அத்தியாயம் 16
அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!
மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி 'டக்.. டக்..' என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!
"ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!"
"ஜூஸ் இன்னும் மிச்சம் இருக்கே..??"
மீரா கூலாக டேபிளை கைகாட்ட, அசோக் இப்போது அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்து ஒரு முறை முறைத்தான். 'ஹ்ம்ம்..' என்று ஒரு சலிப்பு மூச்சு விட்டுக்கொண்டான். பிறகு ஜூஸ் தம்ளர் எடுத்து, கடகடவென மொத்த ஜூஸையும் ஒரே மடக்கில் அருந்தி முடித்தான். காலியாகிப்போன கண்ணாடி தம்ளரை 'படார்' என்று டேபிளில் வைத்தவாறு, பொறுமையற்றவனாய் கேட்டான்.
"ம்ம்.. போதுமா..? ஜூஸும் ஓவர்..!! இப்போ சொல்லு..!!"
"என்ன சொல்லனும்..??" அவள் குரலில் தெரிந்த ஒரு விளையாட்டுத்தானம் அசோக்கை இப்போது எரிச்சலாக்கியது.
"ப்ச்.. வெளையாடாத மீரா..!! காலைல இருந்து நானும் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்குறேன்.. நீயும் சும்மா சும்மா பேச்சை மாத்துறதுலயே குறியா இருக்குற.. நான் கேட்டதுக்கு இதுவரை பதிலே சொல்லல..!! இப்போ வந்து ஒன்னுந்தெரியாத மாதிரி 'என்ன சொல்லனும்'னு கேட்டா என்ன அர்த்தம்..?? என்னைப் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..??"
"ம்ம்..?? ஜூஸ் சாப்பிட்டுட்டு.. வாயை தொடைக்காதவன் மாதிரி தெரியுது..!!"
குறும்பாக சொன்ன மீரா, கையிலிருந்த அவளுடைய கர்ச்சீஃபை அசோக்கின் வாய்க்கருகே கொண்டு செல்ல, அவன் அவளுடைய கையை பட்டென தட்டி விட்டான். தனது புறங்கையாலேயே உதட்டை துடைத்துக்கொண்டவன், சற்றே எரிச்சலான குரலில்..
"Be serious Meera.. Please..!!" என்றான்.
மீராவோ அவனுடைய எரிச்சலை கண்டுகொள்ளாமல் கர்ச்சீஃபை பேகுக்குள் திணித்தாள். மணிக்கட்டு திருப்பி வாட்ச் பார்த்தாள். அவளுடைய அலட்சியமான நடவடிக்கையில், அசோக் மேலும் டென்ஷன் ஆனான்.
"ப்ச்.. நான் இங்க சீரியஸ்னு சொல்லிட்டு இருக்குறேன்.. நீ என்ன அங்க கூலா மணி பாத்துட்டு இருக்குற..??" அசோக் அவ்வாறு எரிச்சலாக கேட்கவும், இப்போது மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு கூர்மையாக பார்த்தாள்.
"இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற..??"
"டென்ஷன் ஆகாம..?? நீ பண்ற வேலைலாம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.. அப்படியே தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு..!! கொஞ்ச நாளாவே நீ ஒன்னும் சரியில்ல மீரா.. ரொம்ப மாறிட்ட..!! நீ ஏன் இப்படிலாம் நடந்துக்குறேன்னு எனக்கு சுத்தமா புரியல..!! எங்கிட்ட நெறைய பொய் சொல்றேன்னு தோணுது.. எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தோணுது..!! நேத்து நீ அப்படி நடந்துக்கிட்டதுக்கப்புறம்.. என் மனசுல இருந்த அந்த டவுட் இப்போ கன்ஃபார்மே ஆயிடுச்சு..!!"
படபடவென சொன்ன அசோக்.. சற்றே நிறுத்தி.. தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான்..!! அருகில் வேறு யாரும் இல்லை என்பதை அவ்வாறு உறுதி செய்து கொண்ட பின்பும்.. குரலை சற்று தணித்துக்கொண்டேதான் அதற்கு மேல் தொடர்ந்தான்..!!
"நேத்து ஏன் மீரா அப்படி பிஹேவ் பண்ணின.. கிஸ் பண்ற வரை அப்படியே கம்முனு இருந்துட்டு.. அப்புறம் ஏன் என்னை தள்ளிவிட்ட..?? எதுக்கு திடீர்னு அழுத..??"
அசோக்கின் கேள்விக்கு மீரா அமைதியையே பதிலாக தந்தாள். அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவன் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே, ஒருவித ஆதங்கத்துடன் பார்த்தான். அப்புறம் ஒரு பெருமூச்சுடன் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு, சற்றே சலிப்பான குரலில் சொன்னான்.
"நீ பாட்டுக்கு திடீர்னு அழுதுட்டு ஓடிட்ட.. வீட்ல எல்லாரும் என்னைப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க தெரியுமா.. 'மீரா எதுக்கு அதுக்குள்ள கெளம்பிட்டா.. என்ன ஆச்சு அவளுக்கு.. அவ மூஞ்சியே சரி இல்லயே.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா.. என்ன பண்ணின அவளை..??' அப்டி இப்டின்னு.. ஆளாளுக்கு பாடாபடுத்திட்டாங்க..!! 'அவளுக்கு ஒரு கால் வந்தது.. அர்ஜன்ட் வொர்க்னு சொல்லிட்டு கெளம்பிட்டா..' அப்டின்னு நான் சொன்னதை யாருமே நம்புற மாதிரி இல்ல..!! திரும்ப திரும்ப 'நீ என்ன பண்ணின அவளை.. நீ என்ன பண்ணின அவளை..'ன்னு.. கேள்வி மேல கேள்வி..!!"
"சொல்ல வேண்டியதுதான..?? 'அவளை தனியா ரூமுக்கு தள்ளிட்டு போய் கிஸ் அடிச்சேன்.. அதுல மெரண்டு போய் ஓடிட்டா..'ன்னு..??" மீராவின் குரலில் ஒரு குறும்பு.
"என்ன.. நக்கலா..?? இங்கபாரு.. நேத்து கிஸ் பண்ணினது உனக்கு பிடிக்கலன்னு மட்டும் பொய் சொல்லாத.. அதை நான் நம்ப மாட்டேன்..!! நீ எவ்வளவு ஆசையா என்கூட கோவாப்ரேட் பண்ணினேன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின.. தேவையில்லாம எதுக்கு அழுத..?? அப்புறம்.. அது என்னது.. ஆங்ங்.. 'நீ கிஸ் பண்ணினது தப்பு இல்ல.. நான் கிஸ் பண்ணினதுதான் தப்பு'ன்னு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? நீ பண்ணினா என்ன.. நான் பண்ணினா என்ன.. கிஸ் ஒன்னுதான..?? அதுல என்ன என் மேல தப்பு இல்ல.. உன் மேல மட்டும் தப்பு..??"
"ம்ம்.. கேள்விலாம் அவ்வளவுதானா.. இல்ல.. இன்னும் இருக்கா..??"
"இப்போதைக்கு இவ்வளவுதான்..!! இதுக்கு நீ மொதல்ல பதில் சொல்லு.. மிச்ச கேள்விலாம் அப்புறம் நான் கேக்குறேன்..!!"
"ஹ்ம்ம்.. சொல்றேன்..!!"
இறுக்கமான குரலில் சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அந்த டேபிளுக்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே, வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தனது கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன், அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வேகமாய் பறக்கிற வாகனங்களையும், வெட்டிப் பரபரப்புடன் அலைகிற மனிதர்களையுமே, சிறிது நேரம் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த மீரா, பிறகு அசோக்கிடம் திரும்பி திடீரென கேட்டாள்.
"இந்த டேபிள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இல்ல அசோக்..??"
"வாட்..??" அசோக் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.
"நீ மொதமொதலா எங்கிட்ட பேச வந்தப்போ.. நான் இதே இடத்துலதான் உக்காந்திருந்தேன்..!! நாம ரெண்டு பேரும் 'ஐ லவ் யூ' சொல்லிக்கிட்டதும்.. இதே டேபிள்லதான்..!! அதுக்கப்புறம் எத்தனையோ தடவை.. இங்க உக்காந்து ரெண்டு பேரும் பேசிருக்கோம்.. கதையடிச்சிருக்கோம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நெறைய தெரிஞ்சிட்ருக்கோம்..!! அப்போ நமக்கு இந்த டேபிள் ரொம்ப ஸ்பெஷல்தான..??"
"ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!" அசோக் ஒரு சிறு குழப்பத்துடனே மெலிதாக புன்னகைத்தான்.
"முன்னாடிலாம் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ஐ மீன்.. நாம மீட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி..??"
"என்ன பண்ணுவ..??"
"எப்போ இங்க சாப்பிட வந்தாலும்.. இதே டேபிள்தான் சூஸ் பண்ணுவேன்..!! இங்க உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்.. தனியா வந்து உக்காந்துகிட்டு.. அப்படியே வெளில வேடிக்கை பாத்துக்கிட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு.. ஹ்ஹ.. ஒருமணி நேரத்துக்கு மேல உக்காந்து.. உலகத்தை மறந்து சாப்பிட்டுட்டு இருப்பேன்.. தெரியுமா..??"
"ம்ம்.. ஞாபகம் இருக்கு.. கவனிச்சிருக்குறேன்..!!"
"ஃபுட்கோர்ட் உள்ள என்டர் ஆகுறப்போவே.. இந்த டேபிள் காலியா இருக்கான்னுதான் மொதல்ல பார்ப்பேன்.. காலியா இருந்தா, நேரா போய் சாப்பாடு வாங்கிட்டு.. இங்க வந்து உக்காந்துக்குவேன்..!! சப்போஸ் வேற யாராவது இங்க உக்காந்திருந்தா.. சாப்பாடு வாங்க மாட்டேன்.. அங்க எங்கயாவது காலியா இருக்குற டேபிள்ள சும்மா உக்காந்துக்கிட்டு.. இந்த டேபிள் காலியாகுற வரை வெயிட் பண்ணுவேன்..!! அப்புறம் இங்க இருக்குறவங்க எந்திரிச்சதும்.. சாப்பாடு வாங்கிட்டு வந்து இங்க உக்காந்துக்குவேன்..!! அந்த அளவுக்கு எனக்கு இந்த டேபிள் ரொம்ப பிடிக்கும்..!!"
மீரா சொல்லிக்கொண்டே போக, அவ்வளவு நேரம் கன்னத்தில் கைவைத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், இப்போது சற்றே கவலையான குரலில் கேட்டான்.
"ஹ்ம்ம்.. ஒரு டேபிளுக்கு இவ்வளவு பில்டப்பா..??"
"ஏன்.. அதுல ஏதாவது தப்பா..??"
"இல்ல.. தப்புலாம் ஒன்னுல்ல.. இருக்கவேண்டியதுதான்..!! ஆனா.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. ஏதேதோ சொல்லிட்டு இருக்கியேன்னுதான் எனக்கு எரிச்சலா இருக்கு..!!"
"ஹாஹா.. ஆமால்ல.. சம்பந்தமே இல்லாம லூஸு மாதிரி உளறிட்டு இருக்கேன்ல..??" மீரா உதடுகள் பிரித்து அழகாக புன்னகைத்தாள்.
"தெரிஞ்சா சரி..!! ஹ்ஹ்ம்ம்.. இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல..!! எப்போ சொல்ற மாதிரி ஐடியா..??"
"ஹாஹா.. சொல்றேன்..!! இங்க வா..!!"
"எங்க..??"
"இங்க வா.. இங்க வந்து என் பக்கத்துல உக்காந்துக்கோ.. வா..!!" மீரா தனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையை, கையால் தட்டிக்காட்டியவாறே சொன்னாள்.
"நீ மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.. அதுக்கப்புறம் நான் அங்க வரேன்..!!"
"ப்ச்.. வாடா..!! நான்தான் எல்லாம் சொல்றேன்றன்ல..? வா.. பக்கத்துல வா..!!"
அசோக்கை நோக்கி ஒருகையை நீட்டி, மீரா அவ்வாறு சொல்லிய விதத்தில், ஒருவித அசாத்திய ஏக்கமும் கிறக்கமும் கலந்திருந்தது. அவளுடைய கருவிழிகள் எறிந்த காதல்க்கணைகள், அசோக்கின் கண்களில் பாய்ந்து அவனது இதயத்தை துளைத்தன. அதற்கு மேலும் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாதவனாய், அசோக் மெல்ல எழுந்தான். அவளருகே சென்று அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததுமே, மீரா தனது இடது கையால் அவனுடைய இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டவள், அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற கவலை கூட இல்லாமல், அவனது கன்னத்தோடு தனது கன்னத்தை சேர்த்துக்கொண்டாள். வலது கையிலிருந்த தனது செல்ஃபோனை உயர்த்தி, 'பளீர்' என ஃப்ளாஷ் அடிக்க, படம் எடுத்துக் கொண்டாள்.
