வை பார்த்தான். அப்புறம் கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு கேட்டான்.

"உங்க ரெண்டு பேர்ல யாராவது ஆ..ஆன்சைட் போயிருக்கீங்களா..??"

கோவிந்தின் கேள்விக்கு ஹரி இப்போது பதில் சொன்னான்.

"ஹ்ஹ.. நாங்களும் உன்னை மாதிரிதான்.. ஆன்சைட்லாம் போனது இல்ல.. சேந்ததுல இருந்து இங்கதான் சேரை தேச்சுட்டு இருக்கோம்..!!" ஹரி இளித்தவாறே சொல்ல,

"நான் ஆன்சைட் போனது இல்லைன்னு உங்களுக்கு யார் சொன்னது..??"

கோவிந்த் பட்டென கேட்டான். அவன் அந்த மாதிரி கேட்கவும், ஹரியும் அசோக்கும் அதிர்ந்து போனார்கள். கோவிந்த்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தார்கள். அசோக்தான் முதலில் கேட்டான், அவன் கொண்டிருந்த ஆச்சரியம் விலகாமலே.

"ஹேய்.. அப்போ நீ ஏற்கனவே ஆன்சைட்லாம் போயிருக்கியா..??"

"ம்ம்.. போயிருக்கேன்.. ஒரே ஒரு தடவை..!!"

"எங்க..??"

"யூ.எஸ்.. மினியாபொலிஸ்..!!"

"ஓ..!! அப்புறம் என்ன... அதான் ஏற்கனவே போயிருக்கேல.. அதுக்கப்புறமும் ஏன் ஆன்சைட் மேல உனக்கு இப்படி ஒரு வெறி..??"

"ஹ்ம்ம்.. சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் ஆன்சைட் போன கதையை சொல்றேன்..!! கொஞ்ச நாள் முன்னாடி இந்த கம்பனில என்னை ஆ..ஆன்சைட் அனுப்புறேன் சொல்லிட்டு, மும்பையோட திரும்ப வர சொன்னாங்கல்ல..?? அந்த கதையை விட இந்தக்கதை காமடியா இருக்கும்..!! சொல்லவா..??"

"ஹ்ம்ம்.. சொல்லு..!!"

"ஆன்சைட் போக எல்லாருக்குமே ஆசை இருக்கும்னு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னீங்கல்ல..?? ஒருவருஷம் முன்னாடி.. எனக்கு அந்த ஆசை கூட இல்ல பாஸ்..!! இங்க மாதிரிதான் என் பழைய கம்பனிலயும்.. பயங்கர ஹார்ட் வொர்க் பண்ணுவேன்.. ராத்திரி பகல்னு பாக்காம, ஆ..ஆபீசே கதின்னு கெடப்பேன்..!! என் ஹார்ட் வொர்க் பாத்து.. என் மேனேஜர் எனக்கு சப்போர்ட் பண்ணி.. என்னை ஆன்சைட் அனுப்ப சூஸ் பண்ணாங்க..!! எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல.. ஆனா என் மேனேஜர் நீதான் சரியான ஆள்னு சொன்னாரு.. கம்பல் பண்ணாரு.. நானும் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்…!! ஒரு டபுள் மைன்டோடவே மினியாபொலிஸ்ல போய் இறங்குனேன்..!!"

"எ..எப்போ..??"

"போன வருஷம் மார்ச்..!! புது ஊர்.. புது எடம்.. புது ஆளுங்க.. அங்க போனதுமே அவங்களோட நான் ஒ..ஒட்டாத மாதிரி ஒரு ஃபீல் எனக்கு வந்துடுச்சு..!! முதல் நாள் ஆபீஸ் போனேன்.. ஒரு பெரிய ஹால்ல ஒரு மீட்டிங்.. ஒரு இருபது இருபத்தஞ்சு பேரு இருந்தானுக.. எங்க அப்ளிகேஷன் பத்தி டெமோ கொடுக்கணும்..!!"

"ஹ்ம்ம்...!!"

"எனக்கு நேச்சராவே கொ..கொஞ்சம் இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ் பாஸ்.. நாம பேசுற இங்க்லீஷ் கரெக்டான்னு ஒரு பயம் எப்போவும் இருந்துக்கிட்டே இருக்கும்..!! அதில்லாம அந்த புது அட்மாஸ்பியர்.. தஸ்புஸ்னு புரியாம பேசுற அமெரிக்காகாரனுக சுத்தி உக்காந்துட்டு இருக்கானுக..!! எனக்கு வேற அப்போ ரொம்ப வா..வாய் திக்கும்..!! அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சுன்னே இப்போ வரைக்கும் சுத்தமா புரியலை பாஸ்.. பே..பேச்சே வரலை எனக்கு.. ஏதேதோ உளர்றேன்.. திக்கு திக்குன்னு திக்குறேன்..!! சிம்பிளா சொல்லனும்னா.. சொ..சொதப்பிட்டேன் பாஸ்.. சொதப்பு சொதப்புன்னு சொதப்பிட்டேன்!! ஒரு ரெண்டு நிமிஷம் பாத்துட்டு.. எல்லாமே எந்திரிச்சு போயிட்டானுக..!!"

"ஓ..!! ஷிட்..!!" அசோக் நிஜமான வருத்தத்துடன் சொன்னான்.

"எவ்வளவோ கெஞ்சுனேன் தெரியுமா.. இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு..!! அவனுககிட்டையும் சரி.. இவனுககிட்டையும் சரி..!! யாருமே நான் கெஞ்சுனதை மதிக்கலை.. அடுத்த நாளே என்னை இன்டியா அனுப்பி வச்சுட்டாங்க.. எனக்கு பதிலா வேற ஒரு ஆளை திரும்ப ஆன்சைட் அனுப்பினாங்க..!!"

சொல்லிவிட்டு கோவிந்த் அமைதியானான். அவனுடைய பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. வலி மிகுந்த பழைய நினைவுகளில் அவன் மூழ்கிப் போயிருக்கிறான் என்று தெளிவாக தெரிந்தது. கேட்டுக்கொண்டிருந்த அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாகிப் போனது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என ஆச்சரியமுற்றான். கோவிந்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவனுடைய கையை அழுத்தி பற்றிக் கொண்டான். கோவிந்த் மேலும் தொடர்ந்தான்
.
"என் பழைய கம்பெனில.. சும்மாவே என்னை யாரும் மதிக்க மாட்டாங்க பாஸ்.. அந்த பிரச்னைக்கு அப்புறம்.. எனக்கு இருந்த கொ..கொஞ்ச நஞ்ச மதிப்பும் சுத்தமா போயிடுச்சு..!! அந்த ப்ராஜக்ட்ல இருந்து என்னை தூக்கிட்டாங்க.. என்னை கம்பல் பண்ணி அனுப்பின மேனேஜரே 'என்னால எதுவும் செய்ய முடியலை கோவிந்த்..'னு கையை விரிச்சுட்டாரு..!! கூட வேலை பாக்குறவங்க எல்லாம் என்னை முன்னாடி விட்டு பின்னாடி கே..கேலி பண்ணுவாங்க..!! ரிஜக்டட் பீஸ்.. ரிட்டர்ன் ஸ்டேட்மன்ட்'ன்லாம்.. எனக்கு நிக்நேம் வச்சிருந்தாங்க..!!"

"ஹ்ம்ம்...!!"

"அவங்கதான் என்னை புரிஞ்சுக்கலைன்னா.. என் அ..அப்பா கூட என்னை புரிஞ்சுக்காம கேவலமா பேசிட்டாரு பாஸ்..!! சொந்தக்காரனுக இன்னொரு பக்கம்.. ஏதோ எழவு விழுந்த மாதிரி.. போன் பண்ணி போன் பண்ணி துக்கம் விசாரிச்சாங்க..!! அந்த கொஞ்ச நாள் நான் பட்ட கஷ்டம்.. ரொம்ப கொடுமை..!! என் அம்மாதான் அப்போலாம் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தாங்க..!!"

"ஹ்ம்ம்...!!"

"என்னை அவங்க திரும்ப அனுப்பின அன்னைக்கு முடிவு பண்ணினது பாஸ்.. மறுபடியும் ஆ..ஆன்சைட் போகணும்னு..!!! புரியுதா..??"

"பு..புரியுது..!!"

"ஹ்ம்ம்.. போகணும்.. இன்னும் ஒரே ஒரு தடவையாவது ஆன்சைட் போகணும்..!! நான் யார்னு ப்ரூவ் பண்ணனும்.. மத்தவங்களுக்காக மட்டும் இல்ல.. எனக்கே நான் யா..யார்னு ப்ரூவ் பண்ணி காட்டனும்..!!" அவ்வாறு சொல்லும்போது கோவிந்தின் குரலில் அபப்டி ஒரு உறுதி.

"கண்டிப்பா..!!" அசோக்கும் இப்போது உணர்ச்சிவசப்பட்டவனாய் சொன்னான்.

"இப்போ ஸ்பீச் தெரபிலாம் போய்.. திக்குறது ரொம்ப கம்மி ஆயிடுச்சு.. இங்க்லீஷ் கம்யூனிகேஷன் கூட நல்லா இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டேன்..!! என்னை ப்ரூவ் பண்றதுக்கு ஆ..ஆப்பர்ச்சூனிட்டிதான் இன்னும் கெடைக்கலை..!!"

"கவலைப்படாத கோவிந்த்.. கூடிய சீக்கிரம் உனக்கு சான்ஸ் கிடைக்கும்.. எல்லாருக்கும் நீ யார்னு ப்ரூவ் பண்ணத்தான் போற..!!"

