Social Icons

கண்ணாமூச்சி ரே ரே - 11







அத்தியாயம் 25

புயலடித்து ஓய்ந்த பூமியென ஆகிப்போயிருந்தது ஆதிராவின் பூப்போன்ற நெஞ்சம்.. சேதாரத்தின் சுவடுகள் ஏராளமாய் காணப்பட்டாலும், அதையும் தாண்டி ஒரு அமைதியையும் அவளால் உணர முடிந்தது..!! மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் இப்போது மறைந்து மங்கிப்போயிருக்க.. இனி செய்வதற்கென்று இருப்பது ஒன்றே ஒன்றுதான் என்பது தெளிவாக அவளுக்கு தெரிந்தது.. அந்த தெளிவுதான் அவளது மனதில் நிலவிய அந்த மயான அமைதிக்கும் காரணம்..!!

இறந்துபோன தங்கையுடன் இறுதியாய் ஒரு விளையாட்டு விளையாடிப் பார்ப்பதைத் தவிர.. தொலைந்துபோன கணவனை உயிருடன் மீட்பதற்கு வேறேதும் வழியிருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.. வேதனையுடன் தங்கையின் அந்த சவாலை ஏற்றிருந்தாள்..!! என்ன மாதிரியான சவால் என்றெல்லாம் அவளுக்கு புரியவில்லை.. எதுவாயிருந்தாலும் அதை சந்தித்தே தீரவேண்டும் என்று மனதுக்கு மட்டும் வலுவேற்றிக் கொண்டிருந்தாள்..!!

நிலைகுத்திப்போன பார்வையுடன்.. உயிரும் உணர்வுமற்ற ஜடம் போல.. அசைவேதுமின்றி படுக்கையில் அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் ஆதிரா..!! அவளது மூளை மட்டும் இன்னொருபக்கம் சுறுசுறுப்பாய் ஏதேதோ யோசித்துக்கொண்டிருக்க.. ஆவியென அலைந்து திரிகிற தாமிராவின் எண்ணத்தினையும், விருப்பத்தையும்.. அவளால் இப்போது ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது..!!



'தாமிராவுக்கு என்மீதும், என் கணவர்மீதும் நிச்சயமாக கோபமிருக்கிறது.. அது நியாயமான கோபம்தான் எனலாம்..!! தனது உயிரை பலிகொடுத்துவிட்டு.. இவர்கள் மட்டும் இன்பம் சுகிக்கிறார்களே என்பது மாதிரியான கோபமாக அது இருக்கலாம்..!! எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஒருமாதம்வரை அமைதியாக இருந்தவள்.. அவருடன் நான் முதலுறவு கண்டு புதுவாழ்க்கை தொடங்கிய அன்றே.. கார் மீது காகத்தை ஏவிவிட்டு அந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்..!!'

'விபத்தை விளைவிப்பது அவளது நோக்கமாக இருந்திருக்காது.. அதேநேரம், விபத்தினால் எனது நினைவுகள் தொலைந்துபோனபோது, என்னுடன் விளையாடிப் பார்க்கலாம் என்றொரு விபரீத எண்ணம் அவளுக்குள் பிறந்திருக்கவேண்டும்..!! என்னுடன் விளையாடுவதுதான் அவளுக்கு மிகவும் பிடிக்குமே..?? என்னை சீண்டி பார்ப்பதில் அவளுக்கு எப்போதும் ஒரு அலாதி ஆனந்தம்தானே..?? சிறுவயதில் இருந்தே அப்படிப்பட்ட ஒரு குறும்புக்காரத் தங்கைதானே என் தங்கை..?? ஆவியான பிறகும் அந்த விளையாட்டு புத்தி அவளைவிட்டு போகவில்லை போலிருக்கிறது..!!'

'அந்த விளையாட்டு புத்தியால்தான், அகழி வந்த என்னுடன் இத்தனை நாளாய் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாள்.. கண்டுபிடி பார்க்கலாம் என்றொரு கபடநாடக புதிர் விளையாட்டு..!! அந்த மெமரி சிப்பை என் கையில் சிக்கவைத்தது.. அந்த ஆட்டோக்ராஃப் புக்கை எனது கவனத்துக்கு கொண்டுவந்தது.. அவ்வப்போது அவள் நினைவுபடுத்திய அந்த 'கண்ணாமூச்சி ரே ரே'.. மகிழம்பூவின் மயக்கும் வாசனை, மர்மமான கைபேசி அழைப்பு, மாறாத தொலைக்காட்சி அலைவரிசை..!! எல்லாமுமே.. என்னையும், எனது தளர்ந்துபோன மூளையையும் சீண்டிப் பார்க்கிற வகையிலான புதிர் விளையாட்டுக்கள்..!!'

'குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை எனது கவனத்துக்கு கொண்டுவருவது கூட.. அவளது முக்கிய நோக்கமாக இருந்திருக்காது..!! அவளுக்கும் அவருக்குமான காதலை எனது நினைவுக்கு கொண்டுவருவதுதான்.. அவளது முழுமுதற் நோக்கமாக இருந்திருக்கும்..!! என் மனதை ஒருகணம் தடுமாற வைத்து, அவளது உயிரிழப்பிற்கு நான் காரணமாகிப்போக, அவளுடைய அந்தக் காதல்தானே மூல முகாந்தரம்..??'

'என்னுடன் இந்தமாதிரி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்து போயிருக்க வேண்டும்..!! அதனால்தான்.. அவளது எதிர்பார்ப்புக்கு புறம்பாக நான் அகழியில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில்.. எனது கணவரை அவள் தூக்கி சென்றிருக்கவேண்டும்..!! அதன்மூலமாக அகழியிலேயே என்னை தங்கிப்போக வைப்பதற்கு.. தனது விளையாட்டை இன்னும் என்னுடன் தொடர்வதற்கு வசதியாக..!!'

ஆதிராவுக்கு இப்போது தங்கையின் மீது ஒரு சிறு எரிச்சலும் பிறந்தது.. தன்னை பழிவாங்க சிபியை ஒரு பகடைக்காயாக தாமிரா உபயோகப்படுத்தியதால் பிறந்திருந்த எரிச்சல் அது..!!

'ஏன் இப்படி செய்தாள்..?? என் மீது கோபம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே.. என் உயிரை கூட பறித்திருக்கலாமே..?? என் கணவரை எதற்காக தூக்கி செல்லவேண்டும்..?? அவர் என்ன பாவம் செய்தார்.. என்மீது இரக்கமுற்று எனக்கொரு புதுவாழ்க்கை அமைத்து தந்ததை தவிர..?? என்னை மணந்த பாவத்திற்காக.. அவரது உடலுக்கோ உயிருக்கோ எந்த சேதாரமும் நேர்ந்துவிடக்கூடாது கடவுளே..!!'

கணவனின் நிலையை பற்றி நினைக்க நினைக்க.. ஆதிராவுக்கு கண்களில் கண்ணீர் சுரந்து ஓட ஆரம்பித்தது..!! பிறகு.. மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தவள்.. கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்துக் கொண்டாள்..!!

'எது எப்படியோ என் கணவரை இப்போது மீட்டாக வேண்டும்.. அந்த முயற்சியில் எனது உயிரை தொலைத்தாலும்கூட எனக்கு அணுவளவும் கவலையில்லை..!! விளையாடலாம் வாவென்று அழைக்கிறாள்.. என்ன திட்டம் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை..!! அவளது திட்டம் எதுவாயினும்.. எனது கணவரை அவளுடைய பிடியில் இருந்து விடுவிப்பதில்தான்.. எனது கவனமும் தீவிரமும் முழுமையாக இருந்திடவேண்டும்..!!’

‘நான் நினைப்பது நடக்குமா.. என் கணவரை மீட்க முடியுமா.. ஆவியுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்னால்..?? ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் எனக்கு சாதகமென இருப்பதாக படுகிறது.. தாமிராவுக்கு என்னதான் என்மீது கோபம் இருந்தாலும், அவள் என்னிடம் வைத்திருந்த அன்பு என்னவோ இன்னும் முழுதாக வற்றிப் போகவில்லை என்றே தோன்றுகிறது..!! தனது சாவுக்கு காரணமாக இருந்திருந்த போதிலும், அக்கா இன்னொரு மிருகத்திடம் சிக்கி சீரழிவதை தாமிரா விரும்பவில்லை.. அந்த மிருகத்திடம் இருந்து என் உயிரையும், மானத்தையும் காப்பாற்றி இருக்கிறாள்..!!’

‘அப்படியானால்.. அவளுக்கு இன்னும் என்மீது அன்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்..?? என் கணவரை மீட்கிற முயற்சியில் அது பயன்படும்தானே..?? அவள் என் மீது வைத்திருக்கிற அந்த அன்புதான் எனது துருப்புச்சீட்டு..!!'

அப்படி ஒரு எண்ணம் தோன்றியதுமே.. ஆதிராவின் மனதுக்குள் அவளையும் அறியாமல்.. தங்கைமீது ஒரு பெருமிதமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் ஊற்றாக உருவாகி.. குபுகுபுவென பொங்கிப் பெருக ஆரம்பித்தது..!!

'கொல்ல நினைத்த அக்காவை, ஒரு கொடூர மிருகத்திடம் இருந்து காப்பாற்றி இருக்கிறாளே.. அவளைப்போல ஒரு தங்கை இங்கு யாருக்கேனும் கிடைப்பார்களா..?? அன்பே உருவான தங்கையை, அந்தரத்தில் நழுவவிட்டு ஆற்றுக்குள் வீழச்செய்தேனே.. என்னைப்போல ஒரு இழிபிறவி இவ்வுலகில் வேறாரும் இருப்பார்களா..??'

'சின்னவயதில் இருந்தே சுயநலம் பிடித்த ஒரு அற்பப்பதராய்த்தானே வாழ்ந்து வந்திருக்கிறேன்.. எதுவானாலும் எனக்கே எனக்கென்று பொசுக்கென ஆசைப்பட்டுவிடுவது..!! உள்ளுக்குள் வளர்ந்துவந்த அந்த சுயநலக்கிருமி, ஒருநாள் விஸ்வரூபம் எடுத்து நின்று.. என்மீது அத்தனை பாசமாயிருந்த எனது தங்கையின் உயிரையே குடித்துவிட்டதே.?? என்னால்தானே.. என் சுயநல புத்தியால்தானே..??’

‘தாமிரா மட்டுமல்ல.. என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே என்மீது அன்பை பொழிந்திருக்கிறார்கள்..!! அம்மா, அப்பா, அத்தான், திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லோருமே நான் செய்த பாவத்தை மன்னித்து, எனக்கொரு புதுவாழ்வை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்..!! அதுமட்டுமல்லாமல்.. அந்த விபத்தின் பிறகு.. எனது ஞாபகங்கள் தொலைந்துபோனபிறகு.. எல்லாமும் தெரிந்துகொண்டு இத்தனை நாளாய் எல்லோரும் என்னிடம் நாடகமாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.. என் மீதிருக்கிற அன்பினால், நான் மனம் வாடிப் போய்விடக் கூடாது என்பதற்காக, எல்லாவற்றையும் மறந்துவிட்டு இந்த புதுவாழ்வில் நான் மகிழ்ந்திருப்பதற்காக..!! எல்லோரும் என்மீது இத்தனை அன்பாயிருந்திருக்க.. நான் மட்டும் ஏன் இப்படி இருந்திருக்கிறேன்..??'

நினைக்க நினைக்க ஆதிராவுக்கு இதயம் குமுறி கொந்தளித்தது..!! தனது மனக்குமுறலை அன்றே தணிகைநம்பியிடமும், வனக்கொடியிடமும் கொட்டித் தீர்த்தாள்.. மறந்துபோனவை திரும்பவும் ஞாபகம் வந்துவிட்டதை அவர்களிடம் சென்று சொன்னாள்..!! அவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள்.. ஆரம்பத்தில் ஏதோ பொய் சொல்லி அவளை சமாளிக்க முயன்றார்கள்.. பிறகு, அத்தகைய பொய்யால் எந்த பலனுமில்லை என்பதை புரிந்துகொண்டு, தடுமாற்றத்துடன் உண்மையை ஒப்புக் கொண்டார்கள்..!!

"ஏன்ப்பா இப்படி பண்ணுனிங்க.. ஏன் இத்தனை நாளா எங்கிட்ட இருந்து உண்மையை மறைச்சுட்டிங்க..??"

ஆதிரா கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு.. தணிகைநம்பி தனது கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே நிதானமாக பதில் சொன்னார்..!!

"எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான்மா..!! தாமிரா போனதுல இருந்து ஆறுமாசம், ஒருவருஷம்.. நீ என்ன மாதிரி நெலமைல இருந்த, எவ்வளவு கஷ்டப்பட்டன்னு நாங்க கண்கூடா பாத்திருக்குறோம்..!! ஒருவருஷம் கழிச்சு ஓரளவுக்கு நீ பழைய ஆதிராவா மாறியிருந்தப்பதான்.. ஆக்சிடன்ட்ல உனக்கு நடந்ததுலாம் மறந்துபோச்சு..!! அதெல்லாம் திரும்ப உனக்கு ஞாபகப்படுத்தி.. மறுபடியும் ஒரு மோசமான நெலமைக்கு உன்னை தள்ள நாங்க விரும்பலை.. அதான்..!!”

"ம்ம்..!!"

“அந்த ஆக்சிடன்ட்ல உனக்கு பழசெல்லாம் மறந்துபோனது.. ஆரம்பத்துல எங்களுக்கு அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு.. அப்புறந்தான்.. அதுவும் ஒருவகைல நல்லதுக்குன்னு தோணுச்சு..!! அதேநேரம்.. அதெல்லாம் உனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வந்தா.. நீ எந்த மாதிரி நடந்துப்பியோன்ற பயமும் எங்களுக்கு இருந்துச்சு..!!"

" பு..புரியுது..!!"

"உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அன்னைக்கு.. மைசூர்ல உனக்கு ட்ரீட்மன்ட் குடுத்த அந்த டாக்டர்ட்ட.. நானும், சிபியும் இதைப்பத்தி பேசினோம்மா..!! 'இந்த மாதிரி ஒரு விஷயத்தை மறந்துட்டா.. அதை திரும்ப ஞாபகப் படுத்தலாமா?'ன்னு கேட்டோம்.. அவர் வேணாம்னு சொல்லிட்டாரு..!! ‘அது உனக்கு தெரியாம இருக்குறதே நல்லது, திரும்ப ஞாபகம் வந்தா, பழைய மாதிரி ஆகக்கூட சான்ஸ் இருக்கு’ன்னு சொன்னாரு..!! எங்களுக்கும் வேற வழியில்ல.. மறைச்சுட்டோம்..!!"

"ம்ம்..!!"

"எல்லாம் நல்லபடியாத்தான்மா போயிட்டு இருந்துச்சு.. நீங்க அகழி வர்ற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்ம்.. ஆரம்பத்துலயே சிபிட்ட நான் சொன்னேன்.. 'அகழிக்கு போகவேணாம், அது எனக்கு நல்லதா படல'ன்னு..!! அவன் கேக்கல.. 'அஞ்சுநாள்தான மாமா.. ரொம்ப அடம்புடிக்கிறா.. கூட்டிட்டு போகலன்னா சந்தேகம் வந்துடும்'னு சொல்லி என்னை சமாளிச்சுட்டான்..!!"

பேச்சுவாக்கில் தணிகைநம்பி அவ்வாறு சொல்லிவிட, ஆதிரா இப்போது சற்றே அதிர்ந்துபோய் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. 'அப்படியானால், நாங்கள் அகழி வந்தது உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா..?' என்பது மாதிரியான ஒரு அதிர்ச்சி பார்வை..!! அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட தணிகைநம்பியோ, அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்..!!

"ஆமாம்மா.. நீங்க இங்க வந்தது அன்னைக்கே எனக்கு தெரியும்.. சிபி சொல்லிட்டான்..!! நீங்க இங்க வந்ததுல இருந்து.. நான், சிபி, திரவியம், வனக்கொடி நாலு பேரும்.. உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு டெயிலி ஃபோன்ல பேசிப்போம்..!!" தணிகைநம்பி சொல்ல சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவிடம் இப்போது பட்டென ஒரு விரக்தி.

"ஓ..!! எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சுக்கிட்டேதான் எங்கிட்ட நடிச்சிருக்கிங்க இல்ல..??"

"சேச்சே.. அப்படி இல்லமா.. உன்கிட்ட நடிக்கனும்னு இல்ல..!!"

"எனக்குத்தான் எதுவும் தெரியல..!! நானே என் தங்கச்சியை கொன்னுட்டு.. பைத்தியக்காரி மாதிரி.. யாரை யாரையோ சந்தேகப்பட்டுக்கிட்டு.." ஆதிரா சொல்லும்போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, ஆதரவாக அவளது தோளை பற்றினாள் வனக்கொடி.

"இப்படிலாம் பேசாத ஆதிராம்மா..!! நீ செஞ்சது தப்புதான்.. ஆனா.. தப்பு செய்யாத மனுஷங்க இங்க யாரு இருக்கா.. எல்லாருந்தான் தப்பு செய்றோம்..!! நீ வேணும்னே திட்டம் போட்டு எதையும் செய்யல.. ஒருநொடி உனக்கு புத்தி பிசகிப்போய் அப்படி செஞ்சிட்ட.. அது நம்ம தாமிரா உசுருக்கு வெனையா போய்ருச்சு.. அது அவ தலையெழுத்து.. அவ்வளவுதான்..!!”

"ம்ம்..!!"

“நீ செஞ்ச தப்பை நெனச்சு நெனச்சு.. உன் உசுரையும் உடம்பையும் உருக்கிக்கிட்டு, ஒருவருஷம் நீ பட்ட கஷ்டமே போதும்மா.. இனிமேலயும் அது வேணாம்.. இன்னொருமுறை அந்த மாதிரி ஒரு நெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எங்க யாருக்குமே திராணி இல்லம்மா..!!"

"ம்ம்..!!"

"ஹ்ம்ம்.. நாம நெனச்சது ஒன்னு, நடக்குறது ஒன்னா என்னன்னவோ ஆய்ப்போச்சு.. இனிமேயும் நீ இங்க இருக்குறது நல்லதில்ல ஆதிராம்மா.. அப்பாவோட ஊருக்கு கெளம்பு..!! சிபித்தம்பி எந்தக்குறையும் இல்லாம நம்மட்ட திரும்ப வரும்னு எல்லாருமா நம்புவோம்.. நீ இங்க இருக்கவேணாம்.. கெளம்பு..!!"

"இல்லம்மா.. நான் இங்கதான் இருக்கனும்.. நான் மட்டுந்தான் இருக்கனும்.. அப்பத்தான் அவரை காப்பாத்த முடியும்..!!" ஆதிரா அவ்வாறு தீர்க்கமாக சொல்ல, மற்ற இருவரும் அவளை சற்றே திகைப்பாக பார்த்தனர்.

"எ..என்னம்மா சொல்ற.. எனக்கு புரியல..!!" குழப்பமாய் கேட்டார் தணிகைநம்பி.

"சொல்றேன்ப்பா..!!"

தனக்கு வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு பற்றியும், அதில் ஒலித்த 'GGGGGame or SSSSShame..??' பற்றியும் அவர்களிடம் கூறினாள்.. அதைத்தொடர்ந்து தன் மனதில் எழுந்த திட்டத்தையும், இறுதியாக எடுத்த முடிவையும் விளக்கி சொன்னாள்.. ஆவியாகிப்போன தங்கையுடன் இறுதியாக ஒரு விளையாட்டு விளையாடிப் பார்க்கப்போகிறேன் என்றாள்..!! அவள் சொன்னதை கேட்க கேட்க.. தணிகைநம்பியும், வனக்கொடியும் அப்படியே அவளை மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

"இ..இல்லம்மா.. இது சரியா வரும்னு எனக்கு தோணல..!! சொல்றதை கேளு.. வா.. நாம இங்க இருந்து கெளம்பிடலாம்..!!"

தணிகைநம்பி மகளின் மனதை மாற்ற முயன்றார்.. ஆனால், ஆதிராவோ அவளது முடிவில் மிக உறுதியாக இருந்தாள்..!!

"நான் வரமாட்டேன்ப்பா.. அவர் இல்லாம இங்க இருந்து நான் கெளம்ப மாட்டேன்..!! நமக்கு வேற வழி இல்ல.. அவர் திரும்ப வேணும்னா இதை நான் செஞ்சுதான் ஆகணும்..!!"

உரம் வாய்ந்த குரலில் திடமாக பேசிய ஆதிரா.. தணிகைநம்பியையும், வனக்கொடியையும் தனது திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தாள்..!! அவளை எதிர்த்து பேசி சமாளிக்கவும் அவர்களுக்கு வேறு ஏதும் உபாயம் இருக்கவில்லை.. மனதில் ஒருவித கலக்கத்துடனே சம்மதித்து இருந்தார்கள்..!! அவர்களது கலக்கத்தை போக்கும் வகையில் ஆதிராவே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊட்டினாள்..!!

அடுத்த நாள் மாலை.. அகழியின் வானத்தை அடர்ந்த மேகங்கள் சூழ்ந்திருந்தன..!! எந்தநேரமும் மழை பொத்துக்கொள்ளலாம் என்பதுமாதிரியான ஏகாந்த வானிலை..!! வீசுகிற காற்றிலே ஈரப்பதமும் திசைவேகமும் ஏராளமாய் கூடியிருந்தன.. எதிர்ப்படுகிற மரங்களையும் மனிதர்களையும் சிலுசிலுவென வருடி, எங்கேயோ விரைந்துகொண்டிருந்தது அந்த குளிர்காற்று..!!

தணிகைநம்பி அகழியில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார்..!! கதவை திறந்து காருக்குள் ஏறப்போனவர் ஒரு கணம் நின்று.. கவலை வழிகிற கண்களுடன் மகளை ஒருமுறை ஏறிட்டார்..!!

"எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கும்மா ஆதிரா.. எதுக்கும் இன்னொரு தடவை நல்லா யோசிம்மா..!!"

"இனி யோசிக்கிறதுக்கு எதுவும் இல்லப்பா.. இது ஒன்னுதான் வழி..!! நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. உங்க மாப்ளையோட நான் மைசூருக்கு திரும்ப வரத்தான் போறேன்..!! இப்போ தைரியமா கெளம்புங்க..!!"

"ஹ்ஹ்ம்ம்ம்ம்...!!!!!!"

நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்த தணிகைநம்பி, காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டார்.. இஞ்சின் ஒரு கனைப்புடன் ஸ்டார்ட் ஆகிக்கொள்ள, வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது..!! கையசைத்து அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஆதிரா.. சமையலறைக்குள் இருந்து வெளிப்பட்ட வனக்கொடியிடம்..

"நீங்களும் கெளம்புங்கம்மா..!!" என்றாள்.

"நா..நான் மட்டுமாவது கூட இருக்கேனே ஆதிராம்மா.. ஒத்தைல உன்னை விட்டுட்டு போக எனக்கு 'திக்கு திக்கு'ன்னு இருக்குது..!!"

"ப்ச்.. புரியாம பேசாதிங்கம்மா.. நான் மட்டும் இருந்தாத்தான் அவ வருவா.. நாம நெனச்சதும் நடக்கும்..!!"

"பு..புரியுதும்மா.. ஆனா.."

"என்ன ஆனா..??"

"உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குது கண்ணு..!!" குரல்முழுக்க கவலையுடன் வனக்கொடி அவ்வாறு சொல்ல, ஆதிராவின் உதட்டில் ஒரு விரக்திப் புன்னகை..!!

"ஹ்ஹ.. அவ என் தங்கச்சிம்மா.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!! அவ என்னை என்ன பண்ணிடுவா..?? எனக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க கெளம்புங்க..!!"

சொல்லும்போதே ஆதிராவுக்கு கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.. வனக்கொடியும் புடவைத்தலைப்பால் வாயைப்பொத்தி, துக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றாள்..!!

வனக்கொடியும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட.. அத்தனை பெரிய, பிரம்மாண்டமான வீட்டில் ஆதிரா மட்டும் இப்போது தனித்து விடப்பட்டிருந்தாள்..!! இதுவரை தாமிராவுடன் அவள் விளையாடிய 'Game or Shame' விளையாட்டுக்கள் அனைத்துமே.. அவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விளையாட்டுக்கள்.. அக்கா தங்கைக்கு இடையே அந்த மாதிரி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களது வீட்டில் யாருக்கும் தெரியாது..!! நேற்று இரவு கைபேசியில் 'Game or Shame' என்று குரல் ஒலித்ததுமே.. ஆதிரா முதலில் முடிவு செய்தது இதுதான்.. தாமிராவை சந்திக்க இந்தமாதிரி தனித்திருப்பது மிக மிக அவசியம் என்று கருதினாள்.. அதனால்த்தான் இப்போது வனக்கொடியையும், தணிகைநம்பியையும் வலுக்கட்டாயாமாக அனுப்பிவைத்துவிட்டு அவள்மட்டும் தனித்திருக்கிறாள்..!!

வனக்கொடி சென்றபிறகு குளியலறைக்குள் புகுந்துகொண்ட ஆதிரா.. கொட்டுகிற ஷவருக்கு அடியில், சிலைபோல நெடுநேரம் நின்றிருந்தாள்..!! டைல்ஸ் பதிக்கப்பட்ட பக்கவாட்டு சுவற்றில் இரண்டு கைகளையும் அழுத்தமாக ஊன்றி.. கூந்தல் நனைத்து முகத்தில் வழிகிற நீர்க்கோடுகளுடன், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..!!

குளித்துமுடித்து வெளியே வந்தபோது, மேற்குவானம் செந்நிறமாகிப் போயிருந்தது.. சூரிய வெளிச்சம் வற்றிப்போயிருக்க, இருள் கவிழ ஆரம்பித்திருந்தது..!! தனது அறைக்கு திரும்பி வேறு உடை மாற்றிக்கொண்டாள் ஆதிரா.. மிக மிருதுவான, உடலை உறுத்தாத ஒரு உடை..!! அவளது பார்வை எங்கோ நிலைகுத்திப் போயிருக்க.. அவளது புத்தி முழுதும் ஒரே விஷயத்தை பற்றி கூர்மையாக சிந்தித்துக் கொண்டிருக்க.. அவளது ஒரு கை மட்டும் அனிச்சையாக சீப்புகொண்டு கூந்தல் வாரியது, சிக்கெடுத்து முடிச்சிட்டது.. கழுத்து, காது, மூக்கு அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றி எடுத்து, மேஜையில் வைத்தது..!!

ஆதிராவின் மனநிலை ஒருவித அழுத்தத்துக்கு உட்பட்டிருக்க.. அவளுடைய பார்வைக்குள் ஒருசில மாயபிம்பங்கள் ஆங்காங்கே தோன்றின..!! மிக நிதானமாக அவள் படியிறங்கி கீழே வரும்போது.. பக்கவாட்டில் அவளுடன் நடந்துவந்தாள் அவளது கொள்ளுப்பாட்டி.. முகத்தை திருப்பி ஆதிராவை ஒரு அமானுஷ்யப் பார்வை பார்த்தவாறே சொன்னாள்..!!

"நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்.. நீயும் அந்தமாதிரி புடிவாதமா நின்னு உன் புருஷனை மீட்டுக்க ஆதிரா..!! பயத்தை விடு.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!"

"ம்ம்.. சரி பாட்டி.. பயப்படல..!!" மாயபிம்பத்துக்கு பதில் சொல்லிக்கொண்டே படியிறங்கினாள் ஆதிரா.

வீட்டுக்கு வெளியே இப்போது ச்சோவென்று மழைகொட்டிக் கொண்டிருந்தது.. பளிச் பளிச்சென்று அடிக்கடி மின்னல் கீற்றுகள்.. திடும் திடுமென்று அவ்வப்போது இடிமுழக்கங்கள்..!! காற்றின் வேகமும் பலமாக இருக்க.. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்துகொண்டு கிடந்தன..!!

