Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 9


 





அத்தியாயம் 22

சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!! அகழி வந்து ஆதிராவுக்கு கிடைத்த உச்சபட்ச அதிர்ச்சி இதுதான் எனலாம்.. தங்கையை தேடவந்து கணவனை தொலைப்போம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை..!!

கணவனின் அணைப்பு தந்த கதகதப்புச்சூடு, அவளைவிட்டு இன்னும் நீங்கியிருக்காத நிலையிலே.. காற்றில் சூடமாய் அவன் கரைந்து போயிருந்ததை, அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்..?? முதல்நாள் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு, அவளைவிட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையிலே.. அடுத்தநாளே இன்னொரு பேரதிர்ச்சியை வாங்கிக்கொள்ள, அவளது இதயத்தில்தான் எத்தனை வலுவிருக்கும்..??

அதுவும்.. இன்றுகாலை அகழியைவிட்டு கிளம்பிவிட்டால்.. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இறுதிப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவள் நிம்மதியுற்றிருந்த வேளையில்.. இடியாக இப்படியொரு நிகழ்வு அவளது இதயத்தை இரக்கமில்லாமல் தாக்கினால்..?? அப்படியே உடைந்து.. அணுஅணுவாய் உதிர்ந்து.. சில்லுசில்லாய் சிதறிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!

முதல்நாள்தான் அந்த சிவப்பு அங்கி உருவம் மணிமாறனை தூக்கி சென்றதை கண்கூடாக பார்த்திருக்கிறாள்.. முன்பொருமுறை நீருக்கடியிலும், ஜன்னலுக்கு வெளியிலும் பார்த்த அந்த உருவத்தை, அப்போது மனபிரம்மை என்று ஒதுக்கியிருந்தாலும், இப்போது அவையெல்லாம் அப்பட்டமான நிஜம் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது..!!


எல்லாவற்றையும் நினைக்க நினைக்க.. அவளது இருதயத்தை ஒரு இனம்புரியாத பயம் வந்து கவ்விக்கொண்டிருந்தது.. அந்த உருவம் தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறது, தன்னை சீண்டிப்பார்க்கிறது என்று தோன்றியது.. அவளது புத்திக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு அமானுஷ்யத்தின் இரும்புப்பிடியை அவளால் தெளிவாக உணரமுடிந்தது..!!

பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து மிரண்டு போனவள், பதறியடித்து படிக்கட்டு இறங்கி கீழேவந்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியிடம், பதைபதைப்புடன் அந்தச்செய்தியை சொன்னாள்..!! ஆரம்பத்தில் வனக்கொடிக்கு அந்த விஷயத்தின் தீவிரம் சட்டென்று உறைக்கவில்லை..!!

"ஐயோ.. அழாத ஆதிராம்மா.. நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இருக்காது..!! தம்பி பக்கத்துலதான் எங்கயாது போயிருக்கும்.. இப்ப வந்துரும் பாரேன்..!!" என்று ஆதிராவை சமாதானப்படுத்தவே முயன்றாள்.

"இ..இல்லம்மா.. இல்ல.. அவர் வரமாட்டாரு.. அ..அவருக்கு ஏதோ ஆய்டுச்சு.. எ..என்னால நல்லா ஃபீல் பண்ணமுடியுது.. அவருக்கு என்னவோ ஆய்ருச்சும்மா..!!"

ஆதிராவின் கண்களில் அதற்குள்ளாகவே தாரைதாரையாய் கண்ணீர்..!! அந்த புத்தகமும் பட்டாம்பூச்சியும் அவளை வெகுவாக திகிலடையச் செய்திருந்தன.. அதனால்தான் அவளுடைய இந்த நம்பிக்கையில்லா பேச்சு..!! கணவனுக்கு ஏதோ ஆபத்து என்று அவளது காதல்மனது உணர்ந்துகொண்டது.. உள்ளத்தில் உறைந்திருந்த ஒருவித பதட்டம், அவளது உதடுகள் சிந்திய வார்த்தைகளிலும் நிறைந்திருந்தது..!!

"சொ..சொல்றதை கேளு ஆதிராம்மா.. தம்பிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. நீயா எதையாவது நெனச்சு பொலம்பாத..!! இ..இரு.. நான் இந்த கதிர்ப்பயல உடனே வரசொல்றேன்..!!"

வனக்கொடி சொல்லிவிட்டு டெலிஃபோன் நோக்கி ஓடினாள்.. ஆதிரா அப்படியே சோபாவில் சரிந்து அழ ஆரம்பித்தாள்..!!

ஐந்தே நிமிடங்களில் ஆதிராவின் வீட்டுக்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தான் கதிர்..!! வீட்டை பார்த்துக்கொள்ள தென்றலை பணித்துவிட்டு.. மற்ற மூவரும் காரில்ஏறி சிபியைத்தேடி கிளம்பினார்கள்..!! எப்போதையும் விட அதிவேகத்திலேயே காரை விரட்டினான் கதிர்.. அழுதுகொண்டே வந்த ஆதிராவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல்படுத்த முயன்றாள் வனக்கொடி..!!

ஒருமணிநேரம்.. ஒருஇடம் விடாமல் ஒட்டுமொத்த அகழியையையும் சலித்து முடித்திருந்தனர் மூவரும்.. சிபி சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் சல்லடை போட்டுத் தேடியிருந்தனர்..!! எங்குசென்று தேடினாலும் அவர்களுக்கு திரும்பத்திரும்ப கிடைத்தது என்னவோ.. ஏமாற்றம் ஒன்றுதான்..!! கோயில் வளாகம்.. கல் மண்டபம்.. மார்க்கெட் வீதிகள்.. டெலிஃபோன் பூத்.. தேயிலை எஸ்டேட்.. ஆற்றங்கரை புல்வெளி.. அவனுக்கு பழக்கமான சில நண்பர்களின் இல்லங்கள்..!!

சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!!

ஒவ்வொரு இடத்திலும் கணவனின் முகம்தேடி ஏமாந்துபோகும் ஆதிரா..

"நா..நான்தான் சொன்னேன்ல.. அவரு இங்க இல்ல.. அவருக்கு ஏதோ ஆய்ருச்சு..!!" என்று கண்ணீருடன் புலம்ப ஆரம்பித்து..

அடுத்து என்ன செய்வது என்று கதிரும் வனக்கொடியும், குழப்பமும் திகைப்புமாய் தவிக்கும்போது..

"வந்திருக்கக்கூடாது.. இந்த ஊருக்கு நான் வந்திருக்கவே கூடாது..!! தப்பு பண்ணிட்டேன்.. அவரு சொல்லச்சொல்ல கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! அவதான்.. அந்த குறிஞ்சிதான்.. எனக்கு தெரியும்..!!" என்கிற ரீதியில் பதைபதைப்புடன் பிதற்றி..

வேறுவழி எதுவும் தோன்றாமல், மூவரும் காரிலேறி வீட்டுக்கு திரும்புகையில்..

"ஐயோ.. கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற.. நான் என்ன பாவம் பண்ணினேன்..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!!!" என்று தலையில் பட்பட்டென அடித்துக்கொண்டு 'ஓ'வென பெருங்குரலில் அழுதாள்.

வீடு திரும்பியதுமே..

"அப்பாஆஆஆ..!!! அவரை காணோம்ப்பா..!!!"


என அலறியடித்துக்கொண்டு தனது தந்தைக்கு ஃபோன் செய்தாள்.. கண்ணீரும் கம்பலையுமாய் கணவன் காணாமல் போன செய்தியை அவருக்கு உரைத்தாள்..!! மகள் சொன்னதைக்கேட்டு, தணிகைநம்பியும் அப்படியே நிலைகுலைந்து போனார்.. 'என்ன நடக்கிறது அங்கே' என்பதுபோல, திகைத்துப்போய் சிறிதுநேரம் செயலற்று அமர்ந்துவிட்டார்..!! முதல்நாள்தான் மகள் மீதான தாக்குதல்.. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே இன்று மருமகன் மர்மமாக தொலைந்து போயிருக்கிறான்.. ஒன்றும் புரியவில்லை அவருக்கு..!! ஒருவழியாய் புத்தியை இழுத்துப் பிடித்து..

"இ..இங்க பாரும்மா ஆதிரா.. அ..அப்பா சொல்றதை கேளும்மா... நீ.. நீ ஒன்னும் கவலைப்படாத.. சிபிக்கு எதுவும் ஆகிருக்காது.. அவன் கண்டிப்பா திரும்ப கெடைச்சுடுவான்.. சரியா..?? அப்பா உடனே கெளம்பி அங்க வர்றேன்மா ஆதிரா.. அதுவரை திரவியத்தை பக்கத்துல வச்சுக்க..!! தைரியமா இரும்மா.. தைரியமா இரு.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. அழாத..!!" என்று ஓரளவு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்..!!

தொழில் விவகாரங்களில் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும்.. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தோழனின் உதவியைத்தான் முதலில் நாடினார் தணிகை நம்பி..!! மகளிடம் பேசிமுடித்த அடுத்த நொடியே.. திரவியத்தைத்தான் தொலைபேசியில் அழைத்தார்..!! இன்று காலை நடந்த இந்த புது விவகாரத்தை நண்பனிடம் உரைத்து.. தான் அகழி வரும்வரைக்கும் மகளுக்கு துணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்..!!

