Social Icons

நெஞ்சோடு கலந்திடு - 6







அத்தியாயம் 22

இருட்டுப் புதருக்குள் இரை தேடி ஊர்ந்து செல்லும் பாம்பை போல, இரும்புத் தண்டவாளத்தின் மீது பாண்டியன் எக்ஸ்பிரஸ் பாய்ந்து கொண்டிருந்தது. விருத்தாச்சாலத்தை தாண்டி, சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. கம்பார்ட்மன்ட்டுக்குள் நிறைய விளக்குகள் இப்போது அணைக்கப்பட்டிருக்க, ஒரு மந்தமான வெளிச்சம் மட்டுமே மிச்சம் இருந்தது. பிரயாணிகள் அனைவரும் தூங்கிப் போயிருக்க, ரயிலின் 'தடக் தடக்.. தடக் தடக்..' ஒலியும், 'பாம்...' என்ற அவ்வப்போதைய அலறலும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.

அசோக்கிற்கு அப்போதுதான் விழிப்பு வந்தது. சுருங்கிப்போன முகமும், கண்களுமாக எழுந்தான். அவன் படுத்திருந்த அப்பர் பர்த்துக்கு பக்கவாட்டில் இருந்த பார்த்தில், திவ்யா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். கீழே இருந்த பர்த்துகளில் சித்ராவும், கார்த்திக்கும் ஆளுக்கொரு பக்கமாய் நீட்டி நிமிர்ந்திருந்தார்கள்.

அசோக் கீழே இறங்கினான். தட்டுத்தடுமாறி டாய்லட் நோக்கி நடந்து சென்றான். அவனுடைய தடுமாற்றத்திற்கு காரணங்கள் இரண்டு..!! ஒன்று தூக்க கலக்கம்..!! மற்றொன்று.. நேற்று இரவு ஸ்டேஷனை அடைந்ததும், 'புக் ஷாப் சென்று விகடன் வாங்கி வருகிறேன்..' என்று சொல்லி எஸ்கேப் ஆகி, ஒயின்ஷாப் சென்று விஸ்கியை அவசரமாய் உள்ளே விட்டுக் கொண்டதுதான்..!! திரும்பி வந்தபோது தம்பியின் கையில் விகடனை தேடி ஏமாந்த சித்ரா..

"எங்கடா..? கைல ஒன்னையும் காணோம்..?" என்று கேட்க,

"அடிச்சுட்டேன்.." என்று உளறினான் அசோக்.

"என்னது..?? அடிச்சுட்டியா..??" சித்ரா குழம்ப,

"ப்ச்.. காது கேட்காதா உனக்கு..? படிச்சுட்டேன்னு சொன்னேன்.. பழைய விகடனை வச்சிருக்காய்ங்க..!!" என்று சலிப்பாக சமாளித்த அசோக், அப்பர் பர்த்தில் ஏறி அப்பாவி மாதிரி படுத்துக் கொண்டான்.

இப்போது.. டாய்லட் சென்று இயற்கை உந்துதலை நிவர்த்தி செய்து கொண்டு வெளியே வந்தான். 'அவசரமாய் புகை வேண்டும்' என்று அவனுடைய நுரையீரல் ஆர்டர் போட்டது. ரயிலில் புகை பிடிப்பது தவறு என்று புத்திக்கு உறைத்தாலும், மனது கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள்நடமாட்டமே இல்லை. அனைவரும் தூங்கிப் போயிருந்தனர். இப்படி ஓரமாய் நின்று தம்மடித்து விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான்.

சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்தான். ஒரே ஒரு சிகரெட்தான் மிச்சமிருந்தது. உதட்டில் பொருத்திக்கொண்டு தீக்குச்சி உரசினான். கதவு திறந்திருக்க காற்று ஜிலுஜிலுவென உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு, நாலைந்து குச்சிகளை விரயம் செய்த பின்னரே, சிகரெட்டின் தலையில் கொள்ளி வைக்க முடிந்தது. கஷ்டப்பட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டதும்தான் காமடியான அந்த காரியத்தை செய்தான்.

தூக்க கலக்கமும், விஸ்கி போதையும் அவனுடைய மூளையை சற்றே குழப்பி விட்டிருக்க.. சிகரெட் பற்ற வைத்ததும், தீக்குச்சியை வெளியே எறிவதற்கு பதிலாக.. உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியே எறிந்துவிட்டான்..!!!!

என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு அசோக் சுதாரிப்பதற்கே சில வினாடிகள் பிடித்தன. நடந்தது புரிந்ததும் 'ச்சே..!!' என்று எரிச்சலானான். கையில் புகை விட்டுக்கொண்டிருந்த தீக்குச்சியையே.. 'வடை போச்சே..!!!' என்பது போல பரிதாபமாக பார்த்தான்..!!

'இனி காலையில் ரூமுக்கு சென்ற பிறகுதான் தம்..!! ச்சே..!!' நொந்து போனவனாய் உள்ளே நடக்க முயன்றவன், அவனுக்கு எதிரே மிக அருகே திவ்யா நின்றிருந்ததை பார்த்ததும், அப்படியே நின்றான்..!!


"தம்மடிச்சாச்சா..?? ட்ரெயின்ல போறப்போ கூட வாயை பொத்திக்கிட்டு இருக்க முடியாதா உன்னால..??" திவ்யா கோவமாக கேட்க,

"ப்ச்.. அடிக்கலைடி..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.

"அப்புறம் கைல மேட்ச் பாக்ஸ் வச்சுக்கிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?"

"தம்மடிக்கலாம்னுதான் வந்தேன்.. ஒன்னே ஒண்ணுதான் இருந்தது.. எடுத்து பத்த வச்சேன்.."

"ம்ம்.. அப்புறம்..?"

"பத்த வச்சுட்டு குச்சியை தூக்கி போடுறதுக்கு பதிலா.. சிகரெட்டை தூக்கி வெளில போட்டுட்டேன்..!!" அசோக் தலையை சொறிந்தவாறே சொல்ல ,

"ஹ்ஹஹாஹ்ஹஹா...!! ஹ்ஹஹாஹ்ஹஹா...!!"

திவ்யாவுக்கு குபீரென சிரிப்பு கிளம்பியது. ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை அசோக்கை நோக்கி நீட்டி ஏளனம் செய்துகொண்டு, குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

"ஹ்ஹஹாஹ்ஹஹா...!! ஐயோ... ப்பா.. முடியலைடா அசோக்.. ஏண்டா இப்படி காமடி பண்ற..?? ஹ்ஹஹாஹ்ஹஹா...!!"

"ஏய்.. சிரிக்காதடி..!! நானே கடுப்புல இருக்கேன்..!!"

எரிச்சலாக சொன்னவன், அப்படியே பின்பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டான். திவ்யாவின் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. இதழ்களில் புன்னகையுடனே அசோக்கை ஏறிட்டு பார்த்தாள். அவன் 'ப்ச்..!!' என்று சலிப்பும், முறைப்புமாய் பார்த்தான். இப்போது திவ்யாவும் அசோக்குக்கு நேர் எதிரே சாய்ந்து நின்று கொண்டாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், குறும்பான குரலில் அவனை அழைத்தாள்.

"டேய்.. கோவக்காரா..!!"

"கோவக்காரனா..? யாரு..??"

"ம்ம்ம்..?? நீதான்..!!"

"நானா..? நான் என்ன கோவப்பட்டேன்..??"

"நடிக்காத.. எனக்கு தெரியும்..!! என் மேல உனக்கு கோவம்..!!"

"ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!!"

"அப்புறம் ஏன் ரெண்டு நாளா உம்முன்னு இருக்குற..??"

"அப்படிலாம் ஒன்னும் இல்லையே.. நான் பேசிட்டுத்தான இருக்கேன்..?"

"பேசுற..!! ஆனா.. எப்போவும் போல இல்லை..!!"

அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றிருந்தான். சில வினாடிகள் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்த திவ்யா, நகர்ந்து சென்று அவனுக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டாள். அவனுடைய முகத்தை ஒரு கையால் நிமிர்த்தினாள். மெல்லிய குரலில்..

"ஸாரிடா.." என்றாள்.

"ஸாரியா..? எதுக்கு..?"

"அன்னைக்கு உன் பேச்சை மீறி நடந்துக்கிட்டேன்ல..?"

"ப்ச்.. பரவால்ல..!! அதனால என்ன..?"

"ஆனா.. எனக்கு கஷ்டமா இருக்கே.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு..!!"

"ஐயோ.. விடு திவ்யா.. அதெல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்..!!"

"ம்ம்ம்... என்னதான் இருந்தாலும் அது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா அசோக்..? அதான் நான் அப்படி நடந்துகிட்டேன்..!!"

"உயிரை விடுறவங்க இப்டிலாம் ஃபோன் பண்ணி ஸீன் போட்டுட்டு இருக்க மாட்டாங்க திவ்யா..!!"

"எனக்கு புரியுதுடா..!! ஆனா.. அவர் உண்மைலேயே அந்த மாதிரி ஒரு மென்டாலிட்டில இருக்குறதுக்கு ஒரு பர்சன்ட் சான்ஸ் இருந்தாகூட… அது தேவையில்லாத ரிஸ்க்தான..? சப்போஸ்.. அவர் முட்டாள்த்தனமா ஏதாவது பண்ணிருந்தா.. என்ன ஆகி இருக்கும்னு கொஞ்சம் நெனச்சு பாரு..!!"

"ம்ம்ம்.."

"அதில்லாம.. அவர் பெருசா என்ன கேட்டுட்டாரு..? ஜஸ்ட் ஒரு 'ஐ லவ் யூ' சொல்ல சொன்னாரு.. அவ்ளோதான..? அதான் பட்டுன்னு சொல்லிட்டேன்..!!"

'ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூ' என்று கேஷுவலாக திவ்யா கூறிய வார்த்தைகள், அசோக்கின் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. 'எவ்வளவு எளிதாக சொல்கிறாள் இவள்..? ஜஸ்ட் ஒரு ஐ லவ் யூவாம்..? மூன்றே மூன்று வார்த்தைகள்தானே என்று மிகவும் சீப்பாக நினைத்துவிட்டாள் போலிருக்கிறது..!! ஆனால்.. அந்த மூன்று வார்த்தைகளை.. தங்கள் உள்ளத்தில் இருப்பவர்களின் முகத்தை பார்த்து உச்சரிக்க முடியாமல்.. நெஞ்சுக்குள்ளேயே போட்டு மூடி வைத்து.. தினம் தினம் எத்தனை உயிர்கள் வேதனையில் வெந்து சாகின்றன என்பதை இவள் அறிந்திருக்க மாட்டாள்..!! நானும் அத்தகைய ஒரு பரிதாப ஜீவன்தானே..??'

"என்னடா.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற..?"

"ம்ம்ம்... எனக்கென்னவோ.. உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கத்தான் இந்த ட்ராமான்னு தோணுது..!!"

"ஹாஹா..!! அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதனால என்ன..?? நான் அவரைத்தான லவ் பண்றேன்..? அவர்கிட்ட ஐ லவ் யூ சொன்னதுல என்ன தப்பு..??"

"சொன்னதுல தப்பு இல்ல.. ஆனா.. அவரை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அவசரப்பட்டு சொல்லிட்டியோன்னு.. எனக்கு ஒரு சின்ன உறுத்தல்..!!"

"என்ன அசோக் நீ.. இன்னும் அவரைப்பத்தி என்ன தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு..?"

