Social Icons

அன்புள்ள ராட்சசி - 8


 




அத்தியாயம் 14

அதன்பிறகு வந்த சில நாட்கள்.. மீரா என்ற புதிருக்கான விடையை அறிந்து கொள்வதில்.. அசோக்கிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிற நாட்களாகவே அமைந்தன..!! முன்பிருந்தது போலல்லாமல்.. முற்றிலும் மாறுபட்ட ஒரு மீராவை அசோக் அந்த நாட்களில் காண நேர்ந்தது..!! அவளுடைய நடவடிக்கைகளின் அர்த்தத்தை.. அவ்வளவு எளிதாக அசோக்கால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..!! ஏரியின் மீது நின்று தான் பேசிய ஆவேச பேச்சு.. ஏதோ ஒருவகையில் மீராவை பாதித்திருக்கிறது என்பது மட்டுமே அசோக்குக்கு புரிந்தது..!! அது எந்தவகை பாதிப்பு.. அந்த பாதிப்பின் பலன் பாஸிட்டிவா, நெகட்டிவா.. என்பதை எல்லாம் சரியாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை..!!

அன்று அவன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது.. ஒன்று.. மீரா தன்னை புரிந்து கொள்ளாமல் எரிந்து விழப் போகிறாள்.. இல்லை என்றால்.. தன் தவறை உணர்ந்து, மனமுருக மன்னிப்பு கேட்கப் போகிறாள்.. என்றுதான் அசோக் எதிர்பார்த்திருந்தான்..!! எதற்கும் சம்பந்தமில்லாமல்.. எங்கோ பார்த்துக்கொண்டு.. அவள் 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொன்னதை.. அவன் சற்றும் எதிர்பார்த்திரவில்லை..!! அப்படி சொல்கையில் அவளுடைய முகபாவனை வேறு.. அசோக்கை சற்று மிரள செய்திருந்தது.. அவளுடைய கண்ணீர் மட்டும் அவனுடைய மனதை பிசைவதாக இருந்தது.. ஆனால், அவளிடம் மேற்கொண்டு எதுவும் கேளாமல் மவுனமாகவே இருந்தான்..!! 'ச்சோ.. ச்ச்வீட்..' என்று சொல்லிவிட்டு.. கொஞ்ச நேரம் அமைதியாக ஆகாயத்தையே வெறித்து பார்த்துவிட்டு.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகள்..

"கெளம்பலாம்.. டைம் ஆச்சு..!!" என்பதுதான்.

சொல்லிவிட்டு அசோக்கை எதிர்பாராமலே, பைக் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அசோக்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதும் புரியவில்லை..!! அவஸ்தையுடன் அவளையே பார்த்தவன், பிறகு அவளின் பின்னால் நடந்தான்.. பில்லியனில் அவள் ஏறிக்கொள்ள.. பைக்கை உதைத்து கிளப்பினான்..!!

வாகன போக்குவரத்து அதிகமில்லாத தார்ச்சாலையில்.. வண்டி மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருந்தது..!! ஏரியில் நனைந்த இருவரது உடல்களும்.. எதிரே வீசிய குளிர்ந்த காற்றுக்கு.. லேசாய் வெடவெடத்தன..!! அதே நேரம் இருவருடைய இதயங்களும்.. ஒருவித வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்தன..!! இருவரும் ஒரு இறுக்கமான மனநிலையுடன்.. எதுவுமே பேசாமல்தான் சென்று கொண்டிருந்தனர்..!! அசோக்தான் மீராவின் அமைதியை நெடுநேரம் பொறுக்க முடியாமல்.. முதலில் பேச ஆரம்பித்தான்..!!


"ஏ..ஏன் எதுவுமே பேசாம வர்ற..??" என்று உலர்ந்து போன குரலில் கேட்டான்.

"ஒன்னுல்ல..!!" அவளும் வறண்டு போன குரலில் பதில் சொன்னாள்.

"எ..என் மேல கோவமா..??"

"ம்ஹூம்..!!"

"ஸாரி மீரா..!! நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக அப்படி சொல்லல.. எனக்கு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,

"நீ எதுக்கு ஸாரி கேக்குற.. நீ என்ன தப்பு பண்ணின..?? என் மேலதான் தப்பு..!!" மீரா இடைமறித்து வெடுக்கென்று சொன்னாள்.

"அதுக்கில்ல மீரா.. நான்.."

"ரோட்டை பாத்து வண்டியை ஓட்டு அசோக்.. அப்புறம் பேசிக்கலாம்..!!"

அசோக் அதன்பிறகு பேசவில்லை.. சாலையில் கவனத்தையும் வண்டியையும் செலுத்த ஆரம்பித்தான்..!! ஆனால் மீரா சொன்ன மாதிரி.. அந்த விஷயம் பற்றி பேசத்தான் அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை..!! ஆழ்வார் திருநகர் அருகே சிக்னலுக்காக அசோக் வண்டியை நிறுத்த.. மீரா அங்கேயே திடீரென பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டாள்..!!

"நான் இங்க இறங்கிக்கிறேன்.. நாளைக்கு பாக்கலாம்..!!"

இறுக்கமான குரலில் சொன்னவள், அசோக்கின் பதிலுக்கு கூட காத்திராமல், சிக்னலுக்காக உறுமிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையில் புகுந்து, அவசர அவசரமாக நடந்தாள். அவள் செல்வதையே அசோக் ஒருவித தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்கு அடுத்த நாள்.. அவன் அதை விட பலமடங்கு தவிக்க வேண்டி இருந்தது.. மீரா அவனை தொடர்பு கொள்ளவே இல்லை..!! 'என்ன ஆயிற்று.. ஏன் ஒரு ஃபோன்கால் கூட செய்யவில்லை.. அவளுடைய செல்ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.. கடுமையான வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி விட்டேனோ.. கோவத்தில் இருக்கிறாளோ..?? இல்லையே.. 'என் மேலதான் தப்பு' என்று அவள் சொன்னபோது.. அந்த குரலில் ஒரு குற்ற உணர்ச்சி தெரிந்ததே..?? என் மீது அவளுக்கு கோவம் எதுவும் இருப்பது மாதிரி தெரியவில்லை..!! அப்புறம் என்ன..?? ம்ம்ம்ம்.. ஒருவேளை.. அன்று மாதிரி.. வேறெதாவது எதிர்பாராத சூழலில் சிக்கியிருப்பாள்.. அதனால்தான் தொடர்பு கொள்ளவில்லை போலிருக்கிறது..!!' மனதை சமாதானப்படுத்திக் கொண்டாலும்.. அவளை காணாத தவிப்பு என்னவோ கொஞ்சமும் குறைவது மாதிரி இல்லை..!! அன்றைய தினத்தை ஒருவித அழுத்த மனநிலையுடனே அசோக் கழித்தான்..!!

மீரா அசோக்கை ரொம்பவும் தவிக்கவிடவில்லை..!! இரண்டாவது நாள் நண்பகல்.. அசோக் நண்பர்களுடன் ஃபுட்கோர்ட்டில் உணவருந்திக் கொண்டிருக்க.. திடீரென்று 'ஹாய் அசோக்..!!' என்றவாறு அவர்கள் முன்பு வந்து நின்றாள்..!! முகத்தில் ஒரு வசீகர புன்னகையுடன்.. கண்களில் ஒரு பளீரென்ற மின்னலுடன்.. 'என்ன.. நேத்து என்னை மிஸ் பண்ணுனியா..??' என்று கேட்டாள் அசோக்கிடம்..!! அந்த அழகு சிரிப்பில் அசோக்கின் தவிப்பெல்லாம் தவிடு பொடியானது.. 'யெஸ்..!!' என்று புன்னகைத்தான் நிம்மதியாக..!!

அப்புறம் நண்பர்கள் ஆபீஸுக்கு கிளம்பிவிட.. மீரா அதன்பிறகுதான் சாப்பிட ஆரம்பிக்க.. அசோக் வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு.. அவள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவளுடைய முகத்தில் மிக அரிதாகவே காணமுடிகிற ஒருவித அமைதியை.. இப்போது அவன் காண நேர்ந்தது..!!

"நேத்து என்னாச்சு.. ஆளை காணோம்..??" அசோக் திடீரென கேட்டான்.

"அ..அது.. அது வந்து.." என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் இழுத்த மீரா, பிறகு

"நே..நேத்து ஒரு இண்டர்வ்யூ.. அதான்..!!" என்றாள் புன்முறுவலுடன்.

"ஓ.. இண்டர்வ்யூலாம் அட்டன்ட் பண்ண ஆரம்பிச்சுட்டியா.. சொல்லவே இல்ல..!!"

"எ..எல்லாம் நேத்துல இருந்துதான்..!! கோர்ஸ் முடிஞ்சி போச்சுல.. இனி ஜாப்க்கு ட்ரை பண்ணனும்..!!"

"ஹ்ம்ம்..!! அப்பா கோடீஸ்வரரா இருந்தாலும்.. நீ உன் சொந்தகால்ல நிக்கனும்னு நெனைக்கிற பாத்தியா..?? உன் ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீரா..!!"

அசோக் சற்றே பெருமிதமாக சொல்ல, மீரா அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை. ஒருவித உலர்ந்த புன்னகையை உதிர்த்தாள். தட்டில் இருந்த உணவை, ஸ்பூனால் அள்ளி அள்ளி வாய்க்கு கொடுத்தவாறு, மீண்டும் அமைதியாகிப் போனாள். அப்புறம் அசோக்கே திடீரென ஞாபகம் வந்தவனாய் கேட்டான்.

"அதுசரி.. இண்டர்வ்யூ என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே..??"

"ஹ்ஹ.. ஊத்திக்கிச்சு..!!" சொல்லும்போதே மீராவிடம் ஒரு விரக்தி சிரிப்பு.

"ஓ..!!"

"ப்ச்..!! நான் ரொம்ப அன்லக்கி அசோக்..!!" மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய வருத்தம் தொனிக்க, அசோக் அவளை வித்தியாசமாக பார்த்தான்.

"ஹேய்.. என்ன நீ..?? இதுக்குலாம் போய் இவ்ளோ ஃபீல் பண்ணிக்கிட்டு..?? இந்த வேலை இல்லனா.. இன்னொரு வேலை..!! இப்படி ஃபீல் பண்ற.. கமான்.. சியர் அப்..!!"

அசோக் அவ்வாறு சொல்லவும், மனதை அப்படியே கொய்து எடுக்கிற மாதிரியான அந்த புன்னகையை, மீரா இப்போது அவளது உதட்டுக்கு கொடுத்தாள். அசோக்கின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.


பிறகு.. இருவரும் ஃபுட் கோர்ட்டை விட்டு வெளியே வந்து.. படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கையில்..

"இ..இனி நாம.. அடிக்கடி மீட் பண்ண முடியாதுன்னு நெனைக்கிறேன் அசோக்..!!" என்றாள் மீரா திடீரென.

"ஏ..ஏன் மீரா.. ஏன் அப்படி சொல்ற..??" அசோக் புருவத்தை சுருக்கி கேட்டான்.

"இ..இண்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்றேன் இல்லயா.. அ..அதான்..!! கொஞ்சம் சின்ஸியரா படிக்கணும்..!!"

"ஹ்ஹ.. இவ்ளோதானா..?? இ..இதுலாம் எங்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா மீரா.. நான் புரிஞ்சுக்க மாட்டனா..?? எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.. நீ நல்லா படிச்சு, உன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலைக்கு போகணும்.. சரியா..?? நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. நல்லா ப்ரிப்பேர் பண்ணு மீரா.. அதான் முக்கியம்.. புரியுதா..??" என்று உறுதியான குரலில் படபடவென சொன்ன அசோக், அப்புறம்

"நா..நாம.. நாம.. நாம வேணா.." என்று சற்றே இழுத்து, பிறகு சட்டென தாழ்வான குரலில்

"அ..அடிக்கடி இல்லன்னாலும்.. அப்பப்போவாவது மீட் பண்ணிக்கலாம்ல மீரா..?? ப்ளீஸ்..!!" என்று ஏக்கமாகவும், பரிதாபமாகவும் முடித்தான்.

அவனுடைய ஏக்கம் மீராவை ஏதோ செய்திருக்க வேண்டும். அசோக்கின் முகத்தையே கண்ணிமைக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்தது.. கனிவா.. கருணையா.. காதலா.. கணிக்க முடியவில்லை அசோக்கால்..!!

"ம்ம்.. கண்டிப்பா மீட் பண்ணலாம்..!!"

புன்னகையுடன் சொன்ன மீரா, ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. படிக்கட்டில் தடதடவென இறங்கியவள், பஸ் நிறுத்தம் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவள் செல்வதையே அசோக் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன்பிறகு ஒரு மூன்று முறை மீரா அந்த மாதிரி காணாமல் போனாள். எல்லாம் ஒரு நாட்கள், இரண்டு நாட்கள்தான். ஒரு தடவை மட்டும் அசோக்கிற்கு கால் செய்து சொன்னாள். 'இண்டர்வ்யூவாக இருக்கும்' என்று இரண்டு தடவைகள் அசோக்கே அஸ்யூம் செய்து கொண்டான். அவள் இந்த மாதிரி திடீர் திடீரென காணாமல் போனதற்கெல்லாம் அசோக் அதிகமாக கவலைப்படவில்லை. வேறெதற்கு என்று கேட்கிறீர்களா..?? அவள் நடந்துகொள்கிற விதமும்.. அசோக்கை அவள் அணுகுகிற முறையுமே.. முற்றிலும் மாறிப்போயின.. அதை நினைத்துத்தான் அசோக் மிகவும் கவலையுற்றான்..!!

எந்த மாதிரியான மாற்றங்கள் என்று சொல்ல வேண்டுமானால்..

அவளுடைய கண்களில் எப்போதும் மின்னுகிற ஒரு குறும்பை, இப்போதெல்லாம் காணமுடிவதில்லை. அவளுடைய பேச்சில் எப்போதும் தொனிக்கிற கேலி, இப்போது தொலைந்து போயிருந்தது. இப்போதெல்லாம் அவளுடைய முகத்தில் ஒரு அசாத்திய அமைதிதான் அனுதினமும். கண்களில் சலனமற்ற ஒரு பார்வை.. பேச்சில் இதமான ஒரு மென்மை..!! அசோக்கிற்கு இவையெல்லாம் வித்தியாசமாகப் பட்டன..!!