மீரா அன்று முழுதுவதுமே அப்படித்தான்..!! காலை பத்து மணியில் இருந்து அசோக்குடன் சுற்றி அலைகிறாள்.. என்றும் இல்லாத அதிசயமாய் இன்று அநியாயத்திற்கு அவனுடன் இழைகிறாள்.. அவ்வப்போது தனது செல்ஃபோனால் இருவரையும் படம் எடுத்துக் கொள்கிறாள்..!!
"என்னாச்சு உன் பாலிஸிக்கு.. ஃபோட்டோஸ்லாம் எடுத்துக்குற..?? எப்போவும்.. 'சின்ன ஃப்ரேமுக்குள்ள சிக்கிக்கிறதுக்கு எனக்கு பிடிக்காது'ன்னு சொல்வ..??" என்று அசோக் ஆச்சரியமாக கேட்டபோது,
"உன்கூட சேர்ந்து சிக்கிக்கிறதா இருந்தா.. இந்த சின்ன ஃப்ரேம் கூட எனக்கு சொர்க்கலோகம் மாதிரிதான்..!!" என்று கவிதையாக பேசினாள்.
ஆனால்.. தனது மனதில் இருக்கிற குழப்பத்தை பற்றி மட்டும் அவன் பேச்செடுத்தால்.. சரியான பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாமல் பேசி.. அவனை அலைக்கழிக்கிறாள்..!!
இப்போது.. ஃபோட்டோ எடுத்து முடித்ததும்.. எப்படி வந்திருக்கிறது என தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்த மீரா.. முகத்தில் ஒரு புன்சிரிப்புடனும், குரலில் ஒரு குறும்புடனும்..
"கொஞ்சமாவது சிரிச்சிருக்கானா பாரேன்.. மூஞ்சியை அப்படியே உர்ருன்னு வச்சிருக்கான்.. உர்ராங்குட்டான் மாதிரி..!!" என்றாள்.
"நான் கேட்டதுக்குலாம் நீ பதில் சொல்ற வரைக்கும், நான் இப்படித்தான் இருப்பேன்.. போ..!!"
அசோக்கின் குரலில் ஒரு உச்சபட்ச உறுதி தெரிந்தது. இன்று எப்படியாவது இவளை பேச வைத்துவிடவேண்டும் என்ற தீவிரம் தெரிந்தது. மலர் உதடுகளில் ஒரு மயக்கும் புன்னகையுடன், மீரா அசோக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சேரில் இருந்து எழுந்தவாறே..
"ஹ்ம்ம்.. கெளம்பலாம் வா..!!" என்றாள். உடனே அசோக் கடுப்பாகிப் போனான். அவள் முகத்தை ஏறிட்டு சீற்றமாக கேட்டான்.
"என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..?? நானும் காலைல இருந்து பைத்தியக்காரன் மாதிரி கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா... சும்மா சும்மா.."
"ஷ்ஷ்ஷ்.. நான்தான் சொல்றேன்னு அப்போவே சொல்லிட்டன்ல..??"
"சொல்றேன் சொல்றேன்னுதான் காலைல இருந்து சொல்லிட்டு இருக்குற.. ஆனா சொல்ற மாதிரி தெரியல..!! எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் மீரா.. உன் மனசுல என்னலாம் இருக்குன்னு, இன்னைக்கு எனக்கு தெளிவா தெரிஞ்சாகனும்.. இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்..!! உக்காரு.. சொல்லிட்டு கெளம்பு..!!"
"ப்ச்.. சொல்றேன்டா..!! ஆனா இங்க வேணாம்..!!"
"வேற எங்க..??"
"எனக்கு மனசு விட்டு நெறைய விஷயம் பேசனும்.. அதுக்கு இந்த இடம் சரியில்ல..!! வேற எங்கயாவது தனியா.. டிஸ்டர்ஃபன்ஸ் இல்லாத எடத்துக்கு போயிடலாம்..!!"
"எங்க போகலாம்ன்ற..??"
"இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல.. அங்க போயிடலாம்..!!"
அசோக் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே பார்த்தவாறு யோசனையில் இருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சேரில் இருந்து எழுந்தான்.
"போலாம் வா..!!' என்றுவிட்டு முன்னால் நடந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களுக்கெல்லாம்.. அசோக்கின் பைக் சத்யா கார்டன் நோக்கி மிதமான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..!! என்றும் அசோக்கின் தோளைப் பற்றிக் கொள்கிற மீரா.. இன்று அவனுடைய இடுப்பில் கைபோட்டு இறுக்கியிருந்தாள்.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து படுத்திருந்தாள்..!! வாகனங்களுக்கு இடையில் புகுந்து வண்டியை செலுத்திக்கொண்டிருந்த அசோக்.. தன் இடையை வளைத்திருக்கிற காதலியின் வளைக்கரத்தை சற்றே பெருமிதமாக பார்த்தான்..!! தான் உருவாக்கிய விளம்பரப்படம் சட்டென அவனுடைய நினைவுக்கு வந்தது.. அவனது மனதில் இருந்த குழப்பம் எல்லாம் அந்த கணத்தில் மறந்து போக.. உள்ளமெங்கும் ஒரு உற்சாக ஊற்று பீறிடுவதை அவனால் உணர முடிந்தது..!! அடக்க முடியாத புன்னகையை அதரங்களுக்கு தந்தவன்.. அழகு கொஞ்சும் அவளது முகத்தை கண்ணாடியில் தேடினான்..!! அவனுடைய முதுகில் புதைந்திருந்த மீராவின் முகம்.. அந்த கண்ணாடியில் காணக் கிடைக்கவில்லை..!!
அசோக்கின் முகம் பூரிப்பில் திளைத்துக்கொண்டிருந்த அதே நேரம்.. அவனது பின்புறம் படர்ந்திருந்த மீராவின் முகம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது..!! அவளுடைய கண்களில் கண்ணீர் தழும்பிக் கொண்டிருந்தது.. பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. மூக்கு சப்தமெழுப்பாமல் விசும்ப.. உதடுகள் கட்டுக்கடங்காமல் படபடத்தன..!! தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகி.. தத்தளிப்பவள் போல காணப்பட்டாள்..!! அடிக்கடி ஒற்றைக்கையால் கண்களை துடைத்துக்கொண்டவள்.. அவ்வப்போது அசோக்கே உணராதவண்ணம், அவனது முதுகில் மென்மையாக முத்தம் பதித்தாள்..!! ஆகாயத்தில் ஒரு பருந்து.. சிறகசைத்து பறந்து.. அவர்கள் செல்கிற திசையிலேயே விரைந்தது..!!
சத்யா கார்டனை அடைவதற்கு சற்று முன்பாக.. ராஜமன்னார் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி.. கொஞ்ச தூரம் சென்றதுமே வந்து சேர்ந்தது அந்த பூங்கா..!! வாசலில் நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளுடன்.. தனது பைக்கையும் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டான் அசோக்..!! முகத்தை இப்போது சுத்தமாக துடைத்து முடித்து.. இயல்பான பாவனையுடன் இறங்கிக்கொண்டாள் மீரா..!!
"ம்ம்.. பார்க் வந்துடுச்சுல.. சொல்லு..!!" அவசரப்பட்டான் அசோக்.
"உள்ள போய் பேசலாம் வா..!!" மீரா லேசாக மூக்கை உறிஞ்சியவாறே சொன்னாள்.
"சரி.. உன் செல்ஃபோனை கொஞ்சம் கொடேன்..!!"
"எதுக்கு..??"
"நெறைய ஃபோட்டோஸ் எடுத்தேல.. எப்படி வந்திருக்குன்னு பாக்குறேன்..!!" அசோக் அவ்வாறு கேட்கவும், முதலில் ஓரிரு வினாடிகள் தயங்கிய மீரா, பிறகு
"ம்ம்..!!" என்று தனது செல்ஃபோனை அசோக்கின் கையில் திணித்துவிட்டு முன்னால் நடந்தாள். அசோக் அவளை பின்தொடர்ந்தான்.
அதிகமாக பராமாரிக்கப்படாமல் போனாலும்.. இழைதழைகள் இறைந்துபோய் காணப்பட்டாலும்.. ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த செடிகொடிகளோடும்.. அந்த மாலை நேரத்திற்கு மிக ரம்யமாகவே காட்சியளித்தது அந்த பூங்கா..!! ஆங்காங்கே தெரிந்த மரப்பெஞ்சுகளின் பழுப்பு நிறம் தவிர.. எங்கெங்கிலும் மர,செடி,கொடிகளின் பச்சை நிறமே..!! அவ்வப்போது கேட்கிற காகங்களின் கரைதலை தவிர.. அமைதியே முழுநேரமும் ஆக்கிரமித்திருந்தது..!! புதர் மறைவில் புதையல் தேடுகிற சில காதலர்களை(????) தவிர.. ஆள் நடமாட்டம் அறவே அற்றுப் போயிருந்தது..!!
காம்பவுண்டை ஒட்டி நீளமாக சென்ற அந்த மண்பாதையில்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மீரா நடந்து கொண்டிருந்தாள்..!! பாதையின் இருபுறமும்.. கொத்துக்கொத்தாய், பச்சை பச்சையாய் செடிகள்..!! பாதையிலோ.. புற்கள் துளிர்த்திருந்தன.. மரவேர்கள் குறுக்காக ஓடின.. காய்ந்த சருகுகள் மண்டிக் கிடந்தன.. கால்கள் பட்டு அழுந்துகையில் சரக் சரக்கென சப்தம் எழுப்பின..!! மீரா கவனமாகவே நடந்து கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்னால் ஒரு ஐந்தடி இடைவெளிவிட்டு.. மீராவுடையை செல்ஃபோனை விரல்களால் அழுத்தியவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!!
மீரா எடுத்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்த அசோக்குக்கு.. திடீரென ஒரு யோசனை.. எல்லா படங்களையும் தனது செல்ஃபோனுக்கு ஒரு நகல் அனுப்பினால் என்னவென்று..!! யோசனை தோன்றியதும் முதலில் மீராவிடம் அனுமதி கேட்கத்தான் நினைத்தான்..!! ஆனால் அப்புறம்.. 'ஒருவேளை அவள் ஏதாவது விளங்காத காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது' என்று தோன்றவும்.. அனுமதி கேட்கிற எண்ணத்தை கைவிட்டான்..!! தனது செல்ஃபோன் எடுத்து ப்ளூடூத் எனேபிள் செய்தவன்.. திருட்டுத்தனமாகவே அந்தப்படங்களை நகல் எடுத்துக் கொண்டான்..!!
பார்க்குக்குள்ளேயே அமைந்த ஒரு சின்ன நீர்த்தேக்கத்தில் கொண்டு போய் விட்டது அந்தப்பாதை.. பார்க்கின் எல்லையும் அத்துடன் முடிவடைகிறது..!! இனிமேலும் நடக்க வழியில்லை என்றானபிறகு.. இருவருடைய கால்களும் ஓய்ந்தன..!! மீரா ஓரடி முன்னால் எடுத்து வைத்து.. நீர்த்தேக்கத்துக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக்குழாய் வேலியை பற்றிக்கொண்டாள்..!! பாசி படர்ந்துபோய் அமைதியாக கிடந்த அந்த நீர்த்தேக்கத்தையே.. பார்வையால் வெறித்தாள்..!! அசோக் அவளை நெருங்கி.. அவளது செல்ஃபோனை நீட்ட.. மீரா அதை வாங்கிக்கொண்டாள்..!! அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு.. அந்த இடத்தை சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு.. அசோக்கே ஆரம்பித்தான்..!!
"ஹ்ம்ம்.. நைஸ் ப்ளேஸ்.. நீ கேட்ட மாதிரியே..!! தனியா.. அமைதியா.. அழகா.. எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம..!! ம்ம்ம்.. இப்போவாவது சொல்வியா.. இல்ல.. 'அந்த தண்ணிக்குள்ள இறங்கி, குரங்கு மாதிரி நாலு குட்டிக்கரணம் அடிச்சாத்தான் சொல்வேன்'னு அடம் புடிப்பியா..??"
அசோக் சற்றே எரிச்சலும், கேலியுமாய் அவ்வாறு கேட்க.. மீரா அவன் பக்கமாய் திரும்பி ஒரு உலர்ந்த புன்னகையை வீசினாள்.. பிறகு மீண்டும் அந்த குளத்து நீரை வெறிக்க ஆரம்பித்தாள்..!! அவ்வாறு வெறித்துக்கொண்டே..
"என்ன சொல்லனும்..??" என்று இறுக்கமாக கேட்டாள்.
"ஹ்ம்ம்.. எதை சொல்றதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தியோ.. அதை..!!"