அதன்பிறகு.. ஒரு அரைமணி நேரத்துக்குள்ளாகவே.. ஆதிராவின் வீட்டுக்கு போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினார் திரவியம்.. அவருடன் கூடவே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! திரவியத்துக்கு குறிஞ்சி மீதான நம்பிக்கையும், பயமும் நிறையவே இருந்தாலும்.. கேள்விப்பட்ட சில தகவல்களை வைத்து, குறிஞ்சிதான் சிபியை கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று அவருக்கு தோன்றினாலும்.. முறைப்படியான காவல்த்துறை விசாரணையும் முக்கியம் என்று கருதியதாலேயே வில்லாளனை அழைத்து வந்திருந்தார்..!! குறிஞ்சியைத் தாண்டி வேறேதும் சாத்தியக்கூறுகள் இருந்தால்.. அவற்றை தப்பவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணம்..!!

"அங்கிள்..!!!!" அழுதபடி ஓடிவந்த ஆதிராவை,

"ஒன்னும் இல்லம்மா.. ஒன்னும் இல்ல.. அழாத.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. சீக்கிரமே திரும்ப வந்துடுவான்..!!" என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டார் திரவியம்.

நடந்த விஷயங்களை வனக்கொடியிடமே விசாரித்து தெரிந்து கொண்டார்..!! கண்களில் ஒருவித மருட்சியுடன் வனக்கொடி சொல்ல சொல்ல.. கவலையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் திரவியம், கவனமாக அவற்றுக்கு காது கொடுத்திருந்தார் வில்லாளன்..!!

விள்ளாளனிடம் நேற்றிருந்த முறைப்பும் விறைப்பும் இப்போது இல்லை.. இரவெல்லாம் தூக்கமில்லாமல் சோர்ந்து போயிருந்த அவரது கண்களோடு, அவருடைய முகத்திலும் பலவித குழப்பரேகைகளை காணமுடிந்தது..!! மேலதிகாரிகளின் அழுத்தம் ஒருபுறம் இருக்க.. அவரைச்சுற்றி நடக்கிற சம்பவங்களை பார்த்து, குறிஞ்சி பற்றிய தனது நம்பிக்கையின்மையை மறுபரீசிலனை செய்கிற நிலைமையில்தான் அவர் இருந்தார்.. மனதளவிலும் சற்றே தளர்ந்து போயிருந்தார்..!!

வனக்கொடியிடம் பேசிமுடித்தபிறகு.. அந்த வீட்டை ஒருமுறை கவனமாக சுற்றிப் பார்த்தார் வில்லாளன்.. அவருடன் உதவிக்கு சென்றிருந்தார் திரவியம்..!! கீழ்த்தளத்தின் எல்லா அறைகளையும் அலசினார்.. மாடிப்படியேறி மேல்த்தளத்தை ஒருமுறை சுற்றிவந்தார்..!! வீட்டுக்குள் அடங்கியிருந்த ரகசிய அறை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு.. அதற்குள்ளும் சென்று தீவிரமாக பார்வையிட்டார்..!!

பார்வையிட்டதன் பிறகு ஹாலுக்கு வந்த வில்லாளன்..

"கதவு, ஜன்னல்லாம் எதுவும் உடைஞ்சிருக்குற மாதிரி தெரியல.. வெளில இருந்து யாரும் உள்ள வந்திருக்க சான்ஸ் இல்லன்னுதான் தோணுது..!! போயிருந்தா இவராத்தான் போயிருக்கனும்..!!" என்று இயல்பான குரலில் சொன்னதை எல்லாம்,

"........................." எங்கோ ஒரு வெறித்த பார்வையுடன் கேட்டுக்கொண்டாள் ஆதிரா.

"நைட்டு தூங்குறப்போ கதவெல்லாம் லாக் பண்ணிட்டுத்தான தூங்குனீங்க..??"

"ஆ..ஆமாம்..!!"

"காலைல எந்திரிச்சு பாக்குறப்போ அவர் உங்க பக்கத்துல இல்ல..??"

"ம்ம்..!!"

"அப்புறம்.. வனக்கொடி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சொல்லிருக்கிங்க..!! அதுவரை என்ன பண்ணுனீங்க..??"

"இல்ல.. நான் எந்திரிக்கிறப்போவே வனக்கொடிம்மா வந்திருந்தாங்க..!!"

"ஓ..!! கதவெல்லாம் லாக் பண்ணிட்டு தூங்கினதா சொன்னீங்க.. அப்புறம் எப்படி அவங்க..??"

"அவங்கட்ட ஒரு சாவி இருக்கு..!!"

ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொல்ல.. இப்போது வில்லாளன் நெற்றியை சற்றே சுருக்கினார்.. அப்படியே திரும்பி வனக்கொடியை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தார்..!! அவருக்கு ஏற்கனவே வனக்கொடியின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.. இப்போது அவளை சந்தேகப்படும்படியான ஒரு சூழல் அமையவும், அவர் பார்த்த பார்வையில் ஒருவித கடுமையும், கூர்மையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது..!!

"இங்க வா..!! நீ எப்போ வீட்டுக்கு வந்த..??" வனக்கொடியை ஒருமையில் அழைத்து கேட்டார்.

"நா..நான்.. நான் வர்றப்போ.." பதற்றத்தில் வனக்கொடி தடுமாறிக் கொண்டிருக்கும்போதே,

"இன்ஸ்பெக்டர்..!!" இறுக்கமான குரலில் வில்லாளனை அழைத்தாள் ஆதிரா.

"ம்ம்.." ஆதிராவின் பக்கமாக திரும்பினார் வில்லாளன்.

"தயவு செஞ்சு அவங்கமேல சந்தேகப்படாதிங்க ப்ளீஸ்..!! அவங்க பார்வைதான் அப்படி இருக்கும்.. மத்தபடி ரொம்ப நல்லவங்க..!! அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்குலாம் காரணம் வேற ஆளு.. அது யார்னு எனக்கு நல்லா தெரியும்..!!"

"யா..யாரு..??"

"குறிஞ்சி..!!!!" ஆதிரா தீர்க்கமாக சொல்ல, வில்லாளனின் முகத்தில் ஒருவித கேலிப்புன்னகை.

"ஹஹா.. எப்படி சொல்றீங்க..??"

"தெரியும்.. என்னால ஃபீல் பண்ண முடியுது..!! இதுக்குலாம் காரணம் மனுஷங்க இல்ல.. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி..!!"

"ஓ..!! எதனால அந்த முடிவுக்கு வந்தீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??"

"நான் எவ்வளவு தெளிவா சொன்னாலும் அது உங்களுக்கு புரியாது.. உங்களால புரிஞ்சுக்க முடியாது..!!"

"கமான் ஆதிரா.. சொல்லுங்க ப்ளீஸ்..!! நீங்க சொன்னாத்தான என்னாலயும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..??"

"இல்ல இன்ஸ்பெக்டர்.. உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது..!! உங்க அக்கறைக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க கெளம்பலாம்..!!"

சொல்லிவிட்டு விருட்டென எழுந்து நடந்த ஆதிராவையே.. திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் வில்லாளன்..!! அதன்பிறகும் அந்தவீட்டில் தனது வேலை என்னவென்று புரியாதவராய்.. திரவியத்திடம் சொல்லிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து வெளியேறினார்..!!

ஆதிராவால் அழத்தான் முடிந்தது.. அதைத்தாண்டி எதையும் செய்கிற மனத்தெளிவு அவளுக்கு இல்லை..!! அமானுஷ்யமான ஒரு சக்தியை வென்றுமுடிப்பதற்கு திட்டம் தீட்டுகிற அளவுக்கு.. தளர்ந்துபோன அவளது மூளைக்கோ கிஞ்சித்தும் வலுவென்பது இல்லை..!! கண்கள் மட்டும் தாரைதாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன.. அகழி வந்து இந்த ஐந்தாறு நாட்கள் நடந்த சம்பவங்களையே, அவளது மனது திரும்ப திரும்ப நினைத்து வெந்துகொண்டிருந்தது.. கணவனின் ஆசைமுகத்தை மீண்டும் காண இயலுமா என்கிற கேள்வி, நொடிக்கொருமுறை அவளது இற்றுப்போன இருதயத்தில் அமிலம் வார்த்துக்கொண்டிருந்தது..!!

சிறிது நேரத்தில்.. முகிலனின் குடும்பத்தினர் விஷயத்தை கேள்விப்பட்டு ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.. முதன்முறையாக முகிலனும் அவர்களுடன் வருகை தந்திருந்தான்..!! ஊர்த்திருவிழாவை உற்சாகம் இல்லாமலே நடத்தி முடித்திருந்தவன்.. குடும்பத்து மனக்கசப்பை மனதில் கொள்ளாமல் அந்தவீட்டு வாசற்படி மிதித்தான்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை ஆறுதல்படுத்த முயன்றனர்.. ஆதிராவோ, ஆறுதலுக்கு அணுவளவும் மாறுதல் கொள்கிற நிலையில் இல்லை..!! முகிலன் தயங்கி தயங்கி பேசியதை மட்டும்.. கொஞ்சமாய் காதுகொடுத்து கேட்டுக் கொண்டாள்..!!

"எ..எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ஆதிரா..!! இ..இந்த மாதிரி ஒரு நெலமைல நீ இருக்குறப்போ.. உன்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சு.. அதான்.. நானாவே கெளம்பி அம்மாவோட வந்தேன்..!!"