முன்பெல்லாம் மீரா எப்போது இவனுக்கு ஃபோன் செய்தாலும், இவன் எடுத்ததுமே 'இங்கு வா.. அங்கு வா..' என்று ஆணைதான் பிறப்பிப்பாள். ஆணை பிறப்பித்த அடுத்த நொடியே, இவனுடைய பதிலை கூட எதிர்பாராமல் காலை கட் செய்வாள். இவனுடைய விருப்பத்துக்கு ஒரு மதிப்பே இருக்காது. 'தலையெழுத்தே' என்று, அவள் இட்ட கட்டளைகளை எல்லாம்.. தலை மீது வைத்து இவன் நிறைவேற்ற வேண்டியிருக்கும்..!! ஆனால் இப்போது அப்படி அல்ல.. இவன் கால் பிக்கப் செய்து 'ஹலோ' சொன்னதும்தான்.. அவள் பேசவே ஆரம்பிக்கிறாள்..!! அதுவும்..

"ஹாய் அசோக்..!! உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ இப்போ ஃப்ரீயா..?? ஜ..ஜஸ்ட் டூ மினிட்ஸ்..!!" என்று தயங்கி தயங்கி ஃபார்மலாக கேட்டுவிட்டுத்தான் பேசுகிறாள்.

"ஹேய்.. என்ன மீரா இது..?? பேசுறதுக்குலாம் என்கிட்ட நீ பெர்மிஷன் கேக்கணுமா..??" என்று அசோக் அன்புடன் கடிந்து கொண்டாலும் அவள் கேட்பதில்லை.

"ப..பரவால.. நீ ஏதாவது வேலையா இருப்ப.. நான் பேசி டிஸ்டர்ப் பண்ண கூடாதுல.. அதான்..!!" என்று பொறுமையாக பதில் சொல்வாள்.

இன்னொரு நாள்.. அசோக்கும் மீராவும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்..

"ப்ச்.. ரெட் சில்லி சாஸ் கேட்டேன்.. தரவே இல்ல பாரு..!! இரு.." என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே சேரில் இருந்து அவள் எழ முயல,

"நீ உக்காரு.. நான் போய் வாங்கிட்டு வரேன்..!!" என்றவாறு அசோக் எழப்போனான். மீரா உடனே வெடுக்கென்று அவனை ஏறிட்டு முறைத்தாள்.

"நீ என்ன எனக்கு வேலைக்காரனா..?? என் வேலைலாம் பாக்கனும்னு உனக்கு என்ன தலைஎழுத்தா..?? உக்காரு..!!"

என்று சீற்றமாக சொல்லிவிட்டு, ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி கோபமாக நடந்தாள். அசோக் சற்றே மிரண்டு போய் அவளையே பார்த்தான். 'எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. போ..' என்று எகத்தாளமாக உத்தரவிட்ட மீராவா இவள், என்று அசோக் திகைக்க வேண்டியிருந்தது.

அதுவுமில்லாமல்.. அசோக்கின் தொழில்துறை சம்பந்தமாகவோ.. அவனுடைய கனவு, லட்சியம் பற்றியோ.. மீரா முன்பெல்லாம் அதிக அக்கறை காட்டிக்கொண்டது கிடையாது..!! எப்போதாவது அசோக் சொல்லும்போது கேட்டுக்கொள்வதோடு சரி.. 'ம்ம்.. நல்லாருக்கு.. குட்..' என்று ஃபார்மலாக பாராட்டுவதோடு சரி..!! ஆனால் இப்போதோ..

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு நாளின் மாலை நேரத்தில்..

பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த மீரா.. கம்பிகளுக்கு வியர்த்தது போல, முத்து முத்தாய் பூத்திருந்த மழைத்துளிகளை.. கைவிரல் கொண்டு ஒவ்வொன்றாய் சிதறடித்துக் கொண்டிருந்தவள்.. திடீரென திரும்பி தனக்கருகே அமர்ந்திருந்த அசோக்கிடம் சொன்னாள்..!!

"இன்னைக்கு காலைல கண்ணு முழிச்சதுமே உன் ஞாபகம்தான் தெரியுமா..??"

"எனக்கு கண்ணை மூடுனா கூட உன் ஞாபகமாதான் இருக்குது.. கனவுல கூட நீதான் வர்ற..!! அப்படியே கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுக்கிட்டு.. பெருசு பெருசா பல்லுலாம் வச்சுக்கிட்டு.. கழுத்துல மண்டை ஓடு மாலை..!! ஹாஹா.. ராட்சசி..!!"

அசோக் குறும்பாகவும், சிரிப்பாகவும் சொல்ல.. மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை..!! மெலிதாக புன்னகைத்தாள்.. கடந்த சில நாட்களாக அடிக்கடி அவனை பார்க்கிற அந்த ஆழமான பார்வையை இப்போதும் வீசினாள்.. மெல்ல தலையை கவிழ்த்துக் கொண்டாள்..!! பிறகு மீண்டும் ஜன்னல் பக்கமாய் திரும்பி.. எதிரே நகர்கிற மரங்களை.. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு அசோக்கே கேட்டான்..!!

"ஹ்ம்ம்... அப்படி என்ன இன்னைக்கு ஸ்பெஷல்..?? கண்ணு முழிச்சதுமே என் ஞாபகம் வந்திருக்கு..??" அசோக் அவ்வாறு கேட்க, மீரா இப்போது இவன் பக்கம் திரும்பி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

"அதுவா.. எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்.. ஃப்ளக்ஸ் போர்ட்னு சொல்வாங்களே.. அது..!!"

"ம்ம்..!!"

"என் பெட்ரூம் ஜன்னல் வழியா பார்த்தா.. அதுதான் பெருசா தெரியும்..!! இத்தனை நாளா ஏதோ ஒரு ஜ்வல்லரி ஆட் வச்சிருந்தாங்க.. இன்னைக்கு காலைல கண்ணுமுழிச்சதும்.. அப்படியே பெட்ல கெடந்துக்கிட்டே.. ஜன்னல் வழியா வெளில பார்த்தா.. ரியல் சர்ப்ரைஸ் எனக்கு..!!"

"எ..என்ன..??"

"கவாஸாகி அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருந்தாங்க.. அந்தப் பையனும், பொண்ணும் பைக்ல பறக்குற மாதிரி ஸ்டில்..!! நல்லா பெருசா.. சும்மா நச்சுனு..!!"

"ஓ..!!"

"என்னன்னு தெரியல.. அதை பாக்குறப்போ ரொம்ப பெருமையா இருந்தது.. மனசு ஃபுல்லா உன் நெனைப்பு.. ரொம்ப நேரம் அந்த போர்டையே பாத்துட்டு இருந்தேன்..!!" மீரா பெருமிதமாக சொல்ல, அசோக் அவளையே காதலாக பார்த்தான்.

"ம்ம்..!!"

"ஆனா.. கொஞ்சம் கடுப்பாவும் இருந்தது..!!"

"எதுக்கு..??"

"அந்த விளம்பரத்தை எடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்ருப்ப..?? அந்த போர்ட்ல ஒரு மூலைல கூட உன் பேர் போடல..!! உன் பேரை போட்டா என்ன கொறைஞ்சா போயிடுவானுக..?? கவாஸாகின்னு மட்டும் மெகாசைஸ்ல போட்டு வச்சிருக்கானுக..!! ஸ்டுபிட்ஸ்..!!"

"ஹாஹா..!! கஷ்டப்பட்டதுக்குத்தான் காசு தந்துட்டாங்களே மீரா.. பேர்லாம் எதுக்கு போடப் போறாங்க..?? அதுமில்லாம.. அது அவங்க பைக்கை ப்ரோமோட் பண்றதுக்காக வச்சிருக்குற போர்ட்.. அதுல என் பேரை போட்டு, என்னை ப்ரோமோட் பண்ண சொல்றியா..??"

"ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இருந்தாலும் மனசு கேக்கலை..!! அந்த போர்ட் பார்த்ததும் எனக்கு இன்னொரு ஆசை வேற..!!"

"என்ன..??"

"கூடிய சீக்கிரம்.. அதே போர்ட்ல.. நீ டைரக்ட் பண்ணப்போற மூவியோட அட்வர்டைஸ்மன்ட் வரணும்.. 'எண்ணமும், இயக்கமும் அசோக்'னு.. பெருசா உன் பேரோட..!! காலைல எந்திரிச்சதும்.. அந்த போர்ட்ல நான் கண்ணு முழிக்கணும்..!!"

உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும்.. உண்மையான ஆசை தெறிக்குமாறு.. மீரா அப்படி சொல்ல.. அசோக் அவளுடைய அழகு முகத்தையே.. அன்பு பொங்கப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!!

அப்போதுதான் மீரா திடீரென.. ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் கத்தினாள்..!!

"ஹேய் அசோக்.. அங்க பாரு அங்க பாரு.. அதேதான்.. அதைத்தான் சொன்னேன்.. ஸேம் ஸ்டில்.. ஸேம் சைஸ்..!!"

அசோக் இப்போது தலையை குனிந்து பேருந்துக்கு வெளியே பார்த்தான். அந்த ஃப்ளக்ஸ் போர்ட் பார்வையில் பட்டது. மழைத்தூறலின் பின்னணியும், மஞ்சள் விளக்கின் வெளிச்சமுமாய்.. கூரிய பார்வையுடன் சாலை வெறிக்கும் அவனும், குதுகலத்துடன் துப்பட்டா விரிக்கும் அவளுமாய்.. சினம் கொண்ட சிங்கம் போல, சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற கவாஸாகி..!!

"காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!" என்ற வார்த்தைகள் பொன்னிறத்தில் ஜொலித்தன.

"எப்டி..??? செமையா இருக்குல..???"

முகமெல்லாம் பூரிப்பாக.. குரலெல்லாம் உற்சாகமாக.. குழந்தைக்கே உரிய சந்தோஷத்துடன் மீரா அவ்வாறு கேட்க.. 'எப்போதிருந்தடி நீ இப்படி மாறிப்போனாய்..??' என்பது போல.. அசோக் அவளையே வித்தியாசமாக பார்த்தான்..!!


மீராவிற்கு அசோக்கிடமும், அவனுடைய தொழில் மீதும் மட்டும் புதிதாக அக்கறை பிறக்கவில்லை..!! முன்பெல்லாம் அசோக்கின் நண்பர்களை அவள் மதிக்கவே மாட்டாள். அறிமுகம் செய்து வைத்த நாளுக்கப்புறம், அவர்களை அருகிலேயே அவள் அண்ட விடுவதில்லை. அவள் முன்பே சொல்லியிருந்த மாதிரி, எப்போதும் தூரத்திலேயே அவர்களை நிறுத்தி வைத்திருப்பாள். சில நேரங்களில்.. அவள் ஃபுட் கோர்ட்டுக்கு தாமதமாக வருகிற தருணங்களில்.. அசோக் தன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்திருந்தால்.. அவர்களை கடந்து செல்கிற மீரா, ஒரு முறைப்பான பார்வையுடனே.. 'ம்ம்.. எந்திரிச்சு வா..' என்று அந்த பார்வையாலேயே அவனுக்கு சொல்லி.. அவனை மாத்திரம் தனியாக கிளப்பிக் கொண்டு செல்வாள்..!!

ஆனால் இப்போதெல்லாம்.. இவளும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.. அவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டே உணவருந்துகிறாள்..!!

"இன்னைக்கு என்ன.. சாலமன் அண்ணாவ ஆளை காணோம்..??" மீராவின் கேள்விக்கு,

"அவனுக்கு ஏதோ உடம்பு சரி இல்ல..!!" கிஷோர் பதில் சொன்னான்.

"ஓ..!! என்னாச்சு..??"

"ஃபீவர்னு நெனைக்கிறேன்..!!"

"என்னது.. நெனைக்கிறீங்களா..?? என்ன ஃப்ரண்ட்ஸ் நீங்க..??" கிஷோரை சற்றே கடிந்து கொண்ட மீரா, வேணுவிடம் திரும்பி,

"வேணு அண்ணா.. உங்க செல்ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்..!!" என்று உரிமையாக அவனுடைய செல்போனை வாங்கி, சாலமனுக்கு கால் செய்தாள்.

"ஆங்.. அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!"

"உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க.. என்னண்ணா ஆச்சு..??"

"ஓ..!! டாக்டர்ட்ட போனீங்களா..??"

"ஹையோ.. ஏண்ணா இப்படி பண்றீங்க..??"

"சரி.. நான் ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா..?? ஒரு டேப்லட் சொல்றேன்.. அதை இப்போ ஒன்னு.. நைட் ஒன்னு போடுங்க.. காலைல எல்லாம் சரியாயிடும்..!!"

மீரா சாலமனுக்கு ஃபோனிலேயே மருந்து பரிந்துரைக்க.. வேணு, கிஷோருடன் சேர்ந்து.. அசோக்குமே அவளை வியப்பாக பார்த்தான்..!!

ஆமாம்..!! மீராவின் இந்த மாதிரியான மாற்றங்கள்.. வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே அசோக்கிற்கு இருந்தன..!! அவனுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிற மாதிரி.. ஒருநாள் நள்ளிரவு அசோக்கிற்கு கால் செய்தாள்..!! அதற்குமுன்பே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்திருந்த அசோக்.. உறக்கம் கலைந்தும், கலக்கம் களையாமலே.. கால் பிக்கப் செய்து..

"ஹலோ..!!" சொன்னான்.

"என்னப்பா தூங்கிட்டியா..??" அடுத்த முனையில் மீராவின் குரல் மிக மென்மையாக ஒலித்தது.

"ம்ம்ம்ம்..!! எ..என்னாச்சு.. இந்த நேரத்துல கால் பண்ணிருக்குற..??"

"ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா.."

"ஹ்ம்.. இன்னும் தூங்கலையா நீ..??"

"இ..இல்ல.. தூக்கம் வரல..!!"

"ஏன்..??"

"தெரியல..!!"

"தெரியலையா..?? என்ன சொல்ற..?? எனக்கு புரியல..!!"

"அ..அசோக்.."

"ம்ம்.."

"உ..உன்கிட்ட.. ஒன்னு சொல்லனும்.."

"என்ன..??"

"அ..அது.. அ..அதை எப்படி.."

மீரா சொல்ல வந்ததை சொல்லாமல்.. தயங்கி தயங்கி இழுத்தாள்..!! பிறகு அதுவுமில்லாமல் சில வினாடிகள் அவள் அமைதியாகிப் போக, அசோக்கிற்கு கொட்டாவி வந்தது..!!

"ஹ்ஹாஹாஹா.. என்ன மீரா.. சீக்கிரம் சொல்லு.."

"தூக்கம் வருதா உனக்கு..??"

"ம்ம்.."

"சரி.. தூங்கு.."

"நீ ஏதோ சொல்ல வந்த..??"

"காலைல சொல்றேன்..!!"

அவ்வளவுதான்.. காலை கட் செய்துவிட்டாள்..!! அசோக் சில வினாடிகள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தான்.. பிறகு அவனது வாயைக் கிழித்துக்கொண்டு, பெரிதாக ஒரு கொட்டாவி வெளிப்பட.. கண்கள் செருகிப்போய் பொத்தென மெத்தையில் கவிழ்ந்தான்..!!

