Social Icons

நெஞ்சோடு கலந்திடு - 2






அத்தியாயம் 5


காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!!

"அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!"

திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன. தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக காதலித்துக்கொண்டிருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறான். ஆனால் தனக்கு ஏன் கவிதையில் ஈடுபாடு இல்லாமல் போனது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஒருவேளை தன் காதலில் ஏதும் குறை உள்ளதா..? ச்சே..!! இருக்காது..!! முயலவில்லை.. அதனால்தான் கவிதை முளைக்கவில்லை..!!

ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். இன்று திவ்யாவை நினைத்து ஒரு கவிதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும்..!! எப்படி ஆரம்பிப்பது..?? அன்பே என்றா.. அடியே என்றா..?? கண்ணே என்றா.. காதலியே என்றா..?? உயிரே என்றா.. உறவே என்றா..?? ஆரம்ப வார்த்தையிலேயே அடுக்கடுக்காய் குழப்பம்..!! நெற்றியை சொறிந்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தான். எதுவுமே பிடிபடாமல் போக எரிச்சலுக்கும் இயலாமைக்கும் உள்ளானானான்..!!

பேனா பிடித்த அவன் கை சும்மா இராமல், கிறுக்க ஆரம்பித்தது. திவ்யா என்றும்.. ஐ லவ் யூ என்றும்.. வார்த்தைகளை தாறுமாறாக காகிதத்தில் சிந்தியும் சிதறியும் வைத்தது..!! புத்தகங்களில் காணும் புதுக்கவிதைகளை விட, அவளுடைய பெயர் அழகாக இருப்பதாக, அவனது கண்களுக்கு தோன்றிற்று..!! 'சரியான அல்பம்டி நீ.. நீயே ஒரு அற்புதமான கவிதை.. எதுக்குடி உன்னை நெனச்சு கவிதை எழுதனும்னு உனக்கு ஒரு அல்ப ஆசை..?' என்று திவ்யாவிடம் கேட்பதாக மனதுக்குள் சொல்லிப் பார்த்தான். சிரிப்பு வந்தது..!!

அடுத்த கணமே.. ச்சே..!! 'கவிதை எழுத தெரியலை.. அதுக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா..?' என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப.. கடுப்பானான்..!! கிறுக்கிய காகிதத்தை கையில் எடுத்து எரிச்சலுடன் கசக்கி எறிந்தான். எறிந்தவன் அடுத்த கணமே அதற்காக வருந்தினான்..!!

எறியப்பட்ட காகிதம் வாசலில் நின்ற செல்வாவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. ஒருகணம் அசோக்கை திகைப்பாய் பார்த்த செல்வா, பின்னர் குனிந்து அந்த பேப்பரை எடுக்க சென்றார். அசோக் பதறிப்போய் எழுந்து ஓடினான்.

"அண்ணா.. வேணான்னா.. இருங்க.."

"ஏன்.. என்னாச்சு.."

"ஒன்னுல்லன்னா.. அதை கொடுங்க.." என்றவாறு செல்வாவின் கையிலிருந்த காகிதத்தை, அசோக் பறிக்க முயன்றான்.

"ஏன் இப்படி பதர்ற..?? அப்போ இதுல ஏதோ மேட்டர் இருக்குது..!! இரு.. என்னன்னு பாக்குறேன்..!!"

"ஐயோ.. அண்ணா.. வேணாம்.."

"ஏய்.. இருடா..!!"

"அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.."

அசோக் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே, செல்வா பிடிவாதமாக அந்த காகிதத்தை பிரித்தார். கசங்கல் நீக்கி பார்த்தார். பார்த்ததுமே அவர் முகத்தில் பல்பு எரிந்த மாதிரி ஒரு பிரகாசம். அசோக்கிடம் திரும்பி, அவன் மீது ஏளனமாய் ஒரு பார்வையை வீசியபடியே, எள்ளலான குரலில் சொன்னார்.

"ஹ்ஹ.. நாங்கதான் சொன்னோம்ல..?"

"அண்ணா.. அ..அது நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல.." அசோக்கின் குரல் சற்றே பரிதாபமாக ஒலித்தது.

"ஹேய்.. 'திவ்யா ஐ லவ் யூ.. திவ்யா ஐ லவ் யூ..'ன்னு கிறுக்கன் மாதிரி கிறுக்கி வச்சிருக்குற..? நான் நெனைக்கிற மாதிரி இல்லனா.. வேற எப்படி..?"

"அ..அது.. அது வந்து.."

"ம்ம்ம்.. சொல்லு..."

"நா..நான் மட்டுந்தான் அவளை விரும்புறேன்.. அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாது..!! ஜஸ்ட் ஒன்சைட்..!!"

"ஓஹோ..!! அவகிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா..?"

"இ..இல்ல.."

"அப்புறம் எப்படி அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாதுன்னு நீயா சொல்ற..? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..!! அந்தப் பொண்ணு உன்னைத்தான் லவ் பண்றா.. உன்னைத்தான் லவ் பண்றா..!!"

"அட போங்கண்ணா..!! நீங்க வேற.. வயித்தெரிச்சலை கெளப்பாதீங்க..!!! குடுங்க அதை..!!"

அசோக் அவர் கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு சேரில் சென்று அமர்ந்தான். டைரிக்குள் அந்த காகிதத்தை வைத்து மூடினான். அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த செல்வா, அப்புறம் மெல்ல நடந்து அவனுக்கருகில் சென்றார். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, டேபிளில் சாய்ந்து கொண்டார். அசோக்கையே முறைத்து பார்த்தபடி சொன்னார்.

"எனக்கு உன் மேல கோவம்.."

"ஏன்..?"

"லவ் பண்ணிட்டு இத்தனை நாளா 'இல்ல இல்ல' ன்னு என்னை ஏமாத்திட்டு இருந்தேல்ல..?"

"ப்ச்.. டபுள் சைடா இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேண்ணா..!! இது.. நான் மட்டுந்தான்.. அதான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கம்.."

"இருந்தாலும்.. உன் மேல எனக்கு கோவம்.. கோவந்தான்..!!"

"சரி.. அதுக்கு..???"

"உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்.."

"என்ன தண்டனை..?"

"இன்னைக்கு நீ தண்ணியடிக்கிற..!!" செல்வா சொல்ல, அசோக் பக்கென அதிர்ந்தான்.

"ஐயோ.. அண்ணா..!! அந்த தண்டனை மட்டும் எனக்கு வேணவே வேணாம்.."

"நோ நோ..!! நான் முடிவு பண்ணிட்டேன்.. இன்னைக்கு நீ தண்ணியடிச்சே ஆகணும்.."