"ம்ம்..!!"

"உ..உனக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்..!!"

"இல்லத்தான்.. உங்கமேலலாம் எனக்கு எந்த கோவமும் இல்ல..!!"

"ஹ்ம்ம்.. தாமிரா பண்ணின அந்த ஆராய்ச்சி எனக்கு பிடிக்கல.. அதை நீ திரும்ப தோண்டினதும் எனக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!! மத்தபடி உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு எந்த கோவமும் இல்ல..!! தாமிரா காணாமப் போனதுக்கு சத்தியமா நான் காரணம் இல்ல ஆதிரா..!!"

"ம்ம்..!! இ..இப்போ தெரியுது..!!"

"குறிஞ்சியைவிட.. குடும்பமும், குடும்ப மானமும் எனக்கு ரொம்ப முக்கியம் ஆதிரா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டேன்..!! நான் குடும்பம்னு சொன்னது.. உன்னை, தாமிராவை, சிபியை.. எல்லாரையும் சேர்த்துதான்..!!"

"பு..புரியுதுத்தான்..!!"

" எ..எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!! உனக்கு நான் ஏதாவது செய்யணும்னா சொல்லு.. செய்றேன்..!!"

ஆதிரா பதிலேதும் சொல்லவில்லை.. அமைதியாகவே இருந்தாள்..!! எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவதோ, கோபம்தோய்ந்த வார்த்தைகளை கொப்பளிப்பதோ.. எப்போதுமே முகிலனுக்கு எளிதான விஷயம்..!! இந்தமாதிரி ஒரு இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையில்.. கனிவாக, கருத்தாக பேசுவதெல்லாம் அவனுக்கு கைவராத காரியம்..!! இப்போதும் அப்படித்தான்.. மனதில் தோன்றியதை வெளிப்படையாக கொட்டிவிட்டு, ஓரமாய் நகர்ந்துகொண்டான்..!!

மைசூரில் இருந்து கிளம்பிய தணிகைநம்பி.. மேலும் சிறிது நேரத்தில் அகழிவீட்டை வந்தடைந்தார்..!! முகிலனின் குடும்பத்தினரை அவர் அங்கு எதிர்பார்த்திரவில்லை.. முதலில் சற்று திகைத்துப்போய்த்தான் நின்றார்.. பிறகு, எல்லோரையும் பார்த்து ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தார்.. கரங்களை கூப்பி வணக்கம் செய்தார்..!! பொங்கிவருகிற காட்டாற்று வெள்ளம், எதிர்ப்படுகிற பொடிப்பொடி தடைகளை எல்லாம், மூழ்கடித்து அழித்து செல்கிறது அல்லவா..?? அது மாதிரிதான்.. மகளுடைய வாழ்வில் நேர்ந்திருக்கிற பெருந்துயரம், உறவினர்களுடன் கொண்ட மனக்கசப்பை, தணிகைநம்பிக்கு மறந்துபோக வைத்திருந்தது..!! துக்கத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களை நன்றியுடன் பார்த்தவர்.. அழுதுகொண்டிருந்த மகளை நெருங்கி அன்பாக அணைத்துக் கொண்டார்..!!

தணிகைநம்பி வேறொரு எண்ணத்துடன் அகழி வந்திருந்தார்.. மகளை உடனடியாக மைசூர் அழைத்து செல்வதுதான் அது..!! ஆதிராவிடம் அந்த எண்ணத்தை சொன்னபோது.. அவள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை, முடியாதென மறுத்தாள்..!!


"இ..இல்லப்பா.. நான் அகழியை விட்டு வரமாட்டேன்..!!"

"சொல்றதை கேளுமா.. இந்த ஊர் உனக்கு வேணாம்.. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சரியாப்படல..!! உனக்கும் ஏதாவது ஒன்னுன்னா.. என்னாலயும், உன் அம்மாவாலயும் தாங்கிக்கவே முடியாதுமா..!! அவளும் என்கூட கெளம்புறேன்னா.. உன்ன கையோட கூட்டிட்டு வந்துடுறேன்னு சொல்லித்தான் அவளை அங்கேயே விட்டுட்டு வந்தேன்..!! கெளம்புமா.. நாம போயிறலாம்..!!"

"எப்படிப்பா..?? அவரை இப்படி இங்க தொலைச்சுட்டு.."

"போலீஸ் இருக்காங்க.. திரவியம் இருக்கான்.. நம்ம மாப்ள இருக்காரு.. சிபியை அவங்க தேடிக்கண்டுபிடிப்பாங்க..!! இப்போதைக்கு உன்னோட பாதுகாப்புதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமா படுதுமா.. அது மைசூர்லதான் கெடைக்கும்.. வாம்மா.. போலாம்..!!" கனிவுடன் தணிகைநம்பி சொல்ல, முகிலனும் அவருடன் சேர்ந்துகொண்டு,

"மாமா சொல்றது சரிதான்னு தோணுது ஆதிரா.. நீ இங்க இருக்குறது அவ்வளவு நல்லது இல்ல.. மாமாவோட மைசூர் கெளம்பு..!! சிபியை தேடுறதை நாங்க பாத்துக்குறோம்..!!" என்று ஆதிராவுக்கு அறிவுறுத்தினான்.

"இல்லத்தான்.. என் முடிவை நான் மாத்திக்கிறதா இல்ல..!!" உறுதியாக மறுத்தாள் ஆதிரா.

"பிடிவாதம் பிடிக்காத ஆதிரா..!!"

"இது பிடிவாதம் இல்லத்தான்.. வைராக்கியம்..!! அகழி வர்றதுல அவருக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. வேணாம் வேணாம்னு எவ்வளவோ சொன்னாரு..!! அதெல்லாம் கொஞ்சம்கூட காதுகுடுத்து கேட்காம.. அடம்புடிச்சு அவரை இங்க கூட்டிட்டு வந்தேன்..!! அப்படி கூட்டிட்டு வந்து.. இப்படி இந்த குறிஞ்சிட்ட அவரை பறிகுடுத்துட்டு.. நான் மட்டும் இங்க இருந்து கெளம்ப எனக்கு மனசு இல்ல..!! என்ன ஆனாலும் சரி.. அவர் இல்லாம அகழியை விட்டு ஒரு அடிகூட நான் எடுத்து வைக்க மாட்டேன்..!!"

ஆதிரா தீர்க்கமாக சொல்ல, அவளையே திகைப்பாக பார்த்தனர் தணிகைநம்பியும், முகிலனும்..!! அவளது வார்த்தைகளில் தெரிந்த உறுதி.. அவள் வரமாட்டாள் என்று உரக்க சொல்லின..!! அதை புரிந்துகொண்ட தணிகைநம்பியும், இப்போது சற்றே தளர்வான குரலில் சொன்னார்..!!

"எ..என்னம்மா ஆதிரா.. இப்படி சொன்னா அப்பா என்ன செய்றது..?? ஒருவருஷம் முன்னாடி தாமிரா.. இப்போ சிபி..!! எங்களுக்குன்னு மிஞ்சி இருக்குறது நீ மட்டுந்தானம்மா..?? உன்னை பத்திரமா பாத்துக்கனும்னு இந்த அப்பா நெனைக்கக்கூடாதா..??"

"என்னை புரிஞ்சுக்கங்கப்பா.. ப்ளீஸ்..!! அந்த குறிஞ்சி எங்கிட்ட விளையாடுறா.. எங்கிட்ட இருந்து என்னவோ எதிர்பாக்குறா.. அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்..!! எனக்கு இன்னும் நெறைய கேள்விகளுக்கு விடை தெரியலப்பா.. அதெல்லாம் தெரிஞ்சுக்குற வரைக்கும் இங்கிருந்து நான் நகர்றதா இல்ல..!!"

"எ..என்னம்மா சொல்ற நீ..?? எனக்கு புரியல..!!"

"தாமிராவுக்கு என்னாச்சுன்னு இன்னும் சரியா தெரியலப்பா.. மணிமாறன்தான் காரணமா இல்ல குறிஞ்சியான்னு இன்னும் தெளிவா புரியல..!! ஒருவேளை குறிஞ்சியா இருந்தா.. அவ மேல அவ்வளவு நல்ல அபிப்ராயம் வச்சிருந்தவ நம்ம தாமிரா.. குறிஞ்சிக்கு நடந்த கொடுமையை இந்த உலகத்துக்கு சொல்லனும்னு நெனச்சவ.. அப்படிப்பட்ட தாமிராவை ஏன் அந்தக்குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..?? தங்கச்சியை தூக்கிட்டு போனவ.. நான் ஒரு கஷ்டத்துல இருக்குறப்போ என்னை ஏன் வந்து காப்பாத்தணும்..?? என்னை காப்பாத்தினவ.. அடுத்தநாளே என் புருஷனை ஏன் தூக்கிட்டு போகணும்..??"

"..............................."

"எனக்கு எதுவும் புரியலப்பா.. எதுவும் புரியல..!! எவ்வளவோ யோசிச்சும் இந்த கேள்விக்குலாம்.."

