அத்தியாயம் 24
ஆதிராவின் மூளைக்குள் ஒரு அதகள பிரளயமே நடந்துகொண்டிருந்தது.. அதிர்ச்சியை தாங்கமுடியாமல் அவளது இதயம் அப்படியே ஸ்தம்பித்து போயிருந்தது..!! காலையிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை அவள்.. அந்த பசிக்கு வராத மயக்கம், தலைச்சுற்றல் எல்லாம், இந்த படங்களைப் பார்த்தபோது அவளுக்கு வந்து சேர்ந்தது.. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருக்க, தலையை இரண்டு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள்..!!
அந்த ஃபோல்டர் முழுவதிலும் சிபியே நிறைந்து வழிந்திருந்தான்.. அவனோடு அருகில் இழைந்துகொண்டு பாதிப்படங்களில் தாமிராவும்..!! அத்தனை படங்களிலுமே அவர்களைத்தவிர இன்னொருவர் முகத்தை காணமுடியவில்லை..!! ஒன்று.. சிபி மட்டும் கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற தனிப்படங்களாக இருந்தன.. இல்லாவிட்டால்.. அவனும் தாமிராவும் அருகருகே நிற்கிறமாதிரி, க்ரூப் ஃபோட்டோக்களில் இருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன..!! குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும்போது.. மற்றவர்களுக்கு எந்த உறுத்தலும் வராத மாதிரி.. வெகுஇயல்பாக நகர்ந்து சிபியை அண்டிக்கொண்டு நின்றிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது..!!
அவற்றில் பெரும்பாலான படங்களை ஆதிரா ஏற்கனவே பார்த்திருக்கிறாள்.. ஆனால் இப்போது.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்.. பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஒரு ப்ரைவேட் ஃபோல்டருக்குள்.. அதுவும் மற்றவர்களை கத்தரித்து நீக்கப்பட்ட நிலையில் பார்க்கும்போது.. அந்தப்படங்கள் ஆதிராவுக்குள் ஏற்படுத்திய தாக்கம் வேறுமாதிரியாக இருந்தது.. சிபி மீது தாமிரா கொண்டிருந்த கண்மூடித்தனமான ரகசியக்காதலை, வெளிச்சம் போட்டு காட்டுகிற வகையில் அமைந்திருந்தது..!!