தனது மனதில் ஏற்பட்ட குழப்பத்தையும் வியப்பையும் பற்றி.. மீராவிடம் கேட்கவும் அசோக் தவறவில்லை.. அவ்வப்போது அவளிடம் அதுபற்றி பேசுவான்..!! ஆனால்.. அப்படி அவன் பேசியதால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என்று கேட்டால்.. இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. தொடர்ந்து ஒரு குழப்ப நிலையிலேதான் அவன் இருக்க வேண்டி இருந்தது..!! இப்படி நள்ளிரவு மீரா கால் செய்தாள் அல்லவா.. அதற்கு அடுத்த நாள் கூட.. அசோக் மீராவிடம் அவனுடைய குழப்பம் பற்றிய பேச்சை எடுத்தான்..!!

"மீரா.."

"ம்ம்.."

"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது..!!"

"எ..என்ன.."

"உ..உனக்கு ஏதாவது பிரச்னையா..??"

"ஹ்ஹ.. ஏன் அப்படி கேக்குற..??"

"எனக்கு அந்த மாதிரி தோணுச்சு..!!"

"அதெல்லாம் ஒண்ணுல்ல.. எ..எனக்கு என்ன பிரச்னை.. ஐ'ம் ஆல்ரைட்..!!"

"இல்ல.. நீ முன்னாடி மாதிரி இல்ல..!!"

"ஓ.. வேற எப்படி இருக்குறேன்..??"

"உன்னோட யூஷுவல் சிரிப்பு, கேலி, கிண்டல்.. எதுவுமே இப்போ உன்கிட்ட இல்ல..!! ரொம்ப அமைதியா.. ரொம்ப சாஃப்டா மாறிட்ட..!! எந்த நேரமும் எதையாவது சீரியஸா யோசிச்சுட்டே இருக்குற.. மூஞ்சில ஒரு களையே இல்ல.. ஏதோ சோகத்துல இருக்குற மாதிரியே இருக்குற..??"

"ப்ச்.. அது ஒன்னும் இல்ல.. ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்ல.. அதான்..!! அப்பா தயவு இல்லாம சொந்தக்கால்ல நிக்கனும்னு வைராக்கியம்.. நல்ல வேலையா கெடைக்கனுமேனு கவலை.. லைஃப் பத்தி திடீர்னு ஒரு பயம்.. அவ்வளவுதான்..!!"

"நெஜமா அவ்வளவுதானா..??" அசோக் நம்பிக்கையில்லாமல் கேட்க,

"அவ்வளவுதான்.. வேற என்ன..??" மீரா கூலாக திருப்பி கேட்டாள்.

"ஹ்ம்ம்ம்..!! சரி.. அதைவிடு.. நேத்து நைட்டு எதுக்கு கால் பண்ணின..??"

"அ..அதான் சொன்னனே.. சும்மா..!!"

"இல்ல... நீ எதோ சொல்ல வந்த.."

"என்ன சொல்ல வந்தேன்..??"

"ப்ச்.. என்கிட்ட ஏதோ சொல்லனும்னு ஆரம்பிச்சியே..??"

"அ..அதுவா..?? அ..அது ஒன்னுல்ல.. ஜஸ்ட் குட் நைட் சொல்ல வந்தேன்..!!"

"அப்புறம் ஏன் சொல்லமாலே வச்சுட்ட..??"

"நீதான் அதுக்கு முன்னாடியே தூங்கிட்டியே..?? அப்புறம் எதுக்கு சொல்லனும்னு.."

"அப்போ காலைல சொல்றேன்னு சொன்னது..??"

"அதான் இப்போ சொல்லிட்டு இருக்குறனே..??"

அவ்வளவுதான்..!! அதற்கு மேல் அசோக்கிற்கு அவளிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை. அமைதியாகிப் போனான். அவனுடய குழப்பம் முழுமையாக தீராமல் போனாலும், ஒரு அளவுக்கு மேல் மீராவை துளைத்து எடுப்பதை அவன் விரும்பவில்லை. நேரம் வரும்போது அவளே சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டான். அதுவுமில்லாமல்.. தனது குழப்பமே முதலில் நியாயமானதுதானா என்றொரு சந்தேகமுமே அவனுக்கு இருந்தது..!! அந்த சந்தேகம்தான் தன் அம்மாவிடம் இந்த விஷயம் பற்றி அவனை பேச தூண்டியது.. அதுவும் அடிக்கடி..!!

அது சங்கீதாவின் அறை..!! வளமாக குரலை மாற்றும் பொருட்டு.. வாயில் ஒரு சித்தரத்தையை வைத்து கடித்துக்கொண்டு.. மூச்சை உள்ளடக்கி பயிற்சி செய்தவாறு.. அம்மாவும் அண்ணனும் பேசிக்கொள்வதை, ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா..!! மடியில் லேப்டாப்புடன் இருந்த அசோக்.. இணையத்தில் சமையற் குறிப்பு தேடச்சொன்ன பாரதியை.. மீரா பற்றி பேசி மொக்கை போட்டுக் கொண்டிருந்தான்..!! பாரதி ஏற்கனவே பலமுறை அசோக்கின் பிரச்சனையை கேட்டு கேட்டு.. சலித்துப் போயிருந்தாள். .!!

"அவ ஏன் மம்மி இப்படிலாம் பண்றா..??"

"அப்படி என்னடா பண்ணிட்டா..??"


"இன்னைக்கு பாலாஜி அட்வர்டைஸிங்ல ஒரு டிஸ்கஷன்ல இருந்தேன்.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும்.. இவ ரிஷப்ஷனுக்கே கால் பண்ணிருக்கா..!!"

"சரிஈஈ..!!"

"கால் பண்ணவ என்ன கேட்ருக்கா தெரியுமா..??"
"என்ன கேட்ருக்கா..??"

"அசோக் ஸார் இருக்காரான்னு கேட்ருக்கா மம்மி..!!" தனக்கு நேர்ந்துவிட்ட ஏதோ பெரிய அவமானத்தை சொல்வது போல அசோக் சொன்னான்.

"ஹ்ம்ம்.. அதுக்கு என்ன..??" பாரதி கூலாகவே கேட்டாள்.

"அதுக்கு என்னவா..?? இவ எதுக்கு என்னை ஸார்னுலாம் சொல்றா..??"

"ஆமாம்.. இவனை ஸாருனுலாம் சொல்லிருக்க கூடாது.. புளிச்சுப்போன மோருன்னு சொல்லிருக்கணும்..!!" சங்கீதா சித்தரத்தையை ஓரமாய் ஒதுக்கிக்கொண்டு, கடுப்புடன் சொன்னாள்.

"ஏய்.. சும்மா இருக்க மாட்ட.." மகளை அதட்டிய பாரதி,

"ம்ம்.. நீ சொல்லுடா..!!" என்றாள் மகனிடம் திரும்பி.

"என்னத்த சொல்ல.. டிஸ்கஷன் முடிஞ்சு வெளில வந்தா.. 'ஸார்.. அசோக் ஸார்.. உங்களுக்கு ஸார்.. ஒரு கால் ஸார்..' அப்டின்னு.. அந்த ஓட்டைப்பல்லு ரிஷப்ஷனிஸ்ட் என்னை ஓட்டுறா மம்மி..!! இந்த மீரா ஏன் இப்படிலாம் பண்றா.. எதுக்கு இப்படி ஸார்னுலாம் மரியாதை..??"

"சரிடா.. கட்டிக்கப்போறவனை அடுத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்க கூடாதுன்னு அப்படி சொல்லிருப்பா..!! அதை விடு.. சாப்பாட்டு விஷயத்துல அவ எப்படி.. நல்லா கைநெறைய அள்ளி சாப்பிடுவாளா.. இல்ல அப்படியே கோழி மாதிரி கொறிப்பாளா..??"

"அதுலாம் நல்லா சாப்பிடுவா.. ஆள் பாக்குறதுக்குத்தான் கொத்தவரங்காய் மாதிரி இருப்பா.. ஆனா பத்துப்பேர் தீனியை ஒத்தை ஆளா தின்பா..!!"

"ஆங்.. காய்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. அவளுக்கு வெண்டைக்காய் பிடிக்குமா..??"

"அவளுக்கு மிரப்பக்காய்தான் ரொம்ப பிடிக்கும்..!!"

"மிரப்பக்காயா..?? அப்படினா..??"

"தெலுங்குல மிளகாய்ன்னு அர்த்தம் மம்மி..!!"

"மிளகாயா..??" பாரதி ஒருமாதிரி முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.

"ஆமாம்..!! அதுவும் ஜானி வாக்கரோட சேர்த்து சாப்பிட்டா.. ரொம்ம்ம்ம்ப பிரியம்..!!"

"ஓ..!!!"

"அதை விடு மம்மி.. அதுவா இப்போ முக்கியம்..?? நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்..!!"

"ப்ச்.. என்னடா உன் பிரச்னை இப்போ..??" பாரதியின் குரலில் சலிப்பு மிகுந்து போயிருந்தது.

"அவ ஒன்னும் சரியில்ல மம்மி..!! ஏதோ ஆயிருச்சு அவளுக்கு.. என்னன்னவோ சொல்றா தெரியுமா..!!"

"ஹ்ம்ம்.. என்ன சொன்னா..??"

"நேத்து சும்மா பேசிட்டு இருக்குறப்போ திடீர்னு.."

"ம்ம்.."

"நீ ரொம்ப அழகா இருக்குற அசோக்னு சொல்றா மம்மி..!!" அசோக் சோகமாக சொல்ல, இப்போது சங்கீதா இடையில் புகுந்து..

"அதுசரி.. அழகா இருக்குறன்னு சொன்னாங்களா.. அப்போ அண்ணிக்கு ஒரு அப்பாயிண்ட்மண்ட் வாங்கிட வேண்டியதுதான்..!!" என கிண்டலாக சொன்னாள்.

"அப்பாயிண்ட்மண்டா..?? எங்க..??" அசோக் தங்கையிடம் திரும்பி குழப்பமாக கேட்டான்.

"ம்ம்..?? வாசன் ஐ கேர்ல..!!" சங்கீதாவின் கேலி, பாரதியை டென்ஷனாக்கியது.

"ஏய்.. திமிரா உனக்கு..?? எம்புள்ளை அழகுக்கு என்னடி கொறைச்சல்..??" சங்கீதாவிடம் எகிறிய பாரதி, பிறகு அசோக்கிடம் திரும்பி,

"ஏண்டா.. அழகா இருக்குறன்னு சொன்னது ஒரு குத்தமா..?? அழகாதான இருக்குற நீ..??"

"ஐயோ.. நான் அழகா இருக்குறன்னு எனக்கு தெரியாதா..?? ஆனா.. அவ அதெல்லாம் சொல்ற ஆளு இல்ல மம்மி..!! எப்போவாவது நான் பேசுறது புடிச்சிருந்தா.. 'ச்சோ ச்வீட்'னு சொல்வா.. மத்தபடி என்னோட அப்பியரன்ஸலாம் கவனிச்சு அப்ரெஷியேட் பண்ற ஆளு இல்ல அவ..!!'

"சரி அதை விடு.. ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டா..!! ம்ம்ம்ம்.. நீ ஸ்வீட்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. மீராவுக்கு அல்வா பிடிக்கும்ல..??" பாரதி அந்தப்பேச்சை தனக்கு சாதகமாக திருப்ப படாதபாடு பட்டாள்.

"ம்ம்.. அரைப்படி மொளகாப்பொடிய கொட்டி.. அல்வாவை கிண்டி வையி.. நல்ல்ல்லா சாப்பிடுவா..!!"

"மொளகாப்பொடி அல்வாவா..??" பாரதி மீண்டும் முகத்தை சுளித்தாள்.

"அவளுக்கு ஸ்வீட்டே பிடிக்காது மம்மி.. காரந்தான் பிடிக்கும்..!! மிர்ச்சின்னு ஒரு நிக்நேம் வேற..!!" என்று சற்றே எரிச்சலாக சொன்னவன், பிறகு திடீரென குரலை தாழ்த்திக்கொண்டு,

"ச்ச.. அவ முன்ன மாதிரி இல்ல மம்மி.. முன்னாடிலாம் என்கிட்ட எப்படி நடந்துக்குவா தெரியுமா..??" என்று பழைய பல்லவியையே பாடினான்.

"எப்படி..??" தூரத்தில் அமர்ந்திருந்த சங்கீதா இப்போது முறைப்புடன் கேட்டாள். தங்கை கேட்ட கேள்விக்கு அசோக் அம்மாவிடமே பதில் சொன்னான்.

"முன்னாடிலாம் சூப்பரா திட்டுவா மம்மி.. தலைலயே நங் நங்னு அழகா கொட்டுவா.. கன்னத்துலயே சப் சப்புன்னு செமையா அறைவா தெரியுமா..?? இப்போலாம் எதுவுமே பண்றது இல்ல.. அவ ஏன் மம்மி இப்படி மாறிட்டா..??"

அசோக் நிஜமாகவே ரொம்பவும் ஏக்கத்துடன் அவ்வாறு சொல்ல, சங்கீதாவால் அதற்கு மேலும் அவனுடைய இம்சையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் இருந்த சித்தரத்தையை 'த்தூ..' என்று துப்பியவாறே, விருட்டென சேரில் இருந்து எழுந்தாள்.

"ஏண்டா.. உனக்கு எங்களை பாத்தா எப்படி தெரியுது..?? நானும் அப்போ இருந்து பாத்துக்கிட்டே இருக்கேன்..!!" என்று எரிச்சலாக கத்தியவாறே, அண்ணனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.

"இப்போ என்ன.. உனக்கு கன்னத்துல சப்பு சப்புன்னு அறை வேணும்.. அவ்வளவுதான..?? இரு.. நான் அறையுறேன்..!!"

என்றவாறு அவனுடைய தலை முடியை ஒரு கையால் கொத்தாக பிடித்தாள். அவனது கன்னத்தில் அறைவதற்காக இன்னொரு கையை ஓங்கினாள். தங்கையின் ஆவேசத்தில் சற்றே பதறிப்போன அசோக், உடனடியாய் சுதாரித்துக்கொண்டு, ஓங்கிய அவளுடைய கையை தடுத்து பிடித்துக் கொண்டான். கண்களை உருட்டி உக்கிரமாக அவளை பார்த்து கத்தினான்.

"ஏய்.. அடி வாங்கப் போறடி சங்கு.. ஒழுங்கா முடியை விடு..!!"

"முடியாது..!! இன்னைக்கு ஒரு அறையாவது உன்னை அறையாம விடுறது இல்ல..!!"

"விட்றி.. அப்புறம் நான் அறைஞ்சா நீ தாங்க மாட்ட..!!"

"அதையும் பாக்கலாம்..!!"

பிள்ளைகள் இருவரும் அவ்வாறு முட்டி மோதிக்கொண்டிருக்க, பாரதிதான் நொந்து போய் தலையில் அடித்துக் கொண்டாள்.