சொன்னதை முடிக்காமலே பட்டென பாதியில் நிறுத்தினாள் ஆதிரா.. அவளுடைய மூளை திடீரென எதையோ கூர்மையாக யோசிக்க ஆரம்பித்தது..!! இரண்டு நாட்களுக்கு முன்பாக, இதே மாதிரியான ஒருகேள்வியை அவள் கேட்டபோது, அதற்கு செம்பியன் சொன்ன பதில் இப்போது ஞாபகத்துக்கு வந்தது..!!

"இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்'னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மால உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!"

அது ஞாபகத்துக்கு வந்ததுமே ஆதிராவின் முகத்தில் ஒரு சின்ன மாற்றம்.. அத்தனை நேரம் என்ன செய்வது என்றே விளங்காமல் இருண்டு போயிருந்த அவளது முகத்தில், லேசான ஒரு வெளிச்சக் கீற்று..!! மகளின் முகமாற்றத்தை கவனித்த தணிகைநம்பி,

"என்னம்மா.. என்னாச்சு..??" என்று கேட்க, ஆதிரா என்ன நினைத்தாளோ,

"நா..நான்.. நான் செம்பியன் அங்கிளை பாக்கணும்ப்பா..!!" என்றாள். அவளது குரலில் இப்போது ஒரு புதுவித நம்பிக்கை சிறிதளவு கலந்திருந்தது.

அத்தியாயம் 23

ஆதிரா செம்பியனை உடனடியாக நேரில் சென்று பார்க்கவில்லை.. முதலில் தொலைபேசியில்தான் அவரை அழைத்து பேசினாள்..!! அவருக்கு ஏற்கனவே சிபி காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது.. அதற்கான தனது வருத்தத்தை முதலில் தெரிவித்துவிட்டே, அழைப்பின் நோக்கம் பற்றி கேட்டார்..!! ஆவிகளைப் பற்றிய தனது புரிதலுக்கு உதவுமாறு ஆதிரா கேட்டுக்கொண்டாள்.. எப்படியாவது அந்த குறிஞ்சியை தேடிச்சென்று தனது கணவனை மீட்கவேண்டும் என்று சொன்னாள்..!! அதற்கு செம்பியன் சொன்ன பதில் இதுதான்..

"ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!"

"ஓ..!! அப்போ குறிஞ்சியை நம்மளத்தேடி வரவைக்க முடியுமா..??"

"முடியும்னுதான் நான் நம்புறேன்..!! வரவைக்கிறது மட்டும் இல்ல.. பேசவும் வைக்கலாம்.. குறிஞ்சி மனசுல என்ன நெனைச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்..!! அதுதான உனக்கு வேணும்..??"

"ஆமாம் அங்கிள்.. அதுதான் எனக்கு வேணும்..!! முடியுமா..??"

"முடியுதான்னு பாக்கலாம்.. முயற்சி செஞ்சு பாக்கலாம்..!!"

"எப்படி..??"

"சொல்றேன்..!!"

ஆவியை நேரில் வரவைத்து பேசுகிற ஒரு முறையைப்பற்றி செம்பியன் தொலைபேசியிலேயே ஆதிராவுக்கு விளக்கினார்.. அந்தமுறையில் தனக்கு இருக்கிற அனுபவத்தையும், நம்பிக்கையையும் பற்றி சொன்னார்.. ஆதிராவுக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை முயன்று பார்க்கலாம் என்று தெரிவித்தார்..!! அவர் விளக்கி சொன்னவிதம் ஆதிராவுக்கு நம்பிக்கையையும், திருப்தியையும் கொடுத்திருந்தது.. உடனே சம்மதித்தாள்.. தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்..!!

அன்று மாலை..!! ஆதிராவின் வீட்டிலிருந்து முகிலனின் குடும்பத்தினர் கிளம்பி சென்றிருந்தனர்.. ஃபேக்டரியில் ஏதோ பிரச்சினை என்று திரவியமும் கழன்றுகொண்டிருந்தார்..!! நீண்டநேர இறுக்கத்தை தாங்கமுடியாமல் தென்றலும், கதிருமே வெளியே சென்றிருக்க.. வீட்டில் இப்போது ஆதிரா, தணிகைநம்பி, வனக்கொடி மட்டுமே..!!

அந்த சமயத்தில்தான் செம்பியன் ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.. அவருடைய தோளில் பழுப்பு நிறத்தில் ஒரு பெரிய தோல்ப்பை..!! ஆதிராவும், தணிகை நம்பியும் அவரை வரவேற்று பேசினார்..!! செம்பியன் வீட்டை கொஞ்சம் சுற்றிப்பார்த்தார்.. ஒருசில ஏற்பாடுகளைப் பற்றியும், தேவைப்படக்கூடிய பொருட்களைப் பற்றியும், எல்லோரும் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும் பேசினார்..!!


"ரூம்ல சுத்தமா வெளிச்சம் இருக்கக்கூடாது.. ஆனா காத்தோட்டம் கொஞ்சம் இருக்கணும்..!! அந்த சீக்ரட் ரூம்தான் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.. அங்கேயே வச்சுக்கலாம்..!!"

"சரி ஸார்..!!"

"குண்டூசி கீழ விழுந்தாக்கூட சத்தம் கேக்குற மாதிரி.. அவ்வளவு அமைதியா இருக்கணும்..!! இந்த ரூம்ல இருந்து வர்ற சத்தம்கூட அந்த ரூம்ல கேட்க கூடாது..!! ஃபேன்லாம் ஆஃப் பண்ணிடுங்க.. அந்த வால்-க்ளாக்க ஸ்டாப் பண்ணிடுங்க.. டெலிஃபோன் லைனை கொஞ்சநேரம் கட் பண்ணி வைங்க.. செல்ஃபோன்லாம் ஸ்விட்ச்ஆஃப் பண்ணிடுங்க..!!"

"ம்ம்..!!"

"மெழுகுவர்த்தி வேணும்னு சொல்லிருந்தேன்.. வாங்கி வச்சிருக்கிங்களா..??"

"ம்ம்.. வாங்கியாச்சு..!!" சொன்ன தணிகைநம்பி தொடர்ந்து,

"நா..நானும் கூட இருக்கலாமா..??" என்று செம்பியனை கேட்டார்.

"இல்ல வேணாம்.. ஆதிரா மட்டும் போதும்..!! ஆளுங்க அதிகமானா ஆவிகளை வரவைக்கிறது கஷ்டம்..!!" என்ற செம்பியன் ஆதிராவிடம் திரும்பி,

"பால், காபின்னு ஏதாவது குடிச்சியாம்மா..??" என்று கேட்டார்.

"இ..இல்ல அங்கிள்.. காலைல இருந்து பச்சைத்தண்ணி கூட பல்லுல படல..!!"

"நல்லது..!! ஏதாவது பழம் சாப்பிடுறதுனா சாப்பிட்டுக்கோ.. மத்தபடி வயிறு காலியா இருந்தா ரொம்ப நல்லது..!!"

"எனக்கு சாப்பிட பிடிக்கல அங்கிள்.. எதுவும் வேணாம்..!!"

"சரி.. ஒன்னும் பிரச்சினை இல்ல..!! அப்புறம்.. இந்த ட்ரஸ் வேணாம்.. மாத்திக்கோ.. நான் போட்ருக்குற மாதிரி ஏதாவது லூஸா, மெல்லிசா ஒரு ட்ரஸ் போட்டுக்கோ..!!"

"சரி அங்கிள்..!!"

"தாலியைத்தவிர மிச்ச எல்லா நகைகளையும் கழட்டி வச்சிடு..!!"

"ம்ம்..!!"

"சீக்கிரம் ரெடியாகி வா.. ஆரம்பிச்சுடலாம்..!!"

பத்தே நிமிடங்களில் தயாராகி வந்தாள் ஆதிரா.. அவளும், செம்பியனும் அந்த நிலத்தடி நிலவறைக்குள் நுழைய, வெளியே இருந்து கதவை மூடி சாத்தினார் தணிகைநம்பி..!! செம்பியனின் கையில் அவர் கொண்டுவந்த தோல்ப்பை.. ஆதிராவின் கையில் ஒரு டார்ச் விளக்கு.. இருவரும் அந்த மரஏணியில் கவனமாக கீழிறங்கினர்..!!

"இதுக்கு முன்னாடி நீங்க குறிஞ்சியை இந்தமாதிரி வரவச்சு பேசிருக்கிங்களா அங்கிள்..??"

"இல்லம்மா.. முயற்சி செஞ்சு பாத்திருக்கேன்.. முடியல..!! மத்தபடி என் பாட்டி, அப்பா, பத்து வயசுல செத்துப்போன என் பையன்.. எல்லார்ட்டயும் பேசிருக்கேன்..!! எனக்கும் குறிஞ்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமப் போனதுதான் காரணமா இருக்கணும்..!! உன் விஷயத்துல அந்த பிரச்சினை இல்ல.. உன் புருஷனை அவ தூக்கிட்டு போயிருக்கா.. ரெண்டுபேருக்கும் ஒரு பெரிய சம்பந்தம் இருக்கு..!! அதான்.. குறிஞ்சியை வரவச்சு பேசுறது சாத்தியம்தான்னு சொன்னேன்..!!"

"ம்ம்..!!"

"ஆனா.. நூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியாதும்மா.. முயற்சி செஞ்சு பார்க்கப்போறோம்.. அவ்வளவுதான்.. அதை நல்லா ஞாபகம் வச்சுக்க..!!"

"புரியுது அங்கிள்..!!"