"ஆரம்பத்துலயும் அப்டித்தான் நெனச்சிருந்தோம்..? அப்புறம்தான் திடீர்னு அந்த.."

"ட்ரிங்க்ஸ் மேட்டர் சொல்றியா..?"

"ம்ம்.."

"நேத்தே அதைப்பத்தி அவர்கிட்ட பேசிட்டேன் அசோக்..!! பிசினஸ் சம்பந்தமா நெறைய பேரை மீட் பண்றதால.. அவங்ககிட்ட இருந்து இந்தப்பழக்கம் வந்துடுச்சுன்னு புலம்பினார்..!! மேரேஜுக்கு அப்புறம் சுத்தமா ஸ்டாப் பண்ணிடுறதா ப்ராமிஸ் பண்ணிருக்கார்..!!"

"ஓஹோ..?? நீ என்ன சொன்ன..??"

"நான் என்ன சொல்வேன்..?? எனக்கு அது போதும்னு சொல்லிட்டேன்..!! கரெக்ட்தான..??" திவ்யா அப்பாவியாய் கேட்க,

"ஹ்ஹா.. என்ன கேட்ட..?" அசோக் சற்றே ஏளனமாக கேட்டான்.

"நான் அவர்கிட்ட அப்படி சொன்னது கரெக்ட்தானான்னு கேட்டேன்..??"

"ம்ம்ம்.. இனிமே நீ அந்த மாதிரிலாம் எங்கிட்ட ஒப்பீனியன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை திவ்யா..!!"

"ஏன் அப்படி சொல்ற..?"

"ஆமாம்.. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.. இனிமே ஒப்பீனியன் கேட்க என்ன இருக்கு..??"

அசோக் சிரித்துக்கொண்டே சொல்ல, திவ்யாவின் முகம் பட்டென சுருங்கிப்போனது. சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தவள், பின்பு குரல் தழதழக்க கேட்டாள்.

"உ..உனக்கு இன்னும் என் மேல கோவம் போகலைல..?"

அசோக்கிற்கு இப்போது திவ்யாவை பார்க்க பாவமாக இருந்தது. குரலில் மென்மையை குழைத்துக்கொண்டு சொன்னான்.

"ஏய்.. ச்சீய்.. அப்படிலாம் இல்ல...!! எ..எனக்கு.. எனக்கு உன் மேல எப்போவும் கோவமே வராது திவ்யா..!!"

"அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..? எனக்கு என்ன ஆனாலும் பரவாலைன்ற மாதிரி..!!"

"லூசு.. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை..!!"

"அப்புறம்..??"

"அவரைப்பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் உன் காதலை சொல்ற மாதிரிதான நம்ம ப்ளான்..?? அதனாலதான நான் உனக்கு ஐடியாலாம் கொடுத்துட்டு இருந்தேன்..?? இப்போதான் நீ உன் காதலை அவர்கிட்ட சொல்லியாச்சே..?? இனிமே நான் உனக்கு தேவைப்பட மாட்டேன்னு சொல்ல வந்தேன்..!!"

"இப்படிலாம் பேசாதடா..!! நீ எனக்கு எப்போவும் வேணும் அசோக்..!! என் லைப் ஃபுல்லா.. என்னை கைட் பண்ண.. நீ எப்போவும் வேணும்..!!"

"ஹாஹா.. அது எப்படி முடியும் திவ்யா..? எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான..?"

"ஏன்.. அப்புறம் என்ன..?"

"அப்புறம்.. திவாகரை நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா.. எந்த விஷயமா இருந்தாலும் அவரை கேட்டுத்தான நீ முடிவு பண்ண வேண்டியதா இருக்கும்..?" அசோக் சொல்லி முடிக்கும் முன்பே,

"இல்லை.. நான் உன்னை கேட்டுத்தான் முடிவு பண்ணுவேன்..!!" திவ்யா பட்டென சொன்னாள். அவளுடைய பதிலில் அசோக் சற்றே திணறிப் போனான்.

"தி..திவ்யா.. நீ.."

"ஆமாம் அசோக்.. எனக்கு திவாகரை விட உன் மேலதான் நம்பிக்கை அதிகம்..!! நீ எது செஞ்சாலும் என் நல்லதுக்குத்தான் செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! நான் திவாகரை கல்யாணம் செய்துகிட்டாலும் சரி.. லைஃப்ல எந்த முக்கியமான முடிவு எடுக்குறதா இருந்தாலும்.. நான் உன்னை கேட்டுத்தான் எடுப்பேன்..!!"

அசோக் இப்போது அப்படியே நெகிழ்ந்து போனான். 'இவளுக்குத்தான் என் மீது எவ்வளவு நம்பிக்கை..? இந்த நம்பிக்கைதான் எவ்வளவு உன்னதமான விஷயம்..? இந்தமாதிரி ஒரு நம்பிக்கையுடனான நட்பு கிடைக்க நான் எவ்வாளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..? இவள் என் காதல் மனைவியாய் அமையாமல் போனால்தான் என்ன..? காலம் முழுவதும் இந்த நட்பு ஒன்றே போதுமே எனக்கு..?'

அசோக் இப்போது திவ்யாவை பார்த்து ஸ்னேஹமாக புன்னகைத்தான். தனது வலது கையால் அவளது தோளை சுற்றி வளைத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளுடைய கருவிழிகளை தனது கண்களால் கூர்மையாக பார்த்தவாறே கேட்டான்.

"என்னை அவ்வளவு பிடிக்குமா..?"

"ம்ம்ம்.."

"நான் அவ்வளவு முக்கியமா உனக்கு..?"

"ம்ம்ம்.."

"நான் சொன்னா அதை அப்படியே செய்வியா..?"

"செய்வேன்..!!"

"என்ன வேணாலும்..??"

"என்ன வேணாலும்..!!" திவ்யா உறுதி மிக்க குரலில் சொல்ல,

'என்னை கொஞ்சம் லவ் பண்ணேன்..' என சொல்லலாமா என்று அசோக்கிற்கு தோன்றியது. அப்புறம் பட்டென அதை மாற்றிக் கொண்டு,

"உன் அண்ணன் பாக்கெட்ல இருந்து ஒரு தம் சுட்டுட்டு வாயேன்.." என்றான் குறும்பாக.

"போடா.. லூசு..!!! சீரியஸா பேசிட்டு இருக்குறப்போ.. காமடி பண்ற..?"

"காமடி இல்ல திவ்யா.. இப்போதைக்கு அதுதான் என் இம்மீடியட் தேவை..!!"

"ஏன்.. காலைல வரை வெயிட் பண்ண முடியாதோ..?"

"ம்ஹூம்..!! லங்க்ஸ்லாம் கொலை பட்டினில கெடக்குடி.. ப்ளீஸ்..!!"

"ஐயோ.. அவன் ஷர்ட் பாக்கெட்ல வச்சிருப்பான் அசோக்.. எப்படி சுடுறது..? கஷ்டம்..!!"

"இல்ல.. ஷர்ட்டை கழட்டி தலைக்கு பக்கத்துல வச்சுட்டு.. பனியனோடதான் படுத்திருக்கான்.. நைஸா சுட்டுட்டு வந்துடு..!!"

"அதை நீயே போய் எடுத்துக்கலாம்ல..?"

"எடுத்துக்கலாம்.. ஆனா.. எடுக்குறப்போ உன் அண்ணன் எந்திரிச்சுட்டான்னா..? தம்மாதுண்டு தம்முக்காக அம்மாம் பெரிய ரிஸ்க் எடுக்கனுமான்னு பாக்குறேன்..?"

"அந்த தம்மாதுண்டு தம்முக்காகத்தான.. இப்படி நடுராத்திரில நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டு அலையுற..? பேச்சுக்கு மட்டும் கொறைச்சல் இல்ல..!! உனக்கு ரிஸ்க்னா.. அப்புறம் நான் மட்டும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்..??"

"என்ன திவ்யா இப்படி சொல்லிட்ட..? நீதான சுடுறதுல சூப்பர் ஸ்டார்..? ஏழு வயசா இருக்குறப்போவே.. வீட்டுல எதை எங்க ஒளிச்சு வச்சிருந்தாலும் நேக்கா தட்டிட்டு வந்துடுவியே..? ரிஸ்க் எடுக்குறதுலாம் உனக்கு ரஸ்க் சாப்புடுறது மாதிரிதான..?"

"போடா.. லூசு..!!!" திவ்யாவுடைய குரலில் கோவத்தை விட, பெருமிதமே எக்கச்சக்கமாய் கொப்பளித்தது.

"ப்ளீஸ் திவ்யா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.."

"ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. கெஞ்சாத..!! இரு.. எடுத்துட்டு வர்றேன்..!!"

"தேங்க்ஸ்டி..!!"

திவ்யா உள்ளே நடந்து சென்றாள். அசோக் அங்கேயே அமைதியாக காத்திருக்க, ஓரிரு நிமிடங்களிலேயே திவ்யா திரும்ப வந்தாள். தூரத்தில் வருகையிலேயே கட்டை விரலை உயர்த்தி காட்டி, வெற்றி என்பது போல புன்னகைத்தாள். அசோக்கை நெருங்கியவள், அண்ணனிடம் சுட்ட சிகரெட்டை நீட்டிக்கொண்டே..

"பார்த்து பத்த வையி.. இதையும் தூக்கி வெளில போட்டுடாத..!!"

"அப்போ ஏதோ தூக்க கலக்கம்.. போட்டுட்டேன்.. இப்போதான் தெளிவா இருக்கோம்ல..?"

"சரி சரி.. நீ தம்மடி.. நான் ஆளுங்க வராங்களான்னு பாத்துக்குறேன்..!!"

திவ்யா பாதையின் நடுவே சென்று நின்றுகொண்டு, தலையை இருபுறமும் திருப்பி திருப்பி பார்த்தவாறு காவல் காக்க, அசோக் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்..!!



அத்தியாயம் 23

அடுத்த வாரம் புதன் கிழமை..!! இரவு ஏழரை இருக்கும்..!! அசோக் அந்த பாருக்குள் நுழைந்தான். அவன் அவ்வப்போது செல்லும்.. அவனது ஆபீசுக்கு அருகாமையில் இருக்கும் அதே பார்..!! வழக்கம் போலவே உள்ளே மங்கலான வெளிச்சம்.. கூரையில் இருந்து வழிந்த மந்தமான நீல நிற வெளிச்சம்..!! வழக்கம் போலவே அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல் கூட்டம்..!! ஆனால்.. வழக்கத்துக்கு மாறாக இன்று ஸ்பீக்கர்களில் தமிழ்ப்பாடல் மிதமான வால்யூமில் கசிந்து கொண்டிருந்தது..!!

'கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே'

உள்ளே நுழைந்த அசோக், அமர்வதற்கு இடம் தேடி.. அந்த மங்கலான வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்வையை வீசிக்கொண்டிருந்தான். டிவி பார்ப்பதற்கு வசதியாக.. ஏதாவது காலி இடம் இருக்குமா என அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தக்குரல் அவனுக்கு பின்னால் இருந்து உரக்க ஒலித்தது..!!

"ஹலோ.. மிஸ்டர் அரவிந்த்..!!"

