Social Icons

ஐ ஹேட் யூ, பட்.. 1








இது ரொம்ப சிம்பிளான, கொஞ்சம் ஜாலியான கதைதான்.. படிக்கிறவங்களுக்கு நெறைய மனஅழுத்தம் தராம, இலகுவான உணர்வை கொடுக்குற விதத்துலதான் கதையை எழுத ப்ளான் பண்ணிருக்கேன்.. ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே சின்னப்புள்ளத்தனமான கேரக்டர்ஸ்.. அவங்களுக்கு இடையிலான நட்பு, பிரச்னை, சீண்டல், காதல், மோதல்.. இதுதான் மொத்தக்கதையுமே..!! கதைன்னு பாத்தா ரெண்டு வரில சுருக்கமா சொல்லிறலாம்.. அதை நான் நீட்டி முழக்கி சொல்லப்போறேன்..!! உங்களுக்கு எந்த அளவுக்கு புடிக்குதுன்னு பாக்கலாம்..!!




அத்தியாயம் 1

"One of the most commonly known cardiac surgery procedures is the coronary artery bypass graft, also known as bypass surgery..!!"

ஸ்வர்ணா டிவியில் 'ஆரோக்ய ஜீவனா' ப்ரோக்ராம் டெலிகாஸ்ட் ஆகிக்கொண்டிருந்தது. காலங்காத்தாலேயே கார்டியாக் சர்ஜரி பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னணியில் குரல் ஒலிக்க, திரையில் நிஜமான அறுவை சிகிச்சையையே க்ளோசப்பில் காட்டிக் கொண்டிருந்தார்கள். பச்சை நிற உடை அணிந்திருந்த பேஷன்ட், மார்பு கிழிக்கப்பட்டு மல்லாந்திருந்தார். சுற்றி நின்றிருந்த மூன்று நான்கு சர்ஜன்கள், அவருடைய ஹார்ட்டுக்குள் கை விட்டு நோண்டிக் கொண்டிருந்தார்கள். குருதியில் குளித்திருந்த இருதயம் படக் படக்கென துடித்துக் கொண்டு கிடக்க, ஸ்டெயின்லெஸ் ஸ்டீலாலான ஊசிகளையும், கிடுக்கிகளையும் தாங்கிய கைகள், கவனமாக அந்த இருதயத்தை குத்தி குத்தி பார்த்துக் கொண்டிருந்தன.

விரிந்த விழிகளும், திறந்த வாயுமாக ப்ரியா டிவியையே வெறித்துக் கொண்டிருந்தாள். காதுகளை கூர்மையாக்கி, வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளை கவனமாக கிரஹித்துக் கொண்டிருந்தாள். வாய்க்குள் இருந்த உப்புமாவை அவ்வப்போது அசை போடுவதும், அப்புறம் அசை போட்டதை விழுங்க மறந்து அப்படியே ஃப்ரீஸ் ஆவதுமாக இருந்தாள். டிவி நிகழ்ச்சியோடு அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த சோபாவிலேயே அவளுக்கு அருகே வரதராஜன் அமர்ந்திருந்தார். சர்க்கரை தோய்க்கப்பட்ட உப்புமா தாங்கிய கையை மகளுடைய உதட்டுக்கருகே நீட்டியவாறு உறைந்திருந்தார். அரைத்ததை விழுங்கிவிட்டு அவள் மறுபடியும் எப்போது வாய் திறப்பாள் என்று, அவளுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவர், அவளுடைய இந்த குழந்தைத்தனமான செய்கையை கண்டு சற்றே நொந்து போயிருந்தார். மகளுடைய முகத்தையும், டிவி திரையையும் மாறி மாறி பார்த்தவர், இப்போது கெஞ்சலான குரலில் கேட்டார்.

ஐ ஹேட் யூ, பட்.. 2







அத்தியாயம் 4

"புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!"

இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார்.

சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை.

"ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!" என்பார் திடீரென.

"ஏன் பாலா.. என்னாச்சு..??" என்று அசோக் சீரியஸாக கேட்பான்.

"என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!"

என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். 'ஐயே..!!' என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக்.

ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம்.

'எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!' என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். 'வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!' என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!!

ஐ ஹேட் யூ, பட்.. 3


 




அத்தியாயம் 7

புகழ்ச்சியை 'போதை' என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கண்ணை மறைக்க கூடியது அது. புத்தியை மழுங்கடிக்க செய்வது அது. ப்ரியாவுக்கு தன்னை யாராவது புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். அடுத்தவர்கள் தன்னை பற்றி பெருமையாக பேசும்போது அவளுடய மனதிலும், உடலிலும் பரவுகிற அந்த பரவசம் பிடிக்கும். சிறியதொரு பாராட்டுக்கே சிட்டென விண்ணில் பறக்க ஆரம்பித்து விடுவாள். ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கில், அத்தனை பெரும் அவளுக்காக கைகள் தட்டினால் என்ன ஆவாள்..?? அருகில் இருக்கும் அசோக்கை மறந்து போவாள்..!!