பேசிக்கொண்டே இருவரும் அந்த ரகசிய அறைக்குள் நுழைந்தார்கள்.. உள்ளே நுழைந்ததுமே அந்த புழுங்கல் நெடி..!! டார்ச் விளக்கின் வெளிச்சத்தில் உள்ளிருந்த பொருட்கள் எல்லாம் ஓரளவு தெளிவாக தெரிந்தன.. உடைந்த பழைய பொருட்கள், காலியான அட்டைப்பெட்டிகள்.. கட்டில், அலமாரி, மேஜை, நாற்காலிகள், அவற்றில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிராவின் பொருட்கள், உடைகள்..!!

செம்பியன் அந்த மரமேஜையை அறையின் மையமாக இழுத்து போட்டார்.. எதிர் எதிரே இரண்டு நாற்காலிகளை எடுத்துப் போட்டார்..!! இரண்டு நாற்காலிகளுக்கும் பின்புறமாக இரண்டு பெரிய மெழுகுவர்த்திகளை கொளுத்தி வைத்தார்.. அந்த மெழுகுவர்த்திகளில் இருந்து எழுகிற மங்கலான வெளிச்சம், மேஜையில் மெலிதாக பரவுமாறு..!!

"நல்லா வசதியா ரிலாக்ஸ்டா உக்காந்துக்கோமா..!!"

"ம்ம்.. சரி அங்கிள்..!!"

ஆதிராவும் செம்பியனும் எதிரெதிர் நாற்காலிகளில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து கொண்டார்கள்..!! மெலிதான குரலில் தொடர்ந்து பேசினார் செம்பியன்..!!

"மனசை ஒருமுகப்படுத்துறதுதான் இதுல ரொம்ப முக்கியம் ஆதிரா..!! உனக்கு வேறெந்த பிரச்சினை இருந்தாலும், அதெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கிவச்சுட்டு.. மனசுல எந்த சலனமும் இல்லாம, நம்பிக்கையா ஈடுபாட்டோட செய்யணும்..!!"

"புரியுது அங்கிள்..!!"

"ஆவி வந்ததும் அவசரப்படக்கூடாது.. பயப்படக்கூடாது.. பதட்டப்படக்கூடாது..!! உன்னோட உணர்சிகளை முழுமையா கட்டுப்படுத்திக்கணும்..!! ஆவிகிட்ட நிதானமா பேச ஆரம்பி.. உன்னோட கேள்விகளை தெளிவா சுருக்கமா கேளு.. உன் காதுக்குள்ள பதில் ஒலிக்கிறதை கவனமா கேட்டு, புரிஞ்சுக்க முயற்சி செய்..!!"

"ம்ம்..!!"

"நாம வரவைக்க நெனைக்கிற ஆவிக்கு சொந்தமான ஏதாவது ஒரு பொருளை கூடவச்சுக்கிட்டு பண்றது.. இன்னும் சக்தியை குடுக்கும்..!!"

செம்பியன் சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்திருந்த தோல்ப்பையை திறந்து அந்தப்பொருளை மேஜை மீது எடுத்து வைத்தார்.. அது.. ஒரு துருப்பிடித்த பழங்கால குறுவாள்..!! நூறு வருடங்களுக்கு முன்பு.. குறிஞ்சி இடுப்பில் செருகியவாறு குதிரையில் கிளம்பினாளே.. அதே குறுவாள்..!!

"இது குறிஞ்சி உபயோகப்படுத்தின கத்தினு சொல்றாங்க.. எனக்கு உறுதியா தெரியாது.. ஆனா முழுமனசா நம்புறேன்..!! என்னோட தாத்தா மூலமா இது எனக்கு கெடைச்சது..!!"

"ஓ..!!"

இப்போது செம்பியன் மேஜையின் மையத்தில் ஒரு கட்டி சாம்பிராணியை வைத்து.. அதன்மீது நெருப்பை கொளுத்தி புகையச் செய்தார்..!! பைக்குள் கைவிட்டு, உள்ளிருந்து ஒரு பெரிய க்ரிஸ்டல் பவ்லை வெளியே எடுத்தார்.. பளிங்கினால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு அகன்ற பாத்திரம்..!! மெலிதாக புகைவிட்டுக் கொண்டிருந்த சாம்பிராணியின் மீது அந்த பாத்திரத்தை கவிழ்த்து வைத்தார்..!!

"பழங்காலத்துல ப்ரான்ஸ்ல, ஆவிகளோட பேசுறதுக்கு பயன்படுத்தின முறைம்மா இது.. நாஸ்ட்ராடாமஸ் ஆரம்பிச்சு வச்சதா சொல்றாங்க.. ஸ்க்ரையிங்னு பேரு..!!"

"ம்ம்..!!"

"இந்த க்ரிஸ்டல் பவ்ல்.. உள்ள கசியிற அந்தப்புகை.. ஆவிக்கு சொந்தமான ஏதாவது ஒரு பொருள்.. பின்பக்கமா இருந்து வர்ற மங்கலான வெளிச்சம்.. நம்மளோட கட்டுப்பாடு, கான்சன்ட்ரேஷன்.. இதெல்லாம்தான் இந்தமுறைல முக்கியம்..!!"

"ம்ம்..!!"

"கையை கொடும்மா.. இப்படி ரெண்டு பக்கமும் வச்சுக்க..!!"

செம்பியன் ஆதிராவுடைய கைகள் இரண்டையும் பற்றி.. அந்த பளிங்கு பாத்திரத்தின் இரண்டுபக்கமும் வைத்துக்கொள்ள செய்தார்.. தானுமே தனது கைகளையும் அவ்வாறே வைத்துக் கொண்டார்..!!

"நேத்து மணிமாறன் வீட்ல பார்த்த அந்த உருவத்தை மனசுல நிறுத்திக்கோ.. அந்த உருவத்துட்ட பேசணும், பேசணும்னு திரும்ப திரும்ப மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இரு..!!"

"ம்ம்..!!"

"சொல்லிக்கிட்டே.. பவ்லை நல்லா உத்துப்பாரு.. பார்வையையும் மனசையும் நல்லா ஒருமுகப்படுத்திப் பாரு..!!"

"ம்ம்..!!"

"பாத்துக்கிட்டே இரு.. மனசுக்குள்ள அந்த உருவத்துகிட்ட வேண்டிக்கிட்டே பவ்லை பாரு..!! உன்னை சுத்தி இருக்கிற எல்லாத்தையும் மறந்துட்டு.. மொத்த கவனத்தையும் அந்த பவ்லுக்குள்ள எடுத்துட்டுப்போ..!!"

"ம்ம்..!!"

"உள்ள தெரியிற புகையை பாரு.. ஏதாவது ஒரு புள்ளியை கூர்மையா பாரு.. பாத்துக்கிட்டே இரு.. அந்தப்புள்ளியை தாண்டி ஒரு சூனியத்தை பார்க்க முயற்சி செய்..!!"

"ம்ம்..!!"

"எல்லாத்தையும் தாண்டி.. அந்தப்புள்ளில.. அந்த ஆவியோட உருவம் தெரியுதான்னு பாரு..!! பாத்துக்கிட்டே இரு...!!!"

"ம்ம்..!!"

செம்பியன் சொன்னதையெல்லாம் அச்சுபிசகாமல் அப்படியே பின்பற்றினாள் ஆதிரா.. அவர் சொன்னமாதிரியே, மனதுக்குள் அந்த உருவத்திடம் வேண்டிக்கொண்டு, மிகக்கூர்மையாக அந்த பளிங்கு பாத்திரத்திற்குள் கசிகிற புகையையே உற்றுப்பார்த்தாள்.. பார்த்துக்கொண்டே இருந்தாள்.. அந்த புகையையும் தாண்டி, இல்லாத ஒரு சூனியத்தை வெறித்தாள்..!! செம்பியன் தனது இமைகள் இரண்டையும் மூடிக்கொண்டிருந்தார்.. உதடுகளை அசைத்து ஏதோ மந்திரம் போல உச்சரித்துக்கொண்டே இருந்தார்..!!

பாத்திரத்திற்குள் மெலிதாக கசிந்திட்ட புகை.. மெல்ல மெல்ல அதை நிரப்பிக் கொண்டிருந்தது.. திரி திரியாய் கிளம்பிய புகை, இப்போது திரள் திரளாய் பாத்திரத்தை அடைத்திருந்தது..!! ஆதிரா தனது மனதையும் பார்வையையும் ஒருமுகப்படுத்தி, அவளது கவனத்தை ஒரே புள்ளியில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.. அந்த உருவத்தை காணவேண்டும், காணவேண்டும் என்று, தனக்குள் மீண்டும் மீண்டும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள்..!!

ஒருசில நிமிடங்கள்..!! ஆதிரா அந்த பளிங்கு பாத்திரத்தை பார்த்துக்கொண்டே இருக்க.. அறையின் தட்பவெட்பத்தில் இப்போது மெல்ல மெல்ல ஒரு மாற்றம்..!! அத்தனை நேரம் இருந்த ஒரு புழுக்கமான நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் அகல ஆரம்பித்தது.. வென்டிலேட்டர் வழியாக சிலுசிலுவென குளிர்காற்று உட்புகுந்து அந்த அறையை நிறைத்துக் கொண்டிருந்தது.. ஆதிராவின் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது..!!