"ஐயயயயயே.. என்ன இது.. சின்ன புள்ளைக மாதிரி..?? ஏய்.. அவன் முடியை விடுடி.. விடுன்னு சொல்றேன்ல..??"

அம்மா அதட்டவும், அண்ணனின் தலைமுடியை சங்கீதா விடுவித்தாள். அப்புறம் அங்கேயே நின்றவாறு அசோக்கின் முகத்தையே கடுப்புடன் முறைத்துக்கொண்டிருக்க, பாரதி அவளை விரட்டினாள்.

"ஏய்.. போடி.. போய் எக்ஸர்சைஸ் பண்ணு.. போ..!!"

இப்போது சங்கீதா மெல்ல அவளுடைய சேருக்கு நகர்ந்தாள். அவளையே சில வினாடிகள் எரிச்சலாக பார்த்த பாரதி, பிறகு தலை கலைந்து போய் அமர்ந்திருந்த மகனிடம் திரும்பி சொன்னாள்.

"இந்தாடா.. உனக்குந்தான்..!! மீரா பத்தி பொலம்புறதை இத்தோட நிறுத்திக்கோ.. சும்மா சும்மா அந்த பொண்ணு பண்ற நல்ல விஷயத்தை எல்லாம்.. கொலைக்குத்தம் மாதிரி வந்து சொல்லிட்டு இருக்காத.. எனக்கே எரிச்சலா வருது..!! என்ன.. புரியுதா..??"

"ம்ம்.." அசோக்கும் முறைப்பாக சொன்னான்.

"ப்ச்.. சும்மா மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காம.. நீ சொன்ன அந்த ஐட்டத்துக்கு.. இன்டர்நெட்ல ஏதாவது சமையல் குறிப்பு, செய்முறை விளக்கம் போட்ருக்கானான்னு பாரு.. நாளைக்கு செஞ்சு அசத்திடலாம்..!!" பாரதி இயல்பாகவே கேட்க, அசோக் இப்போது குழப்பமாக அம்மாவை ஏறிட்டான்.

"எ..எந்த ஐட்டத்துக்கு..??"

"அதாண்டா.. ஜானி வாக்கர்னு ஏதோ புதுசா ஒரு ஐட்டம் சொன்னியே.. மீராவுக்கு ரொம்ம்ம்ப புடிக்கும்னு..??"

பாரதி அப்பாவியாக கேட்டாள். சங்கீதா குபுக்கென்று எழுந்த சிரிப்பை, வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முயன்றாள். அசோக் திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி திருதிருவென விழித்தான்.



அத்தியாயம் 15

அடுத்த நாள் காலை.. இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள், வானத்தின் மையத்தை எட்டி விடவேண்டும் என்று.. சூரியன் மெல்ல மேல்நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த நேரம்..!! அந்த சூரியனை சுற்றிலும் கருப்பு நிற குளிர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்க.. வெப்பத்தின் உக்கிரம் வலுவிழந்து போய்.. சற்றே குளுமையான வானிலை பூமியில்..!! மாலை அதற்குள் வந்துவிட்டதோ என மயக்கம் கொள்கிற அளவுக்கு.. மங்கிப்போன வெளிச்சமே எங்கெங்கிலும்..!! காற்றிலும் ஈரப்பதம் மிகுந்து போயிருந்தது.. ஜிலுஜிலுவென ஊருக்குள் அலைபாய்ந்து.. மரங்களையும் மனிதர்களையும் இதமாய் வருடிச் சென்றது..!!

அசோக்கின் பைக் விருகம்பாக்கம் தாண்டி விரைந்து கொண்டிருந்தது. மந்தமான போக்குவரத்துடன் கூடிய மாநில நெடுஞ்சாலையில், மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. அசோக்கின் கண்கள் சாலையில் பதிந்திருக்க, அவனது தலைகவச வார்ப்பட்டை காதோரமாய் தடதடத்துக் கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த மீராவின் கை அசோக்கின் தோளில் படர்ந்திருக்க, அவளது கூந்தல் குளிர்காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அசோக்கின் உதடுகள் ஒரு புன்னகையை பூசியிருக்க, மீராவின் முகமோ ஒருவித குழப்பத்தில் குளித்திருந்தது.

"ப்ளீஸ் அசோக்.. எங்க போறோம்னு சொல்லு..!!"

"நோ.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!"

"ப்ச்.. ப்ளீஸ் அசோக்..!!"

"ம்ஹூம்.. எத்தனை நாள் நீ இந்த மாதிரி என்னை மண்டை காய வச்சிருப்ப..?? இன்னைக்கு உன் மண்டை கொஞ்ச நேரம் காயட்டும்.. நான் சொல்ல மாட்டேன்..!!"

"இ..இங்க பாரு அசோக்.. மூவின்னா ஐ'ம் ரியல்லி ஸாரி.. மூவி பாக்குறதுக்குலாம் எனக்கு இப்போ சுத்தமா மூட் இல்ல.. ஓகே..??"

"மூவிலாம் இல்ல..!!"

"அப்புறம்..?? வே..வேற எங்கதான் போற..?? இந்தப்பக்கம் நல்ல ரெஸ்டாரன்ட் கூட இல்ல..??"

"நீயே கெஸ் பண்ணு..!!"

"ப்ளீஸ் அசோக்..!!"

"ம்ஹூம்..!!" அசோக் பிடிவாதமாக இருக்க, மீரா இப்போது பொறுமை இழந்தாள்.

"ப்ச்..!! இப்போ நீ சொல்லப் போறியா.. இல்ல நான் பைக்ல இருந்து குதிக்கட்டுமா.?? ஐ'ம் சீரியஸ்..!!" என்றவாறே அவள் எழ முயல, அசோக்கிடம் உடனடியாய் ஒரு பதற்றம்.

"ஹேய்ய்ய்.. இரு இரு.. சொல்றேன்.. நீ பாட்டுக்கு குதிச்சாலும் குதிச்சிடப் போற..!!"

"அப்போ சொல்லு..!! எங்க போயிட்டு இருக்குறோம்..??"

"ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. இந்த ஸ்பெஷல் டே'யை செலிப்ரேட் பண்ண போயிட்டு இருக்குறோம்..??" அசோக் உற்சாகமாக சொல்ல, மீராவுக்கு நெற்றி சுருங்கியது.

"ஸ்பெஷல் டே'யா..?? எ..என்ன ஸ்பெஷல் இன்னைக்கு..??"

"ஹேய்.. கமான்.. நடிக்காத..!! இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இல்ல..??"

"ம்ஹூம்.. இல்ல..!!"

"ஹேய் மீரா.. இன்னைக்கு பிப்ரவரி - 14.. வேலண்டைன்ஸ் டே..!!"

"ஓ..!!" அசோக்கின் குரலில் இருந்த குதுகலம், மீராவிடம் துளியும் இல்லை.

"அது மட்டும் இல்ல.. யு நோ ஒன்திங்.. நாம ரெண்டு பேரும் ஐ லவ் யூ சொல்லிக்கிட்டு.. இன்னைக்கோட நூறு நாள் ஆகிப் போச்சு..!! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்.. இல்ல..??"

"ஹ்ம்ம்..!!"

"இப்போ சொல்லு.. இன்னைக்கு ஸ்பெஷல் டே'யா.. இல்லையா..??"

"ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!"

"ஆர்டினரி ஸ்பெஷல் இல்ல மீரா.. இட்ஸ் அல்ட்ரா ஸ்பெஷல்.. ஹாஹா..!!"

"அதுசரி.. அதுக்கு இப்போ.. என்னை எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்குற..??"

"அது சர்ப்ரைஸ்..!! சொல்ல மாட்டேன்..!!"

"ப்ளீஸ் அசோக்.. சொல்லு..!!"

"ப்ச்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரிஞ்சிடும் மீரா.. கொஞ்ச நேரம் பல்லை கடிச்சுட்டு உக்காந்திரு..!!"

மீரா அதன்பிறகு அசோக்கை தொல்லை செய்யவில்லை. அமைதியாகிப் போனாள். அசோக் உற்சாகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க, மீரா தீவிரமாய் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.

கேசவர்த்தினி பஸ் நிறுத்தத்தை தாண்டியதும், அசோக் பைக்கை இடது புறம் திருப்பினான். மேலும் ஐந்து நிமிட பயணம்..!! சௌத்ரி நகரை கடந்து, புதிதாக போடப்பட்டிருந்த அந்த தார்ச்சாலையில் வண்டி பயணித்தது. காலி மனையிடங்கள் அதிகமாகவும், ஆங்காங்கே முளைத்திருந்த பெரிய பெரிய வீடுகளுமாக அமைதியான சாலை. அந்த சாலையின் இறுதியில், இளம் பச்சை நிற பூச்சுடன் நின்றிருந்தது அந்த வீடு. காம்பவுண்டுக்குள் வண்டியை செலுத்தி, ஓரமாக ப்ரேக்கிட்டு நிறுத்தினான் அசோக். தயக்கத்துடனே கீழிறங்கிய மீரா, அந்த வீட்டை குழப்பமாக பார்த்தவாறே அசோக்கிடம் கேட்டாள்.


"எ..எங்க வந்திருக்குறோம்..?? இ..இது யார் வீடு..??"

"ம்ம்.. நம்ம வீடு மீரா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம வாழப்போற வீடு..!!"

பைக்கில் இருந்து இறங்கிய அசோக் புன்னகையுடன் சொல்ல, மீராவிடம் உடனடியாய் ஒரு திகைப்பு.

"வாட்..????"

"யெஸ்.. இதுதான் அந்த சர்ப்ரைஸ்..!! எப்டி..??"

"எ..என்ன அசோக் இது.. என்னை எதுக்கு இங்க..??" மீரா தடுமாற்றமாய் கேட்டாள்.

"ஹேய் ரிலாக்ஸ்.. என்னாச்சு இப்போ.. ம்ம்..?? இங்க பாரு.. நீ ஏன் இப்படி ஷாக் ஆகுறேன்னு எனக்கு புரியுது..!! வேலண்டைன்ஸ் டே'ன்னா.. எல்லாரும் வீட்ல இருந்து எஸ்கேப் ஆகி ஊர் சுத்துவாங்க.. இவன் என்னடான்னா வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானேன்னு பாக்குற.. அதான..?? ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லவா..??"

"எ..என்ன..??"

"இந்த உலகத்துலேயே எங்க வீடு மாதிரி.. வேலண்டைன்ஸ் டே'யை செலப்ரேட் பண்றதுக்கு, வேற பெஸ்ட் ப்ளேஸே கெடையாது..!! தீபாவளி, பொங்கல்லாம் விட.. வேலண்டைன்ஸ் டே'யை ரொம்ப ஸ்பெஷலா செலப்ரேட் பண்ணுவோம்.. தெரியுமா..??"

"ஐயோ நான் அதுக்கு சொல்லல அசோக்.. இப்படி திடீர்னு.."

"ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல மீரா..!! உன்னை கூட்டிட்டு வர்றேன்னு, நான் நேத்தே வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. எல்லாரும் உனக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!! வா.. வந்து எங்க ஆளுங்களை பாரு.. கமான்..!!"

சொல்லிவிட்டு அசோக் முன்னால் நடந்தான். மீரா ஒருவித தயக்கத்துடனே அவனை பின்தொடர்ந்தாள். அதற்குள்ளாகவே பைக் சத்தம் கேட்டு, வீட்டுக்கதவு திறந்து கொண்டது. அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வெளிப்பட்டு, வாசலை நிறைத்தனர். பாட்டி.. தாத்தா.. பாரதி.. மணிபாரதி.. சங்கீதா.. இவர்களுடன் கிஷோரும் தலை காட்டினான்..!! அனைவருடைய முகத்திலுமே, அப்படி ஒரு அளவிட முடியாத ஒரு பூரிப்பும், மலர்ச்சியும்..!! இன்னும் சிறிது நாட்களில் முறைப்படி வீட்டுக்கு வரப்போகிற மருமகளை வரவேற்க, வீட்டு வாசலுக்கே எல்லோரும் வந்திருந்தனர்.

அனைவரும் வாசலிலேயே காத்திருக்க, அவர்களது கால்களுக்கு இடையே தலை நீட்டி எட்டிப்பார்த்த நாய்க்குட்டிகள் இரண்டும், பிறகு சந்தோஷமாக குறைத்துக்கொண்டே இவர்களை நோக்கி ஓடிவந்தன. அருகில் நெருங்கி இருவரையும் ஸ்னேஹமாக முகர்ந்து பார்த்தவைகள், அப்புறம் ஆளுக்கொரு பக்கமாய் இவர்களுடன் வாசலை நோக்கி நடந்தன.

மீரா நூறு சதவீதம் திகைப்பின் பிடியில் சிக்கியிருந்தாள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு அசோக் தன்னை உள்ளாக்குவான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த திகைப்பு அவளுடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. ஒருவித மிரட்சிப் பார்வையுடனே, அசோக்குடன் நடந்தாள்.

"ரெண்டு பேரும் எந்தக்குறையும் இல்லாம.. நூறு வருஷம் சந்தோஷமா வாழனும் கண்ணுகளா..!!" ஆரத்தி எடுத்த பாட்டி, அசோக்குக்கும் மீராவுக்கும் நெற்றியில் திலகமிட்டாள்.

"நீ வாழப்போற வீடும்மா.. வலது காலை எடுத்து வச்சு உள்ள வா..!!" கனிவாக சொன்ன பாரதி, மீரா உள்ளே நுழைந்ததும் அவளுடைய கன்னத்தை அன்பாக வருடினாள்.

"நான் அசோக்கோட அப்பா பிச்சுமணி.. எழுத்தாளர் மணிபாரதின்னு கேள்விப்பட்டிருக்கியா.. அது சாட்சாத் நானேதான்.. ஹாஹா..!!" புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மணிபாரதி.

"ஹாய் அண்ணி..!! அண்ணாவும் கிஷோரும் உங்களை பத்தி நெறைய்ய்ய்ய சொல்லிருக்காங்க..!! நீங்க அழகா இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனா.. இவ்வ்வ்வளவு அழகா இருப்பீங்கன்னு நான் நெனச்சே பாக்கல..!! ஹையோ... சூப்ப்ப்பரா இருக்கீங்க..!!" மீராவின் விரல்களுடன் தனது விரல்களை கோர்த்துக் கொண்டு, விட மறுத்தாள் சங்கீதா.

"இதுதான் நாம ரெண்டு பேரும் வாக்கப்படப்போற வீடு ஸிஸ்டர்.. நல்லா பாத்துக்கங்க.. உலகத்துல எங்க தேடுனாலும், இந்த மாதிரி கேரக்டர்ஸ்கள ஒரே வீட்ல பாக்க முடியாது.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு..!!" சன்னமான குரலில் அசோக்கின் குடும்பத்தை கிண்டலடித்தான் கிஷோர்.