"வெளையாடாதீங்கண்ணா.. எனக்கு இன்னைக்கு தண்ணியடிக்கிற மூடுலாம் இல்ல.."

"உனக்கு மூடு இருக்கா இல்லையான்லாம் எனக்கு கவலை இல்ல.. வா.. கெளம்பு..!!"

"அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.."

"கெளம்புடா.. எந்திரி.. பேன்ட்டை மாட்டு.."

அசோக் கெஞ்ச கெஞ்ச, செல்வா அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். தண்ணியடிக்க அசோக்கிற்கு பெரிதாக மூடேல்லாம் தேவையில்லை. 'எங்க வீட்டு குழாய்ல இன்னைக்கு தண்ணி வரலைடி..' என்று சாலையை கடக்கும் யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருந்தால் கூட.. அது இவன் காதில் வந்து விழுந்துவிட்டால்.. அவ்வளவுதான்..!! அது போதும் அவனுக்கு..!!

அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதம் என்கிறீர்களா..? செல்வாவுடன் சேர்ந்து ஒருமுறை தண்ணியடித்திருக்கிறான். அதன் பிறகு அந்த தவறை செய்யவே கூடாது என்று ஒரு முடிவு கட்டியிருந்தான். அதனால்தான் அந்த தயக்கம்..!! 'செல்வா அளவுக்கதிகமாக குடித்துவிட்டு ரவுசு செய்வாராக இருக்கும்' என்று எண்ணி விடாதீர்கள். அதுவும் இல்லை.. செல்வாவுக்கு குடிப்பழக்கமே கிடையாது..!! இது வேறு மாதிரி பிரச்னை..!!

"ஆஃப் தந்தூரி சிக்கன் வாங்குனா.. போதும்லண்ணா..?"

"ஃபுல்லாவே வாங்கிடு அசோக்..!! அதுல என்ன கஞ்சத்தனம்..?? அப்புறம்.. ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிட்டிருக்கியா நீ..?"

"ம்ம்.. சாப்பிட்டிருக்கேண்ணா..!!"

"இருந்தாலும் இந்த ஹோட்டல்ல சாப்பிட்டிருக்க மாட்ட… அதுவும் ஒன்னு சொல்லிடு.."

"நெறைய ஆர்டர் பண்ற மாதிரி இருக்குண்ணா.. வேஸ்ட்டா போயிட போகுது.."

"வேஸ்ட்லாம் ஆவாது.. நீ ஆர்டர் பண்ணு..!!"

அசோக் செல்வாவையே பரிதாபமாக பார்த்தான். செல்வா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகும் நிறைய உயிரினங்களின் பெயரையும், அவற்றின் உடல் உறுப்புகளின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்டர் குறித்துக்கொண்டவனின் முகம் அகலமாகிக் கொண்ட சென்றது. எல்லாவற்றையும் பார்சல் கட்டிக்கொண்டு இருவரும் அறைக்கு திரும்பினார்கள். அசோக் ஒருமாதிரி நொந்துபோன குரலில் சொன்னான்.

"சரக்கு நூறு ரூபாய்தான்.. சைடிஷ் எழுநூறு ரூபாய்க்கு வாங்கிருக்குண்ணா.."

"இருக்கட்டும் அசோக்.. என்னைக்கோ ஒருநாள் குடிக்கிற.. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்காத..!! காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..!!"

"ஓஹோ.. அப்படியா..? உங்க பர்த்டே ட்ரீட் குடுக்குறப்போ.. காசை பத்தி வேற மாதிரி சொன்னீங்களே..?"

"என்ன சொன்னேன்..?"

"ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் அசோக்குனு.."

"அப்படியா சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லையே..?"

செல்வா அப்பாவியாய் நடிக்க, அசோக்கால் அவரை முறைத்து ஒரு பார்வை மட்டுந்தான் பார்க்க முடிந்தது. அடுத்தவன் காசு மட்டும் இன்னைக்கு இன்கமிங் நாளைக்கு அவுட்கோயிங்.. ஆனா இவர் காசை மட்டும் கவுன்ட் பண்ணித்தான் காவேரில கடாசுவாரு..!! மனதுக்குள் நொந்து கொண்டான்..!!

அறைக்கு திரும்பியதும், கட்டிக்கொண்டு சென்றதை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அசோக் விஸ்கியையும்.. செல்வா சைடிஷையும்..!! என்னவோ.. நாளைக்கே உலகம் அழிந்து விடப்போவது போல.. செல்வா சிக்கனையும், மட்டனையும் கடித்து குதறினார். அவர் மிச்சம் வைத்த பீஸ்களை கடித்தபடியே அசோக் விஸ்கியை விழுங்கினான். இறுதியாக ஒரு மடக்கு விஸ்கியும், ஒரே ஒரு சிக்கன் பீஸும் மிச்சம் இருந்தது. அசோக் அந்த ஒரு மடக்கையும் உள்ளே ஊற்றிவிட்டு தேடியபோது, அந்த சிக்கன் பீஸ் செல்வாவின் வாய்க்குள் அரைபட்டு கூழாகியிருந்தது.

அசோக் செல்வாவை சற்றே வெறுப்புடன் பார்த்தான். அவர் அவனை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. 'ஏஏஏஏவ்...!!!' என்று ஒரு ஏப்பத்தை வெளிப்படுத்தியவாறு, சுவரில் சாய்ந்துகொண்டார். ஒரு குச்சியை எடுத்து பல்சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊத.. அவன் கண்கள் செருகின.. தலை சுழன்றது..!! இருவருமே இப்போது ஒரு மயக்கத்தில் இருந்தார்கள். அசோக்கிற்கு மது மயக்கம். செல்வாவிற்கு உண்ட மயக்கம்..!! அப்போதுதான் அசோக் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை தயங்கி தயங்கி செல்வாவிடம் கேட்டான்.

"அண்ணா.."

"ம்ம்.."

"எனக்கு ஒரு சந்தேகம்.. உங்ககிட்ட கேட்கவா..?"

"கேளு.."

"காதலிச்சாதான் கவிதை வருமா..?"

"ஏன்.. காப்பியடிச்சா கூட வருமே..?" அவர் வெடுக்கென சொல்ல, அசோக் அவருடைய பதிலில் அப்படியே ஆடிப்போனான்.

"அண்ணா.. எப்படிணா இப்டிலாம்..?? பின்னிட்டீங்க..!! நீங்க இதுவரை சொன்ன தத்துவத்துலயே இதுதான் சூப்பர்..!!"

"தேங்க்யூ.. தேங்க்யூ..!! அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்..??"

"அ..அது.."

"எது..?"