ஆதிரா கவனத்தை சிதறவிடாமல் உற்றுப்பார்த்திருக்க.. செம்பியன் கண்கள் மூடி மந்திரம் உச்சரித்திருக்க.. அந்த அறைக்குள் இப்போது குப்பென்று அந்த வாசனை.. வாடிப்போனாலும் வாசம் போகாத மகிழம்பூவின் வாசனை..!!

அந்த வாசனை வந்து நாசியை தாக்கியதுமே.. தங்களது முயற்சியின் வெற்றியை ஆதிராவால் உணரமுடிந்தது..!! இருந்தாலும் தனது எண்ணங்களை அலைபாயவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. தொடர்ந்து அந்த சூனியத்தை வெறித்தாள்..!!

"ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்ஷ்..!!!!"

அறைக்குள் ஒரு அமானுஷ்ய ஓசை.. தரையில் கிடந்த புத்தகம் ஒன்று தடதடத்தது.. மேஜையில் இருந்த குறுவாள் மெலிதாக அசைந்தது..!! மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செம்பியன் ஆதிராவின் கைகளை இறுகப்பற்றினார்.. அதேநேரம், ஆதிரா வெறித்துக்கொண்டிருந்த அந்த சூனியப் புள்ளியில் பட்டென்று அந்த உருவம் தோன்றியது.. உடல் முழுதும் சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! ஒருமாதிரி கலங்கலாக தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவான பிம்பமாக மாறிக்கொண்டிருந்தது..!!

அந்த பிம்பத்தை பார்த்ததுமே ஆதிராவின் நாடித்துடிப்பு படக்படக்கென எகிற ஆரம்பித்தது.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொள்ள, விடாமல் அந்த பாத்திரத்துக்குள் வெறித்தாள்..!! அவளது இருதயம் தறிகெட்டு அடித்துக்கொண்டது.. உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது.. மார்புக்கூட்டுக்குள் ஒருவித இறுக்கம்.. நாசியில் ஏறிய மகிழம்பூவின் வாசனையால், மூளைக்குள் ஒருமாதிரி கிறுகிறுப்பு..!!

அப்போதுதான் அவளது காதோரமாய் அந்த குரல் ஒலித்தது.. கிசுகிசுப்பாக.. ஏக்கமாக.. அமானுஷ்யமாக..!! அவள் தங்கை தாமிராவின் குரல்..!!!!

"அக்காஆஆஆ..!!!"


அவ்வளவுதான்..!!!! ஆதிரா அப்படியே மிரண்டு போனாள்.. குறிஞ்சியை எதிர்பார்த்து காத்திருந்தவள், தங்கையின் குரலை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை..!! நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பெடுக்க.. நாற்காலியில் இருந்து படக்கென எழுந்தாள்..!! அவள் எழுந்த வேகத்தில் நாற்காலி தரையில் சரிந்து ஓடியது.. ஆதிரா தடுமாறிப்போய் கீழே விழுந்தாள்.. மரமேஜை கடகடவென ஆடியது.. பளிங்கு பாத்திரம் புரண்டு 'ச்சலீர்ர்ர்' என்று சப்தம் கிளப்பியது.. சுதாரித்துக்கொண்ட செம்பியன் அதிக சேதாரமில்லாமல் அந்த பாத்திரத்தை பற்றினார்..!! அவசரமாய் ஓடிவந்து ஆதிராவை தூக்கினார்..!!

"எ..என்னம்மா ஆதிரா.. என்னாச்சு..??" பதற்றமாக கேட்டார்.

"தா..தாமிரா.. தாமிரா.." அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திணறினாள் ஆதிரா.

"தாமிரா..??"

"தா..தாமிராவோட குரல்.."

"என்னது..??"

"தா..தாமிரா.. தாமிரா எங்கிட்ட பேசினா அங்கிள்..!!" ஒருவழியாக ஆதிரா சொல்லிமுடிக்க,

"தாமிராவா..????"

செம்பியன் குழப்பமும், திகைப்புமாய் பார்த்தார்..!! அவருக்கு எதுவும் புரியவில்லை.. அவரது முகம் ஒருமாதிரி வெளிறிப்போய் வெறுமையாக காட்சியளித்தது..!!

'இந்த ரூமை இப்போ யாரும் யூஸ் பண்றது இல்ல.. தாமிராதான் அப்பப்போ இங்க வந்து அடைஞ்சுப்பா..'

சற்றுமுன்பு தணிகைநம்பி சொன்னது நினைவுக்கு வர.. அந்த அறைக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தாமிரா சம்பந்தப்பட்ட பொருட்களையே, ஒருவித மிரட்சியுடன் பார்த்தார் செம்பியன்..!! என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஓரளவு அவருக்கு பிடிபட்டது.. ஆனால் அதுவும் முழுதாக தெளிவுபடவில்லை..!! தனது தங்கை ஆவியாக வந்து தன்னை அணுகியிருக்கிறாள் என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்திருந்தது.. அதேநேரம்.. பளிங்குப் பாத்திரத்துக்குள் தோன்றிய அந்த சிவப்பு அங்கி உருவத்தை நினைத்து அவளது சிந்தனையில் ஒரு குழப்பம்..!!

அந்த அறையின் தட்பவெட்பம் இப்போது பட்டென மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.. மகிழம்பூ வாசனை காணாமல் போயிருந்தது.. காற்றின் ஈரப்பதம் வற்றிப் போயிருந்தது.. அறைக்குள் மறுபடியும் அந்த அனல் காற்றும், புழுங்கல் நெடியும்..!!

ஆதிராவும் செம்பியனும் அந்த ரகசிய அறையைவிட்டு வெளியே வந்தனர்..!! இன்றே இன்னொருமுறை ஆவியை வரவழைப்பது சாத்தியமில்லாத காரியம் என்றார் செம்பியன்.. முடிந்தால் நாளை இன்னொருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்றுவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றார்..!! அவர் போனபிறகு.. உள்ளே நடந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சுருக்கமாக சொல்லிமுடித்தாள் ஆதிரா.. அவள் சொன்னதையெல்லாம் அதிர்ச்சியாகவும், நம்பமுடியாமலும் கேட்டுக்கொண்டிருந்தனர் தணிகைநம்பியும், வனக்கொடியும்..!!

அறைக்குள் நேர்ந்த நிகழ்வினால் ஆதிரா மிகவுமே தளர்ந்து போயிருந்தாள்.. அப்படியே சோபாவில் வீழ்ந்து எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வனக்கொடியும் தணிகைநம்பியும் ஆளுக்கொரு மூலையில் சோகமாக உறைந்திருந்தனர்..!!

தாமிரா காணாமல்போய் ஒருவருடம் ஆகிறது.. அவள் இன்னும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் மிக மிக குறைவு என்பது.. ஆதிரா முன்னமே அறிந்த ஒன்றுதான்..!! ஆனால்.. தங்கையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில்.. அவள் உயிரோடு இருக்கவும் சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது என்று.. ஆதிராவின் உள்மனதுக்குள் ஒரு நம்பிக்கைத்துளி எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தது..!! அந்த நம்பிக்கையும் இப்போது தகர்ந்து போயிருக்க.. அவளது இதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி..!!

சோபாவில் சுணங்கிக் கிடந்த ஆதிராவுக்கு.. சுவற்றில் அறையப்பட்டிருந்த தாமிராவின் புகைப்படம் ஒன்று, எதேச்சையாக பார்வையில் பட்டது..!! தங்கையின் மீதான பாசம் அவளது மனதுக்குள் சர்ரென ஊற்றெடுக்க.. அவளையும் அறியாமல் சோபாவைவிட்டு மெல்ல எழுந்தாள்.. அந்த புகைப்படத்தை நெருங்கினாள்..!! கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைச்சிரிப்பை சிந்திக்கொண்டிருந்த தாமிராவின் முகத்தையே.. சில வினாடிகள் அன்பொழுக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.. அவளது கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது..!!

தங்கையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா திடீரெனத்தான் அதை கவனித்தாள்.. அவள் ஏற்கனவே பலமுறை பார்த்த புகைப்படம்தான்.. இப்போதுதான் அந்தவிஷயம் அவளது புத்தியை சுருக்கென தைத்தது..!! புகைப்படத்தில் தாமிரா அணிந்திருந்த அந்த டி-ஷர்ட்.. அதில் அகலமாய் வாய் திறந்து கர்ஜித்துக் கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. அதன் கீழே பெரிதாக மின்னிய அந்த வாசகம்..!!

"SAVE THE TIGERS..!!"

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் சோர்ந்து போயிருந்த ஆதிராவின் மூளை, இப்போது படக்கென விழித்துக்கொண்டது.. தாமிராவோடு தொடர்புடைய பழைய சம்பவங்களை பரபரவென மனதுக்குள் ஓட்டிப்பார்த்தது..!!

"ப்ச்.. சாப்பிட்டுட்டு போகட்டுமே விடு.. ஏன் விரட்டுற..??" - மொட்டைமாடி வடகத்தை, கொத்த வந்த காகத்தை, ஆதிரா விரட்டியடித்தபோது, அக்காவை கடிந்துகொண்டு தாமிரா சொன்னது.