"வெளில ரொம்ப வெயிலாம்மா..?? இப்படி களைச்சு போய் வந்திருக்கிறியே..?? ஏம்மா பாரதி.. பாப்பாக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது குடு..!!" மீராவின் மீதான அக்கறையை, மருமகளுக்கு உத்தரவு போடுவதில் காட்டினார் தாத்தா.

மீராவை உள்ளறைக்கு அழைத்து சென்று.. சோபாவில் அமரவைத்து.. அவளை சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டனர்..!! பாரதி கொண்டு வந்த பாதாம் கீரை.. மீரா கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த.. மற்றவர்கள் அத்தனை நாளாய் மீராவிடம் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம்.. இப்போது சராமரியாக கேட்டு தள்ளினர்..!! மீராவும் அவர்களது கேள்விகளுக்கெல்லாம்.. முகத்தில் ஒரு மிரட்சியும்.. கண்களில் ஒரு மருட்சியுமாய்.. தயங்கி தயங்கி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்..!! அசோக் எதுவுமே பேசவில்லை.. அவனது உள்ளம் கவர்ந்த திருடியிடம்.. தனது குடும்பத்தினர் குறுக்கு விசாரணை செய்கிற காட்சியை.. உதட்டில் ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!


மீரா ஆரம்பத்தில் அவஸ்தையாக நெளிந்தாள்.. அசௌகரியமாக உணர்ந்தாள்.. இப்படி ஒரு சூழ்நிலைக்கு அவள் கொஞ்சமும் தயாரில்லாமல் இருந்ததுதான் அதன் காரணம்..!! ஆனால் அசோக்கின் குடும்பத்தினர்.. அவள் மீது காட்டிய பரிவும் பிரியமும்.. சீக்கிரமே அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தன..!!

சகஜ நிலைக்கு திரும்பினாலும்.. அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த அந்த வியப்பு நிலை.. அப்படியேதான் இருந்தது..!! இன்னும் சொல்லப் போனால்.. நேரம் ஆக ஆக.. அந்த வியப்பு அதிகரித்துக் கொண்டேதான் சென்றது..!! அப்படி என்ன வியப்பு என்கிறீர்களா..?? இரண்டு வகையான வியப்பு அவளுக்கு.. ஒன்று.. அசோக்கின் குடும்பத்தினர் அவளிடம் காட்டிய அபரிமிதமான அன்பு.. இரண்டு.. மூன்று தலைமுறையினர் வாழ்கிற அந்த குடும்பத்தில்.. ஒருவருக்கொருவர் இடையில் இருந்த அந்த அன்னியோன்யம்..!! இரண்டையுமே அவள் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை..!!

தங்களுடைய காதல் விஷயத்தை, தன் குடும்பத்திடம் தெரிவித்திருப்பதாக அசோக் மீராவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால், வரப்போகிற மருமகள் மீது அவர்கள் இப்போதே இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் என்று மீரா நினைத்திருக்கவில்லை. தங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே காதல் திருமணம்தான் என்பதையும் அசோக் அவளுக்கு சொல்லியிருக்கிறான். ஆனால் இந்த அளவுக்கு காதலும், மகிழ்ச்சியும் கொஞ்சி விளையாடுகிற குடும்பம் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

முதலில் அவளை சூழ்ந்து கொண்டு மொத்தமாக அன்பை பொழிந்தவர்கள்.. அப்புறம் அவளை கைப்பிடித்து அவரவர் அறைக்கு அழைத்துச் சென்று.. தனித்தனியாக அவளிடம் மனம் விட்டு பேசி.. தங்கள் ப்ரியத்தை காட்டினர்..!!

மணிபாரதியின் அறை..

"அப்பா எப்படிமா இருக்காரு..??" சம்பிரதாயமாகவே ஆரம்பித்தார் மணிபாரதி.

"ம்ம்.. ந..நல்லா இருக்காரு அங்கிள்..!!" மீராவின் குரலில் இன்னுமே தயக்கம்.

"அப்பா பேரு சந்தானம்தான.??"

"ஆ..ஆமாம்..!!"

"அசோக் ஒருதடவைதான் சொன்னான்.. எப்டி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா..?? அங்கிள்க்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஜாஸ்தி..!!"

"ஓ..!!"

"ஹ்ஹ்ம்ம்ம்.. அப்பா பத்தி அசோக் எல்லாம் சொல்லிருக்கான்மா.. இந்தக்காலத்துலயும் இப்படிலாம் இருக்காங்களான்னு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..!! ஆனா.. நீ அதெல்லாம் எதுவும் நெனைச்சு கவலைப்பட்டுக்க வேணாம்மா மீரா.. 'அப்பா சம்மதிப்பாரா.. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்குமா..' அப்டின்லாம் எந்த கவலையும் உனக்கு வேணாம்.. தெரிஞ்சதா..?? நீ எங்க வீட்டு பொண்ணும்மா.. நாங்கல்லாம் இருக்கோம் உனக்கு..!! உன் அப்பா கைல கால்ல விழுந்தாவது.. இந்த கல்யாணத்துக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு.. ஹாஹா.. சரியா..??" மணிபாரதி சிரிப்புடன் சொன்னாலும், அவருடைய பேச்சில் ஒரு அழுத்தமான நம்பிக்கை தெரிந்தது.

"ச..சரி அங்கிள்..!!" மீராவின் குரல்தான் ஏனோ பிசிறடித்தது.

"ம்ம்.. என்னோட நாவல்லாம் படிச்சிருக்கியாமா..??" மணிபாரதி திடீரென அப்படி கேட்டார்.

"இ..இல்ல அங்கிள்.. ஆனா உங்க பேரை கேள்விப் பட்ருக்கேன்..!!"

"ஹஹா.. பரவால பரவால..!! எதுக்கு கேட்டேன்னா.. பதினஞ்சு வருஷம் முன்னாடி.. 'காதலை வாழ விடுங்கள்' அப்டின்னு நான் ஒரு நாவல் எழுதினேன்.. எனக்கு ரொம்ப பேர் வாங்கி தந்த நாவல்..!! அதுலயும் இப்படித்தான்.. உன் அப்பா மாதிரியே ஒரு அப்பா கேரக்டர்.. அவருக்கும் உன்னை மாதிரியே ஒரு பொண்ணு..!! அந்தப் பொண்ணு என்ன ஒரு கேரக்டர் தெரியுமா.. நான் இதுவரை உருவாக்குனதுலயே அந்த பொண்ணு கேரக்டர்தான்.." மணிபாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை செல்லமாக கடிந்து கொண்டே பாரதி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"ஐயயயே.. என்னங்க இது.. புள்ளையை சாப்பிடவிடாம.. நாவலு.. கேரக்டருனுட்டு.." என்றவாறே உள்ளே வந்தவள், மீராவுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டு,

"இவர் எப்போவும் இப்படித்தான்மா.. எந்த நேரமும் எழுத்து நெனைப்பாவே இருப்பாரு.. இப்போ உன்கிட்ட அஞ்சு நிமிஷம் பேசுனார்ல.. இதை வச்சு கூட ஏதாவது கதை எழுதலாமான்னு யோசிப்பாரு..!!" என்று கணவனை கிண்டல் செய்தாள்.

"ஹாஹா.. அப்படிலாம் எதுவும் இல்லம்மா மீரா.. வெளையாட்டுக்கு சொல்றா.. அவளை நம்பாத..!!" மணிபாரதி மீராவிடம் சமாளிப்பாக சொன்னார்.

"ம்க்கும்.. உங்க கூட இருபத்தஞ்சு வருஷமா வாழ்ந்திருக்கேன்.. எனக்கு தெரியாதா நீங்க என்ன நெனைப்பீங்கன்னு..??" சொன்ன பாரதி, பிறகு மீராவிடம் திரும்பி,

"அவர் கெடக்குறாரு விடும்மா.. நீ நல்லா சாப்பிடு.. இந்தா.." என்றவாறு தட்டில் இருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து மீராவின் வாய்க்கருகே கொண்டு சென்றாள்.

"இ..இருக்கட்டும் ஆன்ட்டி.. நான் சாப்பிட்டுக்.."

"பரவாலமா.. இப்போ என்ன.. என் மருமகளுக்கு நான் ஊட்டி விடக் கூடாதா..?? ம்ம்..?? இந்தா.. சாப்பிடு..!!" பாரதி ஊட்டிவிட, மீரா பிஸ்கட்டை ஒரு கடி கடித்தாள்.

"உனக்கு காரந்தான் புடிக்கும்னு.. ஆண்ட்டி உனக்காகவே ஸ்பெஷலா இந்த சில்லி பிஸ்கட் செஞ்சேன்.. எப்டி இருக்கு..??"

"ம்ம்.. நல்லா இருக்கு ஆன்ட்டி..!!"

"மதியத்துக்கு.. ஹைதராபாத்தி ஸ்டைல்ல சிக்கன் செஞ்சுட்டு இருக்கேன்..!! இவங்க யாருக்கும் காரமே பிடிக்காது.. ஆண்ட்டி உனக்கு மட்டும் கொஞ்சம் தனியா.. காரசாரமா பண்ணிடுறேன்.. என்ன..??"

"ஐயோ.. எதுக்கு ஆண்ட்டி அதெல்லாம்.. தேவை இல்லாம உங்களுக்கு கஷ்டம்..??"

"அட.. இதுல என்னம்மா கஷ்டம் இருக்கு..?? ஆண்ட்டிக்கு பிடிச்ச வேலையே சமைக்கிறதுதான் தெரியுமா..?? உனக்கு சமையல் தெரியாதுன்னு அசோக் சொல்லிருக்குறான்.. ஒன்னும் கவலைப்படாத.. ஆண்ட்டி இருக்கேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் நானே பாத்துக்குறேன்..!!"

"ம்ம்.."

"மதியம் சாப்பிட்டுட்டு.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்புறம் சாயந்திரம் எல்லாரும் கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு.. அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வரலாம்..!! சரியா..??"

"ம்ம்.."

"இந்தா.. சாப்பிடு.. எல்லாம் உனக்காக செஞ்சதுதான்..!!" பாரதி மீண்டும் ஒரு பிஸ்கட் எடுத்து, மீராவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

பாரதியின் அறையில் இருந்த மீராவை, பிறகு கோமளவல்லி வந்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றாள். மீராவும் கோமளவல்லியும் மெத்தையில் அமர்ந்திருக்க, நாராயணசாமி அந்தக்கால தனது மேடை நடிப்பின் சாம்பிள் ஒன்றை, மீராவுக்கு நடித்து காட்டினர். அவளும் 'வாவ்..' என்று கைதட்டி ரசித்தாள்.

"அந்தக் காலத்துல நான் மேடையேறினதும்.. 'தேசமெல்லாம் வென்று முடிக்க.. தேசிங்கு ராசா வந்தேனே..'ன்னு கணீர் குரல்ல பாடிக்கிட்டு.. நெஞ்சை நிமித்தி கம்பீரமா ஆடிக்கிட்டே.. வாளை இப்படி எடுத்து.. அப்படி ஒரு சொழட்டு சொழட்டி இழுத்தேன்னு வச்சுக்கோ.. முன்னாடி உக்காந்திருக்குற அத்தனை பொட்டைப் புள்ளைக மனசும்.. அந்த வாளோட சேர்ந்து வந்துரும்.. அதை அப்படியே மொத்தமா என் இடுப்புல சொருகிப்பேன்..!!"

"ஹாஹாஹாஹா..!!" தாத்தாவின் பேச்சு ஸ்லாங்கும், பாடி லாங்குவேஜும் மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள்.

"எத்தனை புள்ளைக.. எவ்வளவு ஸ்னேஹிதம்.. அது ஒரு காலம்..!! ஊருக்கு ஒரு பத்து சிட்டுகளாவது.. என்னோட சோடி சேர்ந்து பறக்க ரெடியா இருந்தாளுக.. தெரியுமா..??"

"க்ரேட்..!!" மீரா தாத்தாவை பாராட்ட, கோமளவல்லிக்கு ஏனோ இப்போது மனதுக்குள் ஒரு புகைச்சல்.

"ம்க்கும்.. உங்க பழைய பெருமையை பேசலைன்னா.. தூக்கம் வராதே உங்களுக்கு ..??" என்று முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்துக் கொண்டாள்.

"ஹாஹா.. பாத்தியா.. உன் பாட்டிக்கு கோவத்த..?? இது தாத்தாவை புரிஞ்சுக்காம வர்ற கோவம் இல்லம்மா மீராக்கண்ணு.. தாத்தா மேல இருக்குற பிரியத்தால வர்ற கோவம்..!! இந்த பிரியந்தான்.. கள்ளம் கபடம் இல்லாத இந்த பாசந்தான்.. ஏதோ பொறக்குறப்போவே 'இவன்தான் என் புருஷன்'னு சாமிகிட்ட வரம் வாங்கிட்டு வந்தவ மாதிரி.. இவ எங்கிட்ட பழகுன விதந்தான்.. அத்தனை பொட்டைப் புள்ளைகளையும் விட்டுப்புட்டு.. இந்த மகராணி காலடில விழுந்துபுட்டேன்..!! ஹாஹா..!!"

நாராயணசாமி சிரிப்புடன் சொல்ல, இப்போது கோமளவல்லி வெட்கத்தில் முகம் சிவந்துபோய் தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் இருவரையுமே மீரா ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடன் பார்த்தாள். நாராயணசாமி இப்போது மெல்ல நடந்து வந்து மீராவுக்கு அருகே அமர்ந்து கொண்டார். அவளுடைய கையை எடுத்து வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர், பிறகு மெல்லிய குரலில் கேட்டார்.

"நான் எதுக்கு இவ்வளவு நேரம் என்னைப் பத்தி சொன்னேன் தெரியுமா மீராக்கண்ணு..??"

"இ..இல்ல.. தெரியல.. எ..எதுக்கு..??"

"நான்தான் இந்த மாதிரிலாம்.. நெறைய பொட்டைப் புள்ளைக ஸ்னேஹிதம்..!! என் பேரன் அப்படி இல்லைம்மா.. அதை சொல்றதுக்குத்தான்..!!" நாராயணசாமி சொல்ல, மீரா அவரை சற்றே திகைப்பாக பார்த்தாள்.

"ஓ..!!"

"இதுவரை எந்த பொண்ணு கூடவும் அவன் பழகினது கெடையாது.. இத்தனை வருஷத்துல 'என் பிரண்டு'ன்னு சொல்லிட்டு, எந்தப் பொண்ணையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது கெடையாது..!! ஆனா.. அவன் அப்படி யாரையாவது கூட்டிட்டு வர மாட்டானான்னு இந்த குடும்பம் ரொம்ப ஏங்கி கெடந்தது..!! இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும்.. அல்லி ராணியும், அர்ஜுனனும் மாதிரி நடை நடந்து இந்த வீட்டுக்கு வந்தப்போ.. எங்க மனசே அப்படியே நெறைஞ்சு போச்சம்மா..!!"

