நெஞ்சோடு கலந்திடு - 3
அத்தியாயம் 8
காதலை மனதினில் பூட்டி வைக்காதீர்கள்..!! அது காதலென்று உறுதியானதுமே உரியவர்களுக்கு உணர்த்தி விடுங்கள்..!! காதலை உணர்தலை விட, உணர்த்துதல் மிகவும் கடினமான காரியம்தான்.. கவனமாக கையாள வேண்டிய விஷயம்தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!! ஆனால்.. காதலை உணர்த்த காலம் தாழ்த்தினால்.. இறுதிவரை அந்தக்காதலை, உங்கள் இதயக்கூட்டுக்குள் புதைத்து வைக்கும் பரிதாப நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்..!! அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான், அசோக்கின் மனதை இப்போது அசுரத்தனமாய் கவ்வியிருந்தது..!! அசோக் அந்த பயத்தையும், அதனால் எழுந்த பதட்டத்தையும் மனதுக்குள் மறைத்துக்கொண்டு, சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.
"ம்ம். ந..நல்லாருக்காரு திவ்யா..!! ஆ..ஆமாம்.. யா..யாரு இவரு.. எப்படி உனக்கு பழக்கம்..?"
"இவர் பேர் திவாகர்.. இ..இப்போ கொஞ்ச நாளா.. ஒரு ஒருமாசமாத்தான் பழக்கம்.. ஆன்லைன் மூலமா..!!"
"ஆன்லைன் மூலமாவா..?"
"ம்ம்.. எனக்கு சில ஈ-புக்ஸ் வேணும்னு ஒரு ஃபோரத்துல கேட்டிருந்தேன்.. இவர்தான் அதெல்லாம் என் ஈமெயிலுக்கு அனுப்பினாரு..!! அப்புறம் நான் தேங்க்ஸ் சொல்ல.. அவர் என்னைப் பத்தி கேட்க.. நான் அதுக்கு பதில் சொல்ல.. அப்படியே பழக்கம் ஆகிடுச்சு..!!"
"ஓ..!! ஃபோன்ல பேசிருக்கியா அவர் கூட..?"
"இல்லடா.. சேட் மட்டுந்தான்.. ஃபோட்டோவே இன்னைக்கு காலைலதான் அனுப்பினாரு..!!"
"ஆன்லைன்ல வர்ற ஆளுங்களை நம்புறது கொஞ்சம் கஷ்டம் திவ்யா.."
"சேச்சே.. இவர் அப்படி இல்ல அசோக்..!! ரொம்ப நல்லவர்..!!"
"ம்ம்.. என்ன பண்றார்..?"
"பிசினஸ்.. ஷேர் ட்ரேடிங்..!!"
"ம்ம்ம்.."
"எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நல்லா கலகலப்பா பேசுறாரு.. என் டேஸ்டும் அவர் டேஸ்ட்டும் நல்லா ஒத்துப் போகுது..!! எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. அவர் எழுதின கவிதைலாம் கொஞ்சம் அனுப்பிச்சிருந்தாரு.. எவ்வளவு அமேசிங்கா இருந்தது தெரியுமா..?? நான் தேடிட்டு இருந்தது இவரைத்தான்னு தோணுது அசோக்..!! இவரை லவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்..!! நீ என்ன நெனைக்கிற..?"
திவ்யா ஒருவித குறுகுறுப்புடனும், அசோக் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் கேட்டாள். அசோக் இப்போது தடுமாறினான். அவனுடைய இதயம் பதறி துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனதில் இருந்த காதலை அவளிடம் சொல்லி, அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள எண்ணியிருந்தான். அவளோ இன்னொருவனை காதலிக்கலாமா வேண்டாமா என்று இவனிடமே இளித்துக்கொண்டு கேட்கிறாள். என்ன சொல்லுவான் அவன்..? பாவம்..!! சற்றே திணறலாகத்தான் அதற்கு பதிலளித்தான்.
"இ..இதுல நான் நெனைக்கிறதுக்கு என்ன இருக்கு திவ்யா..? இ..இது உன் லைஃப்.. நீதான் முடிவெடுக்கனும்..!!"
அசோக் அப்படி விட்டேத்தியாக சொன்னதும், அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம் பட்டென வாடிப்போனது. ஒரு மாதிரி அதிர்ச்சியுற்றவளாக அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தன் மடியில் இருந்த லேப்டாப்பை படக்கென மூடினாள். மெத்தையின் ஓரமாய் அதை தூக்கி போட்டாள். தலையை கவிழ்ந்தவாறு.. முகத்தை சோகமாக வைத்தபடி அமர்ந்து கொண்டாள்.
"ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?" அசோக் ஆறுதலாக அவளுடைய தோளை தொட,
"போடா.. எங்கிட்ட பேசாத.." என்று அவன் கையை திவ்யா சட்டென தட்டிவிட்டாள்.
"ப்ச்.. இப்போ என்ன கோவம் உனக்கு..?"
"பின்ன என்ன..? நீ சொன்னதைக்கேட்டு என் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு தெரிஞ்சுதான் சொன்னியா..? இது.. இந்த லவ்.. நேத்துதான் நானே ஃபீல் பண்ணின விஷயம்.. முதல்ல உன்கிட்டதான் சொல்றேன்.. வேற யாருக்குமே இது தெரியாது..!! நீ என் பெஸ்ட் ஃப்ரண்டுன்தான உன்கிட்ட சொன்னேன்..? என் லைஃப்ல உனக்கு அக்கறை இருக்குன்னு நெனச்சுதான உன்கிட்ட வந்து சொன்னேன்..? நீ என்னடான்னா.. யாருக்கோ என்னவோ போச்சுன்ற மாதிரி பேசுற..? போடா.. எங்கிட்ட பேசாத.. போ..!!"
சொல்லும்போதே திவ்யாவுக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர, அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே உருகிப் போனான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, 'நெஜமாவே ஒரு மாசத்துல முட்டை மரம் வளர்ந்திடுமா அசோக்..?' என்று விழிகள் விரிய கேட்ட திவ்யா கண்களுக்குள் வந்து போனாள். 'நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..' என்றுவிட்டு தன் வெண்பற்கள் மின்ன வெகுளியாய் சிரித்தாள்.
அசோக்கிற்கும் இப்போது லேசாக கண்கள் கலங்கின. நகர்ந்து திவ்யாவுக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டான். தனது வலது கையால் அவளுடைய தோளை வளைத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவளுடைய புஜத்தை பற்றி அழுத்தியவாறே, உண்மையான வருத்தத்துடன் சொன்னான்.
"ஸாரி திவ்யா..!!"
"ஒன்னும் வேணாம்.. போ.."
"ப்ச்.. அதான் ஸாரின்னு சொல்றேன்ல..?"
"ஸாரிலாம் ஒன்னும் வேணாம்.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்னு சொல்லு..!!"
"சரி சரி.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்.. போதுமா..?"
