
அத்தியாயம் 22
சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!! அகழி வந்து ஆதிராவுக்கு கிடைத்த உச்சபட்ச அதிர்ச்சி இதுதான் எனலாம்.. தங்கையை தேடவந்து கணவனை தொலைப்போம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை..!!
கணவனின் அணைப்பு தந்த கதகதப்புச்சூடு, அவளைவிட்டு இன்னும் நீங்கியிருக்காத நிலையிலே.. காற்றில் சூடமாய் அவன் கரைந்து போயிருந்ததை, அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்..?? முதல்நாள் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு, அவளைவிட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையிலே.. அடுத்தநாளே இன்னொரு பேரதிர்ச்சியை வாங்கிக்கொள்ள, அவளது இதயத்தில்தான் எத்தனை வலுவிருக்கும்..??
அதுவும்.. இன்றுகாலை அகழியைவிட்டு கிளம்பிவிட்டால்.. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இறுதிப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவள் நிம்மதியுற்றிருந்த வேளையில்.. இடியாக இப்படியொரு நிகழ்வு அவளது இதயத்தை இரக்கமில்லாமல் தாக்கினால்..?? அப்படியே உடைந்து.. அணுஅணுவாய் உதிர்ந்து.. சில்லுசில்லாய் சிதறிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!
முதல்நாள்தான் அந்த சிவப்பு அங்கி உருவம் மணிமாறனை தூக்கி சென்றதை கண்கூடாக பார்த்திருக்கிறாள்.. முன்பொருமுறை நீருக்கடியிலும், ஜன்னலுக்கு வெளியிலும் பார்த்த அந்த உருவத்தை, அப்போது மனபிரம்மை என்று ஒதுக்கியிருந்தாலும், இப்போது அவையெல்லாம் அப்பட்டமான நிஜம் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது..!!