வீட்டின் நுழைவாயிலை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கதவுகளையும் ஜன்னல்களையும் ஒவ்வொன்றாக அடைத்து தாழிட்டாள் ஆதிரா..!! படக் படக்கென்று அடித்துக்கொண்ட ஒரு ஜன்னல் கதவை, இழுத்து அடைக்க அவளது கையை வெளியே நீட்டியபோது.. ஜன்னலுக்கு வெகுஅருகே, கொட்டுகிற மழையில் நனைந்தவாறு நின்றிருந்தார் அந்த மாந்திரிகவாதி.. முகம் முழுவதும் கொசகொசவென்று தாடி மீசையுடன்..!! இவளது கண்களை அப்படியே கூர்மையாக உற்றுப்பார்த்தவாறு கேட்டார்..!!

"ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??"

"ச..சரிதான் சாமி..!!"

"காப்பாத்திடுவியா உன் புருஷனை..??"

"காப்பாத்திடுவேன்.. என் உயிரை கொடுத்தாவது அவர் உயிரை காப்பாத்திடுவேன்..!!"

"ஹாஹாஹாஹாஹா..!!!!"

அமானுஷ்யமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர் பட்டென மறைந்துபோனார்.. அந்த ஜன்னல்கதவை அறைந்து சாத்திவிட்டு, தீர்க்கமான ஒரு பார்வையுடன் திரும்பினாள் ஆதிரா..!!

நடந்துசென்று.. வீட்டுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கிற மெயின் ஸ்விட்சை படக்கென கீழிழுத்தாள்..!! வீடே இப்போது சட்டென ஒரு அடர்இருளில் மூழ்கிப் போனது.. பிரதான நுழைவாயிலில் மட்டும் மசமசப்பாய் ஒரு வெளிச்சம்..!! குண்டூசி விழுந்தால்கூட அதன் ஓசை கேட்குமாறு அப்படியொரு நிசப்தம் இப்போது வீட்டுக்குள்..!! அந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!" என்று மேஜை இழுபடுகிற சப்தம்..!!

ஓரமாய் கிடந்த ஒரு மரமேஜையை ஹாலின் மையத்துக்கு நகர்த்தினாள் ஆதிரா..!! மிகவும் கனமான மேஜை.. நகர்த்துவதற்கு கடினமாக இருந்தது.. பற்களால் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு இழுத்தாள்..!! இப்போது மேஜையின் இன்னொரு பக்கம் செம்பியனின் மாய பிம்பம்.. அந்தப்பக்கம் இருந்து மேஜையை தள்ளி இவளுக்கு உதவுவது போலொரு தோற்றம்..!! அவ்வாறு தள்ளிக்கொண்டே மூச்சிரைப்பான குரலில் சொன்னார்..!!

"ஆ..ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அ..அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!"

"ஆமாம் அங்கிள்.. அதைத்தான் இப்போ பண்ணப்போறேன்..!!"

"அவளை வர வை.. விளையாண்டு பாரு.. உன் புருஷன் உனக்கு கெடைக்கிறானான்னு பாக்கலாம்..!!"

"கண்டிப்பா கெடைப்பாரு..!!"

"கெடைச்சா நல்லதுதான்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. ஆ..ஆனா ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க ஆதிரா.. மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. நம்மால உறுதியா சொல்ல முடியாது.. அவகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்க..!!"

"ம்ம்.. புரியுது அங்கிள்.. பாத்துக்குறேன்..!!"

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!!!"

இல்லாத செம்பியனின் உதவியோடு, இழுத்துப் போட்டாள் மரமேஜையை..!! இருட்டாக இருந்த வீட்டுக்குள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தாள்..!! தாமிராவுக்கு சொந்தமான சில பொருட்களை மேஜைமீது பரப்பினாள்.. நாற்காலி இழுத்துப்போட்டு வசதியாக அமர்ந்துகொண்டாள்..!! சாம்பிராணி கொளுத்தி அதனை புகைய வைத்தாள்.. அதன்மீது அந்த க்ரிஸ்டல் பவ்லை கவிழ்த்து வைத்தாள்..!!

கண்களை மெலிதாக மூடிக்கொண்டு.. அந்த க்ரிஸ்டல் பவ்லின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டாள்..!! சிலவினாடிகள் எடுத்துக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருமுகப்படுத்தி ஒற்றைப்புள்ளியில் குவித்தாள்..!! தங்கையை சந்திக்கிற உத்வேகத்துடன்.. மனதுக்குள்ளேயே அவளது பெயரை திரும்ப திரும்ப சொல்லி அழைத்தாள்..!!

'தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!!!'

இப்போது இமைகளை மெல்ல பிரித்தாள்.. பவ்லுக்குள் கசிகிற புகையையே மிக உன்னிப்பாக உற்று நோக்கினாள்..!! வெளியே மழையின் சடசட சப்தம்.. அவ்வப்போது திடுமென்ற இடியோசை.. வீட்டுக்குள் மட்டும் ஒரு அசாத்திய அமைதி..!!

அந்த அமைதியுடனே ஆதிரா சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்..!! நொடிகள் கரைந்தன.. நிமிடங்கள் ஆகின.. அந்த நிமிடங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிச் சென்றுகொண்டிருக்க.. ஆதிராவிடம் மட்டும் எந்த அசைவுமில்லை.. அந்த பவ்லுக்குள் நிறைகிற புகையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வெளிப்புற குளிரையும் மீறி.. அவளது முகத்தில் இப்போது மெலிதாக வியர்வை முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன..!!

மிகவும் விஸ்தாரமான அந்த பழங்கால வீட்டின் மையத்தில்.. க்ரிஸ்டல் பவ்ல் கவிழ்க்கப்பட்ட மேஜைக்கு முன்பாக ஆதிரா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்..!! அவளுக்கு நேர் எதிரே வீட்டின் நுழைவாயில் அகலமாக திறந்து கிடந்தது.. மற்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் ஒரு புழுக்கம்..!! ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் மெலிதான மஞ்சள் வெளிச்சத்தை கசிந்துகொண்டிருந்தன.. அவ்வப்போது வெளிவானத்தில் வெட்டிய மின்னலின் பளீர் வெளிச்சமும், அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் சேர்ந்துகொண்டது..!!

இப்போது வீட்டுக்குள் திடீரென்று சிலுசிலுவென குளிர்காற்று வீச ஆரம்பித்தது.. ஆதிராவின் தளிர்மேனியை அந்தக்காற்று ஜில்லென வருட, அவளது ஆடையும் கூந்தலும் மெலிதாக தடதடத்தன..!! வீட்டுக்குள் வீசிய குளிர்காற்று அந்த வாசனையையும் அள்ளி வந்திருந்தது.. கமகமவென அந்த அறையை நிறைத்தது மகிழம்பூ வாசனை..!!

வாசனை வந்தவுடனேயே தங்கையின் வருகையையையும் உணர்ந்துகொண்டாள் ஆதிரா.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொன்டாலும், அவளது கவனம் முழுவதும் கசிகிற புகையிலேயே நிலைத்திருந்தது..!! அதேநேரம் அந்த க்ரிஸ்டல் பவ்லிலும் சரேலென வெப்பம் ஏற ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளிலேயே சரசரவென சூடாகிப்போய் அனலடித்து கொதித்தது.. தாங்கமுடியாமல் தகித்தது..!! ஆதிராவின் உள்ளங்கை பொசுங்க ஆரம்பிக்க.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.. அந்த பவ்லில் இருந்து கையை விலக்கிக் கொள்ளவில்லை..!! உதடுகளை மட்டும் அழுந்த கடித்தவாறு.. வேதனை பொறுத்துக் கொண்டாள்..!!

"ச்ச்சிலீர்ர்ர்ர்ர்ர்..!!" வெப்பத்தை தாங்கமுடியாமல் வெடித்து சிதறியது அந்த க்ரிஸ்டல்.

"ஆஆஆஆஆஆஆஆ..!!" அதிர்ந்துபோய் அலறி விருட்டென எழுந்தாள் ஆதிரா.


அவள் அமர்ந்திருந்த நாற்காலி கீழே சரிந்து தடதடவென ஓசையெழுப்ப.. அதைத்தொடர்ந்து வீட்டுக்குள் மீண்டும் அந்த அடர்த்தியான நிசப்தம்..!!

பதற்றத்தில் இருந்த ஆதிராவுக்கு மூச்சிரைத்துக் கொண்டது.. அவளது மார்புகள் சர்சர்ரென மேலும் கீழும் ஏறி இறங்கின..!! அகலமாய் விரித்து வைத்த விழிகளுடன்.. அந்த அறைக்குள் பார்வையை மெலிதாக சுழற்றி..

"தா..தாமிரா.. தா..தாமிரா.." என்று தடுமாற்றமாக அழைத்தாள்.

அதேநொடியில்.. வெளியே திடுமென்று ஒரு இடியோசை.. அதைத்தொடர்ந்து நுழைவாயிலில் பளீரென்று ஒரு மின்னல் வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு கருப்புநிற பிம்பம்.. சின்னதாக.. ஏதோ ஒரு பறவை.. இவளை நோக்கி பறந்து வருவது போல.. ஏதோ ஒரு பறவை அல்ல.. ஒரு காகம்.. தனது சிறகை படபடவென அசைத்து அசைத்து, இவளை நோக்கி விர்ர்ர்ரென விரைந்து வந்தது.. தனது கூரிய அலகுகளை விரித்து இவளது முகத்தை கொத்திக் குதறுவது போல..

"ஆஆஆஆஆ...!!!!!"

கடைசி நொடியில் சுதாரித்துக்கொண்ட ஆதிரா தனது முகத்தையும், உடலையும் முறுக்கி ஒரு திருப்பு திருப்ப.. காகத்தின் ரெக்கை மட்டும் அவளது முகத்தை சத்தென்று அறைய.. கால்கள் பிண்ணிக்கொள்ள தடுமாறிப்போய் தரையில் வீழ்ந்தாள்..!! பறந்து வந்த காகம், ஒரு வெண்கல சிலை மீது சென்று அமைதியாக அமர்ந்துகொண்டது.. ஆதிராவோ அதிர்ச்சி விலகாமல் அப்படியே கிடந்தாள்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

சன்னமாக ஒரு சப்தம் இப்போது ஆதிராவின் காதில் விழுந்தது.. என்ன சப்தம் என்பது ஆரம்பத்தில் அவளுக்கு புரியவில்லை.. தரையில் கிடந்தவாறே தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. வீட்டுக்குள் எந்த சலனமும் இருக்கவில்லை.. வாசலுக்கு அருகில்தான் ஏதோ ஒரு சலனம்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

அந்த சப்தம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக்கொண்டே போக.. வாசலில் இருந்து ஏதோ ஒன்று.. மிகவும் சின்னதாய்.. ஏதோ வளையம் போல.. இவளை நோக்கி சர்ரென உருண்டு வந்துகொண்டிருந்தது..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!!"

ஆதிராவின் முகத்துக்கு அருகே வந்ததும் நின்றது.. நின்ற இடத்திலேயே 'க்க்க்கிர்ர்ர்ர்' என்று சுழன்றது.. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியாகி அடங்கியது..!!

அது.. அந்த மோதிரம்.. கடந்த காதலர் தினத்தன்று.. கணவனுடன் அவள் புதுவாழ்க்கையை தொடங்கிய அன்று.. காகம் வந்து மோதி கார் விபத்து நேர்ந்த அன்று.. சிபி இவளுக்கு அன்பளிப்பாக அணிவித்த அந்த மோதிரம்.. அகழி வந்த பிறகு திடீரென ஒருநாள் காணாமல் போயிருந்த மோதிரம்..!!

'இ..இது.. இது எப்படி..??'

ஆதிராவுக்கு ஓரிரு வினாடிகள் ஒன்றும் புரியவில்லை.. பிறகு அவளது மூளையில் ஒரு பளிச்..!! அன்றொரு நாள்.. அந்த சிவப்பு அங்கி உருவம் அவளை ஆற்றுக்குள் இழுத்துப்போட்டு.. நீருக்குள் அவளை அழுத்தி நெருக்கி.. அவளது கைகளை பற்றி இழுத்து.. அவளுடைய கைவிரல்களையும் அழுந்தப்பற்றி நெரித்து..!! ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. தாமிராதான் அன்று தன்னை ஆற்றுக்குள் இழுத்திருக்க வேண்டும்.. இந்த மோதிரத்தை பறித்து சென்றிருக்க வேண்டும்..!!

'ஆனால் எதற்காக..?? அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மோதிரத்திற்கு..??' - அது மட்டும் புரியவில்லை.

அந்த மோதிரத்தையே திகைப்பாக பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா.. தனது ஒருகையை மெல்ல நீட்டினாள்.. அந்த மோதிரத்தை கையில் பற்றிக்கொள்ள முயன்றபோது..

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!" என்ற சப்தத்துடன் அந்த மோதிரம் பட்டென காணாமல் போனது.. காற்று வந்து கொத்தாக அள்ளிச்சென்றது போல..!!

"ஹ்ஹக்..!!" ஆதிரா திகைத்துப்போய் நிமிர,

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" முதுகுத்தண்டு சில்லிட்டுப்போவது மாதிரி வீட்டுக்குள் அந்த சிரிப்பொலி.

"தாமிராஆஆஆ..!!" தரையில் கிடந்தவாறு அலறினாள் ஆதிரா.

வீட்டுக்குள் இப்போது மீண்டும் ஒரு பலத்த நிசப்தம்.. ஆதிரா தரையில் இருந்து மெல்ல எழுந்தாள்.. மிரட்சியான முகத்துடன் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்..!!

"க்க்காஆ.. க்க்காஆ.. க்க்காஆ..!!!" - காகம் கரைந்தது.

அதன் சப்தத்தை கண்டுகொள்ளாமல் ஆதிரா இப்போது மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. அந்த சிரிப்பொலி சப்தம் வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்..!!

"தாமிரா.. தாமிரா..!!" - தங்கையை ஒருமுறை அழைத்தாள்.

தயங்கி தயங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து.. ஒரு பத்து அடி தூரம் நகர்ந்திருப்பாள்..!!

"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

அவளுடைய முதுகுப்புறமாக இருந்து திடீரென அந்த சப்தம்..!! ஆதிரா நின்றாள்.. தனது தலையை மெல்ல திருப்பி பார்த்தாள்..!! ஊஞ்சல்.. உத்தரத்தில் இருந்து தொங்கிய இரட்டை ஊஞ்சல்களில், ஒன்று மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருந்தது.. ஆளில்லாமல்.. சற்றே வேகமாக.. சர்சர்ரென..!!