அசோக் நம்பிக்கையூட்டும் விதமாக சொல்ல, கோவிந்தும் அவனை நன்றியுடன் பார்த்தான். மனதில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கூர்ந்து கவனிக்கிற அளவுக்கு ஒரு புத்தி தெளிவு அசோக்கிற்கு அப்போது இல்லை. இரண்டு நாட்கள் முன்புவரை கோவிந்தை தனக்கு போட்டியாக எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவனே 'கோவிந்திற்கு ஆன்சைட் செல்லும் வாய்ப்பு சீக்கிரம் அமையாதா..?' என நினைக்கிற அளவுக்கு அவனது மனநிலை மாறி இருக்கிறது..!! இன்றைய மனித வாழ்க்கையே இப்படி புரிந்து கொள்ளாமல் போட்டி போட்டுக்கொண்டு மகிழ்ச்சியை இழக்கிற மடத்தனம் என்பதை அப்போது அவன் உணரவில்லை..!!

கோவிந்த் சொன்ன விஷயங்களின் தாக்கத்தில் மூழ்கிப் போயிருந்த அசோக், சற்று தாமதமாகத்தான் தனக்கருகே கேட்ட அந்த சத்தத்தை கவனித்தான். சீரியல் பாக்கிற பெண்கள் மூக்கை விசும்புகிற மாதிரியான 'ம்ஹ்.. ம்ஹ்..' என்று சத்தம். திரும்பிப் பார்த்தால், ஹரிதான் துக்கம் தொண்டையை அடைக்க விசும்பிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கோவிந்தையே 'பே..' என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

"டேய்.. என்னடா ஆச்சு..??" என்று ஹரியை உலுக்கினான்.

"வழி விடுடா மச்சான்..!!" என்றான் ஹரி சோபாவில் இருந்து எழுந்தவாறே
.
"எதுக்குடா..??"

"ஏய்.. வழி விடுன்னு சொல்றேன்ல..??"

அசோக் ஒதுங்கிக்கொள்ள, ஹரி தட்டு தடுமாறி நகர்ந்து சோபாவின் எதிர்ப்பக்கம் சென்றான். சென்றதுமே கோவிந்தை தோளோடு சேர்த்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான். ஹரிக்கு போதை ஓவர் ஆகிவிட்டது என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் கோவிந்திற்கு அது புரியவில்லை. ஏனென்றால் அவனுக்கும் ஓவராகி போயிருந்தது. இருவரும் போதையின் உச்சத்தில் வாய் குழறவே பேசிக்கொண்டார்கள். ஹரி புலம்பினான்.

"மச்சான்.. மச்சான்.. சாரிடா மச்சான்..!!"

ஹரி ஏன் திடீரென ஒப்பாரி வைக்கிறான் என்று அசோக்கிற்கும் புரியவில்லை. கோவிந்திற்கும் புரியவில்லை. அழுகிற ஹரியிடம் கோவிந்த் குழப்பமாய் கேட்டான்.

"பாஸ்.. எ..என்ன ஆச்சு பாஸ்..??"

"அடிடா மச்சான்.. என்னை அடிச்சுடுடா..!!" கெஞ்சினான்.

"ஹையோ.. எதுக்கு பாஸ் அடிக்க சொல்றீங்க..??"

"நீ எவ்வளவு நல்லவன்டா மச்சான்.. எப்படி ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்குற.. உன்னைப்போய் நான் தப்பா நெனச்சுட்டண்டா..!! என்னை அடிச்சுடுடா மச்சான்..!!"

புலம்பிய ஹரி, கோவிந்தின் கையை பற்றி தன்னை தானே அறைந்து கொள்ள முயன்றான். கோவிந்த் பதறிப்போய் அவனிடமிருந்து தன் கையை பறித்துக் கொண்டான்.

"ஐயோ.. என்ன பாஸ் பண்றீங்க.. விடுங்க..!!"

"பரவாலடா மச்சான்.. அடிடா.. நீ என்னை அடிக்கிறதுல தப்பே இல்ல..!! ஆனா.. ஒன்னு மட்டும் சொல்றேண்டா.. நீ கண்டிப்பா ஆன்சைட் போறடா.. நான் போக வைக்கிறேண்டா..!! அந்த பாலா நாய் மட்டும் நெக்ஸ்ட் டைம் உன்னை ஏமாத்தட்டும்.. அவனை நான் போட்டுத்தள்ளுறனா இல்லையான்னு பாருடா..!!"

"அச்சசோ.. அப்டிலாம் பண்ணிடாதீங்க பாஸ்.. எனக்காக நீங்க எந்த கஷ்டமும் படக்கூடாது.. அதை என்னால தாங்கிக்க முடியாது..!!" கோவிந்தும் போதையில் பாசக்காரப்பயல் ஆகியிருந்தான்.

"ஐயோ.. ஐயோ.. நீ எவ்வளவு நல்லவனா இருக்குறடா கோவிந்து.. உன்னை போய் நான் என்னன்னமோ சொல்லிட்டனடா..??"

"அப்படி என்ன பாஸ் சொல்லிட்டீங்க..??" கோவிந்த் கேஷுவலாக கேட்க,

"தர்பூஸ் தலையன்லாம் சொல்லி உன்னை திட்டிருக்கண்டா மச்சான்..!!"

ஹரி போதையிலும், பாசத்திலும் உளறிவிட்டான். அவன் அடிக்கிற கூத்தில் நொந்து போய் அசோக் தன் தலையை பிடித்துக் கொண்டான். கோவிந்தோ முகமெல்லாம் அஷ்டகோணலாகிப் போய் கேட்டான்.

"தர்பூஸ் தலையனா..???? நானா..????"

கோவிந்த் முகத்தை சுளிக்கவும்தான், தான் உளறிக்கொட்டியதையே ஹரி உணர்ந்துகொண்டான். நாக்கை கடித்துக் கொண்டான். ஆனால் அந்த போதையிலும் உடனே சுதாரித்துக் கொண்டு, நிலைமையை சமாளிக்கும் விதமாக..

"மச்சான்.. இதுக்கெதுக்குடா நீ இவ்ளோ ஃபீல் பண்ணுற..?? இப்போ.. இந்த தர்பூஸ் இருக்கே.. அது எவ்வளவு நல்ல பழம் தெரியுமா..? வைட்டமின் ஏ, பி, ஸின்னு எல்லாமே இருக்குது மச்சான் அதுல..!! உடம்புக்கு குளிர்ச்சி.. ஹார்ட் ப்ராப்ளம், டயபடிஸ் ப்ராப்ளதுக்குலாம் ரொம்ப நல்லது..!! அதை வெட்டிப்பாத்தா செக்க செவேல்னு என்ன அழகா இருக்குது..?? உலகத்துல தர்பூஸ் மாதிரி ஒரு சூப்பரான பழம் வேற எதுவுமே இல்லைடா மச்சான்..!!"

"ம்ம்ம்.."

"ஆக்சுவலா உன் தலை தர்பூஸ் மாதிரி இருக்குறதுக்கு நீ ரொம்ப பெருமைப்பணும்டா மச்சான்.. ரொம்ப பெருமைப்படணும்..!!"

"ஓ..!!" ஹரியின் விளக்கத்தில் கோவிந்த் ஓரளவு திருப்தி அடைந்தவனாகவே காணப்பட்டான். ஆனால் ஹரி அதன்பிறகும் அவனை விடவில்லை.

"சொல்லுடா மச்சான்.. பெருமைப்படுறேன்னு சொல்லுடா.. ப்ளீஸ்டா..!!"

"ம்ம்.. பெருமைப்படுறேன் பாஸ்..!!"


"குட்.. வெரி குட்.. ஐ லைக் யூ..!! இது மட்டும் இல்லடா மச்சான்.. இன்னும் நீ நெறைய மேட்டருக்காக பெருமைப்படணும்..!!"

"இன்னுமா..??"

"ஹ்ம்ம்.. இந்த பனங்கொட்டை இருக்குலடா மச்சான்.. பனங்கொட்டை..??"

ஹரி சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள்ளாக பேரர் வந்து அசோக்கிடம் பில்புக்கை நீட்டியிருந்தான். அசோக் அதை வாங்கி ஹரியின் தலையிலேயே ஓங்கி அடித்தான். அவன் 'ஆஆஆ..' என்று கத்தியவாறு திரும்பி பார்க்க, அசோக் அவனிடம் முறைப்பாக சொன்னான்.

"த்தா.. விடுடா.. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே..!!"என்றவன், பிறகு கோவிந்தை ஏறிட்டு குரலை இதமாய் மாற்றிக்கொண்டு சொன்னான்.

"இங்க பாரு கோவிந்த்.. இனி உனக்கு யாரும் இல்லைன்னு நீ ஃபீல் பண்ணாத.. நாங்கல்லாம் இருக்கோம்.. ஓகேவா..?? இன்னைல இருந்து நீயும் எங்கள்ல ஒரு ஆள்..!! இந்தா.. உன் விருப்பப்படி.. நீயே இன்னைக்கு பில் பே பண்ணு..!!" என்று பில்புக்கை கோவிந்திடம் நீட்டினான்.



