சற்றே எமோஷனலாக ஒரு காதலை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். அதை தவிர இந்தக்கதையை பற்றி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம்.. மேலும் தகவல்கள் சொன்னால்.. உங்களுடைய வாசிப்பு அனுபவம் கெட்டு விட கூடிய வாய்ப்பிருக்கிறது..!! குட்டி குட்டியாக ஐந்தாறு எபிசோட்கள் வருமாறு எழுத நினைத்திருக்கிறேன்..!! வழக்கம் போல உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..!! நன்றி..!!
எபிஸோட் - I
குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.
கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும்.
மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!!