"இனிமே அதை வளக்குறேன் இதை வளக்குறேன்னு எதையாவது வீட்டுக்கு தூக்கிட்டு வா.. அப்ப இருக்கு உனக்கு.. கை ரெண்டையும் வெட்டி அடுப்புல வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!" - தாமிரா பத்து வயது சிறுமியாக இருந்தபோது, அவள் ஆசையாக வளர்த்த முயல் இறந்துபோக, அந்த சோகத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடந்தவளை, அவளது அம்மா பூவள்ளி திட்டி தீர்த்தது.

"வாவ்...!! எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!" - டிவியில், சேற்றுக்குள் கிடந்து கர்ணகொடூரமாக வாயைப்பிளந்த முதலையை, கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவாறு தாமிரா சொன்னது.

டிவி சம்பவம் ஞாபகம் வந்ததும் ஆதிராவின் மூளையில் இன்னொரு பளிச்..!! அவசரமாய் ஓடிச்சென்று, ரிமோட் தேடி எடுத்து, டிவியை ஆன் செய்தாள்..!! அதில் ஓடிய சேனலை தவிர்த்து வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. முடியவில்லை.. இந்த ஐந்தாறு நாட்களாக ஓடுகிற அதே சேனல்தான் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.. அனிமல் ப்ளானட்..!! ஆதிராவின் மனதுக்குள் மீண்டும் ஒரு ஃப்ளாஷ்பேக்..!!

"ப்ளீஸ்க்கா.. மாத்துக்கா.. கொஞ்சநேரம்..!!" - அக்காவிடம் கெஞ்சினாள் தாமிரா.

"போடி.. மாத்தலாம் முடியாது போ..!! சும்மா எந்த நேரம் பாத்தாலும்.. மலைப்பாம்பு, கருங்கொரங்கு, காண்டாமிருகம்னு.. ச்சை..!! இனிமே நான் வீட்ல இருக்குறப்போ நோ அனிமல் ப்ளானட்..!!" - திமிராக மறுத்தாள் ஆதிரா.

"ப்ளீஸ்க்கா.. ப்ளீஸ்.. என் செல்ல அக்கால..??"

"முடியாதுன்னா முடியாதுதான்.. போ..!!"

அத்தனை நிகழ்வுகளுமே, தாமிராவுக்கு பறவைகள், விலங்குகள் மீது இருந்த அன்பையும், ஆர்வத்தையும் தெளிவுபடுத்துகிற மாதிரியான நிகழ்வுகள்..!!


'அப்படியானால்..?? அப்படியானால்..??' - யோசிக்க யோசிக்க, ஆதிராவுக்கு இப்போது சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் அடுத்தடுத்து மனதுக்குள் முண்டியடித்தன.

'ச்சிலீர்ர்ர்' என்ற சப்தத்துடன் காரில் வந்து மோதிய காகம்.. மாத்ரியோஷ்கா பொம்மையை அவளது கைகளில் மாட்டவைத்து, மாயமாய் மறைந்து போன அந்த முயல்.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே காட்டுவிலங்குகள் சூழ பார்த்த அந்த உருவம்.. அவள் மீது எச்சம் போட்டுவிட்டு 'விர்ர்ர்ர்'ரென விரைந்த செங்கால்நாரை.. சிவப்புமையை சிந்தவைத்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடிய அந்த அணில்.. மணிமாறனை துவம்சம் செய்த காட்டுப்புலி.. சிபியின் போர்வைக்குள் இருந்து வெளிப்பட்டு சிறகடித்து பறந்த பட்டாம்பூச்சி..!!

'அப்படியானால்..?? அப்படியானால்..?? நான் பார்த்த அந்த சிவப்பு அங்கி உருவம் தாமிராவா..?? ஏன் அவ்வாறு குறிஞ்சியின் அடையாளத்துடன்..?? அவள்தான் இத்தனை நாளாய் என்னை சீண்டிப் பார்த்ததா..?? சிறுவயது முதலே விளையாட்டுப் பெண்தானே அவள்.. ஆவியான பிறகு.. பறவை, விலங்குகளுடன் சேர்ந்துகொண்டு அக்காவுடன் விளையாடுகிறாளா..?? ஆனால் எதற்காகாக..?? என் மீது எதுவும் கோபமா..?? இல்லையே.. கோபமிருந்தால் மணிமாறனிடம் இருந்து என்னை ஏன் காப்பாற்ற வேண்டும்..?? என்னை காப்பாற்றியவள் ஏன் என் கணவரை தூக்கி செல்லவேண்டும்..?? ஒருவேளை.. என்னை காப்பாற்றியது மட்டுந்தான் தாமிராவோ.. என் கணவர் காணாமல் போனதற்கு வேறேதும் காரணம் இருக்குமோ..?? என்னிடம் ஏதாவது சொல்ல நினைக்கிறாளா அவள்..??'

சடசடவென மனதுக்குள் பொங்கிய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கும் முன்னரே.. அவள் மூளைக்குள் இப்போது இன்னொரு மின்னல் கீற்று..!! அந்த யோசனை சுருக்கென்று அவளது புத்தியை தைத்ததுமே.. மீண்டும் அவளிடம் ஒரு பரபரப்பு.. அவசரமாய் படிக்கட்டுக்கு ஓடினாள்.. படபடவென படியேறி அவர்களது அறைக்கு வந்தாள்..!!

கணவனின் லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.. பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த மெமரிசிப்பை லேப்டாப்பில் பொருத்தினாள்.. ஃபைலை திறக்க பாஸ்வேர்ட் கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் சரசரவென டைப் செய்தாள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே..!!" - 'kannamoochirere' என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல்.

படக்கென திறந்துகொண்டது அந்த ஃபைல்.. உள்ளிருந்த அந்த ஃபோல்டர் பார்வைக்கு வந்தது.. 'PRIVATE' என்கிற பெயருடன்..!! அவசரமாக அதை க்ளிக் செய்து திறந்து பார்த்தாள் ஆதிரா..!!

தாமிரா குறிஞ்சியை பற்றி செய்த ஆராய்ச்சியின் மொத்த வடிவமும் உள்ளிருந்தது.. நிறைய வேர்ட் டாகுமன்ட்கள், புகைப்படங்கள், ஒரு சில ஆடியோ ஃபைல்கள்..!! எல்லாமே.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரை, அதற்கான சான்றுகள், விளக்கப்படங்கள், முக்கியமான சிலரது வாக்குமூலங்கள்..!! புத்தகமாகவோ, தொடர் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கான எல்லா வேலைகளையும் பக்காவாக செய்து முடித்திருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!

ஆதிரா சிறிது நேரம் செலவழித்து.. தாமிராவின் ஆராய்ச்சி கட்டுரையை வாசித்து பார்த்தாள்..!! குறிஞ்சியைப் பற்றி தாமிரா மனமுருக பேசிய ஒரு ஆடியோவை ஹெட்ஃபோன் மாட்டி கேட்டாள்..!! வாசிக்க வாசிக்க.. பார்க்க பார்க்க.. கேட்க கேட்க.. ஆதிராவுக்கு தங்கையின் மீது ஒரு பெருமிதம் பொங்கியது.. குறிஞ்சியின் மீது ஒரு பரிதாபம் கொப்பளித்தது..!!

ஹெட்ஃபோனை கழட்டி வைத்த ஆதிரா.. சிறிது நேரம் அப்படியே செயலற்றுப்போய் அமர்ந்திருந்தாள்..!!

'இதைத்தான் தாமிரா என்னிடம் சொல்ல நினைத்தாளா..?? அந்த முயலை அனுப்பி மெமரி சிப்பை என்கையில் சிக்க வைத்தாளா..?? அவ்வப்போது 'கண்ணாமூச்சி ரே ரே' என்று எனக்கு நினைவுபடுத்தினாளா..?? தான் முடிக்காமல் விட்டதை.. ஆவியான பிறகு அக்காவின் துணைகொண்டு முடிக்க நினைத்தாளோ..?? என்ன செய்யலாம் இப்போது..??'

ஆதிரா நீண்ட நேரமெல்லாம் குழம்பவில்லை.. உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தாள்..!! கணவனின் செல்ஃபோனை எட்டி எடுத்தாள்.. அதிலிருந்த நாவரசுவின் நம்பருக்கு கால் செய்தாள்..!! சிபியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தவரை சீக்கிரமே சமாளித்து.. தான் இப்போது கால் செய்திருப்பதன் காரணத்தை சொன்னாள்..!! அந்த ஆராய்ச்சிக்கட்டுரை எப்படியாவது அச்சில் ஏறவேண்டும் என்ற தன் ஆசையை சொன்னாள்.. அவரும் நிச்சயமாய் நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி தந்தார்..!!

ஆதிரா அவரிடம் ஈ-மெயில் முகவரி வாங்கிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்.. ஆராய்ச்சி கட்டுரை மொத்தத்தையும் அப்படியே அந்த ஈ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தாள்..!! என்னவென்று புரியாத ஒருவகை நிம்மதி, அவளது மனதுக்குள் இப்போது பரவ ஆரம்பித்ததை உணர்ந்தாள்..!!

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்.. தனது கைபேசியை எடுத்து முகிலனுக்கு கால் செய்தாள்..!! ரிங் சென்றது.. கால் பிக்கப் செய்யப்பட்டதுமே..

"ஹலோ..!!" என்றாள்.

"சொல்லு ஆதிரா..!! எ..என்ன.. இந்த நேரத்துல..??"