அத்தியாயம் 9

அடுத்து வந்த நாற்பது நாட்கள் ப்ரியா சான்பிரான்சிஸ்கோவில் கழித்தாள். அவர்கள் கம்பெனியை சார்ந்த இன்னும் சிலர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இவளும் தனி அறை எடுத்து தங்கிக் கொண்டாள். சான்பிரான்சிஸ்கோவில் மிகவும் பிசியான சாலையாகிய பிராட்வே சாலையில், பல அடுக்கு மேனியுடன் மிக பிரம்மாண்டமாக நின்றிருக்கும் ஹோட்டல் அது. ப்ரியா தங்கியிருந்தது அந்த ஹோட்டலின் பனிரெண்டாவது மாடியில். அவளுடைய அறையின் பால்கனியில் நின்று பார்த்தால், கோல்டன் கேட் பாலமும், துறைமுகமும் தெளிவாக தெரியும். அதிகாலையில் கொஞ்ச நேரம் காபி அருந்திக்கொண்டே, பால்கனியில் நின்று சான்பிரான்சிஸ்கோ நகரத்து அழகை ரசிப்பது ப்ரியாவுக்கு மிகவும் பிடித்த காரியம்.



பெங்களூரில் இருக்கையில் வீட்டு வேலை என்று ஒரு துரும்பை தூக்கி தூரமாய் போடக்கூட யோசிப்பாள். அந்த அளவுக்கு சோம்பேறித்தனம். ஆனால் இங்கு வந்ததும் பொறுப்பாக எல்லா வேலைகளும் அவளே செய்து கொண்டாள். அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது.. அப்பாவிடம் கற்றுக்கொண்டு வந்த சாம்பார், ரசத்தை எல்லாம் செய்து உண்பது.. சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைப்பது.. துணியை வாஷிங் மெஷினில் போட்டு எடுப்பது.. விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் வீழ்வது..!! காலை எட்டு மணிக்கெல்லாம் ப்ரடோ, நூடுல்சோ போட்டு சாப்பிட்டு விட்டு ஹோட்டலில் இருந்து ஆபீசுக்கு கிளம்பினால், மறுபடியும் அவள் ஹோட்டலுக்கு திரும்ப இரவு எட்டு மணி ஆகி விடும்..!!

ஆபீசில் வேலை அவளுக்கு சற்று கடினமாகவே இருந்தது. ஆனபோதிலும் சமாளிக்க முடியாமல் திணறவில்லை அவள். தினமும் மூன்று மீட்டிங்காவது அட்டன்ட் செய்வாள். க்ளையன்ட் கம்பனியில் இவர்கள் ப்ராஜக்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பிசினஸ் டீம் இருக்கும். அவர்களுடன் நிறைய பேச வேண்டும். உருவாகப்போகிற மென்பொருளில் அவர்கள் விரும்புகிற, தேவையான அம்சங்களை விசாரித்து அறிந்து.. அந்த தேவைகளை டீடெயிலாக டாகுமன்ட் செய்து கொள்வதுதான் ப்ரியாவின் முக்கியமான வேலை..!! அவளுடைய ஆங்கிலப் புலமை இந்த வேலைக்கு மிகவும் கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்..!!

அவளுடைய பிற வேலைகள் என்றால்.. ரெகயர்மன்ட் டாகுமன்ட்களை பெங்களூர் டீமுக்கு ஈமெயில் அனுப்ப வேண்டும். அந்த டாகுமன்ட்களை வைத்து பெங்களூரில் உள்ளவர்கள் டிசைன் டாகுமன்ட்கள் தயார் செய்து திரும்ப ப்ரியாவுக்கு அனுப்புவார்கள். அந்த டிசைன் டாகுமன்ட்களை, க்ளையன்ட் கம்பனியின் டெக்னிகல் டீமிடம் காட்டி, அப்ரூவல் வாங்கவேண்டும். அப்ரூவலுக்கு முன்பாக அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை தீர்த்து வைக்கவேண்டும். அவ்வளவுதான்..!!

டெக்னிக்கல் விஷயங்களில்தான் ப்ரியா அவ்வப்போது தடுமாறுவாள்..!! இருந்தாலும் அவளுடைய ஆங்கில புலமை கொண்டு அந்த தடுமாற்றத்தை அழகாக சமாளித்தாள். தனக்கு தெரியாத விஷயம் பற்றி மீட்டிங்கில் யாராவது கேள்வி எழுப்பும்போது, 'இது இப்போதைக்கு ஒரு தெளிவில்லாத விஷயமாக இருக்கிறது.. நான் இன்று இரவு பெங்களூர் டீமுடன் விவாதித்தேன் என்றால்.. நாளை காலை உங்களுக்கு தெளிவான பதிலை என்னால் கூற இயலும்..!!' என்று ஸ்டைலான ஆங்கிலத்தில், வசீகரமான புன்னகையுடன் அவள் சொல்லுகையில், யாருக்கும் அதற்கு மேல் அவளை துருவி துருவி கேட்க விருப்பம் இருக்காது..!! சில நேரங்களில் கான்பரன்ஸ் லைனில் இருக்கும் ரவிப்ரசாத்தும் அவளது தடுமாற்றத்துக்கு துணை வருவான்..!!

இரவு ஹோட்டல் திரும்பியதும்தான் அவளை ஒரு வெறுமை வந்து சூழ்ந்து கொள்ளும். அருகில் தங்கியிருந்தவர்களும் அவளுடன் அதிகமாக ஒட்டுவது இல்லை.. எப்போதாவது சேர்ந்து வெளியில் செல்வதோடு சரி..!! அவளே சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். கொஞ்ச நேரம் டிவி பார்த்து நேரத்தை ஓட்டுவாள். இரவு பத்து மணி ஆனதுமே அவளுக்கு அசோக்கிடம் பேச ஆசை வந்துவிடும். கம்பெனி காசில்.. ஆபீசில் அசோக்கின் எக்ஸ்டன்ஷனுக்கு கால் செய்வாள். அவன் தாமதமாக ஆபீசுக்கு வந்திருந்தால், செல்லமாக கோபித்துக் கொள்வாள்.

"என்னடா இவ்ளோ லேட்டா வர்ற..?? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..??"

"ஏன்டி.. என்னாச்சு..??" அசோக்கும் உற்சாகமாத்தான் பேச ஆரம்பிப்பான்.

"எத்தனை தடவை ரிஷப்ஷனுக்கு கால் பண்ணி.. உன் எக்ஸ்டன்ஷன் கனெக்ட் பண்ண சொல்றது..?? அவங்களே கடுப்பாயிட்டாங்க..!! ஏன் இவ்ளோ லேட்டு..?? நல்ல தூங்கிட்டியா..??"

"ஹேய்.. இல்ல லூசு.. பொம்மனஹல்லில இன்னைக்கு பயங்கர ட்ராஃபிக்.. அதான் லேட்டு..!!"

"போடா.. ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. எப்போடா இவன் ஆபீஸ் வருவான்னு..!!"

"ஓஹோ..??"

"ஹ்ம்ம்.. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அசோக்..!!" என்று அவள் ஏக்கமாக சொல்லுகையில் அசோக்கும் அவள் மீதிருக்கும் எரிச்சல் மறந்து குளிர்ந்து போவான்.

"ஹ்ம்ம்.. நானுந்தான் ப்ரியா.. நீ இல்லாம இங்க ரொம்ப போரடிக்குது..!! சீக்கிரம் வந்துடு..!!"

என்று இவனும் ஏக்கமாக சொல்வான். பாசமாகத்தான் இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ப்ரியா

"ஹேய் அசோக்.. நேத்து சண்டேல..? நாங்க எல்லாம் அல்காட்ராஸ் ஐலேண்ட் போயிருந்தோம்.. இட் வாஸ் அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ் யு நோ..??"

என்று ஆரம்பித்துவிடுவாள். அவ்வளாவுதான்..!! ப்ரியா அந்தமாதிரி பெருமை பேசிக்கொள்ள ஆரம்பித்தாலே, அசோக்கின் உற்சாகம் உடனே வடிந்து போகும். அவள் சொல்வதற்கெல்லாம் வெறுமனே உம் கொட்டிக்கொண்டு இருப்பான்.

"ம்ம்..!!"

"அங்க பாப்புலர் ப்ரிஸன் இருக்கு.. உனக்கு தெரியும்ல..?? அதைத்தான் சுத்தி பாத்தோம்.. அங்க இருந்து இதுவரை யாருமே எஸ்கேப் ஆனதே கெடயாதாம் அசோக்.. அவ்ளோ ஸ்ட்ராங் செக்யூரிட்டி உள்ள ஹிஸ்டாரிகல் ஜெயில் அது..!! நெறைய ஹாலிவுட் மூவிஸ் இங்க எடுத்திருக்காங்க.. உனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் புடிக்குந்தான.. அவர் நடிச்ச 'எஸ்கேப் ஃப்ரம் அல்காட்ராஸ்..!!' கூட ஃபுல்லா இங்க எடுத்ததுதான்..!!"

"ம்ம்..!!"

அசோக் எரிச்சலை அடக்கிக்கொண்டுதான் அதன்பிறகு அவளுடன் பேச வேண்டி இருக்கும். தான் பார்த்த இடங்கள்.. தான் சந்தித்த நபர்கள்.. அவர்கள் தன்னை புகழ்ந்தது.. தான் அன்று வைத்த ரசம் முதற்கொண்டு.. எல்லாவற்றையும் சற்றே மிகைப்படுத்தித்தான் அசோக்கிடம் ப்ரியா அள்ளி விடுவாள். இப்படி எல்லாம் சொல்லி அவனுக்கு எரிச்சலை கிளப்பிவிட்டுவிட்டு, அப்புறம் வேலை சம்பந்தமாக பேச ஆரம்பிப்பாள் பாருங்கள்.. அதுதான் ப்ரியாவின் அல்டிமேட் அசமஞ்சத்தனம்..!!

"ஹேய்.. உன்னோட மாட்யூல்ல.. HLD (High Level Design), LLD (Low Level Design) டாகுமண்ட்ஸ்லாம் ரெடியாப்பா..?? இன்னைக்கு அனுப்பிடுவல..?? நாளைக்கு காலைல எனக்கு மீட்டிங் இருக்கு.. உன் டிசைன் டிஸ்கஷன்க்கு வரும்..!!"