அசோக் இயல்பாக சொல்ல.. மீரா இப்போது முகத்தை திருப்பி அவனை ஏறிட்டாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் சந்தித்து, மிக கூர்மையாக பார்த்தாள்..!! அவளது முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல்.. அவனுடைய உயிரை ஊடுருவுகிற மாதிரி.. ஒருவித ஆழமான பார்வை..!! 'அர்த்தம் என்ன.. அர்த்தம் என்ன..' என்று.. அசோக் அடிக்கடி குழம்பித் தவிக்கிற அதே பார்வை..!! அந்தப் பார்வையைக் கண்டு அசோக் சற்றே திகைத்துப் போயிருக்க.. மீரா இப்போது தனது செவ்விதழ்களை திறந்து.. அழுத்தம் திருத்தமாக அந்த வார்த்தைகளை உச்சரித்தாள்..!!
"ஐ லவ் யூ..!!!!"
அசோக் இப்போது மீராவை சற்றே வித்தியாசமாக பார்த்தான். அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகளை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்திரவில்லை. குரலில் ஒரு சலிப்பை கலந்துகொண்டு..
"ப்ச்.. என்ன மீரா நீ..?? இதை சொல்றதுக்கா இங்க கூட்டிட்டு வந்த..??" என கேட்டான்.
"ம்ம்.. யெஸ்..!!!" மீராவின் குரலில் இருந்த உறுதி, அசோக்கை சற்றே குழப்பமடைய செய்தது.
"வெ..வெளையாடாத மீரா..!!"
"வெளையாடலாம் இல்ல அசோக்.. நான் உன்கிட்ட வெளையாண்ட காலம்லாம் எப்போவோ போயிடுச்சு..!!"
"ப்ச்.. இந்த ஐ லவ் யூ சொல்றதுக்குத்தான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தியா..?? இதைத்தான் எப்போவோ சொல்லிட்டியே.. நாம பேசிக்கிட்ட மொத நாளே.."
"இல்ல அசோக்.. அது அன்னைக்கு.. சும்மா என் உதட்டுல இருந்து வந்த ஐ லவ் யூ.. இ..இது.. இது என் உசுருல ஊறிக்கெடந்து வர்றது..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!!!" சொல்லும்போதே மீராவின் கண்களில் நீர் அரும்ப, அவள் பேச்சில் இருந்த தீவிரம் இப்போதுதான் அசோக்கிற்கு மெல்ல உறைத்தது.
"மீ..மீரா... எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!"
"எனக்கும் எதும் புரியல அசோக்..!! எதுக்கு நீ என் லைஃப்ல வந்த.. எதுக்கு உன்மேல எனக்கு வெறுப்பு வரணும்.. வெளையாடணும்.. அப்புறம்.. எதுக்கு என்னையே அறியாம என் மனசை உன்கிட்ட பறிகொடுக்கணும்.. இ..இப்போ.. எதுக்கு உன்னை நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாம இப்படி தவிக்கணும்..!! எதுவுமே எனக்கும் புரியல அசோக்..!!" மீராவின் குரலில் கொப்பளித்த பரிதாபத்தை அசோக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"ப்ளீஸ் மீரா.. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு..!!"
"இன்னுமா உனக்கு புரியல..?? இத்தனை நாளா உன்னை காதலிக்கிறதா சொல்லி.. நடிச்சு ஏமாத்திட்டு இருந்தேன்டா..!! இன்னைக்கு.. உன் நல்ல மனசு முன்னாடி தோத்துப்போயி.. நெஜமாவே உன் மேல காதல் வந்து.. கண்ணுல கண்ணீரோட நிக்கிறேன்..!! இப்போவாவது புரியுதா..??"
மீராவின் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்தோடியது. அசோக் அதிர்ந்து போனவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 'என்ன சொல்லுகிறாள் இவள்..??' என்று திகைத்தான். காதில் விழுந்த வார்த்தைகளை அவனால் நம்பமுடியவில்லை. திணறலாக கேட்டான்.
"கா..காதலிக்கிற மாதிரி நடிச்சியா.. ஏ..ஏன்..??"
"சொ..சொல்றேன்..!!"
அமைதியாக சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் இரும்புக்குழாயை பற்றிக்கொண்டு, தூரத்தில் பறக்கிற விமானத்தை சில வினாடிகள் வெறித்தாள். ஆதங்கத்துடன் அவள் விட்ட பெருமூச்சில், அவளுடைய மார்புகள் ரெண்டும் ஏறி ஏறி இறங்கின. அசோக் இப்போது மெல்ல நகர்ந்து அவளை நெருங்கினான். பக்கவாட்டில் திரும்பி, மீராவின் முகத்தை பார்த்தான். அவள் இப்போது மெலிதான குரலில் பேச ஆரம்பித்தாள்.
"உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!! அன்னைக்கு ஒருநாள்.. ஃபுட்கோர்ட்ல ஒருத்தனை செருப்பால அடிக்க போனேனே.. ஞாபகம் இருக்கா..?? அதுக்கு முன்னாடி.. எத்தனை பேரை நெஜமாவே செருப்பால அடிச்சிருக்கேன் தெரியுமா..?? ஹ்ஹ.. என் லைஃப்ல.. நெறைய மோசமான ஆம்பளைங்களை பார்த்து பார்த்து.. எல்லா ஆம்பளைங்க மேலயுமே வெறுப்பு..!! என் வாழ்க்கைல எந்த ஆம்பளைக்கும் எடம் இல்லைன்ற முடிவோடதான் நான் இருந்தேன்..!!"
"ஓ..!! ஆம்பளைங்க மேலேயே வெறுப்புனா.. அ..அப்புறம் எதுக்கு என்கிட்ட.."
"பேசுன முதல் நாளே ஐ லவ் யூ சொன்னேன்னுதான கேக்குற..??"
"ம்ம்..!!"
"அதுதான் விதி..!! இல்லனா.. என்னோட திமிர்னு கூட சொல்லலாம்..!!"
"பு..புரியல..!!"
"புரியிற மாதிரியே சொல்றேன்..!! கொஞ்ச நேரம் முன்னாடி சொல்லிட்டு இருந்தேன்ல.. அந்த டேபிள் பத்தி..!!'
"ம்ம்..!!" அசோக் மீராவை ஒரு குழப்பப்பார்வை பார்த்தான்.
"நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்ட முதல் நாள்.. ஐ மீன்.. நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்ன அன்னைக்கு.. ஃபுட்கோர்ட்டுக்கு நான் வந்தப்போ.. அந்த டேபிள் காலியா இல்ல அசோக்.. இட் வாஸ் ஆக்குபைட்..!!"
சொல்லிவிட்டு மீரா அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனுக்கு இப்போது ஏதோ புரிவது மாதிரி இருந்தது. அவனுடைய முகத்தில் மெலிதாக ஒரு திகைப்பு பரவ ஆரம்பிக்க, மீரா தொடர்ந்து பேசினாள்.
"சாப்பாடு வாங்காம.. காலியா கெடந்த இன்னொரு டேபிள்ள உக்காந்திருந்தேன்..!! கொஞ்ச நேரம் கழிச்சு.. எனக்கு பின் பக்கமா.. நான் உக்காந்திருந்ததுக்கு பக்கத்து டேபிள்ள.. நீங்க நாலு பேரும் வந்து உக்காந்திங்க..!!" இப்போது அசோக்குக்கு முழுதுமே புரிந்து போனது.
"மீ..மீரா.. அது.. அ..அன்னைக்கு.." என்று தடுமாறினான்.
"என்னை நீங்க கவனிக்கல.. ஆனா நீங்க பேசினதை எல்லாம் நான் கவனிச்சுட்டு இருந்தேன்..!! அதுக்கு முதல்நாள்.. 'என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்'னு நீ உன் ஃப்ரண்ட்ஸ்ட்ட சவால் விட்டது.. அப்புறம் நான் இன்னொருத்தனை அடிச்சதும், நீ பேசாம திரும்ப வந்துட்டது.. எல்லாம் பேசிக்கிட்டிங்க..!!"
"ஆ..ஆமாம்..!!"
"நீங்க பேசிக்கிட்டதை கேட்டப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா அசோக்..?? 'பெட் கட்டியாடா வெளையாடுறீங்க.. பொண்ணுகன்னா உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிட்டமாடா..??'ன்னு.. உங்க சட்டையை புடிச்சு, அப்படியே பளார் பளார்னு விடலாம் போல இருந்தது..!!"
"மீ..மீரா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம்.."
"இரு அசோக்.. நான் சொல்லி முடிச்சுடுறேன்..!! ம்ம்ம்... அப்போத்தான் நீ அப்படி சொன்ன.. 'அவ இன்னைக்கு வரட்டும்.. அவட்ட பேசி.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்'னு கெத்தா சொன்ன..!! அதைக் கேட்டப்புறந்தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை.. திமிர் புடிச்ச யோசனை..!! 'என்னை லவ் பண்ண வச்சு காட்டுறேன்னா சவால் விடுற..? வா.. நான் உனக்கு பைத்தியம் புடிக்க வச்சு காட்டுறேன்'னு..!! மனசுல ஒரு ப்ளானோட.. சாப்பாடு வாங்க எழுந்து போனேன்..!! சாப்பாடு வாங்கிட்டு வர்றப்போ.. நீங்க என்னை பாத்து சீக்ரட்டா ஏதோ பேசிட்டு இருந்தீங்க.. அது கூட நல்லா ஞாபகம் இருக்கு.. 'வாடா மவனே.. வந்து பேசு.. வா..'ன்னு ஓரக்கண்ணால உன்னை பாத்து முறைச்சுக்கிட்டேதான் போனேன்..!!"
மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகம் இப்போது வெளிறிப் போயிருந்தது. அவனுடைய தலை வேறு லேசாக கிறுகிறுப்பது மாதிரியான உணர்வு. கண்களை இரண்டு மூன்று முறை, இறுக்க மூடி மூடி திறந்து கொண்டான். தலையை லேசாக உதறியவாறே தடுமாற்றமாக சொன்னான்.
"நீ.. நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட மீரா.. ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டினதுக்காக நான் உன்கூட.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே மீரா இடைமறித்து,
"தெரியும் அசோக்.. நீ சொல்லனும்னு தேவை இல்ல..!! இத்தனை நாளா உன்கூட பழகிருக்கேன்.. இப்போ உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்.. அதைக்கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது..?? என் மேல வச்சிருந்த காதல்ல.. நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தேன்னு.. என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது..!! ஆனா.. அதை நான் புரிஞ்சுக்குறதுக்கு கொஞ்ச நாள் ஆச்சு..!! ஆரம்பத்துல உன்னை பத்தி நான் என்ன நெனச்சிருந்தேன் தெரியுமா..?? பணத்திமிர் எடுத்த.. ஆம்பளைன்ற கர்வம் புடிச்ச.. ஒரு 'Spoiled Brat'-னுதான் நெனச்சிருந்தேன்..!! ஹ்ஹ.. நாம பேச ஆரம்பிச்சப்போ உன்னோட இன்டென்ஷன் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. என்னோட இன்டென்ஷன் என்னன்னு உனக்கு தெரியுமா..??"
".........................." அசோக் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க, மீரா பேச்சை சற்று நிறுத்தி பிறகு தொடர்ந்தாள்.
"உன்னை மண்டை காய வைக்கணும்.. அப்படியே தலையை பிச்சுக்க வைக்கணும்.. உன் பணத்திமிரை ஒடுக்கனும்.. ஆம்பளைன்ற கர்வத்தை அடக்கணும்.. பொண்ணுகன்னா நீ பயந்து மெரளணும்.. 'ஏண்டா இவ கூட பழக ஆரம்பிச்சோம்'னு வெறுத்து போகணும்.. 'விட்டா போதும்'னு சொல்லாமக்கொள்ளாம என்னைவிட்டு ஓடனும்..!!"
".........................." அசோக் மீராவையே சற்று மிரட்சியாக பார்த்தான்.
"ஆரம்பத்துல இருந்தே உன்னை நான் டாமினேட் பண்ண ஆரம்பிச்சேன்..!! ஆர்டர் போட்டேன்.. அதிகாரம் பண்ணினேன்.. அசிங்கப் படுத்தினேன்.. என் கால்ல விழ வச்சேன்.. ஒரு வேலைக்காரன் மாதிரி உன்னை ட்ரீட் பண்ணினேன்..!! தப்பான நம்பர் குடுத்து உன்னை காயவிட்டேன்.. தடிப்பசங்க ரெண்டு பேர்ட்ட அடி வாங்கி தந்தேன்.. டிக்கெட் விக்க சொல்லி தெருத்தெருவா அலைய வச்சேன்.. எதுக்கெடுத்தாலும் கை நீட்டி அறைஞ்சேன்.. இன்னும் என்னன்னவோ..!! உன்னோட ஈகோதான் என்னோட டார்கெட்..!! I..I just wanted to humiliate you.. and make you pay the price for choosing me..!! நான் பண்ற டார்ச்சர் தாங்காம.. கொஞ்ச நாள்லயே நீ தலைதெறிக்க ஓடிடுவன்னு நெனச்சேன்..!! ஆ..ஆனா.. நடந்தது என்ன தெரியுமா அசோக்..??"