"அந்தப் பொண்ணு இருக்குல்லண்ணா..?"

"கண்மணியா..?"

"அடச்சை.. திவ்யாண்ணா..!!"

"ம்ம்.. ஆமாம்.. இருக்கு..!! அதுக்கென்ன..?"

"போன வாரம் அவகிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவளுக்கு காதலனா வரப் போறவன் எப்படி இருக்கணும்னு.."

"சரி.."

"என்னென்னவோ சொல்றாண்ணா அவ..!! தண்ணியடிக்க கூடாதாம்.. தம்மடிக்க கூடாதாம்.. சைட் அடிக்க கூடாதாம்.. சாஃப்ட்வேர் பையன் வேணாமாம்.."

"ஓஹோ..!!"

"எ..எனக்கு.. எனக்கு எல்லா கண்டிஷனும் ஓகேண்ணா.. நான் மாத்திக்குவேன்.. தம்மு, தண்ணி எல்லாம் விட்ருவேன்.. என் வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு.. வேற வேலை தேடிப்பேன்..!! ஆனா.. அவ.. அவளுக்கு வரப் போறவனுக்கு கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்னு சொல்றாண்ணா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.. எனக்கு வர மாட்டேன்னுது..!! என்னண்ணா பண்ணலாம்..?"

அசோக் அந்த மாதிரி ஒரு கேள்வியை முன்வைத்ததும், செல்வா அமைதியானார். தீவிரமாக எதையோ சிந்தித்தார். அப்புறம் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.

"அசோக்.. நான் ஒரு கதை சொல்றேன் கேக்குறியா..?"

"கதையா..???" அசோக் சற்றே மிரள, செல்வா அதை கண்டுகொள்ளாமல் ஆரம்பித்தார்.

"எங்க கிராமத்துல ரமா ரமான்னு ஒரு பொண்ணு இருந்தது.. அழகான பொண்ணு, அப்பாவிப் பொண்ணு.. வெகுளிப் பொண்ணு, வெள்ளந்தியான பொண்ணு..!! அப்போ.. எங்க ஊருக்கு ட்ராமா போடுறதுக்கு ரமேஷ்னு ஒருத்தன் வந்தான்.. தார்ல குளிச்ச காட்டெருமை மாதிரியே இருப்பான்..!! அவன் வாயை தெறந்தா.."
"கப்படிக்குமா..?"

"இல்ல.. கவிதையா கொட்டும்..!! அவனுக்கும் ரமாவுக்கும் எப்படியோ பழக்கம் ஆயிடுச்சு.. அவன் ரமாகிட்ட கவிதையாத்தான் பேசுவான்.. 'எருமை சாணம் அள்ளிட்டியா'ன்னு கேக்குறதை கூட.. எதுகை மோனையோடத்தான் கேட்பான்..!! ரமா அவன் பேச்சுல மயங்குனா.. அவனை கண்மூடித்தனமா காதலிக்க ஆரம்பிச்சா..!!"

"ம்ம்.. அப்புறம்..?"

"ஒருநாள் ரெண்டு பெரும் ஊரை விட்டு ஓடுனாங்க.. ரயில்ல போயிட்டு இருக்குறப்போவே.. எதுத்த சீட்டுல உக்காந்திருக்குற பொண்ணை ரமேஷ் உஷார் பண்ணிட்டான்.. ரமா கொண்டு வந்த நகையை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு.. எதுத்த சீட்டு பொண்ணோட.. பாதி வழியிலயே ஜூட் வுட்டுட்டான்..!! மெட்ராஸ் வந்து முழிச்சு பாத்த ரமா.. அனாதையா நடுத்தெருவுல நின்னா..!! இப்படி ஒருத்தன் பேசிப்பேசியே ஏமாத்தி.. நம்ம வாழ்க்கையை சீரழிச்சுட்டானேனு.. மனம் குமுறிப்போய் நின்னா..!! அப்புறம் அவளை பாபுன்னு ஒரு நல்ல மனுஷன் ஏத்துக்கிட்டான்.. அது வேற கதை.."

"அண்ணா.. இந்தக்கதையை நான் ஏதோ பாரதிராஜா படத்துல பாத்திருக்கேன்.." அசோக் அப்படி சொல்ல, செல்வா இப்போது பம்மினார்.

"ஓ..!! அந்தப்படத்தை நீ பாத்துட்டியா..?"

"ஏண்ணா இப்படி இருக்குறீங்க..? என் உயிர்த்தோழன் கதையை என்கிட்டயே விடுறீங்க..?"

"சரி சரி.. அதை விடு.. நான் எதுக்கு இந்தக்கதையை சொல்ல வந்தேன்னு உனக்கு புரியுதா..?"

"எதுக்கு..??"

"நீ தண்ணியடிக்கிறது, தம்மடிக்கிறது, கவிதை எழுத தெரியாம இருக்குறது.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்.."

"அப்புறம்.. வேற எது மேட்டர்..?"

அசோக் கேட்டதும் செல்வா ஒரு கணம் அமைதியானார். அவன் முகத்தை ஒருமாதிரி கூர்மையாக பார்த்தார். அப்புறம் அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார்.

"நீ திவ்யாவை எந்த அளவுக்கு உண்மையா லவ் பண்றேன்றதுதான் மேட்டர்..!! நீ அவளை எந்த அளவுக்கு லவ் பண்ற..?"

"அண்ணா.. உயிரையே கொடுப்பேண்ணா.. சின்ன வயசுல இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..!!"

"அப்புறம் என்ன..? தைரியமா போய் உன் லவ்வை அவகிட்ட சொல்லு..!! உன் காதல் உண்மையா இருந்தா.. கண்டிப்பா அது சக்சஸ் ஆகும்..!!"

சொல்லிவிட்டு செல்வா மீண்டும் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். விட்டத்தை வெறித்து பார்த்தபடி பல் குத்த ஆரம்பித்தார். அசோக்கும் இப்போது அமைதியானான். சிகரெட் புகையை நுரையீரலுக்கு அனுப்பியவாறே, சிந்தனையில் ஆழ்ந்தான். செல்வா சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. 'தனது காதல் உண்மையானதுதானே..? அப்புறம் ஏன் இந்த தயக்கம்..?' உண்மைக்காதலை உடைத்து சொல்ல.. ஏன் பயம் கொள்ள வேண்டும்..?? காதல் செய்பவர்களுக்கு அவர்களுடைய காதலை தவிர வேறு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது..?

சிகரெட் விரலை சுட ஆரம்பித்ததும், அசோக் அதை ஆஷ் ட்ரேயில் வைத்து நசுக்கினான். எங்கோ உறைந்து போன பார்வையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த செல்வாவிடம் மெல்ல கேட்டான்.