அசோக் அந்த மாதிரி சொன்னதும், இப்போது திவ்யாவும் இறங்கி வந்தாள். "போடா..!!" என்று கொஞ்சலாக சொன்னவாறே அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். பின்பு அதே குழந்தைத்தனமான கொஞ்சலுடனே தொடர்ந்தாள்.
"எனக்கு வேற யாருடா இருக்காங்க..? என் மேல உண்மைலேயே அக்கறை உள்ள ஒரு ஆள்னா அது நீதான்னு நெனைக்கிறேன்.. நீயே இப்டிலாம் பேசினா.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?"
"ஐயோ.. அதான்.. இனிமே அந்த மாதிரி பேச மாட்டேன்றேன்ல..?"
"ப்ராமிஸ்..?"
"ப்ராமிஸ்..!! சரி.. அதை விடு.. அவரை பத்தி சொல்லு..!! உன் மனசுல இருக்குறதை அவர்கிட்ட சொல்லிட்டியா..?"
"ப்ச்.. உன்கிட்டதான் முதல்முதல்ல சொல்றேன்னு சொன்னேன்ல..?"
"ஓகே ஓகே..!! எந்த ஊர் அவர்..?"
"சென்னைதான்.. பெசன்ட் நகர்ல இருக்காராம்.. அடையாறுல ஆபீஸ்..!!"
"அவர் பிசினஸ்லாம் எப்படி போகுதுன்னு ஏதாவது சொன்னாரா..?"
"போன வருஷந்தான் ஸ்டார்ட் பண்ணினார் போல.. பரவால்லாம போறதா சொன்னார்..!!"
"ம்ம்.. அவருக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குதா..?"
"ம்ஹூம்.. தெரியலை..!! அவர் அந்த மாதிரிலாம் எதுவும் பேசினது இல்ல.. ஜஸ்ட் ஜென்ரலாத்தான் பேசிக்குவோம்..!!"
"ம்ம்.." சொல்லிவிட்டு அசோக் தன் மோவாயை சொறிந்தபடி யோசனையில் மூழ்க,
"நீ என்னடா நெனைக்கிற..?" என்று திவ்யா அந்த பழைய கேள்வியையே கேட்டாள்.
"ஆன்லைன்ல..?? அதான் யோசிக்கிறேன்..!!"
"ஆன்லைன்னா என்ன அசோக்..? அவங்களும் மனுஷங்கதான..?" திவ்யா அந்தமாதிரி சொல்ல, அசோக் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
"ம்ம்ம்ம்.. ம்ம்ம்... சரி திவ்யா.. இப்போதைக்கு அவர்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அவர் கூட பேசி அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! ஐ மீன்.. உன் மேல அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சுக்க..!! அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..?" அசோக் நீளமாக சொல்லிவிட்டு திவ்யாவின் முகத்தையே பார்க்க, அவள்
"ம்ம்.. சரிடா.." என்றாள் பலத்த யோசனைக்கு அப்புறம்.
"சரி திவ்யா.. நான் கிளம்புறேன்.." என்று அசோக் கிளம்ப,
"அசோக்.." திவ்யா அழைத்தாள்.
"ம்ம்.."
"திவ்யா.. திவாகர்..!! எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?"
அவள் ஒரு மாதிரி குழந்தையின் குதுகலத்துடன் கேட்க, அசோக் உள்ளுக்குள் பொடிப்பொடியாய் நொறுங்கினான். உள்ளத்தில் பொங்கிய உணர்சிகளை முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதடுகளில் வரவழைத்துக் கொண்டான். திவ்யாவின் முன் நெற்றி முடிகளை விரல்களால் மெல்ல கலைத்தவாறே சொன்னான்.
"ம்ம்.. ரொம்ப பொருத்தமா இருக்கு திவ்யா..!!"
இதழில் புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியே வந்தாலும், அசோக்கின் இதயம் முழுவதும் வேதனைத்தீயில் வெந்து கொண்டிருந்தது. அவனது உடலும், மனதும் அவன் வசம் இல்லாமல் ஏதோ சூனியத்தில் சென்று நிலைத்திருந்தது. சற்றுமுன் திவ்யா தந்த அதிர்ச்சியில் அவனது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. தான் சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து கட்டிய காதல் மாளிகை.. அவனது கண் முன்னாடியே.. விரிசல் விட்டு.. உடைந்து.. உருக்குலைந்து.. சரிந்து.. தரைமட்டமானதை.. எண்ணி எண்ணி அவன் நெஞ்சு குமுறிக் கொண்டிருந்தது..!!
'அசோக்.. என்னாச்சுடா..' என்ற அக்காவின் அழைப்பு அவன் காதில் ஏறவில்லை. உயிரற்ற ஜடம் ஒன்று செல்வது போல, அனிச்சையாக நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறினான். பைக்கில் சாவி போட்டு திருகி கிக்கரை உதைத்தவன், அதை நிறுத்தியது ஒரு பார் வாசல் முன்பாக..!!
குடித்தான்.. குடித்தான்.. குடித்துக்கொண்டே இருந்தான்..!! சிறுவயதில் இருந்து மூளையில் சேர்ந்திருந்த திவ்யாவின் நினைவுகள், ஒன்றன் பின் ஒன்றாய் அவனது நெஞ்சுக்குள் எழுந்து, கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க.. தொண்டைக்குள் விஸ்கியை ஊற்றி அத்தீயை அணைக்க முயன்றான்..!! ஆல்கஹால் அவனது மூளையை முடமாக்கி, நினைவலைகளுக்கு அணை போட முயன்று தோற்றுப் போனது..!! எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போலத்தான் ஆயிற்று அசோக்கின் நிலைமை..!! பொங்கி வந்த குமுறலை அடக்க முடியாமல்.. அருகில் அந்நியர்கள் இருகிறார்கள் என்ற கவலையும் இல்லாமல்.. 'ஓ..!!' என்று பெரிய குரலில் அலறி.. அங்கேயே அழுதான்..!!
அத்தியாயம் 9
அன்று இரவு ஒன்பது மணிக்கு.. மீண்டும் தன் அக்கா வீட்டுக்கு திரும்பினான் அசோக்.. இரவு உணவு அருந்த..!! அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உண்டிருந்தாலும் ஆள் மிக நிதானமாகவே இருந்தான். கால்கள் தள்ளாடவில்லை.. பேச்சு தடுமாறவில்லை..!! காதல் தந்த வலி.. விஸ்கி தந்த போதையை.. விழுங்கியிருந்தது..!!
திறந்திருந்த கதவை தள்ளி வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்ததுமே 'ஹஹக்கஹஹக்கஹஹக்க..' என ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உள்ள காரில் சாவி போட்ட மாதிரியான ஒரு குரல்தான் அவன் காதில் வந்து விழுந்தது. எதிரே சோபாவில் அமர்ந்திருந்த சித்ராவின் கணவன் கார்த்திக்கின் சிரிப்பொலிதான் அது..!! வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தான் கார்த்திக்..!! சிரிக்கையில் அவனது தொப்பை, பனியனுக்குள் கிடுகிடுவென குலுங்குவது தெளிவாக தெரிந்தது.