ப்ரியா கேஷுவலாகத்தான் கேட்பாள். ஆனால் அவள் அவ்வாறு கேட்டதுமே அசோக்கிற்கு அவனது ஈகோ மிருகம் படக்கென கண்விழித்துக் கொள்ளும். பட்டென டென்ஷன் ஆகிவிடுவான். 'எனது உழைப்பில் அங்கே சென்றுவிட்டு, என்னையே வேலை ஏவுகிறாளா..??' என்பது மாதிரியான ஒரு வெறுப்புணர்வு..!!

"இன்னைக்குலாம் அனுப்ப முடியாது.. அது இன்னும் ரெடி ஆகலை..!!" என்பான் இறுக்கமான குரலில்.

"ரெடி ஆகலையா..?? என்ன இவ்ளோ கூலா சொல்லிட்டு இருக்குற..?? நாளைக்கு அவங்க கேக்குறப்போ நான் என்ன பதில் சொல்றது..??"

"ஆங்.. முடியலைன்னு சொல்லு..!!"

"ப்ச்.. என்ன வெளையாடுறியா..?? க்ளையன்ட் கேக்குறதுக்கு முடியலைன்னு சொல்றதுக்குத்தான் நான் இங்க வந்திருக்கனா..??" ப்ரியாவும் எகிறுவாள்.

"அப்போ.. முடியாததெல்லாம் முடியும்னு சொல்றதுக்குத்தான் அங்க போயிருக்கியா..?? பேங்கிங் அப்ளிகேஷன் வச்சுக்கிட்டு.. ராக்கெட் லாஞ்ச் பண்ண முடியுமான்னு கூடத்தான் அவனுக கேனத்தனமா கேட்பானுக..!! அதுக்காக முடியும்னு சொல்லிடுவியா..??" அசோக் பதிலடி கொடுப்பான்.

"ஹையோ.. என்ன பேசுற நீ..?? இன்னைக்கு முடிஞ்சிடும்னு ரவி க்ளயன்ட்கிட்ட கம்மிட் பண்ணிருக்கான்.. நான் எப்படி முடியாதுன்னு சொல்றது..??"

"ரவிதான கம்மிட் பண்ணிக்கிட்டான்.. அதுக்கு நீ எதுக்கு கெடந்து துள்ளுற..??"

"நானுந்தாண்டா நாளைக்கு மீட்டிங்ல இருப்பேன்..!! க்ளையன்ட் கேள்வி கேட்பாங்களேன்னு நான் கவலைப்பட கூடாதா..??"

"நீ ஒன்னும் கவலைப்பட தேவை இல்ல.. நான் ரவிகிட்ட பேசிக்கிறேன்..அவன் க்ளையன்ட்டை சமாளிச்சுப்பான்..!! நீ மூடிட்டு உன் வேலையை மட்டும் பாரு..!!"

"இப்போ எதுக்கு தேவை இல்லாம.. இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? ரவிட்ட பேசிக்கிறேன்னு சொன்னா நான் புரிஞ்சுக்க போறேன்..?? இடியட்..!!"

"நானா டென்ஷன் ஆனேன்..?? நீதான்டி தேவை இல்லாம கெடந்து குதிக்கிற.. ஸ்டுபிட்..!!"


"நானா ஸ்டுபிட்..?? நீதான்டா..!!
"
"ச்சை..!! லூசு..!! பேசுனது போதும்.. ஃபோனை வை மொதல்ல..!! எனக்கு வேலை இருக்கு..!!"

"ஆமாம்.. அப்படியே வேலை பாத்து கிழிச்சுடுறவன் மாதிரிதான்.. சொன்ன டேட்டுக்கு டாகுமன்ட்டை முடிக்க முடியலை.. பெருசா பேசுறான்..!!"

"இங்க பாரு.. உன்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கலாம் எனக்கு நேரம் இல்ல..!! ஃபோனை வை..!!"

"ஆமாம்.. உனக்காக கண்ணு முழிச்சு பேசிட்டு இருக்கேன் பாரு.. என்னை பாத்தா உனக்கு இளக்காரமாத்தான் இருக்கும்..!! வச்சுத் தொலைக்கிறேன்.. பை..!!"

இருவரும் 'படார்.. படார்..' என்று சப்தம் கிளம்புமாறு ரிசீவரை அறைந்து அதனிடத்தில் வைப்பார்கள்..!! ப்ரியா எரிச்சலுடன் மெத்தையில் சென்று பொத்தென்று விழுவாள்..!! அசோக் ஆத்திரத்துடன் கீபோர்டை தட்ட ஆரம்பிப்பான்..!!

ஆனால்.. அடுத்த நாள் இரவு.. அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல்.. ப்ரியா மீண்டும் அசோக்கிற்கு கால் செய்து பேசுவாள்..!! அசோக்கும் 'ஹாய் ப்ரியா.. ' என்று உற்சாகமாக ஆரம்பிப்பான்..!! அவர்களைப் பொறுத்தவரை.. இப்படித்தான் அந்த நாற்பது நாட்களும் கழிந்தன.. பிரிவின் ஏக்கத்துடன் பேச ஆரம்பிப்பதும்.. பிறகு ஈகோ உணர்வுடன் முட்டிக்கொள்வதுமாய்..!!

அந்த நாற்பது நாட்களும் முடிந்தன. ப்ரியா இந்தியாவிற்கு கிளம்பும் நாளும் வந்தது. ப்ரியாவின் ஆன்சைட் பயணம் வெற்றிகரமானது என்றுதான் சொல்ல வேண்டும். 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்..' என்று சொல்லிக் கொள்கிற மாதிரி அவள் புதிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஆனால் அவள் மீது கம்பெனி வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டாள். அனுப்பி வைத்த வேலையை சரியாக செய்து முடித்தாள்..!!

ஆனால் அதற்கே க்ளையன்ட் கம்பனியை சார்ந்தவர்கள் மனம் குளிர்ந்து போனார்கள். நாற்பது நாட்களாக அவள் செய்த பணியை பாராட்டி, இவர்கள் கம்பெனியில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு ஒரு மெயில் அனுப்பி வைத்தார்கள். அனைவரும் அந்த மெயிலுக்கு ரிப்ளை செய்து, ப்ரியாவை வாழ்த்தினார்கள். அவள் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்புகிற அன்று, அவளுக்காக சின்னதாய் ஒரு பார்ட்டி கொடுத்து, வாழ்த்து மடலும் நினைவுப்பரிசும் அளித்து, இந்தியா அனுப்பி வைத்தனர்.

இந்தியா திரும்பிய ப்ரியா, இரண்டு நாட்கள் காம்பன்சேஷன் லீவ் எடுத்துக்கொண்டு, வீட்டில் தூங்கி ஓய்வெடுத்துக் கொண்டே ஆபீசுக்கு திரும்பினாள். அவள் ஆபீஸ் திரும்பிய அன்று ஆபீசையே அதகளப் படுத்தினாள். வாங்கி வந்திருந்த சாக்லேட்டை அனைவருக்கும் அள்ளி இறைத்தாள். தனக்கு அளிக்கப்பட்ட வாழ்த்து மடலை அனைவரிடமும் காட்டி பெருமை பீற்றிக் கொண்டாள். தான் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் மெயில் அனுப்பி, அதை பார்ப்பவர்களின் வயிற்றில் புகை கிளப்பினாள். அமெரிக்காவில் வாங்கிய ஐபாட், ஹேண்டிகேம் எல்லாம் எடுத்து வந்து எல்லோரிடமும் காட்டி எரிச்சலை கிளப்பினாள். 'ஹப்பா... ஏனு கேரக்டரப்பா இவளு.. இஷ்டு ஸீன் தொர்ஸ்தாளே..?' என்று நேத்ரா அசோக்கிடம் தனியாக கன்னடத்தில் தலையில் அடித்துக் கொண்டாள்.

ப்ரியாவின் ஆர்ப்பாட்டத்தில் அசோக்கும் எரிச்சலில் இருந்தான். அதில் எண்ணெய் ஊற்றும் விதமாக, ஆன்சைட் சென்றதில் கிடைத்த எக்ஸ்ட்ரா வருமானத்தில், தான் ஒரு ஸ்கூட்டி ஸ்ட்ரீக் புக் செய்திருப்பதாக ப்ரியா அவனிடம் கூற, அவனுக்குள் இப்போது வேறுவிதமான கோவம்..!! 'இனி தன்னுடன் இவள் பைக்கில் பயணிக்க மாட்டாள்.. தனக்கென தனியாக வாகனம் வாங்கிவிட்டாள்.. பெரிய ஆள் ஆகிவிட்டாள்..!!' என்பது மாதிரியான ஏக்கம் கலந்த கோவம்..!!

அந்த கோவத்தில் அசோக் இருக்கையிலேயே.. அவனுடைய மனநிலையை புரியாத ப்ரியா..

"இந்த வாட்ச் உனக்காக வாங்கிட்டு வந்தேன் அசோக்.. உனக்கு புடிச்சிருக்கா..?"

என்று அவனுக்காக அவள் ஆசையாக தேடித்தேடி வாங்கி வந்திருந்த கைக்கடிகாரத்தை, உற்சாகம் கொப்பளிக்கும் முகத்துடன் அவனிடம் நீட்டினாள். அவன் சந்தோஷத்தில் குதிப்பான் என்று எதிர்பார்த்தாள். அவனோ முகத்தை முறைப்பாக வைத்துக்கொண்டு,

"ப்ச்.. இந்த எனக்கு டிசைன் புடிக்கல ப்ரியா..!!" என்றான் இறுக்கமாக. ப்ரியாவின் முகம் உடனே தொங்கிப் போனது.