ஆதிராவின் மனதுக்குள் பட்டென ஒரு ஃப்ளாஷ்பேக்..!! அவள் சிறுமியாக இருந்தபோது.. இதே இடத்தில் நின்று.. அவள் அம்மா பூவள்ளி,

"ஊஞ்சல்தான் ஏற்கனவே ஒன்னு இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு அதேமாதிரி இன்னொன்னு வாங்கிட்டு மாட்டிக்கிட்டு இருக்கீங்க இப்போ..??" என தன் கணவரிடம் கேட்டாள்.

"அது ஆதிராவுக்கு.. இது தாமிராவுக்கு.. ஆளுக்கொரு ஊஞ்சல்..!! என் பொண்ணுக ரெண்டு பேருக்கும் எந்த விஷயத்துலயும் போட்டின்றதே வரக்கூடாது.. அதான்.. ஹாஹா..!!" சிரிப்புடன் சொன்னார் தணிகைநம்பி.

பழைய நினைவுகளில் இருந்து பட்டென மீண்ட ஆதிரா.. ஆளில்லாமல் ஆடுகிற அந்த ஊஞ்சலையே ஒருகணம் மிரட்சியாக பார்த்தாள்..!! பிறகு, மெல்ல அந்த ஊஞ்சலை நோக்கி நகர்ந்தாள்..!! அவளது மனதுக்குள் ஏற்கனவே மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்திருந்தது.. வலுக்கட்டாயமாக ஒரு தைரியத்தை நெஞ்சுக்குள் ஊற்றிக்கொண்டே, ஊஞ்சலை நெருங்கினாள்..!! ஆடாமல் நின்றிருந்த இன்னொரு ஊஞ்சலில் மெல்ல அமர்ந்துகொண்டாள்.. இருகைகளாலும் இரும்புச்சங்கிலியைப் பற்றி, கால்களை உந்தித்தள்ளி தானும் ஊஞ்சலாட ஆரம்பித்தாள்.. பயத்தையும் மீறி அவளது முகத்தில் ஒரு தீர்க்கமும், கூர்மையும்..!!

அந்த விஸ்தாரமான ஹாலின் மையத்தில் தொங்கிய இரண்டு ஊஞ்சல்களும்.. இப்போது 'சர்ர்ர்ர்.. சர்ர்ர்ர்..' என வேகவேகமாக ஆடிக்கொண்டிருந்தன.. ஒன்று ஆதிராவுடன்.. இன்னொன்று ஆளில்லாமல்..!! தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே ஊஞ்சலில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து கலகலவென சிரித்தவாறே.. ஜோடியாக ஊஞ்சலாடிய நினைவு ஆதிராவுக்கு இப்போது வந்தது..!! இருதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி பரவ, அவளது விழிகளில் ஒரு சொட்டு நீர் துளிர்த்தது..!! மனதில் இருந்த வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. வேகமாக ஊஞ்சலாடிக்கொண்டே.. பக்கவாட்டில் திரும்பி அந்த ஆளில்லா ஊஞ்சலை பார்த்து.. இறுக்கமான குரலில் கேட்டாள்..!!

"எங்கடி வச்சிருக்குற அவரை..??"

"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

"சொல்லுடி.. அவரை என்ன பண்ணின..??"

"க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..... க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்.....!!!!!!"

"ப்ளீஸ் தாமிரா.. எங்கிட்ட அவரை குடுத்திடு..!!"

ஆதிரா கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ஆளில்லாமல் ஆடிய அந்த ஊஞ்சல் அப்படியே ப்ரேக் போட்டமாதிரி அந்தரத்தில் நின்றது.. ஆதிரா ஆடிய ஊஞ்சல் மட்டும் இப்போது 'க்க்க்கிர்ர்ர்ர்ர்ர். க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..' என்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது..!!

ஆதிராவும் இப்போது ஊஞ்சலில் இருந்து மெல்ல இறங்கினாள்.. அந்தரத்தில் நின்ற அந்த ஊஞ்சலையே சற்று மிரட்சியாக பார்த்தாள்..!! அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஊஞ்சல் சரசரவென சுழன்றது.. அப்படியே அந்தரத்திலேயே.. இரும்பு சங்கிலிகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்கிக்கொள்ள.. திடீரென்று அதன் அடிப்பக்க மரப்பலகை ஆதிராவின் முகத்தை நோக்கி சரேலென சுழன்றடித்தது..!!

"ஆஆஆஆஆஆ..!!"

பதறிப்போன ஆதிரா படாரென முகத்தை திருப்பிக்கொண்டாள்.. அரைநொடி தாமதித்திருந்தால் கூட அவளது முகம் பெயர்ந்து போயிருக்கும்..!! முகத்தை திருப்பி காயமுறாமல் தப்பித்த ஆதிரா.. தஸ்புஸ்சென மூச்சிரைத்தாள்..!! அவளது உடலில் ஒருவித வெடவெடப்பு.. அதேநேரம் மனதுக்குள் தங்கையின்மீது சுள்ளென்று ஒரு எரிச்சல்..!!

"ஏய்.. என்னடி நெனைச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" என்று ஏதோ ஒரு வெற்றிடத்தை பார்த்து கத்தினாள்.

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!"

வீட்டுக்குள் மீண்டும் அதே சிரிப்பொலி.. தூரத்தில் திடீரென ஒரு வெளிச்சம்.. சிவப்புத்துணியை போர்த்திக்கொண்டு தாமிரா ஓடுவது தெரிந்தது.. 'ஜல்.. ஜல்.. ஜல்..' என்ற கால்க்கொலுசின் ஓசையோடு..!!

"நில்லுடி.. நீ எங்க போனாலும் விடமாட்டேன்..!!"


ஆதிராவும் கத்திக்கொண்டு அந்த திசையில் ஓடினாள்.. ஐந்தாறு அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தூரத்தில் ஓடிய அந்த உருவம் பட்டென மறைந்துபோனது.. ஒரு பனிப்புகை மாதிரி..!! உடனே ஆதிரா சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள்.. உருவம் மறைந்துபோன இடத்தையே, மூச்சிரைக்கிற மார்புகளுடன் திகைப்பாக பார்த்தாள்..!!

"அக்காஆஆஆஆ...!!!!!!!!!!"

ஆதிராவுக்கு பின்புறம் இருந்து அந்த அமானுஷ்ய ஓலம்.. அதை கேட்கும்போதே அவளது ரத்த நாளங்களுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!

"ஹக்க்..!!"

மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தாள்..!! அந்த திசையில் யாரும் இல்லை.. வெண்கல சிலையில் அமர்ந்திருந்த காகம்தான், தனது அலகினால், சிறகின் அடிப்புறத்தை சுரண்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவின் குரல்மட்டும் இப்போது அந்த திசையில் இருந்து ஒலித்தது.. சற்றே அலறலாக.. ஒருவித ஏளன தொனியுடன்..!!

"புடிச்சுடுவியாக்கா என்னை..?? எங்க புடி பாக்கலாம்.. வா வா.. புடி புடி புடி புடி..!! ஹாஹாஹாஹாஹாஹா...!!"

பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே.. இப்போது இன்னொரு திசையில், சற்று தூரமாக அந்த சிவப்பு அங்கி உருவம் தோன்றியது, திடுதிடுவென முதுகுகாட்டி ஓடியது.. 'ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..' என்று அதே கொலுசு சப்தம்..!!

ஆதிரா அந்த திசையில் அடியெடுத்து வைக்க நினைக்கையிலேயே.. உருவம் சட்டென மறைந்து போனது.. மீண்டும் அவளுக்கு பின்னால் இருந்து தாமிராவின் குரல்.. சற்றே அலறலாக..!!

"கண்ணாமூச்சி ரே ரே..!!!!!!!!!"

'ரே ரே.. ரே ரே.. ரே ரே..' என்று அந்த பிரம்மாண்ட வீட்டின் சுவர்கள் அனைத்தும், தாமிராவின் குரலை எதிரொலித்தன..!! ஆதிரா மிரண்டு போனாள்.. உடம்புக்குள் ஒரு பயசிலிர்ப்பு சொடுக்கி விடப்பட்டிருக்க.. சப்தம் எதிரொலித்த சுவர்களை எல்லாம் வெடுக் வெடுக்கென திரும்பி பார்த்தாள்..!!

"கண்டுபுடி ரே ரே..!!!!!!!!!"

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!" தாமிராவின் சிரிப்பு.. தண்டுவடத்தில் ஐஸ் கத்தியை இறக்குவது போலிருந்தது..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!" அவள் தொடர்ந்து பாட..

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!" வீட்டுக்குள் தொடர்ந்து எதிரொலி..!!

காதுகளுக்குள் ரீங்காரமிட்டு, மூளைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது வீட்டுக்குள் ஒலித்த அந்த சப்தம்.. இடையிடையே 'ஹாஹாஹாஹா'வென்று அவளது சிரிப்பொலி.. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே இருளுக்குள் தோன்றி 'ஜல் ஜல் ஜல்'லென்று கொலுசொலிக்க ஓடினாள்.. ஆதிரா பயந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே படார் படாரென காற்றில் மறைந்து போனாள்..!!

தங்கையை பிடிக்க அங்குமிங்கும் ஓடிக்களைத்த ஆதிரா.. இப்போது ஓய்ந்துபோய் ஓரிடத்தில் நிலைத்தாள்..!! விபத்தின்போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது ஒரு அதீத வலி.. வின்வின்னென்று உயிர்போனது.. வேதனையுடன் முகத்தை சுருக்கிக்கொண்டாள்..!! தங்கையுடன் போட்டியிட்டு வெல்வது கடினம் என்று அவளுக்கு புரிந்து போனது.. கண்களில் நீர்துளிர்க்க, இருட்டை பார்த்து கெஞ்சலாக கத்தினாள்..!!

"போதுண்டி.. வெளையாண்டது போதும்.. என்னால முடியல..!! ப்ளீஸ் தாமிரா.. என் முன்னாடி வா.. எனக்கு உன்கிட்ட பேசணும்..!!"

ஆதிரா கத்திமுடிக்க, இப்போது வீட்டுக்குள் மீண்டும் ஒரு அடர்த்தியான நிசப்தம் நிலவியது.. தாமிராவின் சிரிப்பொலியும், ஜ்ஜிலீரென்ற கொலுசொலியும் பட்டென நின்று போயிருந்தன..!!

ஆதிரா அந்த திடீர் அமைதியில் சற்றே குழம்பிப்போனவளாய்.. எதுவும் புரியாமல் வெற்றிடத்தை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..!! அவள் நின்றிருந்த இடம் கரியப்பியது போல இருட்டாயிருந்தது.. தூரத்தில்தான் மெழுகுவர்த்தியின் மசமச வெளிச்சம்..!! என்னவோ நடக்கப் போகிறது என்று படபடக்கிற இருதயத்துடன் அவள் காத்திருந்தபோதுதான்.. அடர்இருளுக்குள் இருந்து அந்த ஒற்றைக்கண் பார்வைக்கு வந்தது.. திரிதிரியாய் வழிகிற கூந்தல் மயிர்களுக்கு இடையில், ரத்தத்தில் முக்கியெடுத்தது போல செக்கச்சிவப்பாய் காட்சியளித்தது அந்தக்கண்..!!


"ஹ்ஹக்க்க்க்...!!!!"

மூச்சை இழுத்துப்பிடித்த ஆதிரா சற்றே அதிர்ந்துபோய் பின்வாங்கினாள்..!! இப்போது தாமிராவின் முகம் மெல்ல மெல்ல இருட்டுக்குள் இருந்து வெளிவந்தது.. நீண்டநாளாய் குளிர்நீருக்குள் ஊறிப்போனது போல வெள்ளைவெளேரென வெளிறிப்போயிருந்தது அந்த முகம்..!! முட்டையோட்டின் விரிசல் மாதிரி முகமும் உதடுகளும் பாளம் பாளமாய் வெடித்திருந்தன.. ஆங்காங்கே ஆழமாய் வெட்டுக்காயங்கள்.. அந்த காயங்களில் உறைந்து நிறம் வெளிறியிருந்த ரத்தச்சுவடு.. நெற்றிக்கருகில் வட்டமாய் உட்சென்ற ஒரு ஆழ்துளை..!! கண்களின் கருவிழி தவிர்த்து மிச்சமெல்லாம் அடர்சிவப்பு.. அந்தக்கண்கள் பார்த்த பார்வையிலோ அப்படியொரு கோபமும், கோரமும்..!!

தாமிராவின் உருவம் முழுத்தெளிவாக தோன்றவில்லை.. அவளைச்சுற்றி ஒரு புகைமண்டலம் சூழ்ந்தமாதிரி மங்கலாக.. கைகால்களும், கூந்தலும் காற்றில் மெலிதாக நெளிவது போல..!! ஆவியான தங்கையின் முகத்தை ஆதிரா இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறாள்.. தாமிராவின் உயிர்பிரிந்தபோது இந்தமாதிரித்தான் அவளது முகம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது..!! அவளது முகத்தை பார்த்து ஆதிராவின் நெஞ்சுக்குள் பஹீரென்று ஒரு பயம் கிளம்பினாலும்.. அதையும் தாண்டி தங்கைமீது ஒரு பரிதாபமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் பிறந்தன..!!

"ம்ம்ம்ம்ம்... ஸ்ஸ்..சொல்லு..!!!"

தாமிராவின் குரலில் ஒரு கரகரப்பு.. அவளது பேச்சை தொடர்ந்து ஒரு ஆவேசமூச்சு.. 'உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்..' என்று..!! ஆதிராவுக்கு உடலும் கைவிரல்களும் வெடவெடக்க.. உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் அடக்கிக்கொண்டு தைரியமான குரலில் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்..!!

"எ..என் புருஷனை.. என் புருஷனை எங்கிட்ட குடுத்திடு..!!"

"ஹ்ஹ.. புருஷனா..?? நான் போட்ட பிச்சைன்னு சொல்லு..!!" தாமிரா கொக்கரித்தாள்.

"சரி.. பிச்சையாவே இருக்கட்டும்.. போட்ட பிச்சையை திரும்ப பிடுங்குறது பாவம் இல்லையா..??"