ஆதங்கத்துடன் பேசிய மீரா சற்றே நிறுத்தி, அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ ஒருவித திகைப்புடன் நின்றிருந்தான். அவனுடைய கண்களிலும், முகத்திலும் ஏதோ ஒருவித சோர்வு. உடலில் மெலிதாக ஒரு களைப்பு. இமைகளை மூடி மூடி திறந்தான். மீரா இப்போது காதலும், மென்மையும் கலந்த மாதிரியான குரலில் பேச ஆரம்பித்தாள்.
"பேசுன மொதநாளே நீ என்னை இம்ப்ரஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. 'பில்லுக்கு பணத்தை வச்சுட்டு எடத்த காலி பண்ணு'ன்னு சொன்னியே..? I was really impressed.. you are different-ன்னு தோணுச்சு.. என்னையும் அறியாம 'ச்சோ.. ச்ச்வீட்'ன்னு சொன்னேன்..!! அப்புறம் நாம அடிக்கடி மீட் பண்ணோம்.. நீயும் அடிக்கடி என்னை இம்ப்ரஸ் பண்ணின.. எல்லாம் உன்னோட நல்ல மனசால..!! நானும் ஒவ்வொரு முறையும் 'ச்சோ.. ச்ச்வீட்' சொல்லி.. அந்த நல்ல மனசை அப்ரஷியேட் பண்ணுவேன்..!! உன்னோட இன்னோசன்ஸ்.. இரக்க குணம்.. பொறுமை.. தொழில் திறமை.. ஒரு பொண்ணுக்கு நீ தர்ற மதிப்பு.. முடியாதவங்க மேல நீ காட்ன அன்பு.. எல்லாத்துக்கும் மேல, என் மேல நீ வச்சிருந்த அந்த Pure and Blind Love.. I started to loose myself..!! உன்னை ஏமாத்த நெனச்சேன்.. ஹ்ஹ.. கடைசில நான்தான் ஏமாந்து போயிட்டேன் அசோக்..!!"
".........................."
"உன்கூட பழகுறது கொஞ்சம் கொஞ்சமா எனக்கு புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. என் சிச்சுவேஷனும் அந்த மாதிரி.. சிரிப்பையே மறந்து போயிருந்த எனக்கு.. உன்னோட சேர்ந்து சிரிக்கிறது பிடிச்சிருந்தது..!! உன்னை சீண்டுறது.. கேலி பண்றது.. வெளையாடுறது.. அதையெல்லாம் நீ பொறுமையா சகிச்சுக்குறது.. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..!! அன்னைக்கு நான் தண்ணில குதிச்சது கூட.. அந்த மாதிரி உன்னை சீண்டி விளையாடுறதுக்குத்தான்.. சத்தியமா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக இல்ல.. நீ கண்டிப்பா தண்ணில குதிச்சு என்னை தேடுவன்னு எனக்கு நல்லா தெரியும்..!!"
கண்களில் தேங்கிய நீருடன் மீரா சொன்னாள். அசோக் அவளையே பிரமிப்பாக பார்த்தவாறு நின்றிருந்தான். நெற்றி வலிப்பது மாதிரி இருக்க, மெல்ல பிசைந்து கொண்டான்.
"ஆனா.. என் மனசுல உள்ளதுலாம் உனக்கு தெரியக்கூடாதுன்னு நெனைப்பேன்..!! அன்னைக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு போதைல.. என் மனசுல இருந்தது என்னையும் அறியாம வெளில வந்துடுச்சு.. உன்கிட்ட உளர்னதுக்காக நான் எவ்வளவு ஃபீல் பண்ணினேன் தெரியுமா..?? அன்னைக்கே என் புத்தில ஒரு அலாரம் அடிச்சது.. its getting too serious-ன்னு..!! But.. அப்போ அதை அசால்ட்டா விட்டுட்டேன்..!! அப்புறம்.. அன்னைக்கு ஏரில அந்த இன்சிடென்ட் அப்போ.. நீ உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டுனியே.. அப்போத்தான்.. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு இருக்கேன்னு, பொட்டுல அறைஞ்ச மாதிரி எனக்கு புரிஞ்சது..!!"
".........................."
"உன்கிட்ட இருந்து உடனே விலகிடணும்னு நெனச்சேன்.. அன்னைக்கு சிக்னல்ல இறங்கி ஓடுனனே.. அதுக்கப்புறம் உன்னை மீட் பண்ணவே கூடாதுன்ற முடிவோடதான் இறங்கிப் போனேன்.. கால் பண்ணாம, கான்டாக்ட் பண்ணாம இருந்தேன்..!! But.. Do you know, what happened..?? என்னால ஒருநாளுக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல அசோக்.. உன்கூட பேசாம என்னால இருக்க முடியல.. என் வைராக்கியம்லாம் ஒரே நாள்ல செத்துப்போச்சு.. பைத்தியக்காரி மாதிரி உன்கிட்ட ஓடிவந்து.. 'நேத்து என்னை மிஸ் பண்ணுனியா'ன்னு பல்லை இளிச்சுக்கிட்டு நின்னேன்..!!" மீரா கலங்கிய கண்களுடன் பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை இப்போது ஏக்கமாக பார்த்தான்.
".........................."
"அப்புறமும் அடிக்கடி காணாம போனேன்..!! சரி.. ஒரேடியா முடியல.. கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிடலாம்னு தோணுச்சு.. அதான் இண்டர்வ்யூ அது இதுன்னு பொய் சொன்னேன்..!! ஆனா.. உன்னை ஏமாத்தின மாதிரி என் மனசாட்சியை என்னால ஏமாத்த முடியல அசோக்.. 'இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குற'ன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!! நேத்து உன் ஃபேமிலியை பாத்தப்புறம்.. அவங்க கூட பேசினப்புறம்.. அந்த உறுத்தல் ரொம்ப அதிகமாயிடுச்சு..!! தெனமும் உன்னை நெனச்சு அழுவேன்.. நேத்து ரொம்ப அதிகமா அழுதேன்..!!" தழதழத்த குரலில் மீரா சொல்ல,
"ஹேய்.. மீரா..!!"
என்று அசோக் அவளுடைய புஜத்தை ஆதரவாக பற்றினான். மீரா இப்போது தனது தளிர்க்கரங்கள் இரண்டையும் உயர்த்தி, அசோக்கின் கன்னங்களை மென்மையாக தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கண்களிலும், மனதிலும் காதல் பொங்கி வழிய சொன்னாள்.
"நீ என் மனசுக்குள்ள எப்போ வந்த, எப்படி வந்தன்லாம்.. சத்தியமா எனக்கு தெரியல அசோக்.. நான் யோசிச்சு சுதாரிக்கிறதுக்கு முன்னாடி, என் மனசை மொத்தமா நெறைச்சுட்ட..!! 'அவனை நீ லவ் பண்றியா'ன்னு கண்ணாடி முன்ன நின்னு, என்னை நானே கேட்டுக்குவேன்.. அப்புறம் 'அதுலாம் ஒன்னும் இல்ல..'ன்னு நானே பதிலும் சொல்லிக்குவேன்.. 'இன்னும் கொஞ்ச நாள் பேசிட்டு.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலகிட போறோம்.. அவ்வளவுதான்..'னு மனசை சமாதானப் படுத்திக்குவேன்.. என்னை நானே ஏமாத்திக்குவேன்..!!"
".........................."
"ஆனா.. ஆனா நேத்து அப்படி நடந்ததுக்கப்புறம்.. இனியும் என்னை நானே ஏமாத்திக்கிறதுல எந்த அர்த்தம் இல்லன்னு எனக்கு புரிஞ்சு போச்சு..!! நேத்து நீ என்னை தொட்டப்போ, என்னால தடுக்க முடியல அசோக்.. என்னை அணைச்சப்போ, வேணாம்னு சொல்ல வாய் வரல.. நீ முத்தம் தந்தப்போ, எனக்கு விலக மனசு இல்ல.. எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது..!! வெக்கத்தை விட்டு சொல்றேன் அசோக்.. உன் உதட்டால அப்படியே என்னை உறிஞ்சிக் குடிச்சிட மாட்டியான்னு இருந்தது.. உன் நெஞ்சுல சாஞ்சிருந்தப்போ.. இப்படியே சோறு தண்ணி இல்லாம கிடந்திட மாட்டோமான்னு தோணுச்சு..!!"
".........................."
"இனிமேலயும் இது காதல் இல்லன்னு.. என் மனசாட்சியை என்னால எப்படி ஏமாத்த முடியும் அசோக்.. சொல்லு..!!"
மீரா காதல் தவிப்புடன் கேட்டாள். அசோக் ஏனோ இப்போது மீண்டும் தன் முகத்தை சுருக்கினான். அவனுடைய முகம் ஏதோ ஒரு வலியில் துடிக்கிற மாதிரி காட்சியளித்தது. ஒருவித அவஸ்தையில் தத்தளிப்பவன் போல தடுமாறினான். கண்களை இறுக மூடியவன், தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டான்.
"எ..எனக்கு.. த..தலை சுத்துற மாதிரி இருக்குது மீரா..!!"
"ஹ்ம்ம்.. நான் சொன்னது குழப்பமா இருக்கா..??"
"இ..இல்ல.. இது நெஜமாவே..!!"
திணறலாக சொன்ன அசோக், படக்கென தலையை உதறிக்கொண்டான். இமைகளை ஒருமுறை அகலமாக விரித்து, விழித்து பார்த்தான். தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டவன், பிறகு ஒரு அவஸ்தை பெருமூச்சுடனே சொன்னான்.
"எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மீரா.. நீ சொ..சொன்னதெல்லாம்.. ஷாக்கிங்கா இருக்கு..!! ஃப்ரண்ட்ஸ்கிட்ட சவால் விட்டதெல்லாம் சும்மா.. அ..அதுக்கு முன்னாடியே நீ என் மனசுல இருந்த.. பெட் கட்டினதுக்காகலாம் நான் உன்கூட பேச ஆரம்பிக்கல.. I always wanted to have a serious relationship with you..!!"
"I know..!!"
"நானும்.. உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. உ..உன்மேல எனக்கு இவ்வளவு காதல் இருந்ததான்னு கேட்டா.. சத்தியமா இல்லைன்னுதான் சொல்லணும் மீரா.. எல்லாம் உன்கூட பழக ஆரம்பிச்சப்புறந்தான்..!! உ..உன்கூட பேச ஆரம்பிச்ச அந்த செகண்ட்ல இருந்து.. நான் எந்த அளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..?? ஆனா நீ.. ஒவ்வொரு நாளும் உன் மனசுக்குள்ளயே போராடிட்டு இருந்திருக்குற..!!"
"ம்ம்..!!" மீராவுக்கு இப்போது மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
"எ..என்னை டாமினேட் பண்ணின.. டார்ச்சர் பண்ணினன்லாம் என்னன்னவோ சொல்ற.. ஆனா.. நான் எதையும் அப்படி எடுத்துக்கல மீரா..!! அதெல்லாம்தான் உன்னோட குணம்னு எடுத்துக்கிட்டேன்..!! உ..உன்னோடதான் என் லைஃப்ன்னு முடிவானப்புறம்.. உன்னோட குணத்துக்கும் மதிப்பு கொடுக்குறதுதான.. உண்மையான காதலா இருக்க முடியும்..?? நான் என் காதலுக்கு எப்போவும் உண்மையாத்தான் இருந்தேன் மீரா..!!"
"தெ..தெரியுண்டா..!!"
முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் இப்போது முணுக்கென்று வெளிப்பட்டு, மீராவின் கன்னம் நனைத்து ஓடியது. அசோக் இப்போது தனது விரல்களால் அவளுடைய கண்ணீரை துடைத்தான்.
"ஹேய்.. இன்னும் ஏன் அழற.. அதான் உன் மனசுல உள்ளதெல்லாம் சொல்லிட்டியே.. எ..என் மனசையும் நல்லா புரிஞ்சுக்கிட்டியே..?? இப்போ.. நெஜமாவே என் மேல உனக்கு காதல் வந்திடுசுல.. அது போதும் எனக்கு..!!" என்றவன் அவளது கைகள் ரெண்டையும் தனது கைகளுக்குள் வைத்து, மென்மையாக முத்தமிட்டவாறே தொடர்ந்து பேசினான்.
"எ..என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமாவே நான் நெனைக்கல மீரா..!! இதை இத்தோட மறந்துட்டு.. நாம எப்போவும் போல இருக்கலாம்.. ம்ம்..?? சரியா..??"