கார்த்திக் ஏன் அப்படி சிரிக்கிறான் என்று ஒருகணம் புரியாத அசோக், அப்புறம் தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தான். டிவியில் கார்ட்டூன் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு டாம் விரட்ட, இண்டு இடுக்கெல்லாம் புகுந்து ஜெர்ரி தப்பித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துதான் அவனுக்கு சிரிப்பு அப்படி பீறிட்டு எழுகிறது என்று புரிந்தது. 'கழுதை வயசாச்சு.. இன்னும் கார்ட்டூன் பாத்து சிரிச்சுட்டு இருக்கான்..' என்று கார்த்திக் மேல் அசோக்கிற்கு லேசாக எரிச்சல் வந்தது. ஆனால் அவனுடைய எரிச்சல் பார்வையை பொருட்படுத்தாமல் கார்த்திக் சிரிப்புடன் சொன்னான்.
"ஆங்.. அசோக்.. வா.. வா.. இப்போதான் ஆபீஸ்ல இருந்து வர்றியா..? "
"இல்ல.. அப்போவே வந்துட்டேன்.."
"உக்காரு வா.. டாம் அண்ட் ஜெர்ரி பாக்கலாம்.."
"இல்லத்தான்.. நீங்களே பாருங்க..!!"
"ஓ..!! அப்போ.. உனக்கு ரொம்ப பசிக்குதுன்னு நெனைக்கிறேன்.. சரி சரி.. போ. சாப்பிடு..!! உங்கக்கா மொச்சைக்குழம்பு வச்சிருக்கா.. செமையா இருக்குது.. அத்தான் அல்ரெடி ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டேன்..!!"
பெருமையாக சொல்லிவிட்டு மீண்டும் தொப்பை குலுங்க சிரித்த கார்த்திக்கை அசோக் சற்றே கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அப்புறம் உள்ளே நடந்து சென்றான். கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தான். சித்ரா நின்றிருந்தாள். ஸ்டவில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும்,
"உக்காருடா.. எடுத்து வைக்கிறேன்.." என்றாள்.
அசோக் அமைதியாக நடந்து சென்று டைனிங் டேபிள் முன்பு அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்திலேயே சித்ரா அவனுக்கு முன்பாக சாப்பாடு பரிமாறினாள். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தவனை,
"என்னடா எங்கயோ பாத்துட்டு இருக்குற.. சாப்பிடு.."
என்று சித்ரா அதட்டவும், சுய நினைவுக்கு வந்தான். சாதத்தை பிசைந்து அள்ளி விழுங்க ஆரம்பித்தான். சித்ரா ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு, தம்பிக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். ஹாலை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். ஹாலில் இருந்து கார்ட்டூன் சப்தமும், கார்த்திக்கின் கனைப்பு ஒலியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவர்கள் பேசுவது அவன் காதில் விழாது என்று தெரிந்தது. சற்றே தைரியம் பெற்றவளாய் சன்னமான குரலில் ஆரம்பித்தாள்.
"என்னடா சொன்னா அவ..?"
"எவ..?" என்றான் அசோக் எரிச்சலாக.
"ப்ச்.. திவ்யாடா.. முக்கியமான விஷயம்னு உள்ள கூட்டிட்டு போனாளே.. என்ன சொன்னா..?"
"ஏதோ சொன்னா.. எங்க அவளை ஆளைக் காணோம்..?"
"அவ தூங்குறா.. அவளை விடு..!! அவ என்ன சொன்னான்னு சொல்லு.."
அசோக் சாதத்தை மென்று கொண்டே, தலையை திருப்பி திவ்யாவின் அறையை ஒரு பார்வை பார்த்தான். விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தது. 'என் தூக்கத்தை நிரந்தரமாய் பறித்துவிட்டு அவள் நிம்மதியாக தூங்குகிறாளா..?' அசோக்கின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத எரிச்சல் பரவியது.
"என்னடா ஆச்சு..? ஏன் கம்முனு உக்காந்திருக்குற.. சொல்லுடா.. என்ன சொன்னா..?"
"ம்ம்.. அவ லவ்வை சொன்னா..!!" அசோக் சற்றே வெறுப்பான குரலில் சொல்ல,
"எ..என்னடா சொல்ற..?" என்று சித்ரா பதறினாள்.
"ஆமாம்.. அவ யாரையோ லவ் பண்ணப் போறாளாம்.. அதை சொல்லிட்டு இருந்தா..!!"
"யாரையோவா..? அப்போ.. நீ இல்லையா..?"
"ம்ஹூம்..!! நான் இல்லை..!!" அசோக் தலையசைக்க,
"அப்பாடா...!!!"
என்று சித்ரா இப்போது ஒரு நீண்டதாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அசோக் அவளை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்தான்.
"உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்..?"
"பின்ன இருக்காதா..?? நல்ல வேளை.. என் தம்பி தப்பிச்சான்..!! இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு..!!"
முகமெல்லாம் பிரகாசமும், குரலெல்லாம் உற்சாகமுமாக சித்ரா சொல்ல, அசோக் கடுப்பானான். சில வினாடிகள் தன் அக்காவின் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மீண்டும் தட்டில் இருந்த உணவை அள்ளி, வாயில் திணித்துக் கொள்ள ஆரம்பித்தான். அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை சித்ரா விடவில்லை. மீண்டும் ஆரம்பித்தாள்.
"ஆமாம்.. யாருடா அந்தப் பையன்..?"
"யாரு..?"
"அதான்.. அவ லவ் பண்ற பையன்..!!"
"ப்ச்.. அதெல்லாம் அவ எங்கிட்ட சொல்லலை.."
"ஏய்.. பொய் சொல்லாதடா.. இவ்வளவு சொல்லிருக்கா.. அதை சொல்லாமலா இருந்திருப்பா..? சொல்லுடா..!!"
"அதான் சொல்லலைன்னு சொல்றேன்ல.. விடேன்.." அசோக்கின் குரலில் இப்போது எரிச்சல் எக்கச்சக்கமாக ஏறியிருந்தது.
"இதை என்னை நம்ப சொல்றியா..?"
"நம்பாட்டா போ.."
"ஹேய்.. கேக்குறேன்ல.. சொல்லுடா.."
"உஷ்ஷ்ஷ்ஷ்... ப்பா…!!!! உன் டார்ச்சர் தாங்க முடியலை..!! சரி... நாளைக்கு சொல்றேன்.. இப்போ என்னை கொஞ்சம் சாப்பிட விடுறியா..?"
"சரி சரி..!! ம்ம்ம்ம்... அந்தப்பையன் பேர் என்னன்னாவது சொல்லேன்..?"