"என்னடா.. இப்படி சொல்ற.. நல்லாத்தான இருக்குது..?? எவ்ளோ அலைஞ்சு திரிஞ்சு வாங்குனேன் தெரியுமா..??"

"அதுக்காக பிடிக்காததை பிடிச்சிருக்குன்னு பொய் சொல்ல சொல்றியா..??"

"சேச்சே.. நான் அப்படி சொல்லல..!! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு ரொம்ப நம்பிக்கையா வாங்கிட்டு வந்துட்டேன்.. இப்போ என்ன பண்றது..??"

"எனக்கு வேணாம்.. உன் தம்பிட்ட குடு..!!"

"ப்ளீஸ் அசோக்.. நான் உனக்காக ரொம்ப ஆசையா வாங்கிட்டு வந்தேண்டா..!!" ப்ரியா கெஞ்சலாக சொன்னாள்.

"ப்ச்.. வேணான்னு சொல்றேன்ல.. அத்தோட விடு..!!" அசோக் சீற, ப்ரியாவுக்கும் இப்போது கோவம்.

"ச்சே.. ஏண்டா இப்படிலாம் பண்ற..?? உனக்கு என்னவோ ஆயிடுச்சு.. நீ முன்ன மாதிரி இல்ல.. ரொம்ப மாறிட்ட..!!"

என்று அந்த வாட்சை தூக்கி ஆத்திரமாக பேக்கில் போட்டுக்கொண்டு, வெறுப்புடன் திரும்பி விறுவிறுவென நடந்தாள்.

அந்த மாதிரி.. ஒரு நேரம் உருகிக் கொள்வதும், மறுநேரம் முறைத்துக் கொள்வதுமாகவே அதற்கு அடுத்து வந்த இரண்டு வாரங்கள் கழிந்தன. அவர்களுக்கு இடையில் ஒரு இடைவெளி விழுந்திருப்பதை இருவராலும் இப்போது தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த இடைவெளிக்கான காரணத்தை அசோக் மட்டுமே புரிந்து வைத்திருந்தான். ப்ரியாவுக்கு அசோக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான்.. அந்த சம்பவம் நடந்தது..!! இடைவெளி விழுந்து சற்று விலகி நின்றவர்களை.. எதிரும் புதிருமாக திருப்பிவிட்ட சம்பவம்..!!

ஐ.டி கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.. ஆன்சைட்டுக்கு அப்புறம் ஆர்வமாகவும், பரபரப்பாகவும் பேசிக்கொள்கிற இன்னொரு விஷயம்.. அப்ரைசல்..!! நாட்டுக்கு வருஷத்திற்கு ஒருமுறை வருகிற தீபாவளி மாதிரியான விஷயம்..!! வேலை பார்ப்பவர்கள் அனைவரும்.. ஒருவருடமாக என்ன செய்து கிழித்தார்கள் என்று.. அவரவர் மேனேஜர்களால் மதிப்பீடு செய்யப்படுவர்..!! அந்த மதிப்பீடு கம்பனியின் டாப் மேனேஜ்மன்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த மதிப்பீடை வைத்து எம்ப்ளாயிக்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களை முடிவு செய்வார்கள்.

அப்ரைசல் விஷயத்தில் ஊழியர்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்கப்படும் என்று மேனேஜ்மன்ட் உறுதி சொல்லும். ஆனால் அவர்கள் சொன்னதை அவர்களே மதிக்க மாட்டார்கள். மேனேஜர்கள் எடுப்பதுதான் இறுதி முடிவாக இருக்கும். அதேமாதிரி சம்பள உயர்வை பற்றிய விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று மேனேஜ்மன்ட் வேண்டுகோள் விடுக்கும். அதை எம்ப்ளாயிக்கள் மதிக்கமாட்டார்கள். யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு என்று, அன்று காபி பிரேக்கின் போதே பேசிக்கொள்வார்கள். சிலர் சந்தோஷமாக தோன்றுவார்கள்.. சிலர் வருத்தமாக காட்சியளிப்பார்கள்.. ஆனால் பலர் உள்ளே சந்தோஷத்தை வைத்துக்கொண்டு, வெளியே சோகமாக நடிப்பார்கள்..!!

ப்ரியா ஆன்சைட்டில் இருந்து திரும்பிய இரண்டாவது நாள், ரவிப்ரசாத் கம்பனியில் இருந்து ரிலீவ் ஆனான். டீமை லீட் செய்ய லீடர் இல்லாத சூழ்நிலையில், அசோக்கே அந்த வேலையை செய்து வந்தான். ப்ரியா இந்தியா வந்த இரண்டாவது வாரம், அப்ரைசல் ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் என்றால்.. எம்ப்ளாயிக்கள் அனைவருடைய மெயில் ஐடிக்கும், அவர்களுடைய சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களை தாங்கிய லெட்டர் ஒன்றை அனுப்புவார்கள்.. 'கான்பிடன்ஷியல்..!!' என்று காமடி வேறு செய்துகொண்டு..!!

அசோக் இந்தமுறை அந்த லெட்டருக்காக ஆவலுடன் காத்திருந்தான். தனக்கு டெக் லீட்-ஆக ப்ரமோஷன் வரப்போகிறது என்று கனவில் இருந்தான். லெட்டர் வருவதற்கு முந்தய நாள் இரவே தன் மொபைல் மூலம் வெப்மெயில் செக் செய்து லெட்டர் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தான். ஆனால் லெட்டர் அடுத்த நாள் காலைதான் மெயிலில் வந்து விழுந்தது. அவசரமும் ஆர்வமுமாய் மெயில் ஓப்பன் செய்து பார்த்தவன் நொந்து போனான்.

அந்த வருடத்தில் அவனுடைய பெர்ஃபார்மன்ஸ் 'எக்சலன்ட்' என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இன்க்ரீமன்ட்டும் கிட்டத்தட்ட அவன் எதிர்பார்த்த அளவே வந்திருந்தது. அதிலெல்லாம் அவனுக்கு திருப்திதான். ஆனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வருடத்திற்கு அவன் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் மட்டுமே..!! அசோக்கிற்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியவில்லை. மூன்று மாதங்கள் முன்பு, அப்ரைசல் மீட்டிங்கின் போது பாலகணேஷ் மிக நம்பிக்கையாக சொன்னாரே.. 'டெக் லீட் ஆக எல்லா குவாலிபிகேஷனும் உனக்கு இருக்கு அசோக்..' என்று.!! அப்புறம் ஏன் கிடைக்கவில்லை..??

அன்று ஆபீசுக்குள் அவன் வெறுப்பான மனநிலையுடன் நுழைந்தபோது, ப்ரியா உற்சாகமே உருவாக எதிரே ஓடி வந்தாள்..!!

"ஹேய்.. அசோக்.. யு நோ வாட்.. ஐ காட் ப்ரோமோஷன்..!! இன்னைல இருந்து அம்மா டெக் லீட்.. தெரியுமா..??" ப்ரியாவின் சந்தோசம் அசோக்கின் எரிச்சலை மேலும் அதிகரிக்கவே செய்தது..!!

"வழியை விடு ப்ரியா..!!"

என்று எதிரில் நின்ற ப்ரியாவின் புஜத்தை பற்றி தள்ளி, கோபமாக அவளை விலக்கினான். விடுவிடுவென தனது இருக்கைக்கு நடந்து சென்றான். அவனுடைய ஆத்திரத்தின் அர்த்தம் புரியாமல் ப்ரியா திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அசோக் சிஸ்டத்தை ஆன் செய்ததுமே, கம்யூனிக்கேட்டர் திறந்து பாலகணேஷிற்கு பிங் செய்தான். அவரை சந்திக்க விரும்புவதாகவும், தகுந்த நேரத்தை கூறுமாறும் கேட்டுக் கொண்டான். அவரும் 'இப்போதே ஃப்ரீதான்.. வா..' என்றார். அசோக் சேரில் இருந்து எழுந்தான். 'என்னடா ஆச்சு.. உன் லெட்டர் பாத்தியா.. உனக்கும் ப்ரோமோஷன் கொடுத்திருக்காங்கள்ல..??' என்று கேட்டவாறு எதிரே வந்த ப்ரியாவுக்கு பதில் சொல்லாமல், மீண்டும் அவளை விலக்கி தள்ளினான்.

பாலகணேஷின் அறைக்குள் நுழைந்தான். அப்ரைசல் லெட்டரில் அசோக்கிற்கு திருப்தி இல்லை என்பதை அவர் எளிதாக கணித்து வைத்திருந்தார். ஆனால் அப்பாவியாக கேட்டார்.

"சொல்லு அசோக்.. என்ன விஷயம்..??"

"அப்ரைசல்ல எனக்கு சாடிஸ்பாக்ஷன் இல்ல பாலா..!!"

"ஏன்.. என்னாச்சு.. இந்த தடவை எல்லாருக்குமே நல்ல ரேட்டிங், இன்க்ரீமன்ட்லாம் கொடுத்திருக்கோமே..??"

"அதுலாம் ஓகேதான்..!! ஆனா நீங்க சொன்ன மாதிரி எனக்கு ப்ரோமோஷன் வரலையே..!!"

"வெயிட் வெயிட்..!! நான் எப்போ உனக்கு ப்ரோமோஷன் தர போறதா சொன்னேன்..??"