"அப்போ.. நாளைக்கே திவ்யாட்ட என் லவ்வை சொல்லிடவாண்ணா..?"

"நீ சொல்றியோ இல்லையோ.. நான் சொல்லப்போறேன்.." அவர் பதிலை கேட்டு

"அண்ணா..." என அசோக் அலறினான்.

"ஐயையே.. நான் நாளைக்கு கண்மணிட்ட என் லவ்வை சொல்லப் போறேன்னு சொன்னேன்பா..!!"

"நல்லவேளை.. நான் பயந்தே போயிட்டேன்..!!"

"நீ எதுக்கு பயப்படுற அசோக்..? திவ்யா உன்னைத்தான் லவ் பண்றா.. அவ கண்ணுல நான் அந்தக்காதலை பார்த்தேன் அசோக்.. தைரியமா போய் சொல்லு.. அவ உன் லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!!"

"ம்ம்.. சரிண்ணா.."

"ம்ஹ்ஹ்ம்ம்.. எனக்குத்தான் நாளைக்கு என்னாகப் போகுதோ தெரியலை.."

வருத்தமான குரலில் சொன்ன செல்வாவை பார்க்க, அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனுஷன் காதலுக்காக ரொம்ப ஏங்குகிறார் என்று தோன்றியது. அவ்வளவு நேரம் தன்னை உற்சாகப்படுத்திய அவருக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணினான்.

"நீங்களும் ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்கண்ணா.. கண்டிப்பா கண்மணியும் உங்க லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!! தைரியமா போய் சொல்லுங்க..!!"

"நெஜமாவா சொல்ற..?" உடனே, சோர்ந்து போயிருந்த செல்வாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.

"ஆமாண்ணா.. அவளும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லப் போறா பாருங்க..!!"

"அசோக்.. நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுனா.. நான் உன் சக்கரைக்கு வாய் போடுறேன்.."

"அண்ணா...!!!!!" அசோக் இப்போது பெரிதாக அலறினான்.

"ச்சை.. ஸாரி அசோக்.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு..!! உன் வாய்க்கு சக்கரை போடுறேன்..!!"

"சரக்கடிச்சது நான்.. டங் ஸ்லிப் ஆகுறது உங்களுக்கா..? சைடிஷ் தின்னதுக்கே.. ரொம்ப உளர்றீங்கண்ணா நீங்க..!!"




அத்தியாயம் 6


அடுத்த நாள் மாலை.. அசோக் சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டான். திவ்யாவிடம் இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்திருந்தான். அவள் ஐந்தரைக்கெல்லாம் கல்லூரியில் இருந்து திரும்பி விடுவாள். அதற்குள் தானும் வீட்டை அடைந்து விடவேண்டும். அவளை எங்காவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும். மனதில் உள்ள காதலை துணிந்து சொல்லிவிட வேண்டும்..!!

தனது காதலை எப்படி அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்கும்.. இரவே அவன் ஒத்திகை பார்த்துவிட்டான்..!! வார்த்தைகளை தேடித்தேடி தேர்ந்தெடுத்து.. மாலை போல கோர்த்து.. மனதுக்குள் வைத்திருந்தான்..!! அவ்வாறு அவன் ஒத்திகை பார்க்கையிலே.. சினிமாவில் நாயகர்கள் காதல் சொல்லும் காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. காதலை சொல்லுகையில் ஒரு கார்டும், ஒற்றை ரோஜாவும் கைவசம் இருந்தால் நல்லது என்று தோன்றியது..!!

அவன் தங்கியிருக்கும் அறைக்கு அருகாமையிலேயே ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ஆபீசில் இருந்து கிளம்பியதும் அசோக் நேராக அங்கேதான் சென்றான். ஆறு தளங்கள் கொண்ட அந்த காம்ப்ளக்ஸ்சின் நான்காவது தளத்தில்தான் அந்த கிரீட்டிங் கார்ட் அண்ட் கிஃப்ட் ஷாப் இருக்கிறது. விதவிதமான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்பு பொருட்களும்.. குவித்தும் அடுக்கியும் வைக்கப்பட்டிருந்த.. மிகப்பெரிய கடை..!!

அசோக் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் செலவழித்து அந்த அட்டையை தேர்வு செய்தான். மாலை நேர மலையோரத்தில்.. நிழலுருவாய் தழுவிக்கொள்ளும்.. காதலனும் காதலியும்..!! உள்ளே திறந்து பார்த்தால்.. இரத்த நிறத்தில் துடிக்கும் இருதயம்..!! அருகிலேயே.. அசோக் திவ்யாவிடம் சொல்ல நினைத்த வார்த்தைகளுக்கு நெருங்கி அர்த்தம் வரக்கூடிய.. ஆங்கில சொற்றொடர்கள்..!! இறுதியாக கீழே.. இட்டாலிக் ஸ்டைலில்.. I Love You..!!

பார்த்ததுமே பிடித்துப்போக, அசோக் அதை எடுத்துக் கொண்டான். அநியாய விலை கேட்ட, பில் போடும் பெண்ணிடம், புன்னகை மாறாமல் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். பில்லிங் கவுண்டருக்கு அருகிலேயே, விற்பனைக்கு இருந்த சிவப்பு ரோஜா ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு,

"இதையும் பில்-ல சேர்த்துக்கோங்க..!!" என்றான்.

இரண்டையும் ஒரு கவரில் வைத்து வாங்கிகொண்டான். தன் தோளில் கிடந்த பேக் திறந்து உள்ளே வைத்தான். பேகை மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டு, 'ஆல் தி பெஸ்ட்' என்று புன்னகைத்த அந்த பெண்ணுக்கு, ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக பட்டன் ப்ரஸ் செய்துவிட்டு காத்திருந்தான்.

அவனுடைய இதயம் முழுக்க ஒருவித படபடப்பும், ஒருவித நிம்மதியும் சரிவிகிதத்தில் நிறைந்திருந்தது. தனது காதலுக்கு திவ்யா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தினால் ஏற்பட்டது அந்த படபடப்பு..!! ஆனால்... இத்தனை நாளாய் மனதுக்குள்ளேயே காதலை பூட்டி பூட்டி வைத்து அனுபவித்த வேதனை.. இன்றோடு தீரப்போகிறது என்ற நினைவு.. அதே அளவு நிம்மதியையும் அசோக்கிற்கு கொடுத்திருந்தது..!!

லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டான். கும்பலாக இருந்தது லிஃப்ட்..!! அசோக்கிற்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைத்தது. நெருக்கியடித்து நின்றுகொண்டான். அந்த கார்டை இன்னொரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது. பேக் திறந்து கார்டையும் ரோஸையும் எடுத்தான். கார்ட் பிரித்து.. உள்ளே எழுதியிருந்த வரிகளை இன்னொரு முறை வாசித்தான்..!! தன் இதயத்தில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்கப் போகும் அந்த வரிகளை பார்த்ததும்.. அவனுடைய இதழ்களில் அவனையும் அறியாமல் ஒரு புன்னகை..!!

எங்கோ கனவுலகில் மிதந்து கொண்டிருந்த அசோக், க்ரவுண்ட் ஃப்ளோர் வந்து, ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு இறங்கிய போதுதான்.. நனவுலகுக்கு திரும்பினான். எல்லோருக்கும் வழிவிட்டு லிஃப்ட் உள்ளேயே ஒதுங்கி நின்றான். கையில் இருந்த கார்டையும், ரோஸையும் திரும்பவும் பேகுக்குள் திணித்தான். பேகை தோளுக்கு கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன், அதிர்ந்து போனான்..!! லிஃப்டில் இருந்து எல்லோரும் இறங்கி சென்றிருக்க, அந்தப்பெண் மட்டும் இறங்காமல், இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்.. அவனுடைய அக்கா... சித்ரா..!! அவளுடைய கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை..!!

"அ..அக்கா.. நீ.. நீ எங்க இங்க..?" என்று தடுமாறினான்.

"கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது.." சித்ராவின் குரல் ஒருமாதிரி இறுக்கமாக ஒலித்தது.

"எ..எந்த ஃப்ளோர்ல ஏறுன..?" கேட்டுக்கொண்டே அசோக் லிஃப்ட் விட்டு வெளியே வர,

"சிக்ஸ்த் ஃப்ளோர்ல..!!" பதிலளித்துக்கொண்டே சித்ராவும் வெளியே வந்தாள்.

"ஓ.. நான் ஏறுனப்போவே உள்ள நின்னுட்டு இருந்தியா..? நான் கவனிக்கவே இல்ல.."

"ம்ம்.. ஆமாம்.. நீ என்ன இந்தப்பக்கம்..?"

"நா..நான்.. நான் சும்மா... சும்மாதான்க்கா வந்தேன்..!!"

"ம்ம்.. பைக்லதான வந்த..?"

"ஆ..ஆமாம்.. வெளில நிப்பாட்டிருக்கேன்.."

"வா.. என்னை வீட்டுல விட்ரு..!!"

சித்ரா சொல்லிவிட்டு விடுவிடுவென முன்னால் நடக்க, அசோக் பரபரவென தன் தலையை சொறிந்தவாறே அவளுடைய முதுகை பார்த்துக் கொண்டிருந்தான். 'பாத்திருப்பாளோ..? அவள் பேச்சே சரியில்லையே..? மேலே இருந்து கீழே வரும் வரை சைலன்ட்டாக என்னையே வாட்ச் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறாளே..? பாத்திருப்பாள்..!! அப்புறம் ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாள்..?? ஒருவேளை பாத்திருக்க மாட்டாளோ..?? வேறு ஏதோ எரிச்சலை என்னிடம் காட்டுகிறாளோ..??' எதுவும் புரியவில்லை அவனுக்கு..!!

அசோக் பார்க்கிங் ஏரியா சென்று பைக்கை கிளப்பிக் கொண்டு வந்தான். சித்ரா காம்ப்ளக்ஸ் வாசலில் தயாராக காத்திருந்தாள். அவளுக்கு முன்னால் வந்து அசோக் பைக்கை நிறுத்தியதும் ஏறிக்கொண்டாள். அவனுடைய தோளைப் பற்றிக்கொண்டாள். அக்கா ஏறிக்கொண்டதும் அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கினான். அவளுடைய அப்பார்ட்மன்ட்ஸ் இருக்கும் சாலையில் வண்டியை விரட்டினான்.

"ஓவர் ஸ்பீட் ஒடம்புக்கு நல்லது இல்ல தம்பி.. கொஞ்சம் மெதுவா போ..!!"

சித்ரா இரட்டை அர்த்தத்தில் சொல்ல, அசோக்கிற்கு 'ஜிலீர்...!!!' என்று மனதுக்குள் ஒரு நடுக்கம்..!! அவனுடைய வலக்கை ஆட்டோமேடிக்காக வண்டியின் வேகத்தை குறைத்தது..!!



அத்தியாயம் 7

இரண்டே நிமிடத்தில் அந்த அப்பார்ட்மன்ட்சை அடைந்தார்கள். வேகத்தை குறைத்து பிரேக் இட்டதும் சித்ரா இறங்கிக்கொண்டாள். க்ளட்சை பிடித்தவாறே..

"நான் ரூம் போயிட்டு அப்புறம் வரேன்க்கா.." என்றான் அசோக் எஸ்கேப் ஆகும் எண்ணத்துடன்.

"மேல வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

சித்ரா கடுகடுப்புடன் சொல்லிவிட்டு அவனை கடந்து செல்ல, அசோக்கிற்கு வேறு வழி தெரியவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி லாக் செய்துவிட்டு, தன் அக்காவின் பின்னால்.. அறுக்கப்போகிற ஆடு மாதிரி நடந்து சென்றான். லிஃப்டில் ஏறிக்கொண்டார்கள். நாலாவது ஃப்ளோர் வந்து லிஃப்ட் விட்டு இறங்கும் வரை சித்ரா எதுவும் பேசவில்லை. உம்மென்று இருந்தாள். அசோக்கும் தேமே என்று விழித்தவாறே சென்றான்.

கதவை திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழையும் போதுதான் சித்ரா ஆரம்பித்தாள். ரொம்பவே இறுக்கமான குரலில் கேட்டாள்.

"திவ்யாவுக்கா..? வேற எவளுக்குமா..?"

"எ..எது..?" என்றான் அசோக்.. திணறலாகவும், புரியாதவன் மாதிரியும்.

"நடிக்காதடா..!! உன் பேக்ல இருக்குற அந்த கார்டும் ரோஸும் யாருக்குன்னு கேட்டேன்..!!"

"அ..அது.."

"ம்ம்.. சொல்லு.."

அசோக் தடுமாறினான். அவன் அக்கா கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவன் கண்களையே கூர்மையாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! அசோக்கிற்கு தான் மாட்டிக்கொண்டோம் என்பது தெளிவாக விளங்கிப் போனது. இனியும் எதையும் மறைக்க முடியாது என்று தோன்றியது. சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். அக்காவின் பார்வை உஷ்ணத்தை தாங்க முடியாமல்.. தலையை குனிந்தவாறே.. தயங்கி தயங்கி சொன்னான்.

