அத்தியாயம் 8
அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!! அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!!
ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!! மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!!
"நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!"
"ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!! சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!"
ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!!
ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!! ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!