"ஹாஹாஹா.. பாவம் புண்ணியம் பத்திலாம் பேசக்கூட உனக்கு அருகதை இல்ல..!!"

"ஆமாம்.. அருகதை இல்லாதவதான்.. எனக்கே தெரியும்..!! உன்கிட்ட நான் அதிகாரமா கேட்கல.. கெஞ்சி கேக்குறேன்.. என் புருஷனை விட்டுடு.. அவர் எந்த தப்பும் செய்யல..!! உன் ஆத்திரத்தை தீத்துக்குறதுக்கு என்னை என்னவேனா செஞ்சுக்கோ.. என் உயிரை கூட எடுத்துக்கோ..!! ப்ளீஸ் தாமிரா.. அவரை மட்டும் விட்ரு..!!"

பேசப்பேசவே ஆதிராவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.. அப்படியே தளர்ந்துபோய்.. கால்களும், உடலும் மடிந்துபோய்.. தரையில் அமர்ந்தாள்.. வாயைப் பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்..!!

ஒருசில வினாடிகள்.. தனக்குமுன் எந்த சலனமும், தங்கையிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.. மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தாள் ஆதிரா..!! தாமிராவின் உருவம் இப்போது மறைந்து போயிருந்தது..!! ஆதிரா உடனே அதிர்ந்துபோய் விருட்டென்று எழுந்து நின்றாள்.. அவளை சூழ்ந்திருந்த அடர் இருளைப் பார்த்து கத்தினாள்..!!

"தாமிராஆஆஆ.. தாமிராஆஆஆ..!!!!"

ஆதிரா கத்திக்கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் இப்போது தாமிராவின் குரல் கணீரென்று ஒலித்தது.. ஒரு பாடலைப்போல.. ஏற்ற இறக்கத்துடன்..!!

"ஈரேழு பதினாலு இறகு மயிலாட..."

"ஆட.. ஆட.. ஆட.. ஆட.."
- வீட்டுச்சுவர்கள் அவளது பாடலை அப்படியே உள்வாங்கி எதிரொலித்தன..!!

"முந்நான்கு பனிரெண்டு முத்து மயிலாட.." - ஆதிரா மிரட்சியான விழிகளுடன் சுவர்களை சுற்றி சுற்றி பார்த்தாள்.

"ஆட.. ஆட.. ஆட.. ஆட.."

"வாராத பெண்களெல்லாம் வந்து விளையாட.."

"ஆட.. ஆட.. ஆட.. ஆட.."


"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - நடுக்கம்கொள்ள வைக்கிற மாதிரி தாமிராவின் சிரிப்பொலி. அதைத்தொடர்ந்து,

"GGGGGame or SSSSShame..??" என்று அவளது கொக்கரிப்பு.

ஆட்டம் தொடங்கியாயிற்று என்று ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. ஆட்டத்தில் வென்றுமுடிக்க வேண்டும் என்று அவசரமாய் தன்மனதை திடப்படுத்திக் கொண்டாள்.. குரல்வந்த திசையைப் பார்த்து பதிலுக்கு அலறினாள்..!!

"Game...!!!!!!!!!"

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"

ஒருபக்கம் தாமிரா சிரித்துக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் மூளையை கசக்கிய ஆதிரா ஓரிரு வினாடிகளிலேயே தங்கையின் விடுகதைக்கு விடையை கண்டுபிடித்தாள்.. உடனே பரபரப்பானாள்.. தங்கையும் தானும் முன்பு தங்கிக்கொள்கிற அறைக்கு ஓடினாள்..!! அறைக்குள் அடுக்கியிருந்த பொருட்களை சரசரவென தரையில் இழுத்துப்போட்டாள்.. எதையோ தேடினாள்..!!

அலமாரியின் கப்போர்டை திறக்க.. 'க்க்கீச்ச்ச்..' என்று கத்தியவாறு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது ஒரு வெள்ளை முயல்..!!

"ஆஆஆஆஆஆஆஆ...!!"

ஆதிராவின் அந்த பயமும் பதற்றமும் ஒற்றை வினாடிதான்.. அவசரமாய் சமாளித்துக்கொண்டு அந்த முயலை கண்டுகொள்ளாமல் கப்போர்டுக்குள் தேடினாள்.. அந்த பல்லாங்குழி பலகையை வெளியே எடுத்தாள்..!! மடித்து வைக்கப்பட்ட பலகையை விரிக்க.. உள்ளே இருந்து நழுவியது அந்த மஞ்சள் காகிதம்..!! தாமிரா இறந்த அன்று, ஆதிரா காட்டுக்குள் கசக்கியெறிந்த அதே காகிதம்.. 'நீ எனக்கு வேணுண்டா' என்று தாமிரா கிறுக்கி வைத்திருந்த அந்த காகிதத்தில், இப்போது வேறேதோ கிறுக்கி வைக்கப்பட்டிருந்தது.. புதையல் வேட்டையில் அடுத்த பொருளை கண்டறிவதற்கான குறிப்பு..!!

அவசரமாய் அதை வாசித்த ஆதிரா.. நெற்றியை சுருக்கி சிறிது யோசித்து.. பிறகு சற்றே முகம் பிரகாசமாகி..

"கண்ணாடி..!!"

என்று முனுமுனுத்தாள்.. அந்த அறையில் இருந்து விர்ரென கிளம்பினாள்.. கிளம்பியவள் என்ன நினைத்தாளோ.. சட்டென நின்றாள்.. மேஜை ட்ராவை இழுத்து, அந்த டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்..!! அறையை விட்டு வெளிப்பட.. தாமிராவின் குரல் வீட்டுக்குள் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"

ஹாலுக்குள் பிரவேசித்தவள் பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. 'ஹக்க்க்' என்று திகைத்துப்போய் நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டாள்..!! வீட்டுக்குள் இப்போது ஆங்காங்கே வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும்..!! வெளியே ஓடிவந்த அந்த வெள்ளை முயல்.. அங்குமிங்கும் தவ்விக்கொண்டிருந்த சில அணில்கள்.. நாரைகள், கொக்குகள்.. கருப்புத் தோலும், சிவப்பு கண்களுமாய் பல்லிளித்த ஒரு பூனை.. சோபாவில் நின்று எச்சில் வடித்துக்கொண்டிருந்த ஒரு ஓநாய்.. உத்தரத்து சங்கிலியில் உடலை முறுக்கிக்கொண்டு, தலையை உயர்த்தி நாக்கு நீட்டிய மலைப்பாம்பு.. மேஜையில் படுத்து வாய்பிளந்து கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. இன்னும் இன்னும்..

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!" - தாமிராவின் கேலிக் கெக்கலிப்பு.

மிருகங்களை பார்த்து ஒருகணம் மிரண்டுபோன ஆதிரா.. மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதும், படக்கென ஒரு தைரியம் பெற்றாள்..!!

'இவையெல்லாம் தாமிராவின் சீண்டலே தவிர பயப்பட எதுவுமில்லை.. அவளுக்கு என்னுடன் விளையாடவேண்டும்.. அத்தனை சீக்கிரமாய் என் உயிரை பறித்துவிடமாட்டாள்..!!'

தைரியமுற்ற ஆதிரா தனது தேடுதலை தீவிரப்படுத்தினாள்.. அந்த வீட்டில் இருந்த அத்தனை கண்ணாடிகளிலும் டார்ச் அடித்து பார்த்தாள்.. எந்தக்குறிப்பும் கிடைக்கவில்லை.. மாடிப்படியேறி மேலே ஓடினாள்.. அவளது தலைக்குமேல் விர்ரென்று பறந்தன இரண்டு நாரைகள்..!! பின்னணியில் தாமிராவின் கேலிக்குரல்..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"


தங்கள் அறையின் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து ஏமாந்துபோய் நின்றாள்.. பிறகு திடீரென ஒரு ஞாபகம் வர, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தாள்.. பரபரப்பாய் படியிறங்கினாள்.. பச்சோந்திகள் நெளிந்த ஒரு படியை தாவிக்குதித்து தரையில் விழுந்து புரண்டாள்..!!

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"

வீட்டு தரையோடு அடங்கியிருந்த இருந்த நிலவறைக்கதவை திறந்தாள்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!"

மரஏணியில் கால்பதித்து அவள் கீழிறங்க.. பக்கவாட்டில் இறங்கி, அவளை முந்திக்கொண்டு உள்ளே ஓடியது அந்த காட்டுப்புலி..!!

யானைத் தந்தங்கள் பதிக்கப்பட்ட அந்த ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடியில் டார்ச் வெளிச்சத்தை தெளித்தாள்.. தனக்கு அருகே நின்று, 'க்க்கர்ர்ர்.. க்க்கர்ர்ர்..' என உறுமிக்கொண்டிருக்கிற காட்டுப்புலியை கண்டுகொள்ளாமல், தூசுபடிந்த கண்ணாடியின் பரப்பில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை வாசித்தாள்..!!

"வெள்ளையாம் வெள்.." அவள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அறைக்குள அலறலாக ஒலித்தது தாமிராவின் பாடல்.

"வெள்ளையாம் வெள்ளைக்கொடம்.. தரையில விழுந்தா சல்லிக்கொடம்..!!! ஹாஹாஹாஹா..!!"

விடுகதையின் விடையை சட்டென கண்டுபிடித்த ஆதிரா.. மரஏணி நோக்கி ஓடினாள்.. நிலவறையில் இருந்து வெளிப்பட்டாள்.. கதவுக்கருகே நின்று 'ஊஊஊஊஊஊஊ'வென்று ஊளையிட்ட ஓநாய்க்கு..

"ஆஆஆஆஆஆஆ..!!"

என ஒரு அலறலை மட்டும் உதிர்த்து உருண்டுவிட்டு, மீண்டும் எழுந்து ஓடினாள்..!!

அப்புறம் சிறிதுநேரம் ஆதிரா அவ்வாறுதான் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.. அவ்வப்போது வழியில் குறுக்கிடுகிற மிருகங்களை அலட்சியம் செய்தவாறு.. அலறலாய் வீட்டுக்குள் ஒலிக்கிற தாமிராவின் குரலுக்கு மிரண்டுகொண்டே.. கால்க்காயத்தில் 'சுருக் சுருக்'கென்று கிளம்பிய வலியை கண்டுகொள்ளாமல்..!!

தங்கையுடன் சிறுவயதில் சிரித்து விளையாடிய புதையல்வேட்டை விளையாட்டு.. இப்போது ஆவியான அவளுடன் அதே விளையாட்டை மீண்டும் மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்தாள்.. கணவனை கண்டுபிடித்துவிடுகிற வேகத்துடனும், வெறியுடனும்..!!

ரெஃப்ரிஜிரேட்டர் திறந்தாள்.. உள்ளே அலைஅலையாய் நெளிந்துகொண்டிருந்தன சில விஷப்பாம்புகள்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த பாம்புகளுக்கு இடையே கையை நீட்டினாள்.. முட்டை அடுக்குகளுக்குள் செருகியிருந்த அந்த ஆட்டோஃக்ராப் புத்தகத்தை வெளியே உருவினாள்..!!

"வ்வ்வ்வ்விஷ்ஷ்ஷ்க்க்க்க்...!!"

சீறிய ஒரு கரியநிற பாம்பின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினாள்.. ஆட்டோஃக்ராப் புத்தகம் திறந்து அடுத்த குறிப்பை வாசித்தாள்.. வாசித்த அடுத்தநொடியே வீட்டுக்கு வெளியே ஓடினாள்..!!

கேட்டில் தொங்கிய தபால்பெட்டியை திறந்தாள்.. சடசடவென சிறகடித்து பறந்தது ஒரு சிட்டுக்குருவி.. உள்ளே ஜம்மென்று வீற்றிருந்தது அந்த மாத்ரியோஷ்கா பொம்மை..!! பரபரவென அந்த பொம்மையை திருகி திறந்தாள்.. அதனுள்ளே அடுத்த பொருளுக்கான புதிர் நிரம்பிய துண்டுச்சீட்டு..!! விடையை ஓரளவுக்கு அனுமானித்தவாறே வீட்டுக்குள் விரைந்தாள் ஆதிரா..!!

“மஞ்சத்தே படுத்துவாழ்ந்து மருவப்பார்பார்ப்பாள் தாசியல்ல.. வஞ்சியராய் மேல்புரண்டு வசியஞ்செய்வாள் வேசியல்ல..!!" - வீட்டுக்குள் தாமிராவின் குரல் எல்லா திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!

படிக்கட்டுகளில் படபடவென ஏறி தங்கள் அறையை அடைந்தாள்.. படுக்கையில் கிடந்த தலையைணையை எடுத்து வீச.. அந்த புத்தகம் கிடைத்தது.. சிவப்பு எழுத்துக்களில் அதன் தலைப்பு..!!

"கண்ணாமூச்சி ரே ரே..!!"

அதன் பின்அட்டையில் இன்னொரு விடுகதை..!!

"வேலியில படர்ந்திருக்கும்..
வெள்ளையா பூ பூக்கும்..
கனியும் செவந்திருக்கும்..
கவிஞருக்கும் கைகொடுக்கும்..!!"


ஆதிரா சிலவினாடிகள் நெற்றியை தேய்த்தாள்.. அவளது தோள்ப்பட்டையில் வந்தமர்ந்து 'க்காஆஆ.. க்காஆஆ..'வென காதுக்குள் இரைந்த காகத்தை, வெறுப்புடன் ஒரு அறை அறைந்து விரட்டினாள்..!! அதேநேரம் விடுகதைக்கு விடையும் அவளது மூளையில் பளிச்சிட.. படியிறங்கி ஹாலுக்கு ஓடினாள்.. அவளது பாதத்தை தொடர்ந்தே நெளிநெளியாய் நெளிந்து தாங்களும் கீழிறங்கின சில பாம்புகள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"

ஹாலில் தாமிராவின் அகங்காரச் சிரிப்பும், அதன் எதிரொலிப்பும்..!!

"ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....!!!!!"

வீட்டுப் பின்புறக்கதவை திறந்தாள் ஆதிரா.. திறந்த வேகத்தில் கும்மிருட்டுக்குள் திடுதிடுவென ஓடினாள்.. வீட்டுக்குள்ளிருந்த விலங்குகளும், பறவைகளுமே இப்போது அவளை மொத்தமாய் பின்தொடர்ந்தன..!!