"தி..திவ்யாதான்..!! வே..வேற யாரு..??"

அவன் சொல்லி முடிக்கும் முன்பே, சித்ரா பட்டென உச்சபட்ச கோபத்துக்கு சென்றிருந்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. பார்வையின் வெப்பம் பலமடங்கு அதிகரித்தது. குரலை உயர்த்தி கத்தினாள்.

"உனக்குலாம் புத்தின்றதே கொஞ்சம் கூட கிடையாதா..??"

"என்னாச்சு இப்போ..?"

"பின்ன என்ன.. உலகத்துல வேற பொண்ணே உனக்கு கிடைக்கலையா.. லவ் பண்றதுக்கு..?"

"ஏன்.. திவ்யாவுக்கு என்ன..? அவளுக்கென்ன கொறைச்சல்..??"

"என்ன கொறைச்சலா..?? என்ன இருக்கு அவகிட்ட..?? திமிரு.. புடிவாதம்.. தான்தான்ற அகம்பாவம்..!! காலேஜ் நாள்லயே எட்டு மணிக்குத்தான் எந்திரிக்கும் சோம்பேறி கழுதை.. திங்கிறதுக்கு என்ன இருக்குன்னு பாக்குறதுக்கு தவிர கிச்சன் பக்கமே எட்டிப் பாக்க மாட்டா..!! யார்கிட்ட எது பேசுனாலும் ஒரு எதிர் வாதம்..!! இவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்திடலாம்னு நீ நெனைக்கிறியா..?"

"ப்ச்.. இதுலாம் ஒண்ணும் பெரிய கொறையா எனக்கு தெரியலைக்கா.. மேரேஜ் ஆயிட்டா.. எல்லாம் சரியாயிடுவா..!!" அசோக்கும் இப்போது சற்றே தைரியமாக பேசினான்.

"கிழிச்சா..!! ஒன்னு சொல்புத்தி இருக்கனும்.. இல்லனா சுயபுத்தி இருக்கனும்.. இவளுக்கு ரெண்டும் கெடயாது..!!! இவளாவது திருந்துறதாவது..? இவ கடைசி வரை இப்படியேத்தான் இருக்கப் போறா..!!"

"நீ சொல்ற மாதிரிலாம் இல்லக்கா அவ.. ரொம்ப நல்லவ..!! உனக்கு அவ மேல காரணமே இல்லாம கண்மூடித்தனமா கோவம்.. அதான் எல்லாமே தப்பா தெரியுது..!!" அசோக் அப்படி சொன்னதும், சித்ரா அவனை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள்.

"ஓஹோ..? நான்கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாத்தாண்டா உன்னை மயக்கி வச்சிருக்கா..!! எங்க போனாலும் ரெண்டு பேரும் ஒண்ணா போறதும்.. ஒண்ணா வர்றதும்.. இளிச்சு இளிச்சு அவ உன்கிட்ட பேசுறதும்..!! அப்போவே நெனச்சேன்..!!"

"அக்கா.. என்ன பேசுற நீ..?? அவ ஒன்னும் அப்படிலாம் இல்ல..!! நான்தான் அவளை லவ் பண்றேன்.. அவ அந்த மாதிரிலாம் என்கிட்டே எப்போவும் பேசுனது இல்ல.. நானும் அவகிட்ட எதுவும் சொன்னது இல்ல..!! இன்னைக்குத்தான் என் மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லலாம்னு.."

"ஓஹோ..?? இன்னைக்குத்தான் உங்க காதலை அந்த மகாராணிகிட்ட சொல்லப் போறீங்களோ..?"

"ம்ம்.. ஆ..ஆமாம்.."

"இங்க பாரு அசோக்.. அக்கா சொல்றதை கேளு..!! அந்த கார்டை கிழிச்சு குப்பைல போட்டுட்டு உன் ரூமுக்கு போ.. அவளை மறந்திடு..!! அவளை விட சூப்பரான பொண்ணா.. அக்கா உனக்கு பார்த்து கட்டி வைக்கிறேன்..!! அக்காவை நம்பு.. அக்கா சொன்னா கேட்பேல..?"

"ம்ஹூம்.. எ..எனக்கு திவ்யாதான் வேணும்.."

"ஐயோ..!! ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..? இப்போத்தான் ஒண்ணை பேசி சமாளிச்சு.. அடக்கி வச்சிருக்கேன்.. இப்போ நீ ஆரம்பிக்கிற..?"

"அடக்கி வச்சிருக்கியா..? அது யாரை..?"

"ம்ம்..?? உன் அத்தானை..!!"

"எதுக்கு..?"

"திவ்யாக்கும் உனக்கும் முடிக்கலாம்னு அவருக்கு ஒரு ஆசை.. 'உன் தம்பி ஒத்துப்பானா..?'ன்னு எங்கிட்டயே வந்து கேக்குறாரு..!! அதுலாம் வேணாம்னு சொல்லிப்பாத்தேன்.. அப்புறமும் விடாம நைசா ரெண்டு தடவை கேட்டாரு..!! வந்துச்சு எனக்கு கோவம்.. புடிச்சு ரெண்டு ஏறு ஏறுனேன்.. அந்த மாதிரி நெனைப்புலாம் மனசுல வச்சுக்கவே வச்சுகாதீங்கன்னு..!! போட்ட போடுல.. இப்போத்தான் வாயை மூடிக்கிட்டு கம்முனு கெடக்காரு..!! பிரச்னை முடிஞ்சதுன்னு நான் நிம்மதியா இருக்குறேன்.. இப்போ நீ புதுசா ஆரம்பிக்கிற..?"

"புதுசாவா..?? நான் சின்ன வயசுலயே ஆரம்பிச்சுட்டேன்க்கா.. அப்போ இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!"

"எ..என்னடா சொல்ற..??" சித்ராவின் முகத்தில் இப்போது ஒரு கலக்கம் தெளிவாக தெரிந்தது.

"இங்க பாருக்கா..!! அத்தானை வேணா நீ ஈசியா மாத்திருக்கலாம்.. இவன் இல்லைன்னா இன்னொரு மாப்பிள்ளையை தங்கச்சிக்கு பாக்கலாம்னு.. அவரும் ஈசியா மனசை மாத்திட்டு இருந்திருப்பாரு..!! ஆனா.. என்னை அவ்ளோ ஈசியா மாத்திற முடியாது.. திவ்யா இல்லன்னா இன்னொருத்தின்னு.. என் மனசு என்னைக்கும் நெனைக்காது..!!"