"ம்ம்.."

"என் அளவுக்குலாம் என் பேரனுக்கு வெவரம் பத்தாது.. சூதுவாது தெரியாத பய..!! கொஞ்சம் வெளையாட்டு புத்தி.. ஆனா ரொம்ப ரொம்ப நல்லவன்மா.. அவனை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்மா..!!" பெருமிதமாக சொன்ன நாராயணாசாமி, பிறகு மனைவியிடம் திரும்பி,

"என்ன கோமளா.. நான் சொல்றது சரிதான..??" என்று அபிப்ராயம் கேட்டார்.

"ரொம்ப சரியா சொன்னீங்க..!!" கோமளவல்லி மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தாள்.

மீராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவித திகைப்புடன், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். இப்போது கோமளவல்லி மீராவை நெருங்கி அமர்ந்தாள்.

"பெரிய ஜமீன் குடும்பம்மா என்னோடது.. கட்டுன பொடவையோடதான் இவர் என்னை வர சொன்னாரு.. ஆனா இது கூடவே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சு.."

சொல்லிக்கொண்டே தன் கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தை கோமளவல்லி கழட்டினாள். எதுவும் புரியாமல் மீரா பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,

"பரம்பரை மோதிரம்.. வெலை மதிப்பில்லாதது.. இத்தனை நாளா நான் போட்டுக்கிட்டேன்.. இனிமே நீ போட்டுக்கோ கண்ணு..!!" என்றவாறு மீராவின் விரலில் அணிவிக்க முயன்றாள் கோமளவல்லி. மீரா பதறிப் போனாள்.

"ஹையோ.. எ..என்ன பாட்டி இது.. ப்ளீஸ்.. வேணா.."

"இல்ல இல்ல.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. மொத மொறையா வீட்டுக்கு வந்திருக்குற.. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு பாட்டிக்கு ஆசை இருக்காதா..?? ம்ம்..??"

"பாட்டி ரொம்ப ஆசைப்பட்டு தர்றா.. வேணான்னு சொல்லக்கூடாது மீராக்கண்ணு.. போட்டுக்கோ..!!"

கோமளவல்லியோடு சேர்ந்து நாராயணசாமியும் மீராவை வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் மீரா அந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டி இருந்தது. பளிச்சிடுகிற சிறுசிறு வெண்ணிற கற்கள் பாதிக்கப்பட்டு.. பளபளத்த அந்த மோதிரத்தை.. பார்த்துக்கொண்டே இருந்த மீராவுக்கு.. அவளையும் அறியாமல் கண்கள் பனித்துக் கொண்டன..!!

கொஞ்ச நேரத்திலேயே சங்கீதா பாட்டியின் அறைக்குள் கடுகடுத்த முகத்துடன் நுழைந்தாள்.

"போதும் போதும்.. ஆளாளுக்கு பேசி அண்ணியை மொக்கை மேல மொக்கை போட்டது..!! இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்னோட கோட்டா.. அண்ணியை என் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.. யாரும் எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்..!!" என்றவாறே உள்ளே வந்தவள், மீராவை நெருங்கி உரிமையாக அவளுடைய கையை பிடித்து எழுப்பினாள்.

"வாங்க அண்ணி.. என் ரூமுக்கு போகலாம்..!! உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு எக்கச்சக்கமான மேட்டர் இருக்குது..!!"

மீரா சங்கீதாவுடன் அவளுடைய அறைக்கு நடந்தாள். 'பேசுறதுக்கு' என்று சங்கீதா சொன்னது தவறு.. 'பாடுறதுக்கு' என்று சொல்லியிருக்க வேண்டும்..!! தன்னுடைய லேப்டாப் திறந்து.. தான் தயாரித்து வைத்திருந்த வாய்ஸ் ஆல்பத்தை.. மீராவுக்கு போட்டுக் காட்டினாள்..!!


"ஹெட்ஃபோன் போட்டுக்கங்க அண்ணி.. அப்போத்தான் க்ளியரா இருக்கும்..!!"

சங்கீதாவே மீராவுக்கு ஹெட்ஃபோன் மாட்டி விட்டாள். Folk, Hindustani, Carnatic, Western என.. விதவிதமாய் தனது குரல் திறமையை கொட்டி.. இசையுடன் சேர்த்து பாடி வைத்த பாடல்களை எல்லாம்.. ஒவ்வொன்றாக ஓடவிட்டாள்..!! சங்கீதாவின் அறையில் மீரா இருந்த முக்கால்வாசி நேரம்.. அவளுடைய பாடலைக் கேட்பதிலேயே கழிந்து போனது..!!

"இதை கேளுங்க அண்ணி.. இது ரொம்ப நல்லா இருக்கும்..!! பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஆலாபனை பண்ணிருப்பேன்.. அதுதான் ரொம்ப ஸ்பெஷல்.. கேட்டுப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!!"

ஹெட்ஃபோனில் கசிகிற சங்கீதாவின் குரலை மீரா ரசிக்க.. தனது குரலை ரசிக்கிற அண்ணியின் முகபாவனையையே சங்கீதா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! பாடலை கேட்டு முடிந்ததும்..

"எப்படி அண்ணி இருக்கு..??" சங்கீதா ஆர்வமாக கேட்க,

"சான்ஸே இல்ல.. லவ்லி வாய்ஸ் உனக்கு..!!" மீரா மனம் திறந்து பாராட்டினாள்.

"ரியல்லி..?? பிடிச்சிருக்கா உங்களுக்கு..??" சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. க்ரேட்..!!!"

"தேங்க்யூ அண்ணி.. தேங்க்யூ ஸோ மச்..!!"

"ஹ்ம்ம்.. நீ இவ்வளவு நல்லா பாடுற.. அசோக் உன் வாய்ஸ் பத்தி என்னல்லாம் சொல்லிருக்கான் தெரியுமா..?? அவனுக்கு ரசனையே இல்ல சங்கி.. சுத்த வேஸ்ட்டு..!!"

"ஹஹ.. இல்ல அண்ணி.. அப்படி சொல்லாதிங்க..!! ரசனை இல்லாமலா உங்கள லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணிருக்கான்..?? உங்க கூட பேசின மொதநாளே உங்களை ஐ லவ் யூ சொல்ல வச்சானே.. அவனா சுத்த வேஸ்ட்டு..??"

சங்கீதா திடீரென அந்தமாதிரி சீரியஸான குரலில் சொல்ல, மீரா இப்போது பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள். ஒருவித திகைப்புடன் சங்கீதாவையே பார்க்க, அவளோ இவளுடைய முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மென்மையான குரலில் சொன்னாள்.

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அண்ணி..??"

"என்ன..??"

"எல்லாரும்.. அண்ணன்தான் உங்களை இந்த வீட்டுக்கு கொண்டுவந்ததா நெனைக்கிறாங்க.. ஆனா அவன் இல்லைன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்..!!" சங்கீதா சொல்ல, இப்போது மீராவின் முகத்தில் ஒரு ஆச்சரிய சுருக்கம்.

"அ..அசோக் இல்லையா.. அப்புறம் யாரு..??"

"அந்த ஆண்டவன்..!!" சங்கீதா அழுத்தம் திருத்தமாக சொல்ல, மீராவின் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

"எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!"

"சொல்றேன்..!! அண்ணனும் நானும் அடிக்கடி சண்டை போடுவோம் அண்ணி.. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ரொம்ப ப்ரியம் இருந்தாலும்.. அதை வெளிய காட்டிக்காம.. எந்த நேரமும் சண்டை போட்டுட்டே இருப்போம்..!!"

"ம்ம்..!!"

"ஒருநாள் அந்த மாதிரி சண்டை போடுறப்போ.. கோவத்துல.. கொஞ்சம் கூட அறிவே இல்லாம.. அண்ணனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்..!! 'உனக்குலாம் லவ் மேரேஜ் நடக்காது.. உன் மூஞ்சியலாம் எவளுக்கும் பிடிக்காது.. எவளும் உன்னை லவ் பண்ணமாட்டா..' அப்டின்னு.. கோவத்துல ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன்..!!"

"ஓ..!!"

"ஆரம்பத்துல என் மேல இருந்த தப்பு எனக்கு புரியல..!! ஆனா அப்புறம்.. பொறுமையா யோசிச்சு பாக்குறப்போ.. நான் பேசினதைக் கேட்டு அண்ணன் எப்படி துடிச்சு போயிருப்பான்னு எனக்கு புரிஞ்சது.. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணேன்..!!"

"ம்ம்..!!"

"அடுத்த நாள் அண்ணன்ட்ட ஸாரி கேட்டும் எனக்கு மனசு ஆறல..!! என்ன பண்றதுன்னு தெரியாம.. கோயிலுக்கு கெளம்பி போயிட்டேன்.. நான் செஞ்ச தப்புக்கு சாமிகிட்ட மன்னிப்பு கேட்டேன்.. 'கூடிய சீக்கிரம் அண்ணனுக்கு காதல் வரம் குடுத்து.. என் மூஞ்சில கரியை பூசு சாமி..'ன்னு.. மனசார வேண்டிக்கிட்டேன்..!! நான் வேண்டிக்கிட்ட அடுத்த நாளே.. தேவதை மாதிரி ஒரு பொண்ணு அவன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னா தெரியுமா..??" சங்கீதா சொன்னது புரியாமல் மீரா விழிக்க, அவள் இப்போது சிரித்தாள்.

"ஹாஹா.. நீங்கதான் அண்ணி அது..!! நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட அடுத்த நாள்தான்.. நீங்க அண்ணன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது..!! ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க.. அந்தக் கடவுள்தான உங்களை எங்க குடும்பத்துக்காக அனுப்பி வச்சிருக்காரு..??"

சங்கீதா சிரிப்புடன்தான் கேட்டாள். ஆனால் மீரா ஒருவித உணர்ச்சி அழுத்தத்துக்கு உள்ளாகி, என்ன சொல்வது என்று புரியாமல், விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு, சங்கீதாவே இதமான குரலில் தொடர்ந்தாள்.

"முன்னாடிலாம் அவனுக்கு ஒரு ஏக்கம் உண்டு அண்ணி.. நமக்குன்னு ஒரு பொண்ணு இல்லையேன்னு..!! வெளில காட்டிக்க மாட்டான்.. பட்.. மனசுக்குள்ள இருக்கும்..!! ஆனா.. ஆனா இப்போ.. நீங்க அவன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்புறம்.. இந்த கொஞ்ச நாளா அவன் எவ்வளவு ஹேப்பியா இருக்கான் தெரியுமா..?? அவன் இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பாத்ததே இல்ல அண்ணி.. அவன் சந்தோஷத்தை பாத்து.. எங்க எல்லாருக்குமே எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. என் அண்ணனுக்கும், இந்த குடும்பத்துக்கும் இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுக்கு..!!"

சங்கீதா உணர்ச்சிவசப்பட்டு போய் சொல்ல, மீரா அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் அரும்பியது. அதை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கண்ணீரை கவனித்துவிட்ட சங்கீதா,

"ஐயோ.. என்னாச்சு அண்ணி.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??" என பதறிப்போய் கேட்டாள்.

மீரா அவளுக்கு வாய் திறந்து பதில் சொல்லவில்லை.. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டு.. 'இல்லை..' என்பது போல தலையைத்தான் மெல்ல அசைத்தாள்..!! அப்போதுதான் அசோக் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

"ஹேய் மீரா.. இங்கயா இருக்குற.. எங்கல்லாம் தேடுறது உன்ன..??"

"என்னாச்சு அசோக்.." மீரா திரும்பி பார்த்து கேட்டாள்.

"எந்திரிச்சு வா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!" அசோக் அவ்வாறு சொல்ல, சங்கீதா இப்போது திடீரென டென்ஷன் ஆனாள்.

"ஏய் போடா.. அண்ணியலாம் அனுப்ப முடியாது.. அவங்க இங்கதான் இருப்பாங்க..!!" என்று அசோக்கிடம் சீறினாள்.

"ஏன்.. நெக்ஸ்ட் டைம் இவ நம்ம வீட்டுக்கு வர்றத பத்தி நெனச்சே பாக்கக் கூடாதுன்னு எதுவும் ப்ளானா..?? பாட்டுலாம் போட்டு காட்டிருப்பியே.. பாவம் சங்கு அவ.. அவ காது நல்லாருக்குறது உனக்கு பிடிக்கலையா.. விடு.. பொழைச்சு போகட்டும்..!!"

"ஹலோ.. உனக்கு பிடிக்காட்டி போ.. அண்ணிக்கு என் வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு அது போதும்..!!"

"ஹாஹா.. 'உண்மையை சொன்னா சங்கிக்கு ரொம்ப கோவம் வரும் மீரா..'னு வர்றப்போ நான்தான் சொல்லிட்டு வந்தேன்.. அதான் பிடிச்சிருக்குன்னு பொய் சொல்லிருப்பா.. இல்ல மீரா..??" அசோக் கிண்டலாக சொல்ல, சங்கீதா உடனே முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கினாள்.

"ஹ்ம் ஹ்ம் ஹ்ம்.. பாருங்க அண்ணி.. இவன் எப்போவுமே இப்படித்தான்.. சும்மா சும்மா வம்பு இழுப்பான்..!!" என்றவள் அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

"ஏய்.. எங்களை டிஸ்டர்ப் பண்ணாம போடா.. அண்ணி உன்கூட வரமாட்டாங்க..!! அதான் உன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கேல.. அதையே போய் கொஞ்சிட்டு கெட போ..!!" சங்கீதா கேஷுவலாக அவ்வாறு சொல்லிவிட, அவ்வளவு நேரம் அண்ணன்-தங்கையின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மீரா,

"எ..என்னது.. கொ..கொரங்கு பொம்மையா..??"

என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள். உடனே அண்ணனின் விசித்திர வழக்கத்தை, சங்கீதா உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தாள். அசோக் இப்போது அவஸ்தையாக நெளிந்தான்.

அப்புறம் ஒருவழியாக சங்கீதாவை சமாளித்து.. 'அம்மா உன்னை கூப்டறாங்க. என்னன்னு போய் கேளு..' என்று பொய் எல்லாம் சொல்லி.. அசோக் மீராவை தனியாக கிளப்பிக்கொண்டு சென்றான்..!!

"வா மீரா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!"

"என்ன..??"

"உனக்கு ரொம்ப பிடிக்கும்..!!"

"என்னன்னு கேக்குறேன்ல..??"

"ப்ச்.. வந்து பாரு.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!"

அவளுடைய கையை பிடித்து உற்சாகத்துடன் இழுத்து சென்றவன்.. வீட்டுக்கு பின்புறம் இருந்த அந்த கார்டனுக்கு அழைத்து சென்றான்..!! மீரா முன்பொருமுறை தனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்த மஞ்சள் ரோஜா செடிகள்.. அந்த தோட்டமெங்கும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன..!!