வீட்டின் பின்புறத்தில் உயரமாய் வளர்ந்திருந்தது அந்த நாவல்மரம்.. அதனருகே வேலியில் படர்ந்திருந்தது அந்த கோவைப்பழக்கொடி..!! மரத்தை நெருங்கிய ஆதிரா.. அந்த புதருக்குள் கைவிட்டு கிளற..

"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!"

புதருக்குள் இருந்து புற்றீசல் போல வெளிப்பட்டு, சரசரவென பறந்தோடின நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்.. பலவித வண்ணங்களுடனும், கண்ணைப்பறிக்கும் அழகுடனுமான பட்டாம்பூச்சிகள்.. ஆதிராவின் முகத்தை மோதி, இறகுகளால் வருடிக்கொடுத்து, ஜிவ்வென்று பறந்து சென்றன அத்தனை பட்டம்பூச்சிகளும்..!! ஒருகணம் திகைத்துப்போன ஆதிரா.. அப்புறம் அந்தப் புதருக்குள் இருந்து கிளம்பிய ஒரு வெளிச்சக்கீற்றை கவனித்தாள்.. கஷ்டப்பட்டு கையை நீட்டி அந்தப்பொருளை வெளியே எடுத்தாள்..!!

செல்ஃபோன்.. ஆதிராவின் பழைய செல்ஃபோன்.. தாமிராவுடன் குழலாற்றில் தவறிவிழுந்த செல்ஃபோன்..!! ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் திரையில் பளிச்சிட்ட வாசகம்.. ஆதிராவுக்கு தாமிரா நியமித்த அடுத்த இலக்கிற்கான குறிப்பை வழங்கியது..!! அதை வாசித்து முடித்த ஆதிரா.. ஒரிருவினாடிகள் நெற்றியை சுருக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தாள்.. விடையை தீவிரமாக யோசித்த அவளது மூளைக்குள் ஒரு பொறி தட்டுப்பட..

"சி..சிங்கம்.. சிங்கம்.." என்று தடுமாற்றமாய் முனுமுனுத்தாள். உடனே தொடர்ந்து,

"சிங்கமலை..!!" என்று தைரியமும், நம்பிக்கையுமாய் உரக்க கத்தினாள்.

ஆதிராவின் தேடுதல்வேட்டை மீண்டும் தீவிரமானது.. சிங்கமலைக்கு கொண்டுசெல்கிற அந்த குறுகலான மலைப்பாதையில் விர்ரென வேகமெடுத்து கிளம்பினாள்.. சுற்றிலும் அடரிருள் சூழ்ந்திருக்க, அதற்கிடையே டார்ச்லைட் வெளிச்சத்துடன் ஓடினாள்..!! அவளுடன் சேர்ந்தே விரைந்தன விலங்குப்படையும், பறவைக்கூட்டமும்..!! அவளது உச்சந்தலைக்கு மேலே காற்றில் மிதந்து மிதந்து நெளிந்து சென்றது தாமிராவின் ஆவியுருவம்..!! மலைச்சரிவில் நிலவிய மயான அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது தாமிராவின் சிரிப்பொலி..!!

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"

செருப்பு அணியாத ஆதிராவின் பட்டுப்பாதத்தை குத்திக்கிழித்தன பாதையில் கிடந்த பாறைக்கற்கள்.. கண்ணீர் வழிந்த அவளது தளிர்முகத்தை தடவிக்கீறின வழியில் வளர்ந்திருந்த முட்செடிகள்..!! வெட்டுக்காயத்தின் சுருக் சுருக்கென்ற வலியை, பற்கள் கடித்து பொறுத்துக்கொண்டு.. வேகவேகமாய் மலைச்சாலையில் மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! மழை இப்போது நின்றிருந்தாலும்.. அது விட்டுச்சென்றிருந்த ஈரம் இன்னும் பாதையில் தேங்கியிருந்தது.. நடந்துசென்ற ஆதிராவின் கால்களை வழுக்கச் செய்தது..!!

"ஆஆஆஆஆஆ..!!" அவ்வப்போது இடறி விழுந்து ஈனஸ்வரத்தில் கத்தினாள்.

ஒருவழியாக சிங்கமலையின் உச்சியை வந்தடைந்தாள்.. அவளுடன் வந்த மிருகங்களும், பறவைகளும் ஆங்காங்கே நகர்ந்து நின்றுகொண்டன.. தாமிராவின் உருவத்தை இப்போது காணவில்லை.. விலங்குகளுக்கு மத்தியில் தனியாளாய் தவிப்புடன் நின்றிருந்தாள் ஆதிரா..!! அவளுக்கு மூச்சிரைத்து மார்புகள் ஏறியிறங்கின.. நெஞ்சுக்கூடு காற்றுக்காக ஏங்கி பதறியது..!!

'என்ன செய்வது இப்போது.. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்திருக்கிறாள்..??'

எதுவும் புரியாமல்.. வெண்ணிலாவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த அந்த பிரதேசத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்.. சற்றே தைரியம் பெற்றவளாய் தங்கையின் பெயரை சொல்லி அழைத்தாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!" - அவள் அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும்போதே,

"அக்காஆஆஆஆஆ..!!!" - இதயத்தை பிசைவது மாதிரி ஒலித்தது தாமிராவின் ஓலம்.

பதறிப்போன ஆதிரா, சப்தம் வந்த திசைப்பக்கமாக சற்றே நகர்ந்தாள்.. மலைவிளிம்பை அடைந்து கீழே வெளிச்சத்தை தெளித்தாள்..!! தாமிராவின் உருவம் இப்போது கண்ணுக்கு புலப்பட்டது.. மகிழம்பூ மரக்கிளைகளுக்குள் பின்னிக்கொண்டு கிடந்தாள் தாமிரா.. உயிர்துறக்கும் தருவாயில் உடன்பிறந்தவளை பார்த்து அழைத்தது போலவே, இப்போதும் இவளைநோக்கி கைநீட்டி பரிதாபமாக அழைத்தாள்..!!

"அக்காஆஆஆஆஆ..!!!"

தங்கையை அந்தநிலையில் பார்க்கவும், அவளது அந்த பரிதாபக்குரலை கேட்கவும்.. ஆதிராவுக்கு உடல் சில்லிட்டுப்போனது, அப்படியே அழுகை பீறிட்டு கிளம்பியது..!! கண்களில் இருந்து பொலபொலவென நீர்கொட்ட.. 'ஓ'வென்று அழுது அரற்றியவாறே.. தங்கையை பார்த்து ஏக்கமாக கைநீட்டினாள்..!!

"தாமிராஆஆஆ..!!" என்று தவிப்புடன் அழைத்தாள். ஆனால் தாமிராவோ,

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!"

என்றொரு கேலிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு காற்றில் மாயமாய் மறைந்துபோனாள்..!! கண்ணில் உறைந்துபோன கண்ணீருடன், ஆதிரா மட்டும் இப்போது அந்த மலையுச்சியில் தனித்து நின்றிருந்தாள்..!!

"தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! எங்கடி இருக்குற..??"

"...................................."

"வெளையாண்டது போதுண்டி.. அவரை எங்க வச்சிருக்குற.. சொல்லு..!!"

"...................................."

ஆதிரா கெஞ்சினாள்.. தாமிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. சுற்றிலும் அடர்த்தியான நிசப்தம்..!! பனி படர்ந்த உயரமான மலைச்சிகரம்.. நிலவு வெளிச்சத்தில் நனைந்திருந்த காட்டுமரங்கள்.. வீசும் காற்றின் 'விஷ்ஷ்ஷ்ஷ்' என்ற ஓசை.. மலையடிவாரத்தில் ஓடுகிற குழலாற்றின் 'சலசலசல' சப்தம்.. அவ்வப்போது வாய்திறந்து கர்ஜித்த காட்டுப்புலி.. கையில் டார்ச்சுடன் ஒற்றையில் நிற்கிற ஆதிரா..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!"

திடீரென காட்டுமரங்களுக்குள் எதிரொலித்தது தாமிராவின் குரல்.. உடனே ஆதிராவின் மூளைக்குள் ஒரு பளிச்..!! முன்பொருமுறை அவள் கண்ட கனவில்.. தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடி.. இதே சிங்கமலையை வந்தடைந்தது நினைவுக்கு வந்தது..!!

'அப்போது.. இங்கே.. அவளை.. அவளை மட்டுமல்ல அவரையும்..'

மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதுமே, மறுபடியும் பரபரப்பானாள் ஆதிரா.. கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, கையில் டார்ச்சுடன் ஓடினாள்..!! சிங்கமுக சிலையின் பக்கவாட்டு மலைக்கு சென்றாள்.. மலையை குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த குகையை அடைந்தாள்..!! சற்றே குனிந்து பார்த்து, குகைக்குள் டார்ச் அடித்தாள்..!!

வட்டமாக குவிந்த டார்ச் வெளிச்சத்தில்.. குகைக்குள் படுத்திருந்த சிபி பார்வைக்கு வந்தான்..!! மகிழம்பூக்களால் ஆன மலர்ப்படுக்கையில் மகாராஜாவை போல அவனை கிடத்தியிருந்தாள் தாமிரா.. நீண்டதொரு மயக்கத்தில் அவனை ஆழ்த்தியிருந்தாள் என்று தோன்றியது..!! கணவனின் முகத்தை பார்த்ததும் ஆதிராவின் மனதுக்குள் அப்படியொரு உன்னதமான சிலிர்ப்பு.. கண்களில் நீர் முட்டியது.. உடலும், உதடுகளும் படபடத்தன.. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரவ, அப்படியே 'ஓ'வென்று அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு..!!

"அத்தான்ன்ன்..!!!" - ஆதிரா அலறிக்கொண்டே சிபியை நோக்கி ஓட,

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!" என்று எங்கிருந்தோ வந்து அவளை இடைமறித்தாள் தாமிரா.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" என்று கோரமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.

"தாமிராஆஆ..!!" தவிப்பாக சொன்னாள் ஆதிரா.

"அவ்வளவு ஈசியா அவரை எடுத்துட்டு போக விட்டுடுவனா..?? ஹாஹா..!!"

தாமிரா அகங்காரமாக சிரித்தாள்..!! கழுத்தை முறுக்கி நெளித்து, கண்களை விரித்து செவ்விழிகளை உருட்டி காட்டினாள்.. வாயை அகலமாக திறந்து, கூர்பற்களை கடித்து நெரித்து காட்டினாள்.. 'ஆஆஹ்.. ஆஆஹ்..' என்று ஆதிராவை கடித்துவிடுவது போல பாய்ந்தாள்.. அக்காவை பயமுறுத்தி பதறவைக்க முயன்றாள்..!!


ஆதிராவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தாள்..!! முன்பு இதே தாமிரா உயிரோடு இருந்தபோது.. தனது போர்வைக்குள் நுழைந்து முகத்தில் டார்ச் அடித்து தன்னை பயமுறுத்தியதெல்லாம்.. ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. உடனே அவளது உதட்டில் ஒரு வறண்ட புன்னகை..!! அப்போதெல்லாம் 'பேய்.. பிசாசு..' என்று பதறித்துடித்த ஆதிரா.. இப்போதோ கொஞ்சம்கூட பயமில்லாமல் விறைப்பாக நின்றிருந்தாள்..!!

"போதுண்டி.. நிறுத்து.. உன்னை பார்த்து எனக்கு பயமில்ல..!!" என்று துணிச்சலாக சொன்னாள்.

"பயப்பட மாட்டியா..?? பயப்பட மாட்ட..?? ம்ம்..??" தாமிரா தலையை அப்படியும் இப்படியும் விகாரமாய் அசைத்தவாறு கேட்டாள்.

"பயப்படமாட்டேன்..!! உன்னை பார்த்து நான் ஏன் பயப்படனும்..?? நீ என் தங்கச்சி.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!!"

ஆதிரா கண்களில் நீர்பனிக்க சொன்னாள்.. அதைக்கேட்டு தாமிராவும் அப்படியே அடங்கிப்போனாள்.. அவளது சீற்றம் வெகுவாக குறைந்து போனது.. 'உஷ்ஷ்ஷ்.. உஷ்ஷ்ஷ்..' என்ற பெருமூச்சு மட்டும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..!!

"வெளையாண்டது போதும் தாமிரா.. அவரை எங்கிட்ட ஒப்படைச்சிடு..!!" ஆதிரா கேட்க,

"முடியாது..!!" தாமிரா மறுத்தாள்.

சற்றே எரிச்சலான ஆதிரா தங்கையின் உருவத்தை மீறி குகைக்குள் செல்ல முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. பாறையில் மோதியதுபோல பின்புறமாக உந்தித்தள்ளப் பட்டாள்..!! தாமிரா ஒருவித ஆவேசத்துடன் முன்னோக்கி நகர.. ஆதிரா பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.. இருவரும் இப்போது குகையை விட்டு வெளியே வந்திருந்தனர்..!!

"ப்ச்.. எங்கிட்ட இருந்து இன்னும் என்னதான் எதிர்பாக்குற..?? நீ வச்ச கேம்லயும் நான் ஜெயிச்சுட்டேன்.. ப்ளீஸ்.. அவரை விட்ரு..!!"

"கேம் வச்சது அவரை கண்டுபிடிக்கிறதுக்குத்தான்.. கொண்டுபோறதுக்கு இல்ல..!!"

"எ..என்னது..??"

"கொண்டுபோறதுக்கு இன்னொரு கேம்..!!"

"இன்னொரு கேமா..??" தங்கை சொன்னதை கேட்டு ஆதிரா சற்றே கலங்கினாலும்,

"சரி சொல்லு.. என்ன கேம்..??" என்று உடனடியாய் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகேட்டாள்.

"அதை நீதான் கண்டுபிடிக்கணும்..!!"

"எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!"

"என்ன கேம்ன்றதையே நீதான் கண்டுபிடிக்கணும்..!!" சொல்லிவிட்டு தாமிரா விகாரமாக சிரித்தாள்.

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!"

