இது ரொம்ப சிம்பிளான, கொஞ்சம் ஜாலியான கதைதான்.. படிக்கிறவங்களுக்கு நெறைய மனஅழுத்தம் தராம, இலகுவான உணர்வை கொடுக்குற விதத்துலதான் கதையை எழுத ப்ளான் பண்ணிருக்கேன்.. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே சின்னப்புள்ளத்தனமான கேரக்டர்ஸ்.. அவங்களுக்கு இடையிலான நட்பு, பிரச்னை, சீண்டல், காதல், மோதல்.. இதுதான் மொத்தக்கதையுமே..!! கதைன்னு பாத்தா ரெண்டு வரில சுருக்கமா சொல்லிறலாம்.. அதை நான் நீட்டி முழக்கி சொல்லப்போறேன்..!! உங்களுக்கு எந்த அளவுக்கு புடிக்குதுன்னு பாக்கலாம்..!!
அத்தியாயம் 1
"One of the most commonly known cardiac surgery procedures is the coronary artery bypass graft, also known as bypass surgery..!!"
ஸ்வர்ணா டிவியில் 'ஆரோக்ய ஜீவனா' ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது. காலங்காத்தாலேயே கார்டியாக் சர்ஜரி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் குரல் ஒலிக்க, திரையில் நிஜமான அறுவை சிகிச்சையையே க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிந்திருந்த பேஷன்ட், மார்பு கிழிக்கப்பட்டு மல்லாந்திருந்தார். சுற்றி நின்றிருந்த மூன்று நான்கு சர்ஜன்கள், அவருடைய ஹார்ட்டுக்குள் கை விட்டு நோண்டிக் கொண்டிருந்தார்கள். குருதியில் குளித்திருந்த இருதயம் படக் படக்கென துடித்துக் கொண்டு கிடக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாலான ஊசிகளையும், கிடுக்கிகளையும் தாங்கிய கைகள், கவனமாக அந்த இருதயத்தை குத்தி குத்தி பார்த்துக் கொண்டிருந்தன.
விரிந்த விழிகளும், திறந்த வாயுமாக ப்ரியா டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள். காதுகளை கூர்மையாக்கி, வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளை கவனமாக கிரஹித்துக் கொண்டிருந்தாள். வாய்க்குள் இருந்த உப்புமாவை அவ்வப்போது அசை போடுவதும், அப்புறம் அசை போட்டதை விழுங்க மறந்து அப்படியே ஃப்ரீஸ் ஆவதுமாக இருந்தாள். டிவி நிகழ்ச்சியோடு அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளுக்கு அருகே வரதராஜன் அமர்ந்திருந்தார். சர்க்கரை தோய்க்கப்பட்ட உப்புமா தாங்கிய கையை மகளுடைய உதட்டுக்கருகே நீட்டியவாறு உறைந்திருந்தார். அரைத்ததை விழுங்கிவிட்டு அவள் மறுபடியும் எப்போது வாய் திறப்பாள் என்று, அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை கண்டு சற்றே நொந்து போயிருந்தார். மகளுடைய முகத்தையும், டிவி திரையையும் மாறி மாறி பார்த்தவர், இப்போது கெஞ்சலான குரலில் கேட்டார்.