"ம்ம்.. இதைத்தான் சொன்னேன்.. எப்படி..??" அசோக் பெருமையாக கேட்டான்.

அந்த ரோஜாக்களை பார்த்த கணத்திலேயே.. மீரா ஒரு குழந்தையென மாறிப் போனாள்..!! 'வாவ்' என்று குதுகலித்தவள், ஆசையாக அந்த பூக்களை அணைத்துக்கொண்டு கொஞ்சினாள்..!! அவளுடைய சந்தோஷத்தை கண்டு.. அசோக்கும் அப்படியே பூரித்து போனான்..!!


"பிடிச்சிருக்கா மீரா..??"

"இட்ஸ் ஸோ லவ்லி..!! ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. எ..எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..!!"

"எல்லாம் உனக்கு பிடிக்கும்னுதான் மீரா..!!"

அசோக் புன்னகையுடன் சொல்ல, மீரா அவனுடைய முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள். பிறகு..

"தேங்க்ஸ் அசோக்..!!" என்றாள் சற்றே தழதழத்த குரலில்.

அசோக் அவளை நெருங்கி அவளது கைவிரல்களை ஆதரவாக பற்றிக் கொண்டான். மேலும் சிறிது நேரம் தோட்டத்தில் கழித்துவிட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டில் ஏறி மாடிக்கு சென்றார்கள். மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்ட அசோக், தன் அறைக்கு அவளை அவசரமாக அழைத்து சென்றான். கதவை திறந்து உள்ளே தள்ளி விட்டவன், மீராவிடம் திரும்பி..

"உள்ள போ மீரா.. உள்ள உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு..!!" என்றான்.

என்னவென்று புரியாமலே, மீரா தயக்கமாக அந்த அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடனே அவள் கண்ட காட்சியில் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போனாள். அசோக்குடைய அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும்.. ஒரு பிரம்மாண்ட அளவிலான புகைப்படம்.. வால் பேப்பராக ஒட்டி வைக்கப் பட்டிருந்தது..!! மீராவின் புகைப்படம் அது.. கருப்பு வெள்ளை என இரண்டு வண்ணங்களால் மட்டுமே ஆனது.. மீராவின் முகம் முழுமையாக அந்தப்படத்தில் தெரியவில்லை.. க்ளிக் செய்யும்போது குறுக்கே வந்திருந்த அவளுடைய கையொன்று.. முக்கால்வாசி முகத்தை மறைத்திருக்க.. அவளுடைய ஒளி வீசும் கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்தன..!!

அந்த புகைப்படத்தை பார்த்த மீராவின் இதயம்.. ஒருவித உணர்ச்சி மோதலுக்கு உள்ளானது..!! அசோக் அவள் மீது எந்த அளவிற்கு பித்து பிடித்தவனாய் இருக்கிறான் என்பதை.. அவளுக்கு அழுத்தமாக உணர வைப்பதாக இருந்தது அந்த புகைப்படம்..!! ஒரு இனம்புரியாத உணர்வொன்று.. அவளுடைய மேனியின் நாடி நரம்புகளை எல்லாம்.. வீணையின் தந்திகள் என மீட்டி செல்ல.. சிலுசிலுவென பல அதிர்வலைகள்.. மீராவின் தேகம் மொத்தமும்..!! அசையக்கூட தோன்றாதவளாய்.. அப்படியே அமைதியாக நின்றபடி.. அந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

"என்ன மீரா.. அப்படியே ஷாக் ஆயிட்ட..??"

"ஒ..ஒன்னுல்ல..!!"

"ஹ்ம்ம்.. நாமதான் இவனை ஃபோட்டோவே எடுக்க விட்டது இல்லையே.. இந்த ஃபோட்டோ எப்படி இவனுக்கு கெடைச்சதுன்னுதான பாக்குற..??"

"ம்ம்..!!"

"என்ன பண்றது.. உன்கிட்ட கேட்டா நீ ஏதாவது தத்துவம்லாம் சொல்லுவ.. 'எனக்கு ஃபோட்டோ எடுத்துக்குறதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல.. இதுதான் நாமன்னு ஒரு ஃப்ரேம்க்குள்ள போட்டு, நம்மள நாமே அடைச்சு வச்சுக்க கூடாது.. எப்போவும் எந்த கட்டுப்பாட்டுக்குள்ளயும் நாம சிக்க கூடாது.. சுதந்திரமா இருக்கணும்.. அப்படி இப்படி..'ன்னு..!! ஆனா.. உன் ஃபோட்டோ ஒன்னு வச்சுக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா..?? அதான்.. ஒரு நாள் உனக்கே தெரியாம இதை எடுத்தேன்.. பட்.. என் பேட் லக்.. அந்த நேரம் பார்த்து, நீ உன் கையை குறுக்க கொண்டு வந்துட்ட..!! ஹாஹா..!!!"

"................"

"ஆனா.. அந்த மிஸ்-க்ளிக் கூட.. எவ்வளவு அழகு தெரியுமா.. என்ன ஒரு க்யூட் தெரியுமா..?? ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரி ஸ்னாப்'ன்னு எனக்கு தோனுச்சு.. ரொம்ப நாள் மொபைல்லயே வச்சு பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்..!! அப்புறம்.. அன்னைக்கு நீ சொன்னேல.. காலைல எந்திரிச்சதும் என் மூவியோட அட்வர்டைஸ்மண்ட் போர்ட்ல கண்ணு முழிக்கனும்னு.. அன்னைக்குத்தான் எனக்கு திடீர்னு இந்த யோசனை.. உடனே அந்த ஃபோட்டோவை என்லார்ஜ் பண்ணி.. இங்க ஒட்டி வச்சுட்டேன்.. இப்போ.. எப்போவும் என்கூடவே நீ இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்..!! எப்படி இருக்கு..??"

"ம்ம்.. நைஸ்..!!" மீரா இப்போதுதான் சற்றே இறுக்கம் தளர்ந்து, இலகுவான குரலில் சொன்னாள்.


அப்புறம் சிறிது நேரம்.. இருவரும் எதுவும் பேசாமலே.. சுவற்றில் ஜொலித்த அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்..!! பிறகு அசோக்தான் குரலில் காதலை குழைத்துக்கொண்டவாறே சொன்னான்.

"எனக்கு இந்த ஃபோட்டோவ ரொம்ப பிடிக்கும் மீரா.. தெரியுமா..?? உன் கண்ணுல தெரியுது பாரு அந்த எமோஷன்.. அதுக்கு என்ன அர்த்தம்னே என்னால கண்டுபிடிக்க முடியாது..!! அந்த பார்வைக்கு அர்த்தம்.. சந்தோஷமா.. சோகமா.. பயமா.. கோவமா.. ஆசையா.. வெறுப்பா.. கருணையா.. காதலா.. எதுவுமே எனக்கு புரியாது..!! ஆனா.. பாத்துக்கிட்டே இருக்கணும்னு மட்டும் தோணும்.. அது ஏன் மீரா..??"

".................." மீரா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

"இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சா.. எனக்கு ஒவ்வொரு நேரமும் ஒன்னொன்னு தோணும்.. அந்தந்த நேரத்துல என் மூடுக்கு தகுந்த மாதிரி..!! நான் சிரிச்சா அந்த கண்ணும் சிரிக்கிற மாதிரி இருக்கும்.. நான் அழுதா அதுவும் என் கூட அழும்.. எப்படி மீரா அது..??"

".................."

"தெனமும் காலைல எந்திரிச்சதும்.. கொஞ்ச நேரம் உன் கண்ணையே பாத்துட்டு உக்காந்திருப்பேன்.. அப்போ எப்படி இருக்கும் தெரியுமா..?? எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா.. அந்த மாதிரி ஒரு உணர்ச்சியை நான் அனுபவிச்சதே கெடையாது மீரா.. அது மட்டும் உண்மை..!!"

".................."

"கொஞ்ச நேரம் பாத்தா போதும்.. அவ்வளவு எனர்ஜடிக்கா இருக்கும்.. அப்புறம் அன்னைக்கு பூரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்..!!"

பேச்செல்லாம் பெருமிதமாய் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா பதில் ஏதும் சொல்லாமல் அவனுடைய கண்களையே ஆழமாக பார்த்தாள். அப்புறம் பார்வையை விலக்கிக்கொண்டு, மெல்ல நடை போட்டாள். அவளுடைய நெஞ்சமெல்லாம் ஒரு புதுவித உணர்ச்சி கொந்தளிப்பு. நடந்து சென்று கட்டிலை நெருங்கினாள். தலையணையில் தலை சாய்த்திருந்த அந்த குரங்கு பொம்மை, அவளுடைய கண்ணில் பட்டது. ஆயிரம் ரூபாய்க்கான அநாதை விடுதி டிக்கெட்டுகளை, அசோக் ஒற்றை ஆளாக வாங்கிக் கொண்டதற்காக, மீராவே அவனுக்கு பரிசளித்த பொம்மை...!!

சிறிது நேரத்திற்கு முன்பு.. 'அசோக் எந்த நேரமும் அந்த பொம்மைக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பான்' என்று சங்கீதா சொன்னது நினைவில் வர.. மீராவின் உதட்டில் ஒரு உலர்ந்த புன்னகை..!! அந்த குரங்கு பொம்மையின் சிவந்த மூக்கினை.. மெல்ல தடவிப் பார்த்தாள்..!! பிறகு அவளுடைய கைகள் மெல்ல மேல் நோக்கி நகர்ந்தன..!!

கட்டிலை ஒட்டியிருந்த குட்டி அலமாரியில்.. அடுக்கி வைக்கப்பட்டிருந்தன அந்த புத்தகங்கள்..!! அசோக்கின் அப்பா மணிபாரதி எழுதிய காதல் காவியங்கள்..!! எல்லா புத்தகங்களுக்கும் சிகரமாய் வீற்றிருந்தது அந்த புத்தகம்.. அதன் முகப்பில்..

"காதல் பூக்கும் தருணம்..!!"

என்ற கதைத்தலைப்பு தங்க நிறத்தில் தகதகத்தது..!! மீரா தனது தளிர் விரல்களால்.. அந்த எழுத்துக்களை மென்மையாக வருடினாள்..!! அவளுடைய உள்ளத்தில் ஒருவித உணர்ச்சி வெள்ளம்.. இப்போது உடைப்பெடுத்து ஓடியது..!! பிறகு என்ன நினைத்தாளோ.. சரக்கென திரும்பியவள்.. அசோக்கை ஏறிட்டு திடீரென சொன்னாள்..!!

"It's unbelievable ashok.. It's really unbelievable..!!"

"எ..என்ன மீரா.. என்ன unbelievable..??" அசோக் குழப்பமாக கேட்டான்.

"Everything..!!!! நீ.. உன்னோட லவ்.. இந்த வீடு.. இந்த குடும்பம்.. இந்த குடும்பத்துல இருக்குற ஒவ்வொரு மனுஷங்க.. அவங்க மனசுல இருக்குற கள்ளம் கபடம் இல்லாத அந்த அன்பு.. இந்த ஃபோட்டோ.. இந்த பொம்மை.. Everything..!!!! Everything is unbelievable to me..!!!! சத்தியமா சொல்றேன் அசோக்.. என மனசார சொல்றேன்.. இந்த வீட்டுக்கு வரப்போறவ, ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் பண்ணிருக்கணும்..!!" மீரா அந்த மாதிரி உணர்ச்சிவசப்பட்டு போனவளாய் சொல்ல, அசோக் சற்றே வியப்புற்றான்.

"ஹேய்.. என்ன நீ.. 'இந்த வீட்டுக்கு வரப்போறவ'ன்னு யாரையோ சொல்ற மாதிரி சொல்ற.." என்றவாறே அவசரமாய் அவளை நெருங்கியவன்,

"நீதான் மீரா அது.. நீதான் இந்த வீட்டுக்கு வரப்போறவ..!!"

என்றவாறே தனது இரண்டு கைகளாலும், அவளது கன்னங்களை மென்மையாக தாங்கி பிடித்தான். பிறகு அவளுடைய முகத்தை ஆசையும் காதலுமாய் பார்த்தவாறே சொன்னான்.

"நீ சொன்னதுல ஒரு சின்ன திருத்தம் மீரா..!! நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க.. இப்போ இல்ல.. உன்கிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே.. உன்னோட குணத்தை பத்தி அவங்கட்ட சொன்னப்போ.. என் அம்மா அப்படி அவங்க மனசார சொன்னாங்க.. 'உன்னால முடிஞ்சா அவளை இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வாடா'ன்னு சொன்னாங்க..!! இன்னைக்கு நான் கூட்டிட்டு வந்திருக்குறேன்.. எங்களுக்குலாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா மீரா..??"

மனம் முழுதும் மத்தாப்பு கொளுத்திப் போட்ட மாதிரியான ஒரு பூரிப்புடன் அசோக் அவ்வாறு சொல்ல, மீரா அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. தனது கன்னத்து கதுப்புகள் ரெண்டும் அவனது கைப்பிடிக்குள் அடங்கியிருக்க, கண்களை மட்டும் அகலமாய் திறந்து, அசோக்கின் முகத்தையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சியை கிளறிவிட்டது. முகமெல்லாம் திகைப்பாக மாறிப்போக, தடுமாற்றமான குரலில் சொன்னான்.

"இ..இது.. இதுதான் மீரா.. இந்த பார்வையைத்தான் சொன்னேன்.. இ..இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் மீரா..??"

அசோக்கின் கேள்விக்கு மீரா பதில் சொல்லவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"அ..அர்த்தம் என்னன்னு புரியாட்டாலும்.. அப்படியே பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கே.. ஏன் மீரா..??"

மீரா அமைதியாகவே இருந்தாள். அசோக்கின் கண்களை கூர்மையாக, ஆழமாக பார்த்தாள். அசோக்கையும் அந்த பார்வை காந்தம் போல ஈர்க்க, இமைக்க மறந்து அந்த ஈரவிழிகளையே பார்த்தான். அவர்களுடைய உள்ளத்தில் இருந்த உணர்வுகள் அத்தனையும்.. கருவிழியின் மையத்தில் குவிந்து.. ஓருடல் விட்டு அடுத்ததொரு உடலுக்கு இடம் பெயர துடித்தன..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி.. உலகை மறந்து போய்.. உணர்வற்ற உருவங்கள் போல.. இருவரும் ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களோ..?? இருவருக்குமே கண்ணிமைக்க தோன்றவில்லை.. அதன் காரணமும் புரியவில்லை..!!