'என்னடா இது புது குழப்பம்?' என்று ஆதிரா திகைத்துப்போய் நிற்க.. அவளைப்பார்த்து கைகொட்டி கேலியாக சிரித்தாள் தாமிரா..!! கழுத்தை வளைத்து தலையை ஆட்டி.. கையை விரித்து விரல்களை அசைத்து.. பாட்டு பாடினாள்..!!

"கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!"

"ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!" - பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள்.

ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!! அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!! சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

"Game or Shame..??"

தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

"என்ன கேம்..??" என்று உறுமினாள்.

"அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??"

ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

"GGGame..!!!!"

அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

"ஆஆஆஆஆ..!!"

கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!! வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!

ஆதிரா தனது இலக்கை அடைய அத்தனை எளிதாக அனுமதிக்கவில்லை தாமிரா.. அவளும் அக்காவுடன் சேர்ந்தே மலைச்சரிவில் ஏறினாள்.. அக்காவின் காலுக்கடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்றாள்.. 'ஊஊ.. ஊஊ..' என்று ஊளையிட்டவாறு அவளை மிரட்ட முயன்றாள்..!!

"பார்த்து பார்த்து... கீழ விழுந்துடப்போற..!!" என்று கெக்கலித்தவாறே, ஆதிராவின் காலை பிடித்து படக்கென கீழே இழுத்தாள்.

"ஆஆஆஆஆ..!!!!"

பிடிமானம் நழுவிய ஆதிரா, அலறிக்கொண்டே கீழே சரிந்தாள்.. சரசரவென நழுவி வந்தவள், பாறையிடுக்கில் முளைத்திருந்த ஒரு குற்றுச்செடியை பற்றிக்கொண்டாள்.. கால்கள் ரெண்டும் ஆதாரம் சிக்காமல் அலைபாய, அப்படியே அந்தரத்தில் ஊசலாடினாள்..!!

இப்போது தாமிரா மெல்ல நகர்ந்து அக்காவின் அருகே சென்றாள்.. அவளது முகத்தை பார்த்து கோரமாக கனைத்தாள்..!!

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!"

"தாமிராஆஆ.. தாமிராஆஆ ப்ளீஸ்டி..!!" ஆதிரா பதறிப்போய் கெஞ்சினாள்.

"விழப்போற.. விழப்போற.. பார்த்து பார்த்து..!! ஹாஹாஹாஹா..!!"

"ஆஆஆஆஆஆ...!!"

"விழுந்தா அவ்வளவுதான்.. என்னை மாதிரியே தலை உடைஞ்சு செத்து போயிருவ..!!"

"ஆஆஆஆஆஆ...!! முடியலடி..!!"

"அப்போ விழுந்துடு.. ஹாஹா..!! ரெண்டு பேரும் சேர்ந்து விழலாமா.. செத்து செத்து வெளையாடலாமா..?? ஹாஹாஹாஹா..!!"

"தாமிராஆஆஆஆஆ...!!!!!!!!" வேதனையோடு அலறினாள் ஆதிரா.

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" விடாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.

ஒருவழியாக உடலை எக்கி.. கால்களை இன்னொரு பாறையில் அழுத்தமாக பதித்து.. ஆதிரா மீண்டும் மேல்நோக்கி முன்னேறினாள்..!! தாமிரா அவளை சீண்டிக்கொண்டே வந்தாள்.. அவளது கை,கால்களை இடறி விட்டாள்.. கூந்தல் மயிர்களை பற்றி இழுத்தாள்.. விகாரமாக இளித்து அவளை பயமுறுத்த முயன்றாள்..!!

"ஆஆஆஆஆஆ...!!"

அவளது சீண்டலை பொறுத்துக்கொண்டே ஆதிரா அந்த மலரை நெருங்கினாள்.. கையெட்டும் தூரத்திற்கு அந்த மலர் வந்திருந்தது..!! ஒருகையால் பாறையை பற்றிக்கொண்டு.. இன்னொரு கையை நீட்டினாள்.. கைவிரல்களை விரித்தாள்.. அந்த மலரை பற்றினாள்..!! அதேநேரத்தில் அவளது கால் ஒன்று விழுக்கென்று வழுக்கிக்கொள்ள.. பிடிமானம் இழந்துபோய், அப்படியே கடகடவென கீழே உருண்டாள்.. அவளது தலை எதிலோ சென்று நச்சென்று மோத..

"ஆஆஆஆஆஆ...!!" வென்று அலறிக்கொண்டே சுயநினைவை இழந்தாள்.

அத்தியாயம் 26

"ஆதிரா.. ஆதிரா..!!" யாரோ கன்னத்தில் பட்பட்டென்று தட்ட,

"ஹ்ஹ்ஹ்ஹா...!!" ஆதிரா படக்கென கண்விழித்தாள்.

கண்விழித்ததுமே.. கன்னத்தை தட்டியது யாரென்றுகூட கவனியாமல்.. விருட்டென எழுந்து அமர்ந்து.. இறுகிப்போயிருந்த தனது கைவிரல்களைத்தான் முதலில் பார்த்தாள்..!! அவளது கைக்குள் அந்த சிவப்பு மலரை பார்த்ததும்தான் அவளிடம் ஒரு அமைதி.. கண்ணிமைகள் மூடி மெலிதாக ஒரு நிம்மதி மூச்சை வெளிப்படுத்தினாள்..!!

உடனே தன் முகத்தை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. நிலவொளியில் தெரிந்த கணவனின் முகத்தை பார்த்ததும் அவளது மனதுக்குள் அப்படியொரு ஆனந்தம்.. கன்னத்தில் குழிவிழ சிரித்த சிபியை பார்த்து, கண்களில் கண்ணீர் முட்ட புன்னகைத்தாள்..!!

"அத்தான்ன்னன்..!!" என்று அவனை ஆரத்தழுவிக் கொண்டாள்.

"ஆதிராஆஆ..!!" அவனும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

"உ..உங்களுக்கு.. உங்களுக்கு ஒன்னும் இல்லையே..??" அவனது உடம்பை அன்பாக, கவலையாக தடவிப் பார்த்தாள் ஆதிரா.

"எனக்கு ஒன்னுல்ல ஆதிரா.. ஐ'ம் ஆல்ரைட்..!!"

"தா..தாமிரா.. தாமிரா உங்களை.." பேச்சு வராமல் தடுமாறினாள் ஆதிரா.

"தெரியும் ஆதிரா..!!"

"நான் ரொம்ப பயந்துட்டேன் அத்தான்.. அப்படியே துடிச்சுப் போயிட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. புரியுது..!! அவ உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டாளா..??"

"இ..இல்லத்தான்.. அப்படிலாம் இல்ல..!!"

தடுமாற்றமாக சொன்ன ஆதிரா.. இப்போது அந்த இடத்தை சுற்றி முற்றி பார்த்தாள்..!! அத்தனை நேரம் நடந்த அமளி துமளிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்.. அமைதியாக உறைந்திருந்தது சிங்கமலை சிகரம்..!! மிருகங்களையோ பறவைகளையோ காணவில்லை.. தாமிராவின் ஆவியுருவும் பார்வைக்கு தென்படவில்லை..!! குழலாற்றின் சப்தம் மட்டும் சன்னமாக 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்' என்று கேட்டுக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பினாள்.. அவனது முகத்தை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னாள்..!!

"எ..என் தங்கச்சி.. என் தங்கச்சியை.. நா..நான்.. நான்தான் கொன்னுருக்கேன் அத்தான்.."

"ப்ச் ப்ச்.. ஆதிரா.. என்ன பேச்சு இது..??"

"ஆ..ஆமாம் அத்தான்.. அது தெரியாம.."

"அதுலாம் ஒன்னுல்ல.. இப்படிலாம் எப்போவும் பேசாத..!! தாமிரா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்.. அதுல உன் தப்பு எதுவும் இல்ல..!!"

"இல்லத்தான்.. நான்தான் அவளை.."

"சொல்றேன்ல.. இனிமே அந்தப்பேச்சு வேணாம்.. புரியுதா..??"

ஆதிராவை இழுத்து அணைத்து.. அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான் சிபி..!! அவளும் இப்போது கணவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள்.. அவனது அணைப்பு தந்த கதகதப்புக்குள் சுகமாக அடங்கிப்போனாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. தயங்கி தயங்கி அவனை அழைத்தாள்..!!

"அ..அத்தான்..!!"

"ம்ம்..??"

"நான் ஒன்னு கேக்கட்டுமா..??"

"கேளுடா..!!"

"நெ..நெஜமாவே.. நெஜமாவே என்னை நீங்க லவ் பண்றீங்களா..?? என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா..??" ஆதிரா பரிதாபமாக கேட்க, அவளது முகத்தை கூர்மையாக பார்த்தான் சிபி.

"லூசு.. என்ன கேள்வி இது..?? உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. அப்படிலாம் இருந்திருந்தா உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிருப்பனா..?? உன்னை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஆதிரா.. என் லைஃப்ல இனிமே எனக்கு எல்லாமே நீதான்.. போதுமா..??"

"ம்ம்ம்ம்..!!!!!!!!" ஆதிராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, கணவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணுடி.. நீ பொண்டாட்டியா கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..!! இனிமே இந்தமாதிரிலாம் உனக்கு எப்போவும் சந்தேகம் வரக்கூடாது.. சரியா..??"

"ம்ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா அழுகையுடனே சொல்ல,

"லூசு..!!" என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி.

அடுத்தநாள் அதிகாலை..

ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!! சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!

"ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??"

"என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!"

"எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??" சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.

"ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??"


"ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??"

"ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!"

"அப்போ ரெடியா..??"

"ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!"

"ஹாஹா..!!"

சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க..

"ஆஆஆஆ..!!" ஆதிரா வேதனையில் முனகினாள்.

"என்னாச்சு..??" பதறினான் சிபி.

"காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!" வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.

"ஓ.. ஸாரி ஸாரி..!!"

"ச்ச.. பரவாலத்தான்..!!"

"ம்ம்.. கால்வலின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது..!! நான் இல்லாத இந்த ரெண்டுநாளும்.. டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்டியா..??" கேட்டவன், உடனே நம்பிக்கை இல்லாமல்,

"சாப்பிட்டுருக்க மாட்டியே..??" என்று கேட்டான்.

"ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??"

"ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??"

"சரித்தான்..!!"

சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!

"ம்ம்.. சாப்பிடு..!!"

என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!!

"எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!"

"என்ன..??"

"முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!"

"எ..என்னன்னு சொல்லு..!!"

"கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??" ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,

"காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??" என்று கேட்க,

"ஒ..ஒன்னு..!!" பதில் சொன்னான் சிபி.

"மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??"

"ம்ம்..!!" அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து,

"உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!" என்று தடுமாறினான்.

"ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!"

அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!

வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!

டிக்கியில் பேகை திணிப்பதற்கென சிபி காருக்கு பின்புறம் செல்ல.. ஆதிராதான் முதலில் சென்று கார்க்கதவை திறந்தாள்.. கதவை திறந்ததுமே நாசிக்கருகில் அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. காரின் உட்புறத்தை குப்பென நிறைந்திருந்தது மகிழம்பூ வாசனை..!! உடனே ஆதிராவின் கண்களில் ஒரு பரவசம் பிறக்க..

"தாமிரா.." என்று மெலிதாக முனுமுனுத்தாள்.

கார் முன்சீட்டின் மையமாக வைக்கப்பட்டிருந்த அந்த மோதிரம் இப்போது அவளது பார்வையில் பட்டது.. மெலிதான ஒரு புன்னகையுடனும், சிறு தயக்கத்துடனும் அந்த மோதிரத்தை கையில் எடுத்தாள்..!!

"என்னாச்சு ஆதிரா..??" அந்தப்பக்கம் காருக்குள் வந்தமர்ந்த சிபி ஆதிராவிடம் கேட்டான்.

"தா..தாமிரா.. தாமிரா வந்துட்டு போயிருக்கா அத்தான்..!!"

"என்னது..??"

"அ..அவ.. அவதான் அன்னைக்கு ஆத்துக்குள்ள.. இந்த மோதிரத்தை எங்கிட்ட இருந்து எடுத்துட்டு போனது.. இப்போ அவளே வந்து வச்சுட்டு போயிருக்கா..!!"

சொல்லிக்கொண்டே ஆதிரா அந்த மோதிரத்தை கணவனிடம் நீட்ட.. அதைப்பார்த்த சிபிக்கு இப்போது பட்டென முகம் மாறியது.. என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு உட்பட்டவனாய் அந்த மோதிரத்தையே இமைக்காமல் பார்த்தான்..!!

"என்னாச்சு அத்தான்..??"

"ஒ..ஒன்னுல்ல ஆதிரா..!! இ..இது.. இந்த மோதிரம்.. தாமிராவை நான் ப்ரொபோஸ் பண்ணினப்போ அவகிட்ட கொடுத்தது.. அப்போ அதை வாங்கிக்காம விட்டெரிஞ்சுட்டு போய்ட்டா..!!"

"ஓ..!!"

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நீ போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்..!!"

சொல்லிவிட்டு ஆதிராவின் முகத்தை ஏக்கமாக பார்த்தான் சிபி.. அவனுடைய மனதை புரிந்துகொண்ட ஆதிரா, முகத்தில் ஒரு புன்னகையுடன் அவனுக்கு முன்பாக தனது விரல்களை நீட்டினாள்..!! உடனடியாக உற்சாகமுற்ற சிபியும் ஆதிராவின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான்..!!

"லவ் யூ ஆதிரா..!!" என்றான் உணர்ச்சிப் பெருக்கோடு.

எல்லோரும் வாசலில் நின்று கையசைக்க, கார் மெல்ல கிளம்பியது.. வீட்டை விட்டு வெளியேறி பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுத்து விரைந்தது.. அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் அகழியைத்தாண்டி பறந்து கொண்டிருந்தது..!! சலசலத்து ஓடுகிற குழலாற்றையே பார்த்துக்கொண்டு வந்த ஆதிரா, ஒருவித அயர்ச்சியுடன் காணப்பட்டாள்.. இரண்டு மூன்று நாட்களாக தூக்கமின்மை.. இப்போது சற்று நேரத்துக்கு முன்பாக உட்கொண்ட மாத்திரைகள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சில் பரவியிருந்த நிம்மதி.. எல்லாமுமாக சேர்ந்து அவளது இமைகளை மெல்ல செருகச்செய்தன..!!