கேட்டுவிட்டு அசோக் மீராவை ஏறிட.. அவளோ தவிப்பில் துடிக்கிற முகத்துடனும்.. அழுத்தி கடிக்கப்பட்ட உதடுகளுடனும்.. 'இல்லை.. அது நடக்காது..' என்பது போல தலையை அசைத்தாள். அசோக் இப்போது சற்றே குழப்பமுற்றவனாய் மீராவை பார்க்க, அவளே வாய்திறந்து பேசினாள்.
"நா..நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது.. நாம எப்போவும் போல இருக்குறதுக்காக இல்ல அசோக்.. இனி எப்போவுமே இதை உன்கிட்ட சொல்ல முடியாதேன்னுதான்..!!"
"வா..வாட்..??"
"Yes ashok.. Today is our last day.. இனிமே நாம மீட் பண்ணிக்கப் போறது இல்ல..!!"
"எ..என்ன சொல்ற நீ..??"
"நான் போறேன் அசோக்.. உன்னை விட்டு போறேன்.. தூரமா போறேன்..!! போறதுக்கு முன்னாடி.. என் மனசுல இருந்த காதலை.. உன் கண்ணைப் பார்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு இது போதும்..!!"
மீரா அவ்வாறு உறுதியான குரலில் சொல்ல, அசோக்கின் மனதில் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே அவனுக்கு இருந்த தலைச்சுற்றலோடு புதிதாக இந்த உணர்வும் சேர்ந்து கொள்ள, அவன் தடுமாறினான். நிலையாக நிற்க கூட முடியாத அளவுக்கு, அவனுடைய கால்களில் ஒரு நடுக்கம். மூளைக்குள் ஏதோ பலவித குழப்ப மின்னல்கள் வெட்ட, திணறலாகவே அவனால் பேச முடிந்தது.
"வெ..வெளையாடாத மீரா.. ஏ..ஏன் போறேன்னு சொல்ற..??"
"வெளையாண்டது போதும்னுதான்டா போறேன்னு சொல்றேன்..!! உன் மேல ஏதோ ஒரு வெறுப்புல இந்த வெளையாட்டை ஆரம்பிச்சுட்டேன்.. உன் முன்னாடி இந்த மாதிரி தோத்துப்போய் நிக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா இதை ஆரம்பிச்சிருக்க மாட்டேன்..!! போதும்.. வெளையாட்டை முடிச்சுக்கலாம்..!! நான் போயிடுறேன்..!!" மீரா அழுகுரலில் சொல்ல, அசோக்குக்கு இப்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.
"பைத்தியமா உனக்கு..?? நீ எதுக்கு போகணும்..??"
"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!! உன் காதலுக்கு நான் தகுதியானவ இல்ல.. உன் வீட்டுக்கு மருமகளா வர, எனக்கு அருகதை இல்ல..!!"
"ஏ..ஏன் மீரா இப்படிலாம் பேசுற..?? நீ.. நீ என்ன பாவம் பண்ணின..??"
"அதெல்லாம் உனக்கு தெரிய வேணாம் அசோக்.. சொல்றதுக்கு எனக்கும் விருப்பமும் இல்ல..!! ஒரு திமிர் புடிச்சவ உன்கூட வெளையாட ட்ரை பண்ணினா.. அப்புறம் உன் காதலுக்கு முன்னாடி தோத்துப்போய் காணாமப் போயிட்டா..!! அந்த அளவுக்கு நீ என்னைப்பத்தி தெரிஞ்சுக்கோ.. போதும்..!!"
"இல்ல.. எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!"
"ம்ஹூம்..!!"
"சொல்லலேன்னா.. உ..உன்னை இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன் மீரா..!!" சொல்லிக்கொண்டே அசோக் மீராவின் புஜத்தை இறுகப் பற்றினான்.
"அது உன்னால முடியாது அசோக்.. You can't stop me..!!"
"Yes.. I can..!!!! நீ பாட்டுக்கு பைத்தியம் மாதிரி ஏதோ உளறிட்டு போறேன்னு சொல்வ.. நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியா..?? நோ.. உன்னை போக விட மாட்டேன்..!!"
"இ..இல்ல அசோக்.. உன்னால முடியாது..!!"
"ஏன் முடியாது..?? நான் நெனச்சா.. உ..உன்னை.. இங்க.. இ..இப்படியே.."
ஆரம்பித்ததை முடிப்பதற்கு முன்பே, அசோக்கின் தலை சுற்றல் உச்சபட்சத்தை எட்டியது. உடலும் மூளையும் சுத்தமாக சோர்ந்துபோன மாதிரி ஒரு உணர்வு. இமைகள் அவனுடைய கட்டுப்பாடு இல்லாமலே செருக ஆரம்பிக்க, கால்கள் தள்ளாடின. உடலின் எடை முற்றிலும் குறைந்து போய், அப்படியே காற்றில் மிதப்பது மாதிரி தோன்றியது அவனுக்கு. மிகவும் கஷ்டப்பட்டு விழிகளை திறந்து, மீராவை பரிதாபமாக பார்த்தான்.
அவனுடைய இந்த நிலையைக்கண்டு, மீரா கொஞ்சம் கூட அதிர்ந்து போன மாதிரி தெரியவில்லை. அவளுடய கண்களில் மட்டும் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது புஜத்தை பற்றியிருந்த அசோக்கின் பிடி, இப்போது வலுவிழந்து போயிருக்க, மிக எளிதாக அந்தப் பிடியில் இருந்து விலகிக் கொண்டவாறே, உதடுகள் படபடக்க சொன்னாள்.
"நான்தான் சொன்னேன்ல.. உன்னால முடியாது..!!"
"மீரா.. எ..எனக்கு.. எ..எனக்கு ஒரு மாதிரி.."
அசோக் தடுமாற்றத்துடனே தலையை பிடித்துக் கொண்டான். மீரா இப்போது தனது மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். அசோக்கை ஏறிட்டு சொன்னாள்.
"நீ ஜூஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சு அசோக்.. அப்படித்தான் இருக்கும்..!!"
"எ..என்ன சொல்ற.."
"வேலியம் 20mg..!! நீ ஹேண்ட் வாஷ் பண்ண போனப்போ.. என் பேக்ல இருந்து ரெண்டு டேப்லட் எடுத்து.. உன் ஜூஸ்ல கலந்துட்டேன்..!!"
"வா..வாட்..??"
"கொ..கொஞ்சம் ஹெவி டோஸேஜ்.. ந..நல்லா தூக்கம் வரும்.. அவ்வளவுதான்..!!"
மீரா அழுகுரலில் சொன்னாள். அசோக்குக்கு இப்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மீரா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிற நிலைமையில் கூட அவன் இல்லை. 99% மயக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அவனது மூளை உறங்கிப்போக தயார் நிலையில் இருந்தது. அந்த உறக்கத்தை, அசோக் தலையை உலுக்கி, உடும்புப்பிடியாக உதற முயன்றான். குழம்பிப்போன மூளை அவனுடைய மனதில் பல குழப்பப்படங்களை திரையிட்டது. உடல் தடுமாறியது.. ஆதரவாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி, அவனது கைவிரல்கள் காற்றில் அலைபாய்ந்தன.. இமைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன..!! மீரா அவனையே ஒருவித பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுவாதீனத்தை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்த அசோக்.. அப்படியே தலையை சுழற்றி ஆகாயத்தை பார்த்தான்..!! அவனது உச்சந்தலைக்கு மேலே அந்த பருந்து.. வாய்கிழிய கத்தியபடியே வட்டமடித்துக் கொண்டிருந்தது..!! அவனுக்குள் இப்போது ஒரு அர்த்தமற்ற உந்துதல்.. அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று..!! மெல்ல திரும்பினான்.. கால்கள் தள்ளாட நடை போட்டான்.. ஆனால் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்பே.. கால்கள் மடங்கிப்போய் அப்படியே கீழே சரிந்தான்..!!
"அசோக்..!!!"
மீரா அலறிக்கொண்டே அவசரமாய் நகர்ந்து, அசோக் தரையில் விழுவதற்குள் அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று, அருகில் கிடந்த மரப்பெஞ்சில் அமரவைத்தாள். மயக்கத்தில் தத்தளித்த அசோக்கின் முகத்தை, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். காதலனின் நிலையைக்கண்டு, அவளுக்கு இப்போது அழுகை பீறிட்டு கிளம்பியது. நீர் கசிகிற கண்களுடன், அசோக்கின் தலைமுடியை கோதிவிட்டவாறே..
"ஒ..ஒன்னுல்லடா.. ஒன்னுல்ல..!! நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கப் போற.. வேற ஒன்னுல்ல..!! தூங்கி எந்திரிச்சா.. எல்லாம் சரியாப் போகும்..!! தூங்கு..!!" என்றாள்.
அவனுடைய நெற்றியில் உதடுகள் பதித்து முத்தமிட்டாள். அசோக் இமைகளை திறக்க முடியாமல் திறந்து, திணறலான குரலில் கேட்டான்.
"ஏ..ஏன்.. ஏன் மீரா..??"
"ஸாரிடா.. ஸாரி..!! எதுவுமே சொல்லாம உன்னைவிட்டு பிரிஞ்சு போக எனக்கு மனசு வரல.. ஃபோன்ல என் காதலை சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.. கடைசியா ஒருநாள் உன்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..!! நான் விலகிப்போறேன்னு சொன்னா.. நீ விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதான்..!! என்னை மன்னிச்சிடுடா..!!"
"போ..போகாத மீரா..!!"
"இல்ல அசோக்.. உன்கூட சேர்ந்து வாழறதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லடா.. நான் போறேன்..!!"
"...................."
"நா..நான் .. நான் போனப்புறம் என்னை மறந்துடணும்.. என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..?? உ..உனக்கு.. உனக்கு என்னைவிட, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணா ஒருத்தி வருவாடா.. உன் நல்ல மனசுக்கு, வானத்துல இருந்து குதிச்ச தேவதை மாதிரி ஒருத்தி வருவா.. அ..அவளைக் கட்டிக்கிட்டு.. எந்த குறையும் இல்லாம.. ந..நல்லா.. நல்லா சந்தோஷமா வாழனும்.. என்ன..??"
விம்முகிற குரலில் சொன்ன மீரா, இப்போது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினாள். அசோக்கின் சட்டைப்பையில் அதை திணித்தாள்.
"பாட்டிட்ட குடுத்திடு.. இதை போட்டுக்க எனக்கு தகுதி இல்லன்னு சொல்லிடு..!! வீட்ல எல்லார்ட்டயும்.. இந்தப்பாவியை முடிஞ்சா மன்னிச்சிட சொல்லு..!!"
மீரா பேசிக் கொண்டிருக்கையிலேயே அசோக் ஏதோ அவளிடம் சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன. அவன் பேச தவிப்பதை உணர்ந்த மீரா,
"என்னம்மா.. சொல்லு..!!" என்றவாறே தனது காதை அவனது உதடுகளுக்கு அருகே எடுத்து சென்றாள். அசோக் இப்போது உதடுகள் பிரித்து, ஈனஸ்வரத்தில் மெல்ல முனகினான்.
"எ..எனக்கு நீ வேணும் மீரா..!!"
சொல்லும்போதே அவனுடைய கண்களின் ஓரமாய் கண்ணீர் கொப்பளித்து ஓடியது..!! அவ்வளவுதான்..!! மீராவுக்கு அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை..!! அம்பு தைத்த பறவை போல.. மடியில் வீழ்ந்து கிடந்த காதலனின்.. பரிதாபகரமான வார்த்தைகள்.. அவளுடைய இதயத்தில் ஈட்டியை பாய்ச்சின..!! விழிகளில் கண்ணீர் ஆறாக ஓட.. 'ஓஓஓஓஓ' என்று பெருங்குரலில் ஓலமிட்டு அழுது அரற்றினாள்..!! மார்பில் புதைந்திருந்த அசோக்கின் முகத்தை.. மேலும் இறுக்கிக் கொண்டாள்..!! அவனுடைய நெற்றியில் 'இச்.. இச்..' என்று முத்தங்களை வாரி இறைத்தவாறே.. உடைந்துபோன குரலில் சொன்னாள்..!!
"இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!"
அசோக் கொஞ்சம் கொஞ்சமாய்.. முழுமயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தான்..!! எப்படியாவது விழித்திருக்கவேண்டும் என்று அவன் செய்த பிரயத்தனங்கள் எல்லாம்.. உள்ளே சென்றிருந்த ரசாயானத்தினால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன..!! அவனுடைய இமைகள் அவனது கட்டுப்பாட்டையும் மீறி.. மெல்ல மெல்ல மூடிக்கொள்ள ஆரம்பித்தன..!! அவனது உதடுகள் மட்டும்.. 'போயிடாத மீரா.. போயிடாத..' என்று திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!! மீராவோ கண்களில் நீர் வழிய.. பிஞ்சுக்குழந்தையை நெஞ்சில் போட்டு தாலாட்டும் தாயைப்போல.. அசோக்கை தனது மார்புத்தொட்டிலில் இட்டு.. அவன் மயக்கத்திற்கு செல்லும்வரை.. இப்படியும் அப்படியுமாய் இதமாக அசைத்து கொடுத்தாள்..!!