அவ்வளவுதான்..!! 'எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?' என்ற திவ்யாவின் குதுகல குரல், ஏனோ இப்போது அவனுடைய காதில் வந்து கொடூரமாய் மோதியது. திவ்யா தந்த வேதனையும், அவனது இயலாமையும், அக்காவின் பிடுங்கலும் எல்லாம் ஒன்று சேர.. கோபத்தின் உச்சிக்கே சென்றான். புறங்கையை வீசி, சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை தரையில் விசிறியடித்தான். பறந்து போய் தரையில் விழுந்த தட்டு, 'டண்டண்டண்டண்' என்று காதுக்கு ஒவ்வாத ஒரு ஒலியை கிளப்பியது. சாதத்தை வீடெங்கும் தெளித்திருந்தது. சர்ரென்று சுழன்று, பின்பு தரையோடு அடங்கியது..!!
சித்ரா அதிர்ந்து போய் எழுந்தாள். விழிகள் விரிய தன் தம்பியையே நம்ப முடியாமல் பார்த்தாள். அசோக் இவ்வளவு கோபப்பட்டு அவள் பார்ப்பது இதுவே முதல் முறை. அசோக்கும் எழுந்து கொண்டான்.
"அதான்.. நாளைக்கு சொல்றேன்னு சொல்றேன்ல..?"
என்று உஷ்ணமாய் முறைத்தவாறு கத்தினான். ஓரிரு வினாடிகள் அக்காவின் முகத்தையே வெறுப்பாக பார்த்தவன், கையைக் கூட கழுவாமல் அப்படியே வெளியேறினான். சித்ரா அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தாள். அசோக்குடைய காதலின் தீவிரம் ஒரே வினாடியில் அவள் உச்சந்தலைக்கு சென்று உறைக்க.. அவளுடைய உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..!!
ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் இப்போது டாம், ஜெர்ரியை அடிக்கிறேன் பேர்வழி என்று வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கார்த்திக் அதற்கு சிரிக்கவில்லை. அதிர்ந்து போனவனாய் சோபாவில் இருந்து எழுந்து நின்றிருந்தான். அசோக் அவசரமாக கதவு திறந்து வெளியேறுவதையே ஒருவித மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்தியாயம் 10
அசோக் தன் அறைக்கு திரும்பியபோது, செல்வாவும் வந்திருந்தார். அலமாரியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். அசோக் நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தார். அவனிடம் ஏதோ பேச வாயெடுத்தார். அதற்குள் அசோக்..
"எனக்கு மனசு சரியில்லண்ணா.. எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.."
என்று விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான். காய்ந்து போயிருந்த கையை கழுவிக்கொண்டான். மெத்தையில் வீழ்ந்தான். உடலை போர்வையால் மூடிக்கொண்டான். விழிகளை இமைகளால் மூடிக்கொண்டான். ஆனால்.. மனதை மூட ஏது மூடி..? உலையிட்ட பானையாய் அவன் உள்ளம் கொதிக்க.. திவ்யாவின் நினைவுகள் பொங்கிக்கொண்டு வெளிவந்தன..!! உள்ளம் விழித்துக்கொண்டு அசுரத்தனமாய் ஆட்டம் போட.. உறக்கம் செத்துப் போயிருந்தது..!! போர்வைக்குள்ளேயே புரண்டு புரண்டு படுத்தான்..!!
எவ்வளவு நேரம் அந்த அவஸ்தையோ..? "அசோக்.." என்று அழைத்தவாறு செல்வா போர்வையை மெல்ல இழுக்க, அசோக் உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானான். படக்கென எழுந்து கொண்டு அவரிடம் சீறினான்.
"என்னண்ணா.. எனக்குத்தான் மனசு சரியில்ல.. யார்கிட்டயும் பேச மூட் இல்லன்னு சொன்னேன்ல..?"
அவன் அவ்வாறு வெறுப்பை உமிழ, செல்வா மிரண்டு போனார். ஒருமாதிரி பரிதாபமாக அவன் முகத்தையே பார்த்தார். அப்புறம் தயங்கி தயங்கி திணறலாக சொன்னார்.
"இ..இல்ல அசோக்.. எனக்கும் ம..மனசே சரியில்ல.. யார்கிட்டயாவது பேசணும் போல இருக்கு.. அதான்.."
இப்போது அசோக் அப்படியே முகம் மாறினான். அவரை பாவமாக பார்த்தான். 'இவர் என்ன தவறு செய்தார்..? யார் மீதோ உள்ள கோவத்தை இவரிடம் காட்டுகிறேனே..?' என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். 'ஸா..ஸாரிண்ணா.. இருங்க.. வர்றேன்..' என்று மென்மையாக சொன்னவாறு, போர்வையை உதறிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தான்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக்கும் செல்வாவும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். நிலவொளியின் மசமசப்பான வெளிச்சத்தை தவிர, சுற்றிலும் இருள் பரவியிருந்தது. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்கள், ஜிலுஜிலுவென காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன. தெரு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் எங்கோ தூரமாய் கேட்டது. அசோக் ஒரு சிகரெட் பற்றவைக்க,
"எனக்கும் ஒரு சிகரெட் கொடு அசோக்.."
என்றார் செல்வா இறுக்கமான குரலில். அவரை வித்தியாசமாக பார்த்த அசோக்,
"தம்லாம் அடிப்பீங்களாண்ணா..?" என்றான் சிகரெட் ஒன்றை உருவி அவரிடம் நீட்டிக்கொண்டே .
"ம்ம்.. சின்ன வயசுல திருட்டு தம் அடிச்சிருக்கேன்.. பதினேழு வயசுல அதெல்லாம் விட்டுட்டேன்.. அப்புறம் இப்போதான் அடிக்கிறேன்.."
செல்வா சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொள்ள, அசோக்கே பற்றவைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக புகை விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்புறம் செல்வாதான் மெல்ல ஆரம்பித்தார்.
"எங்கப்பா எங்களை விட்டு போறப்போ.. எனக்கு பதினேழு வயசு அசோக்.. நான்தான் மூத்தவன்.. எனக்கு ரெண்டு தங்கைங்க.. ஒரு தம்பி.. என் அம்மா..!! எல்லாரையும் விட்டுட்டு அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு..!!"
"ஓ..!!"
"அப்போல்லாம் எங்கம்மா அடிக்கடி எங்கிட்ட வந்து புலம்புவாங்க.. 'உன்னை நம்பித்தான் நம்ம குடும்பமே இருக்குயா..'ன்னு அழுவாங்க..!! அதுவரைக்கும் ஊதாரித்தனமா இருந்த நான் அப்புறம் ரொம்ப மாறிட்டேன்.. குடும்பம் முக்கியம்னு நெனச்சேன்.. நல்லா உழைச்சேன்.. சம்பாதிச்சேன்..!!"
"ம்ம்"
"ரெண்டு தங்கச்சிங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்.. தம்பி அவனே ஒரு பொண்ணை தேடிக்கிட்டான்..!! அம்மாவும் அஞ்சு வருஷம் முன்னாடி சீக்குல படுத்து.. சீக்கிரமே கண்ணை மூடிட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு பாத்தா.. நான் மட்டும் தனியா நின்னேன் அசோக்.. என்னைப் பத்தி கவலைப்பட கூட எந்த ஜீவனும் இல்லைன்னு ஆயிடுச்சு..!!"
