அத்தியாயம் 12
அகழி செல்லும் மலைப்பாதையில் கார் மிதமான வேகத்தில் ஊர்ந்துகொண்டிருந்தது.. நீர் சொட்டுகிற தலைமயிருடன் சிபி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.. அவனுக்கருகே தெப்பலாக நனைந்த தேகத்துடன் ஆதிரா அமர்ந்திருந்தாள்..!! திறந்திருந்த ஜன்னலின் வழியே காருக்குள் வீசிய குளிர்காற்று ஆதிராவின் மேனியை வருட.. அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. மார்புப்பந்துகளுக்கு இடையே ஆழமாய் ஒரு இறுக்கத்தை அவளால் உணர முடிந்தது..!!
"விண்டோ வேணா க்ளோஸ் பண்ணிக்க ஆதிரா..!!"
எதேச்சையாக மனைவியை ஏறிட்ட சிபி கனிவுடன் சொல்ல.. ஆதிரா கார்க் கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டாள்.. அந்தக் கண்ணாடியிலேயே தலையையும் சாய்த்துக் கொண்டாள்.. சாலைக்கு பக்கவாட்டில் சலசலப்புடன் ஓடிய குழலாற்றையே வெறித்து பார்த்தாள்..!! காருக்குள் இப்போது ஒரு கதகதப்பு பரவினாலும்.. அதையும் மீறி ஆதிராவுக்கு குளிரெடுத்தது..!! உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்து துடித்தன.. கீழ்வரிசைப் பற்கள் கிடுகிடுத்து மேல்வரிசைப் பற்களுடன் அடித்துக் கொண்டன..!! உதட்டோடும் உடலோடும் சேர்ந்து அவளது உள்ளமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது..!!
ஆதிரா மனதளவில் சற்றே தடுமாறிப் போயிருந்தாள்.. அவளுடைய புத்தியில் ஒரு குழப்ப விரிசல் விழுந்திருந்தது..!! தன்னைச் சுற்றி ஏதோ அசாதாரண சம்பவங்கள் நடப்பதுபோல் அவளுக்குள் ஒரு உணர்வு.. அவளது மனத் தடுமாற்றத்திற்கு அந்த உணர்வே காரணம்..!! அப்படி உணர்வதெல்லாம் உண்மைதானா அல்லது அத்தனையும் மனம் உருவாக்கிக்கொண்ட மாய பிம்பங்களா என்றொரு கேள்வியும் அவளுக்குள் அழுத்தமாக எழுந்தது.. அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியாமல்தான் அவளது புத்தியில் ஏற்பட்ட அந்த குழப்ப விரிசல்..!! தனது உணர்வையும் அறிவையும் தானே நம்பமுடியாத நிலையில்தான் ஆதிரா இருந்தாள்..!!