
அத்தியாயம் 8
காதலை மனதினில் பூட்டி வைக்காதீர்கள்..!! அது காதலென்று உறுதியானதுமே உரியவர்களுக்கு உணர்த்தி விடுங்கள்..!! காதலை உணர்தலை விட, உணர்த்துதல் மிகவும் கடினமான காரியம்தான்.. கவனமாக கையாள வேண்டிய விஷயம்தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!! ஆனால்.. காதலை உணர்த்த காலம் தாழ்த்தினால்.. இறுதிவரை அந்தக்காதலை, உங்கள் இதயக்கூட்டுக்குள் புதைத்து வைக்கும் பரிதாப நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்..!! அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான், அசோக்கின் மனதை இப்போது அசுரத்தனமாய் கவ்வியிருந்தது..!! அசோக் அந்த பயத்தையும், அதனால் எழுந்த பதட்டத்தையும் மனதுக்குள் மறைத்துக்கொண்டு, சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான்.
"ம்ம். ந..நல்லாருக்காரு திவ்யா..!! ஆ..ஆமாம்.. யா..யாரு இவரு.. எப்படி உனக்கு பழக்கம்..?"
"இவர் பேர் திவாகர்.. இ..இப்போ கொஞ்ச நாளா.. ஒரு ஒருமாசமாத்தான் பழக்கம்.. ஆன்லைன் மூலமா..!!"
"ஆன்லைன் மூலமாவா..?"
"ம்ம்.. எனக்கு சில ஈ-புக்ஸ் வேணும்னு ஒரு ஃபோரத்துல கேட்டிருந்தேன்.. இவர்தான் அதெல்லாம் என் ஈமெயிலுக்கு அனுப்பினாரு..!! அப்புறம் நான் தேங்க்ஸ் சொல்ல.. அவர் என்னைப் பத்தி கேட்க.. நான் அதுக்கு பதில் சொல்ல.. அப்படியே பழக்கம் ஆகிடுச்சு..!!"
"ஓ..!! ஃபோன்ல பேசிருக்கியா அவர் கூட..?"
"இல்லடா.. சேட் மட்டுந்தான்.. ஃபோட்டோவே இன்னைக்கு காலைலதான் அனுப்பினாரு..!!"
"ஆன்லைன்ல வர்ற ஆளுங்களை நம்புறது கொஞ்சம் கஷ்டம் திவ்யா.."
"சேச்சே.. இவர் அப்படி இல்ல அசோக்..!! ரொம்ப நல்லவர்..!!"
"ம்ம்.. என்ன பண்றார்..?"
"பிசினஸ்.. ஷேர் ட்ரேடிங்..!!"
"ம்ம்ம்.."
"எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நல்லா கலகலப்பா பேசுறாரு.. என் டேஸ்டும் அவர் டேஸ்ட்டும் நல்லா ஒத்துப் போகுது..!! எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. அவர் எழுதின கவிதைலாம் கொஞ்சம் அனுப்பிச்சிருந்தாரு.. எவ்வளவு அமேசிங்கா இருந்தது தெரியுமா..?? நான் தேடிட்டு இருந்தது இவரைத்தான்னு தோணுது அசோக்..!! இவரை லவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்..!! நீ என்ன நெனைக்கிற..?"