"ஒ..ஒன்னுல்ல.. அ..அந்த ஆராய்ச்சி கட்டுரையோட காப்பி எனக்கு கெடைச்சிடுச்சு அத்தான்..!!"

"ஓ..!!" - அடுத்தமுனையில் முகிலன் அதிர்ந்துபோவது அப்பட்டமாக தெரிந்தது.

"அதை மைசூருக்கு அனுப்பிருக்கேன்.. சீக்கிரமே பப்ளிஷ் ஆகப் போகுது..!!"

"எ..என்ன ஆதிரா இது.. என்ன காரியம் பண்ணிட்ட நீ..?? ந..நம்ம குடும்ப கௌரவத்தை பத்தி கொஞ்சமாவது.." முகிலன் ஏமாற்றமாக தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்த ஆதிரா..

"படிக்கிறப்போவே நெஞ்சு பதர்ற ஒரு கொடுமையை.. பணத்திமிர்ல சூழ்ச்சியா செஞ்சுமுடிச்ச ஒரு அக்கிரமத்தை.. ஒரு அப்பாவிப் பொண்ணை, ஒரு ஊரே சேர்ந்து கொளுத்தின கொடூரத்தை.. அந்த உண்மையை இத்தனை நாளா மூடிமறைச்ச அநியாயத்தை.. குடும்ப கௌரவம் பாத்துக்கிட்டு இன்னும் மூடிமறைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு அத்தான்..!!" என்று முன்பொருமுறை தாமிரா தனக்கு சொன்னதை, இப்போது அவனுக்கு சொன்னாள்.

"..........................." - அடுத்த முனையில் ஒரு இறுக்கமான மௌனம்.

"எனக்காக ஏதாவது செய்யனுமான்னு காலைல கேட்டிங்களே.. உண்மைலயே உங்களுக்கு என் மேல அன்பிருந்தா.. தயவு செஞ்சு இந்த ஆராய்ச்சிக்கட்டுரை நல்லபடியா வெளிய வரவிடுங்க அத்தான்.. எந்த பிரச்சினையும் பண்ணாதிங்க.. என் தங்கச்சியோட கடைசி ஆசை அத்தான்.. ப்ளீஸ்..!!!!"

கெஞ்சலாக சொல்லிவிட்டு, முகிலனின் பதிலைக்கூட எதிர்பாராமல் காலை கட் செய்தாள் ஆதிரா..!! பேசிமுடித்தவள் சிறிது நேரம் அப்படியே சிலைபோல உறைந்திருந்தாள்.. பரபரப்பாய் இருந்த மனதை இப்போது ஒரு வெறுமை வந்து நிறைத்திருக்க, என்ன செய்வதென்று எதுவும் தோன்றாதவளாய், அந்த லேப்டாப் திரையையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!

அப்போதுதான் திடீரென அவளது பார்வையில் அது பட்டது.. அந்த 'PRIVATE' ஃபோல்டருக்குள் அடங்கிப் போயிருந்த இன்னொரு ஃபோல்டர்..!! அத்தனை நேரமாய் ஆதிரா அந்த ஃபோல்டரை கவனிக்கவில்லை.. இப்போது அதை பார்க்க நேர்ந்ததும் அவளுக்குள் மீண்டும் ஒரு பதட்டம்..!!

'இதுல எதும் முக்கியமான ஃபைல்ஸ் இருக்குமோ.. இதை அனுப்பாம விட்டுட்டமே..??'

என்று மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு.. அவசரமாக அந்த ஃபோல்டரை திறந்து பார்த்தாள்..!! உள்ளே நிறைய புகைப்படங்கள்.. க்ளிக் செய்தாள்.. முதல்படத்தை பார்த்ததுமே அவளது மூளைக்குள் ஒரு சுருக்க்க்...!!!! அடுத்தடுத்த படங்களை பார்க்க பார்க்க.. கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்றாள்.. கண்ணால் காண்பதை நம்பமுடியாமல் அவளது இமைகள் அகலமாய் விரிந்துகொண்டன..!! அவளது மூளையை யாரோ சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போலிருந்தது.. இருதயத்தை ஆயிரக்கணக்கான ஊசிக்கற்றைகள் ஒரேநேரத்தில் துளைப்பது போல ஒரு உணர்வு..!! விக்கித்துப்போய் லேப்டாப் திரையை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..!!

லேப்டாப்பில் இருந்து பார்வையை நகர்த்தாமலே.. நடுநடுங்குகிற விரல்களால் தனது கைபேசியை எட்டி எடுத்தாள்.. தடுமாற்றத்துடன் அந்த கான்டாக்டை கண்டுபிடித்து கட்டைவிரலால் டயல் செய்தாள்..!! எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்.. அவளது பார்வை இன்னும் லேப்டாப்பில் தெரிந்த ஃபோட்டோவிலேயே மிரட்சியாக நிலைத்திருந்தது..!!

"சொல்லுங்க ஆதிரா..!!" - அடுத்த முனையில் இருந்து ஒலித்தது கதிரின் குரல்.

"உ..உங்ககிட்ட.. ஒ..ஒன்னு கேக்கணும் கதிர்.." ஆதிராவின் குரலில் எக்கச்சக்க நடுக்கம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் திணறலாகவே பேசினாள்.

"எ..என்னாச்சு.. எ..என்ன கேக்கணும்..!!" கதிரின் குரலிலும் இப்போது ஒரு குழப்பம்.

"எ..என் தங்கச்சியை நீங்க லவ் பண்ணுனீங்கல்ல..??"

"ஆமாம்..!!"

"அ..அவ.. அவளும் உங்களை லவ் பண்ணினாளா..??" ஆதிரா கேட்டுமுடித்த அடுத்த நொடியே, படபடவென பதில் சொன்னான் கதிர்.

"என்ன ஆதிரா இப்படி கேக்குறீங்க.. தாமிரா அதெல்லாம் உங்கட்ட சொல்லலையா..?? அவளுக்கு எப்போவுமே என் மேல லவ் இல்லைங்க.. நான் மட்டுந்தான் அவளை லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இட்ஸ் ஒன் சைட்..!! நான் என் லவ்வை அவகிட்ட சொன்னப்போ.. அவ வேற யாரையோ லவ் பண்றதா சொல்லி, என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன்னுட்டா..!! பட்.. என்னை பொருத்தவரை அவதான் இன்னும்.." கதிர் சொல்ல சொல்ல, ஆதிராவின் இதயத்துடிப்பு இன்னும் இன்னும் எகிறிக்கொண்டே சென்றது.

"அ..அவ.. யா..யாரை லவ் பண்றேன்னு சொன்னாளா..??"

"இல்லையே.. எவ்வளவோ கேட்டேன்.. சொல்ல மாட்டேன்னுட்டா..!! ஆமாம்.. இதெல்லாம் ஏன் இப்போ கேக்குறீங்க..??"

"இ..இல்ல.. ஒ..ஒன்னுல்ல..!! கட் பண்ணிடுறேன்..!!"

காலை கட் செய்து கைபேசியை விட்டெறிந்தாள் ஆதிரா.. லேப்டாப் திரையையே மீண்டும் மிரட்சியாக வெறித்தாள்..!! அதில்.. அந்த ஃபோட்டோ.. எடுக்கும்போது ஆதிரா, சிபி, தாமிரா என்று மூவரும் ஒருவர் கன்னத்தில் மற்றொருவர் கன்னத்தை வைத்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. இப்போது அதில் ஆதிராவின் பாகம் கத்தரிக்கப்பட்டிருக்க.. சிபியும், தாமிராவும் மட்டும் கன்னத்தை தேய்த்தவாறு, வெண்பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தார்கள்..!!

 

8 comments:

  1. excellent boss... pls continue..

    ReplyDelete
  2. உங்க எல்லா கதைகளையும் நான் படிச்சுட்டேன் . சூப்பர் 27 ஸ்டோரீஸ் . இது மாதிரி வேற எதாவது கதைகள் எதாவது இருக்க ? இருந்த சொல்லுங்க. தொடரட்டும் உங்கள் சேவை & திறன் .

    ReplyDelete
  3. awesome story screw...unexpected twists...last time na konjam mistakes iruku nu sonen,,,but i take it back now...sorry for that..and very great appaluse for this update

    ReplyDelete
  4. screw...stort is super awesome...sema twists... but one doubt...( story ah storya matuum paruda nu kuda neenga nenaikalam...but my doubt ah na ketukurene..) reply yes or no plz

    ReplyDelete
  5. சான்சே இல்ல சார்.......
    திடீர்னு ட்விஸ்ட் வச்சது Super. .....
    நல்ல ஒரு திகில் படம் பாக்கும் feel இருந்தது.....
    We expect your next post quickly. .....

    ReplyDelete
  6. super story boss!!!!!!!! indha situation la indha part a mudichathu konjam yaemattram dhan but last neenga yealudina 5 stories yum exceptionally awesome ippo vara tamil movies vida unga stories super ah irruku!!!!!! neengalum yeadavadhu movies try pannunga boss mukkiyam ( anbulla ratchsi) romba interesting ah irundhuchu!!!!!!!!!!! quick ah next post podunga waiting for it eagerly!!!!!!!!!!!

    ReplyDelete
  7. Amazing post with lots of usefull information. Well done!. Keep Posting check out

    similar website like this..
    hacksaw blades manufacturing pakistan

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...