"என்னாச்சு ஆதிரா.. ஒரு மாதிரி இருக்குற..??"

"தூக்கம் வர்ற மாதிரி இருக்கு அத்தான்..!!"

"ஹஹா.. அவ்ளோதானா.. தூக்கம் வந்தா தூங்க வேண்டியதான..?? தூங்கு ஆதிரா.. எந்தக்கவலையும் இல்லாம கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு..!!"

"ம்ம்.. சரித்தான்..!!"

புன்னகையுடன் சொன்ன ஆதிரா, சிபியின் பக்கமாக நகர்ந்தாள்.. அவன்மீது சாய்ந்து தோள்மீது முகத்தை பதித்துக்கொண்டாள்.. கணவன் காரோட்டுவதை பார்த்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணுறங்கிப் போனாள்.. நிம்மதியாக..!!

(இங்கதான் கதையை முடிக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா..)

ஆதிராவுக்கு விழிப்பு வந்தபோது.. சிலவினாடிகள் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. எங்கிருக்கிறோம் என்றுகூட அவளது புத்திக்கு விளங்கவில்லை..!! இமைகளை மெல்ல பிரித்து விழிகளை கசக்கி பார்த்தாள்.. அவள் படுத்திருந்த இடத்தை சுற்றிலும் வெள்ளையாய் பனிமண்டலம்.. அருகில் இருக்கிற பொருட்கள் கூட கண்ணுக்கு புலப்படவில்லை..!!

"விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்..!!!"

திடீரென அவளது காதுக்குள் அந்த சப்தம்.. அதைத்தொடர்ந்து அவளது முகத்தில் மிருதுவாய் எதுவோ அறைந்தது.. ஆதிரா திகைத்துப்போய் பார்க்க, அடர்பனிக்குள் அந்த சிவப்புத்துணி படபடத்து மறைந்தது..!!

"ஹ்ஹக்க்க்..!!"

விருட்டென எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.. மிரட்சியாக பார்த்துக்கொண்டே பனியை விலக்கி மெல்ல நடந்தாள்..!! நெருக்கமாய் அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களுக்குள் நடப்பது கொஞ்சம் கொஞ்சமாய் அவளது புத்திக்கு புலப்பட்டது..!!

"அத்தான்.. அத்தான்..!!" சிபியை ஒருமுறை அழைத்து பார்த்தாள்.

சூழ்ந்திருந்த பனிமூட்டம் இப்போது மெல்ல விலக.. அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து நீளமாக ஓடிய அந்த குறுகலான பாதை தெளிவாக தெரிந்தது.. பாதையின் இருபுறமும் பழுப்புநிற மரங்கள், பச்சைநிற செடிகொடிகள்..!! பாதை பார்வைக்கு புலப்பட்டதுமே.. ஆதிரா மெல்ல மெல்ல வேகமெடுத்தாள்.. அவளது நடை கொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டமாக மாறியது..!!


"அத்தான்.. அத்தான்..!!"

அப்படியும் இப்படியுமாய் பார்வையை அலைபாயவிட்டு அலறிக்கொண்டே ஓடினாள்..!! கொஞ்ச தூரம் ஓடியதும் அப்படியே ப்ரேக் போட்டது மாதிரி நின்றாள்.. கண்முன்னே அவள் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அவளுக்கு முன்பாக நீளமாகவும், அகலமாகவும் விரிந்து கிடந்தது அந்த நீலக்கடல்.. கடற்கரை மணலை அதிக சப்தமில்லாமல் வந்து, கொஞ்சி கொஞ்சி சென்றுகொண்டிருந்தன கடலலைகள்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தவகை உயிரினமும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை..!! ஆளில்லாத் தீவொன்றில் தனித்து விடப்பட்டிருந்தாள் ஆதிரா..!!

என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாமல்.. நுரைநுரையாய் பொங்கி வந்த அலைகளையே ஆதிரா மிரட்சியாக பார்த்துக்கொண்டிருக்க.. அவளது காதோரமாய் அந்தக்குரல் ஒலித்தது.. சற்றே கிசுகிசுப்பாக.. அவளது தங்கை தாமிராவின் குரல்..!!

"GGGGGame or SSSSShame..??"

(கதை மட்டும் முடிஞ்சது.. கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்..!!)





28 comments:

  1. Very very excellent
    I love so much this story
    Nice
    thank u so much for update

    ReplyDelete
  2. Boss.... Kurinji Matter ennachu.?? Athapathi sollave illaye..???

    ReplyDelete
  3. ellarayum konnutu thamiravoda sibya sethudungo
    ashok ngra per en use panla
    athirava patha heroin aa therila thamirathan heroin avalayum sibiyaaym sethudunga

    BY
    SingamSiva

    ReplyDelete
  4. Nice story very good keep it up

    ReplyDelete
  5. வணக்கம் தல... நல்லா இருக்கீங்களா? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்... இல்லேன்னாலும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க ப்ளீஸ் :)

    ரொம்ப நாள் கழித்து உங்க கதையை படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதுக்கு கமென்ட் போடுறது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க மீண்டும் ப்ளாக் ஆரம்பிச்சது அதை விட ரொம்ப சந்தோஷம். சில காரணங்களால் என்னால நம்ம திரிக்கு வர முடியல. ஆனால் எல்லாமே இங்க கிடைக்கும்னு எனக்கு ரொம்பபபபபபபப தாமதமாதான் தெரிஞ்சது. தாமதத்துக்கு ரொம்ப சாரி.

    மதன்பாப் அடிக்கடி யூஸ் பண்ணுவாரு "As usual... Unusual". உங்களுடைய எந்த கதையும் படிச்சாலும் அதுதான் எனக்கு ஞாபகம் வரும். இந்த கதையும் அதற்கு விதி விலக்கல்ல. இது உங்களுடைய புதிய முயற்சி என்று சொல்ல மாட்டேன். கதையின் ஆரம்பத்தில் நீங்க சொல்லியது போல் ஏற்கனவே இரண்டு கதைகள் Slow Thriller இருக்கு. அப்படின்னா அவற்றுக்கும் இந்த கதைக்கும் என்ன வித்தியாசம்? யூகிக்க முடியாத திருப்பங்கள். சிறு உதாரணம் எல்லாரும் குறிஞ்சி பற்றிய ஆராய்ச்சி வெளிவரத்தான் இத்தனை போராட்டம் என்று நினைக்கும்போது இதுவும் கடந்து போகும் என்று நீங்க கொண்டு சென்ற விதம். அதேபோல் சில இடங்களில் யூகிக்க கூடிய திருப்பங்கள் வைத்ததும். சினிமா பார்த்த வளர்ந்த சமூகம் நம்முடையது. நாயகனும் நாயகியும் முடிவில் இறந்தால் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் நாயகியை குற்றவாளி ஆக்காமல் சூழ்நிலையை குற்றவாளி ஆக்கிய விதம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதில்தான் படிப்பவரின் மனநிறைவு இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

    உண்மையில் இது பயமுறுத்தும் கதை இல்லை. கதையின் ஓட்டத்தில் சிறு பயம் வருவதை மறுக்க முடியாது. முக்கியமாக இரவு நேரத்தில். பல இடங்களில் உடல் சிலிர்த்தது. எனக்கு கதையின் ஓட்டத்தில் யார் தாமிராவின் மறைவுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்ற என்னமே மேலோங்கி இருந்தது. காரணம் ஆதிராதான் என்று அறியும்போது சபாஷ் தல என்றுதான் நினைத்தேன். ஆதிரா கணவனுடன் ஊர் திரும்போது, அடடே தல இப்படி சப்பையா முடிக்க மாட்டாரே என்று நினைத்தேன். அது போலவே நீங்க கடைசியா முடிக்கும்போது அதான் நம்ம தலன்னு நினைத்தேன்.

    கதையின் இரண்டு அம்சங்கள் எனக்கு குறை என்று தோன்றியது (என்னை பொறுத்தவரை). ஒன்று சில இடங்களில் கதை மிக மெதுவாக நகர்வது போல் தோன்றியது. இரண்டு கிளைமாக்ஸ் அத்தியாயம். அது உங்கள் வழக்கமான நடையில் இல்லை என்றே தோன்றியது (உங்கள் எல்லா கதையும் படித்தவன் என்ற உரிமையில் கூறுகிறேன்). உங்கள் எல்லா கதைகளிலும் கதையின் உட்பாவம் கிளைமாக்ஸ்ல் மிகவும் எதிரொலிக்கும். நெஞ்சோடு கலந்திடு - அண்ணியும் நாத்தனாரும் சேரும் இடம். மலரே என்னிடம் மயங்காதே - அசோக் மலரிடம் காதலை ஒப்புக்கொள்ளும் இடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக்கதையில் அக்கா தங்கை கண்ணாமூச்சிதான் உட்பாவம். க்ளைமாக்ஸ்ல் கண்ணாமூச்சி இருக்கிறது ஆனால் உங்க பஞ்ச் அதில் இல்லை என்று கருதுகிறேன். உங்கள் எல்லா கதைகளையும் ஏற்கனவே நான் பலமுறை படித்ததால் இது போல் எனக்கு தோன்றி இருக்கலாம். மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. sooooo awesome screw...unexpected twists...thrilling story...
    idhu story ah irundhalum padikum bodhu nammalum adhula participate panra madhiriyana feelings tharudhu....story padika padika andha scene apdiye nadakura madhiri feel varum...thts ur awesome way of story writing ...readers ah apdiye ung storylaye katti potuduringa...

    really...U R AN AWESOME STORY WRITER SCREW..... SUPERB....

    ReplyDelete
  7. I have read all ur stories many times.. Ur writing style s awesome..
    Waiting for ur next story..

    ReplyDelete
  8. screwwwww...next story epo???
    dailyum vandhu vandhu pathutu pogiren,,,ungaluku workload adhigaam ulladhu purigiradhu...irundahlum ungalin eluthukaluku adimayana engalal adhu purindhum ketkamal iruka mudiyavillai...ipadiku
    adutha storyai aaaaaavaludan edhirparkum ungal rasigargalil oruvan

    ReplyDelete
  9. enna screw.. story eludhuradhey vitutingala??? inum ethanai natkal engalai kakavaipadhaga irukinga?? ����

    ReplyDelete
  10. ada poya... perusa perusa reply potu iruku.. ne padikiriya illayanu kuda therila... kathirundhu kathirindhu kaalangal pogudhey... screww new stpry epo... or atleast enna achu nu matum sollunga... coz daily aavalpda pakumbodhu feeling empty...

    ReplyDelete
  11. i read all of your stories
    all stories are very super

    ReplyDelete
  12. thanks for keeping us entertained screw... u really did a good job... i don't kno why you have stopped writing new stories... anyways... u r always the best. one of the kind..
    VALGA VALAMUDAN SCREW...

    ReplyDelete
  13. story eludhuradhay vitutinga pola... anyway... u have done a great job screw... thanks for your valuable stories... have a happy life... VALGA VALAMUDAN

    ReplyDelete
  14. எனக்கு கதைகள் வாசிப்பதில் அவ்வளவாக இஷ்டம் இல்லை

    ஆனால் என் உயிரானவள் இந்த கதையை வாசிக்க சொல்லி வற்புறுத்தினாள்

    இந்த கதையை முதலில் வேண்டா வெறுப்பாக படித்தேன்

    ஆனால் கதையின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க என்னை நானே மறந்து இக்கதைக்குள் மூழ்கி விட்டேன்


    தாமிரா எனும் கதாபாத்திரம் என்னை அவளுக்கு அடிமை ஆக்கி விட்டது

    உன்மையில் தாமிரா என்ற ஒருத்தி இருந்தால் அவளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என மனம் தோன்றுகிறது.

    இக்கதை எழுதிய கைகளுக்கு எனது வாழ்த்துக்ககள்

    Revo prcy

    From slanka tco

    ReplyDelete
  15. Boss நான் இரவு 8,30 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன், காலை 6,30க்கு தான் முடித்தேன், என் தூக்கத்தைகூட பொருட்படுத்தாமல் இந்த கதையை படித்ததின் காரணம், நீங்களும் உங்கள் கதையை கொண்டுசெல்லும் விதமும் அதில் கிடைக்கும் அடுத்தடுத்த சுவாரசியமும் தான், சினிமா direct செய்ய உங்களுக்கு அனைத்து தகுதியும் உள்ளது, all the best

    அடுத்த கதை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் தீவிர ரசிகன்

    ReplyDelete
  16. i have also taken some backups of stories. ping me @

    irr.usat@gmail.com

    stories list @
    https://ibb.co/6v0LpJB
    https://ibb.co/mNMUSA - OLD

    share to all exbii/xossip lovers #tamilStories

    try to make touch with exbii/xossip users...

    ReplyDelete
  17. Really awesome. I,m not a new reader.... your story rocks. Quite understandable ur life would have taken a different path now. But whenver possible do write a story for ur fans, who still visits this site.

    ReplyDelete
  18. வாழ்வில் என்றேனும் உங்களை சந்திக்க நேர்ந்தால் அது என் வாழ்வின் பாக்கியம் ஆகும் தலைவா வார்த்தைகள் எழ வில்லை உம்மை போற்ற

    ReplyDelete
  19. Awesome stories boss....
    Pls upload next story fast ...


    With love ,
    Yuv

    ReplyDelete
  20. Atleast what happened to you boss you are one of the best writers that i have read.

    ReplyDelete
  21. I woul like to rean your fantastic stories.becosrall ur stories family related Stories in which so gentle way of mixing of lust.i indeed appriciate your skill of knoweldge. Keep up.

    ReplyDelete
  22. இந்த மாதிரியான கதைகள் உங்களை தவிர வேற யாருமே எழுத முடியாது பாஸ். ஏன் வெகுநாட்களாக கதை எழுதாமல் உள்ளீர்கள், அல்லது வேறெந்த முகநூலில்லாவது தங்களுடைய கதைகள் வருகின்றது என்றால் அதை தெரியப்படுத்த வேண்டுமென்று இதன் மூலமாக கேட்டு கொள்ளும் தங்களுடைய கதையின் வாசகன். waiting for next story. thankyou so much.

    ReplyDelete
  23. Sir please upload new store I am waiting from last 2 years

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...