'தான்' என்ற எண்ணம் தகாத கிருமிக்கு ஒப்பானது. அன்பென்ற தூய்மையான பாலை திரித்து விட கூடியது அது. வலுவான உறவில் கூட விரிசலை ஏற்படுத்தி விடும் வல்லமை கொண்டது அது. அந்த கைதட்டல்கள் எல்லாம் 'தனக்கு கிடைக்க வேண்டியவை' என்ற எண்ணம் அசோக்கின் மனதுக்குள் கிருமியென கிளம்பி, அவன் ப்ரியா மீது வைத்திருந்த அன்பென்ற பாலில் சென்று விழுந்தது. தன்னுடன் இருப்பவர்கள் மத்தியில் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பவன் அவன். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்கள் பிடிக்காத பாதையில் பயணிக்கையில், தான் விரும்புகிற பாதைக்கு திருப்பிவிட துடிப்பவன். தனது உழைப்புக்கு மற்றொருவருக்கு பெரும்பாராட்டு என்ற அதிர்வு.. அத்தனை நாளாய் தனது கைக்குள் இருந்த ப்ரியா, தன்னை மீறி செல்வது போன்றதொரு உணர்வு.. இவைகளுடன் அவள் இவனை கண்டுகொள்ளவில்லை என்கிற நினைவும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வான்..?? அவளை விட்டு விலகி நடப்பான்..!!

விலகி நடந்த அசோக், மீட்டிங் ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே விடுவிடுவென சென்று தனது க்யூபிக்கலில் அமர்ந்து கொண்டான். இன்னும் மீட்டிங் முடிந்து யாரும் திரும்பியிருக்காத நிலையில், அந்த தளத்தில் அவன் மட்டுமே இப்போது தனித்திருந்தான். சிஸ்டம் முன் அமர்ந்து கீ போர்டில் எதையோ நோக்கமில்லாமல் தட்டினான். அவனுடைய மனதை ஒரு இனம்புரியாத அழுத்தம் நிரப்பியிருந்தது. ஐந்தரை வருடங்களாக ப்ரியாவுடனான நட்பில், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை அவன் இப்போதுதான் சந்திக்கிறான். இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அவன் தயாராயிருக்கவில்லை. எப்படி இதை கடந்து செல்வது என்றும் அவன் புத்திக்கு பிடிபடவில்லை.

ஐ ஹேட் யூ, பட்.. 4



 




அத்தியாயம் 10

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!

அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.

ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!

ஐ ஹேட் யூ, பட்.. 5







அத்தியாயம் 14

அசோக்கிற்கு திகில் படங்கள் பார்ப்பதென்றால் அலாதி ப்ரியம்..!! அதுவும் நள்ளிரவில்.. கும்மிருட்டுக்குள்.. தனியாக அமர்ந்து பார்க்கவேண்டும்..!! தனது லேப்டாப்பில்.. ஆங்கில மொழியில் வெளியான பேய்ப்படம் ஒன்றை ஓட விட்டு.. காதுக்கு ஹெட்ஃபோன் கொடுத்து.. கண்களிலும் இதயத்திலும் பயம் நிரம்பி வழிய வழிய.. ஒருவித பதைபதைப்புடன் பார்க்கவேண்டும்.. பார்க்கும்போதே இதயம் படக் படக்கென பதறி துடிக்கவேண்டும்.. அதில் அவனுக்கு ஒரு ஆனந்தம்..!!

அன்றும் அந்த மாதிரிதான்.. நேரம் நள்ளிரவு 12 மணியை தாண்டியிருந்தது..!! அசோக் தனது படுக்கையில் கால்களை இறுக்க கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்பிருந்த லேப்டாப்பில் புதிதாக வெளியாயிருந்த ஒரு ஆங்கில பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அறையின் இரவு விளக்கு கூட அணைக்கப்பட்டிருக்க, லேப்டாப் மட்டுமே செவ்வக வடிவத்தில் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. படம் முழுக்கவே அவ்வப்போது வந்த பயமுறுத்தும் காட்சிகளால் அசோக் திகிலடைந்து போயிருந்தான். இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்ப்பவர்களை உச்சபட்சமாய் பயமுறுத்தி பார்க்கிற படலம்..!!

இருண்டு போன பேய் பங்களா ஒன்றில் தனியாக மாட்டிக்கொண்ட கதாநாயகன், ஒரு அறைக்குள் இருந்து வினோத ஒலி கிளம்புவதை கேட்கிறான். சுற்றிலும் இருள் மண்டிக்கிடக்க, கையில் இருக்கும் ஒரு சிறிய விளக்குடன் அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். சிறு ஓசை கூட இல்லாமல் ஒரே நிசப்தமாய் காட்சி நகர, அசோக் அந்த காட்சியுடன் மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள் விரிந்து போய் லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருக்க, அவனது இதயம் சுருங்கி விரியும் சப்தத்தை கூட அவனால் தெளிவாக கேட்க முடிந்தது. அப்போதுதான் திடீரென அவனுடைய முதுகுப்பக்கம் கிடந்த செல்போன் வீறிட்டது..!!

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...