"என்ன பாலா இப்படி சொல்றீங்க..?? அப்ரைசல் மீட்டிங் அப்போ சொன்னீங்களே..??"
"என்ன சொன்னேன்..??"

"டெக் லீட் ஆக எல்லா குவாலிபிகேஷனும் உனக்கு இருக்கு'ன்னு..!!"

"டெக் லீட் ஆக தகுதி இருக்குன்னுதான சொன்னேன்.. தரப்போறேன்னா சொன்னேன்..??"

பால கணேஷின் பதிலில் அசோக் ஆடிப்போனான். பேச்சிழந்து போனவனாய் அவருடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். இப்போது பால கணேஷ் அவனை கூல் செய்யும் விதமாக ஆரம்பித்தார்.

"ஸீ அசோக்.. உன் வருத்தம் எனக்கு புரியுது..!! உனக்கு எல்லா தகுதியும் இருக்கு.. நான் இல்லைன்னு சொல்லல..!! ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ கோவப்படுறது நியாயந்தான்.. ஆனா ப்ரோமோஷன் கொடுக்குறதுல மேனேஜ்மன்ட்டுக்கு இருக்குற சில லிமிட்டேஷனையும் நீ புரிஞ்சுக்கணும்..!!"
"என்ன லிமிட்டேஷன்..??"

"ஆறு பேர் இருக்குற டீம்ல ரெண்டு பேருக்கு மேல எப்படி ப்ரோமோஷன் கொடுக்குறது.. நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு..!! கவிதாவை சாப்ட்வேர் இஞ்சினியர்ல இருந்து சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியரா ப்ரொமோட் பண்ணிருக்கோம்.. ஒரு கோட்டா காலி..!! இன்னொன்னு டெக் லீட் பொசிஷன்.. ஆக்சுவலா உன்னைத்தான் ப்ரொமோட் பண்ணிருக்கணும்.. ஆனா என்ன பண்றது.. கடைசி நேரத்துல ப்ரியாவோட பெர்ஃபார்மன்ஸ் வாஸ் மார்வெலஸ்..!! அவ டிசைன் பண்ணின அந்த காம்பனன்ட்.. க்ளயன்ட்கிட்ட இருந்து அவளுக்கு கெடைச்ச பாராட்டு.. இதெல்லாம் பாத்து மேனேஜ்மன்ட் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க.. ஸோ.. ப்ரோமோஷன் அவளுக்கு போய்டுச்சு..!!"

"அப்போ.. இத்தனை நாளா நான் டீம்க்காக உழைச்சதுக்குலாம் எந்த யூஸுமே இல்லையா..??"

"ஹே.. கமான்..!! எதுவும் இங்க வேஸ்டா போகப் போறது இல்ல.. எம்ப்ளாயிஸோட உழைப்பை மேனேஜ்மன்ட் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்குது.. ஆனா சில நேரங்கள்ல இந்த மாதிரி ஆயிடும்.. உடனே அந்த உழைப்புக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்க முடியாத மாதிரி ஆயிடும்..!! உன்னோட திறமையை நிரூபிக்க கம்பெனி உனக்கு டைம் கொடுத்தது இல்லையா.. அது மாதிரி உனக்கு ரெகக்னைஸேஷன் கொடுக்குறதுக்கும் நீ சில நேரங்கள்ல கம்பெனிக்கு டைம் கொடுக்கணும்..!! என்ன நான் சொல்றது புரியுதா..?? இந்த வருஷம் இல்லன்னா அடுத்த வருஷம்..!!"

அசோக் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் தலையை குனிந்தவாறு அமைதியாக இருந்தான். அவனுடைய மூளைக்குள் பலவித குழப்பமான, விவகாரமான எண்ணங்கள். தான் அதிகம் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்கவில்லை. அந்த உயர்வு ப்ரியாவை தேடி சென்றிருந்தது. அப்படி செல்வதற்கு காரணமாய் இவர்கள் சொல்கிற அவளுடைய பெர்ஃபார்மன்ஸ்.. இவனுடைய உழைப்பால் வந்தது..!! என்ன கொடுமை இது என்று அவனுக்கு தோன்றியது..!! மூளையில் ஒருவித வலி..!! அவனுக்கு ப்ரியா மீதிருந்த ஒரு இனம்புரியாத கோபம், இப்போது உச்சக்கட்டத்தை எட்டியது..!! தன்னுடைய உள்ளக்கொதிப்பை அடக்க முடியாமல் பாலகனேஷிடம் சொன்னான்.

"அந்த காம்பனன்ட் டிசைன் பண்ணினது.. ப்ரியா இல்ல பாலா.. நான்..!!" அவன் அவ்வாறு சொன்னதும் பாலகணேஷ் இப்போது நெற்றியை சுருக்கினார்.

"வாட்..??? நெஜமாவா சொல்ற..??"

"ஆமாம் பாலா..!!"

"ஹ்ம்ம்.. இங்க பாரு அசோக்.. டீமுக்குள்ள இப்படி ஒருத்தர் வேலைக்கு இன்னொருத்தர் ஹெல்ப் பண்றது சகஜந்தான்.. ஆனா.." அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அசோக் இடையில் புகுந்து பேசினான்.

"ஹெல்ப்லாம் இல்ல பாலா.. டோட்டலா நான்தான் ரீ டிசைன் பண்ணினேன்..!! இட்ஸ் என்டைர்லி மை வொர்க்..!!"

"ஓஹோ..??"

அப்புறம் பாலா சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். இப்படி ஒரு பிரச்னையை அசோக் கொண்டு வருவான் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசித்தார். ஒரு கால் நிமிடந்தான்..!! அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தார்.

"ஸீ அசோக்.. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்..!! ஆனா.. மேனேஜ்மன்ட்டோட வ்யூல அது ப்ரியாவோட வொர்க்காத்தான் தெரியும்.. ஏன்னா.. 'த ஓனர்ஷிப் ஆஃப் தேட் காம்பனன்ட் வாஸ் கிவ்வன் டூ ப்ரியா ஒன்லி.. ஷீ இஸ் த ஒன் அக்கவுண்டபில் ஃபார் தேட் வொர்க்..!!' இப்போ அந்த காம்பனன்ட்டை எல்லாரும் பாராட்டுனதும் அதுக்கான ரெகக்னைஸேஷன்லாம் அவளுக்கு போறதால உனக்கு அது பெருசா தெரியுது.. ஒருவேளை எல்லாரும் அந்த காம்பனன்ட்டை பேட் டிசைன்னு சொல்லி திட்டிருந்தா..?? கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திட்டும் அவளுக்குத்தான் போய் சேர்ந்திருக்கும்.. உனக்கு வந்திருக்காது..!! புரியுதா..??" பாலா அழகாக அந்த நிலைமையை சமாளித்துவிட,

"பு..புரியுது பாலா.. ஆனா.." அசோக்கிடம் இப்போது ஒரு தடுமாற்றம்.

"இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுதான நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணின..??"

"அ..அது.."

"ஸே.. யெஸ் ஆர் நோ..!!"

"யெஸ்..!!"

"அப்புறம் என்ன..?? இப்போ வந்து நீதான் அதை டிசைன் பண்ணினேன்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்ல அசோக்..!! மேனேஜ்மன்ட்டை பொறுத்தவரை அக்கவுண்டபிலிட்டிதான் முக்கியம்.. அந்த வேலைக்கு யார் அக்கவுண்டபிலோ அவங்களுக்குதான் பாராட்டோ பனிஷ்மன்ட்டோ போய் சேரும்..!! ஸோ.. இந்த விஷயத்துல நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது அசோக்.. ஐ ஆ'ம் ஸாரி..!!"

பாலகணேஷ் எதுவும் செய்யமுடியாதென்று கையை விரித்து விட்டார். அசோக் எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியை பார்த்திருந்த பாலா, அப்புறம் அவனை சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்
.
"ப்ளீஸ் அசோக்.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த ஃபாக்ட்.. கிவ் அஸ் ஸம் டைம்..!! இந்த வருஷம் விட்டுடு.. அடுத்த வருஷம் கண்டிப்பா உன்னோட ப்ரோமொஷனுக்கு நான் கேரண்டி..!!"

அவர் அவ்வாறு நம்பிக்கையாக சொல்ல, அசோக் இப்போது ஒருமாதிரி விரக்தியாக புன்னகைத்தான். 'அடுத்த வருஷமா..?? அதுக்கு இன்னும் முன்னூத்து அருவத்தஞ்சு நாள் இருக்கு..!! அதுக்குள்ளே நீ எந்த கம்பனில இருக்கியோ.. நான் எந்த கம்பனில இருக்கேனோ..?? இதுல நீ கேரண்டி வேற தர்றியா.. கேனப்பயலே..??' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

"இட்ஸ் ஓகே பாலா..!! ஒரு வருஷந்தான..? நான் வெயிட் பண்ணுறேன்.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல..!! ஆனா.. இனிமே பிரச்னை எல்லாம் உங்களுக்குத்தான்..!!" என்றான்.

அசோக் அவ்வாறு பொடி வைத்து பேச, பாலகணேஷ் சற்றே துணுக்குற்றார். நெற்றியை சுருக்கியவாறு கேட்டார்.

"எ..என்ன சொல்ற நீ..??"

"ஆமாம் பாலா..!! இந்த பொசிஷனுக்கு தகுதியான ஆள் நான்.. ஆனா நீங்க என்னை விட்டுட்டு.. தகுதியே இல்லாத ஒருத்தியை லீட் ஆக்கிருக்கீங்க..!! அவ இனிமே உங்களுக்கு தரப்போற தலைவலியை தாங்கிக்கவும்.. ரெடியா இருங்க..!!"