பிறகு மீராதான் முதலில் இமைகள் சோர்ந்து போய், விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். கண்களில் தேக்கி வைத்த உணர்சிகள், இப்போது அவளது முகத்தில் கொப்பளித்தன. என்னவென்று இனம் காண முடியாத ஒரு துடிப்பு அவளுடைய முகமெங்கிலும். பற்கள் படபடவென தந்தியடிக்க.. உதடுகள் வெடவெடவென தவித்து துடித்தன..!! அத்தனை நேரம் அவளுடைய கண்களில் பதிந்திருந்த அசோக்கின் பார்வை.. இப்போது அவளுடைய உதடுகளுக்கு இடம் மாறியது..!!


சற்றுமுன் பார்த்த ரோஜா மலரிதழ்களின் அழகை வாங்கியிருந்த அந்த வடிவம்.. பவளத் துண்டங்களை மெருகேற்றி ஒட்டி வைத்த மாதிரி தகதகக்கிற அந்த செந்நிறம்.. பலநாட்களாய் தேனில் ஊறித்திளைத்த மாதிரி மினுமினுக்கிற அந்த ஈரம்..!! புத்தி பேதலித்துப் போனது அசோக்கிற்கு..!! அவனையும் அறியாமல் அவனது உதடுகள்.. மீராவின் உதடுகளை நோக்கி முன்னேறின..!!

இருவரது உதடுகளுக்கும் இடையில்.. இப்போது இரண்டு மூன்று மில்லி மீட்டர் இடைவெளிதான்..!! இருவருடைய மூச்சுக் காற்றும்.. இப்போது ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டன..!! ஆசை உந்தித்தள்ள.. அசோக் அவனது உதடுகளை மீராவின் உதடுகளுடன் இணைத்தான்.. மெல்ல உரசினான்..!! வண்டு வந்து அமர்ந்ததுமே.. வாசல் திறக்கிற பூவிதழ் போல.. அத்தனை நேரம் சேர்ந்திருந்த மீராவின் உதடுகள்.. இப்போது படக்கென பிரிந்தன.. அசோக்கிற்கு வசதியாக பிளந்து கொண்டன..!!

மீராவிடம் எதிர்ப்பில்லை என்று தெரிந்ததும்.. அசோக்கிடம் ஒரு துணிச்சல்.. அந்த துணிச்சல் அவனுடைய உதடுகள் மூலம் வெளிப்பட்டது.. மெல்ல நகர்ந்த அசோக்கின் உதடுகள், மீராவின் மேலுதட்டை கவ்விக்கொண்டன..!! உடனே மீராவும்.. திறந்திருந்த உதட்டு வாசலை இறுக்க மூடினாள்.. அசோக்கின் கீழுதட்டை கவ்விக் கொண்டாள்..!! இருவருடைய கண்களும் இமைப்போர்வை போர்த்திக்கொள்ள.. ஒருவரது இதழ் இனிப்பை அடுத்தவர் சுவை பார்த்தனர்..!!

ஒரு சில வினாடிகள்.. பிறகு படக்கென உதடுகள் மாற்றிக் கொண்டார்கள்..!! மீராவின் கீழுதடு இப்போது அசோக்கிடம்.. அவனது மேலுதடு மீராவின் வசம்.. அவர்களது உதடு உறிஞ்சும் வேகம் மட்டும் இப்போது அதிகரித்திருந்தது..!! அசோக்கின் கைகள் மீராவின் கன்னங்களை வலுவாக தாங்கிப் பிடித்திருந்தன..!! மீராவின் இடது கை இப்போது அசோக்கின் இடுப்பை வளைத்தது.. அவளது வலது கை மேலேறி, அவனது பிடரியை பற்றியது.. அவனது முகத்தை முன்னோக்கி அழுத்தியது..!!

இருவரும் இதழமுது அருந்திக்கொண்டே இருந்தனர்.. உமிழ்நீர் உணவு உண்டு கொண்டே இருந்தனர்..!! நேரம் கூட கூட.. அவர்களது வேகமும் கூடிக்கொண்டே சென்றது.. ஆவேசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.. ஒருவர் உதட்டை அடுத்தவர், முரட்டுத்தனமாய் சுவைத்து உறிஞ்சினர்..!! முத்தப்போரை எப்போது நிறுத்தலாம் என்ற எண்ணமே இல்லாமல்.. செயல்பட்டுக் கொண்டிருந்தனர்..!! ஒருவர் முதுகை அடுத்தவர் பற்றி பிசைந்தனர்.. உதடுகளுக்கு போட்டியாக உடல்களையும் நெருக்கி இறுக்கினர்.. இரண்டு உடல்களும் ஒன்றோடொன்று ஒட்டி.. இணைந்து.. ஓருடல் ஆகிவிடாதா என்று ஏங்கினர்..!!

எவ்வளவு நேரம் என்று இருவருக்கும் நினைவில்லை..!! மீரா களைத்துப்போய் உதடுகளை விலக்கிக்கொள்ளும்போது.. அசோக் பாய்ந்து சென்று அந்த உதடுகளை கவ்வி.. மீண்டும் ஆரம்பிப்பான்..!! பிறகு.. போதுமென்று நினைத்து அசோக் விலகுகையில்.. மீரா அனுமதிக்க மாட்டாள்.. இன்னும் ஏதோ இன்பம் அவனது உதட்டில் மிச்சமிருக்கிறது என்பது போல.. தனது உதடுகளாலேயே தேட ஆரம்பிப்பாள்..!!

உதடுகள் வழியாகவே உயிர்ப்பரிமாற்றம் செய்துகொள்ள முனைந்தார்கள் இருவரும்..!! முத்தத்துக்கு இடையில் மூச்சு விடுதல் கூட அவர்களுக்கு ஒரு தொல்லையாக இருந்தது..!! உயிர் பிரிந்தால், இந்த உதட்டுச்சுவை இல்லையே என்று நினைத்தார்களோ என்னவோ.. அவ்வப்போது அந்த ஆவேச முத்தத்துக்கு நடுவில்.. மூச்சும் சிறிது விட்டுக் கொண்டார்கள்..!!

நெடுநேரமாய் ஒட்டி உறவாடி.. முட்டி மோதி.. கடித்து சுவைத்து.. உறிஞ்சி இழுத்து.. களைத்து சோர்ந்து போனவர்கள்.. பிறகு மெல்ல மெல்ல அந்த முத்தகாவியத்துக்கு முடிவுரை எழுத சம்மதித்தனர்..!! மீரா தனது முகத்தை சாய்த்து.. அசோக்கின் மார்பில் புதைந்து கொண்டாள்.. அவளுடைய கைகள் அசோக்கை இறுக்கமாக அணைத்திருந்தன..!! முயல்குட்டி போல தன் மார்பில் பதுங்கியிருக்கிற காதலியை.. அசோக்குமே ஆரத்தழுவிக் கொண்டான்.. அவளுடைய முதுகை இதமாக வருடிக் கொடுத்தான்..!!

இருவருக்கும் 'ஹ்ஹா.. ஹ்ஹா..' என மூச்சிரைத்தது.. ஒருவருடைய மூச்சுக்காற்று அடுத்தவரின் நாசிக்குள் புக.. அதுவேறு புது கிறக்கத்தை கிளப்பிவிட்டது..!! மீராவின் மார்புப்பந்துகள் மூச்சிரைப்பின் காரணமாக.. சர் சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின.. அசோக்கின் பரந்த மார்பில் பட்டு.. உரசி.. தவழ்ந்து.. சுழன்று.. மெல்ல மெல்ல ஆசுவாசம் கொள்ள ஆரம்பித்தன..!! அசோக் தனது மூக்கை மீராவின் கூந்தலுக்குள் நுழைத்து வாசம் பிடித்தான்..!! பிறகு அவளது ஒருபக்க காதுமடலுக்கு.. மெலிதான ஒரு முத்தத்தை கொடுத்தான்..!! தனது உதடுகளை அந்த காது மடலில் வைத்து மென்மையாக உரசியவாறே.. போதையேறிப் போன குரலில் சொன்னான்..!!

"Thanks for the valentine's gift.. meera..!!"

"ம்ம்..!!"

மெலிதான முனகலை வெளிப்படுத்திய மீரா, மேலும் அவனை இறுக்கிக் கொண்டாள். அசோக்கும் நெருக்கமாக அணைத்துக்கொண்டே, அவளுடைய காதோரமாய் கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"எப்போவுமே ஃபர்ஸ்ட் கிஸ் ரொம்ப ஸ்பெஷல்தான்.. இல்ல..??"

அவ்வளவுதான்..!! மீராவுக்கு சுரீர் என்று இருந்தது..!! மயக்கத்தில் செருகியிருந்த அவளது விழிகள் ரெண்டும்.. இப்போது படக்கென்று இமைகள் திறந்தன..!! அசோக்கின் மார்மீது இரண்டு கைகளையும் வைத்து.. அவனை சரக்கென்று தள்ளிவிட்டாள்..!! முகமெல்லாம் அவளுக்கு வெளிறிப் போயிருக்க.. கண்கள் ஒரு மிரட்சியுடன் அகலமாய் விரிந்திருந்தன.. முத்தமிட்டு களைத்திருந்த உதடுகள் இப்போது வெடவெடத்தன.. மார்புகள் குபுக் குபுக்கென சுருங்கி விரிந்தன..!! எதையோ பார்த்து பயந்துவிட்டவள் மாதிரியான ஒரு முகபாவம்..!! அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!!

"ஹேய்.. மீரா.. என்னாச்சு..??"

மீரா பதில் ஏதும் பேசவில்லை. அசோக்கின் முகத்தையே மலங்க மலங்க பரிதாபமாக பார்த்தாள்..!! முணுக்கென்று அவளுடைய கண்களில் நீர் பூத்தது.. சர்ரென்று அவளது கன்னங்கள் நனைத்து ஓடியது..!! அசோக் பதறிப் போனான்..!!

"ஐயோ.. மீரா.. என்னம்மா.. என்னாச்சு..??"

என்றவாறே அவளுடைய கன்னத்தை பற்றினான். மீரா அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டாள். இப்போது அசோக்கின் இதயம் துடிதுடித்து போனது.

"என்னடா.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??"

"........"

"நா..நான்.. நான் கிஸ் பண்ணது தப்பா..??" அசோக்கின் ஏக்கமான கேள்விக்கு, மீரா இப்போது பதில் சொன்னாள்.

"இல்ல.. நான் கிஸ் பண்ணது தப்பு..!!"

"எ..என்ன.. என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்..??"

அசோக் புரியாமல் கேட்க, மீரா அவனுக்கு பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாய்.. அவசரமாக அவளது விழிநீரை துடைத்துக் கொண்டாள்..!! மூக்கை மெல்ல விசும்பிக்கொண்டு.. அசோக்கின் முகத்தை ஏறிட்டாள்..!! மிகவும் கஷ்டப்பட்டு.. ஒரு புன்னகையை சிந்த முயன்றாள்..!! பிறகு உடைந்து போன குரலில்..

"நா..நான் கெளம்புறேன் அசோக்.. எ..எனக்கு வேலை இருக்கு.. நாளைக்கு பாக்கலாம்..!!" என்றவள்,

அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், திரும்பி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் எதுவுமே புரியாமல்.. அவள் அறையை விட்டு வெளியேறுவதையே பார்த்தவாறு.. உறைந்து போய் நின்றிருந்தான்..!!

 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. செம்ம.. அத்தியாயம் 16,17 ரெண்டும் கொண்ணு எடுத்திர்ச்சு.. இவ்ளோ நேரம் படிக்கரப்போ, ஒரு நெருடல் இருந்திட்டே வந்தது, இப்போ இந்த எடத்துல எல்லாம் காலி ஆயிர்ச்சு.. மீரா(???) காதலை கூறிய விதம், அழுகை, அதன் பிறகு அசோக்கோட வலி.... இன்னும் நெறைய.. அந்த வலி கஷ்டம்னாலும், அது ஏதோ, ரொம்ப பிடிச்சிர்க்கு.. எனக்கு மறுபடியும் அந்த வலி வேணும்னு இருக்கு.. என்னடா, comment boxla பொலம்பரேனு பாக்கதிங்க...

    இந்த கதை ரொம்ப பிடிச்சிர்க்கு... இந்த பகுதிய மட்டும் திரும்ப திரும்ப படிக்கலானு இருக்கு.. அதுக்கப்பரம் எப்படி எழுதிர்பிங்கனு தெரில.. I know, நீங்க நல்லா எழுதிர்பிங்கனு.. But என்னமோ தெரில.. அதும் இல்லாம மொத்தம் 18 பகுதிதான்.. அப்புறம் கதை முடிஞ்சிரும்மே... எனக்கு இது முடிய கூடாது.. எனக்கு இது ரொம்ப பிடிச்சுர்க்கு...

    உங்களோட கதையெல்லாம் ஓரளவு படிச்சுர்க்கேன்... எனக்கு ரொம்ப பிடிக்கும் சில எடமெல்லாம்.. நா சொன்னது இல்ல.. கண்ணாமூச்சி ரே ரே, ரொம்ப பிடிக்கும் (ஒரு சில இடம் தவிர, ஆனா அது ஒரு பெரிய விசயமாவே இல்ல).. முக்கியமா நீங்க உணர்வுகளையும், சூழலையும் சொல்லும் விதம், ரொம்ப பிடிக்கும்.. கண்ணாமூச்சி ரெ ரே ல, அந்த குறிஞ்சி மலை, மரங்கள், அந்த நெடி உண்மையாளுமே என்ன அந்த எடத்துக்கு கூட்டிட்டு போகும்.. அந்த ரஷ்ய மரபொம்மை, இன்னும் ஞாயபகம் இருக்கு.. நா படிச்சு 2 வர்சம் இருக்கும், இன்னும் அந்த தாக்கம் இருக்கு.. என்னோட பெருமைக்கு நா இத சொல்லுல, நீங்க அவ்ளோ அழக எழுதிரிகீங்கனு சொல்லரேன்.. சில நேரம், பொறமையா இருக்கும் அண்ணா மட்டும் எப்படி இப்படி எழுதாரங்கனு.. எனக்கும் சில நேரம் எழுத ஆசை வரும் (பாருடா?!)..

    உங்களோட பிடிச்ச கதையெல்லாம் சேமிச்சு வெச்சுக்கணும்.. ஆனா, இப்போ படிக்க மாட்டேன், ஏனா சுவரஸ்சியம் போயிருமே...


    I really loved your stories and they're my best reliefs and my best friends in some of my hardtimes..

    அப்புறம் முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன்.. உங்களோட humorous superb.. I really enjoyed it and loved it.. Really I like to talk too much now, not only becoz excitement, with the love of your writings..

    ReplyDelete
  3. எனக்கு எண்ணமோ தோணுது மீராவின் தனிப்பட்ட வாழ்கை மிக கடினமானதாக இருந்திருக்க வேண்டும் இல்லையென்றால் இப்படி அவளது உணர்வுகள் நொடிக்கொருமுறை மாறியிருக்காது

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...