"ம்ம்" அசோக்கிற்கு இப்போது செல்வாவின் மீது ஒரு இனம்புரியாத பச்சாதாபம் பிறந்தது.
"எனக்குன்னு ஒருத்தி வர மாட்டாளான்னு எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கும்.. ஆனா.. இத்தனை வயசுக்கப்புறம் நான் யார்கிட்ட பொண்ணு கேட்டு போறது..? சொல்லு.. எனக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான்..? அதான்.. காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றாங்களேன்னு.. காதலை நம்ப ஆரம்பிச்சேன்..!! என்னையும் எவளாவது காதலிச்சுட மாட்டாளான்னு நெனைப்பு..!! ஆனா.. அந்த காதலும் எனக்கு கெடைக்கலை.. ஏக்கத்தை மறைக்க.. என்ன செய்றதுன்னு தெரியாம.. எல்லாரும் என்னை காதலிக்கிறாங்கன்னு.. உங்ககிட்டலாம் சும்மா சொல்லிட்டு திரிவேன்..!!"
"ம்ம்.. புரியுதுண்ணா.."
"ஆனா.. கண்மணி அந்த மாதிரி இல்ல அசோக்.. அவ பேச்சும் நடவடிக்கையும்.. அவளுக்கு என் மேல விருப்பம் இருக்குன்னு எனக்கே தெளிவா தெரிஞ்சது.. எனக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்..!! அவளை உண்மையா காதலிச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. அப்டிலாம் எதுவும் இல்லைன்னு.. இன்னைக்கு மூஞ்சில அறைஞ்ச மாதிரி சொல்லிட்டா அசோக்.. எனக்கு.. எனக்கு நெஞ்சே வெடிச்சுப் போன மாதிரி ஆயிடுச்சு..!!"
அவர் உடைந்துபோன குரலில் சொல்ல, அசோக் செல்வாவுக்காக அப்படியே உருகிப் போனான். தான் அனுபவிக்கும் அதே வலியை, தனக்கெதிரே நிற்கும் இந்த ஜீவனும் அனுபவிக்கிறது என்பதை அறிந்ததும்.. அவன் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உள்ளக்குமுறல் வெளியே பொங்கியது. பெரிய குரலில் கத்தினான்.
"ச்சே..!!! இந்தப் பொண்ணுகளே இப்படித்தாண்ணா..!! நம்மளை எல்லாம் அவளுக புரிஞ்சுக்கவே மாட்டாளுக..!! இவளுகளை உருகி உருகி காதலிக்கிற நாமதாண்ணா முட்டாளுக..!!"
அவன் அப்படி கத்தவும், இப்போது செல்வா பட்டென்று முகம் மாறினார். அதிர்ந்து போனவராய் அசோக்கை பார்த்தார். அவனுடைய சீற்றத்தில் இருந்தே, அவனும் ஏதோ கெட்ட செய்தி வைத்திருக்கிறான் என்று ஒரே நொடியில் புரிந்து கொண்டார்.
"அ..அசோக்.. நீ.. அப்போ.. தி..திவ்யா..??" என்றார் திணறலாக.
"ஆமாண்ணா..!! நீங்க சொன்னதெல்லாம் தப்பா போச்சுண்ணா.. அவ என்னை ஏமாத்திட்டா..!! அவ மனசுல நான் இல்லைண்ணா.. அவ மனசுல நான் இல்லை..!!"
சொல்லிவிட்டு அசோக் உடைந்து போய் 'ஓ..'வென அழ ஆரம்பித்தான். செல்வா பதறிப் போனார். சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு, அவனை ஆறுதலாக தழுவிக் கொண்டார். அசோக் அவர் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, அவர் அவனது முதுகை தட்டிக்கொடுத்து.. 'அசோக்.. அசோக்.. அழாதப்பா.. ப்ளீஸ்.. அசோக்..' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
அத்தியாயம் 11
அடுத்த நாள் காலை..!! இரவு நெடுநேரம் உறக்கமில்லாமல் தவித்த அசோக், அதிகாலையில்தான் உறங்கவே ஆரம்பித்திருந்தான். அதிகாலை குளிருக்கு இதமாக, போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு, அசந்து போய் தூங்கினான்.
எதோ சத்தம் கேட்டு அசோக்கிற்கு விழிப்பு வந்தது. போர்வையை விலக்கி முகத்தை வெளியே கொண்டு வந்து, விழிகளை மெல்ல திறந்து பார்த்தான். அவன் விழிகளை திறந்ததுமே அவன் முகத்தில் பளிச்சென மின்னல் வெட்டியது மாதிரி இருந்தது. கூடவே கலகலவென்று திவ்யாவின் சிரிப்பொலி..!!
அசோக்கிற்கு சில வினாடிகள் எதுவுமே புரியவில்லை. கண்களை ஒருமுறை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டான். மீண்டும் திறந்து பார்த்தான். முகத்தில் குறும்பு கொப்பளிக்க திவ்யா அவனுக்கெதிரே அமர்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு டிஜிட்டல் கேமரா..!! அவள் உதடுகளில் சிரிப்பு குமுறிக்கொண்டு வெளியே வர முயல, வாயை ஒரு கையால் பொத்தி, அந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தாள். அசோக் தூக்க கலக்கமும், எரிச்சலுமாக கேட்டான்.
"ஹேய்.. நீ என்னடி பண்ணிட்டு இருக்குற இங்க..?"
"சும்மாதான்.. உன்னை பாக்கலாம்னு வந்தேன்..!! ஒன்பது மணி ஆகியும் நீ நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தியா..? சரி.. கரெக்டா நீ கண்முழிக்கிறப்போ ஒரு ஸ்னாப் எடுக்கலாம்னு பத்து நிமிஷமா உன் பக்கத்துலையே உக்காந்துட்டு இருக்கேன்..!! என்னென்னவோ சவுண்டு குடுத்து பாக்குறேன்.. நீ எந்திரிக்கிற மாதிரியே இல்லை.. சரியான தூங்கு மூஞ்சி..!!"
"அப்டிலாம் ஒன்னும் இல்ல.. நைட்டு தூங்குறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..!!
"ஓஹோ..?? ஆனா.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணினதுக்கு சூப்பர் ஸ்டில்டா.. செம எக்ஸ்ப்ரஷன் கொடுத்திருக்குற நீ.. சான்சே இல்ல..!!" என்றவள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.
"எங்க குடு.. பார்ப்போம்.."
"வேணாம்.. நீ டெலீட் பண்ணிடுவ.."
"ப்ச்.. பண்ண மாட்டேன்.. குடு.."
"ப்ராமிஸ்..??"
"ப்ராமிஸ்டி..!!"
"இந்தா..!! டெலீட் பண்ணின..? மவனே.. மண்டைலையே நல்லா போடுவேன்..!!"
