அத்தியாயம் 3
அடுத்த நாள் காலை.. அதிகமாய் ட்ராஃபிக் இல்லாத மைசூர் காந்தராஜ் சாலை..!! அந்த சாலையில்.. அகலமாகவும் உயரமாகவும் எழுந்து நிற்கிற அப்பல்லோ மருத்துவமனை.. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை சார்ந்த அமைதியான ஒரு அறை..!!
ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..!! அவளுடைய மார்புகள் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.. அவளது தலையில் பலத்த அடிபட்டிருக்க வேண்டும்.. தலையை சுற்றி பெரிதாக ஒரு பேண்டேஜ்..!! முகத்தில் காணப்பட்ட சிறுசிறு சிராய்ப்புகள்.. இன்னும் கவனிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன..!! அவளுடைய இடதுபுற மார்புப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி சென்ற ஐந்தாறு எலக்ட்ரோடுகள்.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த ECG மானிட்டரின் பின்புறமாக சென்று முடிவடைந்தன..!! ஆதிராவின் இதயத்துடிப்பு வீதத்திற்கு ஏற்ப.. அந்த ECG மானிட்டர் பச்சை நிற அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.. 'கீங்க்.. கீங்க்.. கீங்க்..' என்ற சப்தத்தோடு..!!
மூன்று கால்களில் நின்ற அந்த ஸ்டீல் ஸ்டாண்டின், விரிந்திருந்த இரண்டு கைகளுள் ஒன்றில்.. ப்ளாஸ்டிக் சலைன் பாட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது..!! அதிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கிய நிறமற்ற திரவம்.. குழாய் வழியிறங்கி ஆதிராவின் வலதுகை நரம்புக்குள் நேரடியாக பாய்ந்து கொண்டிருந்தது..!! தீருகிற நிலையை அந்த திரவம் இப்போது அடைந்திருக்க.. வேறொரு புதிய சலைன் பாட்டிலை மாற்றினாள், ஆதிராவை கவனித்துக் கொள்கிற கன்னட நர்ஸ்..!! நாஸில் திறந்து திரவ ஓட்டத்தை சீராக்கியவள்.. எதேச்சையாக ஆதிராவின் முகத்தை ஏறிட்டபோதுதான்.. அவளுக்கு இப்போது விழிப்பு வந்திருப்பதை கவனித்தாள்..!!
"வெல்கம் பேக் ஆதிரா.. குட் மார்னிங்..!!" என்றாள் புன்னகையுடன்.
ஆதிரா அவளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை சிந்த முயன்று தோற்றாள்.. களைத்துப் போயிருக்கிறாள் என்பது அவளுடைய கண்களிலேயே தெளிவாக தெரிந்தது..!! உடலின் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டுப் போனது மாதிரியான ஒரு உணர்வு அவளுக்குள்..!! இமைகளை திறந்தும் மூடியும் திறந்தும் மூடியும்.. அப்படியே மலங்க மலங்க ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு.. உதடுகளை பிரித்து ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் சப்தம் வெளிவராமல் போகவும்..