குரல் கேட்டு திரும்பி பார்த்த அசோக், பக்கென அதிர்ந்து போனான்..!! அங்கே.. கால்களை அகலமாக விரித்தவாறு.. சோபாவில் ஹாயாக சாய்ந்தவாறு.. வாயிலிருந்து வழியும் புகையுடன்.. அமர்ந்திருந்தான்.. திவாகர்..!!!! எதிரே கிடந்த சோபா காலியாக இருக்க, அவன் முன்பிருந்த டேபிளில் விஸ்கி கிளாசும், தந்தூரி சிக்கனும்..!! அசோக் திவாகரை சுத்தமாக அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை..!! அவனையே திகைப்பாக பார்த்தான்..!! 'இவன் இங்கே என்ன செய்கிறான்..? சிகரெட் பழக்கம் கூட இருக்கிறதா இவனுக்கு..?' அசோக் அப்படி திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே,

"இங்க எடம் இருக்கு பாருங்க அரவிந்த்.. இங்க வாங்க..!!"

திவாகர் மீண்டும் அழைத்தான். அசோக் இப்போது தடுமாறினான். 'செல்லலாமா.. வேண்டாமா..' என ஒரு சில வினாடிகள் தயங்கியவன், திவாகர் திரும்ப திரும்ப அழைக்க.. வேறு வழியில்லாமல் அவனை நோக்கி நடந்தான். அசோக் திவாகருக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொள்ள, திவாகர் இப்போது தன் இதழ்களை அகலமாக விரித்து புன்னகைத்தான்.

"அப்புறம் மிஸ்டர் அரவிந்த்.. எப்படி இருக்கீங்க..?"

"எ..என் பேரு அ..அரவிந்த் இல்ல.." அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

"அப்புறம்..?"

"அசோக்.."

"அசோக்கா..?? அன்னைக்கு அரவிந்த்னுதான சொன்னீங்க..??"

"இ..இல்லையே.. அ..அசோக்னுதான் சொல்லிருப்பேன்..!!" அசோக் திணறலாய் சமாளிக்க முயல, திவாகர் சிரித்தான்

"ஹாஹா.. சரி விடுங்க..!! I know..!!" .

"What do you know..?"

"I know.. I know everything..!! ஹாஹா..!!"

"இல்ல.. நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியலை..!!" அசோக் சொல்ல, திவாகர் இப்போது பட்டென ஒருமைக்கு தாவினான்.

"இங்க பாரு.. அன்னைக்கு நீ அரவிந்த்னுதான் சொன்ன.. எனக்கு நல்லா தெரியும்..!! நீ ஏன் அப்படி சொன்னன்னு கூட எனக்கு தெரியும்..!!"

"ஏ..ஏன்..?"

"அப்போத்தான நான் ஏதாவது உளறுவேன்.. அதை அப்படியே போய் திவ்யாட்ட போட்டுக் கொடுக்கலாம்..!! என்ன அசோக்.. கரெக்டா..??"

திவாகர் சொல்லிவிட்டு தனது வெண்பற்கள் தெரியுமாறு அழகாக புன்னகைத்தான். அசோக் திகைத்தான்.

"இ..இல்ல திவாகர்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க..!!" அசோக் பதற்றமாக சொல்ல,

"ரிலாக்ஸ் அசோக்.. ரிலாக்ஸ்..!! நான் உன்னை இப்போ எதுவுமே சொல்லலையே..? ஏன் பதர்ற..? ம்ம்ம்ம்...??? சரி.. அந்த மேட்டரை விடு..!!" என்ற திவாகர், அந்தப்பக்கமாக திரும்பி,

"டேய்.. வேங்கடேசா.." என்று பேரரை அழைத்தான். உடனே அந்த வெங்கடேசன் இவர்கள் டேபிளை நோக்கி ஓடி வந்தான்.

"சொல்லுங்க ஸார்.." என்றான் பணிவாக.

"ஸாருக்கு என்ன வேணும்னு கேட்டு குடு..!!" திவாகர் அசோக்கை நோக்கி கைநீட்டினான்.

"ம்ம்.. சொல்லுங்க ஸார்.." பேரர் அசோக்கிடம் திரும்பினான்.

"ரெண்டு லார்ஜ்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

"ப்ளண்டர்ஸ் ப்ரைட்.. ஒரு ஸ்ப்ரைட்.. ஒரு ஃப்ரஞ்ச் ஃப்ரை..!! கரெக்டா அசோக்..? ம்ம்ம்.. போய்.. அதை கொண்டு வா வெங்கடேசா..!!" திவாகர் அசோக்குக்கு பதிலாய் ஆர்டர் செய்துவிட்டு, அப்புறம் அசோக்கிடம் திரும்பி இளித்தான்.

"உங்களுக்கு..??" என்று அவனிடம் கேட்ட பேரரிடம்,

"எனக்கு போதும்..!!" என்றான்.

பேரர் ஆர்டர் குறித்துக்கொண்டு நகர, திவாகர் அசோக்கிடம் திரும்பினான். கொஞ்ச நேரம் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தவன், பின்னர் மிக கேஷுவலான குரலில் சொன்னான்.

"ஆறு மணில இருந்து இங்கயே உக்காந்துட்டு இருக்கேன் அசோக்.. அல்ரெடி அஞ்சு லார்ஜ் ஆகிடுச்சு..!!"

"ஓ..!!"

"உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. தெரியுமா..?" திவாகர் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

"எனக்காகவா..?"

"ம்ம்ம்..!!! நீ வெட்னஸ்டே வெட்னஸ்டேதான் இந்த பாருக்கு வருவியாமே.. வெங்கடேசன் சொன்னான்..!!"

"ஆ..ஆமாம்..!!"

"அதான் ஆறு மணில இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! ஆமாம்.. அது என்ன வெட்னஸ்டே கணக்கு..?"

"அ..அது.. அன்னைக்குத்தான் எனக்கு.. நைட் ஆன்சைட் கால் இருக்காது..!! சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து கிளம்பிடுவேன்..!!"

"ஓஹோ..!! குட்..!! ம்ம்ம்ம்... சாஃப்ட்வேர் இஞ்சினியர்.. இல்ல..??"

"ஆமாம்..!!"

அசோக் சொல்ல, திவாகர் அவன் முகத்தையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தான். அப்புறம் தன் தலையை லேசாக கவிழ்த்துக் கொண்டான். கருவிழிகளை மேலே உயர்த்தி அசோக்கையே ஒரு கழுகுப்பார்வை பார்த்தான். குரலை இறுக்கமாக மாற்றிக்கொண்டு, கிசுகிசுப்பாக சொன்னான்.

"ஆனா.. பண்றதெல்லாம் சல்லித்தனமான வேலை..??"

"எ..என்ன சொன்னீங்க..?" அசோக் தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல் கேட்க,

"நத்திங்.. நத்திங்..!!" திவாகர் வெண்பற்கள் தெரிய சிரித்தான்.

அசோக்கிற்கு அந்த சூழ்நிலை இப்போது ஏனோ அவஸ்தையாக தோன்றியது. திவாகரின் செய்கைகள் அவன் மனதில் லேசாக கிலியை கிளப்பிவிட்டன. 'எந்த மாதிரியான மனநிலையில் இவன் இருக்கிறான்..? கோபமாக இருக்கிறானா.. இல்லை.. இயல்பாக இருக்கிறானா..? புரியவில்லையே..?? இவன் அழைப்பை ஏற்று இங்கு வந்து அமர்ந்தது தவறோ..? இதனால் ஏதும் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளதோ..? நைஸாக நழுவியிருக்க வேண்டுமோ..? கூடிய சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விடவேண்டும்..!!'

அதற்குள் பேரர் ஆர்டர் செய்தவைகளை கொண்டு வந்து டேபிளில் பரப்பினான். அசோக் பொறுமையாக விஸ்கியையும், ஸ்ப்ரைட்டையும் ஊற்றி மிக்ஸ் செய்தான். 'சியர்ஸ்..!!' என்றவாறு திவாகர் நீட்டிய க்ளாஸுடன், தனது க்ளாஸை இடித்துக் கொண்டான். நிதானமாக விஸ்கியை உறிஞ்ச ஆரம்பித்தான்.

திவாகருக்கு இப்போது தலை நிலைகொள்ளாமல் தள்ளாடியது. கருவிழிகள் கடிகார முள் போல சுழன்றன. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க, ஏழெட்டு குச்சிகள் வீணாக்கினான். அவன் போதையின் உச்சத்தில் இருக்கிறான் என்று அசோக்கிற்கு தெளிவாக தெரிந்தது. கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த திவாகர் அப்புறம் மெல்ல ஆரம்பித்தான்.

"உங்க சொந்த ஊர் மதுரைப்பக்கம் இல்ல.. திவ்யா ஊர்ப்பேர் என்னவோ சொன்னாளே..?"

"புளியங்குளம்..!!"

"ஆஆஆங் .. புளியங்குளம்.. புளியங்குளம்..!! எனக்கு.. மடப்புரம்..!! திருத்துறைப்பூண்டி பக்கத்துல..!!"

"ஓ..!!

"சின்ன வயசுலேயே அப்பா, அம்மா போயிட்டாங்க அசோக்..!! அஞ்சாறு வயசு இருக்கும்.. அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க..!! அப்போ இருந்தே நான் மெட்ராஸ்தான்..!! பெரியப்பா வீடு மாதவரத்துல இருக்குது.. அங்கதான் தங்கிருந்தேன்.. அவர்தான் என்னை படிக்க வச்சாரு..!!"

"ம்ம்ம்.."

"பெரியப்பாவுக்கு பழைய பேப்பர் பிசினஸ்.. அவர் என் படிப்புக்கு பண்ணின செலவை விட.. நான் அவருக்கு உழைச்சு சம்பாதிச்சு குடுத்த காசு பலமடங்கு இருக்கும்..!! சின்ன வயசுல.. இந்த ஏரியாவுல ஒரு தெரு விடாம.. பேப்பர் பொறுக்கிருக்கேன்..!! ஹாஹா... Can you believe that..??? வெல்டிங் ஷாப்ல வேலை பாத்திருக்கேன்.. டீக்ளாஸ் கழுவிருக்கேன்.. கட்டிட மேஸ்திரிகிட்ட காலால மிதி வாங்கிருக்கேன்..!! ரொம்ப கஷ்டம் அசோக்..!! ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு இந்த நிலைமைல இருக்கேன்..!!"

"ம்ம்.. கிரேட்..!!"

"தேங்க்ஸ்..!! இதெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு தெரியுமா..?"

"உ..உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கணும்.. அதுக்காகத்தான..?"

"அது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.. அதுக்காகவுந்தான்..!!"

"எ..என்ன புரிஞ்சுக்கணும்..?"

"எனக்கு ஜெயிக்கிறது புடிக்கும்..!! இதுவரை நான் தொட்டது எல்லாம் சக்சஸ்தான்..!! I know how to win..!!" திவாகரின் குரலில் ஒரு கர்வம் பொங்கியது.

"ஓ..!!"

"சின்ன வயசுல இருந்தே என் மனசுக்குள்ள எப்போவுமே ஒரு வெறி உண்டு அசோக்.. ஜெயிக்கணும்ன்ற வெறி.. நெனச்சதை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!!" திவாகர் சொல்ல சொல்ல, அசோக் அவனையே மிரட்சியாக பார்த்தான்.

"ம்ம்ம்.."

"இப்போ கொஞ்ச நாளா.. மனசுக்குள்ள.. புதுசா ஒரு வெறி கிளம்பிருக்கு.. திவ்யாவை அடைஞ்சே தீரணும்ன்ற வெறி..!! அந்த வெறி.. என்னை அப்படியே ஆட்டிப் படைக்குது அசோக்..!!"