அசோக் உறுதியாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல, சித்ரா ஆடிப்போனாள். உடல் சோர்ந்து போன மாதிரி அவளுக்கொரு உணர்வு. தன் தம்பியின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஓ..!! அப்போ நீ அக்கா சொல்றதை கேட்கமாட்ட..? அவதான்னு முடிவே பண்ணிட்ட..?"

"ஆமாம்..!! அவளைத்தான் காதலிக்கிறேன்.. அவளைத்தான் கட்டிப்பேன்..!!" அசோக் சொல்ல,

"அப்போ.. உனக்கு அக்கான்னு ஒருத்தி இருக்குறதையே மறந்துடு..!!"

வெடுக்கென சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நடந்தாள். அசோக் பதறிப் போனான். ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தவன், அப்புறம் சுதாரித்துக்கொண்டு அக்காவின் பின்னால் ஓடினான்.

"அக்கா.. நில்லுக்கா.. என்ன பேசுற நீ..?"

"பின்ன என்னடா..? அவதான் முக்கியம்னா போ.. 'ஐ லவ் யூ'ன்னு அவகிட்ட போய் சொல்லு.. அவளும் ஈன்னு இளிச்சுக்கிட்டு.. 'ஸேம் டூ யூ'ன்னு சொல்வா..!! ரெண்டு பேரும் காதல் பண்ணுங்க.. கல்யாணமும் பண்ணிக்கோங்க..!! ஆனா.. உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்னு மட்டும் கனவுலயும் நெனச்சிடாத.." சித்ரா படபடென பொரிந்து தள்ள,

"அக்கா.. என்னக்கா இது.." சித்ராவின் தோளைப் பற்றியவாறு அசோக் பரிதாபமாக சொன்னான்.

"சத்தியமா வரமாட்டேன் அசோக்..!! என் கல்யாணத்தப்ப.. என் கையை பிடிக்க வராம.. ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவ அவ..!! அவ கல்யாணத்துக்கு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு நான் வந்து நிப்பேன்..? சத்தியமா வரமாட்டேன்..!!"

"ஐயோ.. இப்டிலாம் பேசாதக்கா..!! ஏன்க்கா இப்படி இருக்குற..? சின்ன வயசுல போட்ட சண்டையை இன்னும் மனசுல வச்சுக்கிட்டு.. மறக்காம..??"

"மறக்கவா..?? இதை போய் அவகிட்ட சொல்லேன்.. அவ மறக்குறாளான்னு பார்ப்போம்..!! நானா மறக்க மாட்டேன்னு புடிவாதம் பண்ணிட்டு கெடக்குறேன்..?? இன்னமும் சாப்பாட்டை டைனிங் டேபிள்ள எடுத்து வச்சிட்டு.. நான் என் ரூமுக்குள்ள போயி கதவை மூடிக்கனும்.. அப்புறந்தான் அவ வெளில வந்து சாப்பிடுவா..!! சாப்பிடுறப்போ அவ கண்ணுலேயே நான் படக்கூடாது.. பட்டுட்டா அவ்வளவுதான்.. போட்டுட்டு அப்படியே ஓடிடுவா..!! அவ டிவி பாக்குறப்போ நான் டிவி பார்க்க கூடாது.. அவ திங்க்ஸ் எதுவும் நான் தொடக்கூடாது.. அவ இப்படி வந்தா அப்படி போகணும்.. அப்படி வந்தா இப்படி போகணும்..!! அக்கா நொந்து போயிருக்கேண்டா அசோக்.. என்னவோ நான்தான் எதையும் மறக்காம.. எல்லாத்தையும் மனசுல வச்சிக்கிட்டு இருக்குறதா சொல்ற..!! நானா மறக்க மாட்டேன்றேன்..??"

ஆத்திரமாக பேச ஆரம்பித்த சித்ராவின் குரல், முடிக்கும்போது அப்படியே தழதழத்து போனது. அவளுடைய கண்கள் கலங்கிப் போயின. வேறுபுறமாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். அசோக்கை பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தாள்.

அசோக்கிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சித்ரா தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாள் என்பது அவன் எதிபார்த்ததுதான். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திரவில்லை. திவ்யாவின் காதலை பெற்ற பிறகு அக்காவின் சம்மதத்தை வாங்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால்.. இப்போது அது இயலாது போலிருகிறது..!! அக்கா அவள் பக்க நியாயங்களை, அழுகையுடனே எடுத்துரைக்க.. நிச்சயமாய் குழம்பிப் போனான்..!! அக்காவுடைய சம்மதம்தான் இப்போது பிரதானமாக தெரிந்தது..!!

நிதானித்தான். யோசித்தான். அத்தானும் இப்போது அவனுக்கு சாதகமான மனநிலையில்தான் இருக்கிறார். அக்காதான் இடையில் தடைக்கல்லாக நிற்கிறாள். அக்காவும், திவ்யாவும் மனமாறி கைகுலுக்கிக் கொண்டால், அவனும் திவ்யாவும் மணமாகி கைபற்றுவது எளிதாகிவிடும் என்று தோன்றியது. திவ்யாவிடம் தன் காதலை சொல்வதை தற்காலிகமாக தள்ளிப்போடுவது என முடிவு செய்தான். தொண்டையை லேசாக செருமிக்கொண்டு சொன்னான்.

"சரிக்கா.. நான் அவகிட்ட இன்னைக்கு எதுவும் சொல்லல.. கொஞ்ச நாள் போகட்டும்.. நாம பேசி நல்ல முடிவா எடுக்கலாம்..!!"

அசோக் அப்படி சொன்னதுமே சித்ராவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! தன் தம்பியையே நம்பமுடியாமல் பார்த்தாள். அவளுடைய கண்கள் மீண்டும் பனித்துக் கொண்டன. விழிநீருடனே.. வியப்பும், மகிழ்ச்சியுமாய் கேட்டாள்..!!

"அ..அசோக்.. நெ..நெஜமாவா சொல்ற..?"

"ஆமாக்கா.."

"தேங்க்ஸ்டா தம்பி.. தேங்க்ஸ்..!! அக்கா மேல நீ வச்சிருக்குற நம்பிக்கைக்கு..!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..!!"

"ம்ம்.."

"ஆ..ஆனா.. அக்கா உனக்கு எப்போவும் நல்லதுதான் நெனைப்பேன்.. சரியா..?? அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!!"

"எனக்கு தெரியும்க்கா..!!"

"என் மேல கோவம்லாம் இல்லைல..?"

"சேச்சே.. அதெல்லாம் ஒன்னுல்லக்கா..!! சரி.. நான் ரூமுக்கு போறேன்..!!"

"இருடா.. காபி போடுறேன்.. சாப்பிட்டு போ.."

