Social Icons

மலரே என்னிடம் மயங்காதே - 1








சற்றே எமோஷனலாக ஒரு காதலை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். அதை தவிர இந்தக்கதையை பற்றி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம்.. மேலும் தகவல்கள் சொன்னால்.. உங்களுடைய வாசிப்பு அனுபவம் கெட்டு விட கூடிய வாய்ப்பிருக்கிறது..!! குட்டி குட்டியாக ஐந்தாறு எபிசோட்கள் வருமாறு எழுத நினைத்திருக்கிறேன்..!! வழக்கம் போல உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் - I

குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.

கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும்.

மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!!

மலரே என்னிடம் மயங்காதே - 2










எபிஸோட் – II

சரியாக ஒரு வருடம் கழித்து..!!

அதிகாலை..!! இதமான குளிருக்கு கதகதப்பாய், இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை..!! இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை..!! மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை..!! காகத்தின் கரைச்சலோ, காரின் இரைச்சலோ, காதுக்கு எரிச்சலாய் தோன்றும் அதிகாலை..!!

நான் இப்போதெல்லாம் காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டில் தினமும் காலை டிபன், இட்லி அல்லது தோசைதான். அதற்கு தொட்டுக்கொள்ள தினமும் தேங்காய் சட்னிதான். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டு வனஜா மாமி, மிக்ஸியில் சட்னி அரைப்பாள். மிக்ஸியின் முரட்டு ப்ளேடுகளுக்குள் சிக்கி, தேங்காய் சில்லுகள் அரைபடும் கரகர ஒலி, காற்றில் மிதந்து வந்து என் காதுகளில் மோதும். அந்த மாதிரி ஒரு ஒலி செவிப்பறையில் விழ நேர்ந்தால், அவன் கும்பகர்ணனாய் இருந்தாலும், அதற்கு மேலும் தூங்குவது சாத்தியமில்லாத ஒன்று.

இன்றும் அப்படித்தான்..!! மிக்ஸி சத்தம் என் உறக்கத்தை கலைத்தது. இமைகளை பிரிக்கும் முன்பாக, நான் என் இடது கையை நகர்த்தி எதையோ தேடினேன். தேடியது சிக்கியதும் என் விழிகளை மெல்ல திறந்தேன். வெண்முத்து பற்கள் தெரியுமாறு, புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கயல்விழி, காணக் கிடைத்தாள். கொஞ்ச நேரம் அவளது அழகு முகத்தை ஆசையாய் பருகியவன், பின்பு எனது விரல்களால் அவளது கன்னத்தை மெல்ல வருடினேன்.


மலரே என்னிடம் மயங்காதே - 3










எபிஸோட் - III

மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! 'இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..' என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு கொள்வதாயில்லை. கயலின் நினைவுகளை உதறவும் முயல்வதில்லை.

மலரும், பன்னீரும், அபியும்.. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருக்க.. எனக்குள்ளும் அந்த உற்சாகம் கொஞ்ச நேரம் உறைந்திருந்தது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்தபோது, அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கயல்.. மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.. கனமாக..!! கயலின் முகம் காணவேண்டும் என்று எனது கண்கள் துடித்தன.. அவளது குரல் கேட்கவேண்டும் என்று காதுகள் தவித்தன..!! 'முகம் காண புகைப்படம் இருக்கிறது.. குரல் எப்படி..' என்கிறீர்களா..?? சொல்கிறேன்..!!

எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்த சமயம். பன்னீருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருநாள் கயலை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்து மிரண்டவளை சமாதானம் செய்து, வெளியே கூட்டி சென்றேன். ஒரு ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். அவள் கைகழுவ சென்ற கேப்பில்.. அவளது ஹேன்ட் பேக் திறந்து.. அவளுடைய செல்போனை எடுத்து.. எனது நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து..!! அப்படித்தான் அவளுடைய செல்நம்பரை நான் அறிந்து கொண்டேன்..!!


மலரே என்னிடம் மயங்காதே - 4









எபிஸோட் – IV

ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??

கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!

அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!

மலரே என்னிடம் மயங்காதே - 5








எபிஸோட் – V

அன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தன. கண் மூடினால் கயலின் புன்னகை முகமும், கண் விழித்தால் மலரின் கண்ணீர் முகமுமே, திரும்ப திரும்ப விழித்திரையில் விழுந்து கொண்டிருந்தன. குழப்பமான கனவுகள் வேறு இடை இடையே..!!

டாக்டர் எழுதி தந்த மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு ஷ்யாம் அவசரமாக ஓடியது ஞாபகம் இருக்கிறது..!! 'கொஞ்சம் வலிக்கும்.. பொறுத்துக்கங்க..' என்று கையுறை மாட்டிக்கொண்டே ஒரு நர்ஸ் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது..!! 'என்னைக்கும் என்கூடதானடா வருவ..? இன்னைக்கு மட்டும் ஏண்டா தனியா போன..?' என்று பன்னீர் அழுகையின் இடையே அரற்றியது கனவில்லை என்று நினைக்கிறேன்..!! 'எனக்கு எதுவும் வேணாம் ஷ்யாம்.. நீங்க சாப்பிட்டு வாங்க..' என்று மலர் மூக்கை விசும்பிக்கொண்டே சொன்னது, நான் பாதி மயக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தது..!! அபி அர்த்த ராத்திரியில் 'வீல்....' என அலறி, அசந்து தூங்கிய என்னை விழிக்க வைத்ததும் மறந்து போகவில்லை..!!

விழித்துக்கொண்டதும்.. உடலெங்கும் ஏறியிருந்த வலியின் தீவிரம் உணர்ந்தேன். வலி தந்த வேதனையில் உழன்றேன். சுயநினைவு முழுமையாய் திரும்பாமல்.. சுவாதீனமும் இல்லாமல்.. கனவில் கண்ட பிம்பங்களின் தாக்கத்தில்.. 'கயல்.. மலர்.. அபி..' என மாறி மாறி ஏதோ பேரை சொல்லி.. புலம்பினேன்..!! தரையில் டவல் விரித்து படுத்திருந்த பன்னீருக்கு என் புலம்பல் ஒலி கேட்கவில்லை..!! சேரில் அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர், தன் உதடுகளை கடித்து முயன்றும் அடங்காமல், அவள் கண்களில் நீர் வெளிப்பட்டு கொட்டின..!!

நான் படும் வேதனையை நெடுநேரம் காண சகியாத மலர், அபியை தூக்கிக்கொண்டு வெளியே எழுந்து ஓடினாள்..!! வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வெளிர் நீல உடை அணிந்த நர்ஸுடன் வந்து சேர்ந்தாள்..!! அந்த நர்ஸ் வலி நீக்கும் மருந்தை.. ஊசியை செருகி.. என் உடலுக்குள் செலுத்த.. ஓரிரு நிமிடங்களியே நான் நிம்மதியாய் உறங்கிப் போனேன்..!! ஆழ்ந்த உறக்கம்..!!



tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...