இறுக்கமான குரலில் சொன்ன அசோக், சேரை விட்டு எழுந்து கொண்டான். 'ஹேய்.. அசோக்..' என்று பாலகணேஷ் அழைத்தது காதிலே விழாதமாதிரி நடந்து சென்று, அவருடைய அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த அசோக், நொந்து போன மனதுடன் தன்னுடைய இருக்கையை நோக்கி நடை போட.. தன்னுடைய ட்ராவில் இருந்த நோட், புக்ஸ் எல்லாம் அள்ளிக்கொண்டு ப்ரியா எதிரே வந்தாள்..!! அசோக்கை பார்த்ததும் அவளுடைய உற்சாகம் இன்னும் குறையாதவளாகவே சொன்னாள்..!!

"அசோக்.. எனக்கு செபரேட் கேபின் அல்லாட் பண்ணிருக்காங்க.. ரவியோட ரூமை எடுத்துக்க சொல்லிருக்காங்க..!!" முகமெல்லாம் மலர்ச்சியாய் அவள் சொல்ல, அசோக் விரக்தியாக ஒரு புன்னகையை வீசினான்.

"குட்.. வெரி குட்..!!" என்றான்.

"அதுசரி.. உன் ப்ரோமோஷன் என்ன ஆச்சு..??"

"ஹ்ம்ம்.. ப்ரோமோஷனா..?? ப்ரோமோஷன்லாம் புட்டுக்கிச்சு..!!" அசோக் கேலியான குரலில் சொல்லவும், ப்ரியாவின் முகத்தில் ஒரு உண்மையான கவலை தெரிந்தது.

"ஓ..!! பாலாட்ட பேசுனியா.. அவர் என்ன சொன்னாரு..??"

"அவர் என்ன சொல்வாரு..?? 'அல்வா கிண்டி ரெடியா இருக்கு தம்பி.. நீயே சாப்பிட்டுக்குறியா.. இல்ல.. நானே ஊட்டிவிடவா'ன்னு கேட்டாரு..!! நானே சாப்பிட்டுக்குறேன் பாஸ்னு சொல்லிட்டு வந்துட்டேன்..!!"

"ஹேய்.. என்னடா.. ஒருமாதிரி பேசுற..??"

"வேற எப்படி பேச சொல்ற..??"

"சரி விடு.. உன் கஷ்டம் எனக்கு புரியுது..!! பட்.. எனக்கு இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.. நாம அப்புறம் இதைப்பத்தி டீட்டெயிலா பேசலாம்..!! சரியா..??"

சொல்லிவிட்டு ப்ரியா அவளுக்காக ஒதுக்கப்பட்ட கேபின் நோக்கி நகர்ந்தாள். அசோக் அவனுடைய இருக்கையில் வந்து வெறுப்பாய் அமர்ந்து கொண்டான்.

நிஜமாகவே ப்ரியாவுக்கு அன்று நிறைய வேலைகள் இருந்தன. புது அறையை ஒழுங்குபடுத்துவது.. வந்து சேர்ந்திருந்த வாழ்த்து ஈமெயிலுகளுக்கு பதில் அனுப்புவது.. புதிதாக சேர்ந்திருந்த ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் பற்றி அறிந்து கொள்வது.. அவர்களுடைய கம்பனிக்கு சொந்தமான ஊர்ப்பட்ட இன்ட்ராநெட் அப்ளிகேஷன்களில்.. டீம் லீட்க்கான பெர்மிஷன் ரெக்வஸ்ட் செய்வது..!! மதியம் டீமோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட அவள் செல்லவில்லை. மூன்று மணிக்கு மேலே தனியாக கேஃப்டீரியா சென்று மதிய உணவு சாப்பிட்டாள்.

மாலை நான்கு மணி வாக்கில்.. அவளுக்கு பாலகணேஷுடன் மீட்டிங் இருந்தது..!! ரவிப்ரசாத் செய்து கொண்டிருந்த வேலைகளை ப்ரியாவுக்கு கைமாற்றிவிடும் நோக்கத்துடன் அரேஞ்ச் செய்யப்பட்ட மீட்டிங்..!! மீட்டிங் முடிகிற தறுவாயில்தான்.. பாலகணேஷ் அசோக் பற்றிய விஷயத்தை ப்ரியாவின் காதில் போட்டு வைத்தார். 'உனக்கு ப்ரோமோஷன் கிடைத்ததில் அசோக் அதிருப்தியில் இருக்கிறான்.. அவனையும் அனுசரித்து நடந்துகொண்டு.. டீமை வழிநடத்தி செல்வது உனது கடமை..!!' என்பது மாதிரி..!!

அவர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால் அவர் சொன்ன சில விஷயங்கள், ப்ரியாவின் மனதை சுருக்கென்று தைத்து வலியை கொடுத்தன. அசோக் மீது பரபரவென ஒரு எரிச்சல். அவருடைய அறையில் இருந்து வெளிப்பட்டதுமே, நேராக நடந்து அசோக்கின் இடத்துக்கு சென்றாள். மானிட்டரை முறைத்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை, 'டொக்.. டொக்..' என்று டேபிளை தட்டி திசை திருப்பினாள். அசோக் திரும்பி பார்த்து,

"என்ன..??" என்று கேட்கவும்,

"உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. வெளில வா..!!" என்றாள் ப்ரியா இறுக்கமான குரலில்.

"என்ன விஷயம்..??"

"வெளில வான்னு சொல்றேன்ல.. வா..!!"

என்றுவிட்டு அவனுடைய பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்தாள். அவளுடைய பின்புறத்தையே சிறிது நேரம் முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் அவனுடைய சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு, எழுந்து அவளை பின்தொடர்ந்தான்.

அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து..

அசோக்கும் ப்ரியாவும், அவர்கள் ஆபீஸ் பில்டிங்கின் அடிவாரத்தில் இருக்கும் அந்த பார்க்கில், ஒரு ஸ்டோன் பென்ச்சில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இருவருமே எதுவும் பேசத் தோன்றாதவர்களாய் ஏங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். அசோக்தான் அங்கு நிலவிய அமைதியை குலைக்கும் வண்ணம் முதலில் ஆரம்பித்தான்.

"ம்ம்.. சொல்லு.. என்ன மேட்டர்..??"

"இங்க பாரு அசோக்.. உனக்கு ப்ரோமோஷன் கெடைக்கலைன்னு நீ வருத்ததுல இருக்கேன்னு எனக்கு தெரியும்.. ஆனா அதே விஷயத்துக்காக உன்னை விட ரெண்டு மடங்கு வருத்ததுல நான் இருக்கேன்..!! அது உனக்கு தெரியுமா..??"

"ஓஹோ..!!"

"அதேமாதிரி.. எனக்கு ப்ரோமோஷன் கெடைச்சதுக்காக நீ என்னை விட அதிகமா சந்தோஷப்படுவேன்னு நான் நெனச்சேன்..!! ஆனா.. நீ அப்படி இல்லைன்னு காட்டிட்ட..!!" ப்ரியா குமுறலாக சொல்ல,

"இப்போ என்னாச்சுன்னு இந்த டயலாக்லாம்..??" அசோக் கூலாக கேட்டான்.

"பாலா சொன்னாரு.. காலைல நீ அவர்கிட்ட பேசுனதுலாம்..!!"

"என்ன சொன்னாரு..??"

"இந்த ப்ரோமொஷனுக்கு கொஞ்சம் கூட நான் தகுதியானவளே இல்லைன்னு அவர்கிட்ட சொல்லிருக்குற.. அது உண்மையா..??"

"ஆமாம்.. உண்மைதான்..!! அதுக்கு என்ன இப்போ..??"

"நீ எப்படி அப்படி சொல்லலாம்..?? அசோக் இப்படி சொன்னான்னு அவர் சொல்றப்போ.. என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா..??"

"ஏன்.. நான் சொன்னதுல என்ன தப்பு..?? உனக்கு TL ஆக தகுதி இருக்குன்னு நீ நெனைக்கிறியா..??"

"தகுதி இருக்கா இல்லையான்றது இப்போ பிரச்னை இல்ல.. இந்த கம்பெனில வேலை பாக்குற எல்லாம் தகுதியோடதான் அந்த பொசிஷன்ல இருக்காங்களா..??"

"அப்புறம் என்ன..??"

"உனக்கு என் மேல ஏன் அவ்வளவு வெறுப்புன்னுதான் கேக்குறேன்..??"

"வெறுப்புலாம் ஒன்னும் இல்ல.. கொஞ்சம் கடுப்பு.. அவ்ளோதான்..!!"

"அதான் ஏன்..??"

"என்ன ஏன்..?? என்னோட ஆப்பர்ச்சூனிட்டிலாம் நீ தட்டிப் பறிச்சா.. எனக்கு கடுப்பா இருக்காதா..??"

"ச்ச.. என்ன பேசுற நீ..?? நான் எங்க உன்னோட ஆப்பர்ச்சூனிட்டியை தட்டிப்பறிச்சேன்..?? கம்பெனில இருந்து எனக்கு ஒரு வேலை கொடுத்தாங்க.. அதை முடிக்க முடியலைன்னு உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. அதுவரைதான் நான் பண்ணினது..!! அப்புறம் வந்த அந்த அவார்ட்.. ஆன்சைட்.. இந்த ப்ரோமோஷன்.. இதெல்லாம் நானா கேட்டேன்..?? அதெல்லாம் தானா வந்தது.. அதுக்கு நான் என்ன செய்வேன்..??"