கண்டிஷனுடனே திவ்யா கேமராவை அசோக்கிடம் ஒப்படைத்தாள். அசோக் அதை வாங்கி டிஸ்ப்ளே அழுத்தி பார்த்தான். தலை மயிர் எல்லாம் கலைந்து போய், எல்லாப்பக்கமும் குத்திட்டு நிற்க.. தூக்கம் அகலாத முகம் வாடிப்போயிருக்க.. இமைகள் முழுமையாக விலகாமல் கண்கள் சுருங்கிப் போயிருக்க.. இவன் வேறு உதட்டை குரங்கு மாதிரி பிதுக்கியிருந்தான்.. மொத்தத்தில் ரொம்பவே அசிங்கமாக இருந்தான்..!!
இப்படி ஒரு ஃபோட்டோ உயிரோடு இருப்பது என்றைக்காயிருந்தாலும், தன் இமேஜுக்கு ஆபத்து என்று அசோக்கிற்கு தோன்றியது. சற்றும் யோசிக்காமல் பட்டன் தட்டி, அதை அழித்தான். அவ்வளவுதான்.. அடுத்த நொடியே அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு விழுந்தது.. திவ்யாதான் குட்டினாள்..!! அசோக் வலியில் அலறினான்..!!
"ஆஆஆஆ..!!!! லூசு..!!!! ஏண்டி கொட்ன..?"
"பின்ன என்ன..? நீ பாட்டுக்கு அசால்ட்டா டெலீட் பண்ணிட்ட.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த ஃபோட்டோவை எடுத்தேன் தெரியுமா..? எல்லாம் போச்சு..!!"
"அதுக்காக.. கொட்டுவியா..?"
"அப்புறம்..?? நான்தான் டெலீட் பண்ணினா.. மண்டைல போடுவேன்னு சொல்லிட்டுத்தான கைல குடுத்தேன்..?"
"அசிங்கமா இருந்ததுடி.. அதை வச்சுக்க சொல்றியா..?"
"சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும்..? ஃபோட்டோ நல்லாருக்கனும்னா.. நாம கொஞ்சமாவது அழகா இருக்கணும்..!! அது வெளங்காம.. கேமரா சரியில்ல.. ஃபோட்டோ சரியில்லன்னு.. லூசுத்தனமா சொல்ல வேண்டியது.." அவள் கேலியாக சொல்ல, அசோக் கடுப்பானான்.
"ஏண்டி.. காலாங்காத்தால கலாய்க்கிறதுக்குன்னே வந்திருக்கியா நீ..?? உன்னை என்ன பண்றேன் பாரு..!!" அசோக் போர்வையை உதறிக்கொண்டு எழ,
"ஐயய்யோ.. கொலை கொலை..!! யாராவது என்னை காப்பாத்துங்க..!!"
என்று கத்திக்கொண்டே திவ்யா எழுந்து ஓடினாள். அசோக் விரட்டினான். காலையிலேயே எழுந்து குளித்து பக்திப்பழமாய் அமர்ந்திருந்த செல்வா.. அவர்கள் குழந்தைகள் மாதிரி ஓடிப்பிடித்து விளையாடுவதை பார்த்து.. வேடிக்கையாக சிரித்தார்..!! அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடியில் நுழைந்தபோது, அசோக் திவ்யாவை வளைத்து பிடித்தான்.
கேமரா வைத்திருந்த கையால் அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், இன்னொரு கையை மடக்கி அவள் தலையிலேயே 'நங்.. நங்.. நங்.. நங்..' என்று நாலைந்து குட்டு குட்டினான். ஒவ்வொரு குட்டுக்கும் திவ்யா, 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என அலறிக்கொண்டே இருந்தாள்.
"ஆஆஆஆ..!! விடுறா.. தடிமாடு..!! வலிக்குது..!!" திவ்யா கெஞ்சினாள்.
"அப்போ நீ கொட்டுனது மட்டும்.. எனக்கு வலிக்காதா..?" அசோக் திவ்யாவைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.
"அதுக்காக.. நான் ஒரு கொட்டு கொட்டுனதுக்கு.. நீ நாலஞ்சு கொட்டு கொட்டுவியா..? ஷ்ஷ்ஷ்ஷ்.. வலி உயிர் போகுது..!!" திவ்யா உச்சந்தலையை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.
"அது நீ கொட்டுனதுக்கு வட்டி..!!"
"வெவ்வெவ்வே..!! மூஞ்சைப்பாரு..!! நீ மாறவே இல்ல.. சின்ன வயசுல இருந்து உன்கிட்ட கொட்டு வாங்கி கொட்டு வாங்கியே.. என் தலை நல்லா வீங்கி பெருசாயிடுச்சு..!!"
"ஹ்ஹாஹ்ஹா..!!"
"இளிக்காத.. சரி சரி.. வா..!! அப்படியே என்னை ஒரு ஸ்னாப் எடு பாப்போம்..!!"
"ம்ம்.. இங்க வேணாம்.. வா.. அப்படி போயிடலாம்.."
அசோக் திவ்யாவை அழைத்து சென்றான். உயரமாய் மொட்டை மாடி வரை வளர்ந்திருந்த ஒரு தென்னை மரம், அவளுக்கு பின்னணியில் வருமாறு, அவளை நிற்க சொன்னான். வெளிச்சம் அவளுடைய முகத்தில் சரியாக விழுமாறு திருப்ப சொன்னான். க்ளிக் செய்யும் வரை.. 'லைட்டா தலையை குனி.. இல்ல ரொம்ப.. ம்ம்.. இப்போ ஓகே.. ஸ்மைல்.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ..' என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
திவ்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள். காலை நேர சூரிய கதிர்கள் அவளுடைய முகத்தில் பட்டு தெறிக்க, அவளது நிலா முகம் மேலும் பிரகாசித்தது. அவள் அழகாக புன்னகைக்க.. அசோக் க்ளிக் செய்தான்..!! அருமையாக வந்திருந்தது அந்த புகைப்படம்..!! டிஸ்ப்ளேயில் அவளுடைய அழகை ஒருகணம் ரசித்த அசோக்,
"செம அழகா இருக்குற திவ்யா..!!" என்றான் விழிகளை விலக்க மனதே இல்லாதவனாய்.
"எங்க குடு.. பாக்கலாம்..!!"
திவ்யா வாங்கிப் பார்த்தாள். பார்த்தவள்,
"வாவ்..!!! நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லா எடுத்திருக்கடா.. குட் ஜாப்..!!" என அதிசயித்தாள்.
"தேங்க்ஸ்..!! ஐயாகிட்ட இதுமாதிரி இன்னும் என்னன்னவோ திறமை ஒளிஞ்சிருக்கு.. உனக்குத்தான் தெரியலை..!!"
"அடங்குடா டேய்..!! இதுல உன் திறமை என்ன இருக்கு..?? நான் அழகா இருக்கேன்.. அதான் ஃபோட்டோவும் அழகா வந்திருக்கு..!! நான்லாம் இதுவரை என் ஃபோட்டோ எதையும் டெலீட் பண்ணினது இல்லைப்பா.. ஃபோட்டோ எடுத்தவங்களையும் நங் நங்னு தலைல கொட்டினது இல்ல..!!"
