சமீபத்தில் என்னுடைய ரசிகை ஒருவருடன் சேட் செய்து கொண்டிருக்கும்போது, அவர் சொன்ன ஒரு வாக்கியந்தான் இந்தக்கதைக்கு ஆரம்பப்புள்ளி. இந்தக்கதை உருவாகக் காரணமாயிருந்த அந்த ரசிகைக்கு இந்த சமயத்தில் ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நன்றி ரசிகையே ..!! துருதுருவென, சற்றே வெகுளியான, முக்கியமாய் அழகான.. ஒரு கல்லூரிப்பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது..? அந்த மாதிரி ஒரு பெண்தான் இந்த கதையின் நாயகி..!! கொஞ்சம் இம்சை பிடித்தவள் என்று கூட அவளை சொல்லலாம்..!! எல்லாவற்றையும் விட அவளிடம் இன்னுமொரு குணம் கூட இருக்கிறது.. அதுதான் இந்தக்கதையின் ஹைலைட்..!! அப்புறம்.. அந்த வாசகி சொன்ன அந்த வாக்கியம்.. "பொய் பொய்யா சொல்றடா.. புழுகு மூட்டை..!!" கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்
கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது.
அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு கண்களை சுருக்கியவாறு நான் நின்றிருந்தேன். கட்டிடத்தின் ஒரு ஓரத்தில் இருந்த அந்த பெரிய பிரமிட் வடிவ ஸ்ட்ரக்சரின், ஸ்லோப் அளவை நான் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு கையில் ரச மட்டம், இன்னொரு கையில் டேப்..!! பிரமிட் உச்சியில் சரியாக இருந்த அளவு, கீழே வர வர, டிராயிங்கில் இருப்பதை விட அரை இன்ச் அளவு குறைந்தது. அருகில் வெல்டிங் அடித்துக் கொண்டிருந்த பையனிடம் நான் எரிச்சலாக கத்தினேன்.