சொல்லிவிட்டு திவாகர் அசோக்கை பார்த்து புன்னகைத்தான். திவாகரின் கண்களில் மின்னிய ஒரு குரூரம்.. அவனது அழகான புன்னகைக்கு அடியில் மறைந்து கிடந்த அந்த கொடூரம்..!! அசோக் உண்மையிலேயே மிரண்டு போனான்..!! திவாகரோ அசோக்கின் முகமாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்..!!

"நான் ஆன்லைன்ல.. நெறைய பொண்ணுக கூட பேசிருக்கேன் அசோக்.. அது என்னோட ஹாபி மாதிரி.. ஜஸ்ட் ஃபார் ஃபன்.. நத்திங் சீரியஸ்..!! ஒரு ரெண்டு வாரம் பேசுவேன்.. அப்புறம் அவங்களே வந்து பிங் பண்ணினா.. நான் பிஸியா இருக்கேன்னு.. ஜஸ்ட் லைக் தேட் அவங்களை அவாய்ட் பண்ணிடுவேன்..!! ஆனா.. திவ்யாவை என்னால அப்படி அவாய்ட் பண்ண முடியலை.. ஆக்சுவலா அந்த விஷயத்துல உனக்குத்தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்..!!"

"எ..எனக்கா..?" அசோக் புரியாமல் கேட்டான்.

"ஆமாம்.. நீதான் அந்த ஃபோட்டோ எடுத்தியாமே..?? திவ்யா அந்த ஃபோட்டோவை எனக்கு அனுப்பின அன்னைக்குல இருந்து ஆரம்பிச்சதுதான் அந்த வெறி.. அவளை அடைஞ்சே ஆகணும்ன்ற வெறி..!!"

"ஓ..!!"

"வாவ்..!!!! என்ன ஒரு அழகுடா சாமி..!!!! இந்த திவ்யா பொண்ணு இவ்வளவு அழகா..?? இவ கூடவா இத்தனை நாளா பேசிட்டு இருந்தோம்..? இத்தனை நாளா சும்மா பேசிட்டு மட்டும் இருந்துட்டமே..' அப்டின்னு..!!! நான் ஆரம்பத்துல சில ட்ரிக்லாம் பண்ணிப்பார்த்தேன் அசோக்.. திவ்யா அதுக்குலாம் மசியலை..!! அப்புறந்தான்.. நான் அவளை காதலிக்கிறதா சொன்னேன்.. நான் நெனச்ச மாதிரியே திவ்யா அழகா என் ப்ளான்க்குள்ள வந்து லாக் ஆகிக்கிட்டா..!! ஹாஹா.. ஹாஹா..!!"

"அ..அப்போ நீங்க திவ்யாவை லவ் பண்றேன்னு சொன்னது பொய்யா..?"

"ஃப்ராங்கா சொல்லப்போனா.. எனக்கு தெரியலைன்னுதான் சொல்லணும்.. அது லவ்வா என்னன்னே எனக்கு தெரியலை..!! ஆனா.. இப்போதைக்கு அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டு குடும்பம் நடத்துற மாதிரித்தான் என்னோட ப்ளான்..!! ப்ராமிஸ்..!! ட்ரஸ்ட் மீ..!!"

"ம்ம்ம்..!!"

"ம்ம்ம்ம்.. எல்லாம் என் ப்ளான் படி ஸ்மூத்தா போயிட்டு இருந்தது அசோக்.. அப்போத்தான்.. எங்க இருந்த வந்த நந்தி மாதிரி நீ என் விஷயத்துல மூக்கை நொழைச்ச..!! அந்த ட்ரிங்க்ஸ் மேட்டர்ல நான் திவ்யாவை கன்வின்ஸ் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டேன்.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..!! ஆக்சுவலா.. அந்த மேட்டர்ல எனக்கு உன்மேல ரொம்ப ரொம்ப கோவம் அசோக்..!! என்னதான் இருந்தாலும் நீ அப்படி பண்ணிருந்திருக்க கூடாது..!!"

"நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. உ..உங்களை பிரிக்கிறது என்னோட இன்ட்டென்ஷன் இல்ல..!!"

"ஏதோ ஒன்னு.. விடு.. ஆனா அதுவும் நல்லதுக்குத்தான்.. அந்த மேட்டர்னாலதான் அடம்புடிச்ச திவ்யாவை என்னால ஐ லவ் யூ சொல்ல வைக்க முடிஞ்சது..!! அதுக்காகவும் நான் உனக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்..!!"

"உங்க தேங்க்ஸை நீங்கள் வச்சுக்கோங்க..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க..??" அசோக் இப்போது சற்றே எரிச்சலாக கேட்டான்.

"இரு இரு... மேட்டருக்கு வர்றேன்..!! ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது... திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொன்னேன் இல்லையா..? அவ எனக்கு கிடைக்கிறதுல.. நடுவுல நீ ஒரு பிரச்னையா இருக்கப்போறேன்னு எனக்கு தோணுது..!! ஒருவேளை நீ ஒரு பிரச்னையா இல்லாம கூட இருக்கலாம்.. Who knows..?? But.. I don’t want to take risk..!! ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. பிசினஸ்னா ரிஸ்க் எடுத்துத்தான் ஆகணும்னு எல்லாம் சொல்வாங்க.. ஆனா என்னோட பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி என்னன்னு உனக்கு தெரியுமா அசோக்..? Elimination of Risk..!! That's what exactly I'm doing now..!! I want to eliminate you..!!"

"எ..எனக்கு புரியலை..!!"

"புரியிற மாதிரியே சொல்றேன்..!! நீ திவ்யாவோட பழகுறது எனக்கு சுத்தமா புடிக்கலை.. அவளை விட்டு நீ விலகிடனும்..!! திவ்யா ஏதோ சொல்லிட்டு இருந்தா.. உனக்கு ஏதோ வெளிநாடு போற ஆப்பர்ச்சூனிட்டி வந்திருக்குறதா..!! நெஜமா அது..??"

"ம்ம்ம்.."

"என்னைப் பொறுத்தவரை உனக்கு அது ஒரு பெஸ்ட் ஆப்ஷன்..!! கொஞ்ச நாள் நீ வெளிநாட்டுல போய் இருந்துட்டு வா.. அட்லீஸ்ட் நான் நெனச்ச மாதிரி எல்லாம் நடந்து முடியிறவரை..!!"

"ஓ..!! நான் போகமாட்டேன்னு சொன்னா..??"

"சிம்பிள்..!! எனக்கு உன்மேல கோவம் வரும்..!! அது உனக்கு நல்லது இல்ல..!!"

"என்ன பண்ணுவீங்க..?"

"நானே திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிப்பேன்.. அவளாவே உன்னை வெறுத்து ஒதுக்குற மாதிரி செய்வேன்..!!"

"ஹ்ஹா.."

"என்ன.. நக்கலா சிரிக்கிற..? என்னால முடியாதுன்னு நெனைக்கிறியா..?"

"நிச்சயமா உங்களால முடியாது..!!"

"பார்க்கலாம்..!! நான் அல்ரெடி அந்த வேலையை எல்லாம் ஆரம்பிச்சுட்டேன்.. உன்னை பத்தின தப்பான அபிப்ராயத்தை கொஞ்சம் கொஞ்சமா அவ மனசுக்குள்ள திணிச்சுட்டு இருக்கேன்..!! 'அசோக்குக்கு என் மேல ஏதோ பொறாமை.. நம்ம பிரிக்க ப்ளான் பண்றார் திவ்யா..' அந்த மாதிரி..!! 'ஏன்னே தெரியலை.. அவனுக்கு உங்களை புடிக்கலை.. உங்களை அவன் புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்..' இது திவ்யா இன்னைக்கு காலைல எங்கிட்ட விட்ட டயலாக்..!! ம்ம்ம்ம்.. உனக்கு இப்போ ரெண்டு ஆப்ஷன் இருக்கு அசோக்..!! ஒன்னு.. திவ்யா உன் மேல வச்சிருக்குற மதிப்பு கொஞ்சமும் குறையாம.. நீ வெளிநாடு போயிடுறது..!! ரெண்டு.. இங்கயே இருந்து.. அவ உன் மேல வச்சிருக்குற மதிப்பை இழந்து.. ஒரே வீட்டுக்குள்ள இருந்தும் அவ கூட பேச முடியாம போயிடுறது..!! ரெண்டுல எதை நீ சூஸ் பண்ண போற..?"

"என்ன.. என்னை மிரட்டுறீங்களா..?"

"ஹாஹா.. நான் எங்க மிரட்டுறேன்..? ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. உன்கிட்ட ஒரு டீல் பேசிட்டு இருக்கேன்.. உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்திருக்கேன்..!!"

"உங்களோட ரெண்டு ஆப்ஷனுமே எனக்கு பிடிக்கலை மிஸ்டர் திவாகர்..!! நான் மூணாவது ஆப்ஷன் சூஸ் பண்ணப் போறேன்..!!"

"ஹாஹா.. அதென்ன மூணாவது ஆப்ஷன்..??"

"உங்க பேச்சுல இருந்தே தெரியுது.. நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு..!! உங்களை மாதிரி ஒரு ஆளைக் கட்டிக்கிட்டு.. திவ்யா சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!! அதனால.."

"என்ன பண்ணப் போற..?"

"உங்களைப் பத்தி அவகிட்ட சொல்லப் போறேன்..!!"

"ஹாஹா..!! இப்போ நான் பேசுனதெல்லாம் அவகிட்ட போய் சொல்லப் போறியா..? அப்படின்னா.. அதோட இதையும் சேர்த்து சொல்லு.. நான் இதுவரை ஒரு ஏழெட்டு பொண்ணுகளோட செக்ஸ் வச்சிருக்கேன்..!! உண்மை.. அதையும் அவகிட்ட போய் சொல்லிப்பாரு..!! அவ நம்பமாட்டா அசோக்.. அப்படியே ஒருவேளை நம்பி.. எங்கிட்ட வந்து கேட்டாலும்.. நான் அப்டிலாம் சொல்லவே இல்லைன்னு சத்தியம் செஞ்சு அவளை சமாளிச்சுடுவேன்..!! திவ்யாவை எப்படி டீல் பண்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அவளை எப்படி என்கிட்டே ஐ லவ் யூ சொல்ல வச்சேன்னு பார்த்தேல..? I know.. I know everything about her..!! இந்த மேட்டரை போய் அவகிட்ட சொன்னா.. அதை வச்சே உன் இமேஜை டேமேஜ் பண்ணிக்காட்டவும் என்னால முடியும்.. பாக்குறியா..?"

திவாகர் சவாலாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரர் வந்து அவன் முன்பாக பில் புக்கை நீட்டினான். பில்லை பார்க்காமாலே.. திவாகர் பர்ஸ் திறந்து கிரெடிட் கார்ட் எடுத்து அவனிடம் நீட்டினான். அவன் வாங்கிக்கொண்டு அந்தப்புறம் நகர்ந்ததும், கோப்பையில் மிச்சமிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் விழுங்கினான். நிமிர்ந்து அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தான்.

இப்போது அசோக்கும் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து மொத்தமாய் உள்ளே ஊற்றிக் கொண்டான். ப்ளேட்டில் இருந்த சிப்சை எடுத்து கடித்துக்கொண்டே, திவாகரை பதிலுக்கு முறைத்தான்.