"ஒய்..!! நக்கலா..?" அசோக் கடுப்பானான்.
"ஹாஹா..!! விடு விடு..!! உண்மையை சொன்னா கோவம் வரத்தான் செய்யும்..!!"
"போடீ லூசு..!!"
"ம்ம்ம்... இதை அனுப்பினா அவருக்கு பிடிக்கும்ல அசோக்..?" திவ்யா திடீரென அப்படி கொஞ்சலாக கேட்க, அசோக் குழம்பினான்.
"யாருக்கு..?"
"அவருக்குத்தான்.. திவாகருக்கு..!! என் ஃபோட்டோ வேணும்னு கேட்டிருந்தார்.. அதான்.. காலைலேயே கேமரா எடுத்துட்டு உன்னை பார்க்க வந்தேன்..!! இதை அவருக்கு அனுப்பலாமா அசோக்.. நல்லாருக்குல..?"
திவ்யா சொல்ல சொல்ல, அசோக் அப்படியே உள்ளுக்குள் உடைந்து நொறுங்கினான். காலையிலேயே திவ்யாவின் முகத்தில் விழித்ததும், அவள் செய்த கலாட்டாவிலும்.. மிகவும் இலகுவாக மாறியிருந்த அவனது மனதை.. நேற்றிரவு இருந்த அந்த சோகம் வந்து மீண்டும் கவ்விக்கொண்டது..!! 'ச்சே.. என் காதலியின் அழகை இன்னொருவன் ரசிக்க.. என் கையாலேயே புகைப்படம் எடுத்திருக்கிறேனே..?' எரிச்சலாக இருந்தது. அந்த கேமராவை வாங்கி அப்படியே தரையில் அடித்து உடைத்துவிடலாமா என்பது போலொரு ஆத்திரம் வந்தது. ஆனால்.. பொங்கி வந்த ஆத்திரத்தை உடனடியாய் அடக்கிக்கொண்டு, திவ்யாவை ஏறிட்டு பரிதாபமாக புன்னகைத்தான்.
"என்னடா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..? அனுப்பட்டுமா.. அவருக்கு பிடிக்குமா..?"
"ம்ம்.. அனுப்பு திவ்யா.. பிடிக்கும்..!!"
"தேங்க்யூடா.. தேங்க்யூ..!!" உற்சாகமாக கத்திய திவ்யா, அசோக்கை ஒருமுறை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்புறம் மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தவள்,
"ஐயோ.. எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. ஈவினிங் பார்க்கலாம்.. பை..!!"
என்று சொல்லிவிட்டு மான் மாதிரி துள்ளி குதித்து படியிறங்கி ஓடினாள். இதயம் தீப்பற்றி எறிய.. கண்கள் கலங்க ஆரம்பிக்க.. அவள் போவதையே பார்த்தவாறு.. அசோக் உறைந்து போய் நின்றிருந்தான்.
அத்தியாயம் 12
திவ்யா சென்ற சில நிமிடங்களிலேயே சித்ரா படியேறி மேலே வந்தாள். அவளுடைய ஒரு கையில் ஒரு பெரிய டிஃபன் கேரியர்..!! நேற்று இரவு கோபமாக சென்ற தம்பி காலையில் சாப்பிட வர மாட்டான் என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. சமைத்ததை கேரியரில் கட்டி, தம்பியின் அறைக்கே எடுத்து வந்திருந்தாள். அசோக்கிடம் அவள் அதிகமாகவெல்லாம் பேசிக்கொள்ளவில்லை.
"குளிச்சுட்டு வா.. சாப்பிடலாம்.." என்று முறைப்பாக சொன்னவள், செல்வாவிடம் திரும்பி,
"செல்வாண்ணா.. உங்களுக்கும் சேர்த்துத்தான் எடுத்துட்டு வந்திருக்கேன்.. இன்னைக்கு ஒரு நாள் மெஸ்ல சாப்பிடாம.. நான் சமைச்சதை சாப்பிடுங்க..!!" என்றாள் உண்மையான அன்புடன்.
அசோக்கும் அவளிடம் எதுவும் பேசவில்லை. அமைதியாக சென்று, பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்துவிட்டு வந்ததும், சித்ரா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினாள். இட்லியும், சட்னியும் சமைத்து கொண்டு வந்திருந்தாள். இட்லியை அசோக்கின் தட்டில் போட்டுக்கொண்டே, அவனிடம் சன்னமான குரலில் கேட்டாள்.
"கோவமா..?"
"அதுலாம் ஒண்ணுல்ல.. சட்னியை ஊத்து..!!" என்றான் அசோக்கும் முறைப்பாக.
"நெலக்கடலை சட்னி.. உனக்கு பிடிக்கும்னு செஞ்சேன்..!!" என்றாள் சித்ரா சற்றே முகம் மலர்ந்தவளாக.
"ம்ம்.. ஊத்து ஊத்து.."
அசோக் அப்புறமும் இறுக்கமான குரலில் சொல்ல, ஓரக்கண்ணால் தன் தம்பியை பார்த்து சித்ரா புன்னகைத்தாள்.
அப்புறம் ஒரு ஐந்தாறு நாட்கள் அதிக முக்கியத்துவம் இல்லாமலே கழிந்தன. திவ்யா திவாகருடன் தொடர்ந்து தினமும் சேட் செய்தாள். திவாகரின் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்று அடிக்கடி அசோக்கிடம் கேட்டுக்கொண்டாள். அசோக் அச்சமயம் அருகில் இல்லாவிட்டால் கூட.. அவனுடைய செல்போனுக்கு கால் செய்து.. 'ஆட்டுக்கால் சூப் எனக்கு புடிக்குமான்னு கேக்குறாருடா.. என்ன சொல்றது..?' என்று கேட்டு இம்சை செய்வாள். அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஏதோ ஒரு பதில் சொல்வான். அன்று அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை, அடுத்த நாள் அசோக்கிற்கு அப்டேட் கொடுத்து விடுவாள். அசோக்கும் அசுவாரசியமாய் அதை கேட்டுக் கொள்வான்..!!
அப்போதுதான் ஒரு நாள்..
அது ஒரு சண்டே மதியம்..!! எல்லோருக்கும் விடுமுறை..!! திவ்யா அவளுடைய அறையில் முடங்கியிருந்தாள். அக்காவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தியிருந்த அசோக், ஹாலில் அமர்ந்து.. சித்ராவிடமும், கார்த்திக்கிடமும் தன் ஆபீசில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை.. சொல்லிக்கொண்டிருந்தான்.
"அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வாயேன்..!!"
திவ்யாவின் குரல் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான். திவ்யா தனது அறையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'என்ன..??' என்பது போல அசோக் சைகையால் கேட்டான். 'இங்க வா...!!!' என்பது போல அவள் சைகையால் பதிலளித்தாள். வேறு வழியில்லாமல் அசோக் எழுந்தான். கார்த்திக்கிடமும், சித்ராவிடமும் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான்.
"என்ன திவ்யா..?" என்றான் அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே.