அசோக் தூங்கிப் போனான்..!! அப்புறமும் சிறிது நேரம்.. மீரா அவனை தனது மார்போடு சேர்த்து தாலாட்டிக் கொண்டிருந்தாள்.. அழுதவாறே அவனது தலையை இதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..!!
பிறகு நேரமாவதை உணர்ந்ததும்.. அவனை மெல்ல இருக்கையில் கிடத்திவிட்டு.. எழுந்தாள்..!! அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை உருவினாள்..!! கிஷோரின் நம்பர் தேடிப்பிடித்து கால் செய்தாள்..!!
"ஆங்.. சொல்லு மச்சி.. என்ன சொல்றா வீரலட்சுமி..??" என்று கிண்டலாக ஆரம்பித்த கிஷோரை கண்டுகொள்ளாமல்,
"கிஷோர் அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!" என்றாள் இறுக்கமான குரலில்.
"மீ..மீரா.. நீ..?? நா..நான் அசோக்குனு.."
"பரவாலண்ணா..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல..??"
"ம்ம்.. ஆ..ஆமாம்..!!"
"உள்ள என்டர் ஆனதும்.. லெஃப்ட்ல ஒரு பாதை போகும்.. அதுலயே போனா.. டெட் என்ட்ல ஒரு வுடன் பெஞ்ச் இருக்கும்.. அந்த பெஞ்ச்ல அசோக் மயக்கமா படுத்திருக்கான்.. நீங்க இங்க கொஞ்சம் வந்து.. அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கண்ணா..!!"
"வா..வாட்..?? ம..மயக்கவா..?? என்னாச்சும்மா..??" கிஷோர் அடுத்த முனையில் அதிர்ந்து கொண்டிருந்தான்.
"பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. நான்தான் தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சிருக்கேன்..!!"
"நீ..நீயா..?? என்ன சொல்ற..??"
"கொஞ்ச நேரம் நல்லா தூங்குவான்.. அவனை ரெஸ்ட் எடுக்க விடுங்க..!! தூங்கி எந்திரிச்சதும் கேளுங்க.. அவனே எல்லாம் சொல்லுவான்..!!"
"எ..என்னம்மா சொல்ற நீ.. எனக்கு ஒன்னும் புரியல..!!"
"பேசிட்டு இருக்க நேரம் இல்லண்ணா.. சீக்கிரம் கெளம்பி வாங்க.. வேணு அண்ணாவோட காரை எடுத்துட்டு வாங்க..!!"
சொல்லி முடித்த மீரா.. காலை உடனே கட் செய்தாள்..!! கட் செய்ததுமே.. அசோக்குடைய செல்ஃபோனின் பக்கவாட்டில் இருந்த தகட்டினை விலக்கி.. உள்ளே செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை.. விரல் நகத்தினால் உருவி எடுத்தாள்..!! அசோக் அவளுடைய செல்போனில் இருந்து.. அவனது செல்ஃபோனுக்கு படங்களை எல்லாம் பிரதி எடுத்துக்கொண்டதை.. முன்கூட்டியே அறிந்தவள் போல செயல்பட்டாள்..!!
இப்போது அசோக்கின் செல்ஃபோனுக்கு கிஷோரின் நம்பரில் இருந்து கால் வந்தது..!! அதை கண்டுகொள்ளாமல்.. அலறுகிற அந்த ஃபோனை.. அசோக்கின் பேன்ட் பாக்கெட்டிலேயே திணித்தாள்..!! இறுதியாகப் பார்க்கிறோம் என்ற எண்ணத்துடன்.. அசோக்கின் முகத்தை காதலும், ஏக்கமுமாய் ஏறிட்டாள்..!! அவன் முகத்திற்கு முன்பாக ரீங்காரமிட்ட ஈ ஒன்றினை.. புறங்கை வீசி விரட்டினாள்..!! கலைந்திருந்த அவனது தலைமுடியை சரி செய்தாள்..!! பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டவள்.. அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்தாள்..!!
சற்று நேரத்திற்கு முன்பு நடந்து வந்த பாதையிலேயே.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய பார்வை நிலைகுத்திப்போன மாதிரி.. அந்தரத்தை வெறித்தது..!! வாழ்வில் இருந்த ஒற்றை சந்தோஷத்தையும் இழந்துவிட்ட விரக்தி.. அவளின் முகத்தில் விரவிக் கிடந்தது..!! அவளது கால்கள் மட்டும் அனிச்சையாக.. அடிமேல் அடிவைத்துக் கொண்டிருந்தன..!! கைகள் அவளுடைய செல்ஃபோனை பிரித்தன.. உள்ளே பொதிந்திருந்த சிம்கார்டை உருவின..!! ஏற்கனவே வைத்திருந்த அசோக்கின் மெமரி கார்டுடன் சேர்த்து.. இரண்டினையும்.. மண்டிக்கிடந்த புதருக்குள் வீசி எறிந்தவாறே நடையை தொடர்ந்தாள்.. மீரா..!!
அத்தியாயம் 17
அடுத்த நாள் காலை.. நேரம் ஏழு மணியை தாண்டி இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!! வேணுவின் கார் குமரன் காலனி மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி.. புழுதியை கிளப்பியவாறே பங்கஜம் ரோட்டில் நுழைந்தது..!! மேலும் ஒரு இருநூறு அடி தூரம் ஓடியதும்.. மெல்ல மெல்ல வேகம் குறைந்து.. பிறகு சரக்கென ப்ரேக் மிதிக்கப்பட.. சாலையோரமாய் க்றீச்சிட்டு நின்றது..!! கார் நின்றதுமே.. பின் சீட்டில் அமர்ந்திருந்த அசோக் அவசரமாய் கீழே இறங்கினான்.. கதவை அறைந்து சாத்தினான்..!! தலையை சற்றே உயர்த்தி அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்..!!
மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. 'Aptech Computer Education' என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. 'டப்.. டப்.. டப்..' என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!!
"நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!" சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான்.
"ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!" என்று அவனை விரட்டினான்.
முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான்.
"இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!" கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.
"வையி.. அப்புறம் பேசலாம்..!!" அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது.
"ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!"
கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே..
"நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??" என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான்.
"திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி.."
".............."
"ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!"
".............."
"என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??"
".............."
"ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!"
".............."
"ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!"
கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை 'கில்'ல ஆரம்பித்தார்கள்..!!
நேற்று மீரா கால் செய்து விஷயத்தை சொன்னதுமே.. அசோக்கின் நண்பர்கள் மூவரும் பதறிப் போனார்கள்..!! அவனுடைய செல்ஃபோனில் ரிங் சென்று கொண்டே இருக்க.. பயந்து போன மூவரும் வேணுவின் காரில் உடனடியாய் கிளம்பினர்..!! மீரா சொன்ன குறிப்பை உபயோகித்து.. மிக எளிதாகவே அசோக்கை கண்டுபிடிக்க முடிந்தது..!! மயக்கத்தில் இருந்தவனை.. கார் பின் சீட்டில் கிடத்தினர்..!! 'பயப்படுறதுக்கு ஒன்னுல்ல..' என்று மீரா சொல்லியிருந்தாலும்.. இவர்கள் மனம் சமாதானமாகாமல்.. அசோக்கை அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..!! அவனை பரிசோதித்த டாக்டரும்.. மீரா சொன்னதையே திரும்ப சொன்னபிறகுதான்.. நிம்மதியாக மூச்சு விட்டனர்..!! ஹாஸ்பிட்டல் படுக்கையில் வாய்பிளந்து உறங்கிய அசோக்கை சுற்றி.. கன்னத்தில் கைவைத்தவாறு மூவரும் அமர்ந்து கொண்டார்கள்..!!
அசோக் குடும்பத்தாருக்கு விஷயத்தை சொல்லி.. அவர்களை களேபரப் படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்..!! 'அவசர வேலையா வெளியூருக்கு போயிருக்கான் ஆன்ட்டி.. நாளைக்கு காலைல வந்துடுவான்..' என்று கிஷோர் பாரதிக்கு கால் செய்து சொன்னான்..!! மயக்கத்தில் கிடக்கிற நண்பனையே.. மற்ற மூவரும் கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்தனர்..!! என்ன நடந்திருக்கும் என்பதை.. கொஞ்சம் கூட அவர்களால் யூகிக்க இயலவில்லை..!! 'இவனை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு.. எங்கே போய் தொலைந்தாள் அவள்..?? அசோக்கை மயக்கத்தில் வீழ்த்துக்கிற அளவுக்கு.. அப்படி என்ன அவசியம் அவளுக்கு..??' எதுவுமே புரியவில்லை நண்பர்களுக்கு..!!
அதிகாலை மூணு மணி வாக்கில்தான் அசோக்குக்கு விழிப்பே வந்தது..!! அவன் எழுந்ததுமே.. சப்தம் கேட்டு விழித்து.. அவனை சூழ்ந்து கொண்ட நண்பர்கள்.. 'மீரா எங்கடா..??' என்று கேட்க எத்தனித்தனர்..!! ஆனால் அவர்களை முந்திக்கொண்டு.. அசோக் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க.. மூவரும் குழம்பிப் போயினர்..!!
அப்புறம்.. நடந்த விஷயங்களை எல்லாம் அசோக்கே நண்பர்களுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான்..!! அப்படி சொல்கையில் அவனுடைய குரலில் தொனித்த வேதனையை.. அவர்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது..!! தாங்கள் விளையாட்டுத்தனமாய் விட்ட சவால்தான்.. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்பதை அறிய நேர்ந்ததும்.. அவர்களுக்குமே மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி..!! 'எனக்கு இப்போவே மீராவ பாக்கனும்..' என்று.. அந்த நேரத்திலேயே ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்ப முயன்ற அசோக்கை.. அதட்டி, அடக்கி, அரும்பாடு பட்டு.. 'எல்லாம் காலைல பாத்துக்கலாம்டா.. இப்போ நிம்மதியா படுத்து தூங்கு..' என்று சமாதானம் செய்து படுக்கவைத்தனர்..!!
அசோக்கின் மனதில் நிம்மதி எப்போதோ செத்துப் போயிருக்க.. அவனால் உறங்க முடியவில்லை..!! மீராவின் நினைவுகளே நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருக்க.. மனதுக்குள்ளேயே அழுதவாறு படுத்திருந்தான்..!! ஏதோ ஒரு நப்பாசையுடன் அவளுடைய எண்ணுக்கு கால் செய்து பார்த்தான்.. ஸ்விட்ச்ட் ஆஃப் என்று பதில் வர.. மொபைலை எறிந்தான்..!! தனது மெமரி கார்டை கூட அவள் உருவி சென்றிருப்பதை உணர்ந்து.. வயிறு எரிந்தான்..!! 'ஃபோனை ஆஃப் பண்ணி வச்சுட்டா.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?? உன்னை விட்ருவேன்னு நெனச்சியா..?? நாளைக்கே உன்னை தேடிக் கண்டு பிடிக்கிறனா இல்லையான்னு பாரு.. கண்டுபிடிச்சதும் உன் கன்னம் ரெண்டும் பழுக்குதா இல்லையான்னு பாரு..' என்று மனதுக்குள்ளேயே கருவிகொண்டான்..!!
'எப்போதடா பொழுது விடியும்' என்று.. மோட்டுவளையை வெறித்தவாறே காத்திருந்தான்..!! விடிந்ததுமே.. களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்த நண்பர்களை.. அந்த அதிகாலையிலேயே அடித்துக் கிளப்பி.. இதோ.. காரை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் சென்டருக்கும் வந்துவிட்டான்..!!
நேரம் எட்டு மணியை நெருங்க ஆரம்பிக்கையில்.. அந்த இடத்துக்கு ஆட்கள் வருகை அதிகமாக இருந்தது..!! மார்னிங் பேட்ச் தேர்வு செய்திருந்த மாணவர்கள்.. குளித்தோ, குளிக்கமாலோ சென்டருக்கு வந்து சேர்ந்து.. சலிக்காமல் டெக்னிகல் விஷயங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர்..!! சரியாக 7.55 க்கு.. உதட்டோரத்தில் அழகாக மச்சம் தாங்கிய அந்தப்பெண்.. ஆக்டிவாவில் ஸ்டைலாக வந்து இறங்கினாள்.. கடையை திறந்தாள்..!!
மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று சேர்ந்து.. அந்த ஆரவாரம் எல்லாம் சற்று அடங்கும்வரைக்கும்.. அசோக்கும் நண்பர்களும் அமைதியாக காத்திருந்தனர்..!! அப்புறம் சென்டருக்குள் நுழைந்து.. அந்த மச்சக்காரியை அணுகினர்..!! அவள் சாலமனின் முகத்தை பார்த்த பிறகுமே..