கார்ட் வாங்கிக்கொண்டு சென்ற பேரர் திரும்ப வந்தான். புக்கை நீட்டினான். திவாகர் அதை திறந்து, பாக்கெட்டில் இருந்த பேனாவை உருவி, ட்ரான்சாக்ஷன் ஸ்லிப்பில் கையொப்பம் இட்டான். பர்ஸ் திறந்து வெங்கடேசனுக்கு டிப்ஸ் எடுத்து வைத்தான். ஒரு சிகரெட் எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து, அதிலிருந்து குபுகுபுவென கிளம்பிய புகையை அசோக்கின் முகத்தில் ஊதினான்.


"நீ சாப்பிட்டதுக்கும் சேர்த்து நான் பில் பே பண்ணிட்டேன் அசோக்.. நீ பே பண்ண தேவையில்ல..!!" என்றான். உடனே அசோக் ஒருகணம் குழம்பிப்போனான். சற்றே எரிச்சலாக கேட்டான்.

"நீ..நீங்களா..? ஏன்..?"

"Its ok.. Treat this as my Treat..!!"

"நோ நோ..!! எனக்கு உங்களோட ட்ரீட் தேவையில்ல.. நான் பணம் தர்றேன் வாங்கிக்கோங்க..!!" அசோக் பர்ஸ் திறந்து பணம் எடுக்க,

"பரவால அசோக்.. பணத்தை உள்ள வை..!! என்னோட டீல் உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு..!!"

அசோக் இப்போது எதுவும் பேசாமல் திவாகரைப் பார்த்து முறைத்தான். அப்புறம் பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவன் முன்பாக தூக்கி போட்டான். திவாகர் சற்றே கிண்டலாக கேட்டான்.

"இதுக்கு என்ன அர்த்தம்..?"

"உங்க டீல் எனக்கு ஓகே இல்லைன்னு அர்த்தம்..!!"

"அப்போ திவ்யாவை விட்டு நீ விலகமாட்ட..?"

"அது என்னால முடியாது..!!"

"ஹாஹா.. அப்போ உன்கிட்ட இருந்து திவ்யாவை நான் பிரிக்க வேண்டி இருக்கும்..!!"

"அது உங்களால முடியாது..!!"

அசோக் உறுதியாக சொல்ல, திவாகர் இப்போது அசோக்கை முறைத்துப் பார்த்தான். டேபிளில் கிடந்த பணத்தை அள்ளி தன் பர்ஸில் திணித்துக் கொண்டான். எழுந்து கொண்டான். டேபிளில் கை ஊன்றி குனிந்து, தனது முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே கொண்டு சென்று, சவால் விடும் குரலில் சொன்னான்.

"முடிச்சுக் காட்டுறேன்.. I know how to do it.. I know everything..!!" சொல்லிவிட்டு நகர முயன்றவனை,

"ஒரு நிமிஷம் மிஸ்டர் திவாகர்..!!"

என்று அசோக் அழைத்து நிறுத்தினான். திவாகர் நின்று 'என்ன..?' என்பது போல அசோக்கை திரும்பி பார்க்க, இப்போது அசோக் சோபாவில் இருந்து எழுந்தான்.

"டோன்ட் ஃபர்கெட் யுவர் பென்..!!"

என்ற அசோக், திவாகர் டேபிளில் மறந்து விட்டிருந்த அந்த பேனாவை எடுத்து அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் செருகி வைத்தான். திவாகர் எரிச்சலாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அசோக் இதழில் அழகாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.

"இப்போ.. அடிக்கடி ஏதோ சொல்லிட்டு இருந்தீங்களே.. என்னது அது..?? ஆங்.. 'I know everything..!!' ம்ம்ம்... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கலாம் திவாகர்.. ஆனா ஒரு விஷயத்தை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை.. அது தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் இப்படிலாம் என்கிட்ட பேசிருக்க மாட்டீங்க..!! ஆனா.. கூடிய சீக்கிரம் அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பீங்க..!!"

"என்ன அது..?" திவாகர் சற்றே எகத்தாளமாக கேட்க,

"திவ்யா என் மேல வச்சிருக்குற நம்பிக்கை..!!"

அசோக் திவாகரின் கண்களை கூர்மையாக பார்த்து சொன்னான். சொல்லிவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல், திரும்பி விறுவிறுவென நடந்து, அந்த பாரை விட்டு வெளியேறினான்.



அத்தியாயம் 24

அசோக் எக்கச்சக்க ஆத்திரத்தில் இருந்தான். தன் ஆத்திரம் மொத்தத்தையும் ஆக்சிலரேட்டரிடம் காட்டினான். முழுவதுமாய் முறுக்கப்பட்ட ஆக்சிலரேட்டர் பைக்கை 'விஷ்ஷ்..' என உச்சபட்ச வேகத்தில் சீற வைத்தது. ஸ்பீடாமீட்டர் முள் 100ஐ முத்தமிட.. அந்த பாரில் இருந்து வீடு செல்லும் பாதையில் பைக் பறந்து கொண்டிருந்தது.

அசோக் மனதுக்குள் திவாகரை திட்டிக்கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். 'ச்சே.. என்ன மனிதன் இவன்..?? எவ்வளவு ஆபத்தான ஆள் இவன்..?? என்ன ஒரு வெறி அவனுக்கு..?? என்ன ஒரு சூழ்ச்சிக்கார குணம்..?? இவனைக் கட்டிக்கொண்டு திவ்யா நிம்மதியாக இருக்கப்போவதில்லை.. இருக்கவே போவதில்லை..!! விட மாட்டேன்.. என்னுடைய திவ்யா இப்படி ஒரு குரூர புத்தி உடையவன் கையில் சிக்க விடவே மாட்டேன்..!! யார் என்று நினைத்துக்கொண்டான் என்னை..?? என்னிடமே எவ்வளவு எகத்தாளமாக பேசுகிறான்..?? நான் யார் என்று இன்று அவனுக்கு காட்டுகிறேன்..!!'

ஒரு அரை மணி நேரத்தில் அசோக் வீட்டை அடைந்தான். வீட்டுக்குள் நுழைந்தபோது, கார்த்திக் எதையோ கொறித்துக்கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான். பரபரப்பாக உள்ளே நுழைந்த அசோக்கை வித்தியாசமாக பார்த்தான்.

"என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?"

"திவ்யாவை எங்கத்தான்..?"

"அவ ரூம்ல இருக்குறா.. ஏன்..?"

அசோக் அவனுக்கு பதில் சொல்லாமல் உள்ளறைக்குள் நுழைந்தான். 'டேய்.. என்னடா ஆச்சு..?' சமையலறையில் இருந்து வெளிப்பட்டுக் கேட்ட அக்காவையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. விடுவிடுவென நடந்து திவ்யாவின் அறைக்குள் புகுந்தான். உள்ளே லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்த திவ்யாவின் கையைப் பற்றி இழுத்தான். திவ்யாவுக்கு எதுவும் புரியவில்லை.

"எ..என்னடா..? என்னாச்சு..?"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா.. வா..!!"

"என்ன பேசணும்..?"

"இங்க வேணாம்.. வா.. மொட்டை மாடிக்கு போயிடலாம்..!!"

அசோக் திவ்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். திவ்யாவுடையை கையை இறுகப்பற்றி தரதரவென இழுத்து செல்லும் அசோக்கையே சித்ராவும், கார்த்திக்கும் திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமலே திவ்யா அசோக்கின் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவன் பின்னால் சென்றாள். மொட்டை மாடியை அடைந்ததும் பொறுமை இல்லாமல் கத்தினாள்.

"ஐயோ.. என்னாச்சு அசோக்.. இவ்வளவு அவசரமா எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த..?"

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் திவ்யா..!!"

"அப்படி என்ன முக்கியமான விஷயம்..?"

"நான் யாரு..??"

"ப்ச்.. இதைக் கேட்கத்தான் கூட்டிட்டு வந்தியா..?" திவ்யா சலிப்பாக கேட்டாள்.

"கேக்குறதுக்கு பதில் சொல்லு திவ்யா.. நான் யாரு..??"

"ம்ம்.. நீ என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்..!!"

"உனக்கு என்னை புடிக்குமா..?"

"என்ன கேள்வி இது..?"

"பதில் சொல்லு திவ்யா..!!"

"சரி.. சரி..!! ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! போதுமா..?"

"உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா..?"

"இருக்கு.. அதுக்கு என்ன இப்போ..?"

"எவ்வளவு..??"

"எக்கச்சக்கமா இருக்கு..!! என்ன ஆச்சு உனக்கு..??"

"நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்னு நம்புறியா..?"

"இங்க பாரு அசோக்.. என்னை படைச்ச கடவுளை விட நான் உன்னை அதிகமா நம்புறேன்..!! என்ன மேட்டர்னு கொஞ்சம் சொல்லித் தொலையேன்..!!"

திவ்யா எரிச்சலாய் சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தையே குழப்பமாய் பார்த்தாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. திவ்யாவுடைய கண்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மிகவும் இறுக்கமான குரலில் கேட்டான்.

"என்மேல அவ்வளவு நம்பிக்கை இருக்குன்னா.. நான் எது சொன்னாலும்.. அப்படியே கண்ணை மூடிட்டு செய்வியா..?"

"ம்ம்.. செய்வேன்..!!"

"ப்ராமிஸ்..??"

"ப்ராமிஸ்..!!! என்ன செய்யணும்..? சொல்லு.. இந்த மாடில இருந்து குதிக்கணுமா..?" திவ்யா இன்னும் எரிச்சலாகத்தான் காணப்பட்டாள்.

"இல்லை.. திவாகரை உன் மனசுல இருந்து அழிக்கனும்..!!"

அசோக் தெள்ளத்தெளிவாக சொல்ல, திவ்யா உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானாள். அவள் சுத்தமாக அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுடைய முகத்தில் ஓடிய அதிர்ச்சி ரேகைகள் அப்பட்டமாய் தெரிந்தன. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் திக்கி திணறி வெளிப்பட்டன.

"அ..அசோக்.. எ..என்ன சொல்ற நீ..?"

"ஆமாம் திவ்யா.. இந்த நிமிஷத்துல இருந்து..!! அவரை நீ மறந்துடணும்.. அவர்கிட்ட இருந்து சுத்தமா விலகிடனும்.. எந்த வகைலையும் அவரை இனி நீ காண்டாக்ட் பண்ண கூடாது..!!"

"எ..எனக்கு எதுவும் புரியலை அசோக்.. எ..என்னாச்சு இப்போ திடீர்னு..?"

"அவர் சரியில்ல திவ்யா.. ரொம்ப மோசமான ஆள்..!! அவரை கட்டிக்கிட்டு நீ சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல..!!"

"ஏ..ஏண்டா அப்படி சொல்ற..?"

"அவரோட நடத்தை சரியில்ல.. எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு அவருக்கு.. கோபம், பொறாமை, சூழ்ச்சி, பழிவாங்குறதுனு.. அவரோட கேரக்டர்சே ஒண்ணுகூட சரியில்லை..!! பத்தாததுக்கு நெறய பொண்ணுகளோட தொடர்பும் இருக்கு..!! அவர் உனக்கு வேணாம் திவ்யா..!!"

"அ..அசோக்.. நீ நெனைக்கிற மாதிரி அவர் இல்லைடா..!!"

"ஐயோ திவ்யா.. நீ நெனைக்கிற மாதிரிதான் அவர் இல்ல..!! நான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்..!! என்னை நம்பு..!!"

"சரி.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?"