"அவர் ஆன்லைன் வந்திருக்கார்டா.. பேசப் போறேன்.. நீ என் பக்கத்துல இரேன்...!!"
"ப்ச்.. நான் எதுக்கு திவ்யா.. நீ பேசு..!!"
"என்னடா இப்படி சொல்ற..? நீதான் என் நலம் விரும்பி.. என் லவ் அட்வைசர்..!! நீயே இப்படி சொன்னா.. எப்படி..? வாடா.. ப்ளீஸ்..!!"
அவள் கெஞ்ச, அசோக் நொந்து போனான். வேண்டாவெறுப்பாக சென்று அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். திவ்யா மிக உற்சாகமாக திவாகருடன் சேட் செய்ய ஆரம்பித்தாள். அவ்வப்போது அசோக்கிடம் திரும்பி ஆலோசனை கேட்டுக்கொண்டாள். அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் இருவரும் பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்புறம் அந்த திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான். திவ்யாவுடைய ஃபோட்டோவை இப்போது பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னான். அவளுடைய அழகை புகழ்ந்தான். திவ்யா நேற்று அவனுடைய கனவில் வந்ததாக திடீரென சொன்னான். 'மனசே சரியில்ல.. ரெண்டு நாளா சரியா சாப்பிடலை.. தூங்கலை..' என்று பிதற்றினான். அசோக் அவர்கள் பேசுவதை பார்ப்பதும், அப்புறம் எரிச்சலாக எங்கேயோ வெறிப்பதுமாக இருந்தான். அப்போதுதான் திவ்யா உற்சாகமான குரலில் கத்தினாள்.
"டேய்.. சொல்லிட்டாருடா.. சொல்லிட்டாரு..!!"
"என்ன சொல்லிட்டாரு..?" என்றான் அசோக் எதுவும் புரியாமல்.
"லவ்வை சொல்லிட்டாரு.."
அவ்வளவுதான்... அசோக் உச்சபட்ச பதட்டத்துக்கு உள்ளானான். அவனுடைய உடல் தானாகவே நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. இதயம் படபடக்க.. உள்ளத்தில் உணர்ச்சி அலைகள் சுழன்றடிக்க.. சேட் திரையில் பார்வையை வீசினான். 'ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ..' என்று திவாகர் அனுப்பிய வாசகம், அவனுடைய கண்களை கோரமாய் தாக்கியது. தளர்ந்து போனான்..!!
"...... நான் என்ன சொல்லட்டும்..?" திவ்யா கேட்டது அரைகுறையாகத்தான் அவன் காதில் விழுந்தது.
"ம்ம்.. என்ன கேட்ட..?" திரும்ப அவளிடம் கேட்டான்.
"நானும் அவரை லவ் பண்றேனான்னு கேக்குறாருடா.. என்ன சொல்லட்டும்..? எஸ் சொல்லிடவா..? ம்ம்..?? சொல்லிடவா..???"
திவ்யா எக்கச்சக்க ஆர்வமும், கொள்ளை கொள்ளையாய் உற்சாகமுமாக கேட்க.. அசோக்கின் மனம் எந்த மாதிரி ஒரு உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம்..!! பதறினான்.. திணறினான்.. தடுமாறினான்..!! பதில் சொல்ல தயங்கினான்..!! திவ்யாவோ முகத்தில் பிரகாசமும், கண்களில் மின்னலும், கீபோர்டில் தயாராய் விரல்களுமாய் இருந்தாள்.
"சொல்லுடா.. அவர் வெயிட் பண்றார்.. எஸ் சொல்லிடவா..?" அவனை அவசரப் படுத்தினாள்.
அப்போதுதான் அசோக்கின் மனதில் ஒரு விபரீத எண்ணம் ஓடியது..!! இது இறைவன் அவனுக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பாக தோன்றியது..!! அதை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் என்று தோன்றியது..!! திவ்யாவின் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த காதல்.. அவனுடைய மனசாட்சியின் கழுத்தை நெரித்து ஊமையாக்கி இருந்தது..!! அந்த லேப்டாப்பையே ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறு.. அசோக் இறுக்கமான குரலில் சொன்னான்.
"நீ அவரை லவ் பண்ணலைன்னு சொல்லு திவ்யா..!!!"
"எ..என்னடா சொல்ற..?" திவ்யா விழிகளை விரித்து அதிர்ந்தாள். அசோக்கையே நம்ப முடியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தாள்.
"சொல்றேன்ல..? உனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்லைன்னு அனுப்பு.."
திவ்யா ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பாள். அதிர்ந்து போனவளாய் அசோக்கை பார்த்திருப்பாள். அப்புறம் பட்டென சகஜமானாள். அவளுடைய முகம் இயல்புக்கு திரும்பியிருக்க, இதழ்களில் லேசாய் ஒரு புன்னகை அரும்பியிருந்தது. அசோக்கை சற்றே பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தவள்,
"சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" என்றாள்.
லேப்டாப் பக்கம் திரும்பி, படபடவென டைப் செய்து, 'ஸாரி.. நான் உங்களை லவ் பண்ணலை.. எனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்ல..' என்று திவாகருக்கு அனுப்பினாள். அனுப்பிவிட்டு அசோக்கை திரும்பி பார்த்தாள். வெகுளித்தனமாய் ஒரு குழந்தை சிரிப்பை உதிர்த்தாள். அசோக்கிற்கு இப்போது அவனது இதயத்தை எதுவோ பிசைவது மாதிரி ஒரு உணர்வு..!!
திவ்யா அந்த மாதிரி அனுப்பியதற்கு திவாகரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அசோக்கும், திவ்யாவும் சேட் விண்டோவையே கவனமாக பார்த்துக்கொண்டிருக்க.. அடுத்த முனையில் திவாகர் அமைதியாக இருந்தான். பின்பு பட்டென அவனது ஐடி ஆஃப்லைன் காட்டியது.
"என்னடா.. ஆஃப்லைன் போயிட்டாரு..?"
திவ்யாவின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அசோக் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?"
திவ்யா பரிதாபமாக கேட்க, அசோக் இப்போது அவளுடைய தோளில் கைபோட்டு, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளும் அவனது அணைப்புக்கு எதிர்ப்பு காட்டாமல், அவன் மீது சாய்ந்து கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக கோதி விட்டான். திவ்யா தன் முகத்தை சற்றே நிமிர்த்தி மீண்டும் அசோக்கிடம் கேட்டாள்.
"சொல்லுடா.. ஏன் அப்படி சொல்ல சொன்ன..?"
"ம்ம்..? எல்லாம் காரணமாத்தான்..!!" அசோக் இறுக்கமான குரலில் சொன்னான்.
"அவர் திரும்ப வருவார்ல..?" திவ்யா பரிதாபமாக கேட்க,
"வருவாரு.. வருவாரு.." என்றான்.
மனதுக்குள் 'வரக்கூடாது.. வரக்கூடாது..' என்று இறைவனை வேண்டிக்கொண்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
tamil type box
தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
No comments:
Post a Comment