அத்தியாயம் 20
மயக்கம் தெளிந்து ஆதிரா இமைகளை மெல்ல பிரித்தாள்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் வீழ்ந்து கிடப்பதை, உடனடியாக அவளால் உணர முடிந்தது.. உடலுக்குள் ஏற்கனவே ஜில்லென்று ஒரு குளிர்ச்சி ஊடுருவியிருந்தது..!!
அவளது கைகள் பின்புறமாக முறுக்கப்பட்டு.. அட்டைப்பெட்டிகளை ஒட்டுகிற அகலமான செல்லோடேப்பால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தன..!! கால்களையும் அசையவிடாமல் ஒன்றிணைத்து, அதே செல்லோடேப் கற்றையாக சுற்றியிருந்தது..!! கத்தரிக்கப்பட்ட ஒரு துண்டு செல்லோடேப் அவளது வாயில் ஒட்டப்பட்டிருக்க.. அவளால் உதடுகளைக்கூட பிரிக்க முடியவில்லை..!!
அவளது மாராப்பு எங்கோ தனியாக கிடந்தது.. மார்புகள் ரவிக்கைக்குள் விம்மிக்கொண்டிருந்தன..!! கூந்தல்க்கற்றைகள் பிரிந்து முகத்தில் புரண்டிருந்தன.. குங்குமப்பொட்டு நெற்றி வியர்வையில் கசகசத்திருந்தது..!! மிரட்சியும் பீதியும் டன் டன்னாய் வழிகிற விழிகளோடு.. ஆதிரா தலையை சற்றே உயர்த்தி பார்த்தாள்..!!
அது ஒரு சமையலறை என்று புரிந்தது.. டைனிங் டேபிளும் அதைச்சுற்றிய நான்கு நாற்காலிகளும் பார்வைக்கு வந்தன..!! அதில் ஒரு நாற்காலியின் மேல் அவை இரண்டும் விசிறப்பட்டிருந்தன.. சிவப்புநிற அங்கியும், போலி மயிர்க்கூந்தலும்..!! அதற்கு அந்தப்புறமாக பனியன் அணிந்த ஒரு ஆணுடைய முதுகுப்புறம் தெரிந்தது.. எரிகிற ஸ்டவ் பக்கமாக திரும்பி ஏதோ வேலை செய்வது போல தோன்றியது..!! அந்த ஆண் யாரென்று ஆதிராவால் ஒரேநொடியில் புரிந்து கொள்ள முடிந்தது..!!