"என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண வந்திருக்கீங்க..??" என்று கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டாள்.
"ஹிஹி.. இல்லைங்க.. நாங்க கோர்ஸ்லாம் ஜாயின் பண்ண வரல.!!" சாலமன் இளித்தான்.
"அப்புறம்..??"
"எங்களோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தங்க.. இந்த சென்டர்லதான்.. போன மாசம் வரை அனிமேஷன் கோர்ஸ் படிச்சாங்க..!!"
"சரி..!!"
"உங்க ரெகார்ட்ஸ்லாம் எடுத்து.. அவங்க அட்ரஸ் என்னன்னு கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா.. நாங்க வந்த வேலை முடிஞ்சிடும்..!! உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு.. நாங்க கெளம்பிட்டே இருப்போம்..!!" சற்றே எகத்தாளமாக சொன்ன சாலமனை, அந்தப்பெண் எரிச்சலாக பார்த்தாள்.
"க்ளோஸ் ஃப்ரண்ட்ன்னு சொல்றீங்க.. இங்க வந்து அட்ரஸ் கேக்குறீங்க..??"
அந்தப்பெண் லாஜிக்காக கேள்வி கேட்க, சாலமன் இப்போது தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை கண்டதும், வேணு இப்போது இடையில் புகுந்து, அவளுக்கு உளறலாக பதில் சொன்னான்.
"அ..அது.. அது வந்து.. க்ளோஸ்தாங்க.. ஆனா அட்ரஸ் சொல்லிக்கிற அளவுக்கு க்ளோஸ் இல்லன்னு வச்சுக்கங்களேன்..!! ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்.. தண்ணி கூட அடிச்சிருக்கோம்.. ஆ..ஆனா இந்த அட்ரஸ் மட்டும் எப்படியோ ஷேர் பண்ணிக்காமலே விட்டுட்டோம்..!! இப்போ அர்ஜன்ட்டா அவங்கள மீட் பண்ற மாதிரி ஒரு சிச்சுவேஷன் ஆகிப்போச்சு.. அதான்..!! ப்ளீஸ்ங்க.. கொஞ்சம் ஹெல்ப்புங்க..!!"
வேணுவின் உளறலில் அந்தப்பெண் கன்வின்ஸ் ஆகாவிட்டாலும்.. அவனுடைய குரலில் தொனித்த அந்த கெஞ்சல்.. அவளை மனம் இரங்க செய்தது..!! தனது கம்ப்யூட்டரை இயக்கியவள்.. மானிட்டரை பார்த்துக்கொண்டே வேணுவிடம் கேட்டாள்..!!
"கோர்ஸ் எப்போ முடிச்சாங்கன்னு சொன்னீங்க..??"
"லாஸ்ட் மன்த்..!!"
"என்ன கோர்ஸ்..??"
"மாயா..!!"
"அவங்க பேரு..??"
"மீரா..!!" வேணு கூலாக சொல்ல,
"மீராவா..??" அவள் திடீரென அதிர்ந்தாள்.
"ஆமாங்க..!!" என்ற வேணு அசோக்கிடம் திரும்பி,
"அப்பா பேரு என்ன மச்சி..??" என்று கேட்டான்.
"சந்தானம்..!!" என்று அசோக் சொன்னதும், வேணு இப்போது மீண்டும் அந்தப் பெண்ணிடம் திரும்பி,
"ஆங்.. எஸ்.மீரா'ன்னு போட்டு தேடிப்பாருங்க..!!" என்றான். அவளோ வேணுவை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
"பொண்ணா..????" என இறுக்கமாக கேட்டாள்.
"ஆ..ஆமாம்..!! அப்புறம்.. மீரான்னா.. பொண்ணுதான..??" வேணு அப்பாவியாக இளிக்க, அவள் இப்போது மானிட்டரை படக்கென ஆஃப் செய்தாள்.
"இல்லைங்க.. பொண்ணுங்க அட்ரஸ்லாம் தர்றது இல்ல..!!"
"ஹலோ ஹலோ.. ப்ளீஸ்ங்க..!!" வேணுவுடன் சேர்ந்து இப்போது கிஷோரும் அந்தப்பெண்ணிடம் கெஞ்சினான்.
"ப்ச்..!! நோ.. ஐ கான்ட்..!! உங்க நாலு பேரையும் பார்த்தாலே எனக்கு சந்தேகமா இருக்கு.. நாளைக்கு ஏதாவது பிரச்சினைன்னா.. யார் பதில் சொல்றது..?? அட்ரஸ்லாம் தர முடியாது.. எடத்த காலி பண்ணுங்க..!!"
"அப்படிலாம் சொல்லாதிங்க மேடம்.. நீங்கதான் எங்களுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ்..!! எந்தப் பிரச்சனையும் வராது மேடம்.. எங்களை பாத்தா பிரச்னை பண்றவங்க மாதிரியா தெரியுது..?? நாங்க ரொம்ப அப்பாவிங்க மேடம்..!! ப்ளீஸ்.. கொஞ்சம் மனசு வைங்க..!!"
"ஷ்ஷ்ஷ்.. நான்தான் முடியாதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம கெஞ்சிட்டு இருக்கீங்க..?? கெளம்புங்க..!!"
"ஹையோ.. ரொம்ப முக்கியமான விஷயம் மேடம்.. அவங்க அட்ரஸ் எப்படியாவது எங்களுக்கு வேணும்.. எங்க நெலமையை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க ப்ளீஸ்..!!"
"என் நெலமையை நீங்க மொதல்ல புரிஞ்சுக்கங்க..!!"
"ப்ளீஸ் மேடம்..!! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! நீங்க மனசு வச்சா கண்டிப்பா எங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்..!!"
அசோக்கை தவிர மற்ற மூன்று பேருமே, இப்போது அந்தப்பெண்ணை கெஞ்சினர். வெட்கமில்லாமல் அவர்கள் கெஞ்சுவதை சகிக்க முடியாமல், அவளும் இப்போது சற்றே இறங்கி வந்து..
"சரி.. அப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றீங்களா..??"
"என்ன..??"
"எங்க மேனேஜரை பார்த்து பெர்மிஷன் கேளுங்க..!! அவர் சொன்னா.. நான் உங்களுக்கு அட்ரஸ் தர்றேன்..!!"
"ஓகே..!! அப்போ.. உங்க மேனஜரை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மன்ட் கொடுங்க..!!"
"அவர் 9'o clock-தான் வருவாரு.. அதுவரைக்கும் கொஞ்சம் அங்க வெயிட் பண்ணுங்க..!!" அவள் கேஷுவலாக சொல்லிக்கொண்டே சோபாவை கைகாட்டினாள்.
"9'o clock-ஆ..?? அவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா..?? என்ன மேடம் நீங்க..?? நீங்களே அந்த கம்ப்யூட்டர்ல அடிச்சு பாத்து.."
"ஹலோ..!! என்னால அவ்வளவுதான் பண்ண முடியும்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. இஷ்டம் இருந்தா, வெயிட் பண்ணி மேனேஜரை பாருங்க.. இல்லனா எடத்த காலி பண்ணுங்க..!! எனக்கு வேலை நெறைய இருக்கு.. வெட்டியா பேசிட்டு இருக்க நேரம் இல்ல..!!"
கறாராக சொன்ன அவள் கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்து, இவர்கள் மேலிருந்த கடுப்பை கீ போர்டிடம் காட்ட ஆரம்பித்தாள். அசோக்கும் நண்பர்களும் வேறு வழியில்லாமல், மெல்ல நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்கள். அவ்வாறு அமர்ந்ததுமே.. கிஷோர் அசோக்கை பார்த்து..
"டேய் மச்சி.. அந்த மேனேஜர் வர்றதுக்குள்ள.. நீ போய் சாப்பிட்டுட்டு வந்துடு..!!" என்றான் கரிசனமாக.
"இல்லடா.. அந்த ஆள் வரட்டும்..!! அட்ரஸ் வாங்கிட்டே கெளம்பிடலாம்..!!"
"ப்ச்..!! அறிவில்லாம பேசாத.. நாங்களாவது பரவால.. நீ நைட்டும் சாப்பிடல..!! அட்லீஸ்ட் அவளை தேடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணாம்..?? போ.. போய் சாப்பிட்டு வா.. போ..!! நாங்க இங்க வெயிட் பண்ணி.. அந்த ஆள் வர்றானான்னு பாக்குறோம்..!! சரியா..??" என்று கடுமையாக சொன்ன கிஷோர், வேணுவிடம் திரும்பி..
"டேய்.. கூட்டிட்டு போடா..!!" என்றான்.
"வாடா மச்சி.. போலாம்..!!"
என்றவாறு வேணுவும் அசோக்கின் புஜத்தை இறுகப் பற்றினான். அடுத்த இரண்டாவது நிமிடம்.. அசோக்கும் வேணுவும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்..!!
"நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! சும்மா.. செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுட்டா.. நம்மட்ட இருந்து எஸ்கேப் ஆயிட முடியுமா..?? உன்கூட நூறு நாள் பழகிருக்கா மச்சி.. எவ்ளோ பேசிருப்பா.. என்னன்னலாம் சொல்லிருப்பா.. ஈஸியா புடிச்சுடலாம் மச்சி..!! நீ டென்ஷன் ஆவாத..!!"
வேணு சொன்ன ஆறுதல் அசோக்குக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் அவன் சொன்ன ஒருவிஷயம் அவனுடைய புத்தியில் தீ கொளுத்தி போட்டது. மீராவுடன் அவன் பழகிய அந்த நூறு நாட்களில், அவள் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை எல்லாம், மனதுக்குள் அசை போட்டுக்கொண்டே வந்தான்..!!
ஃபுட் கோர்ட் வந்து சேர்ந்தது..!! வாசலுக்கு முன்பாக வேணு காரை நிறுத்த.. அசோக் இறங்கிக்கொண்டான்..!!
"நீ உள்ள போய் வெயிட் பண்ணு மச்சி.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..!!"
சொன்ன வேணு, ஃபுட் கோர்ட்டின் கீழ்த்தளம் நோக்கி காரை செலுத்த ஆரம்பித்தான். அசோக் படியேறி ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். கண்ணாடி கதவை அவன் திறந்ததுமே.. அவன் காலடியை வந்து மோதியது அந்த பலூன்..!! இரத்த நிறத்தில்.. இதய வடிவத்தில்.. அழகான, மென்மையான.. அந்த பலூன்..!! அந்த பலூனுக்கு பின்னாடியே.. நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.. பலூனை பிடிக்கிற உத்வேகத்துடன் வேகமாக ஓடிவந்தான்..!! அவனுக்கு பின்னால்.. அவனுடைய அம்மா..
"டேய் சூர்யா.. சூர்யாஆஆஆ..!! ஓடாத.. நில்லு..!! நில்லுன்றேன்ல..?? டேய்..!!!!!"
என்று கத்தியவாறே, ஒருவித பதைபதைப்புடன் ஓடிவந்தாள். அசோக் குனிந்து அந்த பலூனை எடுத்தான். அந்த சிறுவனிடம் நீட்டினான்.
"தேங்க்ஸ் அங்கிள்..!!"
அழகுப்புன்னகையுடன் சொன்னவாறே, அதை வாங்கிக்கொண்டான் சூர்யா. அவனை வந்து தூக்கிக்கொண்ட அவனது அம்மாவும், அசோக்கை பார்த்து,
"தேங்க்ஸ்ங்க..!!" என்று புன்னகைத்தாள்.
"இட்ஸ் ஓகே..!!"
சொன்ன அசோக் சூர்யாவின் கன்னத்தை பிடித்து அன்பாக திருகிவிட்டு.. அங்கிருந்து நகர்ந்தான்..!! வேணு வரும்வரை காத்திருக்கலாம் என்று எண்ணியவன்.. டேபிள்களுக்கு இடையில் புகுந்து நடந்தான்..!! மெல்ல நடைபோட்டு.. அந்த டேபிளை வந்தடைந்தான்.. மீரா எப்போதும் அமர்கிற அதே டேபிள்..!! அந்த டேபிளை பார்த்ததுமே.. அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத வெறுமை படருவதை.. அசோக்கால் உணர முடிந்தது..!! மீரா வழக்கமாக அமருகிற அந்த இருக்கையை.. ஒரு கையால் மென்மையாக வருடினான்..!! பிறகு மனதுக்குள் ஏதோ ஒரு ஆசை உருவாக.. அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான்..!!