"இங்க பாரு ப்ரியா.. அந்த அவார்ட் மேட்டரை விட்டுடு.. மத்த ரெண்டும்.. எனக்கு கெடைக்க வேண்டியது.. நான் எதிர்பார்த்திருந்தது..!! நீ திட்டம் போட்டு எல்லாம் செஞ்சுட்டேன்னு நான் சொல்லல..!! எல்லாம் தானா நடந்ததுதான்னு எனக்கும் புரியுது.. உன்னை அறியாமலே எனக்கு வர வேண்டியதை நீ பறிச்சுட்டேன்னுதான் சொல்றேன்..!!"

"தெரியாம நடந்ததுன்னு புரியுதுல.. அப்புறம் என்ன என் மேல கடுப்பு..??"

"ம்ம்ம்..?? ஒவ்வொரு விஷயத்துக்காகவும் நீ செஞ்ச ஆர்ப்பாட்டந்தான் அதுக்கு காரணம்..!! இதுக்கு நாம தகுதியானவ இல்லன்ற நெனைப்பு கொஞ்சமாவது உனக்கு இருந்துச்சா..?? ஒவ்வொன்னுக்கும் என்ன ஆட்டம் போட்ட நீ..?? அதெல்லாம் பாக்குறப்போ என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு கொஞ்சமாவது நீ நெனச்சு பாத்தியா..?? அதான் உன் மேல கொஞ்சம் கடுப்பு..!!"

அசோக்கின் மனம் ஒருவித ஏமாற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தான் காத்திருந்த விஷயங்கள் எல்லாம் கானல் நீராகி போய்விட்டதே என்று விரக்தியான மனநிலையின் இருந்தான். அதனால்தான் கவலை இல்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை ப்ரியாவின் மீது அவனால் வீச முடிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளை கேட்ட ப்ரியா துடித்துப் போனாள். இப்படி எல்லாம் இவன் பேசுவானா என்பது மாதிரி அசோக்கின் முகத்தையே அதிர்ச்சியாக பார்த்தாள். அப்புறம் அவள் பேச ஆரம்பித்தபோது அவளுடைய குரலிலும் ஒருவித வெறுப்பு கலந்திருந்தது.

"ச்சே..!! நீ இந்த அளவுக்கு என்னை பத்தி கேவலமா நெனைப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல அசோக்..!! அதெல்லாம் தகுதியே இல்லாம.. தானா என்னை தேடி வந்ததா இருக்கலாம்.. ஆனா அதெல்லாம் எனக்கு கெடைச்சப்போ.. எனக்கு ஒரு சந்தோஷம் கெடைச்சது நெஜம்..!! அந்த சந்தோஷத்தை மறைச்சு வைக்காம வெளிப்படுத்தினது நான் செஞ்ச தப்பா..?? என்னோட சந்தோஷம் உனக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனச்சுத்தான அதெல்லாம் செஞ்சேன்..?? உனக்கு அது கஷ்டமா இருக்குன்னு ஃப்ராங்கா எங்கிட்ட சொல்லிருந்தா.. நான் அதெல்லாம் செஞ்சிருக்கவே மாட்டேனே..??"

"ஓ.. பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறியா..??"

"நான் என்ன பண்ணிட்டேன்.. நீ இவ்வளவு கேவலமா பேசுற அளவுக்கு.. நான் என்ன தப்பு பண்ணிட்டேன்..??"

"அப்போ.. நான் மட்டும் என்ன தப்பு பண்ணிட்டேன்..??"

"நீ அவர்கிட்ட போய் அப்படி சொன்னது தப்பு..!!"

"இல்ல.. நான் அப்படி சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! உனக்கு டெக்லீடா இருக்க எந்த தகுதியும் இல்ல.. இதனால நீயும் கஷ்டப்பட்டு, கம்பனியையும் கஷ்டப் படுத்தப்போற..!! பேசாம அவங்ககிட்டயே போய்.. தெரியாத்தனமா இந்த ப்ரோமோஷன் எனக்கு கொடுத்துட்டீங்க.. நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லிடு..!! டெக்கு லீடாம் டெக்கு லீட்..!! ஏதாவது மக்கு லீட்னு போஸ்ட் இருந்தா.. அதை வாங்கி வச்சுக்கோ.. பொருத்தமா இருக்கும்..!!"

அசோக் உதிர்த்த வார்த்தைகள் ப்ரியாவுக்கு ஆத்திரத்தை கிளப்பி விட்டன. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அசோக்கையே முறைத்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அப்புறம் இறுக்கமான குரலில் ஆரம்பித்தாள்.

"ஓகே அசோக்..!! என்னை பத்தி நீ எவ்வளவு மட்டமான அபிப்ராயம் வச்சிருக்கேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. எதுக்குமே உதவாத ஸ்டுபிட்னு என்னை நெனச்சுட்டல..?? நானும் ஒரு இஞ்சினியர்.. ஆறு வருஷமா ஒரு கம்பனில கோட் அடிச்சிருக்கேன்..!! ப்ரூவ் பண்றேன்.. நான் ஸ்டுபிட் இல்லன்னு உனக்கு ப்ரூவ் பண்றேன்.. இந்த டெக்லீட் போஸ்டுக்கு நான் டிசர்வ்ட்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்றேன்..!!" ப்ரியா சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க,

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. பாக்கலாம்..!!" அசோக் எங்கேயோ பார்த்தவாறு விட்டேத்தியாக சொன்னான்.

அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் நிலவிய அந்த இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருந்தார்கள். எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அசோக் பெஞ்சில் இருந்து மெல்ல எழுந்தான்.

"ஓகே ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்புறேன்..!!"

என்றவாறு ப்ரியாவின் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தான். அவனுடைய முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, திடீரென மனதில் ஏதோ தோன்றியவளாய் அவனை அழைத்தாள்.

"அசோக்.. ஒரு நிமிஷம்..!!"

"என்ன..??" அசோக் திரும்பிப் பார்த்து கேட்டான்.

"அந்த லாகின் பேஜ் இஷ்யூ.. நீதான பாத்துட்டு இருக்குற..??"

"ஆமாம்..!!" அசோக் குழப்பமாகவே சொன்னான்.

"உன் சீட்டுக்கு போனதும்.. அந்த இஷ்யூவை நீ எப்போ முடிப்பேன்னு.. எனக்கு ஒரு எஸ்டிமேட் அனுப்பு..!! சரியா..??"

ப்ரியா ஒருமாதிரி கண்களை இடுக்கி அவனை பார்த்தவாறு, ஒருவித அதிகாரத் தொனியுடன் அவ்வாறு சொன்னாள். அவள் டெக்லீட் ஆனதும் முதன் முறையாக போடுகிற உத்தரவு..!! அதுவும் அவள் கொள்ளை கொள்ளையாய் அன்பு வைத்திருக்கிறவனை பார்த்து ஆணவத்துடன் தொடுத்த உத்தரவு..!!

அவள் அவ்வாறு சொன்னதும் அசோக் அப்படியே அதிசயித்துப் போனான். ப்ரியாவை ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தான். என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றம் ப்ரியாவுக்கு புன்னகையை வரவழைத்தது. அவளையும் மீறி அந்த புன்னகை அவளது உதட்டின் வழியே வெளிக்கசிந்தது. 'நான் இப்போது உனக்கு பாஸாக்கும்..' என்பது மாதிரி திமிராக புன்னகைத்தாள்..!!

அசோக்கின் தடுமாற்றம் ஒரு சில வினாடிகளுக்குத்தான்..!! அவனும் உடனே அவனது நிலைமையை சமாளித்துக்கொண்டு, ப்ரியாவை நோக்கி பதிலுக்கு ஒரு புன்னகையை வீசினான். அப்புறம் மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான். சற்றே குனிந்து, தனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே எடுத்து சென்று புன்னகை மாறாத முகத்துடனே சொன்னான்.



"எஸ்டிமேட்தான..?? அதுக்கெதுக்கு சீட்டுக்கு போகணும்..?? இங்கயே சொல்றேன்..!!"

"இ..இங்கயா..??" அசோக்கின் புன்னகை ப்ரியாவை சற்றே மிரள செய்திருந்தது.

"ஹ்ம்ம்..!! சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.. இன்னும் பத்து நாள் ஆகும்..!!"

"பத்து நாளா..?? அவ்ளோ நாள் எதுக்கு..??" ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.

"அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டடான இஷ்யூ.. ஸோ.. பத்து நாள் ஆகும்..!! இல்ல.. உங்களுக்கு ஏதாவது ஈசியான வழி தெரியும்னா.. கொஞ்சம் அனலைஸ் பண்ணி சொல்லுங்க.. எஸ்டிமேஷனை மாத்திக்கலாம்..!! என்ன சொல்றீங்க..??"

அசோக் அந்த மாதிரி கிடுக்கிப்பிடி போடவும் இப்போது ப்ரியா தடுமாறினாள். அவனையே சில வினாடிகள் மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் தனது தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

"ஓகே.. இட்ஸ் ஓகே..!! எனக்கு இப்போ அதுக்குலாம் டைம் இல்ல.. உன்னால எப்போ முடிக்க முடியுதோ.. அப்போவே முடி..!!"

என்று அசோக்கின் வழிக்கு வந்தாள். இப்போது அசோக்கின் புன்னகை மேலும் பெரிதானது. 'அது.. அந்த பயம் இருக்கணும்..!!' என்று வாய்விட்டு சொல்லவில்லை அவன். ஆனால் மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அந்த இடத்தை விட்டு கிளம்பினான். அவன் ஸ்டைலாக போவதையே ப்ரியா திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். 'எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு ப்ரியா..!!' என்று அசோக் எப்போதோ சொன்னது ப்ரியாவுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!!

2 comments:

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...