அத்தியாயம் 6
பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!
பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..
"ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!" என்றான் கனிவாக.
"இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??" அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.
பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!