அவனுக்கு சற்று தூரத்தில்.. சூர்யாவும், அவன் அம்மாவும் அமர்ந்திருந்தனர்..!! அவள் அசோக்கை பார்த்து ஒருமுறை புன்னகைத்துவிட்டு.. தோசையை பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டாள்..!! சூர்யா இவனை பார்த்து 'ஹாய்' என்று கையசைத்துவிட்டு.. பலூனை தரையில் தட்டி தட்டி விளையாட ஆரம்பித்தான்..!! அசோக்கும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு.. மீராவின் நினைவில் மூழ்க ஆரம்பித்தான்..!! இதே ஃபுட்கோர்ட்டில்.. அவனுக்கும் அவளுக்கும் நேர்ந்த நிகழ்வுகள் எல்லாம்.. அவனுடைய மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டிருக்க.. நெஞ்சு பாரமாகிக் கொண்டே போனது..!!
அப்போதுதான்.. எங்கிருந்தோ பறந்து வந்த அந்த காகிதம்.. அசோக்கின் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது..!! அசோக் தனது கன்னத்தை தடவி.. அந்த காகிதத்தை கையில் எடுத்தான்..!! அது வெறும் காகிதம் அல்ல.. பிஸ்ஸாவின் மேல் தூவப்படுத்துகிற.. மிளக்காய்த்துகளை உள்ளடக்கியிருக்கும் காகித கவர்..!! இப்போது காலியாகிப்போய்.. எங்கிருந்தோ பறந்து வந்திருந்தது..!!
அசோக் முதலில் அந்த காகித கவரை கசக்கி எறியத்தான் நினைத்தான்..!! பிறகு ஒருகணம் நிதானித்தவன்.. தனது கையை பிரித்து அந்த கவரை பார்த்தான்..!! மிளக்காய்த்துகள் தயாரிக்கிற அந்த கம்பனியின் ப்ராண்ட்.. அந்த கவரில் சிகப்பு நிறத்தில் அச்சிடப் பட்டிருந்தது..!!
"Mirchi..!!!!"
அதைப்பார்த்ததுமே அசோக்குக்கு சுருக்கென்று ஒரு உணர்வு..!! அவனுடைய மூளை நரம்பில் யாரோ ஊசி ஏற்றிய மாதிரி சுரீர் என்று இருந்தது..!! அவனும் மீராவும் முதன்முதலாக பேசிக்கொண்டபோது நடந்த அந்த விஷயத்தை.. அவனுடைய நினைவடுக்கு, அவன் மனதுக்குள் படமாக ஓட்டிக் காட்டியது..!!
"உன் பேர் என்ன..??"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
"ம்ம்ம்... மிர்ச்சி..!!"
அசோக்கின் கேள்விக்கு மீரா திரும்ப திரும்ப பதில் சொன்னாள். சொல்லிக்கொண்டே, திரும்ப திரும்ப மிளகாய்த்துகள் பாக்கெட்டை கிழித்து, தட்டின் மீதிருந்த பிஸ்ஸாவின் மேல் தூவினாள்.
அசோக்கிடம் இப்போது குப்பென்று ஒரு திகைப்பு..!! 'ஒருவேளை.. ஒருவேளை.. இப்படி இருக்குமோ..??' என்று அவனுடைய மூளை.. மிக கூர்மையாக ஒரு சந்தேகத்தை கிளப்ப.. அவனது மனதுக்குள் ஒரு மெலிதான கிலி பரவ ஆரம்பித்தது..!! சற்றே மிரண்டு போன முகத்துடன்.. தலையை மெல்ல நிமிர்த்தி பார்த்தான்..!! அவ்வாறு பார்த்ததுமே.. அவனுடைய பார்வையில் பட்ட அந்த விளம்பர போர்ட்.. அவனை ஸ்தம்பித்து போக வைத்தது..!! அதிர்ந்து போனவனாய்.. அவனையும் அறியாமல் சேரில் இருந்து எழுந்தான்..!! வெறித்த பார்வையுடன்.. கண்களுக்கு கொடுத்திருந்த குளிர்கண்ணாடியை கழட்டினான்..!!
அந்த விளம்பர போர்டின் வாசகங்கள்..
"Learn 'MAYA' at Aptech Computer Education..!!"
"இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"
"ஓ..!! என்ன கோர்ஸ்..??"
"ம்ம்.. மாயா...!!!!"
மீரா சொன்னது நினைவு வர.. அசோக்குக்கு உடலெல்லாம் ஜிலீர் என்று ஒரு சிலிர்ப்பு..!! அவனுடைய இதயத்தை இப்போது ஒரு இனம்புரியாத பயம் வந்து இரக்கமே இல்லாமல் கவ்விக்கொண்டது..!! வியர்த்து வெளிறிப்போன முகத்துடன்.. தலையை மெல்ல மெல்ல சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த மற்ற விளம்பர போர்டுகளையும்.. ஒவ்வொன்றாக கவனமாக பார்த்தான்..!!
"காரைக்குடி - செட்டிநாடு உணவகம்..!!"
"ஹைதராபாத் பிரியாணி சென்டர்..!!"
ஃபுட்கோர்ட் கவுன்ட்டர்களில் இருந்த அந்த இரண்டு போர்டுகளும் அடுத்தடுத்து அவன் கண்ணில் பட்டன..!!
"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" - மீரா அசோக்கின் மனதுக்குள் தோன்றி சிரிப்புடன் சொன்னாள்.
அசோக்குக்கு இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! உலையில் இட்ட அரிசியாக.. உதிரம் கொதிப்பது போல ஒரு உணர்வு அவனுக்கு..!! மீரா இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தன்னைப்பற்றி சொன்னாள் என்று யோசித்தான்..!!
"என் அப்பா பேரு சந்தானம்..!!"
"ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??"
"ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!!"
யெஸ்..!!!! அக்ஸார் பெயின்ட் டப்பாவை கையில் தாங்கியவாறு.. நடிகர் சந்தானம் ஒரு அட்வர்டைஸ்மன்ட் போர்டில் காட்சியளித்தார்..!! அருகிலேயே.. அரசியல்வாதி கெட்டப்பில்.. தொடையை தட்டிக்கொண்டு.. பவர்ஸ்டாரின் படப்போஸ்டர் ஒன்று..!!
"உன்னோட ஃபேவரிட் மூவி எது..??"
"ம்ம்... டைட்டானிக்..!!
அசோக் தனது மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தான். டைட்டான்..!!!
"ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??"
"ம்ம்... சோனியா..!!"
டேபிளில் இருந்த தனது மொபைலை பார்த்தான். சோனி எரிக்ஸன்..!!
அசோக்குக்கு இப்போது தலை சுற்றுவது மாதிரி இருந்தது..!! மூளை எல்லாம் சூடாகிப்போய்.. வெடித்துவிடுமோ என்றொரு உணர்வு..!! அப்படியே தளர்ந்து போய்.. தலையைப் பிடித்துக்கொண்டு.. சேரில் பொத்தென்று அமர்ந்தான்..!!
"ஹலோ ஹனிபனி..!!" என்ற வாசகங்களை தாங்கிய.. ஐடியா மொபைல் விளம்பர போர்ட் வேறு.. இப்போது புதிதாக அவனுடைய கண்ணில் பட்டது..!!
"வாட் என் ஐடியா ஸர்ஜி..!!!" என்று அபிஷேக் பச்சன் இவனை பார்த்து ஏளனமாக சிரித்தார்.
அசோக்கால் அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை..!! ஆயிரம் பேர் ஒன்றாக கூடி நின்று.. அதிகபட்ச டெசிபலில் வயலின் வாசிப்பது மாதிரியான ஒரு அதிர்வு அவனுக்குள்..!! பார்க்கிற திசை எல்லாமே.. மீரா தன்னைப்பற்றி சொன்ன பர்சனல் விஷயங்கள் அத்தனையும்.. பப்ளிக்காக பல்லிளித்தன..!! திரும்புகிற பக்கம் எல்லாம் மீரா தோன்றி..
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!"
"என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா..?? புத்ஹூ..!!" என்று இவனைப்பார்த்து கைகொட்டி சிரித்தாள்.
அசோக்குக்கு தலைக்குள் ஒவ்வொரு பாகமும் தீப்பற்றி எரிவது போல இருந்தது..!! கண்களை இறுக்க மூடிக்கொண்டு.. இரண்டு கைகளாலும் தலையை பிடித்தவாறு.. இடிந்து போய் அமர்ந்திருந்தான்..!! 'எப்படி எல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறாள்..?' என்று நினைக்க நினைக்க.. அவனுடைய இதயம் குமுறியது..!!
இந்த விளம்பர போர்டுகளை எல்லாம் அசோக் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான்..!! அவனும் விளம்பரத்துறையில் இருப்பதால்.. அவன் கண்ணில் படுகிற சிறு சிறு விளம்பர போர்டுகளை கூட மிக கவனமாக பார்ப்பான்..!! அட்வர்டைஸ்மன்ட் தீம்.. அவர்களது ப்ராண்ட் லோகோ.. உபயோகப்படுத்துகிற கேப்ஷன்ஸ்.. எல்லாமே அவனுடய கவனத்தை ஈர்க்கும்..!! 'அப்படி இருந்துமே இப்படி ஏமாந்திருக்கிறேனே.. கண்ணிருந்தும் குருடனாய் கவனியாது போனேனே..??' அவனுடைய உள்மனம் அழுது அரற்றியது..!! அதே நேரம்..
"டமார்..!!!"
என்று பலூன் வெடிக்கிற சப்தம் பெரிதாக கேட்டது..!! கண்ணுக்கு அழகாய் காட்சியளித்த அந்த இதய பலூன்.. கணநேரத்தில் இப்போது உடைந்து சிதறிப் போயிருந்தது..!!
"பலூனு.. என் பலூனு..!!!" கையையும் காலையும் உதறியவாறு, சூர்யா தரையில் புரண்டு கதறிக்கொண்டிருந்தான்.
"ஐயோ.. சூர்யா.. என்ன இது.. எந்திரி..!!" அவன் அம்மா பதறினாள்.
"பலூனு.. என் பலூனு..!!!"
"ப்ச்.. எந்திரின்றன்ல..?? மம்மி உனக்கு வேற பலூன் வாங்கி தரேன்..!!"
"எனக்கு அந்த பலூன்தான் வேணும்..!!"
சூர்யா 'ஓ..!!!!' என்று அழுது வீறிட்டான்..!! ஏமாந்து போன அந்த சிறு குழந்தையின் துயரத்தை பார்த்த அசோக்குக்கு.. அவனையும் அறியாமல் கண்களில் குபுக்கென்று நீர் கொப்பளித்து ஓட ஆரம்பித்தது..!! அவனுமே அந்த சூர்யாவின் நிலையில்தான் இருந்தான்.. அவனுக்குமே அதுமாதிரி அலறி அழ வேண்டும் போலிருந்தது..!!
அப்போதுதான் திடீரென அவன் மனதுக்குள் அந்த சந்தேகம்..!! நீர்த்திரையிட்ட கண்களை அவசரமாய் துடைத்துக்கொண்டு.. சரக் சரக்கென தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அந்த வளாகத்தில் மிச்சமிருக்கிற விளம்பர போர்டுகளை எல்லாம்.. ஒவ்வொன்றாக பார்த்தான்..!! அவனுடைய பார்வை பரிதாபமாக அலைபாய்ந்தது.. 'அந்த வார்த்தை மட்டும் என் கண்ணில் பட்டுவிடக்கூடாது கடவுளே..' என அவனது மனம் இரைந்து மன்றாடியது..!!
ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி.. வியர்த்த முகத்துடன்.. தவிக்கிற பார்வையுடன்.. கொதிக்கிற உள்ளத்துடன்.. தேடி தேடி பார்த்தான்..!! எங்குமே அந்த வார்த்தை அவனது கண்ணில் படவில்லை..!! இப்போது அவனது மனதுக்குள் மெலிதான ஒரு நிம்மதி பரவியது..!!
"அட்லீஸ்ட்.. அவ பேராவது.. உண்மையான பேரை சொன்னாளே..!!" என்ற அற்பத்தனமான நிம்மதி.
கண்களை துடைத்துக் கொண்டான். இதயம் இன்னும் திடும் திடும் என அடித்துக் கொண்டிருக்க.. டேபிளில் கையூன்றி.. முகத்தை மூடியவாறே மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தான்..!!
பிறகு அவன் இமைகளை மெல்ல பிரித்தபோது.. எதேச்சையாக அவனது பார்வையில் அது பட்டது..!! ரொம்ப ஸ்பெஷல் என்று மீரா சொன்ன அந்த டேபிளின்.. பக்கவாட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த வாசகம்..!!
"Meera Furnitures & Home Appliance..!!"
அவ்வளவுதான்..!! அந்த மாதிரி ஒரு வலியை.. ஏமாற்றத்தை.. வேதனையை.. அசோக் தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை..!! ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவனது இதயம்.. இப்போது சில்லு சில்லாக வெடித்து சிதற ஆரம்பித்தது..!!
அந்த பொண்ணு பெயர் ஊர் முகவரி பிடித்தவை பிடிக்காதவை என எல்லாமே பொய் தந்தை பொய் வேலை பொய் படிப்பு பொய் அடையாளம் பொய் பாவம் அஷோக்
ReplyDelete