"பரவால்ல.. நான் ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போதே.. சாப்பிட்டுத்தான் வந்தேன்..!! கெளம்புறேன்..!!"

அசோக் சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டை விட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக காத்திருந்தான். அவன் மனதில் இப்போது ஏகப்பட்ட குழப்பம்..!! திவ்யாவின் மனதில் என்ன இருக்கிறது என்று இன்று தெரிந்துவிடும் என்று எண்ணியிருந்தவனுக்கு எதிர்பாராத வகையில் ஏமாற்றம்..!! அக்காவுக்கும் திவ்யாவுக்கும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாய் ஏற்பட்ட சண்டை.. இப்போது இப்படி விஸ்வரூபம் எடுத்து இவன் காதலுக்கு குறுக்காக நிற்பது.. நினைக்க நினைக்க அவன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..!!

லிப்ட் மேலே வந்தது.. திறந்தது..!! அது திறந்ததும் அசோக் சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான்..!! திவ்யா லிப்டுக்குள் இருந்து வெளிப்பட்டாள். இவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

"ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?" என்று ஆச்சரியப்பட்டாள்.

"சு..சும்மாதான் திவ்யா.."

"நானே உன் ரூமுக்கு வரணும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. பரவால.. நீயே இங்க வந்துட்ட..!!"

"என்ன விஷயம்..?"

"வா.. உள்ள வா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..!!"

அசோக்கின் கையை உரிமையாகப் பற்றி, மீண்டும் அவனை வீட்டுக்கு இழுத்து சென்றவள், வீட்டு வாசலில் தன் அண்ணி நின்றிருப்பதை பார்த்ததும், பட்டென அவன் கையை விடுவித்தாள். தலையை குனிந்தவாறு..

"என் ரூமுக்கு வா.."

என்று சன்னமான குரலில் அசோக்கிடம் சொல்லிவிட்டு தன் அண்ணியை கடந்து சென்றாள். விடுவிடுவென நடந்து வீட்டுக்குள் விரைந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சித்ரா தன் தம்பியிடம் திரும்பி கேட்டாள்.

"அப்படி என்ன முக்கியமான விஷயமாம்..?"

"எ..எனக்கு தெரியலைக்கா.."

"சரி போ.. போய் பேசு.."

"ம்ம்ம்.." சொல்லிவிட்டு அசோக் சித்ராவை கடக்க,

"சொன்னது ஞாபகம் இருக்குல..?" என்றாள் சித்ரா அவன் பின்னால் இருந்து.

"ம்ம்.. இருக்கு இருக்கு.."

சற்றே சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்குள் நுழைந்து திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். சாத்தியிருந்த கதவை தள்ளி உள்ளே சென்றான். திவ்யா மெத்தையில் அமர்ந்திருந்தாள். அதற்குள்ளாகவே தன் லேப்டாப்பை திறந்து மடியில் அமர்த்தி வைத்திருந்தாள். அசோக் உள்ளே சென்றதும் அவன் முகத்தை ஏறிட்டவள்,

"கதவை லாக் பண்ணிடு அசோக்.. உன் அக்கா ஏதும் ஒட்டுக் கேட்க போறா.."

அவள் கேஷுவலாக சொல்ல, அசோக் மனதுக்குள் நொந்துகொண்டான். 'எதிரெதிர் திசைகளில் முறைத்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்து வைக்கப் போகிறேன்..? என் மனவீட்டில் வீற்றிருக்கும் இவளுடன் எப்போது மணமேடையில் வீற்றிருக்க போகிறேன்..?' சலிப்பாய் ஒருமுறை தலையை அசைத்துவிட்டு, கதவை லாக் செய்துவிட்டு, திவ்யாவுக்கு அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான்.

"ம்ம்.. சொல்லு திவ்யா.. என்ன முக்கியமான விஷயம்..?"

"இரு இரு.. சொல்றேன்.." பதில் சொன்ன திவ்யா லேப்டாப்பை நோண்டுவதிலேயே கவனமாக இருந்தாள்.

"ப்ச்.. எனக்கு வேலை இருக்கு திவ்யா.. சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்பனும்..!!"

"அடச்சை.. இருடா.. சொல்றேன்..!! ஆமாம்.. நீ என்ன.. இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் ஆபீசுல இருந்து வந்துட்ட..?"

"சும்மாதான்.. வேலை பார்க்க எரிச்சலா இருந்தது.. கெளம்பி வந்துட்டேன்.."

"ம்ம்.. வந்ததும் நேரா அக்காவை கொஞ்சிட்டு போகலாம்னு இங்க வந்தியாக்கும்..?"

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. வழில பார்த்தேன்.. பைக்ல கூட்டிட்டு வந்தேன்.. அப்படியே மேல வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..!!"

"ஓஹோ.. என்னைப் பத்தி எதுவும் சொன்னாளா..?"

"அதுலாம் ஒன்னும் சொல்லல.."

"ஹேய்.. சும்மா சொல்லுடா..!!" திவ்யா கிண்டலாக சொல்ல, அசோக் கடுப்பானான்.

"ப்ச்..!! உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கெடைச்சேனா..? அதான் ஒன்னும் சொல்லலைன்னு சொல்றேன்ல..?" அவன் கோபமாக,

"கோவப்படாதடா.." அவள் கொஞ்சினாள்.

"கோவப்படலை..!! மேட்டர் என்னன்னு சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்புறேன்..!!"

"ஹ்ம்ம்.. இதுதான் மேட்டர்.. பாரு.."

சொல்லிக்கொண்டே திவ்யா லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்ப, அசோக் இப்போது அந்த லேப்டாப் ஸ்க்ரீனில் பார்வையை வீசினான். திரையில் அந்த ஆள் சிரித்துக் கொண்டிருந்தான். கோதுமை நிறத்தில் மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட முகம். அடர் கருப்பில் சுருள்சுருளாய் கேசம். கண்ணாடி அணிந்திருந்தான். உதடுகள் தடியாய்.. சிவப்பாய் இருந்தன..!! பாப்புலரான ஒரு பாலிவுட் ஆக்டரை ஞாபகப்படுத்தினான்.

"யார் இது திவ்யா..?" என்றான் அசோக் குழப்பமாய்.

"இவரைத்தான் நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆள் எப்படி இருக்காரு..?"

இதழ்களில் புன்னகையும், முகத்தில் வெட்கமுமாய் திவ்யா கேட்டாள். அதை கேட்ட மாத்திரத்திலேயே.. அசோக்கின் இதயக்கண்ணாடி இடி விழுந்த மாதிரி நொறுங்கி.. சிதறி தூள்தூளானது..!!

No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...