திவ்யா அந்த மாதிரி கேட்கவும், அசோக் இப்போது சற்று திணறினான். 'திவாகரே இதெல்லாம் சொன்னான்.. இப்படி எல்லாம் பேசினான்..' என்று சொன்னால் சத்தியமாக இவள் நம்பப்போவதில்லை. உடனே திவாகருக்கு கால் செய்து கேட்பாள். அவன் இவளிடம் நடிப்பான். இந்த லூசும் அவனுடைய தேன் தடவிய வார்த்தைகளை நம்பி ஏமாறும். அதனால் உடனடியாய் ஒரு பொய்யை தயார் செய்து, திக்கி திணறி திவ்யாவிடம் ஒப்பித்தான்.

"எ..எனக்கு தெரிஞ்ச ஒரு பி..பிரண்ட் மூலமா விசாரிச்சேன்.."

"யார் அவர்..?"

"அ..அதை என்னால சொ..சொல்ல முடியாது..!!"

"ஏன்..??"

"தான் யார்னு காட்டிக்க அவர் விரும்பலை.. திவாகரால தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு பயப்படுறாரு..!!"

"ஓ.. அவரை நீ நம்புறியா..?"

"ஆமாம்.. அவரை நான் முழுசா நம்புறேன்..!! நீ என்னை நம்புறியா திவ்யா..??"

அசோக் பரிதாபமாக கேட்டுவிட்டு திவ்யாவையே பார்க்க, அவளுக்கு இப்போது என்ன சொல்வதென்றே புரியவில்லை.

"என்னடா.. இப்படி கேக்குற..?" என்றாள் அவளும் பரிதாபமாக.

"அப்போ அவரை மறந்துடுறேன்னு சொல்லு..!!"

"நா..நான் வேணா திவாகர்கிட்ட ஒரு தடவை பே..பேசி பார்க்கவா..?" திவ்யா தயங்கி தயங்கி கேட்டாள்.

"நோ திவ்யா..!! அதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!"

"ஏண்டா..?"

"அவருக்கு ஏற்கனவே என்மேல எக்கச்சக்கமா கோவம்... இப்போ நீ அவர்கிட்ட பேசினா.. அவர் உன்னை நல்லா குழப்பி விட்ருவாரு.. நீயும் அதை நம்புவ..!! உன் கண்ணுக்கு நான் கெட்டவனா தெரிவேன்.. அதான் சொல்றேன்..!!"

"நீ அவரை தப்பவே புரிஞ்சு வச்சிருக்குற அசோக்.. அவருக்கு உன் மேல எந்த கோவமும் கிடையாது..!! அவர்கிட்ட பேசினா.. இதுக்கு ஒரு நல்ல முடிவு கெடைக்கும்னு எனக்கு தோணுது..!!" திவ்யா பிடிவாதமாக இருக்க, அசோக் இப்போது எரிச்சலானான்.

"சரி.. போ.. போய் பேசு..!! அவர்தான் உனக்கு முக்கியம்னா.. போய் பேசு..!! ஆனா ஒன்னு.. அப்புறம் என்கிட்டே எப்போவும் பேசாத..!!"

அசோக் அவ்வாறு இரக்கமே இல்லாமல் சொல்ல, திவ்யா அப்படியே ஆடிப் போனாள். அவளுடைய கண்கள் பட்டென கலங்கி போயின. அவளது மனம் முழுவதும் குழப்பத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 'சிறு வயதில் இருந்தே தான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் நண்பனா..?? அல்லது சில நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆனவாக இருந்தாலும், வாழ்வின் மிச்ச நாட்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்த காதலனா..?' அவளால் எளிதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தத்தளித்தாள். அவள் ஊமையாயிருக்க, அசோக்கே இப்போது கேட்டான்.

"என்ன திவ்யா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை அசோக்.. ஒரே குழப்பமா இருக்கு..!!"

"ஓ..!! அப்போ இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலை.. இல்ல..? அன்னைக்கு ட்ரெயின்ல.. லைஃப்ல எந்த முடிவா இருந்தாலும் என்னை கேட்டுத்தான் எடுப்பேன்னு சொன்னியே.. அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொன்னியா.. எல்லாம் வெறும் நடிப்பா திவ்யா..??" அசோக்கின் வார்த்தைகள் திவ்யாவை மிகவும் காயப்படுத்தின. துடித்துப் போனாள்.

"இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!"

"இங்க பாரு திவ்யா.. உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் இப்படி பேசலை.. உன் வாழ்க்கை மேல எனக்கு இருக்குற அக்கறைலதான் இப்படிலாம் பேசுறேன்..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இது உன் லைஃப்ல ரொம்ப முக்கியமான டெசிஷன்.. இதுல ஏதாவது தப்பா முடிவெடுத்தேன்னா.. உன் லைஃபே ஸ்பாயில் ஆயிடும்..!! உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா.. நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்னு முழுசா நீ நம்புனா.. நான் சொல்ற மாதிரி கேளு.. இல்லன்னா.. அப்புறம் எப்போவுமே நான் உனக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரி போயிடும்..!! நல்லா யோசிச்சு சொல்லு..!!"

அசோக் சொல்லி முடித்துவிட்டு, திவ்யாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான். அவள் சொல்லப் போவதை வைத்துதான்.. திவ்யாவுடனான தன் நட்பும் தொடரப் போகிறது என்ற அபாயமும்.. அவன் இதயத்தை ட்ரம்ஸ் வாசிக்க செய்தது. திவ்யா கண்களில் நீர் கசிய, தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். இது தன் வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்பதை அவளும் இப்போது நன்கு உணர்ந்திருந்தாள். அசோக்கின் முகமும், திவாகரின் முகமும் மாறி மாறி அவளது மனக்கண்ணில் வந்து போயின.

ஒரு அரை நிமிடம் திவ்யா அந்த மாதிரி அமைதியாக யோசித்திருப்பாள். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அசோக்கின் முகத்தை ஏறிட்டு பார்த்து தெளிவாக சொன்னாள்.

"ஓகே அசோக்.. நீ சொல்றதை நான் நம்புறேன்..!! அவரை விட்டு விலகிடுறேன்..!!"

திவ்யா சொன்னதும் அசோக் அப்படியே முகம் மலர்ந்து போனான். அவன் மனதில் ஒரே நேரத்தில் நிம்மதியும், சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி வழிந்தன. தன் வாழ்க்கையையே அவன் கையில் ஒப்படைக்க துணிந்த அவனது தோழியை மிகவும் பெருமிதமாக பார்த்தான். நெஞ்சுக்குள் ஒரு உணர்ச்சி ஊற்று பீறிட்டு கிளம்பியது. உதடுகளை கடித்து அந்த உணர்சிகளை அடக்கிக் கொண்டான்.

"தே..தேங்க்ஸ் திவ்யா.. தேங்க்ஸ்..!!" என வார்த்தை வெளியே வராமல் தடுமாறினான்.

"நீதான் எனக்கு முக்கியம் அசோக்..!! சொல்லு.. நான் என்ன பண்ணனும்..?"

"சொல்றேன்.. மொதல்ல இந்த சிம்மை கழட்டி தூரமா போடு.. வேற நம்பர் மாத்திக்கோ..!!"

"ம்ம்.."

"அவருக்கு ஃபைனலா ஒரு மெயில் அனுப்பிச்சுடு..!! 'நான் உங்களை லவ் பண்ணலை.. அன்னைக்கு நீங்க சூசயிட் பண்ணிக்கிறேன்னு மிரட்டுனதுல நான் குழம்பி போய் அப்படி சொல்லிட்டேன்.. இப்போ நான் தெளிவாயிட்டேன்.. நீங்க எனக்கு வேணாம்.. தயவு செய்து என்னை இனி தொந்தரவு செய்யாதீங்க.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.. நான் எந்த வகைலயாவது உங்களுக்கு கஷ்டம் கொடுத்திருந்தா என்னை மன்னிச்சுடுங்க..' அப்டின்னு ஒரு மெயில் அனுப்பிச்சுட்டு.. அந்த மெயில் ஐடியும் க்ளோஸ் பண்ணிடு..!! அவர் என்ன ரிப்ளை பண்ணிருக்கார்னு பார்க்க கூட அதை ஓப்பன் பண்ணாத..!!"

"ம்ம்.. சரி.. ஆனா அவர் எப்படியும் என்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணுவாரு..!!"

"கண்டிப்பா பண்ணுவாரு.. எனக்கும் தெரியும்.. உன்னை அவ்வளவு சீக்கிரமா அவர் விட மாட்டார்..!! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ திவ்யா.. இது ரொம்ப ரொம்ப முக்கியம்.. எந்த காரணம் கொண்டும் அவர் கூட நீ பேசக்கூடாது.. அவர்கிட்ட பேசினா நிச்சயமா உன்னை குழப்பிடுவாரு..!! அவர் உன்னை தேடிவந்தா முகம் கொடுத்து பேசாத.. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு..!! கொஞ்ச நாள்ல அவரோட முயற்சியை அவர் கை விட்ருவாரு.. அப்புறம் உனக்கு எதுவும் பிரச்னை இல்லை.. புரியுதா..?"

"ம்ம்.. சரிடா..!! புரியுது..!!" திவ்யாவின் குரல் சோகமாக ஒலிக்க, அசோக் அவளுடைய தோளைப் பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

"இங்க பாரு திவ்யா.. நீ சரியான முடிவுதான் எடுத்திருக்குற.. அதுக்காக சந்தோஷப்படு..!!"

"ம்ம்ம்ம்.." திவ்யா புன்னகைக்க முயன்று தோற்றாள்.

"நான் உன்கூட இருக்கேன் திவ்யா.. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!"

"ம்ம்.. நீ இருக்குற தைரியத்துலதான்.. நான் இருக்கேண்டா அசோக்..!!"

சொல்லிவிட்டு திவ்யா அசோக்கின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.




அத்தியாயம் 25

அப்புறம் ஒரு மூன்று நாட்கள் மிக இறுக்கமாகவே சென்றன. அசோக் அன்று மொட்டை மாடியில் சொன்னதை எல்லாம் திவ்யா அப்படியே செய்தாள். செல் நம்பர் மாற்றிக் கொண்டாள். அசோக் சொன்னமாதிரியே திவாகருக்கு ஒரு இறுதி ஈ-மெயில் அனுப்பிவிட்டு அந்த அக்கவுன்ட்டை க்ளோஸ் செய்தாள். அந்த இறுதி ஈ-மெயிலை கூட அசோக்கிடம் காட்டி சரி பார்த்து வாங்கிக்கொண்டே அனுப்பினாள். திவாகருடனான தொடர்பை முழுவதுமாய் துண்டித்துவிட்டு, அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

"அவ்ளோதானா அசோக்.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?"

"இங்க பாருடா.. மனசை போட்டு குழப்பிக்காத..!! எல்லாம் உன் நல்லதுக்காகத்தான்..!! நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு.. மறந்துடு..!!"

"முடியலை அசோக்.. கஷ்டமா இருக்கு..!!"

"அதெல்லாம் ஒண்ணுல்ல திவ்யா.. உன்னால முடியும்.. எல்லாம் நம்ம மனசுதான் காரணம்..!! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்..!! அப்புறம் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. அதுக்கு நான் உத்திரவாதம்..!! சரியா..?"

"ம்ம்.. சரி..!!"

"குட் கேர்ள்..!!"

"அசோக்.."

"ம்ம்..??"

"எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீதான் அசோக்.. நீ எப்போவும் என்கூடவே இருடா.. சரியா..?"

"இருக்குறேன் திவ்யா.. இருக்குறேன்.. எப்போவும் உன் கூடவே இருக்குறேன்..!!" திவ்யாவின் கூந்தலை இதமாய் வருடிக் கொடுத்துக்கொண்டே அசோக் சொன்னான்.

திவாகருக்கு திவ்யாவின் வீட்டு முகவரி தெரியாது. ஆனால் அவள் எந்த காலேஜில் படிக்கிறாள் என்ற விவரம் தெரியும். திவ்யாவிடம் இருந்து அந்த மெயில் சென்ற அடுத்த நாளே அவளை தேடி காலேஜுக்கு சென்றுவிட்டான். திவ்யாவிடம் பேசவேண்டும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
"ப்ளீஸ் திவ்யா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..? எனக்கு எதுவுமே புரியலை..!!"

"உங்களுக்கு எதுவும் புரியவேணாம் திவாகர்.. நாம லைஃப்ல ஒண்ணுசேர முடியாது.. அது மட்டும் உங்களுக்கு புரிஞ்சா போதும்..!!"

"திவ்யா நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடு.. நாம பேசலாம்..!!"

"எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை.. தயவு செஞ்சு இனிமே இங்க வந்து நின்னு.. இந்த மாதிரி தொந்தரவு பண்ணாதீங்க..!! என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..!!"

"திவ்யா ப்ளீஸ்..!!"

"உங்களுக்கு ஒருதடவை சொன்னா புரியாதா..?? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க..?? உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. போயிடுங்க இங்க இருந்து..!!"

திவ்யா முகத்தில் அறைந்த மாதிரி பேச, திவாகர் நிஜமாகவே திகைத்துப் போனான். அப்பாவியான திவ்யாவா இப்படி எல்லாம் பேசுவது என நம்பமுடியாமல் பார்த்தான். அசோக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என இப்போது வருந்தினான். படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்கிற திவ்யாவின் முதுகையே வெகுநேரம் வெறித்துப் பாத்தவாறு நின்றிருந்தான்.

திவாகரிடம் வீராப்பாக பேசினாலும், திவ்யாவால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்குவது கடினமான காரியமாகவே இருந்தது. தனியாக சென்று அமர்ந்துகொண்டு, தலையை கவிழ்த்துக்கொண்டு நெடுநேரம் அழுவாள். எந்த நேரமும் ஒருவித சோகம் அப்பிய முகத்துடனே சுற்றி திரிந்தாள். தான் முதல்முதலாக கண்ட கனவு இப்படி பாதியில் கலைந்து போனதே என்ற சோகம்..!!


அசோக்கிற்கு திவ்யாவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் விரைவில் அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. முடிந்த அளவுக்கு அவளுடன் அதிகமான நேரத்தை செலவழித்தான். ஏதாவது மொக்கை ஜோக் அடித்து அவளை சிரிக்க வைத்து, அவளுடைய மனதை இலகுவாக்க முயன்றான். அந்த மாதிரியே ஒரு மூன்று நாட்கள் கழிந்தன.

அது ஒரு ஞாயிறுக்கிழமை.. நண்பகல் பதினோரு மணி இருக்கும்..!! காலை உணவு சாப்பிட அக்கா வீட்டிற்கு வந்திருந்த அசோக், அப்புறம் அவ்வளவு நேரம் திவ்யாவின் அறையில்தான் கழித்திருந்தான். சிகரெட் பிடிக்கவேண்டும் போலிருக்க, திவ்யாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகள் ஏறி மொட்டை மாடியை அடைந்தான். அடைந்தவன் அங்கே தன் அக்கா நின்றிருப்பதைக் கண்டதும் திருதிருவென விழித்தான்.

சித்ரா அப்போதுதான் வாஷிங் மெஷின் துவைத்து பிழிந்த துணிகளை, இரண்டு பக்கெட்டுகளில் அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்திருந்தாள். குறுக்கு மறுக்காக கட்டப்பட்டிருந்த கொடிகளில் தொங்கிய கிளிப்புகளை எடுத்தவாறே, கொண்டு வந்திருந்த துணிகளை காயப் போட தயாராகிக் கொண்டிருந்த போதுதான், அவளுடைய தம்பி வந்து அங்கு நின்றான். திருதிருவென விழித்த தம்பியை ஒரு நமுட்டுப்பார்வை பார்த்தவாறே, கேலியான குரலில் கேட்டாள்.

"என்னடா.. புகை விட வந்தியா..?"

"புகையா..?? அ..அதெல்லாம் ஒன்னுலையே..??"

"ஏய்.. நடிக்காதடா..!! எல்லாம் எனக்கு தெரியும்.. வேற எதுக்கு இந்த உச்சி வெயில்ல மொட்டை மாடிக்கு நீ வரப் போற..?"

"ம்ம்.. என்னைய நல்லா புரிஞ்சு வச்சிருக்குற.. சரி நான் போயிட்டு அப்புறம் வரேன்.."

"அடச்சீய்.. இங்க வா..!!"

"என்ன..?"

"தம்மடிக்கத்தான வந்த..?"

"ம்ம்.."

"அப்புறம் எங்க ஓடுற..?"

"அதான் நீ இருக்கியே..?"

"பரவால.. வா.. வந்து அடி.."

"அ..அதெப்படிக்கா உன் முன்னாடி..??" அசோக் இழுத்தான்.

"பரவாலடா.. என் தம்பி தம்மடிக்கிற ஸ்டைல பார்க்கனும்னு எனக்கு கொள்ளை நாளா ஆசை.. வா.. வந்து அடி..!!"

சித்ரா சொல்லிவிட்டு பக்கெட்டில் இருந்த துணி ஒன்றை எடுத்து.. விரித்து பிடித்து.. ஒரு உதறு உதறி.. கொடியில் காயப் போட்டாள். அசோக் கொஞ்ச நேரம் தலையை சொறிந்தவாறே நின்றிருந்தான். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்துக் கொண்டான். தயங்கி தயங்கி புகையை வெளியிட்டான். அசோக் அவஸ்தையாக புகைப்பதையே ஓரக்கண்ணால் பார்த்து சிரித்த சித்ரா, ஒவ்வொரு துணியாக எடுத்து கொடியில் விரித்து போட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு கொடி நெட்டுக்க துவைத்த புடவைகளை விரித்து சித்ரா காயப்போட்டிருக்க, இப்போது அசோக்கிற்கு அந்தப்பக்கம் நின்ற அக்கா கண்ணுக்கு தட்டுப்படவில்லை. துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றான். புகை விட்டுக்கொண்டே அக்காவிடம் கேட்டான்.

"எத்தனை நாளாச்சு தொவைச்சு..? எக்கச்சக்கமா தொவைச்சு எடுத்துட்டு வந்திருக்குற..?"

"ஒருவார அழுக்குடா.. ஒண்ணா சேர்ந்துடுச்சு..!!"

"ம்ம்ம்ம்.."

"அப்பா.. காலைல இருந்து வேலை பெண்டு நிமிந்து போச்சு.."

"ஹ்ஹா.. ரொம்பதான் சலிச்சுகுற..? நீயா எல்லாத்தையும் தொவைச்ச..? வாஷிங் மெஷின்தான தொவைச்சது..?"

"ரொம்பத்தாண்டா கொழுப்பு உனக்கு.. சமைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றதுலாம் எந்த கணக்குல சேர்க்குறது..? நான் ஒருத்தியா கெடந்து அல்லாடுறேன்.. யாருக்காவது கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரேன்..!! உன் பிரண்டு இருக்காளே.. அந்த திவ்யா மகாராணி.. அட்லீஸ்ட் இந்த வேலையவாவது செய்றதுதான..? காலைல இருந்து ஹாயா ரூமுக்குள்ளயே படுத்து கெடக்குறா..!!"

"அவ பாவம்க்கா.. திட்டாத அவளை..!!"

"அவளை சொன்னா உனக்கு பொறுக்காதே..?"

"அப்படி இல்லக்கா.. அவ ரொம்ப நொந்து போயிருக்கா.. கொஞ்ச நாள் அவளை எதுவும் சொல்லாத..!!"

"நொந்து போயிருக்காளா..? ஏன்..?"

"என்ன.. தெரியாத மாதிரி கேக்குற..? எல்லாம் அந்த திவாகர் போனதை நெனச்சுத்தான்..!!"

"அவன் எங்க போனான்..? நீதான் அவனை பத்தி விட்டுட்ட..!!" சித்ரா கிண்டலாக சொன்னாள்.

"வெளையாடதக்கா.. நான் எங்க பத்தி விட்டேன்..? அவங்க பிரிஞ்சதுக்கு நான் ஒன்னும் காரணம் இல்ல..!!"

"அப்புறம் யாரு..??"

"அந்த திவாகர்தான்..!! அவர் சரியில்லக்கா..!!"

"ம்ம்ம்ம்.. எனக்கென்னவோ நீ சொன்னதை இன்னும் நம்ப முடியலைடா..!!"

"எதை..?"

"அதான்.. அந்த திவாகரே உன்கிட்ட வந்து சவால் விட்டான்னு சொன்னியே..!!"

"அட உண்மைதான்க்கா.. அந்த ஆளுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்..!! தன்னை மீறி என்ன நடந்திடப் போகுதுன்னு நெனைப்பு..!!"

"ம்ஹ்ம்ம்.. அவன் போனதுக்காக அவ ஃபீல் பண்றாளோ இல்லையோ.. அக்கா ரொம்ப ஃபீல் பண்றேண்டா தம்பி..!!"

"நீ ஃபீல் பண்றியா..? ஏன்..?"

"ஆமாம்.. நீ அந்த திவ்யாவை உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த.. எனக்கு பக்கு பக்குன்னு இருந்தது..!! அப்போத்தான் அந்த திவாகர் வந்து சேர்ந்தான்.. என் தம்பி தப்பிச்சுட்டான்னு நான் நிம்மதியா இருந்தேன்..!! இப்போ.. மறுபடியும் மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு..!!"

"ஹாஹா..!! நீ பயப்படலாம் தேவையே இல்ல..!!"

"ஏன் அப்படி சொல்ற..?"

"திவ்யாவுக்கு என் மேல லவ்லாம் வரும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே போயிடுச்சுக்கா..!!"

"அவ உனக்காக உருகுறது மருகுறதுலாம் பார்த்தா.. எனக்கென்னவோ அப்படி தோணலை..!! கூடிய சீக்கிரம் அந்த திவாகர்ட்ட வுட்ட லவ் டயலாக்லாம் உன்கிட்ட வுட போறா பாரு..!!"

"ஹாஹா..!! அவ லவ் டயலாக் விடுறாளோ இல்லையோ.. நீ சொல்றதை கேக்குறப்போ எனக்கு குளுகுளுன்னு இருக்குது..!!" அசோக் சிரிப்புடன் சொல்ல, சித்ரா இப்போது கிண்டலான குரலில் சொன்னாள்.

"ஓஹோ.. குளுகுளுன்னு இருக்கா..?? இருக்கும் இருக்கும்..!! பாவிப்பயலே.. உன்னை எவ்வளவு நல்லவன்னு நெனச்சேன்.. இப்படி பண்ணிட்டியடா..?"

"நானா..? நான் என்ன பண்ணினேன்..?"

"உன் லவ் சக்சஸ் ஆகணும்னு.. இல்லாததும் பொல்லாததுமா சொல்லி.. இப்படி ரெண்டு அப்பாவி காதல் கிளிகளை பிரிச்சுட்டியேடா..!! நீ நல்லாருப்பியா..?" நக்கலாக சொன்ன சித்ரா, கிளிப்புகள் எடுப்பதற்காக தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றாள்.

"ஆமாம்.. நான்தான் என் லவ்வுக்காக அவங்க லவ்வை ப்ளான் பண்ணி பிரிச்சுட்டேன்.. ஏன்க்கா நீ வேற..?"

சித்ராவுக்கு பதில் சொல்லிக்கொண்டே அசோக்கும், துணிகளை விலக்கி அந்தப்பக்கம் சென்றான். சென்றவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றான். அங்கே சித்ரா ஒருமாதிரி மிரட்சியாக நின்றிருக்க, அவளுக்கு அருகே திவ்யா முகமெல்லாம் ஆத்திரம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள்..!!!

அதுவரையான தன் வாழ்க்கையில் அந்த மாதிரியான ஒரு மோசமான சூழ்நிலையை அசோக் சந்தித்ததே இல்லை. நடந்ததை நம்ப முடியவில்லை அவனுக்கு..!! விவரம் தெரிந்த நாளில் இருந்தே திவ்யாவின் மீது அவனுக்கு விருப்பம் உண்டு..!! தனது காதலை எப்படி எல்லாம் திவ்யாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் கனவு கண்டிருக்கிறான்.!! ஆனால்.. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதல் அவளுக்கு தெரிய வரும் என்று நிச்சயமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திக்கித்துப்போய் நின்றிருந்தான்..!!

திவ்யாவும் கடந்த ஒரு நிமிடமாக தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாகவே காட்சியளித்தாள். தான் அத்தனை நாட்களாய் நம்பிய அசோக்கா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பது போல அவனையே வெறுப்பாக பார்த்தாள். அவளது கண்கள் கலங்கி, நீரை பொழிய ஆரம்பித்தன. அவளுடைய உதடுகள் படபடத்தன. அந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தவாறே, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள். அப்புறம்..

"ச்சை..!!"

என்று அசோக்கின் மீது ஒரு அருவருப்பான பார்வையை வீசிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். படபடவென படியிறங்கி கீழே சென்றாள். அசோக் திகைத்துப் போனவனாய் தன் அக்காவை திரும்பி பார்த்தான். அவளும் இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

"எ..என்னடா இது.. இப்படி ஆயிடுச்சு..? நான் ஏதோ வி..விளையாட்டுக்கு சொல்லப்போய்..?? இப்போ என்னடா பண்றது..?"

"அ..அதான்க்கா எனக்கும் புரியலை..!!"

"போடா.. போய் அவளை சமாதானப் படுத்து.. போ..!!"

அக்கா சொல்ல அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான். அவனும் அவசரமாக படியிறங்கி கீழே ஓடினான். வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்கதைவை தள்ளி, உள்ளே புகுந்தான்.

உள்ளே.. திவ்யா ட்ரசிங் டேபிள் டிராயரை வெளியே இழுத்து வைத்து.. அதற்குள் எதையோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தாள். அசோக் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அசோக்தான் அவளை அழைத்து அவளுடைய கவனத்தை கலைத்தான்.

"தி..திவ்யா..!!"

இப்போது திவ்யா அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்.

"எங்க வந்த..?" என்று வெறுப்பை உமிழ்ந்தாள்.

"தி..திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!"

"இன்னும் என்ன சொல்லப் போற..? இன்னும் என்னெல்லாம் சொல்லி என்னை பைத்தியக்காரியா ஆக்கப் போற அசோக்..? ம்ம்..??" திவ்யா கத்தினாள்.

"திவ்யா.. ப்ளீஸ்.."

"எப்படி அசோக்.. எப்படி உன்னால இப்படி ஒரு காரியம் செய்ய முடிஞ்சது..?? நான் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்..?? கடவுளை விட உன் மேல நெறைய நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொன்னேனே..?? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா.. அந்த நம்பிக்கைக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பியா..? 'எல்லாம் என் நல்லதுக்காக பண்றேன்.. என் நல்லதுக்காக பண்றேன்..'ன்னு சொல்லிட்டு.. இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே..?? உனக்காக நான் என் காதலையே தூக்கி எறிஞ்சனே.. ஆனா நீ..???? உன் காதலுக்காக.. என் வாழ்க்கைல கேம் ஆடிட்டியே..?? ச்சீய்..!!!"

திவ்யாவின் வார்த்தைகள் அசோக்கின் உடம்பெல்லாம் 'சுளீர்.. சுளீர்..' என சாட்டை சொடுக்கின..!! அவனது உச்சந்தலையில் 'படார்.. படார்..' என சம்மட்டியை இறக்கின..!!

"ஐயோ.. நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்ட திவ்யா..!!"

"இல்ல.. இப்போத்தான் நான் எல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டேன்..!! நீ என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சப்புறந்தான் எனக்கு எல்லாமே தெளிவா புரியுது..!!"

"எ..என்ன சொல்ற நீ..?"

"ஆரம்பத்துல இருந்தே உனக்கு திவாகரை புடிக்கலை.. எங்க லவ்வை புடிக்கலை.. எப்படியாவது எங்க லவ்வை கெடுக்குறதுலயே குறியா இருந்திருக்க நீ.."

"இ..இல்ல திவ்யா..!!"

"நடிக்காத..!! அன்னைக்கு.. திவாகர் என்கிட்டே ஃபர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யூ' சொன்னப்போ.. நான் அவரை லவ் பண்ணலைன்னு சொல்ல சொன்னியே.. ஏன்..?? எங்க காதலை கெடுக்கனும்ன்ற கெட்ட எண்ணம்தான..?" திவ்யா அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, அவன் திணறினான்.

"இ..இங்க பாரு திவ்யா.. அன்னைக்கு நான் அந்த மாதிரி எண்ணத்துல சொன்னது என்னவோ உ..உண்மைதான்.. ஆனா.. அப்புறம்.."

"அப்புறம் என்ன..?? திடீர்னு நல்லவனா மாறிட்டியோ..??"

"உனக்கு புரியலை.. அதுக்கப்புறம்.. அவர் திரும்ப வந்ததுக்கப்புறம்.. நான் நெஜமாவே உங்களை சேர்த்து வைக்க நெனச்சேன்..!!"

"பொய் சொல்லாத அசோக்..!!"

"ஐயோ.. இல்ல திவ்யா.. அதுதான் உண்மை..!!"

"இல்ல.. இல்ல..!! பொய்..!! நீ சொன்ன பொய்யெல்லாம் நான் கேட்டு ஏமாந்தது.. இன்னைக்கு மொட்டை மாடியோட போயிடுச்சு..!! எனக்கு எல்லாம் தெரியும்..!!"

"ப்ளீஸ் திவ்யா.. என்னை நம்பு.. நான் சொல்றது உண்மைதான்..!!" அசோக் கெஞ்சினான்.

"அப்புறம் ஏன் திருவிழா அன்னைக்கு அப்படி சொன்ன..?"

"எ..என்ன சொன்னேன்..?" அசோக் மிரட்சியாகவே கேட்டான்.

"திவாகர் சூசயிட் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தப்போ.. பட்டுன்னு காலை கட் பண்ணிட்டு என்னையும் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினியே.. அது ஏன்..? 'திவாகர் செத்து போயிடட்டும்.. நம்ம ரூட்டு கிளியர் ஆகும்..'னு ஒரு கேவலமான புத்திதான..?? ச்சை..!!!! உன் காதல் சக்சஸ் ஆகுறதுக்காக ஒரு உசுரை கொல்ல கூட தயங்காத பெர்வர்ட் நீ..!! அப்படி என்ன வெறி உனக்கு..??? அப்படி என்ன என் மேல வெறி உனக்கு..???"

திவ்யா ரவுத்திரமாக அலற, அசோக் அப்படியே மிரண்டு போனான். பேச்சிழந்தான். சிறு வயதில் இருந்தே அன்பில் நனைந்த வார்த்தைகளையே திவ்யாவிடம் இருந்து கேட்டறிந்த அசோக், இப்படி அவள் அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அள்ளி வீச.. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வேதனையில் வெந்து துடித்தான். அவனையும் அறியாமல் அவனது கண்கள் பொலபொலவென நீரை வடிக்க ஆரம்பித்தன.

"தி..திவ்யா.. நீயா இப்படி இல்லாம் பேசுற..? நா..நான் உன் அசோக் திவ்யா..!!" என்று பரிதாபமாக சொன்னான்.

"இல்ல.. நீ என் அசோக் இல்லை..!! என் அசோக் ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப நல்லவன்.. என் பெஸ்ட் ஃபிரண்ட்..!! அவன் கொஞ்ச நேரம் முன்னாடி செத்து போயிட்டான்..!! நீ என் எதிரி.. உலகத்துலேயே நான் ரொம்ப ரொம்ப வெறுக்குற நம்பர் ஒன் எதிரி..!! ச்சை.. உன்கூட பேசுறதே பெரிய பாவம்..!! இனிமே பேச மாட்டேன்.. பேசவே மாட்டேன்..!! உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டேன்..!!"

"ஓ..!!! பே..பேச மாட்டியா.. என்கூட பேசகூட மாட்டியா திவ்யா..?"

"ஏன்.. என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..?? என்னைப் பத்தி உனக்கு இன்னும் சரியா புரியலை..!! என்னை மாதிரி யாரையும் விரும்ப முடியாது.. அதே மாதிரி.. என்னை மாதிரி யாரையும் வெறுக்கவும் முடியாது..!! பதினஞ்சு வருஷமாச்சு.. உன் அக்காவோட பேசி..!! அவளாவது என் உடம்புல சூடு போட்டா.. நீ மனசை குத்தி கிழிச்சு தீயில தூக்கி போட்டுட்ட அசோக்..!!"

வெறுப்பாக சொன்ன திவ்யா மீண்டும் அந்த ட்ராயரில் பரபரவென்று எதையோ தேடினாள். அசோக் திக்கித்துப்போய் நின்றிருக்க, திவ்யா தேடியது சில வினாடிகளிலேயே அவளது கையில் சிக்கியது..!! அது.. மூன்று நாட்களுக்கு முன்பாக அவள் கழட்டி தூக்கி எறிந்த சிம் கார்ட்..!! உடனடியாய் அதை தனது செல்போன் கழட்டி செருகிக் கொண்டாள்..!! அணைந்திருந்த செல்போனை உயிர்ப்பித்துக்கொண்டே, அசோக்கிடம் திரும்பி ஆத்திரமாக சொன்னாள்..!!

"நான் என் காதலனோட பேசப் போறேன்.. கதவை மூடிட்டு நீ கொஞ்சம் வெளில போறியா..?? எனக்கு ப்ரைவசி வேணும்..!!"

அவ்வளவுதான்..!!! இதயத்தில் இடி விழுந்தாற்போல ஒரு நிலையை அசோக் அடைந்தான்..!!!! எந்திரம் மாதிரி திரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்..!! உயிரற்ற ஜடம் ஒன்று எழுந்து நடமாடுவது போல.. வீட்டு வாசலை நோக்கி நடந்தான்..!! எதிரே வந்த சித்ரா.. 'தம்பி.. என்னாச்சுடா.. என்னாச்சு.. ஏன்டா ஒரு மாதிரி பாக்குற..?' என்று கேட்டது அவன் காதில் விழவே இல்லை..!!


No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...